அவ்வளவு அக்கறை இருக்கவங்க கூடவே இருந்து கூட்டிட்டு போகணும் என்றவள் குப்பென்று சிவந்த முகத்தை மறைத்து அதரம் கடித்து அமைதியாகிப் போனாள்.
பவி…. பவி… மிக நுண்ணிய குரலில் மோகனமாய் அந்த மேனகையை அழைத்தான்.
அவள் நிமிர்ந்தாளில்லை.
என்னை பாரேன் ப்ளீஸ்… அவள் கரம் பற்றினான்.
பார்க்க அவள் விழையவில்லை.. முடிந்தால் பார்க்க மாட்டாளா?
வெட்கம், பயம்,குழப்பம் நிம்மதி எல்லாம் சேர்ந்து சேற்றுடன் கலந்த நீர் போல் அவளை குழப்பி வைத்திருக்கிறதே…
அவளை சகஜமாக்கும் பொருட்டு பேச்சை வளர்க்க ஆரம்பித்தான். வரணும்கிறவ உரிமையா என்னோட கிளம்பி வந்திருக்கணும்…! கோபமாய் முறைத்துக் கொண்டே அவள் கரத்தை பற்றி மடியில் வைத்துக்கொண்டான்.
எதுக்கு இந்த சிடுசிடுப்பு… இப்போ என்ன உங்களுக்கு நான் போயிடவா…? அஞ்சனம் பூசாத அழகிய விழிகளை சுற்றி சுழற்றினாள்.
போய் தான் பாரேன்…! முரட்டு தனம் முட்டியது அவன் குரலில்.
போக முடியாதோ…? கிசு கிசுப்பாய் கேட்டாள்.
போய் பாருன்னு சொன்னேன்… விழி சுருங்கி கண் இடுங்கி ஒரு பார்வை பார்த்தான்.
பிளைட்ல வித்தவுட் போக முடியாதாமே… சந்தியா சொன்னா… குறும்பு கொப்பளித்தது அவள் உதட்டிற்குள் அடங்கிய சிரிப்பில்.
வித்தவுட்டில் ஏன் போகணும்? வித் யுவர் மேனுடன் போகலாம் தலையை கோதி கலைத்து விட்டுக் கொண்டே சிரித்தான்.
புரியல….?
ம்கூம்…. புரியல என்று உதடு பிதுக்கி தலையாட்டினாள்.
இதோ டிக்கெட் என்று எடுத்து நீட்டினான். அவள் திகைக்கவில்லை… தோளை மட்டும் குலுக்கிக் கொண்டாள்.
கேடி நீ… அவள் தோளில் அடித்தான்.
முகம் சுருக்கி அவனை முறைத்தாள்.
எப்படியும் நான் வருவேன்னு தெரிந்து தானே டிக்கெட் புக் பண்ணிருக்கீங்க…? கொணட்டினாள்.
நானும் கேட்கலாம் நான் கன்பார்மா டிக்கெட் எடுத்திருப்பேன்னு தெரிந்து தான் நீயும் வந்திருப்ப….
இப்போ என்ன அதுக்கு? ஹரிசரண் நந்தமூரிக்கு எனக்கு ஏழாயிரம் செலவு செய்து டிக்கெட் எடுத்ததில கோடி கணக்கில் நஷ்டமாகிடுச்சா.. சடைத்துக் கொண்டாள்.
மிசஸ் ஹரிசரணுக்கு இல்லாத உரிமையா…?
இவர்கள் சம்பாஷனையில் போடிங் நேரம் வந்து விட்டது.
இப்படி பேசினா பிளைட் கிளம்பிடும்! நடுவில் நின்னு கைநீட்டி ஏற முடியாதும்மா … சிரித்து விட்டான்.
நான் சிரிக்கணுமா? என்றாளே பார்க்கலாம்.
என்னை பார்த்தாலே ஊமை மாதிரி ஓடி ஓடி ஒளிந்தவ பேசுற பேச்சை பாரேன்.. அயர்ந்து தான் போனான்.
போர்டிங் பாஸ் பெறுமுன்னே தம்பி ராம்சரணுக்கு அழைத்தான்.
பவித்ராவை அழைத்து வருவது பற்றி கூறினான்.
அவள் வருவாளா இல்லையா என்று உறுதியாக தெரியாத நிலையில் எப்படி தகவல் சொல்வது என்று விட்டிருந்தான்.
இப்போது தம்பியிடம் தகவல் சொல்லிவிட்டான்.
இதோ அம்மா பக்கத்தில் இருக்காங்க பேசு என்று கொடுத்து விட்டான்.
என்ன ஹரி வீட்டுக்கு கூட்டிட்டு வரியா?
ஆமா…!
இல்லப்பா… அது….இங்கே யாருக்கும் தகவல் தெரியாதே…
அதுக்கு?
ஹரி நம்ம கரீம்நகர் வீட்டுக்கு கூட்டிட்டு போயேன். அங்கே ரெண்டு மூனு நாள் இருங்க… இங்கே நாயனாட்ட பேசறேன்.
அவரிட்ட என்ன பேசணும்? ஏன் பேசணும்?
பாபு கோவிக்காதே…. அம்மா அங்கே வந்து உங்களை பார்க்கிறேன். விஜயதாரணி கையை பிசைந்தார்.
என்ன சொல்ல வறீங்க? கடுப்பாகி போனான்.
வீட்டுக்கு திடு திப்புன்னு எப்படி கூட்டிட்டு வருவ…?
கரீம் நகர் வீட்டுல தங்கினா நானாக்கு தெரியாதா?அத்தனை கோபம் அவனுக்கு.
உன் பிரண்டுன்னு இப்போதைக்கு சொல்லி…
சரிம்மா… எனக்கு டைமாச்சு,கோபத்துடன் அழைப்பைத் துண்டித்தான்.
“———————“
செக்கின் முடிந்து உடைமைகளை பரிசோதித்து விமானம் ஏறினார்கள்.
இதுவரை கொஞ்சம் சகஜமாய் பேசிக் கொண்டிருந்தவள் விமான இருக்கையில் அமர்ந்ததும் கப் சிப்பென்று ஆகிப்போனாள்.
ஒட்டி உரசி அருகில் அமர்ந்தவனை கடியவும் முடியவில்லை… அவனுடன் பேசவும் முடியவில்லை.
அவள் தவிப்பு அவனுக்கு புரியாமல் இல்லை.
அவளை சீண்ட வேண்டுமென்றே அவன் ஒட்டிக் கொண்டு அமர… அவள் அவஸ்தையில் நெளிந்தாளே அன்றி அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை.
ஆசுவாசமாய் அவன் இருக்கையில் சாய்ந்து ஹா வென்று கொட்டாவி விட்டு உடலை நெளித்தான். அவன் உடலின் ஒரு பாதி அவள் மீது தான்.
உள்ளுக்குள் அவனை வறுத்தாள் தான்… விழி உயர்த்தி எதிர்ப்பு காட்ட முடியவில்லை.
என்ன இவ…. கப் சிப்புன்னு சுருண்டு போயிட்டா… தனக்குள் முணங்கி கொண்டவன் பவி ஆர் யூ ஓகே என்றான்… அவள் தோளணைத்து கைபோட்டபடி.
சில்லிட்ட அவள் உடல் அவனுக்கு உணர்வு போராட்டத்தை தெளிவாய் உணர்த்தியது.
தன் மீது உள்ள காதலில் வந்துவிட்டாளே தவிர உள்ளுக்குள் அவளுக்கு அச்சம் மேலோங்கி கிடக்கிறது.
அவள் கையை இறுகப் பற்றி அழுத்தி விடுவித்தான்.
நான் இருக்கிறேன் உனக்கு என்று வார்த்தை மொழியால் தான் சொல்ல வேண்டும் என்பதில்லையே…
ஜஸ்ட் ரிலாக்ஸ்ரா அம்மாயி… அவள் தோளில் தட்டிவிட்டு கண்மூடிக் கொண்டான்.
ஆறுதல் சொல்வதாய் அவள் மன உணர்வை இன்னும் எழுச்சி பெற வைக்க அவன் விரும்பவில்லை.
நீ என்னை நாடி வந்துவிட்டாய் இனி நீ என் பொறுப்பு என்ற உறுதியில் கண்மூடி இருந்தான்.
அவளுக்குள் அவ்வளவு போராட்டம்…
வேற்று மாநிலத்தவனை நம்பி அவனுடன் சென்றால் அவன் வீட்டு மனிதர்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?
அவர்களின் அந்தஸ்திற்கு தன்னை ஏற்பார்களா?
காதல் என்றால் என்னவென்றே தெரியாத காலத்திலே தன்னை பெற்றவள் நம்பவில்லையே… இன்று தெலுங்கனை பிடித்திருக்கிறது என்று அவன் பின்னே செல்கிறேனே… தாயின் எண்ணவோட்டம் என்னவாக இருக்கும்? நான் இப்படி ஒரு வாழ்க்கை தேடிக் கொண்டாள் அடுத்து திருமண வயதில் இருக்கும் தங்கை காயத்ரி நிலை என்ன ஆகும்….? மண்டைக்குள் அழுத்தம் எல்லாம் ஒன்றாய் சேர்ந்து உருண்டையாய் உருட்டியது.
இதற்கு தான் இந்த கருமம் பிடித்த காதல் வேண்டாம் என்று விலகி வந்தேன் படுபாவி தேடி வந்து விட்டானே…
வேதனையில் உருண்டு திரண்டு கோடாய் இறங்கிய உவர்நீர் விழிபடலத்தை தாண்டி கீழே இறங்கும் முன் தன் கரம் கொண்டு துடைத்து விட்டான் ஹரிசரண்.
அவன் தோள் வளைவில் முகம் புதைத்தவளின் சிரசில் தன் தாழ்வாய் பதித்துக் கொண்டான்.
அவன் கரங்களை கெட்டியாய் பற்றிக் கொண்டாள். நீயே சகலமும் என்ற பிடி அது.
எது நடந்தாலும் எல்லாத்துக்கும் நான் தயாரா இருக்கேன்ரா… நான் பார்த்துக்கிறேன் அவள் தலை வருடினான்.
மௌனமாகவே அவர்களின் பயணம் சென்றது.
“———————“
ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் டொமஸ்டிக் டெர்மினல் வந்து சேர்ந்தனர்.
பவி இங்கிருந்து இன்னும் 160கிலோ மீட்டர் போகணும். இப்போவே ஒன்பது மணி ஆகுது நைட்ல டிராவல் வேண்டாம்.
இங்கே பெஸ்ட் ஹோட்டல்ஸ் இருக்கு… தங்கிட்டு போகலாம் என்றான்.
அவள் எதுவும் பேசாது பெட்டியுடன் அவனை பின் தொடர்ந்தாள்.
ஆட்டோ பிடித்து ஒரு ஹோட்டலின் பெயர் சொல்லி அங்கு செல்ல பணித்தான்.
அன்னபூர்ணா ரெசிடென்ஸி என்ற பிரமாண்ட தங்கும் விடுதியில் வரவேற்பில் சென்று ஓரிரு வார்த்தை பேசினான்… கையில் சாவியுடன் வந்தான்.
வரவேற்பில் நின்றவர்கள் அவர்களை ஒரு மாதிரியாக பார்த்தார்கள்.
அறைக்குள் சென்று பெட்டியை வைத்து விட்டு பிரஷ்ஷப் ஆகி சாப்பிட கீழே டைனிங் வந்தனர்.
அவள் எதுவும் ஆர்டர் செய்யாது அமைதியாக அமர்ந்திருக்க… மெனு கார்ட் பார்க்காமலே அவன் சிலது ஆர்டர் பண்ணினான்.
பவ்யமாய் உணவை கொண்டு வந்து வைத்துவிட்டு பேரர் சென்றுவிட மௌனமாய் சாப்பிட்டு சென்றனர்.
அவன் அமைதியாய் படுத்து விட்டான். அவள் தான் எண்ணங்கள் கொடுத்த அலைக்கழிப்பில் மூச்சுமுட்டிக்கொண்டு தவித்திருந்தாள்.
எந்த நம்பிக்கையில் இவனோடு ஒரே அறையில் அதுவும் ஒரே படுக்கையில் இருக்கிறேன்?
அவள் உருள்வதும் புரள்வதும் விழி திறந்து மொட்டு மொட்டென்று பார்ப்பதும்… அவன் மனதை பிசைந்தது. மெல்ல உருண்டு அவள் அருகில் வந்தவன் அவளை இழுத்தணைத்து தன் மார்பிற்குள் பொதித்துக் கொண்டான்.
அவனுள் புதைந்து கட்டுண்டு அமைதியாகி கிடந்தாள்.
தூங்குறா அம்மாயி என்று அவளை தட்டிக் கொடுத்து உறங்க வைத்தவன் உள்ளுக்குள் நகைத்துக் கொண்டான்.
நாளை நடக்க போகும் நிகழ்வை எண்ணி ஒத்திகை பார்த்துக் கொண்டவன் இந்நேரம் தான் இங்கு ஹோட்டலில் ஒரு பெண்ணுடன் தங்கியிருக்கும் தகவல் எர்ரபள்ளிக்கு சென்றிருக்கும் என்று எண்ணி சிரித்தான்.