Skip to content
Post Views: 1,954
வேளை – 18
லாலாவுக்கு சென்னை வந்ததும் குஷியோ குஷி. சென்னை வெயில் கூட அவனுக்குப் பரவாயில்லை என்ற நிலை. சுதந்திர விலாசத்தின் சூடு அப்படி! மாமியார் வேஷம் போட்டிருக்கும் தன் தாயை சமாளிக்க முடியாமல் திணறியவனுக்கு இந்த தனிமை அத்தனை பிடித்தது.
அவனும் உதயாவும் அவரவர் வேலை உண்டு. அவர்கள் வீடு உண்டு என்று இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பினர்.
Advertisement
அவர்கள் ஊரிலிருந்து வந்த இரண்டு நாட்களில் உதயாவின் அம்மா அவர்களைப் பார்க்க வந்துவிட்டார். அவருக்கும் உதயாவின் தாலிப்பெருக்கில் கலந்துகொள்ள ஆவல்தான். ஆனாலும், யாராவது எதையாவது சொல்லி மகளைக் கஷ்டப்படுத்திவிட்டால் என்ற கவலை. கிராமத்து மனிதர்கள் சகுனம் அது இதென்று பார்ப்பார்கள். தன்னை மகளுக்கு எதுவும் செய்யக் கூடாதென்று சொன்னால் மகள் வருந்துவாள் என்பதால் போகாமல் இருக்க, இப்போது வெகு நாட்கள் கழித்து மகளைப் பார்க்க விஜயம் செய்தார்.
Advertisement
அவர் வந்தபோது லாலா வீட்டிலிருந்தான். காலையில் அவர் அழைத்து சொல்லியிருக்க, உதயா அன்று அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது. உதயா மதியம் போல வந்துவிடுவேன் என்றிருந்தாள், லாலாவுக்கும் அவள் காலையில் சொல்லியிருக்க, அவனும் மாலை வகுப்புகள் இல்லையென்பதால் முன்னரே வீடு வந்துவிடுவேன் என்றான்.
Advertisement
உமா வந்த நேரம் லாலா மட்டும் இருந்தான். மாமியார் வந்ததும் அவருக்குத் தண்ணீர் கொடுத்தவன் மீண்டும் சமையலறைக்குள் சென்றான்.
Advertisement
“நீங்க டீவி பாருங்கத்த. நான் வந்துடுறேன்” என்று சொல்லி அவன் சென்றிருக்க, உமாவும் அவன் ஏதோ வேலையாக சென்றிருக்கிறான் என்று தொலைக்காட்சியில் கவனமானார்.
மதிய நேரம் ஒளிபரப்பாகும் தொடரில் அவர் கவனமிருக்க, பத்து நிமிடத்தில் தேநீரோடு வந்தான் லாலா.
“தம்பி…?” என்ற உமாவிற்கு ஆச்சரியம். கூடவே சங்கடமாக உணர்ந்தவர்,
“ஏன் தம்பி நீங்க டீ போட்டீங்க? நான் போட்டிருப்பேனே. ஏதோ வேலையா இருக்கீங்கனு நான் கவனிக்காம விட்டுட்டேன்” என்றவருக்கு அவனை வேலை வாங்கி விட்டோமே என்ற உணர்வு.
லாலாவுக்கோ மாமியார் தன்னை தேநீரோடு பார்த்ததும்,
‘நீங்க என் மருமகன் இல்ல, மகன்’ என்று சொல்லி மனதார ப்ரோமோஷன் கொடுப்பார் என்று நினைத்திருந்தான்.
“அதுக்கென்னத்த? நான் இப்போ நல்லா டீ போடுறேன். நீங்க குடிங்க” என்று சொல்லி நீட்ட, உமாவும் எடுத்துப் பருகினார். நன்றாகவே இருந்தது. பின்னே அவரின் மகளை அல்லவா எலியாக்கி தேநீரைக் கொடுத்து ஒருவழியாக்கி இருந்தான்.
குடித்தவர் “நல்லா இருக்கு தம்பி” என்றதோடு,
“உதயா எப்போ வருவா?” என்று கேட்டார்.
‘ஒரு ஆம்பள போடுற டீக்கு உலகம் கொடுக்கிற ரியாக்ஷன் இதானா?’ என்று அவனுக்கு சப்பென்றானது.
‘எங்கம்மா டீ போட்டா உலகப்போரைக் கூட்டுது, இவங்கம்மா டீ போட்டா உம் கொட்டுறாங்க. ஒன்னு போதும்ன்ற அளவு ரியாக்ஷன் இல்லையா போதவில்லையேனு ரியாக்ஷன். என்னயிருந்தாலும் உதயாவா இருந்திருந்தா சூப்பர், ஆவேஸம், அற்புதம்னு குடிச்சி நேஷனல்.. இல்லை இண்டர்னேஷன்ல் அவார்டே கொடுத்திருப்பா’ என்று மனத்துக்குள் பேசியவனை உமாவின் குரல் கலைத்தது.
“தம்பி?” என்று அவர் மீண்டும் அழைக்க,
“ஹான். இன்னும் அரை மணி நேரத்துல வந்துடுவாத்த” என்றான். டீயைக் குடித்த உமா உடனே சமையலறைக்குச் சென்றார். அவனும் அவரும் குடித்த டம்ளர்களை கழுவிப்போட்டவர், டீ வைத்த பாத்திரத்தோடு மகள் காலை சமையல் முடித்து போட்டு வைத்த பாத்திரங்கள் அத்தனையும் வேகமாக கழுவிப்போட்டார்.
லாலா வந்து வேண்டாம் என்று சொல்லியும் கேட்கவில்லை. அவன் அமைதியாக நடுகூடத்தில் தொலைக்காட்சி முன் உட்கார்ந்தான்.
“தம்பி, நைட்டுக்கு என்ன செய்யட்டும்?” என்று உமா கேட்க,
“அத்த, அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். உதயா வந்ததும் நம்ம எல்லாம் வெளியே போய் சாப்பிடலாம்” என்று லாலா கண்டிப்பாக சொன்னான். உமா இரண்டுமுறை சொல்லியும் அவன் கேட்கவில்லை. அவர் வரவும், மீண்டும் சீரியலில் வைத்தான்.
அவர் அமைதியாக பார்க்க, லாலாவுக்கு அப்படி தனியாக விட்டு செல்லவும் மனமில்லை. அதே நேரம் என்ன பேசுவதென்றும் தெரியவில்லை. அதனால்,
“ஏன்த்த இந்த சீரியல் எபிசொட் நைட்டே போட்டிருவானே? நீங்க பார்க்க மாட்டீங்களா?” என்று கேட்டவன் அவரின் ஆராய்ச்சியான பார்வை உணர்ந்து,
“அது எங்கம்மா, ஆத்தா எல்லாம் இந்த சீரியல் பார்ப்பாவோ. எங்காத்தா இருக்க ஒரு சீரியல் விடாது. நானும் போர் அடிச்சா அவங்க கூட எட்டி பார்ப்பேன்” என்றதும் உமாவும் சிறு புன்னகையோடு,
“இல்லை தம்பி, நைட் அங்க வருண் தம்பி வீட்ல சமைக்கணும். வருணுக்கு நான் சமைச்சதான் பிடிக்கும், அப்புறம் குழந்தையைப் பார்க்கணும். மதியானம்தான் எனக்கு கொஞ்சம் ஃப்ரீ” என்றதும் லாலாவுக்கு வருத்தமானது.
“உதயா நல்லா சம்பாரிக்கிறாதானேத்த? நீங்க ஏன் இன்னும் இன்னொருத்தங்க வீட்ல கஷ்டப்படணும். எங்களோட வந்து இருங்களேன், இல்லையா தனியா இருங்க. நாங்க பார்த்துக்கிறோம்” என்றதும் லாலாவை நினைத்து உமாவிற்கு நிம்மதியானது. தன் மகளின் தேர்வு சரியென்ற உணர்வு மீண்டும் உறுதியானது.
அதில் நெகிழ்ந்தவர், “இல்லப்பா, வேலை சம்பளத்துக்காக இப்போ நான் செய்யல. அவங்கப்பா போனப்போ என்ன செய்றதுன்னே தெரியாம இருந்தேன். நாலஞ்சு வீட்ல வேலை செய்வேன், தையல் மெஷின் வச்சு தச்சேன். அப்போதான் மகாதேவன் ஐயா வீட்ல வேலை இருக்கு தெரிய வந்துச்சு. அவங்க வீட்ல வேலைக்குச் சேர்ந்த அப்புறம் எங்களுக்குப் பெரிய கஷ்டமில்லை” என்றவர் அந்த நாட்களை நினைவு கூர்ந்தார்.
மகாதேவன் மிகப்பெரிய கல்வி குழுமத்தின் தலைவர். அவரின் வீட்டில்தான் உமா இத்தனை வருடமாக வேலைப் பார்க்கிறார். உமாவின் நேர்மையும் கடின உழைப்பையும் கண்டவர்களுக்கு வெகு திருப்தி. உதயாவின் பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அறிந்து அவளைப் பாராட்டியவர்கள் அவளைத் தங்கள் கல்லூரியிலேயே சேர்த்துக் கொண்டனர்.
நிச்சயம் அவள் உழைப்பிற்கான அங்கீகாரம். உதயாவும் எந்த சலுகையும் எடுக்காமல் நன்றாகப் படித்து அம்மாவிற்குப் பெருமை சேர்த்திருந்தாள்.
அதையெல்லாம் சொன்ன உமா, “வருண் தம்பியை சின்னதுல நான் பார்த்துக்கிட்டேன். இப்ப தம்பியும் அனுஷா பொண்ணு குழந்தை தீக்ஷாவையும் நான் பார்த்துக்கிறேன். முடியறவரைப் பார்த்துக்க போறேன். முடியாதப்ப உங்ககிட்டதானே வரணும்” என்றார் உமா.
“அடிக்கடி நீங்க வந்துட்டுப் போங்கத்த. எங்களுக்கும் சந்தோஷமா இருக்கும்ல” என்றவனிடம் வருகிறேன் என்றார்.
அரை மணி நேரம் என்ற உதயா வீடு வர ஒரு மணி நேரமானது. மகள் வரவும் அவளுக்குக் காஃபி கலந்து கொடுத்தார் உமா.
அம்மாவைப் பார்க்கவும் உதயாவுக்கு அத்தனை மகிழ்ச்சி.
“இத்தன நாள் ஏன்மா வரல” என்று அவள் கோபித்துக்கொள்ள,
“நீங்க உங்க வேலையைப் பார்ப்பீங்க. நான் வந்தா தொந்தரவு. அதான் இப்போ வந்துட்டேனேடி” என்று மகளைப் புன்னகையோடு பார்த்தார்.
உதயா அறைக்குள் நுழைந்து முகம் கழுவி வர லாலா அவளிடம்,
“உதயா, நம்ம நைட் டின்னர் வெளியே சாப்பிடலாமா? அத்தைக்கும் ரெஸ்ட்டா இருக்கும்” என்று சொல்ல, அவன் எண்ணம் புரிந்தாலும்,
“அம்மாவுக்கு எனக்குப் பிடிச்சது செய்ய ஆசை. நானும் சொல்லிட்டேன், அவங்க கேட்கல. எனக்குமே அம்மா கையால சாப்பிடணும் போல இருக்குங்க” என்றதும் லாலாவும் சரியென்றான்.
அன்றிரவு மகளுக்குப் பிடித்தது போல பூரி, கிழங்கு மசாலா செய்தார். லாலாவுக்கும் பூரி பிடிக்கும் என்பதால் தனியாக ஒன்றும் செய்யவில்லை. அன்றிரவு அங்கே அவரை கட்டாயப்படுத்தி தங்க வைத்தனர். அடுத்த நாள் காலை உணவை செய்தவர் அப்போதே புறப்பட்டுவிட்டார்.
அம்மாவைப் பற்றித் தெரியும் என்பதால் உதயாவும் கட்டாயப்படுத்தவில்லை. ஊரில் நடந்த எந்த கசப்பையும் அம்மாவிடம் அவள் பகிரவில்லை. மாமியாரோடு இணக்கமாக இருப்பதைப் போலவே சொல்லியிருந்தாள்.
அம்மாவைக் கஷ்டப்படுத்த வேண்டாம் என்று அவள் இருக்க, உமாவோ மகள் தைரியமாக எல்லாம் சமாளித்து விடுவாள் என்று பெருமையாக நினைத்தார்.
யாரும் உதயாவினுள் ஒரு குழந்தை ஏக்கத்தோடு எட்டிப்பார்ப்பதை உணரவில்லை. அன்பின் கதகதப்புக்குள் தன்னைப் புகுத்தி ஆறுதலும் அரவணைப்பும் தேடும் அவள் மனம் புரியவில்லை.
அந்த வார இறுதியில் சனிக்கிழமை வகுப்பு முடிந்து ஆறு மணி போல வீடு வந்தான் லாலா. உதயா வீட்டு வேலைகள் எல்லாம் முடித்துவிட்டாள்.
லாலா அன்று சீக்கிரம் வருவான் என்று எதிர்ப்பார்க்கவில்லை. அவன் வரவு சொல்லாமல் வரும் மழை போலவே இருக்கும். தீடீரென ஒருநாள் வகுப்பு இல்லை என்று வந்து நிற்பான். அப்படியான நாள் அன்று. இரவு என்ன சமைக்கலாம் என்று உதயா போனை நோண்டிக்கொண்டிருந்த நேரம் அழைப்பு மணியோசை.
வேகமாக சென்று பின்-ஹோல் வழிப் பார்க்க லாலா நின்றான். சட்டென்று உதயாவின் உடலெல்லாம் உற்சாகம் தொற்றியது. காலை முதல் தனியே இருந்தவளுக்குத் தலைவன் வருகை இனித்தது. புன்னகையே முகமாக மாறிட கதவை திறந்தாள்.
தொற்றிக்கொள்ளும்படி புன்னகை செய்பவர்களை என்ன செய்ய முடியும்? அதைவிட பெரிதாக ஒரு புன்னகையைத்தானே கொடுக்க முடியும்?
உதயாவின் கண்கள், முகம் எல்லாம் பளிச்சென்று மின்னின. ஒரு மணி நேரம் முன்புதான் குளித்து ஊதாவண்ணத்தில் வண்ண வண்ணப்பூக்கள் வரையப்பட்ட மேக்சி அணிந்திருந்தாள். தலையை வாராமல் கொண்டையாகப் போட்டிருந்தாள். நெற்றி வெறுமையாக இருந்தாலும் அவள் புன்னகை ஒன்றே போதுமானதாக இருந்தது.
லாலாக்குள் இருக்கும் காதல் மன்னன் லேசாக எட்டிப்பார்த்தான். புன்னகையுடன் பையை அதனிடத்தில் வைத்தவனை பின்னிருந்து கட்டிக்கொண்டாள் உதயா.
“நீங்க வருவீங்கனு நான் எதிர்ப்பார்க்கவே இல்லை” என்று முன்பக்கம் திரும்பியவனை இறுகப்பற்றினாள்.
அவன் வியர்வையை வாசம் பிடித்து அவன் இருப்பைத் தனக்கு உணர்த்தினாள். லாலா அவள் அணைப்பில் கட்டுப்பாட்டினை இழந்தவன் தானும் இறுக அணைத்தான்.
“என்ன உதயாம்மா இன்னிக்கு ஓவர் கொஞ்சல்ஸ்? என்ன ஸ்பெஷல்?” என்று கேட்டவனை முகம் நிமிர்த்திப் பார்த்தவள் கண்கள் காதல் பேசியது.
“நீங்க வந்தாலே ஸ்பெஷல்தான்” என்று சிரித்தாள்.
“நிஜமாவா?” என்று அவன் சந்தேகமாகக் கேட்டான். தன்னை விரும்பி மணம் முடித்தவளிடம் அப்படியொரு கேள்வியே அவசியமற்றதுதான் என்றாலும் மீண்டும் கேட்க ஒரு ஆவல். இப்போதும் அதே காதலும் ஆவலும் உள்ளதா என்ற தேடல்.
“ஆமா, காலையில இருந்து தனியா இருந்தேன். நீங்க வந்ததும் எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா?” என்று துள்ளினாள். உதயா அவன் அருகாமையை விரும்புவது அவனுக்கு அத்தனை கர்வமாக, மகிழ்ச்சியாக இருந்தது. அதே நேரம் அதே உணர்வை அவளுக்கும் கொடுத்திட வேண்டும் என்று அறியவில்லை.
அவள் நெற்றியோடு முட்டி, “இன்னிக்குக் க்ளாஸ் ஓவர். நாளைக்கும் கவர்மெண்ட் ஹாலிடே, க்ளாஸ் எதுவுமில்லை. எங்காச்சும் வெளியே போய்ட்டு வருவோமா?” என்று கேட்டான் லாலா.
உதயாவிற்கு ஆச்சரியம். அவனோடு வெளியே செல்ல ஆசை இருந்தாலும், தான் கேட்டு அவன் வேலை கெட்டால் என்ற யோசனையில் தொந்தரவு செய்ய மாட்டாள். அவனாகவே அழைக்க துள்ளலோடு சரியென்றாள்.
“எங்க போகலாம்?” என்று உதயா கேட்க,
“படத்துக்குப் போவோமா?” என்று கேட்டவன்,
“நான் ஏழு மணி ஷோவுக்கு டிக்கெட் போடுறேன், நீ ரெடியாகு” என்றவன் டிக்கெட் புக் செய்து அவனும் கிளம்பினான். இருவரும் ஆட்டோ பிடித்து அவர்கள் வீட்டுப்பக்கம் உள்ள மால் சென்றனர்.
அங்கே உள்ள திரையரங்கில் படம் பார்த்தனர். லாலா திருமணத்திற்குப் பின் உதயாவோடு முதல்முறை திரையரங்கில் படம் பார்க்கிறான். உதயா லாலாவின் விரலோடு தன் விரலைக் கோர்த்தவள் புன்னகையோடு படத்தைப் பார்த்தாள். அது ஜனரஞ்சகமான படம் என்பதால் இருவருக்குமே பிடித்தது.
லாலா இடையிடையே படத்தைக் கிண்டல் செய்ய உதயாவிற்கு நேரம் போனதே தெரியவில்லை. இரவு உணவும் வெளியே உண்டனர்.
வீட்டிற்கு வந்ததும் உதயா முதலில் உடைமாற்றி வர, லாலா சட்டையைக் கழற்றிவிட்டு அப்படியே மெத்தையில் சாய்ந்துவிட்டான்.
அவள் பாத்ரூம் விட்டு வெளியே வர, அவன் உள்ளே புகுந்தான்.
“நான் வரவரைக்கும் ஏன் வெயிட் பண்ணீங்க. இன்னொரு டாய்லெட் யூஸ் பண்ண வேண்டிதானே?” என்று சொல்லிய உதயா சமையலறைக்குச் சென்று சிலிண்டரை ஆஃப் செய்துவிட்டு மற்றவை எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு அறைக்குள் நுழைந்தவள் முகத்தாள் புன்னகை உறைந்திருந்தது.
“என்ன உதயா தனியா சிரிக்கிற?” என்று கேட்டவனை முறைத்தவள்,
“தனியா சிரிக்கல..இன்னிக்கு ஹோட்டல்ல சாப்பிடும்போது பார்த்தீங்களா? பக்கத்து டேபிள்ல ஒரு குட்டிப்பாப்பா என்னை அவங்கம்மா தோள்ல இருந்து எட்டி எட்டிப் பார்த்து சிரிச்சது. அதை ஞாபகம் வந்துச்சு” என்றவள் அத்தோடு நிறுத்தியிருக்கலாம்.
“நமக்கும் அது மாதிரி ஒரு பாப்பா இருந்தா நல்லாயிருக்கும்ல” உதயா அத்தனை வருடங்கள் அனுபவித்த தனிமையின் தீர்வாக அவள் குழந்தையின் மீது ஆசை கொண்டாள். லாலாவுக்கோ பக்கென்றானது.
கட்டுப்பாடுகளை மீறிய தன்னைக் கண்ணாடியில் பார்த்து துப்பிக்கொள்ள வேண்டும் போல இருந்தது.
குழந்தை என்றதும் அவனுக்கு உதயாவை போல ஆசையோ இல்லை ஆர்வமோ வரவில்லை. மாறாக அச்சம் வந்தது. மனைவிக்கே ஒன்றும் செய்ய முடியாத நிலையில் குழந்தை என்ற ஒன்று வந்து அதற்கும் தன்னால் எதுவும் செய்ய முடியாமல் போனால்?
அதுவரை அப்படியொன்று நடக்கவில்லை. நடந்தால்? எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் அவனை புரட்டியது.
“குழந்தையெல்லாம் நம்ம செட்டிலான பின்னாடி பார்த்துக்கலாம்” என்றவன் பயத்தில் அடுத்த அறைக்குச் சென்று படுக்கலாம் என்று எழுந்தான்.
போனவனை உதயா அப்படியே விட்டிருக்கலாம். அவள் என்ன மனநிலையில் இருந்தாளோ?
“ஏன் இப்போ குழந்தை வந்தா வேண்டாம்னு சொல்றீங்க?” என்றவளுக்கு முகம் மாறியது. தனது ஆசையை சொல்லிய பின்னும் அவன் நிராகரிக்கிறானே என்ற எண்ணம்.
“இப்போ எப்படி என்னால சமாளிக்க முடியும் உதயா? எனக்கு இன்னும் ஒரு ப்ராபர் ஜாப் இல்லை. எத்தன நாள் நான் இப்படியே இருக்கிறது? கல்யாணம்தான் உன் அவசரத்துக்குப் பண்ணியாச்சு.. எல்லாத்துக்கும் உனக்கு அவசரமா?” என்று அவன் எரிச்சல்பட,
“கல்யாணத்துக்கு நான் அவசரப்பட்டேன் சரி, மத்தபடி நான் என்ன உங்களை தொந்தரவு செஞ்சேன் சொல்லுங்க. இப்போ நமக்கு குழந்தையே வந்தாலும் ஏன் நம்மால பார்க்க முடியாதா?” என்று உதயாவும் எரிச்சலாக அவள் வலதுகரத்தை வீசி அவனிடம் கேட்டாள்.
“உன்னால பார்த்துக்க முடியும். என்னால முடியாது” என்றான் லாலா.
“ஏன் லாலா இப்படி பிரிச்சுப் பேசுறீங்க?” என்று உதயா பொறுக்காமல் கேட்க,
“இங்க பாரு உதயா, நீ என்னை என்ன நினைச்சாலும் பரவாயில்லை. என் குழந்தைக்கு நான் என்னோட காசுல எல்லாம் செய்யணும்னு நினைக்கிறேன். குழந்தை வந்த பின்னாடி எத்தனை நாள் நீ வேலைக்குப் போக முடியும்? மேட்டர்னட்டி லீவ்ல எவ்வளவு கவர் ஆகும்? உன் சேவிங்ஸ் எல்லாம் கரைச்சிட்டு இருக்க போறியா? என்னை நீ எதுக்குமே லாயக்கில்லாதவனா நினைக்க வைக்கிறடி!” என்று கோபத்தைக் காட்ட வழியின்றி குரலை உயர்த்தினான் லாலா.
“எது நானா? நான் அப்படி நினைக்கிறேனா?” என்று உதயா கண்ணீரோடு அவன் முகம் பார்க்க,
“நீதான்! இன்னிக்கு ஹோட்டல் சாப்பிட்டதும் என்னை எதிர்ப்பார்க்காம நீயே பில் பே பண்ற. படத்துக்கு டிக்கெட் எவ்வளவுனு கேட்டு உடனே நீயே காசு அனுப்புற? உன் அளவுக்கு இல்லைனாலும் படத்துக்கும் சாப்பாட்டுக்கும் செலவு பண்ண முடியாத நிலைமை நான் இல்லை. இப்படியே செஞ்சு செஞ்சு என்னை நீ லோ’வா ஃபீல் பண்ண வைக்கிற”
உதயா பேச்சற்று நின்றாள். அவனுக்கு சிரமம் தரக்கூடாது என்று நினைத்து அவள் செய்ததையெல்லாம் கணவன் அவள் மீதே குற்றமாக வைக்கிறான்.
“காசு அனுப்பினப்பே வேண்டாம்னு சொல்ல வேண்டிதானே?”
பொங்கிய கண்ணீரை இடக்கரத்தால் துடைத்தபடி உதயா கேட்க, “நீ டிக்கெட் ப்ரைஸ் கேட்டனு நினைச்சு நான் சொன்னேன். நீ என்னைக் கேட்டு காசு அனுப்பினியா? சொன்னதுமே எனக்கு அனுப்புற. கிளம்பறப்ப கோவப்பட வேண்டாம்னு நான் பொறுத்துப் போனா நீ ஹோட்டல்ல ஒருவார்த்தை என்னைக் கேட்காம பில் பே பண்ற”
லாலா இப்படி பேசுவான் என்று உதயா நினைக்கவே இல்லை. அதைவிட இப்படியான பேச்சுகள் லாலாவிடமிருந்து வந்ததை அவளால் தாங்க முடியவில்லை.
லாலாவுக்கு முன், அவள் அறையை விட்டுச் சென்று அடுத்த அறையில் படுத்துக்கொண்டாள். லாலா அந்த அறையில் உறக்கம் வராமல் கிடந்தான்.
இருவரையும் காதல் மூன்றாம் மனிதனாக நின்று வேடிக்கைப் பார்த்தது.
error: Content is protected !!