Skip to content
Post Views: 12,842
நீங்காத உறவே!…
அத்தியாயம் 20
மறுநாள் விடியல் வீட்டில் பெரிய அமைதியை கொடுத்தது. நிறைய யாரோடும் ஒரு வார்த்தை பேசவில்லை. அவள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டாள். சினேகா கீழே வந்திருந்தால் அவள் முகம் அழுது வீங்கி இருந்தது. ரோகினி வரவே இல்லை. நிறை எதையும் கண்டு கொள்ளவில்லை.
பிரபாவும் அமைதியாக தன் வேலைக்கு கிளம்பி விட்டான். நேற்றே வீர சிவா, ரோகினியை அடித்து இருந்தான். மேலும் தன்னால், தன் மனைவியால் வீட்டில் பிரச்சனை வராமல் இருக்க எல்லாவற்றையும் கடக்க நினைத்தான்.
Advertisement
நிறை வீட்டில் இருக்க, பிரபா மட்டும் வேலைக்கு கிளம்பி விட்டான். ஒரு பத்து மணி போல் ரோகினி வீட்டில் இருந்து ஆட்கள் வந்தது. ஆளாளுக்கு பேசிக் கொண்டார்கள். சத்தம் கேட்டது, கலவரம் வரும் போல் இருந்தது.
கல்யாணி குரல் உசந்து இருந்தது. அதற்குத்தக்க வீரசிவாவும் சத்தமாக பேசினான். ரோகினி ஒரு பக்கம் அழுவது தெரிந்தது. நிறை தன் அறையை விட்டு வெளியே வரவில்லை.
வீர சிவா உறுதியாக சொல்லி விட்டான், கொஞ்ச நாட்கள் ரோகினி அவள் வீட்டிலிருந்து வரட்டும் என்று… கூட்டு குடும்பமாக இல்லாவிட்டாலும் ஒரே வீட்டில் இருப்பதால் சில விஷயங்களை அனுசரிக்க தான் வேண்டும். ரோகினி குணத்திற்கு அது முடியாது.. அதனால் அவளுக்கு பயம் வர வேண்டும் என்று ரோகினியை அவள் தாய், தந்தையோடு அனுப்பி வைத்தான். நிறை இதற்கு கவலைப்படவும் இல்லை, மகிழவும் இல்லை. அவள் மனதில் பட்ட காயம் இவர்களை விட்டு தள்ளி நிற்க சொன்னது…
Advertisement
நாட்கள் கொஞ்சம் அமைதியாக கடந்தது. வீரசிவா தன் தம்பியோடு மன்னிப்பு கேட்டு பேசினாலும் நிறை யாரோடும் பேச விரும்பவில்லை. வேலைக்கு போவதால் வீட்டில் இருக்கும் நேரம் குறைவு. இதில் இப்படி ஒரு பிரச்சனைக்கு பின், அவள் அறையின் பின் வாசலையே அதிகமாக உபயோகித்தாள்.
Advertisement
கல்யாணி கூட, “என்ன இது? இன்னுமா உங்க சின்ன மருமகளுக்கு கோவம் குறையல? சொந்தம் என்றால் கூட குறைய அனுசரிச்சு போகும்ன்னு தான் கட்டி வச்சது” என்றார் சடவாக,
“என்ன இருந்தாலும் கட்டின புருசன் தன் கண் முன்னாடி அடி வாங்கிறதை பார்த்து இருக்கு.. அந்த வலி இருக்கு. நிறை இடத்தில் உன் மத்த ரெண்டு மருமகளை நினைச்சு பாரு, நடகுறதே வேற.. அவ்வளவு பிரச்சனையிலும் பெரிய உனக்கு மரியாதை கொடுத்துச்சு. இன்னமும் இந்த வீட்ல நம்ம கூட சேர்ந்து இருக்கு.. அது தான் சொந்தம். கொஞ்ச நாள் ஆகும் கல்யாணி” என்று மனைவியை சமாதானம் செய்தார்.
வளர்க்கு நல்ல முறையில் வளைகாப்பு முடித்து தாய் வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். அங்கு வேறு ஆண் துணை இல்லத்திற்கு பிரபா தான் உடன் நின்றான். நிறையை ஒருநாள் இருக்க சொல்லிவிட்டு அவன் மட்டும் கிளம்பி வந்தான். நிறையும் தாய் வீட்டில் இருப்பதன் அவசியத்தை உணர்ந்து அங்கு இருந்தாள்.
Advertisement
நிறைக்கும் மூன்றாம் மாதம் துவங்கி விட்டதால், ஒவ்வாமை, தலைசுற்றல், சோர்வு, முக வாட்டம் என்று எல்லாம் இருந்தது. முயன்று தன் தங்கைக்கு பிடித்த மாதிரி உணவுகளை செய்து கொடுத்தாள்.
“உன் தங்கச்சி வளைகாப்பு பெருசா நீ எதுவும் கண்டுக்கல நிறை” என்றார் திலகா.
“என்ன கண்டுக்கல?” அங்கு தான் வளரும் அமர்ந்து இருந்தாள்.
“பின்ன என்னடி, வரவு செலவு என்ன? எப்படி செலவு பண்றீங்க, எதுவுமே நீ எங்க கிட்ட கேட்கலையே” என்ற தாய்க்கு…
“நான் என்னம்மா கேட்க. அதான் நீங்க பாக்குறீங்களே.. நீங்க தான பார்க்கணும்”
“வளரு வீட்டுல கொஞ்சம் சிரமப்படுறா? அவங்க நாத்தனார் பிள்ளைக்கு நிறைய செய்யணும்னு சொல்றாங்களாம். தங்கக் கோடு கேக்குறாங்களாம் நிறை” என திலகா சொன்னதும்,
“இது என்னமா அநியாயமா இருக்கு. நம்ம குடும்ப வளமை தெரிஞ்சு தானே பொண்ணு கட்டி போனாங்க. அப்புறம் என்ன அது குடு இது குடுன்னு…” என்றவள், தங்கை புறம் திரும்பி,
“உன் கணவர் என்ன சொல்றார் வளர். அவரும் கேட்கிறார?” என்றதும், திலகா
“அதெல்லாம் எதுவும் இல்லை நிறை.. மாப்பிள்ளை எல்லாம் தங்கம் தான். அவங்க மாமனார், மாமியார் கூட பெருசா ஒன்னும் சொல்லலை.. அவங்க நாத்தனார் தான் சாடை பேசுறாங்களாம்”
“சாடை பேசுறதெல்லாம் பெருசா எடுத்துக்காத.. எந்த வீட்டுக்குப் போனாலும் குத்தல் பேச்சு, சாடை பேச்சு எல்லாம் இருக்கும்” என்று அசட்டையாக நிறை சொல்ல,
“வளரு ரொம்ப சங்கடப்படுறா.. அங்கே இருக்கவே அவளுக்கு அசிங்கமா இருக்காம்”
இது என்ன என்று நிறை பார்க்க,
“அதனால நிறை” என்று இழுத்தார் திலகா.
“என்னம்மா?”
“எப்படியாவது வளருக்கு குழந்தை பிறந்த அனுப்பும்போது ரெண்டு பவுன் தங்கக்கொடி எடுத்து போடணும்” என்ற தாயை அதிர்ச்சியாக பார்த்தாள்.
தற்போதைய நிலைக்கு இரண்டு லட்ச ரூபாய்.. இதில் குழந்தை பேரு, குழந்தையை பார்த்துக் கொள்வது என்று தனி செலவு வேறு இருக்கு…
“சரிம்மா உங்க விருப்பம்” முடித்து கொண்டாள் நிறை.
“இப்படி சொன்னா எப்படி நிறை. வளரு உன் தங்கச்சி” என்ற தாயை கூர்மையாக பார்த்தவள்,
“என்ன சொல்ல வார, நேராவே சொல்லு?”
“வேற ஒன்னுமில்லை நிறை. பாதி காசு நீ கொடுக்க முடியுமா?” என்றார் தயங்கி..
“நானா? என்னம்மா நீ பாட்டுக்கு அசால்ட்டா கேக்குற. நான் எங்கம்மா போறது அவ்வளவு பணத்துக்கு” எப்படியும் ஒரு லட்சம் ஆகும்.
“என்ன நிறை நீ இப்படி சொல்ற? பாதி பணம் தானே கேட்கிறேன். நீ செய்ய மாட்டியா” என்று நியாயம் பேச, நிறைக்கு அப்படி ஒரு கோபம் வந்தது.
“என்னை நீங்க யோசிக்கவே மாட்டீங்களாமா? வெறும் ஏழாயிரம் சம்பளத்துக்கு வயித்துல பிள்ளையோட நான் ஓடிட்டு இருக்கேன். அப்ப நான் எப்படி பட்ட சூழ்நிலையில இருக்கேன். அதை கொஞ்சமாவது நெனச்சு பாத்தீங்களா நீங்க… உங்க சின்ன பொண்ணு தான் மாசமா இருக்கா.. வீட்ல நிம்மதியா இருக்கா, நான் வேலைக்கு போறேன். அப்ப எனக்கு அந்த பணம் எவ்வளவு தேவை” என்றதும்,
“வளர் உன் தங்கச்சி தானடி. அவ கூட உனக்கு என்ன போட்டி”
“என் தங்கச்சி கூட எனக்கு என்னமா போட்டி. என்னை ஏன் நீங்க யோசிக்க மாட்டேன்றீங்கன்னு கேட்கிறேன். அவளுக்கு இருபது பவுன் நகை போட்டீங்க. சீர் செஞ்சீங்க. உங்க வசதிக்கு மீறி நல்லாவே கல்யாணம் பண்ணி கொடுத்தீங்க. ஆனா, எனக்கு?… எனக்கு ஏதாவது செய்யணும் நினைக்கவே மாட்டீங்களா? இல்ல என்னோட முதல் கடமை உங்கள பார்க்கிறது மட்டும்தானா?”
“என்ன நிறை இப்படி பேசுற”
“வேற எப்படி பேச சொல்றீங்க. வளரு மாதிரி நான் உங்களை எந்த சிரமமும் படுத்தலன்னு நினைங்க. எனக்கு நீங்க எதுவுமே செய்யல.. நானும் என் புருஷன் வீட்டில் சண்டை பிரச்சனை வந்து நிக்கல. அதுவரைக்கும் சந்தோஷப்பட்டுக்கோங்க” என்றதும்,
“உன்னை அங்க யாரு என்ன சொல்லுவா? நீ சொந்த தாய் மாமன் வீட்டுக்கு தானே போயிருக்க?”
“சொந்தமா இருந்தாலும், அந்நியமா இருந்தாலும் மாமியார் மாமியார் தான். நாலாம் உக்காந்து அழுதா ஒரு வாரத்துக்கு அழுகணும்.. எனக்கும் தலைக்கு மேல எல்லா பிரச்சனையும் இருக்கு. நான் அனுசரிச்சு சரி கட்டி போகலையா? ஏதோ என் நல்ல நேரம் நான் கழுத்தை நீட்டின மனுஷன் நல்லவரா இருக்க போய், அவரை அரட்டி உருட்டி நான் வாழ்ந்துட்டு இருக்கேன். இன்ன வரைக்கும் அவர் என்னை ஒரு வார்த்தை சொன்னதில்லை. நான் தான் சண்டை போடுவேன். அவர் சும்மா கூட என்னை அதட்டி பேச மாட்டார். புருஷன் சரியா இருந்தா போதும்.. மத்த எல்லாத்தையும் சமாளித்துவிடலாம்” நிறை நிதர்சனத்தை எடுத்து சொன்னாள்.
“பிரபா சம்பளத்தை உன்கிட்ட தான் கொடுக்கிறானாமே.. கடனாவாது கொடு நிறை” என்றார் தாய்.
“என் சம்பளத்துக்கு ஒரு லட்சம் என்பது பெரிய விஷயம். உன் சின்னமாக, அவ நாத்தனார் கிட்ட பெருமை காட்டுவதற்காக நான் கடன் பட முடியாது. என்னை நம்பி சம்பளத்தை கொடுக்கிற மனுஷனுக்கு நான் உண்மையா இருக்கணும். சொந்தத்துக்குள் கடன் கொடுத்து எல்லாம் மாளாது” என்றவள்,
“கொஞ்சமாவது யோசிங்கம்மா. நான் என்ன படிச்சு அதுக்கு தகுந்த பெரிய வேலைக்கா போறேன். குடும்ப கஷ்டத்துக்கு வேலைக்கு போறேன். அதுவுமே உங்களுக்காக தான். நாளைக்கு என் பிரசவ செலவை நீங்க பாக்குறதுக்கு.. என்னால முடிஞ்சது, உங்க பெரிய மகளை வச்சு உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது”
“தாய்மாமன் வீட்டுக்கு கல்யாணம் பண்ணி போயி எனக்கு ரெக்க கட்டி பறக்கல.. நம்ம குடும்ப சூழ்நிலைக்கு ரெண்ட வெளியே சொல்லி, நாலை மறைச்சு வச்சு, எப்படியோ சமாளிச்சு என் குடும்பத்தை ஓட்டுறேன். எனக்கும் தலைக்கு மேல பிரச்சனை இருக்கு. சரிகட்டி தான் போறேன்” என்றவள் தீர்மானமாக தாயை பார்த்து,
“எனக்கு நீங்க எதுவும் செய்ய வேணாம். வளர்க்கு நீங்க செய்றத நான் தடுக்க மாட்டேன். ஆனா, அவங்களுக்கு செய்றதுக்கான பொறுப்பு உங்களோடது…” என்றவள், தங்கை புறம் திரும்பி,
“இங்க பாரு வளரு, நீ இன்னும் குழந்தை கிடையாது. உனக்கே ஒரு குழந்தை வரப்போகுது. நாத்தனார் மாமனாரும் மாமியார் எப்படி சரி கட்டி பழகணும், எப்படி பதில் பேசனும், பெத்தவங்க கஷ்டத்தையும் நாம புரிஞ்சுக்கணும். ஊர் பெருமைக்கு நம்ம பெத்தவங்களை கஷ்டப்படுத்த முடியுமா? நீ கேக்குற சீதை செய்வதற்கு அவங்க எங்க போவாங்க.. கடன் தான் வாங்கணும். வயசானவங்க வளரு… அவங்க வாழ்க்கை ஓட்டுறதே கஷ்டம். புரிஞ்சு நடந்துக்க…” வீட்டிற்கு மூத்த பெண்ணாக அறிவுரை சொன்னாள்.
ஆனால், வளரும் முகம் சுருங்கிய இருந்தது. அவளுக்கு தன் நாத்தனார் முன் நிமிர்ந்து நிற்க முடியவில்லை என்ற வருத்தம். அதற்கு மேல் நிறையும் கண்டு கொள்ளவில்லை. இந்த கொஞ்ச நாள் ஆகத்தான் கடன் இல்லாத ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறாள். அதற்கும் ஆப்பு வைத்துக் கொள்ள முடியாது.
மறுநாள் வீர பிரபாகரன் வந்து விட்டான் மனைவியை அழைத்துச் செல்ல.. நிறை தயாராக நின்றாள்.
“அத்தை, உங்க கிட்ட பேசணும்” என்றான். நிறை புரியாமல் பார்த்தாள்.
“என்ன பிரபா”
“எங்க கம்பெனி மெயின் பிரான்சில் எனக்கு ட்ரெய்னிங் போட்டு இருக்காங்க மூணு மாசத்துக்கு. நிறை தனியாக இருக்கணும்” என்றான்.
நிறைக்கு புரிந்தது. அவள் அவனை முறைத்துப் பார்க்க, கணவன் கவனிக்க வில்லை.
“தனியா ஏன் பிரபா. நீ என்ன நடுக்காட்டிலையா விட்டுட்டு போற… அங்கதான் அண்ணன், மதினி எல்லாரும் இருக்காங்களே” என்றார் திலகா.
நிறை தன் தாயை நினைத்து விரக்தியாக சிரித்துக் கொண்டாள். கணவன் எண்ணமும் புரிந்தது.
“அதுக்கில்லை அத்தை நிறைவேளைக்கு போறா.. எங்க வீட்ல இருந்து வேலைக்கு வர சிரம்மம். அதுவே இங்க இருந்து அவளுக்கு நடந்து போற தூரம் தான். ஒரு மூணு மாசம் நிறையை இங்க வச்சு பாத்துக்க முடியுமா?” வாய் விட்டே கேட்டு விட்டான்.
திலகாவுக்கு யோசனை சென்றது. ஏற்கனவே மாசமாக இருக்கும் ஒரு மகள் வீட்டில் இருக்கிறாள். அதில் பெரிய மகளை அழைத்துக்கொண்டு வந்தால் வரவு செலவுகளை மனதில் பட்டியல் போட்டார். திலகா தடுமாற,
நிறைவுக்கு கோபம் வந்தது. கணவன் வெளியூர் போகப் போகிறேன் உங்கள் மகள் தனியாக இருப்பாள் என்ற பொழுதே தானாக முன்வந்து தன் மகளை வீட்டிற்கு அழைத்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் யோசிக்கும் போதே நிறையக்கு மனம் விட்டுப் போனது. அவள் கணவனுக்கு கண்ணை காட்ட, அவன் எங்கே புரிந்து கொண்டான்.
“உங்க சூழ்நிலை புரியுது அத்தை. நிறைக்கு ஆகுற செலவு எல்லாம் எங்களோடது தான்”என்றதும் அப்பட்டமாக முறைத்தாள் மனைவி.
“அப்ப சரி பிரபா. நிறைக்கும் இங்கிருந்து வேலைக்கு போறது பக்கம் தான். நீ ஊருக்கு போகும்போது இங்க கொண்டு வந்து விட்டுட்டு போ” என்றார்.
அவன் சரி என்று சொல்லி மனைவியின் முகத்தை பார்க்க, அவள் உக்கிரத்தை கண்டு வாய் மூடி கொண்டான். கணவனோடு தன் வீட்டிற்கு வந்ததும் அவனை ஒரு ஆட்டு ஆட்டிவிட்டாள்.
“அவங்களே என்னை கூட்டி வச்சுக்க தயங்கும்போது எனக்கு அங்க போகணும்னு எந்த அவசியமும் கிடையாது. என்ன கேட்காம நீங்களா முடிவெடுப்பீங்களா? அவ்வளவு பெரிய ஆளாகி போச்சா. என்ன இருந்தாலும் நீங்க மேனேஜராக போறீங்க அதானே” என்றதும்,
“ஐயோ! நிறை என்ன பேசுற? நான் உன் நல்லதுக்குன்னு நினைச்சு தான் சொன்னேன். நீ உங்க அம்மா வீட்டுக்கு போறதுக்கு அழுவேன் எனக்கு என்ன தெரியும்”
“நான் மாசமா இருக்கேன்னு தெரிஞ்சும் ஒரு நாள் கூட நம்ம வீட்ல வந்து இருன்னு சொல்லவே இல்லை. வழிய போய் அங்க இருக்க வேணாம். காசு கொடுத்து இருக்கிறது அது என்ன ஹாஸ்டல்லா?”
“நான் இல்லாம நீ தனியா சமாளிப்பியா?” என்றதும்,
அதற்கு பதில் சொல்லாமல், “என்கிட்ட நீங்க எதுவும் சொல்லைலையே?”
“நேத்து தான் எனக்கே தெரியும். அசிஸ்டன்ட் மேனேஜரா இருக்குறதுக்கு ட்ரெய்னிங். நார்மல் டேஸ்சாக இருந்தால் நீ நம்ம வீட்டிலேயே இருன்னு நான் சொல்லுவேன். இந்த மாதிரி நேரத்துல நீ எப்படி நிறை தனியா இருப்ப” என்றான் கவலையாக,
பிரிவைப் பற்றி எல்லாம் அவள் பெரியதாக யோசிக்கவில்லை. அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான பெரிய விஷயம் இந்த வேலை. அதற்கு வரும் சின்ன சின்ன கஷ்டங்களை பெரிதாக யோசிக்க கூடாது.
“நம்ம வீட்டுல நான் இருக்கிறதுக்கு நீங்க ஏன் இவ்வளவு யோசிக்கிறீங்க. யார் கூடவும் பேசாம இருந்தாலும், ஒரே வீடு தானே. அதனால உங்களுக்கு பயம் வேணாம். தைரியமா போயிட்டு வாங்க. நான் ஜாக்கிரதையா இருந்துப்பேன்” அவளுக்கு அறிவுரை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை தான். ஆனாலும் பிரபாவுக்கு கர்ப்பமாக இருக்கும் மனைவியை தனியே விட்டு செல்ல கவலை.
வீட்டில் கூட ட்ரெய்னிங் என்று தான் சொன்னான். புரமோஷன் என்றெல்லாம் சொல்லவில்லை. நிறை தான் வேலை கிடைத்தபின் சொல்லிக் கொள்ளலாம் என்று விட்டாள். மனைவிக்கு ஆயிரம் பத்திரங்கள் சொல்லி, தைரியம் கொடுத்து தான் கிளம்பினான்.
“நிறை, நானும் உன் கூட இல்லை. வேலைக்கு நீ தனியா தான் போயிட்டு வரணும். முடிஞ்சா பாரு இல்லன்னா வீட்ல இரு.. அப்படி ஒன்னும் நீ கஷ்டப்பட்டு வேலைக்கு போக வேணாம்” என்றான்,
“நீங்க கவலைப்படாதீங்க எனக்கு சிரமமா இருந்தா வேலைக்கு போகல” சும்மாதான் கணவனே சமாளித்தாள். அவள் வேலைக்கு செல்வதன அவசியம். அவளுக்குத்தானே தெரியும்.
பிரபா ட்ரினிங்காக கிளம்பி விட்டான். நிறைய சந்தோஷமாகத்தான் வழி அனுப்பி வைத்தாள். அவர்களைப் பொறுத்தவரை இந்த பிரிவு ஒரு முன்னேற்றத்தின் படிநிலை. அதனால் அவள் ரொம்பவும் அழுது ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. முதல் நான்கு நாட்கள் அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை. வீட்டிலும் பெரிதாக வேலை இல்லை. ஒருவருக்கு மட்டும் தானே அதனால் எல்லாமே அளவாக தான் இருந்தது. ஆனால், நாட்கள் போகப்போக அவள் ஒரு மாதிரி சோர்வானாள். கணவனின் பிரிவு அவளை வாட்டியது.
முழுதாக ஒரு மாதத்திற்கு பின் ரோகினி வீடு வந்தாள். யாரும் எதையும் காட்டிக் கொள்ளவில்லை சகஜமாகத்தான் பேசினார்கள். ஆனால், ரோகினிக்கு தான் இது பெரிய அவமானம். அவள் அந்த வீட்டின் மூத்த மருமகள். ஆனால், அடித்து துரத்தியது போல துரத்தி விட்டார்கள். அவள் கனவு கண்டதைப் போல கர்ப்பமும் ஆகவில்லை. அவளைப் பொறுத்தவரை நிறை தன்னை நிலை நிறுத்திக் கொண்டாள் என்ற எண்ணம்.
நிறை ஒதுங்கிப் போக ரோகினியும் தள்ளி நின்று கொண்டாள். என்னதான் மனைவி தைரியம் சொன்னாலும் பிரபா அவள் சென்று வர தனியாக ஒரு ஆட்டோவை பிடித்து விட்டான். அவள் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை.
தான் வாங்கும் சம்பளத்திற்கு தினமும் ஆட்டோவில் செல்வது கட்டுபடியாகுமா? அதற்கு வேலைக்கு போகாமல் இருந்து விடலாம்.. கணவன் எங்கே கேட்கிறான். பிரபாவை நினைத்து நிறை முகம் மலர்ந்தது. கணவன் ஓரளவு மனைவியின் நிலைப்பாட்டை அனுமானித்து விட்டான்.
அதனால்தான் வேலைக்கு போகாதே என்று சொல்லாமல் அவளுக்கு வேலை எளிதாக்கும் செயலை செய்கிறான். மனைவிக்கு அவள் தன்மானமும், கௌரவமும் முக்கியம் என்றால் கணவனுக்கு மனைவியே முக்கியம்.
அன்று விடுமுறை நாள் நிறைய தாமதமாக தான் இருந்து கொண்டாள். தண்ணி வரவும் சமையல் வேலையை விட்டுவிட்டு துணி துவைக்க ஆரம்பித்து விட்டாள். வேலைக்கு செல்வதால் நேரம் பார்த்து தண்ணி பிடித்துக் கொள்ள முடியவில்லை. அதனால் முதலில் துவைத்து விடுவோம். அதன் பின் சமைத்து கொள்ளலாம் என்று நினைத்தால்.
ஆனால், எல்லா வேலையும் முடித்து வந்ததும் உடலில் அப்படி ஒரு ஆசதி. முதுகு இடுப்பெல்லாம் வலித்தது. பேசாமல் படுத்துக் கொள்ள மனம் உந்த, பசியும் வயிற்றைக் கிள்ளியது. அடுப்படி சென்று பார்த்தல் இரவு மீந்த சாதம் தான் இருந்தது. தயிர் விட்டு, மாங்காய் ஊறுகாய் எடுத்துக் கொண்டாள்.
மாங்காய் ஊறுகாய் ருசியாக இருக்க சாதம் கடகடவென உள்ளே சென்றது. அப்போதுதான் கல்யாணி உள்ளே வந்தார். அவள் யாரோடும் பேசுவதில்லையே,
“என்ன இவ பழைய சோறு சாப்பிடுறா? வயித்து பிள்ளை என்ன ஆகும்” என்று நினைத்தவர் வெளியே எட்டி பார்க்க, துணி துவைத்து இருந்தது.
அடுப்படி சென்று பார்த்தார் கல்யாணி. அங்கு ரோகினியும், சினேகாவும் விதவிதமாக சமைத்துக் கொண்டிருந்தார்கள். வார விடுமுறை என்பதால் எல்லா அசைவமும் இருந்தது. பெரியவர்களுக்கு சர்க்கரை, பிரஷர் இருப்பதால் பெரிதாக அசைவ உணவுகளை விரும்புவதில்லை. அதனால் கல்யாணம் எடுக்க மாட்டார்.
நிறை ஒருத்தி தானே.. அதுவும் மாசமாக இருக்கும் பெண். கூடத்தில் தான் அமர்ந்து சாப்பிட்டாள். கண்டிப்பாக அவர்களுக்கு தெரியாமல் இருக்காது. ஒரே வீடு, ஒரே அடுப்படி… எப்படி மனம் ஆசைப்படாமல் இருக்கும். நிறைக்கு கொடுப்பார்கள் என்று கல்யாணி நினைத்திருக்க, அவர்கள் அவளை கண்டு கொள்ளவே இல்லை.
அவர்கள் போக்கில் சமைத்து சாப்பிட்டு விட்டு தங்கள் அறைக்கு சென்று விட்டார்கள். கல்யாணி தான் திகைத்து போய் பார்த்திருந்தார். மாசமாக இருக்கும் பெண். அவள் ஒரு தூக்கி கொடுத்தால் என்னவாக போகிறது. எப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள்.
error: Content is protected !!