Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Manathodu Manvaasam

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 6.1

மண்வாசம் 6 :

 

தெருவில் போவோர் வருவோரது நாவில் நீரூர வைத்தது மரகதவள்ளியின் கைப்பக்குவத்தில் வெண்கலப் பாத்திரத்தில் வெந்து கொண்டிருந்த வெள்ளாட்டுக் கறியும், வெடக்கோழிக் குழம்பும்.

 



Advertisement

அவ்வாசத்தை சுவாசத்தில் நிரப்பி நின்றவர்களைத் தெறித்து ஓட வைத்தது அவ்வீட்டுப் பெரிய மனுசியின் கழுகுப் பார்வை.

 

காவி நிறத்தில் பின்கொசுவமிட்டு கட்டப்பட்டிருந்த புடவை, வெண்பஞ்சு போல் நரைத்த முடி, அதோடு போட்டி போட்டது நெற்றியில் இருந்த திருநீற்றுப் பட்டை. தன்னிரு கைகளிலும் கால்களிலும் கடல் சரம், வங்கி என வகை வகையாய் பச்சை குத்தப் பட்டிருக்க, வெற்றிலை பாக்கு உலக்கையை வைத்து ‘டொக் டொக்’ என இடித்தபடி திண்ணையில் அமர்ந்திருந்தார் அவர்.

Advertisement

 

Advertisement

வேலாத்தா! முத்துச்சாமியின் அன்னை. வயது அறுபதிற்கும் எழுபதிற்கும் இடையில் ஏதோ ஒன்று. அவரது சொல்லுக்கு அங்கு மறுசொல் என்பது இதுவரையில் கிடையாது. மற்றவருக்கு வேண்டுமானால் மறுத்து பேசும் உரிமை மறுக்கப் பட்டிருக்கலாம், ஆனால் அவரது மருமகளான மரகதவள்ளிக்கு பேசும் உரிமையே முற்றிலும் மறுக்கப் பட்டிருந்தது.

 

பல ஏக்கர் சொத்துக்கு அதிபதியான முத்துச்சாமிக்கு திருமணம் முடிக்க எண்ணிய வேலாத்தா, அவர்களது தகுதிக்கேற்ப பெண் தேடி அலைந்து எதுவும் பொருந்தாது போய்விட, மகனிற்கும் வயது ஏறிக்கொண்டு செல்வதைக் கண்டு இறுதியில் உள்ளூரிலேயே மரகதவள்ளியைப் பேசி முடித்தார்.

Advertisement

 

மரகதவள்ளியின் ஏழ்மை நிலை அவரை பெரிதாய் முகம் சுளிக்க வைத்தாலும் ஜாதகம் பொருந்திப் போன ஒரே காரணத்தால் அவரே இறங்கி வந்து தன் மகனுக்கு மணம் முடித்து வைத்தார்.

 

வம்சம் தழைக்க அவர் மூலம் ஒரு பெயரனை எதிர்பார்த்தார். அப்படி பெயரன் பிறந்திருந்தால் மரகதத்திற்கு கொஞ்சம் மதிப்பும் மரியாதையும் கிட்டியிருக்கக் கூடுமோ என்னவோ ஆனால் பிறந்தது பெண் பிள்ளையான அரும்பு.

 

மகன்களைப்  பெறும் மகராசிகளுக்குக் கிடைக்கும் வரவேற்பு ஏனோ சில இடங்களில் மகள்களைப் பெறும் மாகாலட்சுமிகளுக்குக் கிடைப்பதில்லை. அன்று துவங்கிய மாமியார் ஆட்சியும் மருமகளின் அடிபணிதலும் இன்றுவரையிலுமே அங்கு தொடர்கிறது.

 

தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு எல்லாம் தண்ணீர் பாய்ச்சிவிட்டு அப்போது தான் உள்ளே வந்தாள் அரும்பு. வேலாத்தாளின் பார்வை அரும்பின் மேல் படிய,

 

[the_ad id=”6605″]

 

 

 

‘என்ன கெழவி குறுகுறுன்னு பாக்குது’ என அவரைக் கடந்து உள்ளே செல்ல முயன்றபோது,

 

“என்ர குடும்பத்துக்குன்னு வந்து வாய்க்குறது பூராம் ஆகாவலிகதேன். ஒன்னாச்சும் உருப்படியா இருக்குதுகளா. எல்லாம் நான் வாங்கி வந்த வரம் அப்படி” என்று சத்தமாய் சொல்லியபடி உலக்கையைப் போட்டு இடித்தார்.

 

அவளையும் அவள் அன்னையையும் தான் ஜாடையாய் கூறுகிறார் என்று புரிய உள்ளுக்குள் பற்றிக்கொண்டு வந்தது அரும்பிற்கு. அதே வேகத்தில்,

 

“யாரை ஆத்தா சொல்லுறீங்க உங்க மகனையும் மகளையுமா?” என நக்கலாய் கேட்டுவைத்தாள்.

 

“இந்த லோலாயம் எல்லாம் என்ர கிட்ட பேசுனா பவுட்ட பேத்துப்புடுவேன் சாக்கரத. உன்ர அம்மாக்காரி என்ன இன்னுமா சோறு பொங்கிப் போடுறா?” என அரும்பிடம் காய்ந்தவர்,

 

“என்ர மவன் நேரங்காலமே தோட்டந் தொரவெல்லாம் போய் பாக்க வேண்டாமா? சட்டுபுட்டுன்னு எடுத்து வெய்க்க சொல்லு கண்ணு” என உடனே தன்மையாய் பேசினார்.

 

பச்சோந்திக்கும் வேகமாய் அவர் நிறம் மாறியதை அவள் புரியாது பார்த்தபோதே,

 

“அதான் அப்பத்தா சொல்லுறாங்கல்ல என்னனு போய் பாரு” என அவளுக்கும் பின்னால் இருந்து முத்துச்சாமியின் குரல் முந்திக்கொண்டு வந்தது.

 

உடனே வாய்க்கு தடை போட்டவள், மெல்லத் திரும்பி அவருக்கு தலையசைத்துவிட்டு அமைதியாய் உள்ளே வந்துகொண்டாள்.

 

முத்துச்சாமியிடம் அரும்புக்கு சற்று பயம் அதிகம். அவர் வாய் பேசுவதைக் காட்டிலும் அவர் கை தான் அதிகம் பேசும். அதுவும் அவர் அன்னைக்கு எதிராக வாயைத் திறந்தாலே யார் என்றெல்லாம் வைத்துப் பார்க்க மாட்டார். தயவு தாட்சண்யம் இன்றி பெல்டைக் கழற்றி விடுவார். கையோ காலோ வீங்காத வரையில் பெல்ட் திரும்ப அவர் இடுப்பில் ஏறாது. அப்படி ஒரு தாய்ப்பாசம் அவருக்கு.

 

அரும்பு சமையல் கட்டினுள் புக, மரகதம் வேர்க்க விருவிருக்க அனைத்தையும் தயார் செய்து எடுத்து வைத்துக் கொண்டிப்பதைக் கண்டாள்.

 

“வெளிய அந்த அண்டங்காக்கா கத்திகிட்டே இருக்கு சீக்கிரம் சோத்தப் போடுமா” என்று முகத்தை திருப்பிக் கொண்டு நிற்க,

 

“காக்காய்க்கு தனியா சாப்பாடு எடுத்து வெச்சிட்டேன். நீ போய் ஓட்டு மேல தண்ணி தொளிச்சு வெச்சிட்டு வந்திரு கண்ணு. நெற கொடத்து தண்ணியா பார்த்து மோந்துட்டு போ” என்று நில்லாமல் சொல்லியபடி பரபரக்க வேலை செய்து கொண்டிருந்தார் மரகதம்.

 

“நான் சொன்ன அண்டங்காக்கா உன்ர மாமியாரு”

 

“வயசுல பெரியவங்களை இப்படி மட்டு மரியாதை இல்லாம பேசக்கூடாது அரும்பு” என கண்டிக்க,

 

“அவங்க மட்டும் பெரியவங்க மாதிரி நடந்துக்குறாங்களா? நானும் பொறந்ததுல இருந்து பாக்குறேன் இன்னும் எத்தனை நாளைக்கு தான் உன்னையவே குறை சொல்லிக்கிட்டு இருக்கப் போறாங்க? நீயும் எத்தனை நாளைக்கு இப்படியே அமைதியா பொறுத்து பொறுத்து போவமா? அப்பா ஒன்னையும் கண்டுக்கப் போறதில்ல. அவருக்கு அவரு அம்மா சொல்லறது மட்டும் தான் வேதம். என்னிக்காவது உனக்கோ எனக்கோ பரிஞ்சு பேசியிருப்பாரா?”

 

“விடு கண்ணு. நேரம் ஆச்சு உன்ர அப்பா தோப்புக்கு போகோணும். அவரை சாப்பிட வரச்சொல்லு. நான் போய் உன்ர அப்பத்தாவுக்கு வாழை இலை அறுத்துட்டு வந்துர்றேன்” என லேசாய் புன்னகைத்துவிட்டு நகரச்செல்ல, அவர் கைப்பிடித்து நிறுத்தியவள் எதுவும் பேசாது அவரையே பார்க்க,

 

“ஏன் கண்ணு அப்படி பாக்குற” என்றார் அதே புன்னகை மாறாது.

 

“என்னிக்குதான் உனக்காக வாழப் போறையோ”

 

“என்ர வாழ்க்கை இப்படி தான் கண்ணு. பழகிப்போன ஒன்னு. கடைசி வரைக்கும் நான் இப்படியே வாழ்ந்துட்டு போயிருவேன். ஆனா உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையோணும். நான் கும்புடுற சாமி உன்னைய நல்லா வாழ வெச்சா அது ஒன்னு போதும் எனக்கு” என்று அவள் கையை அழுந்தப் பற்றிவிட்டு பின் வாழை இலை அறுத்து வரச் சென்றார்.

 

வேலாத்தாளிற்கு மகன் முத்துச்சாமியை அடுத்து ஒரு மகளும் உள்ளார். பெயர் சரோஜினி. தன் கணவர் ரத்தினசாமியுடன் அயலூரில் வசிக்கிறார். அவரது மகன் தேவராஜனுக்கு அரும்பை மணம் முடித்துவைக்க பல ஆண்டுகாளாகவே திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறார் வேலாத்தா. அதில் கொஞ்சம் மனம் உடைந்து தான் காணப்பட்டார் மரகதம். அவராய் அதை வெளிப்படையாய் பகிரவில்லை என்றாலும் கூட, இது தான் அன்னைக்கும் தனக்கும் இருக்கும் பிரச்சனைகளில் தலையாய பிரச்சனை என்று அரும்பும் அறிவாள்.

 

“என்ன கண்ணு இன்னும் இங்கயே நின்னுட்டு இருக்க, சட்டுன்னு அப்பா சாப்புடற வட்டலை எடுத்து வெய்யு” என்ற அன்னையின் குரலில் நினைவுக்கு வந்தவள் வேகமாய் தன் தந்தையை அழைத்துவந்து அவர் உணவருந்தும் தட்டை எடுத்துவைத்துப் பரிமாறினாள்.

 

[the_ad id=”6605″]

 

 

 

முத்துச்சாமி உணவருந்திவிட்டு தோட்டம் சென்றதும் வேலாத்தாள் உணவருந்த வர, வாழை இலையை விரித்தார் மரகதம்.

 

“நல்லா அம்மிக்கல்லு ஆட்டாங்கல்லுனு மொளகரச்சு வைக்காம மிக்கிசி கிக்கிசினு என்னத்துல அரச்சு வெச்சாளோ கறிக்குழம்புல ஒரு மணமும் இல்ல. அரவேக்காடு. நாட்டுக் கோழி கொஞ்சங்கூட வேகவே இல்ல. ஏழு மணி நேரமா என்னத்ததேன் சமைச்சாளோ ஒன்னத்தையும் வாயில வைக்க முடியல” என புலம்பியபடி உண்டு கொண்டிருந்தார் வேலாத்தாள்.

 

அனைத்தும் பழக்கப்பட்டுப் போனதால் மரகதம் அமைதியாய் நின்றிருக்க,

 

‘வேகல வேகலைன்னு ஏழு எட்டு கோழி காலை உள்ள தள்ளிட்டு எங்கம்மாவை பேசுது பாரு பெருசு’ எனப் பார்த்திருந்தாள் அரும்பு.

 

அப்பத்தா அங்கிருந்து சென்ற சிறிது நேரத்தில் அவர் உண்ட இலையை எடுத்துப் போடச் சென்ற அன்னையிடம் வந்தவள்,

 

“ம்மா! குலசேகரன் மாமாவுக்கு கறிக்கொழம்பு கொடுத்துவிடுறியா? உங்கையால வைக்குற கொழம்புனா அதுக்கு உசுரு. நல்லா சாப்புடும்” என்று கூற,

 

“உன்ர அப்பாவுக்கோ இல்ல அப்பத்தாவுக்கோ தெரிஞ்சா தேவையில்லாத பிரச்சனை கண்ணு” என்றார் மரகதம். அவருக்கு தெரியாதா தன் கையால் சமைத்ததை தன் தம்பி விரும்பி உண்பான் என. இதைக் கொண்டே வீட்டில் பெரிய பிரச்சனைகள் வரக்கூடும் என்று எண்ணி கவலை கொள்ள,

 

“தெரிஞ்சா தானே! நம்மூட்டு கிழவி இப்போ தானே கறிசோறு சாப்டுட்டு போயிருக்கு. இனி நல்லா கொட்டப் பாக்கும் கோயம்புத்தூரு கொழுந்து வெத்தலையும் போட்டுக்கிட்டு பொரச் பொரச்சுனு வாசல்ல துப்பிக்கிட்டு இருக்கும். அது துப்பி முடிக்கிறதுக்குள்ள நான் போய்ட்டு வந்திடுறேன்” என்றாள் மகள்.

 

“இல்ல கண்ணு..” என்று அவர் தயங்க,

 

“மசமசன்னு நிக்காம நீ தூக்குப்போசில ஊத்தி கொடும்மா, அப்பா திரும்பி வர்றதுக்குள்ள பின் பக்க மதிலேறிக் குதிச்சு நான் சட்டுன்னு போய் மாமாவூட்டு திண்ணைல வெச்சிட்டு வந்திடறேன்” என்றாள்.

 

“என்ன மதிலேறி குதிக்குறையா?”

 

“ப்ச்.. அது ஒரு வேகத்துல சொல்லிட்டேன். நீ சட்டுன்னு கொடும்மா. நான் அலுங்காம பின் பக்க வாசல் வழியாப் போய்க்குறேன்” என்று சொன்ன சில நொடிகளில் மரகதம் கொடுத்ததை வாங்கிக்கொண்டு, குலசேகரனின் வீட்டை நோக்கி நடையிட்டாள்.

 

காலையிலேயே சூரியன் பகவான் சுட்டெரிக்க ஆரம்பிக்க, கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்த ரங்கநாயகி உடனே அரசியை எழுப்ப வந்தார். மெல்ல அவள் தோளில் கைவைத்து அசைத்து எழுப்ப,

 

“ப்ளீஸ் அத்தை. ரொம்ப குளுருது. கொஞ்ச நேரம் தூங்கிக்குறேன். மாமாவை மத்தியானமா என்னைக் கொண்டு போய் காலேஜ்ல விட சொல்லுங்க” என்று திரும்பிப் படுத்தாள்.

 

‘காலேசுக்கு மத்தியானமா போறாளா! அப்போ குண்டன்லையும் போய் படிக்காம லதாவையும் ராமசாமியையும் ஏய்ச்சுகிட்டு தான் இருந்தாளா’ என்று எண்ணியபடி,

 

“ஏய் சின்னக் குட்டி! உங்கப்பன் வர்றதுக்குள்ள எந்திருச்சு ஓடு” என அவளைத் தட்டினார்.

 

“அவரை இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு வரச்சொல்லுங் ஆத்தா” என இழுத்துப் போர்த்தி தூங்க,

 

“குண்டனுல இருந்து இப்போ சிங்காநல்லூர்ல இருக்குற நம்மூட்டுக்கு வந்துட்டியா? உன்ர அப்பத்தாளை அடையாளம் தெரியுதா கண்ணு? கண்ணை தொறந்து பாரு”

 

“ப்ச்.. அது குண்டன் இல்ல லண்டன்” எனக் கண் திறவாமலே கூற,

 

“உங்கப்பன் வயல் வரைக்கும் போயிருக்கான். திடுதிப்புன்னு வந்து நிப்பான். காலைலயே அவன்கிட்ட பேச்சு வாங்கிக்கிட்டு இருக்காத சாமி. பொட்டப் புள்ளைக சூரிய உதயத்துக்கு முன்னால எந்திரிக்கிற வீட்டுல தான் ஸ்ரீதேவி தாங்குவா இல்லைனா அவ அக்கா மூதேவி வந்து உக்காந்துக்குவா கண்ணு. எந்திரி சாமி என்ர தங்கமயிலல்லோ” என செல்லம் கொஞ்சி அவளை ஒருவழியாக எழுப்பி குளியலறைக்குள் தள்ளிவிட்டு வந்தார்.

 

அவள் குளித்து முடித்து வரவும் ஆறுச்சாமியும் வயலில் இருந்து திரும்பியிருந்தார்.

 

உடை விசயத்தில் நேர்த்தியாய் இருக்க வேண்டும் அவருக்கு. ஜீன்சை எல்லாம் தூக்கிப்போட்டு சுடிதாருக்கு மாறி இருந்தாள். மறக்காது துப்பட்டா அணிந்திருந்தாள். தலையைப் பின்னியிருந்தாள். அனைத்திற்கும் மேலாக அப்பத்தாவின் ஐடியாப் படி நெற்றியில் விபூதி பூசிக்கொண்டு நல்ல பிள்ளையாய் காலை உணவிற்காகக் காத்திருந்தாள்.

 

கை, கால் அலம்பி வந்த ஆறுச்சாமி அவளை உற்றுப் பார்த்தபடியே அவள் அருகில் அமர,

 

‘விபூதி நல்லா ஃபோகஸ் ஆகுது போல. தெரியட்டும் தெரியட்டும்’ என தட்டைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அரசி. திருநீறை தண்ணீரில் கரைத்து நெற்றியில் வைத்திருந்தாள், ஆறுச்சாமி வரும் போது நன்றாக தெரியவேண்டும் என்பதற்காகவே.

 

உணவை முடித்துக்கொண்டு ஆறுச்சாமி திரும்ப தன் வயலுக்குக் கிளம்பிவிட, வீட்டின் முன்பிருந்த வராண்டாவில் தன் அப்பத்தாவோடு அமர்ந்து பல்லாங்குழி ஆடிக் கொண்டிருந்தாள் அரசி.

 

டிரைவர் மணியன் அவர்களது காரைத் துடைத்துக் கொண்டிருப்பதை எதேர்ச்சையாய்க் கண்டாள். அவள் இங்கிருந்து சென்ற பின் தான் கார் வாங்கியிருந்தனர். அதன் பின் தான் மணியனையும் டிரைவர் வேலைக்கு சேர்ந்திருந்தார் ஆறுச்சாமி.

 

[the_ad id=”6605″]

 

 

 

“தமிழை தினமும் வெளிய கூட்டிட்டு போய்ட்டு வர்றதுக்கு தான் இவரை வேலைக்கு வெச்சிருக்காராங் அப்பா?” என்று கேட்க

 

“அவ எங்க காருல போறா! காலேசுக்கு படிக்க போன காலத்துல இருந்து அன்னாடும் பஸ்சுல தானே போறா” என்றார் நாயகி.

 

“ஏன் நம்ம கார் சும்மா தானே நிக்குதுங் ஆத்தா. இவரு வேற சும்மா நிக்குற காரை சும்மா சும்மா துடச்சுகிட்டே இருக்காரு” என மணியனைப் பார்த்தவள்,

 

“தமிழ் ஏன் பஸ்ல போறாங் ஆத்தா?” என்றாள் தன் அப்பத்தாவிடம்.

 

“அங்க படிக்குற புள்ளைக எல்லாம் தினக் கூலிக்காரங்க புள்ளைகளாமா கண்ணு. நம்ம கிட்ட பெரிய வண்டி இருக்குதுங்கறதுக்காக அதுல போய் பந்தாவா இறங்கி அவங்க மனசுல ஏக்கத்தை வர வெச்சிடக் கூடாதுன்னு சொல்லிட்டா உன்ர அக்கா. அவசரத்திற்கும் பஸ்சு வசதி இல்லாத நேரத்துல மட்டும் தான் நம்ம வண்டில போவா. அவ பேச்சை கேட்டுகிட்டு உங்கப்பனும் அவளை பஸ்சுலயே போக சொல்லிட்டாங் கண்ணு”

 

தமிழ் எப்போதும் இப்படித்தான். பிறர் நிலையில் இருந்து யோசித்து வாழ்ந்தே பழகிவிட்டாள். கொட்டிக் கிடந்தாலும் எதையும் அனுபவிக்க மாட்டாள். அவள் குணம் தெரியுமென்பதால் அரசியும் அதை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை.

 

“அப்பறங் கண்ணு நம்மூட்டுல வண்டி இருந்தா எதாவது அத்தவசரம்னா நாலு பேருக்கு ஒதவும் பாரு” என்றார் நாயகி.

 

இது மட்டும் முன்னரே இருந்திருந்தால் வெளியூரில் படம் பார்க்கச் செல்ல தனக்கு பயன்பட்டிருக்கும் என்று நினைத்துக் கொண்டாள் அரசி. அவள் முகத்தைக் கண்ட நாயகியோ,

 

“தமிழு இல்லாம உனக்கு பொழுது போக மாட்டிதா கண்ணு? நீயும் அவளை மாதிரி நம்மூருல இருந்து படிச்சிருந்தா இந்நேரம் அவகூடயே வேலைக்கு போயிருக்கலாமல்லோ. இப்படி வேல வெட்டி இல்லாம உக்காரத்தேன் வெளிநாடு போய் படிச்சுப்போட்டு வந்தியா” என்று கேட்க,

 

அவரை ஆழமாய் பார்த்தவள்,

 

“ஒரு டாக்டரை பாத்து கேக்குற கேள்வியாங் ஆத்தா இது? வந்ததுமே வேலையை ஆரம்பிக்க வேண்டாம் கொஞ்ச நாள் போகட்டும்னு தான் அமைதியா இருக்கேன். அப்பறம் பாருங்க அடங்காத எத்தனை பேருக்கு ஊசி குத்தி அடக்கப் போறா இந்த அரசின்னு” என்று நம்பியார் போல் கையைப் பிசைந்துகொண்டு சொல்ல, என்ன செய்யக் காத்திருக்கிறாளோ என நாயகிக்கு உள்ளுக்குள் லேசாய் பதறியது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!