Skip to content
Post Views: 3,391
ஏற்கனவே குடும்பத்துக்கு அடங்கிய பிள்ளை தான் சங்கரன். இப்போது தந்தையின் உடல் நலனை கருத்தில் கொண்டு மிகவும் அடங்கி ஒடுங்கி போனான்.
தமயந்தியால் எதுவும் பேச முடியவில்லை. கணவனின் வலியும் வேதனையும் புரிகிறது. அதேசமயம் குடும்பம் சிதைந்து விடக் கூடாது என்று ஏங்கி தவிக்கும் மாமனாரின் நிலையும் புரிகிறது.
மணவாளனிடம் குடும்ப சூழல் குறித்து பேசிய சங்கரன் தமயந்தியின் நகைகளுக்கு நான் பொறுப்பு. இன்னும் ஆறுமாதத்தில் மீட்டு கொடுத்து விடுவேன். உத்தரவாதம் அளித்தான்.
என்ன சங்கரா பெரிய பேச்சு பேசற…? என் தங்கையே உனக்கு சொந்தம்… அப்போ நகை பற்றி என் கிட்ட பேசணுமா என்ன? வைக்கிறது வாங்குறது எல்லாம் உங்க குடும்ப விவகாரம். நான் கூட தான் அவசரத்துக்கு என் பொண்டாட்டி அஞ்சுகம் நகைகளை அடகு வைப்பேன். இலகுவாய் தட்டிக் கொடுத்து சென்று விட்டான் மணவாளன்.
நாட்கள் நகர்ந்தோட வளைகாப்பு நடத்தி பிறந்த வீட்டுக்கு சென்று விட்டாள் தமயந்தி.தாய் வீட்டில் நிம்மதியாக அவள் நாட்கள் கழிந்தது.
தினமும் மாமியார் வீட்டிற்கு சென்று கர்ப்பவதி மனைவியை பார்த்து விட்டு வருவான் சங்கரன்.
தமயந்திக்கு பிரசவ வலி வந்து மருத்துவமனையில் இருக்கிறாள்
தாயும் சேயும் நலமுடன் வர வேண்டும் என்ற வேண்டுதல் மட்டுமே சங்கரனுக்கு.
சுகபிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.
ஆதிமூலத்திற்கு முகம் கூம்பி விட்டது. முதல் குழந்தை ஆணா இருந்திருக்கலாம் அப்போ தான் அடுத்த குழந்தை எதுவா இருந்தாலும் பரவாயில்லன்னு நிம்மதியா இருக்கலாம் முணு முணுத்து விட்டு போனார்.
தமயந்திக்கு பெண் குழந்தை என்றதும் ஜெயலட்சுமிக்கு அப்படி ஒரு ஆனந்தம். கலாவிற்கும் தான்.
தமயந்திக்கு உள்ளுக்குள் வருத்தம் தான். நான் பெண்ணாய் பிறந்து படும் பாடு போதாதா… நீயும் பொண்ணா பிறந்திருக்கியே என்று வருந்தினாலும். குழந்தையின் அழகு முகம் அவளை பூரிக்கவே செய்தது.
குழந்தைக்கு பவித்ரா என்று பெயர் சூட்டி மகிழ்ந்தாள் தமயந்தி.
“—————“
தனக்கு மகள் பிறந்து விட்டாள்… தனக்கான கடமை அதிகமாகி விட்டது என்று உணர்ந்து பொறுப்பை உணர்ந்து கொண்டான் சங்கரன்.
சங்கரன் இன்னும் கடுமையாக உழைக்கிறான். உதவிக்கு புதிதாய் இரண்டு ஆட்களை நியமித்து இருக்கிறான். தொழிலை மெல்ல விரிவு படுத்தி இருக்கிறான். யாருக்கும் தெரியாமல் வங்கியில் பணம் சேமிக்கிறான்.
தமயந்தியின் நகைகளை மீட்டு மணவாளனிடம் கொடுத்து வைத்திருக்கிறான்.
வழக்கம் போல் தந்தை கையிலும் பணம் கொடுக்கிறான்.
குடும்ப சூழல் கொஞ்சமும் மாறவில்லை. தமயந்தி இழுத்து பறித்து எல்லா வேலைகளையும் செய்கிறாள். இப்போதெல்லாம் அம்பது அறுபது ஆட்களுக்கு கூட ஒருத்தியாய் சமைக்கிறாள்.
இடையில் இரு தங்கைகளின் குழந்தைகளுக்கு காது குத்த பிறந்தவீட்டு சீர் செய்ய கணிசமான தொகை கொடுத்தான் சங்கரன்.மூத்த தங்கை செந்தாமரை புதுமனை புகு விழாவிற்கு சீர் செய்தான்.
கல்யாணம் கருமாதி காதுகுத்து என்று அவனுக்கு என்று தான் செலவில்லை? இப்போதெல்லாம் மும்மடங்காய் உழைக்கிறான்.
அவன் வலிகளுக்கு மருந்து மகள் தான்.
குழந்தையின் அப்பா என்ற ஒற்றை மிழற்றளில் அவனின் கவலைகள் மொத்தமாய் கரைந்து போகும்.
பவித்ரா தான் அவன் உலகம். தமயந்தி கூட இரண்டாம்பட்சம் தான்.
வீட்டில் யாருடனும் சங்கரன் அதிகம் பேசுவதில்லை. யாரும் அதுபற்றி கவலை படவுமில்லை.
“—————–“
கூட்டு குடும்பத்தில் சிக்கி சாராய் பிழியும் வாழ்க்கை சூழல் தமயந்தியை வெறுத்து போக வைத்தது.
எம்புள்ள ஆட்டுக்கறின்னா விரும்பி திம்பான்… பெரிய கிண்ணத்தில் மொத்தமாய் வழித்து போட்டு கொண்டு செல்லும் ஜெயலட்சுமியை அற்பமே என்று பார்ப்பாள் தமயா.
காபரிட்சை லீவுக்கு வந்திருக்கிற எம்புள்ளைகளுக்கு புது துணி வாங்கி கொடுக்க உங்கட்ட பணமா இல்ல… மனசு தான் இல்ல…. கலா நீட்டி முழங்கி ஒப்பாரி வைக்க அந்த செலவும் சங்கரன் தலையில் தான்.
தட்டினால் பணம் கொடுக்கும் ஏடி எம் மெஷின் என்று சங்கரனை நினைத்துக் கொண்டனர்.
இப்படியே எவ்வித சுவாரஸ்யமும் இன்றி நாட்கள் ஆமையாய் நகர்ந்தது … நகர்த்திக் கொண்டிருந்தார்கள்.
சங்கரா நம்ம தெக்கால பக்கத்து வயக்காட்டுகாரன் சுப்பிரமணி இருக்கானே… அவன் நிலத்தை விக்க போறானாம்…
அதற்கு என்ன என்பது போல் பார்த்துக் கொண்டே சாப்பிட்டான் சங்கரன்.
மூனு ஏக்கர் இருவது சென்ட். அருமையான நிலம் ஏரி தண்ணி சுலுவா பாயும்! மேலும் தொடர்ந்தார் ஆதிமூலம்.
சங்கரன் எதுவும் பதில் கூறவில்லை.
மொத்தமா கிரைய செலவோட மூனு லட்சம் ஆகும்னு நினைக்கிறேன்.
என்கிட்ட ஏன் இதெல்லாம் சொல்றீங்க? அடக்க முடியாத கடுகடுப்புடன் கேட்டே விட்டான்.
வாங்கலாம்னு இருக்கேன்…!
வாங்குங்க!
நீ ஏதாவது பணம் புரட்டி…
அப்பா என்னை என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? நான் என்ன கள்ள நோட்டா அடிக்கிறேன்?
சரி விடு…. நான் பார்த்துக்கிறேன்.
சுசிலா உன் நகை எல்லாம் எவ்வளவு தேறும்? மனைவியின் புறம் திரும்பினார்.
அடகு வைக்கணுமா?
ஆமா… அந்த நிலத்தை வாங்கணும்னு முடிவு பண்ணிட்டேன்.
இருக்குற நிலத்தை பயிர் வைக்கவே முடியல… அவர் முணங்கினார்.
உன்னை யோசனை கேட்கல… நகையை எடுத்து வை..! மஞ்சக் கயித்துல தாலி கோர்த்துக்கோ… தாலி கொடி ஏழு பவுனு.
சுசிலா அமைதியாய் பார்த்தப்படி நிற்க… பார்த்தது போதும் உள்ளே போய் வேலை இருந்தா கவனி…மனைவியை விரட்டினார்.
பயிர் கடனில் சிட்டா எடுத்து அடகு வைப்போம். வட்டி குறைவு தான். ஒரு வேளை எலக்ஷன் வந்து பயிர் கடன் தள்ளுபடி ஆனாலும் ஆகும். உரக்க மனைவிக்கு கேட்கும்படி கூறினார்.
சேர்ந்தாமாதிரி நிலம் வந்தா வாங்கி போடணும்..
மண்ணுல போட்ட காசும் பொன்னுல போட்ட காசும் வீணாகாது… தனக்கு தானே மெச்சுதலாகப் பேசிக் கொண்டார்.
ஏம்மாமா…. சுப்பிரமணிகிட்ட கிரயம் வாங்கும் போதே உங்க பிள்ளைங்க பேருல எழுதிட்டீங்கன்னா பத்திர செலவு ஒன்னா போயிடுமில்ல…. ஜெயலட்சுமி வாய் துடுக்கில் வார்த்தையை விட…. ருத்ரதாண்டவம் ஆடி தீர்த்து விட்டார் ஆதிமூலம்.
யாருக்கு யார் யோசனை சொல்றது…? பொட்ட கோழி கூவி பொழுது விடிஞ்சுடாது.
போய் உங்கப்பன் வீட்டுல மூனு லட்சம் வாங்கிட்டு வா.. உன் பேருல எழுதிடறேன்…. அவர் உறும… வாயடைத்து நின்று விட்டாள் ஜெயா.
அந்த குடும்பத்தின் நடைமுறை அது தான். பெண்கள் கருத்து கூற அங்கே இடமில்லை.
ஆதிமூலத்தை பொறுத்தவரை அந்த குடும்பத்தின் “ஆதி மூலமாக ” தன் கடைசி மூச்சு வரை தானே இருக்க வேண்டும் என்ற ஆதிக்க மனோபாவம்.
சொன்னது சொன்னபடி ஆதிமூலம் நிலத்தை வாங்கி தன் பெயரிலே எழுதிக் கொண்டார்.
மொத்த சொத்துக்களும் அவர் கைப்பிடிக்குள் தான் இருந்தது.
“—————-“
இப்போதெல்லாம் பிள்ளைகளுக்குள் சண்டை அதிகம் வருகிறது. சின்னக் குழந்தை பவித்ரா தான் அடமாக இருக்கிறாள் என்றால் நான்கு வயது மூத்தவளான சபிதாவும் அடம் பிடிக்கிறாள்.
குழந்தைகளுக்குள் நடக்கும் சண்டையில் ஜெயலட்சுமி தலையிட்டு பவித்ராவை விரட்டுவது உண்டு.
என்றாவது அத்தி பூத்தாற்போல் தமயந்தி வாயை திறந்து விட்டால் மனம் போன போக்கில் திட்டி தீர்ப்பாள் ஜெயலட்சுமி.
தோட்டத்தில் பூக்கும் ஜாதிமுல்லையை கூட தமயந்தி பறித்து சூட்டிக் கொள்ள அவள் மனம் ஒப்பாது.
எவ்வளவு தான் குடும்பம் குடும்பம் என்று அனுசரித்து போவது. திருமணமான மூன்று ஆண்டுகளுக்குள் முந்நூறு ஆண்டுகள் போராடி வாழ்ந்துவிட்ட சலிப்பு தமயந்திக்கு.
என்றாவது ஆதங்கத்தில் தமயந்தி முணு முணுத்தால் குடும்பம்னா அப்படி தான் இருக்கும். உன்னை யாரும் செருப்பு தேய தேய பொண்ணு கேட்டு வரல…. நீ விருப்பப்பட்டு தானே எம்மவனை கல்யாணம் செய்துகிட்டு வந்த… என்பார் ஆதிமூலம்.
தமயந்திக்கு இந்த வாழ்வை வாழவும் பிடிக்கவில்லை விட்டு செல்லவும் துணிவில்லை.
இந்த சூழ்நிலையில் தமயந்தி மீண்டும் கருவுற அவள் வாழ்வில் அடுத்த பூகம்பமாய் மீண்டும் பெண்குழந்தை பிறக்க… ஆளுக்கு ஆள் பேசியே அவளை நோகடித்து விட்டனர்.
இதுவும் பொண்ணா? எனக்கெல்லாம் முதல்ல ரெண்டும் பையனா பொறந்துச்சு… என் பொண்ணுங்க ரெண்டு பேருக்கும் முதல்ல பையன். ஜெயாக்கு கூட பொண்ணு ஒன்னு ஆண் ஒன்னு. சங்கரனுக்கு தான் புத்திரன் பாக்கியம் அமையலை… வெளிப்படையாய் அதிருப்தியை காட்டினார் சுசிலா.
ஆதிமூலத்தால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவர் போட்டு வைத்த கணக்கா வாழ்க்கை?
அவரது மற்ற மூன்று வாரிசுகளுக்கும் ஆண் ஒன்று பெண் ஒன்று என கனகச்சிதமாய் அமைந்த போதும் சங்கரனுக்கு அமையவில்லையே…
எல்லோரும் வருந்தினாலும் பட்டாசு வெடித்து கொண்டாடும் அளவிற்கு மகிழ்ச்சியாய் இருந்தது ஜெயலட்சுமிக்கு.
அவங்க அவங்க மனசு போல தான் வாழ்க்கை என்று தமயந்தியை பார்த்து ஜாடை பேசிவிட்டு போனாள்.
தன் மகன் சரவணன் மட்டுமே ஆதிமூலம் குடும்பத்திற்கு ஆண் வாரிசு என்ற ஆனந்தம் அவளுக்கு.
இரண்டாவது பெண் குழந்தை என்ற சலிப்பில் யாரும் குழந்தையை சீராட்டவில்லை.
தமயந்தி தன்னை எண்ணியே பாவபட்டாள்.
நான் இங்கே வாழும் வாழ்க்கை அறிந்தும் கடவுள் என்னை சோதிக்கிறானே…?
சங்கரன் பெரிதாய் வருந்தவில்லை. தமயா எந்த குழந்தையா இருந்தாலும் நம்ம குழந்தை. அதுவா வந்து நம்ம காலடியில் விழுந்துடல… நாம தான் வேணும்னு பெத்துக்கிட்டோம்.
யார் என்ன சொன்னா என்ன? அவங்களா நம்ம குழந்தைக்கு நல்லது கெட்டதுக்கு செய்துடப் போறாங்க…?
பெண் குழந்தைன்னு பால் கொடுக்காம இருப்பியா…? பெண் குழந்தைகள் தேவதை மாதிரி… மனைவியை அதட்டி ஆறுதல் படுத்தினான் சங்கரன்.
“——————“
முக்கிய முடிவுகள் எல்லாம் நீங்களே எடுக்கிற அளவுக்கு பெரிய மனுஷங்களாகிட்டீங்களோ?
இந்த வீட்டில பெரிய மனுஷன்னு நான் ஒருத்தன் எதுக்கு இருக்கேன்…? ஆடி தீர்த்து விட்டார் ஆதிமூலம்.
வேறொன்றும் இல்லை… குடும்பக்கட்டுப்பாட்டு ஆபரேஷன் செய்து கொள்ள தமயந்தி முடிவு செய்திருந்தாள். சங்கரனும் இரண்டு குழந்தை போதும் என்றே முடிவு செய்து இருந்தான்.
அடுத்த குழந்தையாவது ஆண் குழந்தையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆதிமூலத்திற்கு. இன்றளவும் ஆண் குழந்தை என்றால் ஆளப்பிறந்தவன் என்ற நம்பிக்கை கிராமத்து மனிதர்களுக்கு அதிகம் தானே….
மூணாவதும் பொண்ணா பிறந்துடும்னு பயம் போல இருக்கு…. எகத்தாளம் பேசினாள் ஜெயலட்சுமி.
உன் ஓட்ட பானை வாயை கொஞ்சம் மூடு!
அவனுக்கு எத்தனை பொண்ணு பொறந்தா உனக்கென்ன….? நீ களை வெட்டியா கஞ்சி ஊத்த போற…? காய்ச்சி எடுத்து விட்டார் சுசிலா.
நான் வாயைத் திறந்தால் உங்களுக்கெல்லாம் ஆகாதே… அத்தனை கொணட்டு கொணட்டி விட்டு சென்றாள் ஜெயலட்சுமி.
இரண்டாவது குழந்தைக்கு காயத்ரி என்று பெயர் சூட்டி இருந்தாள் தமயந்தி.
“————————“
எதற்கெடுத்தாலும் போட்டி எதற்கெடுத்தாலும் குதர்க்கம்…
குழந்தைகள் வளர வளர குழந்தைகளுக்கு இடையேயும் பிரிவினை உண்டானது.
டேய் சரவணா நீ என்னோட தம்பி தானே…? நீ ஏன் பவித்ரா,காயத்ரி கூட போய் விளையாடுற.. ஜெயலட்சுமியின் வளர்ப்பு என நிரூபித்தாள் சபிதா.
அவன் ஆம்பள புள்ள… ஒரு ஆம்லெட் போட்டு கொடுத்துட்டேன்னு. இதுகளுக்கும் போட்டு கொடுக்கணுமா? சிடு சிடுத்தாள் ஜெயலட்சுமி.
உங்க புள்ளைக்கு நீங்க போட்டு கொடுத்தீங்க என் பிள்ளைகளுக்கு நான் போட்டுக் கொடுத்தேன்… கோழி நம்ம வீட்டு கோழி தான்… மளிகை சாமான் என் புருஷன் வாங்கி போடுறது தான்… வெடுக்கென பதில் பேசிவிட்டாள் தமயந்தி.
வாயப்பாரு… அது தான் கடவுளு ஆட்டுக்கு வாலை அளவா வச்சிருக்காரு… இவ எண்ணத்துக்கு தான் ரெண்டு பொட்ட புள்ளையா பெத்து வச்சுருக்கா… சத்தமாகவே முணுமுணுத்து சென்றாள் ஜெயலட்சுமி.
எவ்வளவு தான் அடங்கி செல்வது? இப்போதெல்லாம் பதிலுக்கு பதில் சிடுசிடுத்து விடுகிறாள் தமயந்தி.
பவித்ராவின் அழகும் அறிவும் ஜெயலட்சுமிக்கு அடியோடு பிடிக்கவில்லை. தன் மகள் சபிதா மாநிறத்துக்கு கீழே இருக்க… பவித்ரா பளிச்சென்று அவ்வளவு அழகாக துறு துறுவென்று பேசுவதும் சிரிப்பதும் அவளுக்கு அவ்வளவு எரிச்சலை கொடுத்தது.
“——————“
மைத்துனன் மணவாளனுடன் சேர்ந்து மாயவரம் புறநகர் பகுதியில் இடம் வாங்கி போட்டிருந்தான் சங்கரன்.
மனைவிக்கு கூட சொல்லவில்லை. மாப்பிள்ளையும் மைத்துனனும் சேர்ந்து வாங்கியது யாருக்கும் தெரியாது.
கூட்டுக்குடும்பத்திலிருந்து முன்னுக்கு வர முடியாது என்பதை உணர்ந்து கொண்ட சங்கரன் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டதன் விளைவு தான் தனியே சொத்து வாங்கியது.
தமயந்தி இப்போது மூன்றாவது முறை கர்ப்பம் தரித்திருந்தாள். இன்னும் யாருக்கும் சொல்லவில்லை
ஏங்க இந்த குழந்தை வேணாம் அபார்ஷன் பண்ணிடலாம்… ரெண்டு குழந்தைகள் இருக்கே… அதுவே போதும்!அழுது கரைந்தாள்.
இருக்கட்டும் தமயா… கருவை களைக்கும் பாவத்தை செய்ய வேண்டாம்…!
இது என்ன குழந்தையா இருந்தாலும் இதோட குடும்பகட்டுப்பாட்டு ஆபரேஷன் பண்ணிக்கலாம்.
அதுக்கில்லங்க… தடுமாறினாள்.
இதுவும் பொண்ணா இருந்துடும்னு பயப்படற…
பரவாயில்லை… ஸ்பானர் பிடிக்க என் உடம்பில் தெம்பு இருக்கு… மூனு பொண்ணா இருந்தாலும் மகாராணி மாதிரி வளர்த்து படிக்க வைப்பேன்… மனைவிக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டானோ… தனக்கே சொல்லிக்கொண்டானோ..?
கர்ப்பத்தை நெடுநாள் மறைத்து வைக்க முடியாது அல்லவா… விஷயம் வெளியில் தெரிய ஜெயலட்சுமிக்கு நமட்டு சிரிப்பு.
சுசிலா தான் பரிதவித்து போனார். தன் இளைய மகன் பெயர் சொல்ல அவனுக்கென்று ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்ற ஏக்கம் அவருக்கு.
திருப்பதி ஏழுமலையானுக்கு வேண்டுதல் வைத்தார் குலதெய்வத்திற்கு வேண்டுதல் வைத்தார். வேளாங்கண்ணி மாதாவிற்கு வேண்டுதல் வைத்தார்.
“——————“
அண்ணே… அண்ணே… உங்க வீட்டிலிருந்து போன் வந்திருக்கு… கடையில் வேலை பார்க்கும் மணிகண்டன் அழைத்தான்.
யாருடா? எஞ்சின் ஆயிலும் கிரீசும் படிந்த கையை துணியில் துடைத்துக்கொண்டே ரிசீவரை எடுத்து காதில் வைத்தான்.
என்னங்க மாமா மார் வலிக்குதுன்னு வலியில் துடிக்கிறாரு… தமயந்தி அழுதாள்.
ஆட்டோ பிடிச்சு பாலாஜி ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க… நான் நேரா அங்கே வந்துடறேன். வண்டியை எடுத்துக் கொண்டு பறந்து சென்றான் சங்கரன்.
ஆதிமூலத்திற்கு இரண்டாவது அட்டாக்.
கொஞ்சம் கடுமையான அட்டாக் .
BP மாத்திரை ரெகுலரா எடுக்கல….கொழுப்பு அதிகம் உள்ள உணவு சாப்பிடக்கூடாது என்று அவ்வளவு தூரம் சொல்லியும்… கொழுப்பின் அளவு கூடி மறுபடியும் மாரடைப்பு வந்திருக்கு… மருத்துவர் கடுமையாக திட்டினார்.
வாரத்திற்கு இரண்டு நாட்களாவது கறி மீன் இருந்தாக வேண்டும் ஆதி மூலத்திற்கு…
இந்த முறை மிகவும் போராடி மருத்துவர்கள் உயிரையும் மீட்டுக் கொடுத்தனர். அடுத்த அட்டாக் வந்தால் நாங்க கேரண்டி கொடுக்க முடியாது என்று தெளிவுபடக் கூறியே அனுப்பி வைத்தனர்.
“—————–“
சங்கரா இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை தானே எங்கே கிளம்பிட்ட…?
கொஞ்சம் வெளியில் வேலை இருக்குப்பா…
உன் கூட கொஞ்சம் பேசணும்…!
சொல்லுங்கப்பா…!
நான் சொத்தை பிரித்து எழுதிட்டேன்… மகன் முகத்தை பார்க்காமல் விட்டத்தை வெறித்தபடி கூறினார் ஆதிமூலம்.
என்ன சொல்றீங்க? நம்ப இயலாது திகைப்புடன் பார்த்தான்.
ஆமா… என் உசுரு எவ்வளவு நாளைக்குன்னு டாக்டர்களுக்கே தெரியல…அதுதான் காலா காலத்தில் செய்ய வேண்டியதை செய்துடனும் இல்லையா?
நீங்களே விரும்பி சொத்தை பிரித்த பிறகு என்கிட்ட ஏன் சொல்லணும்? சினத்தை அடக்கிக் கொண்டு பேசினான்.
நீயும் ஒரு பாகஸ்தன் உனக்கு சொல்லியாகனுமே?
அண்ணனும் ஒரு பாகஸ்தன் தானே அவருக்கு சொன்னீங்களா?
ம்ம்ம்ம்ம் என்றார்…!
அவர் பேச்சிலேயே புரிந்து விட்டது பரமசிவத்துக்கு முன்கூட்டியே விபரம் தெரியும் என்று.
சுசிலா மர பீரோவில் இருக்கும் அந்த மஞ்சப்பை எடுத்துட்டு வா…! மனைவியை ஏவினார்.
இந்தா சங்கரா படிச்சு பாரு! ஒரு பத்திரத்தை நீட்டினார்.
கிணற்று பாசனம் கொண்ட நன்செய் நிலம் 12 ஏக்கரும் குடியிருக்கும் வீடும் பரமசிவத்திற்கு.
மானாவாரி பயிர் செய்யும் புன்செய் நிலம் எட்டு ஏக்கரும் வீட்டுக்குப் பின்னே உள்ள காலி மனை ஆறு சென்டும் சங்கரநாராயணனுக்கு.
செந்தாமரை கலாவதி இருவருக்கும் தலா ஒரு ஏக்கர் நிலமும் மூன்று சென்ட் வீட்டுமனையும்.
ஜிவு ஜிவு என கன்னம் இறுக தந்தையை பார்த்தான்.
என்னப்பா அப்படி பார்க்கிற? அப்பா எது செய்தாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும்.
நீ சொந்தமா ஒர்க் ஷாப் வச்சிருக்க… நாலு காசு சம்பாதிக்கும் சாமர்த்தியம் உனக்கு இருக்கு.
அப்பா நன்செய் நிலம் ஏக்கர் ரெண்டு லட்சம் போகுது… மானாவாரி நிலம் ஏக்கர் 60 ஆயிரத்துக்கு கூட நம்ம ஊர்ல சீந்த ஆள் இல்லை.
நான் ஒர்க் ஷாப் வச்சிருக்கேன்னா… நான் கடன் பட்டு உடன்பட்டு ராப்பகலா கண் முழிச்சி உருவாக்கினது. என் சொந்த உழைப்பில் உருவான கடை.
சங்கரா இப்படி பேசாதப்பா.
நீ மெனக்கெட்டு விவசாயம் செய்யப் போறதில்லை… பரமசிவத்துக்கு விவசாயத்தை தவிர வேறு ஒன்னும் தெரியாது.
அவன் உன் அண்ணன் தானே…?
நிலத்துல தான் ஓரவஞ்சனை செய்தீங்கன்னு பார்த்தா குடியிருக்கும் வீட்டிலுமா? அவன் உயிர் துடித்தது. இந்த நயவஞ்சகத்தை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
சங்கரா இது பழைய வீடு… எப்போதுமே குடியிருக்கும் வீடு மூத்த பிள்ளைக்கு தான் அது தான் உலக வழக்கம்.அதுவும் இல்லாம அவனுக்கு ஆண் குழந்தை இருக்கு… பரம்பரை சொத்தா இந்த வீடு மூத்தவனுக்கு சேர்றது தான் நியாயம்.
ஓ எனக்கு ஆண் குழந்தை இல்லைன்னு இப்படி யோசிச்சு இருக்கீங்க அப்படித்தானே…? துடியாய் துடித்த இதயத்தை அழுந்த பற்றிக் கொண்டான்.
நான் சொல்றதை கேளு சங்கரா இந்த வருஷம் அறுவடை முடிந்த உடனே பின்னாடி இருக்கும் இடத்துல உனக்கு வீடு கட்ட தொடங்கிடலாம்.
அப்பா இது உங்க சொத்து உங்க இஷ்டம் எனக்கு ஏன் விளக்கம் சொல்றீங்க…? உள்ளம் வெறுத்து ஏமார்ந்த மனநிலையுடன் வெளியேறினான்.
சங்கரா கோவிச்சுக்காதப்பா…! நானும் எவ்வளவோ சொன்னேன் உங்க அப்பா பிடித்த பிடியில் நின்னுட்டார்… சுசீலா முந்தானையால் கண்ணீரை துடைத்துக்கொண்டே மகன் பின்னே ஓடினார்.
அப்பா அண்ணனுக்கு கொடுத்ததுல எனக்கு வருத்தம் இல்லைமா… அவர் விருப்பத்துக்கு பிரிச்சு கொடுத்துட்டு எனக்கு செய்தியா சொன்னதுக்கு பதில் கொடுக்கிறதுக்கு முன்னாடி சொல்லி இருக்கலாம்.
நானே அண்ணனுக்கு தாராளமா கொடுக்க சொல்லி இருப்பேன்… இவர் சொல்லி நான் கொடுக்க கூடாது. நானே விட்டு கொடுத்ததுனு இருந்திருந்தா எனக்கு திருப்தியா போயிருக்கும்.
சங்கரா தங்கச்சிக்கு நகை வாங்கணும். சங்கரா தீபாவளிக்கு ஜவுளி வாங்கணும், சங்கரா பருத்திக்கு மருந்து வாங்கணும், சங்கரா சாயங்காலம் சந்தையில் காய்கறி வாங்கிட்டு வா… மிளகாய் தூள் அரைக்கணும் மிளகாய் சாமான் வாங்கிட்டு வான்னு மூச்சுக்கு முந்நூறு முறை சங்கரனை தேட தெரிஞ்ச அப்பாக்கு சங்கரா சொத்தை பிரிச்சு எழுதப் போறேன்னு சொல்ல தோணல பாருங்க… பொங்கிய கண்ணீரை அடக்கிக் கொண்டு வெளியேறினான்.
“———————“
மாமனாரிடம் அழுது அரற்றி நாடகம் அரங்கேற்றிய ஜெயலட்சுமி திட்டமிட்டு சாதித்து விட்டாள்.
மாமா எம்புருஷன் உங்க காலுக்கு அடியிலே வாழ்ந்துட்டாரு… அவருக்கு உலகம் தெரியாது. காடு,காட்டை விட்டா வீடு.
உங்க மூச்சுக்கு ஒண்ணுன்னா எங்க கதி என்னாகுமோ…? நாங்க குடும்பமா நடுத்தெருவுக்கு வந்துடுவோம்… வழித்து ஊற்றினாள் கண்ணீரை.
ஏம்மா அப்படி சொல்ற…? தவித்து விட்டார் பெரியவர்.
உண்மையை தானே சொல்றேன்.
அப்படிலாம் உங்களுக்கு ஒரு நிலை வராதும்மா. என் மூச்சு நின்னாலும் சட்டப்படி உங்களுக்கு சேர வேண்டிய சொத்து உங்களுக்கு வந்து சேரும்.
எப்படி வரும்? உங்க பேருல இருக்க சொத்து எத்தனை வாரிசு இருக்கோ அத்தனைக்கும் சமமா தான் போகும்.
எம்பொண்ணு ஏழாங்கிளாஸ் படிக்கிறா… இன்னைக்கோ நாளைக்கோ பெரிய பொண்ணு ஆகிடுவா…. எப்படி அவளை ஆளாக்கி ஒருத்தன் கையில் புடிச்சு கொடுக்குறது?எம்புருஷனுக்கு என்ன திறமை இருக்கு நாங்க முன்னுக்கு வர…
ஒத்த ஆம்பள புள்ள பெத்து வச்சிருக்கேன் எம்பாட்டன் சொத்துன்னு எம்புள்ள பெருமையா சொல்லி வாழணும் மாமா… அது தான் நம்ம பரம்பரைக்கு பெருமை.
நீங்களா பார்த்து நல்லது கெட்டது யோசிச்சு எங்களுக்கு ஒரு நல்லது செய்தா பிரச்னை இல்லாம போயிடும்.
ஆதிமூலம் யோசிக்கத் தொடங்கினார்.
சங்கரனுக்கு பெண் பிள்ளைகள் தான். சொத்தை கொடுத்தால் ஒரு காலத்தில் விற்று விட்டு சென்று விடுவார்கள். பரமசிவனின் மகன் தான் நமக்கு அடுத்த வாரிசு. இந்த சொத்தை ஆளும் தகுதியும் கட்டிக் காப்பாற்றும் உரிமையும் பரமசிவன் மகன் சரவணனுக்கு இருப்பதாக ஆதிமூலம் உறுதியாக நம்பினார்.
எப்படியும் பிழைத்துக் கொள்ளும் திறமை சங்கரனுக்கு இருக்கிறது. பரமசிவனுக்கு என்ன தெரியும் எப்படி பிழைப்பான்…?. மிகவும் யோசித்து யோசித்து தான் இப்படி ஒரு முடிவுக்கு வந்தார்.
“——————“
தங்களுக்கு ஆண் வாரிசு இல்லை என்ற காரணத்திற்காக மாமனார் செய்த துரோகத்தை தமயந்தியால் ஏற்கவே முடியவில்லை.
அம்மா… நான் மாயாவரத்தில் வீடு பார்த்துட்டேன். பொங்கல் முடிஞ்சு போய் பால் காய்ச்சிக்கிறோம். தாயிடம் மட்டும் கூறினான் சங்கரன்.
வீட்டில் யாருடனும் பேசுவதில்லை. தந்தையின் முகம் கூட பார்ப்பதில்லை.
என்ன பேசுற சங்கரா…? இவ்வளவு பெரிய வீட்டை விட்டு எங்களை விட்டு போறியா? அப்படியே எனக்கு எள்ளும் தண்ணியும் இறைச்சுட்டு போ…! உச்ச ஸ்தாயியில் கத்தினார் ஆதிமூலம்.
இவ்வளவு பெரிய வீடு தான். ஆனா எனக்கு உரிமை இல்லையே…? சங்கடத்தோட ஏன் ஒரே வீட்டுல…?
நீ பண்றது சரியில்லை சங்கரா? அவர் குரல் நடுங்கியது.
இன்னும் ஏன் என்னை வதைக்கிறீங்க…. என்னை நிம்மதியா விட்டுடுங்களேன்… பேசிவிட்டான் சங்கரன். தன் ஆதங்கத்தை… கோபத்தை கொட்டி விட்டான்.
அப்பா உனக்கு துரோகம் செய்துட்டேன்னு நினைக்கிறியா சங்கரா? அப்பா நாலையும் யோசிப்பேன். பரமசிவம் இந்த சொத்தை எடுத்துக்கிட்டு எங்கே போயிடப் போறான்…?
சரவணன் வளர்ந்து உன் பொண்ணுகளுக்கு அண்ணனா சீர் செய்ய போறான். இது ஒரே குடும்பம். இதுல என்னைக்கும் வேற்றுமை இருக்கக் கூடாது.
என் மூச்சு அடங்குற வரைக்குமாவது ஒன்னு மண்ணுமா இருந்து என்னை கொண்டு போய் காடு சேர்த்துட்டு எப்படியோ போங்க…!
கூட குறைச்ச சொத்து வருதுங்குறதுக்காக சொந்தம் இல்லைன்னு போயிடாது சங்கரா… ஆவேசமாய் பேசினார் ஆதிமூலம்.
அப்படியா…? அப்போ உங்க மூத்த பிள்ளைக்கு எழுதி கொடுத்த சொத்தை எம்புருஷனுக்கு மாத்தி எழுதி கொடுங்க பார்ப்போம்… உங்க பெரிய மருமகள் விட்டுடுவாங்களா? தமயந்தி வாய் பொறுக்காமல் கேட்டு விட்டாள்.
இது எங்க குடும்ப விஷயம் நீ தலையிடாதே… தமயந்தியிடம் எகிறினார்.
எது உங்க குடும்ப விஷயமா? அப்போ எனக்கு வேற குடும்பம் இருக்கா… நான் யாரு இந்த வீட்டுல…? மேலும் கீழும் மூச்சு வாங்கியது அவளுக்கு
அதிகம் பேசாதம்மா… புள்ளதாச்சி பொண்ணுன்னு பார்க்கிறேன்… வரிந்து கட்டினார் ஆதிமூலம்.
அவ பொறாமையில் அலையுறா மாமா.. அவ புருஷன் அவளை பேச விட்டு வேடிக்கை பார்க்குறார். ஜெயலட்சுமி புகையும் நெருப்பை விசிறி விட்டாள்.
யாருக்கு பொறாமை….? நான் பொறாமை பட்டிருந்தா ஒன்பது வருஷமா இந்த வீட்டுல வாழ்ந்திருக்க மாட்டேன்.. வாரி சுருட்டிட்டு என்னைக்கோ தனிக்குடித்தனம் போயிருப்பேன்.
ம்ம்மா என்ன தமயந்தி இதெல்லாம்… சுசிலா இடையில் புகுந்தார்.
பதினேழு வயசுல இருந்து இந்த குடும்பத்துக்காக உழைச்ச எம்புருஷனுக்கு ரொம்ப நல்லது பண்ணிட்டீங்க… தமயந்தி வெடித்து அழுதாள்.
ஏன் உம்புருஷன் தான் உழைச்சாரு…. எம்புருஷன் காலாட்டிக்கிட்டு உட்கார்ந்து இருந்தாரா? ஜெயலட்சுமி பதிலுக்கு பதில் பேசி பிரச்னையை இன்னும் பெரிதாக்கினாள்.
உன் எண்ணதுக்கு இதுவும் பொட்டையா தான் பிறக்க போகுது பாரு… அவ்வளவு வன்மம் அவள் வார்த்தையில்.
பொண்ணு தானே பொறந்துட்டு போகுது… ஆமா நீ பொண்ணு தானே… சுருக்கென ஆவேசமாய் அடிவயிற்றிலிருந்து குரல் கொடுத்த தமயந்தி அம்மா என்று அலறி சரிந்தாள்.
சங்கரா பனிக்குடம் உடைஞ்சுடுச்சுன்னு பார்க்கிறேன். அய்யயோ இன்னும் ஒன்றரை மாசம் இருக்கே பிரசவ தேதிக்கு… பயந்து புலம்பினார் சுசிலா.
டாக்சி பிடித்து மனைவியை அள்ளிக் கொண்டு மாயவரம் கமலா மருத்துவமனைக்கு கொண்டு சென்றான்.
குழந்தையை உடனே எடுத்தாக வேண்டும் குழந்தையை இங்குபேட்டரில் வைத்து பராமரிக்க வேண்டும் நிறைய செலவாகும் என்றுவிட்டனர்.
உடனே கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றான்.
அங்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்தனர். அழகிய ஆண்குழந்தை தமயந்திக்கு. ஒரு கிலோ இருநூறு கிராம் தான் இருந்தது.
இங்குபேட்டரில் இரண்டு வாரம் வைத்து தான் குழந்தையை காப்பாற்றி கையில் கொடுத்தனர்.
ஆதிமூலத்திற்கு குற்ற உணர்வு அதிகமானது சங்கரனுக்கு ஆண் வாரிசு இல்லை என்று பரமசிவத்துக்கு வேண்டிய சொத்தை எழுதி கொடுத்து விட்டோமே… உள்ளுக்குள் வருந்தினார்.
நல்லவேளை இந்த கிழம் சொத்து எழுதி கொடுத்துடுச்சு! உள்ளுக்குள் மகிழ்ந்து தன்னையே மெச்சிக் கொண்டாள் ஜெயலட்சுமி.
இளையவனாய் பிறந்த மகனுக்கு யுவராஜ் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தாள் தமயந்தி.
“—————-“
நாட்கள் நகர்ந்தோட ஒரே வீட்டில் இருந்தனர் அவ்வளவு தான் ஒற்றுமையாக இல்லை.
சங்கரன் தன் குடும்பத்தோடு மட்டும் தன்னை சுருக்கிக் கொண்டான்.
தமயந்தி தன் புள்ளைகளுக்கு வேண்டும் என்பதை அவள் செய்து கொள்வாள். ஜெயலட்சுமி தன் பிள்ளைகள் ஆசைப்பட்டதை அவள் தனியே செய்து கொள்வாள்.
மனக்கவலையில் ஆதிமூலம் இன்னும் உருகுலைந்து போனார்.
BP அதிகமாகி மூச்சு திணறி கை கால் துவண்டு கிடந்த ஆதிமூலத்திற்கு செலவு செய்து வைத்தியம் பார்த்தது சங்கரன் தான்.
நடை உடை தடுமாறிப் போன மாமனாருக்கு வேண்டிய பராமரிப்பு பார்ப்பது தமயந்தி தான்.
சொந்தம் தான் அனுசரிக்கும் கடைசி காலத்தில் நம்மை அரவணைக்கும் என்று எண்ணி தான் ஜெயலட்சுமியை மருமகளாக வேண்டி விரும்பி கொண்டுவந்தார்.
எந்த தமயந்தியை வேண்டாம் என்றாரோ அந்த தமயந்தி தான் இன்று அவருக்கு எல்லாம் செய்கிறாள்.
ஐந்தாம் வகுப்பு படிக்கும் பவித்ரா தான் தாத்தா கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து அவர் சொல்வதை செய்து கொடுத்தாள்.
சரவணா… சரவணா கடைக்கு போய் ஒரு கோலி சோடா வாங்கிவாயேன்…
போ தாத்தா நான் மந்தைவெளியில் கிரிக்கெட் விளையாடப் போறேன்.. பவித்ராவை போய் வாங்கிட்டு வர சொல்லு!
தன் வாரிசு… இந்த குடும்பத்தை காக்க போகும் பேரன் என்று கர்வம் கொண்டு இருமாந்திருந்த அந்த பேரன் அவரை திரும்பிக் கூட பார்க்கவில்லை.
சங்கரன் தான் மாதந்தோறும் மருந்து மாத்திரை வாங்கி தருகிறான். தமயந்தி தான் வேளாவேளைக்கு பக்குவமாய் சமைத்து தருகிறாள்.
ஆதிமூலத்திற்கு கூச்சமாய் இருந்தது இளைய மகனையும் மருமகளையும் நேர் கொண்டு பார்க்க… எவ்வளவு ஓர வஞ்சனை செய்து விட்டேன் … நான் என்ன பெரிய மனுஷன்? கலங்கி அழுதார்.
இறுக்கமான இந்த சூழலை விட்டு விலகவும் முடியாமல் இங்கே தொடரவும் முடியாமல் பரி தவித்து நின்றாள் தமயந்தி.
இந்த சங்கர நாராயணன் தான் வேண்டும் என்று கட்டிவந்து என்ன சந்தோஷத்தை அனுபவித்தோம்? பெரியவங்களா வரன் பார்த்திருந்தா ஒரு இடத்துக்கு நாலு இடம் விசாரிச்சு குடும்ப பின்னணி எல்லாம் பார்த்து மாப்பிள்ளை தேடி இருப்பாங்க… உள்ளுக்குள் உடைந்து வெம்பினாள்.
“——————–“
தன்னை உலக அழகியாக எண்ணி அரிதாரம் பூசிக் கொண்டிருக்கும் சபிதாவிற்கு பவித்ராவை கண்டாளே வேப்பங்காய் தான்.
அவளை விடவும் நான்கு வயது சிறு பெண் இவ்வளவு வனப்பாக இருக்கிறாளே…
எட்டாம் வகுப்பு படிக்கும் பவித்ராவை கண்டு எரிந்து பொசுங்கி போனாள் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் சவிதா.
அம்மா உனக்கு ஒன்னு தெரியுமா? நம்ம தெரு ரெங்கநாதன் செட்டியார் பேரன் இருக்கானே பாலாஜி. அட டென்த் படிக்கிறானேம்மா…
அவன் இந்த மகாராணிக்கு இன்னைக்கு சாக்லேட் கொண்டு வந்து கொடுத்து… அது PETமிஸ்ஸுக்கு தெரிந்து ஸ்கூல்ல ஒரே பிரச்னை… தாயிடம் சொல்லி சிரித்தாள் சபிதா.
ஏய் பவித்ரா இங்கே வாடி… ரிப்பன் வைத்து மடித்து கட்டிய சடையை பிடித்து உள்ளே இழுத்து சென்ற தமயந்தி பளார் பளாரென்று முதுகில் அடித்தாள்.
அம்மா நான் எந்த தப்பும் பண்ணல… அடிக்காதம்மா வலிக்குதும்மா… அந்த அண்ணா தான் அவங்களுக்கு பர்த்டேன்னு எனக்கு சாக்லேட் கொடுத்தாங்க…கேவி கேவி அழுத மகளை அள்ளி அணைத்துக் கொண்டான் சங்கரன்.
புள்ளைய அடிக்கிற வேலை வச்சுக்காதே தமயந்தி. எனக்கு கெட்ட கோபம் வரும்… கடும் கோபம் சங்கரனுக்கு.
error: Content is protected !!