Skip to content
Post Views: 5,285
அந்தியூரான் -21
இரவில் பேசிய அந்தரங்கமெல்லாம் பகலில் நின்று பகடி பேச, மெல்லிய புன்னகை குமாரியிடம்.இருவரும் அத்தனை ஆழமாகப் பேசி கொள்ளவில்லை என்றாலும் இருவருக்கும் அப்படி ஒரு நெருக்கம் இருந்தது.அதனை இருவரும் உணர்ந்து கொண்டது தான் சிறப்பு.
குளித்து முடித்து வந்தவள் அமுதன் அருகில் அமர்ந்து,அவனது புஜத்தில் கை வைக்க.அவனது உடல் அத்தனை அனலாகக் கொதித்தது திடுக்கிட்டு போனாள்.
Advertisement
“ஐயோ! இப்படிக் கொதிக்கிதே” வெளியில் செல்ல தயக்கம் கொண்டு தான் இத்தனை நேரம் கடத்தி கொண்டிருந்தாள். இப்போது அமுதனுக்கு காய்ச்சல் கண்டிருக்க அடுத்து என்ன செய்வது? என்று தடுமாறி விழித்தது அரிவை.
Advertisement
எத்தனை நேரம் அப்படியே இருப்பது வெளியில் சென்று அமுதனை பற்றிக் கூற வேண்டும் என்று எண்ணி வேகமாக கதவை திறந்து கொண்டு வந்தவளை சூழ்ந்து கொண்டது அம்மாச்சிகள் குழு.
Advertisement
‘இது என்ன திறந்த வேகத்தில் இப்படி?’ என்று நொந்து கொண்டாலும்.அவர்களது தவிப்பு புரிய தான் செய்தது சின்னவளுக்கு. மற்றவர்களை பார்க்க சங்கடம் கொண்டு சிவகாமியை மட்டும் பார்த்து.
Advertisement
“அப்பத்தா! மாமாக்கு காய்ச்சல் அடிக்குது”
“என்னடி ஆச்சு?”
மகள் கதவை திறந்து தான் தாமதம் கூடத்தில் அமர்ந்திருந்த திரு.தணிகாசலம் அவர்கள் நான்கு கால் பாய்ச்சலில் வந்து குதிக்க சரியாக அவர் வந்து நின்ற நேரம். மகள் பேசிய காய்ச்சல் என்பது மட்டும் தான் காதில் விழுந்து வைத்தது போலும்.
“என்ன? என்ன? எப்படி காய்ச்சல் வந்துச்சு? வா! வா! ஆஸ்பத்திரி போலாம். அவளை கூட்டிட்டு வாங்க விசா! விசா!” அப்படி ஒரு கத்து கத்தி வைத்தான். அவன் அலறிய அலறலில் அத்தனை குடும்ப மக்களும் அறை முன் ஆஜர் ஆகிவிட்டனர்.
சிவராமன் விழுதுகள் மிகவும் பெரிது அல்லவா. இவன் போட்ட கூச்சலில் என்னமோ ஏதோவென்று அத்தனை மக்களும் அறைக்கு முன் கூடி நிற்க மிரண்டு தான் போனாள் குமாரி.கண்கள் தாய்யை தேட விசாலாட்சி மட்டும் அங்கில்லை.
அதற்குள் மகளை நெருங்கிய தணிகா, “என்னடா ஆச்சு?” பதட்டமாக அவளது கழுத்தை தொட்டு பார்த்தவன் கையைப் பிடித்துக் கொண்ட குமாரி.
“ப்பா! எனக்கு ஒன்னுமில்ல மாமாக்கு தான் காய்ச்சல்” என்றதும் தான் அவனுக்கு மூச்சே வந்தது.
சிவகாமி பதறி கொண்டு,”என்னடி சொல்ற?”
“ஆமா அப்பத்தா ரொம்பக் கொதிக்குது கல்யாண அலைச்சல் போல”
“ராணி விசாலாட்சியைக் கூப்பிடு” என்றவர் தனது கணவனைப் பார்த்து என்னங்க என்னான்னு பாருங்க”
அதற்குள் கந்தன், “தம்பி வெளில வரட்டும் ஆஸ்பத்திரி போயிட்டு வந்துடலாம்” என்றதும் அவசரமாக பெண்கள் குழு விலகி செல்ல. அதற்குள் சத்தம் கேட்டுத் தன்னைச் சரி படுத்திக் கொண்டு வெளியில் வந்தான் அமுதன்.கண்கள் எல்லாம் சிவப்பேறிக் கிடந்தது.
அவனது முகம் கண்டு பதறிய சிவகாமி,”அச்சோ என்னய்யா கண்ணெல்லாம் இப்படியிருக்கு”
“கொஞ்சம் அலைச்சல் அத்தை அதுவும் போகத் தூக்கமே இல்லை அதான்” இமையைப் பிரிக்க முடியாமல் பிரித்துப் பதில் சொன்னான் அமுதன்.உடல் சூட்டின் காரணமாகக் கண்ணில் இருந்து நீர் வழிந்த வண்ணமே இருந்தது.
“சரி கிளம்பி வாங்க” அமுதன் சரி என்பது போல் தலையை ஆட்ட. அதன் பிறகே கலைந்து சென்றனர் ஆண்கள் குழு.குமாரி அமுதனுக்கு வேண்டி டீ தயாரிக்க சிவகாமியுடன் அடுக்கலைக்குள் நுழைந்து கொண்டாள்.
ஒரு நாளும் இல்லாத திரு நாளாகத் தவிப்பாக நின்று இருந்தான் தணிகாசலம்.அனைவரும் சென்ற பின்பும் தணிகாசலம் அமுதன் முகம் பார்த்து நிற்க. ‘என்ன?’ என்பது போல் புருவத்தை ஏற்றி இறக்கிய அமுதனை பார்த்து எரிச்சல் வந்தாலும்.மகளை எண்ணி அதனை அடக்கி கொண்டவன்.
பெரும் தயக்கத்திற்கு பிறகு “ஒரு, ஒரு வாரம் பாப்பாவும் நீயும் இங்கையே இருங்க” என்றதும் புருவம் சுருக்கியன் ஏன்? என்ற பார்வையைத் தாங்கி நிற்க அவனது கேள்வியை உணர்ந்தார் போல.
“ப்ச்! இங்க பாரு அமுதன் அவ சின்னப் பொண்ணு.அவ உன்கூட எப்படிப் பழகுறான்னு எனக்குத் தெரியனும்…ப்ச்! எப்படி சொல்றது அது?” என்று தடுமாறி நின்றவனை பார்க்க அந்தக் காய்ச்சலிலும் குதூகலமாக இருந்தது அமுதனுக்கு.
“ஓ! பழகுறது ஹ்ம்ம்! என்றவன் மீண்டும் அறைக்குள் நுழைய போக.
“என்ன அமுதன் இருக்கியா?” என்றதும் மீண்டும் நின்றவன்.
“எல்லாரும் பத்து மாசம் தானே” என்று விட்டு செல்ல.
அவன் எதற்கு சொல்கிறான் என்று உச்சி மண்டையில் ஆணியாக இறங்க அந்த வலியை தாங்க முடியாமல் “திமிர்! திமிர்! நான் என்ன பேசுறேன், இவன் என்ன சொல்றான் தங்கச்சியும், அண்ணனும் ஒன்னு போலப் பேசுறதை பாரு” வாய்விட்டு திட்ட அதற்குள் அமுதன் உள்ளே சென்று விட்டான். தணிகாசலம் பின்னால் நின்று இருந்த சிவராமனை இருவரும் கவனிக்க வில்லை போலும்.
குமாரி திருமணப் பேச்சு என்று அமுதனுடன் ஆரம்பிக்கப் பட்டதோ அன்றில் இருந்து தணிகாவை கவனிப்பது தான் சிவராமனுக்கு பெரும் வேலையாகி போனது.இப்போதும் கந்தனிடம் பேசிவிட்டு மீண்டும் அமுதனை பார்க்க வந்தவர் கண்டது இரு முதுமகனும் அமைதியாகச் சீறி கொள்வதைத் தான்.
“தணிகா!”
“ஹ்ம்ம்! ப்பா!”
“என்ன இது?”
“ப்ச்! ஒன்னுமில்லை என்றவன் தகப்பன் முகம் காண மறுத்து அவரைத் தாண்டி செல்ல.செல்லும் மகனை கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.கத்தி போயி வாள் வந்த கதையாகி போனது சிவராமனுக்கு.
அதற்குள் கணவனுக்கு டீ தயாரித்து எடுத்து வந்த குமாரி சிவராமனை கண்டு, “தாத்தா?”
“ஹ்ம்ம்! ஒன்னுமில்லை டா தம்பிய பார்க்க வந்தேன் போ! போ! நீ பாரு” என்றவர் யோசனையுடன் மகனை என்ன செய்வது? என்று எண்ணத்துடன் வெளியில் சென்று விட்டார்.
இங்கு குமாரி அறைக்குள் நுழைந்தவள் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த அமுதனை நெருங்கி, “மாமா டீ” என்றதும் கண் திறந்து குமாரியை பார்த்தவன் சிறு புன்னகையுடன் அதனை வாங்கிப் பொறுமையாகப் பருகினான்.
“ஆஸ்பத்திரி போலாமா?”
“வேணாம் மாத்திரை போதும் மாத்திரை போட்டு தூங்கினேனா சரியா போயிடும்”
“நான் அப்பாவ மாத்திரை வாங்கி தர சொல்றேன்” என்று எழுந்து கொள்ளப் பார்த்தவளை தடுத்து.
“விசா கிட்ட போ அவ வச்சிருப்பா வாங்கி வா எனக்குச் சாப்பாடு எதுவும் வேணாம், என்னை எழுப்பாத நான் நல்லா தூங்கி முழிச்சா சரியாகிடுவேன்”
“சரி” என்றவள் செல்ல பார்க்க மீண்டும் அவளது கைகளைப் பற்றிக் கொண்டவன்.
“கொஞ்சம் நேரம் கழிச்சுப் போகலாம் இப்போ இங்க வா!” என்று தனது நெஞ்சை காட்ட, மறுத்தவளை அள்ளி தன் மேல் போட்டுக் கொள்ள அமைதியாக அவனது நெஞ்சில் படுத்து கொண்டாள்.சுண்டு விரல் கொண்டு மெல்லமாக அவளது கன்னத்தை வருடி விட்டு கொண்டே,
“ஓய்! குட்டி பொண்ணு நீ என்ன சமத்து சக்கரையா?” என்றதும் முகத்தை நிமிர்த்தி அவனை பார்த்துக் கண்களை மூடி தோரணையாகத் தலையை ஆட்ட அப்படி ஒரு சிரிப்பு வந்தது அமுதனுக்கு.
“சொன்ன பேச்சு கேட்பீங்களா? மாமா என்ன சொன்னாலும் சொல்ல பேச்சு கேக்குதே இந்தக் குட்டி பொண்ணு” அத்தனை அழகாக தான் கொஞ்சினான் அமுதன்.
“ஹ்ம்ம்!”
“ஆனா அம்மா கிட்ட மட்டும் வாலு தனம் பண்ணுதே ஏன்?” குறும்பை ஒழித்துக் கொண்டு பேசினான் அமுதன்.
“விசா தான் சண்டை கட்டுறது நான் இல்லை”
“அப்படியா?”
“உண்மையா மாமா”
“எப்படி டி பாவமா முகத்தை வச்சுக்கிட்டு சொல்ற? உண்மை போலவே பொய் பேசுற”
“ஏன்? நான் என்ன பொய் சொன்னேன்?”
“என்ன? ஏன்னா கேக்குற? திருட்டு பாப்பா என்னடி சொல்லி என் தங்கச்சியை வம்பு செஞ்ச? நான் உன்னைப் பார்த்து பேசும் போது தங்கம், வைரம்னு கொஞ்சி வச்சேன்னு சொல்லி வச்சியா” என்றதும் திருத் திருவென விழித்து வைத்தாள் குமாரி.
“என்னடி முழிக்கிற”
“ப்ச்! எப்போ பாரு கல்யாணம் வேணாம், வேணாம் சொன்னா அந்தக் கோபத்துல சும்மா பேசி வச்சேன்”
“சும்மா பேசி வச்சியா? அவ அம்மா கிட்ட சொல்லி அவங்க என்கிட்ட நீ முன்னடியே இவளை விரும்பி வச்சியான்னு கேக்குறாங்க மாமா மதிப்பு என்னடி ஆகுறது”
“ஆஹான் என்னைக் கூடத் தான் அம்மம்மா கேட்டாங்க அமுதனை ரொம்ப நாள் விரும்புனியான்னு” என்றதும் சோபையாகச் சிரித்தவன்
“அதுக்கு நீ என்னடி சொன்ன?”
“ரொம்ப புடிக்கும், ஆனா பேசி பழகுனது இல்லனு சொன்னேன்”
“பிடித்தம் கொண்டு கல்யாணம்!.. சரி மத்தது எல்லாம்?” என்றவனைக் கேள்வியாகப் பார்த்தவள்.
“மத்ததுன்னா?”
“இல்லடி நீ பொறந்த வீட்டுல யானை மேல அம்பாரி போயிருப்ப. ஏன்னா உன் அப்பா பணக்காரர்,ஆனா மாமா அப்படி இல்லையே கணிசமா குடும்பம் பண்ணுற ஆள் ஆச்சே. அது புரியாம பாப்பா அடம் பண்ணுமோன்னு யோசனையா இருக்கு” என்றவனைப் பார்த்து உதட்டை சுழித்தவள்.
“யானை வாங்க இல்லனா, பூனை மேல போயிக்கிறேன்” என்றவளை பார்த்து அடக்க மாட்டாமல் சிரித்தவன்
“உன் பிடிவாதமும், பிடித்தமும் தான் எனக்குப் புரியல. எதுக்குடி என்னைக் கல்யாணம் பண்ண?” மீண்டும் முதலில் இருந்து தொடங்கியவன் மேல் செல்ல கோபம் வர.
“இதோ இதுக்குத் தான்” என்றவள் பல் படாமல் அவனது கன்னத்தை கவ்வி அதே வேகத்தில் எழுந்து கொள்ள.
அவளது செயலில் சிறு அதிர்வு கொண்டு, “ஏய்! ரவுடி பாப்பா” என்று பிடிக்க வந்தவன் கையில் அக படாமல் வெளியில் ஓடி விட்டாள் குமாரி.
அதன் பின் கந்தன் கொடுத்த மாத்திரயை அமுதனுக்கு கொடுத்து.கந்தன் சொன்னதைச் சொல்லிவிட்டு அவளும் அவனுடனே இருந்து கொண்டாள்.அதன் பின் தூங்கும் அமுதனை பார்த்துவிட்டு, மாலை நேரம் விளக்கு வைத்து விட்டுத் திண்ணையில் சிவகாமி அருகில் வந்து அமர்ந்து கொண்டாள் குமாரி.
“அப்பத்தா விசா எங்க? நான் இன்னைக்கு முழுக்கப் பார்க்கவே இல்ல”
“நானும் உன் ஆத்தாக்காரிய சாப்பிட கூப்பிட்டுப் பார்த்துட்டேன் ஹ்ம்ம்! அந்த அறைய விட்டு அசைய மாட்டேங்கறா உன் அப்பன் முகமும் சரியே இல்ல”
“ஏன்?”
“எனக்கு என்னடி தெரியும்? நானும் உன்னைப் போலத் தான்.உன்னை எண்ணி கூட எனக்குக் கவலை இல்ல நீ பொழைச்சு வந்துடுவ, ஆனா உன் ஆத்தாகாரி என்னமா பொழைக்கப் போறான்னு எனக்குப் புரியல குமாரி”
“ஏன் அப்பத்தா? என்னாச்சு? திரும்ப அப்பாவும் அம்மாவும் சண்டை கட்டி வைக்கிறாங்களா?”
“அப்படிதானு நினைக்கிறேன்”
“நான் அப்பா கிட்ட பேசுறேன்” என்று எழுந்து செல்ல போனவளை தடுத்த சிவகாமி.
“இப்படி உட்காரு என்று பேத்தியை அருகில் அமர வைத்த சிவகாமி எத்தனை நாள்டி உன் பிடிவாதத்துல அவங்களைக் கட்டி வைக்கிறது? உன் அப்பன் இறங்கி வரவே மாட்டானா? இந்த முறை ஏதாவதுன்னா நீ உள்ளுக்குப் போகாத குமாரி. நம்ப முட்டு கொடுத்து கொடுத்தே இதுங்க வாழ்க்கை போகனுமா என்ன?”
“என்ன அப்பத்தா?” குமாரிக்கு இப்போது பயமாக இருந்தது.
“சொல்றதை நீயாவது கேளு குமாரி. மறு வீடு போயிட்டு உங்க வேலையைப் பாருங்க” என்றுவிட மனமே இல்லாமல் கேட்டு கொண்டாள் குமாரி.
காலையில் இருந்து குமாரிக்கு விசாலாட்சியைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது.அவள் விசாவை பார்க்க முயலும் போதெல்லாம் எதோ ஒரு வேலை, அமுதன் என்று தடுத்து விட்டது.இப்போது அவளைக் காணாமல் ஒன்றுமே முடியவில்லை.இருந்தும் சிவகாமி சொல்வது போல்.அவர்களுக்கான தனிமையை கொடுக்க வேண்டும் என்று தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டாள்.அரிவை கொஞ்சம் முதிர்வு கொண்டவள் போலும்.
ஆனால் இவர்கள் மறுவீடு சென்று வரும் போது விசா- தணிகாசலத்தின் நிலை… ஏன்டா இவர்களை விட்டோம் என்று எண்ண வைத்து விடும் போலும்..
error: Content is protected !!