Skip to content
Post Views: 1,380
அத்தியாயம் 26
“கல்பனா! அகி எங்க மா?” மகேஸ்வரி கேட்க,
Advertisement
“குளிச்சுட்டு வர்றேன்னு மேல போனாங்க இன்னும் காணும் நான் போய் பாக்குறேன் த்த!” என்ற கல்பனாவிடம்,
“தர்ஷி வீட்டு ஆளுங்க எல்லாம் வந்தாச்சு.. என்ன பண்ணுறான்?” என்று கேட்க,
Advertisement
Advertisement
“கையோட கூட்டிட்டு வந்துடறேன் த்த.. ரெண்டே நிமிஷம்.. நீங்க இந்த பாயசத்தை மட்டும் கிளறி விட்டு ஆஃப் பண்ணிடுங்க..” என்று கூறிவிட்டு, தன்னறைக்கு சென்றாள்.
வீடேங்கும் தோரணம் கட்டியிருக்க, வீட்டின் நடுவே மலர் மாலை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்த அழகிய தேக்குமர தொட்டில் தயாராய் இருந்தது. அதுவும் ரகு தேர்வு செய்து வாங்கி வைத்திருந்தது.
Advertisement
“இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க இங்க? தர்ஷி கூட கிளம்பி இருப்பா?” என்று அறைக்குள் வரவும் கணவனைப் பார்க்க, அகிலன் பட்டு வேஷ்டி சட்டையில் தயாராகி தான் அமர்ந்திருந்தான்.
“ப்பா! மாப்பிள்ளை ரெடியா தான் இருக்கீங்க போலயே! கீழ வர்றதுக்கு என்னவாம்? நிஜமா மாப்பிள்ளைனு நினைப்பா? பொண்ணு வேணா பார்த்திடலாமா?” என்று கூறி கணவன் சிகையை கலைத்துவிட்டு கேட்க, அவள் கைகளைப் பற்றி திருப்பியவன் மார்போடு அவள் தலையை லேசாய் வளைத்து சாய்க்க,
“அடடா! இந்த பொண்ணே போதுமோ?” என்று கூறி, மேல்நோக்கி பார்த்து சிரித்தவள்,
“ஆத்தி! அத்தை திட்ட போறாங்க.. எல்லாரும் வந்தாச்சு.. வாங்க போகலாம்!” என அவனில் இருந்து பிரிய, அவன் கைகள் இறுக்கமாய் பிணைந்திருந்தது அவள் இடையினில்.
“என்னாச்சு உங்களுக்கு?” இப்படி எல்லாம் செய்பவன் இல்லையே! என்று நொடியில் கண்டு கொண்டவள் அவன்புறம் திரும்ப முயல, அதுவும் முடியவில்லை.
“அகி! உங்களை தான்! கையை எடுங்க!” என்று அவளும் முயல, இன்னும் அவள் கழுத்தினில் புதைந்தான்.
“அகி!” என்று மீண்டும் அழுத்தி அழைக்க,
“உனக்கு கஷ்டமா இருக்கா கல்பனா?” என்றவன் கேள்வியில்,
“என்னை பாருங்க முதல்ல!” என்றாள் கைகளை இழுத்து. அதில் முன்வந்து அவன் நிற்க,
“என்ன நீங்க? என்னவோ மாதிரி இருக்கீங்க?” கேட்டவளுக்கும் விடை கிடைத்திட,
“என்ன பேசுறீங்க நீங்க?” என்றாள்.
“எனக்கு கஷ்டமா இருக்கு டி..!” என்றான் அவளை அணைத்துக் கொண்டு.
“அகி!” என்றவளுக்கும் கண்கள் கலங்கிக் கொண்டு வந்தது.
“எனக்கு தெரியும் கல்பனா.. நீ எதையும் காமிச்சுக்க மாட்ட.. உனக்குள்ளயே வச்சுக்குறது தான் எனக்கு தண்டனையா இருக்கு!” என்றவன் கலங்கிய குரலில் சுதாரித்துக் கொண்டாள்.
“அய்யோ விடுங்க! என்ன பேச்சு இது? தர்ஷிக்கு தெரிஞ்சா பீல் பண்ண போறா.. குழந்தை எல்லாம் கடவுள் கொடுக்குறது.. இன்னும் கொஞ்ச நாள் ஜாலியா இருங்கனு உங்களையும் என்னையும் விட்டு வச்சிருக்கார்.. அப்புறம் பாருங்க.. என்கிட்ட கதை சொல்லிட்டு பேங்க்கு ஓடுற மாதிரி எல்லாம் ஓடிட முடியாது.. பாப்பாக்கு நீங்க டைம் குடுத்து தான் ஆகணும்!” என சமாதானத்தை மிரட்டல் போல கூற, பட்டுப்புடவையில் கலங்கிய கண்களை சமாளித்து தன்னை அதட்டும் மனைவியை நினைத்து மனமெல்லாம் வலித்தது.
கல்பனா போகாத கோவிலும் இல்லை இருவரும் ஏற்காத மருத்துவமும் இல்லை.
“இங்க பாரு கல்பனா! அங்க யாரும் உன்னை எதுவும் பேச மாட்டாங்க.. நந்தா மாமா அப்படி விட மாட்டாங்க தான்.. ஆனா எந்த காரணத்துக்கும் நீ ஒதுங்கிட கூடாது ம்ம்ம்?” என்று அகிலன் பேசயில், கல்பனா கணவனை அணைத்துக் கொண்டாள் இறுக்கமாய்.
இருவருக்குமே சிறிது நேரம் தேவைப்பட்டது தங்களை நிதானித்துக் கொள்ள.
“தர்ஷினியே என்னை அப்படி எல்லாம் ஒதுங்கி போக விட மாட்டா..” என்று பேசி கல்பனா கண்களை துடைக்க,
“டேய் அகி!” என்று கதவைத் தட்டினார் மகேஸ்வரி வந்து.
“நீ போ!” என்றவன் பாத்ரூம் உள்ளே செல்ல,
“ப்ச்! நீங்க வேற.. சும்மா போன என்னை கூப்பிட்டு.. இப்ப பாருங்க அத்தை கண்டுபிடுச்சுடுவாங்க!” என்றவள் கண்களை நன்கு துடைத்துக் கொண்டு,
“அவங்க இப்ப தான் குளிச்சு முடிச்சிருக்காங்க த்த! ட்ரெஸ் எல்லாம் எடுத்து வச்சுட்டேன்.. அவங்க வரட்டும்.. நீங்க வாங்க!” என்றவள் அவரின் முகம் பார்க்காமல் பேசியபடி சென்று படிகளில் இறங்க, வயதான ஒரு தாய்க்கு புரியாதா என்ன!.
“தர்ஷி! ரகு இன்னும் வரலை.. ஒரு போன் பண்ணு!” என்ற நந்தா குழந்தையை தன் கைகளில் வைத்திருக்க, தயாரான தர்ஷினியும் மொபைலை கையில் எடுத்துக் கொண்டு வெளியே வர, நந்தாவும் உடன் வந்தான்.
“ரிங் ஆகுது பிக் பண்ணல.. வந்துட்டு இருப்பான்..” என்றாள் தர்ஷினி.
“பிக்கப் பண்ண வர்றேன்னு சொன்னாலும் வேண்டாம்னு சொல்லிட்டான்!” என்ற நந்தா குழந்தை பிறந்த அன்று வந்தது.
இன்று நாற்பது நாட்கள் ஆகி இருக்க, இன்று குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா. வெளிநாடு சென்ற ரகுவும் இன்று தான் வரவிருக்கிறான்.
நந்தா தன் தாயிடம் குழந்தையை தந்துவிட்டு மனைவி அருகே வந்து நின்று மொபைலில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்க, அகிலனும் வந்துவிட்டான்.
“மாமா! நில்லுங்க.. நான் எடுக்குறேன்..” என்றவன் கேமராவை எடுத்துக் கொண்டு அவர்கள் அருகில் வர,
“சும்மா தான் மச்சான்.. இப்ப வேண்டாம் ஃபன்க்ஷன் ஸ்டார்ட் பண்ணிட்டு எல்லாருமே எடுத்துக்கலாம்” என்று சொல்ல, ரகுவும் வந்து இறங்கினான் கேட் அருகே.
பக்கத்து வீட்டிற்கு சென்ற பார்வையை திருப்பியது தன் வீட்டில் இருந்த கூட்டம். ஒரு நொடி அதில் கண்களை விரித்தவன் பின் சிரித்தபடி உள்ளே நுழைந்துவிட்டான்.
உள்ளே நடந்து வரும் பொழுதே அத்தனை உற்சாகம்.. விழாவிற்கு என வந்தவர்கள் அங்கேயும் இங்கேயுமாய் நிற்க, வரும் வழி எங்கும் வந்தவர்களிடம் பேசியபடி உள்ளே வந்தான்.
வீட்டினரிடமும் சொல்லிக் கொண்டு தன் அறைக்கு சென்றவன் முதல் வேலையாய் பால்கனி கதவினை திறக்காமலே கண்ணாடிக் கதவின் வழி எதிர் வீட்டினை பார்க்க, அது அவளில்லாமல் இருக்கவும் வெளியே பார்க்க, அவள் வண்டியையும் காணவில்லை.
‘ஆபீஸ் போயிருக்க மாட்டாளே! இங்க ஃபன்க்ஷன்னு தெரியும் தான?’ என நினைத்துக் கொண்டிருக்க,
“எக்ஸ்க்யூஸ் மீ சார்!” என்று வந்தான் நந்தா.
“வாங்க மாமா!” என்றவன் குளிக்க தயாராக,
“மேல வந்து இவ்வளவு நேரமா அங்க தான் நின்னுட்டு இருந்தியா?” கிண்டலாய் நந்தா கேட்க,
“என் நிலைமை! அங்க தான் ஒன்னும் காணுமே!” என்றவன் அடுத்து ரகு பேசும் முன்,
“டூ மினிட்ஸ் மாமா!” என்று குளிக்க சென்றுவிட,
“ஸ்மார்ட் எஸ்கேப் டா மாப்பிள்ள!” என்று சிரித்த நந்தாவும் அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டான் அவன் வரும்வரை.
“டைம் ஆயிடுச்சா!” என்று வந்து கிளம்பி தயாராக, “நல்ல நேரத்துக்கு இன்னும் ஹால்ஃப் அன் ஹவர் இருக்கு.. பொறுமையா கிளம்பு!” என்ற நந்தா,
“போன வேலை எல்லாம் சக்ஸஸா?” என நந்தா கேட்க,
“அல்மோஸ்ட் மாமா.. இனி அவங்க ஒர்க் தான்.. பாக்கலாம்.. இருபது நாள்ல கிளம்பிடலாம்னு தான் நினச்சேன்.. பட் ஒர்க் கம்ப்ளீட் ஆக எக்ஸ்ட்ரா டென் டேஸ் ஓடிடுச்சு.. அப்புறம் அவங்களையும் பார்க்கணுமே! அதான்.. ஏஞ்சலை சரியா பார்க்கவே இல்ல.. இங்க எல்லாம் ஓகே தான மாமா? அகி பார்த்துகிட்டான் இல்ல?” என்று ரகு.
“ம்ம்ம் இங்கேயும் எல்லாம் ஓகே தான்.. என்ன நைட்டெல்லாம் உன் ஏஞ்சல் நைட் ஷிப்ட் பார்க்க விட்டு பகல் எல்லாம் தூங்க விட்டுட்டா.. எனக்கு டில்லி போய் ஒர்க் பண்ண ஈசியா இருக்கும்!” என்று சொல்லி சிரிக்க,
“எனக்கு தான் நீங்க இங்க இருக்கும் போது கூட இருக்க முடியல..!” என்றான் நிஜமாய் வருந்தி.
“நான் வேணா கூட ஒரு மாசம் லீவ் எஸ்ட்டென் பண்ணவா என் மாப்பிள்ள பீல் பன்றான் மாமியார் வீட்டுல இருக்குறேன்னு?” என அதற்கும் நந்தா கேலி பேச,
“மாமா!” என்று முறைத்தவன் கிளம்பி இருக்க,
“வாங்க போகலாம்!” என்றான் சிரித்தபடி.
“அண்ணனும் தம்பியும் எப்ப டா பிளான் பண்ணீங்க? சேம் ஷர்ட் சேம் வேஷ்டி.. ம்ம்ம் கலக்குறீங்க போங்க!” என்று இறங்கி வர, மகேஸ்வரி, கல்பனா, தர்ஷினி மூவரையும் ஒன்றாய் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தான் அகிலன்.
விழா இனிதாய் ஆரம்பம் ஆக பெரியவர்கள் முறைப்படி ஆரம்பித்து வைக்க, குழந்தை அகிலனின் கைக்கு கொண்டு வந்து கொடுத்தாள் தர்ஷினி.
“தாய்மாமா தான் பேரை முதல்ல குழந்தை காதுல சொல்லணும்.. கல்பனா நீயும் சேர்ந்து நில்லு!” என்றது நந்தாவின் அன்னை.
கல்பனாவும் புன்னகையுடன் சேர்ந்து கொள்ள, “ண்ணா டேய்! இங்க பாரு!” என்று கூறி அவர்களை அப்படியே புகைப்படம் எடுத்தது ரகுராம்.
“சொல்லுங்க!” கல்பனா கூற, தர்ஷினி சொல்லியிருந்த படிக்கு பெயரை கூறினான் அகிலன்.
“சிவ நந்தினி!” என்ற பெயரை மூன்று முறை குழந்தையின் காதில் அகிலன் கூற, அடுத்து கல்பனா கூறி சக்கரை நீரை துளியாய் மட்டும் கொடுத்தாள். அதன்பின் ரகுவை அழைத்தான் நந்தா.
ரகுவும் குழந்தையை வாங்கி கையில் கிள்ளி முத்தமிட்டவன் மூன்று முறை அதன் காதில் கூறிட, அடுத்து தர்ஷினி கைகளில் வந்தது குழந்தை.
ஒவ்வொருவரும் வந்து பெயரை சொல்லி ஆசிர்வாதம் செய்து செல்ல, ரகுவின் பார்வை முழுதும் வாசலில் தான்.
ஒரு மணிக்கெல்லாம் வந்த கூட்டம் கலைந்து கொண்டிருக்க, ரகு விஷாலுக்கு அழைத்தான்.
“விஷால்! இன்னைக்கு ஆபீஸ்ல எத்தனை பேர் லீவ்?” என கேட்க,
எதற்கு என புரியாவிட்டாலும், “டூ மினிட்ஸ் சார்!” என்று கூறி உடனே செக் செய்து “ரெண்டு பேர் சார்” என்றான்.
“ஓஹ்!” என்றவன் சிறிது இடைவெளி விட்டு,
“யாரெல்லாம்?” என்று கேட்க,
“சார் எனி ப்ரோப்லேம்?”
“நோ நோ! நத்திங்.. தெரிஞ்சுக்க தான்!” என்றதில் இருவர் பெயரையும் விஷால் கூற, அதில் ஆராத்யா இல்லை.
“ஓகே!” என்றவன், முறைத்தபடி நிற்க, நந்தா அழைத்தான் குடும்பப் புகைப்படம் எடுக்க,
நந்தா அவன் தாய்,தந்தை, தர்ஷினி, குழந்தை என அவர்கள் முதலில் எடுக்கவும், அடுத்து மகேஸ்வரியோடு குடும்பமாய் இவர்கள் தங்கள் நியாபகங்களை சேர்த்து புன்னகைத்து சேமித்துக் கொண்டனர் புகைப்படத்தை.
“க்கா! ஆரா வர்ல?” என்று தனியாய் தர்ஷினியிடம் ரகு கேட்க,
“ம்ம் எவ்வளவோ சொல்லிட்டேன் டா.. ஃபன்க்ஷன் சொந்தம் எல்லாம் வருவாங்க.. நான் ஈவ்னிங் வர்றேன்னு சொல்லிட்டா..” என்றதும்,
“நீயும் சரினு சொல்லிட்டியா?” என்றான் அக்காவிடம் முறைத்து.
“ஓஹ்! வர போற வைஃப்காக என்னையே கோச்சுக்குறியா?” என்று தர்ஷினி சத்தமிட,
“ஷ்ஷ்!” என்றவன்,
“போ! தெரியாம கேட்டுட்டேன்!” என்றவன் சொல்லிய பாவனையில்,
“எப்படி டா நாப்பது நாள் அங்க தாக்கு பிடிச்ச?” என்று சிரித்தபடி சென்றாள் தர்ஷினி.
மாலை நான்கு மணிக்கு அலுவலக பெர்மிஸ்ஸனோடு ஆராத்யா வந்து சேரும் வரை ரகு தன் உடையை மாற்றிக் கொள்ளாமல் இருக்க, அவள் வரும் நேரம் குடும்பமாய் அமர்ந்திருந்தனர் ரகுவை தவிர்த்து.
“ஆரா! வா வா வா!” என்று கல்பனா வரவேற்க அங்கிருந்தவர்களைப் பார்த்து புன்னகை செலுத்தியபடி தர்ஷினி அருகே வந்தாள் ஆராத்யா.
“ஹே ஏஞ்சல்! உங்களுக்கு பேரு வச்சாச்சா?” என்று தர்ஷினி மடியில் இருந்த குழந்தையை ஆராத்யா கொஞ்ச,
“என் பொண்ணு உன் மேல செம்ம கோவமா இருக்கா!” என்றாள் தர்ஷினி.
“அதெல்லாம் என் பட்டுக்கு கோபம் இருக்காதே! வாங்க! வாங்க!” என்று கூறி குழந்தையை அள்ளிக் கொள்ள, மகேஸ்வரியும் சமயலறையில் இருந்து வெளிவந்து பேசிவிட்டு சென்றார் அவளிடம்.
“அடடா ஏன் அழறீங்க நந்து மா?” என்று குழந்தையிடம் ஆரா கேட்க,
“நான் தான் சொன்னேனே அவ உன் மேல கோவமா இருக்கா!” என்று சிரித்தாள் தர்ஷினி.
“தர்ஷ்! பாப்பா பசில அழுது.. என்னை ஏமாத்த பாக்குறீங்க!” என்று முறைத்த ஆரா,
“அம்மா புவ்வா தரலையா அம்மு?” என்று குழந்தையிடமும் கேட்க,
“இரண்டு கைக்குழந்தைகள் பேசிக் கொள்கிறதே! அடடே ஆச்சர்யக்குறி!” என்று கல்பனா சொல்லவும் கல்பனாவோடு தர்ஷினியும் சிரிக்க, அகிலன் நந்தாவோடு, நந்தாவின் பெற்றோருமே புன்னகையுடன் அமர்ந்திருந்தனர்.
“ஒன்னு சேர்ந்தாச்சா! புடிங்க என் ஏஞ்சலை.. போய் பசியாத்துங்க.. நான் அப்புறமா வர்றேன்!” என்று எழுந்து கொள்ள,
“கோச்சுட்டியா ஆரா!” என்று கல்பனா கேட்டாள்.
“ஆமா!” என்று வேண்டுமென்றே ஆராத்யா கூற,
“அப்ப சரி! கோச்சுக்கோ!” என்று சொல்லி அவள் எழுந்து செல்ல, பாவமாய் ஆராத்யா உதட்டை சுழிக்க, தர்ஷினி இன்னும் சத்தமாய் சிரித்தாள்.
“உங்க கெஸ்ட் இருக்காங்களேன்னு பாக்குறேன்.. நாளைக்கு வச்சுக்குறேன்!” என்றவள் கிளம்ப போக, அழுத குழந்தையை தோளில் இட்ட தர்ஷினி,
“சரி சரி! இனி சிரிக்கல! எப்ப பாரு ஓடுறதலயே இருக்காத! வா ரூம்க்கு போலாம்!” என்று கையைப் பிடித்தாள்.
“ம்ம்ஹும்! டிஎல்க்கு டிமிக்கி குடுத்து சீக்கிரமே கிளம்பி வந்துட்டேன்.. போய் கார்த்திகிட்ட என்னாச்சுன்னு கேட்கணும்… அப்புறமா வர்றேன்!” என்று ஆரா சொல்ல சொல்ல கேட்காமல், கையோடு தன் அறைக்கு இழுத்து சென்றாள் ஆராத்யா.
கீழே நடந்த அனைத்தையும் மேல் நின்று பார்த்து ரசித்துக் கொண்டிருந்த ரகுவும் இருவரும் மேலே வரவும் தன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.
“என்ன வாய் பேசுறா! என்கிட்ட மட்டும் தான் சைலன்ட் மோட்!” என்று ரகு தனக்கு தானே கூறிக் கொள்ள,
‘பார்க்குறப்ப எல்லாம் அழ வச்சது நீ தான டா!’ என்று எட்டிப் பார்த்தது மனசாட்சி வேறு.
“ஏஞ்சல்! உங்க அம்மாக்கு சேட்டை கூடிட்டே போகுது.. சொல்லி வையுங்க!” என்று அறைக்கு வந்த ஆராத்யா குழந்தையிடம் சொல்ல,
“நீ உட்கார்.. நான் பாப்பாக்கு பசியாத்திடுறேன்!” என்று சொல்லி திரும்பி அமர்ந்து கொள்ள, சில நிமிடங்கள் அமைதியாய் கழிந்தது.
“தர்ஷ்! நமக்குள்ள ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் இருக்குன்னு நினைக்குறேன்!” என்றாள் ஆராத்யா ஏதோ சிந்தனை செய்து.
“அப்ப கூட இந்த ஜென்மத்துல பந்தமாக வாய்ப்பில்லைன்ற!” என்றாள் பொடி வைத்து தர்ஷினியும் முகம் பாராமலே.
அதில் முகம் வாடினாலும் அதை கவனியாதது போல, “ஷ்ஷ்! சொல்றதை கேட்கணும்! இங்க வந்துட்டு போனாலே ஒரு பாசிட்டிவ் வைப் தெரியுமா எனக்கு?” என்று ஆராத்யா சொல்ல,
“அதான் இங்கேயே இருக்கலாம்னு சொல்றேன்.. கேட்க மாட்டேன்றியே!” என்றாள் தர்ஷினி.
“தர்ஷ்!” என்று கண்டிப்புடன் ஆராத்யா குரல் கொடுக்க,
“ஆரா! இப்ப கிட்டத்தட்ட ரெண்டு மாசம் ஆக போகுதே! இப்ப கூட உன் முடிவுல எந்த மாற்றமுமே இல்லையா?” என்று பேச்சை நேரடியாய் துவங்கி வைத்தாள் தர்ஷினி.
“அதெல்லாம் இப்ப எதுக்கு தர்ஷ்! இப்ப கீழ எவ்ளோ ஜாலியா பேசிட்டு இருந்தோம்.. அது மாதிரி எப்பவும் இருக்கனும் நாம.. அது போதும் ஏனக்கு..”
“ஓஹ்! ம்ம் சரி தான் ஆரா! ஆனா இந்த லூசு ரகுக்கு தான் புரியல.. சும்மா கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு உளறிக்கிட்டு இருக்கான்.. இவன் எப்ப தான் திருந்த போறானோ!” என்று அடுத்த அடி தர்ஷினி எடுத்து வைக்க,
“தர்ஷ்!” என்ற ஆரா சிறிது இடைவெளிவிட்டு,
“எப்பவும் தனியாவே இருக்க முடியுமா? கொஞ்ச நாள்ல அவங்களே சரி ஆகிடுவாங்க! நீங்க அதுக்கு அழகா அவங்களுக்கு ஏத்த ஜோடியா ஒரு பொண்ணை பார்த்து சொன்னா அவங்க மனசு சரினு தோணும்.. அப்புறம் என்ன!” என்றவள் குரல் கொஞ்சமாய் நடுங்க தொண்டைக்குழி ஏறி இறங்கியது.
வந்ததும் சுற்றி அனைவரும் இருக்க, ரகு வந்திருப்பானே என்று அவனை தான் தேடியது ஆராவின் கண்கள். முயன்று தான் மற்றவர்களை கவனத்தில் கொண்டு தன்னை சரி செய்தது.
“அட இது தெரியாம போச்சு பாரேன் எனக்கு! சரி எனக்கு ரகு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு நீயும் முக்கியம்.. அப்ப உனக்கும் நல்ல அழகான பையனா நான் பார்த்தா ஓகே சொல்லிடுவ தானே?” என்ற தர்ஷினியின் பேச்சை எதிர்பாராதவள் மனம் அடித்துக் கொள்ள, பதில் சொல்ல முடியவில்லை.
முயன்று எச்சிலை விழுங்கிக் கொண்டவள், “நான் தான் சொன்னேனே! எனக்கு அதுல எல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்ல.. அதோட யாரையும் நான் நம்ப தயாரா இல்ல.. பாக்கலாம்.. இன்னும் ரெண்டு வாரம் தான் அப்புறம் ஸ்ருதி அஜய் எல்லாம் என்னைய விட்டு போய்டுவாங்க.. அம்பிகா ஆண்ட்டி கூட அவங்க சொந்த ஊருக்கு போறாங்கலாம்.. அந்த வீட்டை என்னை பார்த்துக்க சொல்லி என்னை அங்கேயே இருக்க சொல்லி இருக்கா ஸ்ருதி!” என்றாள் பேச்சை மாற்றிடும் நோக்கில்.
“ம்ம் அம்பிகா ஆண்ட்டி அம்மாகிட்ட சொன்னதா சொன்னாங்க ஆரா! உன்னால தனியா மேனேஜ் பண்ண முடியுமா?” என்று தர்ஷினி கேட்க,
“ஏன்? இவ்வளவு நாளும் என்னை நான் தான பார்த்துகிட்டேன்!” என்று சாதாரணமாய் சொல்லிவிட நினைத்தாலும் குரல் கரகரத்தது.
“என்கிட்ட கூட உண்மையை சொல்ல மாட்ட.. இப்ப மட்டும் நான் உனக்கு ரகு அக்கா அப்படி தானே?” என்று குழந்தையை தூங்க வைத்த தர்ஷினி ஆராத்யா புறமாய் திரும்ப, கலங்கிய கண்களை சரி செய்திருந்தவள் அவளைப் பார்த்து புன்னகைக்க,
“அன்னைக்கு நீ அவ்வளவு என்கிட்ட பேசும் போதும் முதல்ல எனக்கு வேண்டாம், தகுதி இல்ல, அப்படி தான் சொன்ன.. அப்புறமா வீட்டை பார்த்துட்டு இதெல்லாம் உனக்கு செட் ஆகாதுன்னு சொன்ன.. அதுக்கும் அப்புறமா பணம்ன்ற ஒன்னு ஒரு மனுஷனை எப்படி வேணா மாத்தும்னு சொன்ன.. சோ உன் மனசுல என்ன தான் இருக்கு ஆரா! இல்ல யார் தான் இருக்கா!” என்று அவள் தோளை தொட,
“ப்ச்! இப்ப எதுக்கு அதெல்லாம்.. சரி நான் கிளம்பட்டுமா?”
“ஏன் ஆரா ரகு கல்யாணத்துக்கு பின்னாடி மாறிடுவான்னு உனக்கு பயமா? அப்படினா நீ எங்களையும் நம்பலை தான?” என்று தர்ஷினி கேட்க,
“தர்ஷ்! போலாம் கீழ! நான் வந்து ரொம்ப நேரம் ஆச்சு!”
“ரகு பாவம் ஆரா! நீ சொன்ன மாதிரி இன்னொரு பொண்ணை அதுவும் அந்த பொண்ணு எவ்வளவு அழகா இருந்தாலும் வேண்டாம்னு தான் சொல்லுவான்.. அவன் என் தம்பி.. உனக்கு அவன் மேல நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்.. ஆனா எனக்கு இருக்கு!” என்று சொல்ல,
“தர்ஷ்! இப்ப எதுக்கு..”
“இல்ல ஆரா! உனக்காக தான் நான் இதுவரை என் அம்மாவை பொறுத்து போக சொன்னேன்.. இல்லைனா அம்மா தட்டை தூக்கிட்டு எப்பவோ உன் வீட்டுக்கு வந்திருப்பாங்க.. அவங்களுக்கும் உன்னை அவ்வளவு புடிக்கும்.. ஒரு மாசம் நீ ரகுவை பார்க்கல.. அவன் மாறி இருப்பான்னு நம்புறியா?” என்று கேட்க, ஆராத்யா மனதும் ரகுவிற்கு தான் பரிந்து வந்தது.
“வாழ்ந்து பார்த்தா தானே வாழ்க்கை அழகா இல்லையானு தெரியும்? வாழவே பயந்தா?” என்று கேட்க, ஆராத்யாவிடம் மௌனம் தான்.
“உன் தாய்மாமா! அவன் பேரு கூட ஏதோ சொன்னான் ரகு.. அவனை வெளில வர முடியாத படி ஏன் ஜாமின்ல கூட வர முடியாதபடி செஞ்சுட்டாங்க ரகுவும் அவன் பிரண்ட்டும்.. உனக்காக அவன் செய்யுற எதுவும் உன் மனசை தொடலையா ஆரா?”
“தர்ஷ் ப்ளீஸ்! மனசு கேட்குற எல்லாத்தையும் கொடுத்துட்டா நாளைக்கு அனுபவிக்குறது நானா தானே இருப்பேன்?”
“அப்ப மனசு கேட்குது இல்ல ஆரா? அட்லீஸ்ட் அதை ஒத்துக்கோ!” என்ற தர்ஷினி,
“ஏன் ஆரா! நீ சொல்ற மாதிரி சப்போஸ் ரகுக்கு வேறொரு பொண்ணு கூட கல்யாணம் நடந்து அந்த பொண்ணுக்கு உன்னை பிடிக்கலை.. இந்த வீட்டுக்கு நீ வர கூடாதுன்னு சொல்லிட்டா?” என்று கேட்க, விக்கித்துப் போனாள் ஆராத்யா.
“நான் இந்த வீட்டுக்கு வந்தா தான் நீ என்னை பார்க்க வருவ.. ஓகே தான்.. ஆனாலும் ரகு வேற நல்லவன்.. நான் முன்னாடி லவ் பண்ண பொண்ணு இது தான்னு அவன் மனைவிகிட்ட சொல்லி அது போசசிவ்வா இருந்து…. நினச்சு பாரு? நீ என்ன! நானே நாளைக்கு என் கல்பனா அண்ணியும் ரகுக்கு வர போற பொண்ணும் மனசு வச்சா தான் இந்த வீட்டுல வந்து போய் இருக்க முடியும்” என்று சொல்ல, முதலில் அதிர்ந்தாலும் தர்ஷினி சொல்லுவதன் நிதர்சனம் புரிந்தது ஆராத்யாவிற்கு.
“சொல்லு ஆரா!”
“தர்ஷ்! நேர்ல பார்த்தா தானா? போன், வீடியோ கால்னு எவ்ளோ இருக்கு.. இதெல்லாம் ஒரு விஷயமா.. நான் கிளம்புறேன்!” என்று திரும்பியவளை தன்னை நோக்கி திருப்பினாள் தர்ஷினி.
“உனக்கு ஒரு நல்ல லைஃப் பார்ட்னரா ரகு இருப்பான் டா.. அவனை கொஞ்சம் கண்சிடர் பண்ணு டா!”
“தர்ஷ்! நான் அழுதுடுவேன்..”
“எப்பவும் என்ன சந்தோசமாவா இருக்குற? நடிக்குற.. நிஜமா ரகுவை உனக்கு பிடிக்காது?”
“நிஜமா சொல்றேன்! ரகுராம்ன்ற மனுஷனை ரொம்ப பிடிக்கும்.. ஆனா எனக்கு அவங்க அவங்களுக்கு நான் வேண்டாம்.. அவங்க மனசை நீங்க தான் மாத்தணும்.. நான் என்னை நம்பல தர்ஷ்..” என்றவள்,
“கல்யாணம்னு ஒன்னு நடந்த பின்னாடி எனக்கு என்னோட சம்பாத்தியம் முக்கியம்னு தோணும்.. அதுக்கும் நான் போகலாமானு பெர்மிஸ்ஸன் கேட்டு நிக்கணும்.. என்னோட முடிவை நான் எடுத்து பழகிட்டேன்.. என் அப்பா அம்மாகிட்ட இருந்த என் முடிவு என் கைக்கு வரும் போது என்னால அந்த பாரத்தை தாங்க முடியல.. ஆனா அதை இப்ப இன்னொருத்தர் கையில என்னால குடுக்க முடியாது!”
“இதையெல்லாம் விட அன்னைக்கு போலீஸ் ஸ்டேஷன்ல அவன் என்னை என்ன கேட்டான் தெரியுமா? வசதிக்காக நான் ராம் சார் கூட பழகினேன்னு….” என்றவளால் முடிக்க முடியவில்லை.
“எதுவும் இல்லாமலே அவன் என்னை அப்படி பேசினான்.. இப்ப நான் சரினு சொன்னா நான் இந்த உலகத்துக்கு அதை உண்மைனு சொன்ன மாதிரி ஆகிடாதா? எல்லா உறவும் கூடவே வருமா என்ன? நீங்களும் ஏஞ்சலும் என்னைய நியாபகம் வச்சிருந்தாலே போதும்! நான் வர்றேன் தர்ஷ்!” என்று அறை வாசல்வரை செல்ல,
“உன்னை நீ அறியாம இருக்கன்னு நினைச்சுட்டு இருந்தேன் ஆரா! ஆனா ரகுவை பிடிக்கும்னு சொல்லிட்டு யாருன்னே தெரியாத நாலு பேர் நாலு விதமா பேசுறதுக்காக உனக்கு பிடிச்ச வாழ்க்கைகுள்ள போக பயந்து நிக்குற பார்த்தியா.. நீ தான் உலகத்துலேயே மிக பெரிய முட்டாள்!” தர்ஷினி சொல்லவும் ஒரு நொடி நின்ற ஆராத்யா பின் திரும்பாமல் வேகமாய் சென்றுவிட்டாள்.
error: Content is protected !!