Skip to content
Post Views: 3,393
பவி நான் போயிடுறேன் நீ தவறான முடிவு எதுவும் பண்ணிடாதரா ப்ளீஸ்….
நான் வருத்தத்தோட போகல… சந்தோஷமா தான் போறேன்.
நான் மட்டுமே ஒரு தலையா விரும்பின பொண்ணு இல்ல நீ. என்னையும் விரும்புற பொண்ணுதான் நீங்கிற நிம்மதியோட போறேன்.
எனக்கு நம்பிக்கை இருக்கு உன்னால என்னை விட்டு இன்னொருவனை ஏத்துக்க முடியாது. அதேமாதிரி தான் என்னாலயும் உன்னை தவிர யாரையும் ஏத்துக்க முடியாது.
Advertisement
எத்தனை வருஷம் என்றாலும் நான் காத்துகிட்டு இருப்பேன்ரா. எனக்கு நம்பிக்கை இருக்கு.
நீ அர்த்தம் இல்லாம பயப்படுற பவி …! எல்லாத்தையும் சால்வ் பண்ண முடியும். என்னை நீ நம்ப மாட்டேங்கிற.
நீ பொறுமையா யோசி உனக்கு தெளிவு கிடைக்கும்.
Advertisement
நான் உன்னை விட்டு இப்போதைக்கு போறேன்… உன் மனசை விட்டு போக மாட்டேன்.
Advertisement
நீ ஹேப்பியா இருரா எனக்கு அதுவே போதும்…. ஆழிப் பேரலையாய் இதயத்தை அழுத்தும் உணர்வோடு வெளியேறினான்.
அழுது அழுது மூச்சு முட்டி அரை மயக்கத்தில் இருந்தவளுக்கு அவன் பேச்சு இன்னும் அழுகையை கூட்டியது.
எவ்வளவு பெரிய குடும்பத்து பிள்ளை… எனக்காக இவ்வளவு உருகி கரைகிறானே… நான் அதிர்ஷ்டம் இல்லாதவள். அவன் அன்பை சுகிக்கும் பாக்கியம் எனக்கு இல்லை…. இன்னும் இன்னுமாய் விழிநீரில் கரைந்தாள்… விம்மி துடித்தாள்.
Advertisement
எவ்வளவு நேரம் கிச்சனுக்குள் அடைந்து கிடந்தாள் என்று அவளுக்கே விளங்கவில்லை.
சோர்ந்து மூச்சு முட்டி திணறியவள் தட்டுத் தடுமாறி எழுந்து தண்ணீர் குடித்தாள்.
மனபாரத்துடன் தலை பாரமும் அழுத்த மீண்டும் படுக்கையை நாடினாள்.
அவள் சமையலறை கதவை திறந்து வருவதை பார்த்தப் பின்னே தான் ஹரி பெருமூச்சுடன் வெளியேறினான்.
இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக கனத்த இதயத்துடன் சன்னலுக்கு வெளியே நின்று ஏக்கப் பார்வை பார்த்துக் கொண்டே இருந்தான்.
அவள் வேதனை அப்பிய முகத்துடன் அழுது களைத்து வெளியே வரும்போது அவன் இதயத்தில் குருதியே வடிந்தது.
சூழ்நிலை காரணமாக நான் வேறொருத்தியை மணந்தாலும் இவள் உயிரை விட்டாலும் வேறொருவனை மணக்க மாட்டாள்…. பிறகு ஏன் இத்தனை பிடிவாதம் இவளுக்கு… ஓய்ந்த மனத்துடன் வெளியேறினான்.
அவள் மீது கோபம் வந்தது அதைவிட ஆயிரம் மடங்கு காதல் இருந்தது.
“———————“
ம்மா.. நான் ஹரி.
சொல்லுங்க சார்….! வியப்புடன் கேட்டாள் சந்தியா.
நான் பவிட்ட பேசினேன் அவ கொஞ்சம் அப்செட்டா இருக்கா…
என்னாச்சு சார்? ஏதாவது பிராப்ளமா?
அதெல்லாம் ஒண்ணுமில்ல கொஞ்சம் அப்செட்டா இருக்கா…
உங்களால பர்மிஷன் கேட்க முடியும்னா கொஞ்சம் சீக்கிரம் ரூமுக்கு போய் அவளை பார்க்க முடியுமா ப்ளீஸ்.
என்னாச்சு சார்…? ஒன்னும்….அவளுக்கு பதட்டம் தொற்றிக் கொண்டது.
ஒண்ணுமில்லை….. கொஞ்சம் டயர்டா இருந்தா.. டிபிரெஸ்டா பேசினா.
நீங்க அவளை மீட் பண்ணினீங்களா?
ம்ம்ம்ம்ம்ம்…. என்றான் பெருமூச்சுடன்.
எங்கே மீட் பண்ணீங்க… என்ன பிரச்னை என்றெல்லாம் அவள் தோண்டி துருவவில்லை.
சரிங்க சார் நான் பார்த்துக்கிறேன் என்றாள்.
தேங்க்ஸ் என்றான் நன்றி பெருக்குடன்.
“—————–“
ஹரி இன்னைக்கு கிளம்பறியா…?
ம்ம்ம்ம்ம்….
பவி என்ன சொல்றா?
அவ என்னைக்கு என்ன சொல்லி இருக்கா… விரக்தியாய் சிரித்தான்.
உன் மனசு அந்த பொண்ணுக்கு புரியல பாரேன்… எவ்வளவு அருமையான வாழ்க்கை அவ காலடியில் கிடக்கு… ஆனா வாழத் தெரியாம இப்படி பிடிவாதமா இருக்காளே….அகிலன் அவ்வளவு வருந்தினான்.
அவளுக்கு புரியாம இல்லரா அகி…அவ ஃபேமிலி சிச்சுவேஷன் அப்படி.
இதுவரை அவளோட லைஃபில் நடந்ததை பார்க்கும் போது அவ யோசிக்கிறது சரிதான்னு இருக்கு. பாவம்டா அம்மாயி என் மேல அவ்வளவு அன்பு இருந்தும் வெளிப்படுத்த முடியாம தவிக்குறா..
இருந்து இருந்து இந்த பெண்ணை தான் உனக்கு பிடிக்கணுமா? நண்பனுக்காய் வேதனை கொண்டான் அகிலன்.
என்ன மேன் என் லவ் சேப்டருக்கு எண்ட் கார்டு போட்டாச்சுன்னு முடிவே பண்ணிட்டியா? ஹரிக்கு தான் பவி.
டேய் ஹரி….ஏன்டா இப்படி எல்லாம் பேசற…? அகிலனுக்கு மனசு தவியாய் தவித்தது. பவித்ராவின் மீது அளவு கடந்த கோபம் குமிழ் விட்டது. என்ன பொல்லாத பெண் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.
ஹரி நான் சௌமிட்ட சொல்லி பவிட்ட பேச சொல்றேன்.
வேண்டாம் அகி… நான் வேண்டியது பேசியாச்சு! இதுக்கு மேல அவளுக்கு பிரஷர் கொடுக்க விரும்பல. அவளை கொஞ்சம் ஃப்ரியா விடுவோம்
நாம மாத்தி மாத்தி அவளுக்கு பிரஷர் கொடுத்தா அவ ஊரை விட்டு போனா பரவாயில்லை நான் தேடி கண்டுப்பிடிச்சுடுவேன் உலகத்தை விட்டே போற முடிவுக்கு வந்துட்டான்னா? நினைச்சாலே நடுங்குதுரா.
நீ ஃபீல் பண்ணாம இவ்வளவு திடமா இருக்கிறதே போதும் … எனக்கு கொஞ்சம் கில்ட்டியா இருக்குடா…மாயவரத்தில் இருந்து பிளைட் ஏறி அமெரிக்கா வந்து எங்க குழந்தைகளை பார்த்துக்க வந்த பேரில் உன் நிம்மதியை குலைச்சுட்டா.
ச்சீ இப்படி எல்லாம் சொல்லாதேரா…. எனக்குள்ளும் காதல் என்ற உணர்வு மலர அவ தானே காரணம். வாழ்க்கை பற்றி யோசனையே இல்லாம இருந்தவன் நான். இப்போ சதா நேரமும் வாழ்க்கை, எதிர்காலம்னு மனசு பிராண்டுதுரா.
லவ் என்ற ஃபீல் இப்படி தான் இருக்கும்னு இத்தனை வயசுவரை தெரியாம இருந்தேன். இப்போ அவளால தான் உணர்ந்தேன்.இந்த பீல் ரொம்ப டிஃபரண்டா இருக்குடா. கொஞ்சம் வலிக்குது கொஞ்சம் இனிக்குது. நான் ரொம்ப ரசிக்கிறேன்… ரகசியமா சிரிக்கிறேன்.
எப்படி இருந்தவன் எப்படி புலம்புறான்… அகிக்கு இன்னும் வருத்தம் மேலோங்கியது.
என்னடா அவ பெரிய சீமையில் இல்லாத சித்ராங்கி…எனக்கு கோபம் கோபமா வருது… உன் லெவலுக்கு நீ இவ்வளவு இறங்கி போறது எனக்கு சுத்தமா பிடிக்கல… வெளிப்படையாய் அதிருப்தியை தெரிய படுத்தினான் அகிலன்.
டேய் பவி ரொம்ப நல்ல பொண்ணுரா அகி. உண்மை சொல்லனும்னா… அவ தயங்குறது தான் என்னை இன்னும் அட்ராக்ட் பண்ணுது.
என்னோட அழகுக்கோ அந்தஸ்துக்கோ அவ ஓகே சொல்லி இருந்தா நான் அவளை ஈஸியா கடந்து கூட போயிருப்பேன்.
இப்போ என்ன நடந்தாலும் அவளை விடக்கூடாதுன்னு மனசுல வைராக்கியம் கூடுது. அவளை ராணியா வாழ வைக்கணும்ரா.
ஹரியின் புரிதலில் நெகிழ்ந்து போனான் அகிலன். சரிடா உன் அன்பு அந்த பொண்ணை உன்கிட்ட சேர்க்கும். நல்லதே நடக்கும். ஊருக்கு போய் அம்மாவை பார்த்தால் உனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும். கிளம்பி ஊருக்கு போடா.
சரி அகி நான் பேக் பண்ணனும்… ஆந்திரா போயிட்டு உனக்கு கால் பண்றேன்.
“——————“
உண்ட உணவு தொண்டை குழிக்குள் அடைப்பட்டது.
உடைந்து அழுதாளே…
அவள் உண்டாளா? உறங்கினாளா? என்ன செய்து கொண்டிருக்கிறாளோ? அவள் நினைவு முள்ளாய் குத்தியது.
பாவம்… ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்து இயல்பான வாழ்க்கையை அவள் போக்கில் வாழ்ந்து கொண்டிருந்தாள் அவள் மனதில் சலனத்தை உண்டு பண்ணிவிட்டேன்.
தன் பங்கிற்கு தானும் அவளை நோகடித்து விட்டதாகவே வருந்தினான். எந்த நொடியில் அவள் மீது காதல் மலர்ந்தது என்று எவ்வளவு யோசித்தும் சரியான பதில் மட்டும் கிடைக்கவில்லை.
வெறுத்ததற்கு காரணம் இருந்தது. நேசித்தது தான் புலப்படவில்லை.
இனி செய்வதற்கு ஒன்றுமில்லை. நடப்பது நடக்கட்டும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டு இருந்தான்.
எல்லோருக்கும் காதலில் சுற்றி உள்ளவர்கள் எதிரியாக இருப்பார்கள். நம் காதலில் இவளே எதிரியாக இருந்தால் இதை விதி என்று மட்டுமே எண்ணி மனதை தேற்றிக் கொள்ள வேண்டும்.
இவள் இவ்வளவு சென்சிட்டிவாய் இல்லாமல் இருந்தால் துணிந்து ஒரு முடிவு எடுக்கலாம். இவளை எப்படி கன்வின்ஸ் செய்து பிறகு இவள் குடும்பத்தை எப்படி சரிகட்ட…
இவ்வளவு அழுத்தமான பெண்ணவளை என்ன சொல்லி வழிக்கு கொண்டு வர… பலவித யோசனைகள் அவன் மண்டைக்குள் உருண்டு தலைவலி பிளந்தது.
ராஜஸ்தானில் அவள் இருக்கிறாள் என்ற உடனே எவ்வளவு ஆசையாய் நம்பிக்கையாய் தேடி வந்தான் ஓடி வந்தான் அவன் குலாபியை பார்க்க…
எப்படியும் அவளுக்கு தைரியம் கொடுத்து இருதரப்பிலும் என்னென்ன பிரச்னைகள் வரக்கூடும் அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்று இருவருமாய் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டும். தன் ஆசை குலாபியை தன்னோடு அழைத்து சென்று இது தான் உங்க மருமகள் என்று தாயின் முன்னே கொண்டு நிறுத்த வேண்டும் என்று திட்டம் தீட்டி இருந்தான்.
நினைப்பதெல்லாம் நடப்பதா வாழ்க்கை?
உணர்வுகள் முழுதும் வடிந்து உயிரற்ற ஜடம் போல் தோற்றுப் போன மனநிலையில் ஏர்போர்ட் வந்து சேர்ந்தான்.
காத்திருப்பு அறையில் தன் பெட்டிகளை வைத்து விட்டு இரும்பு நாற்காலியில் சரிந்து வேதனை கொடுத்த அழுத்தத்தில் கண்கள் மூடிக் கொண்டான். எச்சில் விழுங்க கூட தொண்டை அடைத்தது.
வலி வலி வலி… மனம் முழுக்க வலி….அந்த வலியின் ஆழம் கொடுத்த இதமான சுகத்தில் அவன் மனம் முழுதும் அவன் அம்மாயி தான்…. காதல் வலி ஹெராயின் கொக்கைன் விட போதையாய் தான் இருக்கும் என்றோ படித்ததை இன்று உணர்ந்தான்.
குழந்தைகளை மழலைபோல் பேசி சிரித்து ஆசையாய் கொஞ்சுவதும்… ரசனையாய் செடிகளிடம் பேசிக் கொண்டே தண்ணீர் ஊற்றுவதும்… சிரத்தையாய் ஒவ்வொரு வேலையும் ஓடி ஓடி பம்பரமாய் சுழன்று செய்வதும்…. ப்பா அவளுக்கு நிகர் அவளே…
சமையலில் அவளுக்கு அருமையான கைபக்குவம் என்றால் பரிமாறுவதில் மன பக்குவம்.
முகத்தை பார்த்தே அகத்தை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற் போல் கூட்டி குறைத்து பரிமாறுவாள்.
அவனிடம் அதிகம் பேசியதில்லை என்றாலும் எந்த பதார்த்தத்தை விரும்பி உண்பான் என்பதில் இருந்து எந்த பக்குவத்தில் ருசியில் உண்பான் என்பது வரை அவனை பார்க்காமலே பார்த்து பார்த்து செய்வாள்.
பவி…. உன்னை தனித்து விட்டுட்டு நான் என்ன பண்ண போறேன்…? அடுத்து நான் என்ன செய்ய? நீ இல்லாமல் ஆந்திராக்கு நான் போய் என்ன ஆகபோகிறது?மூச்சுக்கு ஏங்கியது இதயம்.
பேசாம அவளை அடித்து உதைத்து உருட்டி மிரட்டியாவது இழுத்துட்டு வந்திருக்கணும்… உள்ளுக்குள் புலம்பிக் கொண்டான். மனம் ஆறவே இல்லை… பவி நீ வேணும்… நீ வேணும்… எனக்கே எனக்கா என் கூடவே நீ வேணும்…! அவன் மனம் இடைவிடாது ஜபித்தது.
அவன் உணர்விலும் உயிரிலும் அவள் பிம்பமே…
அடர்ந்த பின்னலை முன்னால் தூக்கி போட்டுக் கொண்டு மெல்லிய கொலுசொலியில் அதிராமல் அவள் நடப்பதும். வியர்வையுடன் கலந்து கஸ்தூரி மஞ்சளின் வாசனை எப்போதுமே அவள் மீது லேசாக வீசுவதும்…. நினைவடுக்கில் புதைத்து வைத்திருந்த ஞாபகங்களை அவன் மனம் புரட்டிக் கொண்டிருக்க…. கொஞ்சம் கொஞ்சமா எனக்குள்ள ஸ்லோ பாயிசன் போல் புகுந்துட்டா குலாபி… கண்ணோரம் கசிந்தது.
நினைவின் வாசம் நிஜத்தில் வருமா? நாசி மட்டும் உணர்ந்தது அந்த நறுமணத்தை.
ஆம்… அதே கஸ்தூரி மஞ்சளின் வாசம் அவன் அருகில்.
error: Content is protected !!