42 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:1,902
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் அத்தியாயம் 42
.
ரகுவை பார்த்து நான்கு தினங்கள் கடந்திருந்தன. மேசை மீதிருந்த உடைந்த குடை ‘அவசரபட்டுடியே’ எனச் சலித்துக் கொண்டது. அன்று கிணற்றடியில் அவன் கரத்தை பார்த்தது. இரவு அம்மாவைக் காண வருவான் எனக் காத்திருக்க அவன் வரவில்லை. அடுத்த தினமும் அப்படியே செல்ல, “ரகு சென்னைக்கு போயிருக்கிறானாம். வந்ததும் மறு நாளே பெங்களூருக்கு கிளம்பறானாம். ரகு, திருச்சியில செட்டில் ஆகமாட்டான் போல இருக்குங்க. இனி எப்போங்க அவன பார்ப்போம்? கல்யாணம், குடும்பம்ன்னு அங்கயே இருந்துட்டா… அவ்வளவு தான் இல்ல?” என அம்மா, அப்பாவிடம் ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தது நாராசமாகக் காதில் விழுந்தது.
Advertisement
அவனால் அப்படி எல்லாம் தன்னை விட்டுச் செல்ல முடியுமா? ஏன் இரண்டு வருடங்களாக உன்னையா பார்த்துக் கொண்டிருந்தான்? மனம் பதில் கொடுத்தது. துக்கமோ… அலுப்போ ஏதோ வந்து ஒட்டிக் கொண்டது. கட்டி பிடிச்சதுக்கு கோபப்பட்டேன்… ரெண்டு வருஷம் காணாம போனான். மழையில நனைய வேண்டாம்ன்னு நல்லது நினைச்சு வந்தவன தள்ளிவிட்டாச்சு! இதுக்கு எத்தன வருஷமோ? பெருமூச்சு வந்தது.
“ரகு எங்க பாட்டி?” நேரடியாகவே கேட்டு நின்ற பேத்தியை வினோதமாகப் பார்த்தார் பாட்டி. “ஏன் உன்கிட்ட சொல்லலையா அவன்?”
Advertisement
“கேட்டா பதில் சொல்லாம படுத்தாத பாட்டி” என எரிந்து விழுந்த பேத்தியின் கரம் பற்றி தன் அருகில் அமர்த்தி, “என்ன கோவம் உனக்கு? சொல்லாம போயிட்டானா? சென்னைக்கு அவன் ஃப்ரெண்டு ஒருத்தனோட தங்கைக்கு கல்யாணமாம். அதுக்கு போயிருக்கான். தோ… டேபில்ல இருக்கு பாரு அந்த இன்விடேஷன். கல்யாணம் முடிஞ்சதும் வருவான்” என்றார்.
Advertisement
பத்திரிக்கையில், ‘மாலதி வெட்ஸ் கைலாஷ்’ என்ற பெயர்களோடு மற்ற திருமண விபரங்களும் பளபளத்தன.
Advertisement
“பெங்களூருல தான் வேலையா?”
“இவ யாரு டி… அது கிடைச்சுத் தான் மூணு மாசம் ஆச்சே! இன்னைக்கு தான் விஷயம் கேள்விப்பட்ட மாதிரி கேள்வியா கேட்டுகிட்டு?”
அவன் மீது எழுந்த கோபத்தை யாரிடம் காட்டுவது? இதோ அலுப்போடு உச்சுக்கொட்டுகிறதே ஒரு ஜீவன்… அதன் மீது தான். “பாட்டி!” என்றாள் பற்கள் நரநரக்க.
“ஆமா… அவன் படிப்புக்கு அங்க தான் வேலை இருக்காம். ஆறு மாசம் போகட்டும் உங்க ரெண்டு பேரையும் என்னோட அழைச்சுகிறேன்னு சொல்லி இருக்கான் என் பேரன். படிச்சுட்டான். நல்ல சம்பளத்துல ஒரு வேலையில உக்காந்துட்டான். அவன் ஆச படற பொண்ண அவனுக்கு கட்டி வச்சா… என் கொள்ளு பேத்தியோ… பேரனோ, அவன் பெத்து போடறத கொஞ்சிட்டு, நிம்மதியா கண்ண மூடுவேன்!” பேசிக் கொண்டே போனவரை பார்த்து அவள் முறைக்க,
“என்ன டி பார்வை எல்லாம் பலமா இருக்கு? கொஞ்ச நாள் தான் உன் முறைப்பு எல்லாம். பேத்தி வந்துட்டா இந்த மாதிரி எல்லாம் நீ இங்க வந்து அதிகாரம் பண்ண முடியாது தெரிஞ்சுக்கோ” என பெண்ணின் பதட்டத்தை அதிகப்படுத்தி விட்டார் பாட்டி.
கடந்த நான்கு நாள்களும் நான்கு யுகமாகக் கடந்திருக்க, இன்றாவது வருவான் என வழி மீது விழி வைத்துக் காத்திருந்தாள். இரவு உணவு முடித்து அனைவரும் படுக்கும் வரையுமே ரகுவின் அரவம் இல்லை. இரவோடு இரவாக வந்து, விடியும் முன்பே கிளம்பிவிடுவானோ? உள்ளுக்குள் பதட்டமும் அழுகையும் ஒன்று சேர வந்தது.
பதினொன்று வரை உருண்டு புரண்டவளைத் தூக்கம் தழுவ மறுத்து காத தூரம் சென்று நின்று கொண்டது. அதற்கு மேல் முடியாதவள், ரகு இருக்கிறானா எனப் பார்க்கக் கிளம்பினாள். கடந்த சில நாள்களாகவே மழை விட்டு விட்டுப் பெய்வதால் ஏசி தேவைப்படுவதில்லை. ஜன்னல் திறந்திருக்க வாய்ப்புள்ளதால் ரகுவின் அறை ஜன்னலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். குளிர் காற்றோ இருட்டோ பெண்ணை அசைத்ததாகத் தெரியவில்லை.
வானில் தான் விடிவிளக்கு இல்லை எனப் பார்த்தால், ரகுவின் அறையும் அப்படியே இருந்தது. ஜன்னல் அருகில் வந்து சேரும் முன் இருளுக்கு கண்கள் பழகியிருக்க, திறந்திருந்த சாளரம் வழியே அறையை அளவிட்டாள். கட்டிலின் முழு நீளத்திற்கும் கால் நீட்டிப் படுத்திருப்பவன் வேறு யாராக இருக்க முடியும்? அவனே தான். வந்திருக்கிறான்… நாளைச் சென்றுவிடுவான். வந்ததும் தெரியாது, செல்லப் போவதும் தெரியாது… தெரியப் படுத்தவில்லை. இனி வரமாட்டானாமே! சற்று நேரம் பார்த்தவள் வந்த வழியே கிளம்பினாள்.
தூக்கத்தைத் தொலைத்து நிலவிற்குத் துணையாகச் சுற்றுவது அவள் மட்டுமா என்ன? விழிகள் மூடியபின்னும், தன்னை தள்ளிவிட்டு மழையில் ஓடியவளைச் சுற்றி வரும் எண்ணங்களுக்கு சொந்தக்காரனும் தான். உள்ளுக்குள் இருக்கும் தவிப்பை எப்படித் தணிப்பது எனத் தெரியவில்லை ரகுவிற்கு. ஒருமுறையேனும் அவள் முகத்தைப் பார்க்க முடியாதா? இந்தப் பிரிவு நிரந்தரம் ஆகிவிடுமோ என்ற சஞ்சலத்தோடு படுத்திருந்தவனை நித்திராதேவியும் கைவிட்டிருந்தாள்.
அந்த நிசப்த வேளையில், மல்லியின் வாசமும், கொலுசின் மெல்லிய ஓசையும் ரகுவின் கவனத்தை ஈர்க்க, கண்கள் ஜன்னலின் பக்கம் சென்றன. கறுப்பாக நகரும் உருவம் கண்டு ரகு திடுக்கிடவில்லை எனப் பொய்யுரைக்க முடியாது. நொடி நேரமே என்றாலும் திக்கென்று உடல் குலுங்கி பயத்தில் மூச்சு விட மறந்தது உண்மை. ச்ச.. ச்ச… இருக்காது, என மனதை அமைதிப்படுத்தி ஜன்னல் பக்கம் வந்தான். சென்று கொண்டிருந்தவள் நின்று ஒரு முறை ஜன்னல் பக்கம் பார்வையை ஓட்டிச் சென்றாள். பின்-வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருப்பது ஏதோ ஒரு பேய் இல்லை… அவனை வசியம் செய்து தனக்குள் சுருட்டி வைத்திருக்கும் அவன் யட்சிணி தேவதை.
சில்லென அவன் உச்சி மண்டையில் ஒரு கூடை பனிக் கட்டிகளை யார் கொட்டியதோ? அடித்து பிடித்துக் கொண்டு பின் வாசலை நோக்கி ஓட்டம் பிடித்தான் ரகு. கதவைத் திறந்து கொண்டு, “பேபி… ஏய் பேபி இரு டி” என கிசுகிசுப்பாக அழைத்துக் கொண்டே அவளை நோக்கி ஓடினான். அவளுக்குக் கேட்டிருக்க வேண்டும், ஆனாலும் நிற்காது நடந்தாள். அவள் வீட்டின் பக்கவாட்டு நடைபாதையில் நடந்து கொண்டிருந்தவளின் முன் வந்து, “இருடின்னு சொன்னா கேக்க மாட்டியா பேபி?” என நடந்து கொண்டிருந்தவளின் கரம் பற்றி இழுக்க, அவன் மீதே மோதி நின்றாள்.
சுவரோடு சாய்ந்து நின்றிருந்தவன் மீது சாய்ந்து நின்றவளும் நகரவில்லை, அவனும் அவளை நகர்த்தவில்லை. அந்த நொடி, அந்த நெருக்கம் இருவருக்கும் தேவைப்பட்டது போலும், மென்மையாக அணைத்துக் கொண்டான். வாகாக அவன் அணைப்புக்குள் அடங்கி, லப் டப்பை உள்ளுக்குள் வாங்க ஆரம்பித்தாள். பேச்சுகள் இல்லா நீண்ட மௌனம். இருவருக்குள்ளும் எழுந்தடங்கும் சுனாமி உணர்வுகள். அழுகைக்கும் சிரிப்புக்கும் இடையான ஒரு நிலையில் இரு உள்ளங்களும் சிக்கித் தவித்து நின்றிருந்தன.
‘போயிடாத லகு’ என அவளின் கரம் ரகுவின் சட்டையை இறுக்கிக் கொண்டிருக்க, ‘இந்த ஜென்மம் உன் கூடத் தான்’ என அவன் கரம் அவளை அணைவாகப் பிடித்திருந்தது. இதமான தென்றல், மனதை நிறைத்த காதலி தன் கைக்குள்… வேறு என்ன வேண்டும் அவனுக்கு? மோன நிலையில் மெய்மறந்து நின்றிருந்தனர் அந்த இளம் காதல் ஜோடி.
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மேகம் மென் தூரலால் இருவரையும் தொட்டுத் தழுவியது. “மழ ஆரம்பிக்குது பேபி. உள்ள போவோமா?” என அவள் காதுக்குள் கிசுகிசுத்தான். அவனைவிட்டுப் பிரிந்தவளின் முகம் வருடி, “ரொம்ப மெலிஞ்சுட்ட பேபி” என்றான். அவள் பதில் ஏதும் கூறவில்லை. “என்ன பேபி? இன்னும் கோபமா?” எனக் கேட்டவன் முகம் பார்த்தவளின் கண்கள் உவர்ப்பு நீரால் நிரம்பி மினுமினுத்தன.
முகத்தில் விழுந்த குளிர்ந்த நீர்த் துளிகளோடு அவனின் வெம்மையாக இதழ்கள், மூடியிருந்த இரு இமைகளையும் மென்மையாகத் தீண்டி விலகின. கண்களில் ஆரம்பித்த வெம்மை உடல் முழுவதும் பரவியது. சிலிர்ப்பு இருவருக்கும் பொது.
“பேபி… நீ என் சொர்க்கம்ன்னு சொன்னா நம்புவியா?” என ஆழ மூச்செடுத்து விட்டான். மனம் அவ்வளவு நிம்மதியாக உணர்ந்தது. இரண்டு வருடக் கோபம் தொடருமோ என்ற தவிப்போடு வந்தவன் மனநிலை முற்றிலும் மாறியிருந்தது.
“அது தான் பெங்களூரு போறியோ?” என அவனைப் பார்க்க,
“அது பிழைப்பு பேபி. உன்ன பார்க்க தான ஓடி வந்திருக்கேன், அத பாரேன்” என அவன் அவளை அணைக்க, “ரொம்ப ஸ்பீடா ஓடி வந்துட்ட. ஏன் அப்படியே கிளம்ப வேண்டியது தான?” எனக் கேட்டாலும் அவன் வந்ததில் அவளுக்கு அப்படி ஒரு பூரிப்பு. பின்னே… எத்தனை முறை ‘போடா’ என்றாலும் மீண்டும் மீண்டும் வந்து நிற்கிறானே.
“என்னைத் தள்ளிவிட்டு ஓடிப்போன அந்த கண்றாவி சிடுமூஞ்சி முகத்த நினைச்சுட்டே என்னால தூங்க முடியல. அது தான் சென்னைல இருந்து அப்படியே போகாம அடிச்சு பிடிச்சு உன்ன பாக்க வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். சொல்லு… கோபம் போச்சா?” எனக் கொஞ்சிக் கொண்டிருந்தவன் மீது கோபம் இல்லை என்றாலும், அப்படி எல்லாம் அவனைச் சும்மா விடமுடியாதே. முறைத்தாள்.
“என்ன பார்வை டி இது?”
“ரெண்டு வருஷம் வரல. அப்போ எல்லாம் நல்லா தூங்கினியோ?”
“ஸ்கூல் போற பொண்ணு பின்னாடி காதல்ன்னு சொல்லிட்டு அலைய ஒரு மாதிரி இருந்துது. மேஜர் ஆகர வரை வெயிட் பண்ணுவோம்ன்னு வரத தள்ளிப் போட்டேன்… அப்பறம் தாத்தா இழப்பு… எனக்குள்ள வருத்தம்ன்னு வரல. நீ எனக்கு ஒரு கால் கூட போடல அப்போ.” புகார் வாசித்தான்.
“உன்ன நினைச்சு… நீ எப்படி தாங்கறியோன்னு நினைச்சு ஒரே அழுகை. எனக்கு என்ன சொல்லி உன்ன ஆறுதல் படுத்தன்னு தெரியல… அதுதான் பேசல ரகு. ஒரு அளவுக்கு மேல தல வலி ஜாஸ்தியாகி, எக்சாமுக்கு படிக்காம, மாத்திர போட்டுட்டு உன் ரூம்ல தான் இழுத்து மூடிட்டு படுத்துட்டேன். கிழவி நல்லா மூட்டி விட்டுச்சாக்கும்?”
அதைக் கேட்டவன் முகத்தில் புன்னகை. “படிக்காம இருக்க ஒரு ரீசன்.” எனச் செல்லமாகத் தலையில் கொட்டினான். வலிக்காத தலையைத் தேய்த்துக் கொண்டே, “லகு” என அவள் செல்லம் கொஞ்ச, “தூரல் விடற மாதிரி இல்ல. வா வீட்டுக்கு போலாம் பேபி” என கைப்பிடித்து அழைத்தான்.
“நீ உன் ரூமுக்கு போ… நான் எங்க வீட்டுக்கு போறேன். காலையில பாப்போம் பை” என்றாள்.
‘வா’ எனக் கூப்பிட ஆசை. இவன் அழைத்தால்… தயங்கினாலும் அவள் வருவாள் தான். ஆனால்… இந்த நேரத்தில் அவளை எப்படி அழைப்பான்?
“சரி… போய் படு. ஆனா காலையில ஆறுக்கு வந்திடணும். நான் பத்துக்கு கிளம்பணும்” என்றான் கரம் பற்றி.
“ம்ம்ம்” என்றவளுக்கு நகரும் எண்ணம் இல்லாது அவன் பிடித்திருந்த விரல்களைப் பார்த்து நின்றிருந்தாள். “த்த்திரும்பவும் போறியா? எஎன்னோட இருக்கவே மாட்டியா ரகு” என்றவள் தொண்டை அடைத்துக் கொண்டு வலித்தது.
கரத்தில் இதழ் பதித்தவன், “கொஞ்ச நாளைக்கு… உன் படிப்பு முடியற வரை பொறுத்துத் தான் ஆகணும். போ… குட் நைட்” என கரம் விட்டான். திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே நடந்தவளின் ஏக்கப் பார்வை அவனைப் புரட்டிப் போட்டது. தவிப்பும் பயமும் அவனுக்கு மட்டுமே என அவன் எண்ணியிருக்க, அவள் ஏக்கப் பார்வை வேறு கதை அல்லவா கூறுகிறது? இரண்டு வருடப் பிரிவு. பிரிவு நிரந்தமாகிடுமோ என எத்தனை நாள் பயந்திருப்பான்? இன்று கண்முன் நிற்கிறாள். நேசம் புரிகிறது. சேர்ந்து வாழ்வோம் எனத் தெரிகிறது. ஆனாலும்… மீண்டுமாக ஒருவரை ஒருவர் காணக் காத்திருக்க வேண்டும் என்ற எண்ணமே கசக்கிறது.
பின்னோடு சென்றவன், “ஒரே ஒரு தரம் பிளீஸ்” எனப் பின்னோடு அணைத்தான். இரண்டு வருடத் தவிப்பும் ஏக்கமும் இருவருக்குள்ளும் இருந்தாலும், ஒற்றையாய் தனித்து நின்றிருந்தவனுக்கு அதன் தாக்கம் சற்று அதிகம். ‘தனித்தே வாழ்க்கை முடிந்திடுமோ’ என்ற பாரம் இறங்கியிருந்தாலும் அது விட்டுச் சென்ற தாக்கமும் அதிகமே.
“தேங்க்ஸ் பேபி” என்றவன் ஈரக் கண்கள் அவள் தோளுக்குள் புதைந்து போனது.
“உன்ன அப்பிடியே என்னோட பெங்களூருக்குத் தூக்கிட்டு போயிடவா பேபி?” எனக் கேட்பவனிடம் ‘வேண்டாம்’ என்றா கூறப்போகிறாள்? “ம்ம்ம்” என்றாள் எந்தத் தயக்கமும் இல்லாது.
அவள் வாசத்தைத் தன் சுவாசத்தோடு ஆழ இழுத்து தனக்குள் நிரப்பிக் கொண்டவன், “ரெண்டு வருஷம் போகட்டும். டிகிரி முடிச்சதும் என் கூட என் பொண்டாட்டியா வந்துடணும் சரியா?” என அவன் எண்ணத்தை உரைத்தான்.
“இப்போ போனா… அடுத்து எப்போ வருவ?” என்றவளிடம் இருந்து விலகியவன், அவளைத் தன் பக்கம் திருப்பி, “திரும்பவும் சொல்லு” என அவள் முகத்தை வாஞ்சையோடு பார்த்தான்.
“என்னைப் பாக்க அடுத்து எப்போ வருவ?” எனத் தெளிவாகக் கேட்டாள்.
முகம் கொள்ளா புன்னகையோடு, “சாதிச்சுட்ட டி” எனக் கன்னம் பற்றி நெற்றியில் தன் இதழை ஒற்றி எடுத்தான்.
அவள் விழிகள் பெரிதாக விரிய… “எப்போ… எப்போல இருந்து இப்பிடி திக்காம பேச ஆரம்பிச்ச?”
“கவனிக்க இவ்வளவு நேரம் பிடிச்சுதாக்கும்?” எனக் கண்கள் பனிக்கக் கேட்டவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
“எப்போன்னு சரியா சொல்ல தெரியல… நீ சொல்லுவியே அதே மாதிரி, டெயிலி சத்தமா பேப்பர் படிப்பேன். கண்ணாடி பார்த்து மணிக் கணக்கா பேசுவேன். இப்போ, ஒரு வருஷமாவே ரொம்ப திக்கிறது இல்ல. ரொம்ப எமோஷ்னல் ஆனா மட்டும் கொஞ்சம் திக்குது”
“நெஜமாவே சாதிச்சுட்ட டி” என்றவன் தொண்டை அடைத்துக் கொள்ள, அவள் முகத்தைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் ரகு. அவன் இதயம் படித்த லப் டப் பாடலில் அவளும் லயித்துப் போக இன்னும் வாகாக அவனுள் புதைந்து போனாள் பெண்.
ஒரு வழியாகச் சண்டை முடிந்து சமாதானக் கொடி பறக்க, ‘நீ காதலி, நான் காதலன். நமக்குள் இருப்பது காதல். இரண்டு வருடம் காத்திருப்போம். அதன் பின் கரம் பிடிப்போம்’ என்ற உறுதியோடு ரகு பெங்களூருவை நோக்கி தன் பிழைப்பைப் பார்க்கச் சென்றான்.
காலம் யாருக்காகவும் எதற்காகவும் நிற்பதில்லை என்பதால், பந்தயக் குதிரையின் வேகத்தில் ரகுவின் நாள்கள் கடந்தன. புது இடம், புது வேலை என அவன் பகல் நேரத்தை அலுவலக வேலை இழுத்துக் கொண்டாலும், இரவு நேரம் அவர்களுக்கானதாக இருந்தது. இருவருக்கும் பேசப் பஞ்சமில்லாது விடயங்கள் இருந்தன. அப்படி என்ன? எனக் கேட்டால்…. எல்லாமே தான். ‘காலையில் பல் தேய்க்கும் போது மாமர இலைய சேர்த்துக் கூடு கட்டி இருந்த சிட்டுக் குருவி அதுல மூணு குட்டி முட்டைய போட்டிருக்கத பார்த்தேன்.’ எனத் தொடங்கி ‘இன்னைக்கு டின்னர் முடிச்சுட்டு ஐஸ் கிரீம் கடைக்கு நரேன் அண்ணனோட போனேனே’ என்பது வரை அவளுக்கும், ‘இன்னைக்கும் ஒரே வேல. தல வலிக்கவும் சீக்கிரம் வந்தேன்.’ என தொடங்கி, ‘டின்னருக்கு தாய் கோக்கனட் சிக்கன் சூப் பண்ணினேன். செமையா இருந்துது’ என அவனுக்கும் பேச இருந்து கொண்டே இருக்கும்.
“எப்போ லகு வருவ? உன்ன நேர்ல பாக்க ஆசையா இருக்கு லகு” என்ற ஏக்கத்தோடு… கொஞ்சலோடு கைப்பேசி அணைக்கப்படுவது வழக்கமாக இருந்தாலும், ஒவ்வொரு முறையும் தனக்காக ஏங்கி நிற்கும் ஜீவனுக்காக ரகுவின் இதயம் இதமாய் அடித்துக் கொள்ளத் தான் செய்கிறது. அவன் கனவு வாழ்வு அவன் முன் நிற்கிறது. அவள் படிப்பு முடிந்தால் போதும்… இந்த வேலையை விட்டுவிட்டு திருச்சிக்கு மூட்டையைக் கட்டி விடலாம். அதன் பின் திருமணம். அவனுக்கென ஒரு குடும்பம். அடுத்த ஒரு வருடத்தில் அம்மா அப்பாவாகப் பதவி உயர்வு. அதன்பின்… குட்டியாகத் தங்களைச் சுற்றி வரும் இவர்களின் குட்டி உலகம். தாத்தா பாட்டி, ஐயா அம்மாவோடு ஒரு கூட்டுக் குடும்பம்… நினைக்க நினைக்க ரகுவிற்கு தித்தித்தது.
‘எப்பொழுது நேரில் பார்ப்பது?’ என்ற ஏக்கம் அவளுக்கு மட்டுமா? அவனுக்கும் தானே… அதனால் அவளை அதிகம் எல்லாம் ஏங்கவிட மாட்டான் ரகு. ஆசை கரை புரள ஆரம்பித்தால், வெள்ளி இரவு பாட்டியின் முன் வந்து நிற்பவன், ஞாயிரு இரவு கிளம்புவான். “இப்படி ரெண்டு நாளுக்கு எல்லாம் வரணுமா டா?” எனப் பாட்டி கோபித்துக் கொண்டாலும், “அப்போ கிளம்பட்டா?” என அவரை அடக்கி விடுவான்.
எல்லாம் காதல் படுத்தும் பாடு என யார் அவரிடம் கூற? “இப்படி ரெண்டு நாளுக்கெல்லாம் கிளம்பி வர அளவுக்கு உன் மனசு இங்க இருந்தா… இங்க ஒரு வேலைய தேடிக்கோ. அப்படியே நம்ம தோப்பையும், நம்ம தொழிலயையும் கவனிச்சுக்கோ” என தாத்தா கண்டிப்பாகக் கூறியபின் அவனும் என்ன செய்வான்? நினைத்ததும் காரை எடுத்துக் கொண்டு திருச்சிக்குப் பறப்பதை நிறுத்திக் கொண்டான்.
இத்தனை காலமாக ஏதேனும் விடுப்பு வரும் வரை காத்திருந்து காதலியைப் பார்த்த ரகுவால் ஏனோ இன்று காத்திருக்க முடியவில்லை. இன்று காலை முதலே, “லகு” என அவளின் சத்தம் உள்ளுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. கடைசியாகப் பார்த்து மாதம் மூன்று ஆகிவிட்டிருக்க, கல்லூரி விடுப்பில் இருப்பவளோடு நேரம் செலவிட உள்ளம் கெஞ்சியது. அவளின் அணைப்பை மனம் அதிகமாக விரும்பியது. விளைவு… இரவோடு இரவாக அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் விடுப்பு கோரியவன், விடியும் வரை காத்திருக்காது அப்பொழுதே கிளம்பியும்விட்டான்.
சூரியன் தன் தூக்கம் கலைந்து எழும் முன்பே எழுந்து கொள்ளும் தாத்தா கதவை திறந்துக் கொண்டு வாசலுக்கு வரவும், ரகுவின் கார் வெளி கேட்டின் முன் வந்து நின்றது. வாரத்தின் நடுவே வந்து நிற்கும் பேரனின் மகிழுந்தைப் பார்த்த தாத்தா கேட்டை திறந்துவிட்டாலும், மனம் பரபரப்பானது.
“அதுகுள்ள எழுந்தாச்சா தாத்தா?” எனக் கேட்டுக் கொண்டே வாகனத்திலிருந்து பெட்டியை எடுத்த பேரனின் களைந்த முகத்தையும் தாண்டிய பிரகாசம் அவரின் படபடப்பை அடக்கியது.
“நல்லா இருக்கியா ரகு?” எனப் பேரனோடு வீட்டுக்குள் நுழைந்தார் தாத்தா.
“அம்மம்மா தூக்கமா?” எனக் கேட்டுக் கொண்டே பாட்டியின் நித்திரை கலையாதவாறு அவரை பார்த்துவிட்டு தன் அறையினுள் நுழைந்தான்.
கழிவறைக்குள் சென்று வெளியே வந்தவனை ஆவி பறக்கும் எலுமிச்சை தேநீர் வரவேற்றது. உடல் உழைப்பின் காரணத்தால் தாத்தா இரவு நேரத்தோடு படுக்க சென்றிடுவார். அதுபோல் குருவிகளின் கீச்சொலியோடு விழித்தும் விடுவார். பாட்டியும் அதிக நேரம் இரவில் விழித்திருப்பதில்லை என்றாலும் அவர் எழுந்துகொள்ள மணி ஆறாகிவிடும்.
இவ்வளவு காலையில் பேரன் இங்கு இருக்க வேண்டும் என்றால், இரவே கிளம்பியிருக்க வேண்டுமே என நினைத்தவர், “என்ன இவ்வளவு காலையில வந்திருக்க? பிரச்சன ஒண்ணும் இல்லையே?” எனத் தன் சந்தேகத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ள நினைத்தார் தாத்தா.
“வீட்டுக்கு வரணும் போல இருந்துது தாத்தா” என்றவன் தேநீரில் கவனமானான்.
சத்தம் உயர்த்தாது பேசிக் கொண்டிருந்தாலும், பேச்சு சத்தம் பாட்டியை எழுப்பிவிட்டது. “கண்ணு” என ஆசையோடு அழைத்துக் கொண்டே வந்த பாட்டிக்குத் தன் கண்களை நம்பவே முடியவில்லை. “வந்துட்டியா கண்ணு? பார்த்து எத்தன மாசம் ஆச்சு?” எனப் பேரன் அருகில் வந்தார்.
“அம்மம்மாஆஆ” எனத் தன்னை அணைத்து நின்ற பேரனை வாஞ்சையோடு பார்த்தார் பாட்டி. பயணக் களைப்பு அப்பட்டமாகத் தெரிந்தாலும் பேரன் முகம் புன்னகையைப் பூசியிருக்க, பாட்டியின் மனம் நிறைவாக உணர்ந்தது. “எப்பவும் இதே மாதிரி சந்தோஷமா இரு” எனக் கன்னம் வழித்து, “பசிக்குமே கண்ணு… தோச ஊத்தவா?” எனப் பேரன் வயிற்றை நிரப்பக் கிளம்பியவரை நிறுத்தினான்.
“தூக்கம் வருது அம்மம்மா. நைட் பூரா தூங்கல. டையர்டா இருக்கு. படுக்க போறேன். எழுந்த பிறகு சாப்பிடுறேன். நீங்களும் போய் படுங்க. ஐஞ்சு நாள் இங்க தான் இருப்பேன். பொறுமையா பேசுவோம்” எனப் பாட்டியைப் படுக்கவைத்து விளக்கணைத்து அவன் அறைக்குள் நுழைந்தான். அவருக்கு இனி ஏது தூக்கம்?
படுத்த அடுத்த நிமிடம் தூங்கிப் போனான் ரகு. அது என்ன வரமோ… இந்த வீட்டில்… இந்த மெத்தையில் படுத்தால், ரகுவின் இமைகளுக்குள் புகுந்துக் கொள்வாள் நித்திராதேவி. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனைப் பாட்டியோடு பேசி கொண்டிருந்த மலரின் சத்தம் எழுப்பியது.
எழுந்தவன் முதல் வேலையாக ஜன்னல் பக்கம் சென்றான். பாட்டியும் மலரும் தெரிந்தனர். “செவப்பு செம்பருத்தி தான் மா இது.” என மலர்ச் செடி ஒன்றை நட்டுக் கொண்டிருக்க, பாட்டி “லிப்ஸ்டிக் செம்பருத்தின்னு ஒரு பிங்க் கலர் செம்பருத்தி பூ கொண்டு வந்தியே அன்னைக்கு, அது ஒண்ணு வேணும் மலர்” எனக் கதை பேசிக் கொண்டிருந்தார்.
இவன் பார்வை அவர்களைக் கடந்து சென்றது. பின் வீட்டின் கிரில் கேட் திறந்திருந்தது. நேரம் காலை ஒன்பதைக் கடந்திருக்க, ஐயாவும் அம்மாவும் வேலைக்குச் சென்றிருப்பார்கள். ப்ச்… ஒரு மணி நேரம் முன்பே இந்த மலர் எழுப்பி இருந்திருக்கலாம்! போகட்டும், மாலையில் அவர்களைப் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்துக் கொண்டே குளியலறைக்குள் நுழைந்தான்.
குளித்து வந்தவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. நேற்று இரவு அவளோடு பேசியது. அப்பொழுதும் திருச்சிக்கு வருவதாக யோசனை இல்லை என்பதால் அவளுக்குத் தன் வருகை தெரியாது. வாரக் கடைசியென்றாலே மகாராணி ஒன்பது முன்பு நித்திரை களைய மாட்டாள். இப்பொழுதோ கல்லூரி விடுமுறை, கும்பகர்ணி நல்ல உறக்கத்தில் இருப்பாள். அவள் இங்கு வரும் முன்பே, அவள் முன் போய் நிற்க மனம் ஆசை கொண்டாலும், அவளின் தூக்கத்தைக் கலைக்க மனம் இல்லாது பாட்டி கொடுத்த பூரி கிழங்கை மெல்ல உண்டான். பாலும் இனிப்பும் இல்லாத இஞ்சி தேநீரை எந்த அவசரமும் இல்லாது ரசித்து ருசித்தான்.
நொடிகள் நகர்வேனா என அடம்பிடித்தது.
“கண்ணு… உன் ஐயா வீட்டுல இன்னைக்கு உப்புமா. சின்னவளுக்கு அது தொண்டையில இறங்காது. அவ எதையாது கிண்டிட்டு இருப்பா… டீய குடிச்சுட்டனா அடுப்பு பக்கத்துல எடுத்து வச்சிருக்க பூரி கிழங்க குடுத்துட்டு வா” எனப் பாட்டி முட்டியைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தார்.
எழுந்த துள்ளலை வெளிக்காட்டாது, “ஏன் மேடம் இங்க வர மாட்டாங்களோ?” எனப் பொய்யாக அலுத்துக் கொண்டே அடுக்களைக்குள் நுழைந்தான். வேப்பமரத்தடியில் இருக்கும் கொடியில் துண்டை உலர்த்திவிட்டு வீட்டின் பின் வாசல் வழியாக அவள் வீட்டினுள் செல்லுவது தெரிந்தது. அவசர அவசரமாக உணவுப் பாத்திரத்தோடு அவள் வீட்டின் பின்வாசல் நோக்கிச் சென்றான்.
கதவு திறந்திருக்க, அவள் அடுக்களையில் பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்டது. “பேபி” என அழைத்துக் கொண்டே பால் காச்சிக் கொண்டிருந்தவள் பின்னோடு சென்று நின்றான். தீடீரென எழுந்த சத்தமுன், அருகே வந்த உருவமும் பெண்ணை திடுக்கிட வைத்தது. “பிசாசு… பயந்துட்டேன்” எனத் திட்டி அவன் கையில் ஓர் அடி போட்டாலும், வாகாக அவனோடு ஒட்டிக் கொண்டாள்.
“சாப்பிடுவியாம்” எனப் பாத்திரத்தை அவள் முன் இருந்த மேடை மீது வைத்தவன் கரம் அவளைச் சுற்றி இருந்தது.
“நீ சாப்பிட்டியா? எப்போ வந்த?”
“ஆச்சு. விடிய காலையில…”
“என்ன திடீர்ன்னு?” உணவுத் தட்டோடு நீள்விருக்கையில் அமர்ந்தவளை ஒட்டிக் கொண்டே அமர்ந்தான் ரகு.
“நீ தான் சொல்லேன்…” என்றான் தோளில் முத்தம் பதித்து.
“எனக்கு லீவ் ஆரம்பிச்சுடுச்சுன்னு என்னை பாக்கவா?”
“ம்ம்” என்றான்.
“எவ்வளவு நாளைக்கு லீவ்?” கையில் இருந்த பூரி கிழங்கை அவன் வாய் முன் நீட்டிக் கொண்டே கேட்டவளின் விரலோடு பூரியை மென்றவன், “ஞாயிறு ஈவ்னிங் போல கிளம்பினா, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு மண்டே ஆஃபீசுக்குப் போக வசதியா இருக்கும்” என்றான்.
வயிற்றில் பட்டாம்பூச்சிகள் படபடக்க, அதை வெளிக் காட்டாது மெல்ல உண்டு எழுந்தாள். பின்னோடு அவனும் சென்றான். இந்தத் தனிமையும்… அவன் பின்னோடு உரசிக்கொண்டே சுற்றுவதும் எதை எதையோ நினைவு படுத்த, தூசு படிந்து கிடந்த உணர்வுகள் தூசியை உதறிக்கொண்டு எழுந்து அடிவயிற்றைக் கவ்விப் பிடித்தன.
“என்ன டா?” என்றவளுக்கு நா எழுவேனா என்றது.
“ம்ப்ச்” என்றவனுக்கு அவளை உரசிக் கொண்டே இருக்க வேண்டும் போலவே இருந்தது. என்னவோ, அவளோடான இந்த நிமிடம் அவ்வளவு பிடித்தது ரகுவிற்கு.
“குட்டி போட்ட பூனை மாதிரி என்ன இது?” என்றவளுக்கு வெட்கம் எட்டிப் பார்த்தது. உண்டு முடித்த தட்டை அவள் தேய்க்க, பின்னோடு நின்றவன் அவளின் இருபுறமும் கையை சுற்றிப் போட்டுத் தேய்த்த தட்டை கழுவ ஆரம்பித்தான்.
“ல்லகு” திக்கியது பேச்சு. “என்ன ஆச்சு லகு?”
“நேத்து நைட் பத்து மணி போல எனக்கு உன்ன பார்த்தே ஆகணும்ன்னு மண்டை குடைச்சல் ஆரம்பிச்சுது. நேரம் ஆக ஆக என்னால அங்க இருக்கவே முடியல. இப்போ மணி பத்து! பன்னெண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கு உன்ன பாக்க. படுக்கும் போது உன் முகம் பார்த்துக் கண்ண மூடணும். எழுந்துக்கும் போது உன் முகம் பார்த்து எழுந்துகணும். இதோ… இப்படி நினைச்சதும் உன் வாசம் பிடிக்கணும். எப்போடி?” என்றவன் அப்படியே அவள் தோளில் முகம் புதைத்தான்.
அவன் சாதாரணம் போல் தான் இருந்தான். ஆனால், அவள் நிலை அதுவல்லவே. “இப்போ தான் ஃபர்ஸ்ட் இயர் முடிஞ்சிருக்கு. உன் ஆச நிறைவேற இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு. இப்போ தள்ளி போ”. அணைப்பும், குட்டி குட்டி முத்தங்களும்… அவனுக்கு எப்படியோ, அவளுக்கு மனம் தள்ளாட, உடல் கூசியது. “கூசுது லகு. தள்ளி போ டா” என்றவள் குரல் குழைந்தாலும் முழங்கை அவனைத் தள்ளி விட்டது.
நீ தள்ளச் சொன்னால், தள்ளிப் போவேனா என மீண்டும் இடித்துக் கொண்டு நின்றவனிடம், “உரசிட்டே நிக்காத. தள்ளிப் போடா” என்றவளின் முகம் செம்மையும் புன்னகையுமாகவே இருந்தது.
தன் பக்கமாகப் பெண்ணை திருப்பியவன், “பாவம் செஞ்சா ஹெவன் கிடைக்காதாம். நிஜமா பேபி?” என மிக மும்முரமாகக் கேட்கவும், “என்ன பாவம்?” என விழித்தாள். என்ன நடந்து கொண்டிருக்கிறது? இவன் என்ன கேட்கிறான் எனப் பார்த்தாள்.
“தீண்டாமை ஒரு பாவச் செயல் பேபி. அதுனால தான் ஒட்டிக்கிட்டே அலையுறேன். உன் ரகு பாவம் செஞ்சு, ஒரு பாவி ஆகிட கூடாது பார். ஆனா நீ தள்ளிப் போக சொல்றியே…” அவன் வசீகரப் புன்னகையைச் சிந்த, “போடா போக்கிரி!” என்றவளுக்கு வெட்கமும் சிரிப்பும் பஞ்சமில்லாது வர, அவன் மார்பில் முகம் புதைத்தாள்.
மென்மையாக அணைத்து நின்றவன் “போன தரம் பார்த்ததுக்கு, இந்தத் தரம் இன்னும் மெலிஞ்சுட்ட பேபி” என்றான்.
“பேஸ்கெட் பால் டோர்னமென்ட் வந்துது இல்ல… அதுக்கு நிறைய பிராக்டீஸ் பண்ண வேண்டி இருந்துது. கொஞ்சம் வெயிட் லாஸ் ஆகிடுச்சு” என்றாள்.
“சாப்பிட்டு உடம்ப தேத்து” என்றவன் அவளோடு நடுக்கூடத்தை நோக்கி நடந்தான்.
“இப்போ தான் ஸ்லிம்மா இருக்கேன்னு ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சொல்றாங்க… ஏன் நல்லா இல்லியா?”
அவள் அவனை ஆவலோடு பார்க்க, “நல்லா தான் இருக்க… இருந்தாலும், கட்டிப்பிடிச்சா…” என இடைவெளி விட்டு தலை கோதியவன், “கொழுமொழுன்னு இருக்க வேண்டாமா? சோறு தண்ணி கண்ணுல பாக்காத மாதிரி உடம்புல சதையே இல்லாம இருக்க. நாமக் கல்யாணம் பண்றதுக்குள்ள பார்க்கிற மாதிரி அம்சமா இருக்கணும்” என்றான் உல்லாசமாக.
“குனி ரகு” என்றாள் எழுந்த சிரிப்பை உதட்டுக்குள் அடக்கி.
“வேண்டாம் டி” என்றான் சிரிப்பை அடக்காது.
“தப்பு தப்பா பேசற… தப்பு தப்பா பார்க்கிற! உன் கூட சேர்ந்து நானும் கெட்டு போறேன். குனி ரகு” என்றாள் அவளும் சிரிப்பை அடக்காது.
காதல் கொண்ட இரு மனங்களும் இன்பத்தில் பொங்கி வழிந்தன. இருக்கைகளாலும் அவள் தலையைப் பிடித்து ஆட்டி, உச்சந்தலையில் முத்தம் ஒன்றைப் பதித்து, “சரியாத்தான் பார்க்கிறேன்” எனச் சத்தமாக முணுமுணுத்தவன், குனிந்தான். கொட்டு ஒன்றை வாங்கிக் கொண்டவன், ஏதோ கிரீடம் வாங்கியது போல் சிரித்துக் கொண்டே வீட்டை நோக்கி உல்லாசமாக நடையைப் போட்டான்.