Skip to content
Post Views: 198
அத்தியாயம் 23
கீழே பேச ஆரம்பித்ததுமே தர்ஷினி தம்பிக்கு அலைபேசியில் அழைத்து வைத்திருக்க, ஆராத்யாவின் பேச்சு நன்றாய் கேட்டு மனம் இன்னும் கோபத்தில் கொதித்தது ரகுவிற்கு.
Advertisement
“இதை கேட்க கால் வேற பண்ணி வச்சிருக்கா!” என சகோதரியை திட்டி அமர்ந்திருந்தான் ரகு தன் அறையில்.
“போதும்.. டேமை திறந்து விட்ட மாதிரி ஆவூன்னா அழுகை.. இனிமே எங்க முன்னாடி அழுது பாரு!” என்று கூறி கல்பனா டீயை எடுத்து கொடுக்க, சில நிமிடங்கள் அமைதியாய் கழிந்தது அந்த சூழ்நிலையை உள்வாங்கிக் கொள்ள நேரம் எடுத்து.
Advertisement
Advertisement
“என்கிட்ட பேசுவீங்க தான? நமக்குள்ள சண்டை இல்ல தான?” ஆராத்யா டீ குடித்து முடித்து கப்பை கீழே வைத்துவிட்டு எழுந்து நின்று இருவரிடமும் கேட்க,
“நமக்குள்ள எந்த நேரத்திலயும் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் சண்டை வராது.. உனக்கே ஒரு நேரம் அது புரியும்..” என்று பூடகமாய் பதில் கூறினாள் தர்ஷினி.
Advertisement
கிளம்புவதாய் ஆராத்யா தலை அசைக்க, “எங்களுக்கு விளக்கம் குடுக்க மட்டும் தான் வந்தியா ஆரா? அதுவும் அத்தனை அழுகையோட போனை காதுல வச்சிட்டே?” கல்பனா கேட்டுவிட,
“ஆஹான்!” அப்படியா என்பதை போல கல்பனாவைப் பார்த்த தர்ஷினி சிரித்தபடி ஆராத்யா பக்கம் திரும்ப,
“நான் தான் சொன்னேனே! நீங்க எல்லாருமே ரொம்ப நல்லவங்க.. உங்க வீடு எப்பவும் ஜாலியா ஹாப்பியா இருக்கும்.. அப்படியே இருக்கனும்.. நீங்க என்னோட பிரண்ட்ஸ்.. உங்களை ஹர்ட் பண்ணினேன்.. அதுக்கு மன்னிப்பு கேட்க வந்தேன்.. வேற யாரையும் நான் பார்க்க வரல..” என்று ஆராத்யா கூறும் பொழுது இறுதி வரிகளில் அவள் குரலில் இருந்தது என்னவோ..
“பணம் என்ன வேணா செய்யும் தர்ஷ்! என் அம்மா அப்பா அச்சிடேன்ட்ல எனக்கு இப்பவும் சந்தேகம் இருக்கு.. ஆனா நான் கோழை.. என்னால எதிர்த்து கேட்க முடியல.. என் வீட்டுல அம்மா அப்பா, அப்பாவோட அண்ணா என்னோட பெரியப்பா, பெரியம்மா, அவங்க பசங்கனு நிறைய பேர் இருந்தோம்.. என் வீட்டுக்கு போனா எப்பவும் சத்தமா தான் இருக்கும்.. எனக்கு அது ரொம்ப பிடிக்கும். ஆனா அப்பா இறந்த அப்புறம் பெரியப்பாவும் பெரியம்மாவும் பேசுறதை நான் கேட்டேன்.. வீடு என் அப்பா என் பேர்ல அவங்க சொந்த காசுல வாங்கி இருக்காங்க.. என்னை அந்த பரமசிவத்துக்கு கல்யாணம் பண்ணி அனுப்பிட்டு அந்த வீட்டை அவங்க எடுத்துக்கனும் பேசிட்டு இருந்தாங்க.. அந்த பரமசிவம்.. அவன் அவன் பேர்ல அவன் மாமா பேர்லனு வீட்டை எழுதி வாங்க நினச்சான்..” என்று பேச பேச, ஆராத்யாவை பார்த்தபடி தர்ஷினியும் கல்பனாவும் நிற்க, மேலே முதல்படி அருகே நின்று கேட்டுக் கொண்டிருந்தான் ரகுவும்.
“அம்மா அப்பா இழந்தது ஒரு வலினா நமக்காக பெரியப்பா பெரியம்மா அவங்க குடும்பம் இருக்கேனு நினச்ச எனக்கு அப்பா அம்மா ஸ்தானத்துல இருந்து யாருமே நம்மை பார்த்துக்க மாட்டாங்க.. எல்லாமே வேஷம்.. பணம் மட்டும் தான் எல்லாம்னு ஒரே நாள்ல செருப்பால அடிச்ச மாதிரி சொல்லி கொடுத்துச்சு இந்த வாழ்க்கை..”
“ஆரா!” என்ற தர்ஷினிக்கு கண்ணீர் வந்துவிட,
“அச்சோ! நீங்க இந்த நேரத்துல எல்லாம் அழ கூடாது.. நான் இதை ஏன் சொன்னேனா எனக்கு யாருமே வேண்டாம்.. பணம் யாரை எப்ப அப்படி மாத்தும்னு தெரியாது.. அதுவும்…” என்றவள் அந்த வீட்டை வீட்டின் செல்வ செழிப்பை சுற்றிப் பார்த்த பொழுது அந்த கண்களின் மிரட்சியை நன்றாய் புரிந்து கொள்ள முடிந்தது அங்கிருந்த மூவருக்கும்.
வீட்டை சுற்றி வந்த ஆராவின் கண்கள் ரகுவை அங்கே மாடியில் கண்டு மிரட்சியில் இருந்து கெஞ்சலாய் மாற, அதையும் ஒரு வலி நிறைந்த கோபதோடு பார்த்து நின்றான் ரகு.
“என்னை கடத்தி வச்சு சித்ரவதை பண்ணி நான் தப்பிச்சு இந்த ரெண்டு வருஷமா இங்க வந்து இருந்து… இவ்வளவு நடந்தும் இன்னும் என்னோட பெரியப்பா என்னை தேடவே இல்ல.. அந்த வீட்டுலயும் அவங்க இல்லனு கேள்விபட்டேன்.. அப்படியே தேடினாலும் என் பேர்ல இருக்க அந்த வீட்டை அவங்க பேருக்கு மாத்திக்க வேணா தேடிட்டு இருப்பாங்க..” என்றவள்,
“நான் யாரோடவும் இவ்வளவு கிளோஸ் ஆனது இல்ல.. ஆனா உங்களை மிஸ் பண்ண எனக்கு தோணல.. அதனால தான் இவ்வளவும் சொன்னேன்.. என்னை புரிஞ்சிப்பிங்க தானே?” என்று தர்ஷினி கைகளைப் பிடித்துக் கொண்டு ஆராத்யா கேட்க,
“ஹேய்! என்ன ஆரா நீ? வாழ்க்கைல முடிவுகள் எல்லாம் நம்மோடதா இருக்கனும்.. உன் முடிவு சரினு உனக்கு தோணுச்சுனா நீ தைரியமா இரு.. நான் இருக்கேன்!” என்று தர்ஷினி ஆராத்யா கன்னம் தட்ட,
“உலகம் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமா இருக்கு.. உனக்கானது சீக்கிரமே உனக்கு கிடைக்கட்டும் ஆரா! பி ஸ்ட்ரோங்!” என்றாள் கல்பனா.
அவர்களிடம் சொல்லிக் கொண்டு ஆராத்யா கிளம்பி வெளியே வர, படிக்களில் இறங்கி வேகமாய் வெளியேறினான் ரகு.
“ரகு எங்க போற?” என்ற தர்ஷினியின் கேள்வி எல்லாம் காதில் விழாதது போல அவன் வேகமாய் செல்ல, தர்ஷினியும் அவன் பின்னே செல்ல போக,
“விடு தர்ஷி! ரெண்டு பேரோட வாழ்க்கை.. அவங்களே பேசி முடிவெடுக்கட்டும்.. ரகு மேல இருந்து எல்லாம் கேட்டுட்டு தான் இருந்தார்..” என்று கல்பனா சொல்ல, தர்ஷினிக்கும் அது சரி என்று தோன்றவே அமைதியாய் அமர்ந்துவிட்டாள்.
ஆராத்யா அந்த வீட்டில் இருந்து வெளியேறி தன் வீட்டின் படிகளில் கால்களை வைக்க, காரை எடுத்துக் கொண்டு அங்கே வந்திருந்தான் ரகு.
“ஆரா கார்ல ஏறு!” என்று ரகு சொல்லவும் திரும்பிய ஆராத்யா அசையாமல் நிற்க,
“மிஸ் ஆராத்யா! கார்ல ஏறுங்க!” என்றான் தன் பொறுமையை பிடித்து இழுத்து.
“நான் இன்னைக்கு லீவ் சார்.. மெயில் பண்ணிட்டேன்!” மிக பொறுமையாய் வந்தது ஆராத்யாவின் பதில்.
தள்ளி வைத்து உன் எல்லைக்குள் நான் இல்லை என்பதை போல தெளிவாய் வந்தது ஆராத்யாவின் குரலும் பதிலும். தர்ஷினியிடம் குழந்தையாய் பேசியவள் ரகுவின் பார்வைக்குள் தான் இருப்பதை அழிக்க முயன்றாள்.
“ஓகே!” என்று கூறியவன்,
“தர்ஷினி பிரதரா பேசுறேன்.. உன் பிரண்ட்டோட பிரதரா பேசுறேன்.. ரெண்டு நிமிஷம் பேசணும்.. அடுத்து நான் உன் வழியில இந்த ஜென்மத்துக்கும் வர மாட்டேன்..” ரகு சொல்ல, இரு நொடி நின்றவள் சென்று காரில் ஏறிக் கொண்டாள்.
வழி முழுதும் அமைதி நிரம்பி இருக்க நேர்மாறாய் இருவர் மனங்களும் அமைதியின்றி தவித்தது.
நெடுஞ்சாலையின் ஓரம் காரை நிறுத்தியவன் பேசும் வார்த்தைகளை சேகரிக்கும் நேரம் அவன் பேசும் வரை மௌனமாய் காத்திருந்தாள் ஆராத்யா.
“சில கேள்விகள்.. அதுக்கான பதில் மட்டும் எனக்கு சரியா வந்தா போதும்!” ரகு இறுகிய முகமாய் சொல்ல, அவனைப் பார்க்கவே இல்லை ஆராத்யா.
“ரொம்ப சிம்பிள்! நான் உன்னை விரும்புறேன்.. இதை நேத்து ஒரு நாள்ல நீ பீல் பண்ணி உண்மையானு கேட்ட.. என்னை புரிஞ்சதால தான உன்னால பீல் பண்ண முடிஞ்சது?” ரகு கேட்க,
“நீங்க அப்படி நினைச்சிருக்கலாம் சார்! எப்பவும் ஆபீஸ்ல இருக்குற ரகு ராம் எம்டியை நேத்து நான் பார்க்கல.. ஸ்டேஷன் போகும் போது, ஸ்டேஷன்ல, வரும் போதுனு என்னால ஒரு பொண்ணா சில உணர்வுகளை புரிஞ்சிக்க முடிஞ்சது.. அதை தெளிவு பண்ணிக்க தான் கேட்டேன்.. ஆனா…” என்று ஆராத்யா அடுத்து சொல்ல வர, கைநீட்டி தடுத்திருந்தான் ரகு.
“எச்சரிக்கையா இருந்தேன்னு சொல்ற! ஓகே! பிடிச்சிருக்கு பிடிக்கலைனு சொல்லிட்டு போகலாம் தான? ஏன் என்னை அவாய்ட் பண்ணனும்? மொத்தமா இங்க இருந்து போக நினைக்கணும்? எனி பர்ட்டிகுலர் ரீசன்?” என்று ரகு கேட்க,
“அது என்னோட பெர்சனல் சார்!” என்று உடனே வந்தது அவளிடம் இருந்து பதில். அதில் ரகு நிறுத்தி நிதானமாய் அவள் புறம் திரும்ப,
“நான் யாருக்கும் எங்கேயும் தொல்லையா இருக்க விரும்பல..”
“ஓடி ஒழியுறது புத்திசாலித்தனம் இல்ல..”
“நான் கோழையாவே இருந்துக்குறேன்.. என்னால யாருக்கும் யாராலயும் எனக்கும் பிரச்சனை வேண்டாம்.. நான் என் வழில இருந்துக்குறேன்!”
“ஆரா! ஆரா! ஆரா!” பொறுமை என்பது குறைந்து கொண்டே செல்ல ஸ்டேயரிங்கில் குத்தியவன்,
“என்ன டி உன் பிரச்சனை? என் பணமா? அதுக்காக நான் அதையெல்லாம் தூக்கி எறிய முடியாது.. என் உழைப்பு அதெல்லாம்.. பணத்தை வச்சு என்னை என் கேரக்டரை எப்படி உன்னால தீர்மானிக்க முடிஞ்சது ஆரா? உனக்கு நான் என்ன நிரூபிக்கனும் சொல்லு!” என்று ரகு அவள்புறம் திரும்பி கெஞ்சல் போலவே கேட்க, வெளியே திரும்பிக் கொண்டவள் கண்கள் கலங்கியதை மறைத்துக் கொண்டாள்.
“சார் ப்ளீஸ்! உங்களுக்கு இருக்குற வசதிக்கு நான் எல்லாம் உங்களுக்கு ஒண்ணுமே இல்ல.. நீங்க என் முன்னாடி இப்படி இருக்க வேண்டிய அவசியமே இல்ல..”
“தெரியுது இல்ல.. நான் உன் முன்னாடி இருக்க வேண்டிய அவசியம் இல்லை தான்.. ஆனா இருக்கேனே.. அதை புரிஞ்சிக்கோயேன்!” என்றவன்,
“ஆரா உனக்கு தேவை உன்னை புரிஞ்சி உனக்காக வாழுற ஒருத்தன்.. எனக்கு தெரியும்.. ஆனா உனக்கு தெரியாதது என்னைய தவிர யாராலயும் உன்னை என் மாதிரி பார்த்துக்க முடியாது.. பணம் பணம் பணம்னா.. பணம் இருக்கறவன் மட்டும் தான் எப்ப எப்படி மாறுவான்னு தெரியாதா.. மனுஷனா பொறந்தாலே அப்படி தான்.. இன்னைக்கு காலையில வரைக்கும் நான் எப்படி இருந்தேன் தெரியுமா உனக்கு? சந்தோசத்தோட உச்சில இருந்தேன்.. ஒரு நாள் கூட நிலைக்கல.. இதோ இப்ப கூட நீ என்னை கொஞ்சம் கொஞ்சமா தின்னுட்டு இருக்க.. உனக்கு புரியுதா?”
“இந்த காதல் கல்யாணம் மேல எல்லாம் எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்ல சார்.. எனக்கு வேண்டாம்.. என்னை விட்ருங்க ப்ளீஸ்!”
“பொய் சொல்ற! பொய் சொல்ற ஆரா! உனக்கு சந்தோசமா வாழனும்னு ஆசை இருக்கு.. என் பேமிலியையும் புடிச்சிருக்கு.. ஏன் என்னையும் கூட புடிச்சிருக்கலாம்.. ஆனா பயப்படுற.. திரும்ப வாழ்க்கைல யாரும் இல்லாம ஏமாந்துடுவோமோன்னு பயப்படுற.. அதுக்கு காரணமா நீ என்னென்னவோ நினைச்சுட்டு எல்லாரையும் சந்தேகத்தோட பாக்குற..” ரகு சொல்ல, மனம் பேசினாலும் மௌனமாய் அமர்ந்திருந்தவள் அவன் புறம் திரும்பிடவில்லை.
“ஆபீஸ் அவுட்டிங்ல உன் ட்ரீம்னு சொன்னதை நானும் கேட்டேன் ஆரா.. அது உன் மனசுல இருந்து வந்த வார்த்தை.. உன்னை உனக்காகவே உன் பேக்கிரௌண்ட் எதுவும் தெரியாமலே விரும்பினவன் டி நான்.. நான் எப்படி பாதில விட்டுட்டு போவேன்.. இப்ப என்ன இந்த வீடு வாசல்னு எல்லாத்தையும் விட்டுட்டு வரணுமா? சரி வா.. மூட்டை தூக்கணுமா? அதையும் பண்றேன்.. என்ன செய்யணும்னு சொல்லு ஆரா!”
“சார் ப்ளீஸ்! நீங்க என்னை மிரட்டிட்டு இருக்கீங்க.. பிடிக்கலைன்னா விட்டுடுங்க சார்.. எனக்கு பயமா இருக்கு.. நீங்க நல்லவர் தான்.. உங்க குடும்பம் பிடிக்கும் தான்.. ஆனா நான்… எனக்கு என் மேல நம்பிக்கை இல்ல.. என்னால எதையும் நம்ப முடியலை.. என் அம்மா அப்பா அளவுக்கு எனக்கு யார் மேலயும் நம்பிக்கை வரல.. ப்ளீஸ்! நான் வேண்டாம்.. ப்ளீஸ் சார்!” என்றவள்
முகத்தை கைகளால் மறைத்து கால்களில் ஊன்றிக் கொள்ள, சில நிமிடங்கள் அமைதியாய் அவளைப் பார்த்திருந்தவன் காரை எடுத்துவிட்டான்.
நேராய் இருவரின் வீட்டின் முன்பாய் நிறுத்தியவன்,
“என்னால என்னை மாத்திக்க முடியாது.. நீயும் மாற மாட்டேன்னு சொன்னா நோ ப்ரோப்லேம்.. உன்னோட இஷ்டம்.. ஆனா நான் இப்படி தான் இருப்பேன்.. என்னோட இந்த வாழ்க்கைல கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது ஆராத்யாவோட மட்டும் தான்.. எந்த நம்பிக்கையும் இல்லாம ரெண்டு வருஷம் காத்திருந்த எனக்கு உனக்கும் என் காதல் தெரியுன்ற சந்தோசத்தோட காலம் முழுக்க காத்திருக்க முடியும்!” என்று சொல்ல,
“இதெல்லாம் வீண் பிடிவாதம் சார்.. உங்களுக்கு ஏத்த பொண்ணா…” என்று ஆராத்யா பேசும் முன்,
“நீங்க கிளம்பலாம் ஆராத்யா!” என்றுவிட, ஒரு கலங்கிய பார்வை பார்த்தவள் இறங்கும் நேரம்,
“உன் அம்மாவாவும் அப்பாவாவுமா உன் கூடவே இருப்பேன் என் ஆயுசுக்கும்.. அதை நீயே உணர்ந்து ஒரு நாள் வருவ அதுவரை இனி நான் உன்னை தேடி வர மாட்டேன்..” அவளை நேருக்கு நேராய் பார்த்து கூறியவன் அவள் திணறி துக்கத்தை விழுங்கி பார்த்தபடி கதவடைக்கவும் தன்னுடைய வீட்டினுள் காரை செலுத்திவிட்டான்.
வீட்டிற்குள் சோர்ந்த முகத்துடன் ஆராத்யா வரும் நேரம் ஹாலில் ஸ்ருதி அம்பிகா அமர்ந்திருக்க, அங்கே அஜய் ஸ்ருதியின் கணவன் மடியில்.
அவர்களைப் பார்த்ததும் முகத்தைத் துடைத்து புன்னகைக்க, “ஆரா! தூங்கிட்டு தானே இருந்த? எப்ப வெளில போன? இப்ப ஃபீவர் பரவால்லையா?” என்றாள் ஸ்ருதி.
“ரொம்ப டையார்ட்டா தெரியிற ஆரா.. காபி போட்டு தரவா?” என்றார் அம்பிகா.
“இப்ப தான் தர்ஷ் வீட்டுல குடிச்சேன் ம்மா.. நீங்க எப்ப வந்திங்க அண்ணா?” என்று ஆராத்யா ஸ்ருதி கணவனிடம் கேட்க,
“மார்னிங் பிளைட்ல டா.. நீ எப்படி இருக்க? ஃபீவர் அதிகமா இருந்தா ஹாஸ்பிடல் போலாமே?” என்றார் அவர்.
“இல்ல ண்ணா இப்ப கொஞ்சம் ஓகே தான்.. நீங்க பேசிட்டு இருங்க!” என்றவள் உள்ளே செல்ல, ஸ்ருதியும் எழுந்து சென்றாள்.
“நைட்டு தான் சர்ப்ரைசா போன் பண்ணி ஏர் போர்ட்ல நிக்கிறதா சொன்னார்.. நீ இருந்த சிடுவேஷன்ல உன்கிட்ட சொல்ல முடியல..” என்று ஸ்ருதி விளக்கம் கொடுக்க,
“குட் ஸ்ருதி.. நீ போய் அவரை பாரு.. நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன்!” மென் புன்னகையோடு ஆரா சொல்ல,
“உன் கண்ணெல்லாம் சிவந்து போய் இருக்கு ஆரா.. இன்னும் அவனை நினைச்சு பயந்து போய் இருக்கியா? அதான் கம்பளைண்ட் பண்ணிருக்கியே! ரகு ராம் சார் மூலமா கம்பளைண்ட் பண்ணினதால எக்ஸ்ட்ரா வேல்யூ இருக்கும்.. அதை நினச்சு உன்னை நீயே கஷ்டப்படுத்திக்காத!”
ஸ்ருதியிடம் அனைத்தையும் சொல்ல வேண்டும் அவள் மடி சாய்ந்து அழ வேண்டும் என தோன்றினாலும் அவள் கணவனின் வருகையில் மகிழ்ந்து இருப்பவளிடம் வேறேதையும் காட்டிக் கொள்ள விருப்பமில்லை.
“அதெல்லாம் நான் பாத்துக்குறேன்.. நீ போய் அவரை கவனி.. வெளில போய்ட்டு வாங்க..” ஆராத்யா சிரித்துக் கொண்டே சொல்ல,
“நீ இப்படி இருக்குறது எனக்கு கஷ்டமா இருக்கு டி.. உனக்கு எப்ப நல்ல நேரம் வரும்னு நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.. நேத்து நீ அழுத அழுகை அந்த ராஸ்கலை போலீஸ்ல குடுத்த சந்தோசத்துல வந்த அழுகை இல்ல.. வேற ஏதோ இருக்கு.. ஆனா அதை கேட்டு உன்னை சங்கடப்படுத்தவும் முடியல..”
“ப்ச் ஸ்ருதி அதையெல்லாம் விடு.. நீ அவரை போய் பாரு.. சொல்றேன்ல.. எனக்கு ஒரு கஷ்டம்னா நான் வேற யார்கிட்ட போக போறேன்.. நாம அப்புறமா பேசிக்கலாம்!” என்று பேசி பேசியே ஸ்ருதியை அனுப்பி வைத்துவிட்டு தன் அறைக்குள் வந்தாள் ஆரா.
யாரிடம் சொல்ல தன் மனதிலும் துளிர் விட்ட நேசத்தை? அதை தானே அழிக்க போராடும் கொடுமையை?
கடந்த ஒரு மாதத்தில் தன் மனதின் அலைப்புறுதல்களின் அளவிலும் அதன் முடிவிலும் பயமாய் இருக்க, தன்னால் முடிந்த மட்டும் விலக நினைத்த பொழுது விலக முடியாமல் இவ்வளவு தூரம் கொண்டு வந்துவிட்ட இந்த விதியை என்னவென்று சொல்ல?
இரண்டு வருட காதல்.. அப்படி தானே தர்ஷினி கூறினாள்? ரகு ராம் என்ற ஒருவனின் மனதில் தான் இருப்பதை நினைத்து எவ்வளவு மகிழ வேண்டும்? அதை கொடுக்க மறுக்கும் கடவுள் இந்த உணர்வை ஏன் தனக்கு கொடுக்க வேண்டும்? என்று நினைக்கும் பொழுதே நெஞ்சை அறுத்தது ஒரு உணர்வு.
அவன் பார்த்த பார்வை, பேசிய வார்த்தை, கெஞ்சலும் தவிப்புமாய் பார்த்த விழிகள், என ரகுவின் கோபம் தாண்டிய அத்தனை உணர்வுகளையும் தன்னால் புரிந்து கொள்ள முடிந்ததில் திணறி தடுமாறி எதிர்த்து பேச பட்ட கஷ்டங்கள் எல்லாம் யாரிடம் சொல்லி அழுதிட? எந்த மருந்தினை எடுத்து பூசிட?
எப்படி முடிந்தது அவனுக்கு தன்னை அவனில் பாதியாய் நினைத்திட? இந்த விதியின் வேலையே இது தானோ? சேர முடியாத இருவரை இடைப்பட்ட காலத்தில் உணர்வுகளால் துடிக்க வைப்பதில் அப்படி என்ன சந்தோசமோ?
நிச்சயம் தன் நேசத்தை பகிர்ந்து கொள்ளும் எண்ணம் அறவே இல்லை.. அவன் காதலை ஏற்றுக் கொள்ள சக்தியும் இல்லை.
எதுவுமே இல்லாத தன் அளவில் உள்ள ஒருவன் என்னை இந்த அளவிற்கு காதலித்து இருக்க கூடாதா? என்றெல்லாம் அவள் ஏக்கங்கள் கூடிக் கொண்டே செல்ல, படுக்கையில் விழுந்தவள் கண்களில் வழிந்த கண்ணீரெல்லாம் தடம் இன்றி படுக்கையுள் புதைந்து கொண்டிருந்தது.
இறுதியாய் அந்த பரமசிவத்தை உள்ளே சிறைக்கு அழைத்து செல்லும் முன் இவளை அவன் பார்த்த அந்த பார்வையும் கேட்ட கேள்வியும்.. வாழும் காலம் முழுக்க மறக்க முடியாத ஒன்று.
“ஒய்யாரத்துல இருக்குற ஒருத்தனை உன் கைக்குள்ள வச்சுட்டு என்னையவே இந்த நிலைமைக்கு கொண்டு வந்துட்ட இல்ல.. நல்லா தான் புடிச்சிருக்க.. கேட்க நாதி இல்லாத உனக்கு நல்ல வாழ்வு தான்…” இன்னும் என்னவெல்லாம் சொல்லி இருப்பானோ அந்த இன்ஸ்பெக்டர் ஹரிஷ் கூடுதலாய் அடி வெளுத்து உள்ளே அனுப்பி இரா விட்டால்.
அப்படி அவன் பேசும் பொழுது கூசிப் போன தன்னை, ரௌத்திர பார்வையில் சினம் அடக்கி நின்ற ரகு பாதுகாப்பாய் பிடிக்க வர, அவனிடம் இருந்து விலகிய நியாபகமும் மனக்கண்ணில் தோன்றி கதறி அழ வைத்தது.
இந்த ஒருவனின் பொய் பேச்சை தான் உண்மை என நிரூபிப்பது போல ஆகாதா தன் காதலை வெளிப்படுத்துவதும் ரகுவின் காதலை ஏற்பதும்?
அப்படி மட்டும் நடந்தால் இவன் ஒருவனின் பேச்சு தானே நாளை அலுவலகம் முதல் இந்த ஊரெங்கும் பரவும்?
இந்த இரண்டு வருடங்களில் தன்னை தானே பார்த்துக் கொள்ள அவள் கண்ட போராட்டங்கள் ஏராளம்.. பெண் தனியாக உலகத்தில் வாழ்வது எல்லாம் சாதாரண காரியம் அல்ல.. தான் எவ்வளவு ஒழுக்கமாய் இருந்தாலும் அதற்கு மேல் பூச்சு பூச இங்கு பெரிய கூட்டமே உண்டு.
அத்தனையும் தாண்டி வாழும் பல பெண்களில் ஒருத்தி தான் ஆராத்யா.
யாரும் பேசும் இடத்தில் தான் இருக்க கூடாது என்பதில் அத்தனை கவனம் இருக்கும் அவளிடம். ஒரு ரூபாய் என்றாலும் அதை திருப்பி செய்யா விட்டால் அந்த நாளின் தூக்கம் பறிபோகும்.
இப்படி இருக்கையில் தன்னை விட உயரத்தில் இருக்கும் ஒருவன் மேல் தான் அன்பு வைக்க எப்படி தன் மனம் ஒத்துழைத்தது என்று தன்னையே கேட்டு பல முறை தானே தன்னை வலிக்கும்படி அடித்துக் கொண்ட இரவுகள் ஏராளம்.
முதல் முறையாய்.. என்ன! அது நடந்து பத்து நாட்கள் இருக்குமா? கையில் காயம் பார்த்து ரகுவோடு காரில் பயணம் செய்த நாள்.. அந்த முதல் நாள் தான் எல்லாவற்றிற்கும் வித்து.
அந்த நாளில் காலை மாலை என அவனோடு தான் வந்த நேரம் அவன் தன்னிடம் காட்டிய கரிசனம்.. ஆம் கரிசனம் என்று தான் அவள் நினைத்திருந்தாள். கூடவே அவனுடைய சில அறிவுரைகள் என அலுவலகத்தில் தான் கண்ட ரகு ராம் எம்டி என்ற மனிதனை தாண்டி, அவனை தனியாய் முகம் காண வைத்தது.
அன்று தோன்றிய மனதின் எண்ணத்திற்கு எல்லாம் உருவம் கொடுக்காமல் உணர்வுகள் மட்டும் உள்ளத்தில் சேர்ந்திருந்ததை அவள் அறியவில்லை.
அடுத்தடுத்த நாட்களில் தர்ஷினியோடு அவனை கண்டதும் அவனின் இயல்பான குடும்பத்துடனான நாட்களும் என மனதின் விதை வளர்வதை கண்டு கொண்டவள் அதை வெட்டிவிட தான் பார்த்தாள்.
இரண்டாவதாய் அவனோடு ஒன்றாய் காரில் செல்ல சொல்லி தர்ஷினி கூறிய போது மறுத்ததும் இவள் விழித்த விதம் கண்டு தர்ஷினி சந்தேகமாய் கேட்டதும் என எல்லாம் துளி மாறாமல் நியாபகம் இருந்தது ஆராத்யாவிற்கு.
கார்த்திகா வந்து ரகுவைப் பற்றியும் அவனின் நடத்தைகள் பற்றியும் கூறியதும் முதலில் அதிர்ந்தாலும் அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பில்லை என தானே தனக்கு சமாதானம் செய்திருக்க நேற்றைய நாளில் அவனை முழுதாய் கண்டு கொள்ள முடிந்தவளுக்கு அதனை நினைத்து சந்தோசம் கொள்ள தான் முடியவில்லை.
கனவிலும் நடக்காத ஒன்றை தான் கற்பனை செய்து கொண்டிருக்கிறோம் என தன் கனவை தானே அடித்து விரட்டிக் கொண்டிருக்க, அந்த கனவு கை சேருவதாய் நேரில் வந்து நின்றும் ஏற்க முடியாத நிலையில் இவள்.
அதுவும் அவன் குடும்பத்திற்கே தெரியும் அளவுக்கு ரகுவின் நேசம் இருக்க, அவனின் தூய்மையான அன்புக்கு இதை விட வேறு என்ன சாட்சி வேண்டுமாம்?
ஆனாலும் யார் என்ன நினைத்தாலும் சரி என்று அவனுடன் சேர்ந்திட மட்டும் மனம் இடம் தரவில்லை.
தனக்கு ஆதரவு அடைக்கலம் கொடுத்த ஸ்ருதியும் அவள் குடும்பமும், தனக்கென ஒரு தன்னம்பிக்கையை கொடுத்த அலுவலகம், நன்றாய் இரண்டு வருடத்தில் பழக்கமாகி இருந்த இந்த ஊர் என அத்தனையும் தனக்கு முக்கியமாய் தோன்ற வாழ்க்கையின் முக்கிய முடிவை அப்படி சட்டென ஏற்று கையில் வைத்துக் கொள்ள முடியவில்லை.
போகட்டும்.. ஒரே ஒரு காதல், அன்பு, பாசம், நேசம் தானே? என்ன செய்து விடும்? என்று நினைக்கும் பொழுதே நெஞ்சடைத்து பெரும் கேவல் வெளிவர, வாய் மூடி அதை தனக்குள் வைத்துக் கொண்டாள்.
வெறும் பத்து பதினைந்து நாட்களில் இப்படியான தன் வாழ்வின் மாற்றதை எதிர்பார்க்காமல் இருந்தவள் அதை எற்கவும் முடியாமல் மறுத்து வாழ்வை சாதாரணமாய் எதிர்கொள்ளவும் முடியாமல் என திண்டாடிய கொடுமையான நேரம் இது ஆராத்யாவிற்கு.
இப்பொழுது சொல்லி சென்றானே இனி உன்னை தேடி நான் வர மாட்டேன் என்று.. நினைக்கும் பொழுதே நெஞ்சம் வலிக்க, நீயாக வருவாய் என்ற அவன் வார்த்தைகளுக்கு அவள் செவி சாய்க்கவில்லை. அது நடக்காது என்பதில் அத்தனை திண்ணம் ஆராத்யாவிற்கு.
அடுத்த இரண்டு நாட்களும் அலுவலகம் செல்லவில்லை ஆராத்யா. பார்த்துக் கொண்டு தான் இருந்தான் ஆனாலும் கண்டு கொள்ளாத பாவனை ரகுவிடம்.
ஸ்ருதி கணவன் வந்திருக்கும் நேரம் என்பதால் அவனுடன் நேரத்தை செலவிடவே நேரம் போதவில்லை ஸ்ருதிக்கு.
இரண்டு நாட்களும் வீட்டுக்குள் அடைப்பட்டு கிடந்தாள் என்று தான் சொல்ல வேண்டும் பிடிக்கவே பிடிக்காத தனிமையை கட்டிக் கொண்டு.
முதல் நாளாவது ஆராத்யா வந்து சிறிது நேரம் அமர்ந்திருக்க, அடுத்த நாள் எல்லாம் வெறுமையாய் போனது.
எப்பொழுதும் பால்கனியில் நின்று ஊஞ்சலாடும் ஆராத்யாவை ரகு ரசிப்பது நின்று ஊஞ்சலில் அமர்ந்து அந்த பால்கனியை பார்த்தும் பாராமலுமாய் இருப்பது வழக்கமாகி இருந்தது ஆராத்யாவிற்கு.
இரண்டு நாட்களுக்கு மேல் முடியாமல் போகவே மூன்றாம் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க வேண்டும் என்ற பெரும் கொள்கையோடு கிளம்பி விட்டாள் அலுவலகம்.
error: Content is protected !!