Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Manathodu Manvaasam

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 6.2

 

சிறிது நேரத்திற்கு முன் தன்வீட்டில் இருந்து கிளம்பிய அரும்பு, குலசேகரனின் வீட்டின் முன்பு நின்றிருந்தாள்.

 

மூங்கில் பட்டைகளால் அமைக்கப் பட்டிருந்த கதவைத் தள்ளிக்கொண்டு மெல்ல உள்ளே எட்டிப் பார்த்தாள். குலசேகரன் வீட்டிற்கு அந்தக் கதவே போதுமானதாய் இருந்தது. காரணம், உள்ளே வெள்ளையன் காவலுக்கு இருந்தான்.



Advertisement

 

வெள்ளையன்! ராஜபாளையம் வகை நாட்டு நாய். அவனை மீறி அவன் அனுமதியின்றி ஒருவர் உள்ளே நுழைவதென்பது நடவாத காரியம்.

 

Advertisement

குலசேகரன் இல்லாத நேரத்தில் அவ்வீட்டினுள் வெள்ளையன் அனுமதிக்கும் ஒரே ஆள் அரும்பு மட்டுமே. எப்போதும் போல் இன்றும் அரும்பைக் கண்டதும் அவன் வாலை ஆட்டிக் குறைக்க,

Advertisement

 

“ஷ்! டேய் வெள்ளையா அமைதியா இருடா. இப்படி கத்தி என்னைய மாமா கிட்ட மாட்டி விட்டுறாத” என்றபடி மெல்ல கேட்டைத் திறந்து உள்ளே வந்தவள், அவன் தட்டில் கொஞ்சம் எலும்பை அள்ளி வைத்தாள்.

 

Advertisement

அவளை நன்றியுடன் நோக்கினான் வெள்ளையன்.

 

சுற்றிலும் பார்த்தவள் குலசேகரன் வீட்டில் இல்லை என்பதை அறிந்துகொண்டு, தன் கையிலுள்ள தூக்குப்போசியை திண்ணையில் வைத்துவிட்டு மெல்ல பின்பக்கம் சென்றாள்.

 

அவளுக்கு மிகவும் பிடித்த மல்லிகைப் பூக்களும் ஜாதி முல்லைப் பூக்களும் கேட்பாரற்று பறிப்பாரற்று பூத்துக் குலுங்கிக் கிடந்தன. தாவணியின் முந்தியை முன்னால் சொருகிக் கொண்டு, அதில் பூக்களைப் பறித்துப் போட்டுக் கொண்டிருந்தாள்.

 

அடுத்த சில நிமிடங்களிலேயே வீட்டிற்கு வந்த குலசேகரன் கதவு திறந்திருப்பதைக் கண்டு வெள்ளையனைக் காண, அவனோ மும்மரமாய் தட்டில் இருந்த எலும்பைக் கடித்துக் கொண்டிருந்தான். அடுத்து வீட்டுக் கதவைக் காண, அது பூட்டியிருந்தது. அதன் அருகில் இருந்த தூக்குப்போசியும் தென்பட்டது.

 

“என்னடா வெள்ளையா தூக்குபோசி திண்ணைல இருக்கு, உன்ர தட்டுல எலும்பு கிடக்கு, எங்கக்கா மக வந்தாளாக்கும்?” என்றதும் வெள்ளையன்  சன்னமாய் கத்திக்கொண்டு வாலை ஆட்ட,

 

“உன்னைய நம்பி வீட்ட விட்டுட்டு போனா நீ அந்த எலியை உள்ளார விட்டுட்டு எலும்பைக் கண்டதும் ஆட்டம் போட்டுட்டு இருக்க” என்றதும் உடனே எலும்பை நக்குவதை விட்டுவிட்டு வெள்ளையன் குறைத்தான்.

 

“அவ கிட்ட இருந்து நாலு கிலோ கறியை எடுத்திருந்தா நாளப்பின்ன இந்தப் பக்கமே எட்டிப் பார்த்திருக்க மாட்டா. நீ என்னடானா அவ போடற எலும்புக்கு ஆசைப்பட்டு எனக்கே துரோகம் பண்ணுற” என்று பேசிக் கொண்டிருக்க, வெள்ளையன் அவனுக்கும் பின்னால் பார்த்து சன்னமாய் கத்தியபடி, முன்னங்கால்களைத் தூக்கி பின்னங்கால்களால் நின்றபடி, வாலாட்டிக் கொண்டிருந்தான்.

 

அவன் செய்கை கண்டு தனக்குப் பின்னால் திரும்பிய குலசேகரன் அங்கிருந்தவளைக் கண்டு லேசாய் அதிர்ந்தான். அரும்பு அவனை கடித்துக் குதறுவது போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

உடனே தன்னை சமாளித்துக் கொண்டு,

 

“உன்னைய தான் இங்க வரக் கூடாதுன்னு சொல்லி இருக்கேனல்லோ, அப்பறம் என்னத்துக்கு வந்த?” என்று சட்டமாய் கேட்க,

 

“இது எங்க அம்மச்சி வீடு. என்னைய வரக்கூடாதுன்னு சொல்லுறதுக்கு எந்த நாய் சேகருக்கும் உரிமை இல்லைன்னு சொல்லுடா வெள்ளையா” என்றாள் வெள்ளையனிடம் சட்டமாய்.

 

[the_ad id=”6605″]

 

 

 

“என்னடி சொன்ன?” என்றவனது கடுமையான குரலில் தான் சொன்னதை உணர்ந்தவள்,

 

“அது வந்துங் மாமா..” என்று யோசித்து உடனே வெள்ளையனை கைகாட்டி,

 

“இந்த நாய்க்கு உரிமையாளர் சேகரனுக்கு என்னைய இங்க வரக் கூடாதுன்னு சொல்ல எந்த உரிமையும் இல்லைன்னு சொன்னேனுங் மாமா” என்றுவிட்டு உடனடியாக அங்கிருந்து கிளம்பிக்கொள்ளும் வழியைப் பார்த்தாள்.

 

அவள் கூறியதில் லேசாய் புன்னகைத்தவன்,

 

“உங்கூட்டு தூக்குபோசிய கையோட தூக்கிட்டுப் போடி. அப்பறம் உங்க சொத்தையே நாஞ்சுருட்டிட்டேன்னு உங்கப்பன் மீசை சொல்லப் போறாரு” என்று குரல் கொடுக்கத் திரும்பியவள்,

 

“செம்பு பாத்திரத்துக்கு இத்தனை சீன் தேவையில்ல மாமோய்! அது என்ர சீருக்கு நீங்க சீர் செஞ்சதுதேன். நீங்களே வெச்சுக்கோங்க. அதுக்கு பதில் உங்கூட்டு மல்லியையும் முல்லையையும் எடுத்துட்டு போறேன்” என்றாள்.

 

“பூவை திருடிகிட்டா போற? திருடி”

 

“பூவெல்லாம் எங்களை மாதிரி பூச்சூடுற பூவைகளுக்காக பொறந்தது. உங்கள மாறி புருஷர்களுக்கு எதுக்கு பூவு? ஒருவேள காதுல வெச்சுக்கப் போறீங்களோ!” என்று கேட்ட நொடி அவன் இரண்டடி முன்னாள் எடுத்து வைக்க, அவள் இரண்டடி பின்னால் நகர்ந்து ஓடத் தயாராக,

 

“ஏய் வேலாத்தா பேத்தி நில்லுடி” என அவன் அருகில் வருவதற்குள்,

 

“உங்கம்மா தங்காத்தாளுக்கும் நான் பேத்திதேன் தான் மாமா. அதைய மறந்துறாதீங்க” என்றுவிட்டு ஓடியேவிட்டாள்.

 

சின்ன சிரிப்புடன் திரும்பியவன் ஏதேதோ நினைவுகளில் சில நொடிகள் நின்று நீந்திய பின், அவள் கொண்டு வந்ததை சுவைக்கச் சென்றான்.

 

ல்லாங்குழி ஆட்டம் அப்பத்தாவிற்கும் பேத்திக்கும் இடையில் சூடு பிடித்தது. சில நொடிகளில், இரண்டு காசிக் குழிகளிலும் பாண்டியைக் கைப்பற்றிய அரசி,

 

“நான் ஜெயிச்சுட்டேன்” என்று சொல்லி அவள் புறம் புளிய முத்துக்களை நகர்த்திக்கொள்ள, அவள் விளையாட்டில் தன்னையே வென்றதை மெச்சுதலாய்ப் பார்த்திருந்தார் நாயகி.

 

அப்போது திடீரென ஊர்மக்கள் நான்கைந்துபேர் அவர்களது வாசலில் குழுமினர். பதற்றமாய் உள்ளே வந்த பெண் ஒருவர்,

 

“அம்மா! எம்புள்ளைக்கு பிரசவ வலி வந்திருச்சுங்மா, அவசரமா பொள்ளாச்சி பெரியாஸ்பத்திரிக்கு போகணுமுங். இந்நேரத்திற்கு பஸ்சும் இல்லைங் ஆம்புலன்சுக்கு தகவல் சொல்லியும் வர நேரமாகும் போலங். தயவு செஞ்சு உதவி பண்ணுங்கம்மா” என்று கண்ணீருடன் கேட்க,

 

“டேய் மணியா வண்டி எட்றா. இவங்களை கொண்டுபோய் பெரியாஸ்பத்திரில உட்டுட்டு வா” என்று உடனே மணியனை நோக்கி குரல் கொடுத்தார் நாயகி.

 

“அம்மா பெரியய்யா கிட்ட..” என மணியன் ஆரம்பிக்க,

 

“அதெல்லாம் உன்ர பெரியய்யா கிட்ட நாஞ்சொல்லிக்குறேன். நீ மொதல்ல கெளம்பு. அவசரமில்லாம கூட மாட இருந்து பார்த்துட்டு வா” என்றவர் அந்தப் பெண்ணிடம் திரும்பி,

 

“செத்த பொறு வந்தர்றேன்” என்றுவிட்டு உள்ளே சென்று பணம் எடுத்துவந்து கொடுக்க,

 

“ரொம்ப நன்றிங் மா” என கையெடுத்து கும்பிட்டுச் சொல்ல,

 

“அதெல்லாம் ஒன்னுமாகாது பயப்படாம போய்ட்டு வாங்க. எல்லாம் செல்லாண்டியாத்தா பாத்துப்பா. எதாவது உதவி வேணும்னா தயங்காம என்ர கிட்ட வந்து கேளுங்க. போங்க, புள்ளைய சீக்கிரம் கூட்டிட்டு போங்க” என அனுப்பிவைத்தார் நாயகி.

 

அரசி அனைத்தையும் அமைதியாய் பார்த்திருந்தாள். யாருமே பயன்படுத்தவில்லை என்றால் அனாவசியமாக கார் எதற்கு என்று தான் எண்ணியிருந்தாள். இப்போது புரிந்தது, எதற்காக வண்டியை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கிறார் மணியன் என்று.

 

பல்லாங்குழியில் அடுத்த ஆட்டையைத் துவங்குவதற்காக புளிய முத்துக்களை நிரப்பிக் கொண்டிருந்த அரசி, வாசலில் கேட்ட புல்லெட் சத்தத்தில் தன் பார்வையை விரைந்து திருப்பினாள்.

 

அங்கு விக்ரமனும், பருவக்காரரும் (நெல் வயல்களை கண்காணிப்பவர்) உள்ளே வந்துகொண்டிருந்தனர். களை பறிக்க ஆட்களை உடனடியாக கூட்டிச் செல்லும்படி ஆறுச்சாமி தெரிவித்ததாய் மாடசாமியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் பருவக்காரர்.

 

[the_ad id=”6605″]

 

 

 

“ஆத்தா! வேலை ஆளுகளுக்கு கொடுக்க, மாமா பணம் வாங்கிட்டு வர சொன்னாருங்” என ஒரு தொகையை குறிப்பிட்டு, அரசி என்றொருத்தி அங்கு இருப்பதையே கண்டுகொள்ளாதவன் போல் நாயகியிடம் கூறினான் விக்ரமன்.

 

“இந்தா எடுத்தாறேன் இரு கண்ணு. நீ உள்ளார வந்து உக்காரு” என அவனிடம் சொன்னவர்,

 

“அரசி! விக்ரமன் மச்சானுக்கு தண்ணி மோந்து கொடு” என்று பேத்தியிடம்  தெரிவித்துவிட்டு நகர, அவளோ அப்படியே அசையாது நின்றிருந்தாள். விக்ரமனும் உள்ளே செல்லாது அங்கேயே நின்றிருக்க,

 

“ஹெலோ! லட்சுமி இன்னிக்கே எங்க வீட்டுக்கு வந்தாகணும்” என்றாள் கட்டளையாய்.

 

அதில் அவள் புறம் பார்த்தவன்,

 

“எங்க அம்மாவை எல்லாம் ஆரு வீட்டுக்கும் அனுப்ப முடியாது. வேணும்னா நீ வந்து பாத்துப்போட்டு போ” என, முதலில் புரியாது பார்த்தவளுக்கு பின் புரிய வந்ததும் லேசாய் புன்னகை அரும்பியது.

 

விக்ரமனின் அன்னையின் பெயரும் லட்சுமி தான். அவர் முத்துலெட்சுமி. ஆனால் அரசி அவளது மாட்டைக் குறிப்பிட்டு சொல்ல, அவன் வேண்டுமென்றே அப்படி பதிலுரைத்திருந்தான்.

 

அப்போது தான் விக்ரமன் அவள் முகத்தை சரியாக கவனித்தான். சில நொடிகள் அவள் முகத்தையே பார்த்திருக்க,

 

‘எதுக்கு இப்படி பாக்குறாரு’ என அவளும் அவனைப் பார்த்திருந்தாள்.

 

அவன் கண்களில் கேலி தெரிய, இதழ்கள் சிரிப்பை அடக்கியது போல் பட்டது அரசிக்கு. அந்நேரம் பார்த்து அரசி ஊர் திரும்பிய செய்தியை சூப் கடை சுப்பாத்தாள் மூலம் அறிந்த சிலர், அவளைக் காண நாயகியின் இல்லத்திற்கு வருகை புரிந்தனர்.

 

அதற்குள் பணத்தோடு வெளியே வந்த நாயகி, அதை விக்ரமனிடம் அளித்துவிட்டு,

 

“நம்ம அரசி நேத்து தான் ஊருல இருந்து வந்தா விக்ரமா” என்று அவனுக்குத் தெரியாதென நினைத்து இயல்பாய் சொல்ல,

 

“மாமாகிட்ட நம்மூட்டு மதில் எல்லாம் இன்னும் கொஞ்சம் வளத்தியா வைக்க சொல்லோனும்ங் ஆத்தா” என்றுவிட்டு அரசியின் முகத்தை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு நகர்ந்தான்.

 

“என்ன சொல்லிட்டு போறான் இந்த விக்ரமன்” என நாயகி யோசனையோடு பார்த்திருக்க, அரசி திருதிருத்தாள்.

 

அப்போது அவர்களை நெருங்கிய நாயகியின் தோழிமார்களில் ஒரு பெருசு அரசியை மேலும் கீழும் கவனித்துவிட்டு,

 

“இதான் வெளிநாட்டுக்கு படிக்கப் போன அம்மணியா? பாத்தா அப்படி ஒன்னும் தெரியலையே! பளபளன்னு பாலிஷா வரும்னு பார்த்தா இப்படி பட்டைய போட்டுட்டு இல்ல வந்திருக்கு” என்று கேட்கவும் தான் நினைவு வந்து தன் நெற்றியை அழுந்தத் துடைத்தாள் அரசி. ஆறுச்சாமிக்காக போட்ட பட்டையை அழிக்க மறந்திருந்தாள்.

 

[the_ad id=”6605″]

 

 

 

‘ஏன் ஆத்தா என்ர நெத்தியில ஏழு மொழ நீளத்துக்கு திருநீறு இருக்குதுன்னு சொல்ல மாட்டீங்களா’ என நினைத்து நாயகியை முறைக்க,

 

அவள் முறைப்பது கண்டு அவரோ தன் தோழிமார்களிடம்,

 

“அட சும்மா இரு ராமாத்தா. எம்பேத்தி டாக்குடருக்கு படிச்சிருக்கா. மொதோ ஊசிய உனக்கு குத்திறப்போறா” என்றதும் வாயடைத்துப் போய் நின்றிருந்தனர் அனைவரும்.

 

‘அத்தக்கருப்பன் முன்னாடியா இப்படி ஆகணும். ச்சை’ என அரசி முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு மெல்ல வாசலைப் பார்க்க, அங்கு பருவக்காரர் வரவிற்காகக் காத்திருந்த விக்ரமனும் அவளைத் தான் பார்த்திருந்தான்.

 

இப்போது தன் சிரிப்பை அடக்காது முத்துப்பல் வரிசை தெரிய அழகாய் சிரித்தான் விக்கிரம பாண்டியன்.

 

ஓர் நொடி அவளையே மறந்துபோய் அவன் சிரிப்பை ரசித்துப் பார்த்திருந்தாள் வேங்கையரசி.

 

 

 

வாசம் வீசும்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!