ஏன்னா அவங்களுக்கும் வீடு இருக்கு, பெத்தவங்க இருக்காங்க! நையாண்டியாய் சிரித்தார் ஷியாமளா.
வெங்கி ஆ அம்மாயியை மீ இன்டிக்கு மருமகளா கொண்டுவர என்ன செய்யணுமோ அதை செய்! கட்டளையாய் ஒலித்தது அவர் குரல்.
அண்ணையா…. வெங்கட கிருஷ்ணாவிற்கு அதிருப்தி.
வெங்கி சொன்னதை செய்! அவன் ஆசைப்படி வாழட்டும்.
அண்ணையா…வசதி இல்லைனாலும் நம்ம ஊரு பொண்ணா இருந்தா பரவாயில்லை… என்ன குலமோ… என்ன கோத்திரமோ….?
வெங்கி இவன் ஒரு அமெரிக்காகாரியை விவாகம் முடித்து கையோட கூட்டிட்டு வந்திருந்தா என்ன பண்ணியிருப்போம்?
அண்ணையா…. திகைத்தார்.
அப்போ என்ன பேசியிருப்போம் தெரியுமா? ஒரு இந்திய பொண்ணா இருந்தா கூட பரவாயில்லை. போயும் போயும் ஒரு அமெரிக்காகாரி தான் கிடைத்தாளான்னு கேட்டிருப்போம்.
அவன் விருப்பப்படி அவன் விவாகம் நடக்கட்டும்.
அவன் விருப்பப்பட்டா போதுமா? அந்த பொண்ணு வீட்டுல சம்மதிக்கணுமில்ல… ஷியாமளா அணுகுண்டை வீசினார்.
ஏன் சம்மதிக்க மாட்டாங்க….? இந்த நந்தமூரி குடும்பத்துக்கு பொண்ணு கொடுக்க கசக்குமோ? வெங்கி பொங்கி.
அட உங்க குலப்பெருமையும் நீங்களும்…. நீங்க ராஜ வம்சமா கூட இருக்கட்டும். அவங்க பிரியப்பட்டா தானே பொண்ணு கொடுப்பாங்க? இன்னும் கொஞ்சம் எரிச்சல் மூட்டினார் ஷியாமளா.
இதோ பாரு ஆரம்பத்திலே உன் திருவாயை திறக்காதே சொல்லிட்டேன். என் பிள்ளை மட்டும் அந்த அம்மாயியை ஆசைப்படல…. அந்த அம்மாயிக்கும் என் பிள்ளைனா சால இஷ்டம்.
நீங்க மட்டும் தான் குலம் கோத்திரம் பார்ப்பீங்களோ? அவங்களும் பார்ப்பாங்க ஆந்திராகாரனுக்கு கொடுக்க யோசிப்பாங்க! ஷியாமளா பேச்சு உண்மை எனினும் அவர்களுக்கு உவப்பாய் இல்லை.
ஷியாம்மா அவங்க என்ன பொண்ணு கொடுக்கிறது என் அண்ணையா விரும்பின பெண்ணை வீட்டுல புகுந்து தூக்குவோம். எப்போதும் அமைதியாய் அதிராமல் பேசும் ராம் சரண் பேச அங்கே எல்லோருக்கும் ஆச்சரியம் கூடியது.
நீங்க விவாகத்துக்கு ஒத்துக்கிட்டீங்கல்ல அது போதும். உங்க அதிரடி ஆர்ப்பாட்டம் எல்லாம் வேண்டாம். இந்த விவாகம் நல்லவிதமா நடக்கும் தாரணி சற்று கண்டிப்புடனே குரல் உயர்த்தினார்.
அமைதியாக எல்லாவற்றையும் கேட்டு நின்ற ஹரி தலையை அழுந்த கோதிக் கொண்டே உள்ளே சென்றான்.
என்ன பிள்ளையோ… வாயை திறக்குதா பாரு…? முனுமுனுத்தார் வெங்கட கிருஷ்ணா.
வெங்கி பிரம்மாண்டமா இந்த விவாகம் நடக்கணும்! உத்தரவு பிறப்பித்தார் சுப்பு.
ஆகட்டும் அண்ணையா என்றார் பவ்யமாய் வெங்கி.
அறைக்குள் நுழைந்த ஹரி ஊ ஹூ ஹூ என்று சந்தோஷ மிகுதியில் துள்ளி குதித்தான். இறக்கை பொறுத்தாமல் பறந்தான். ஆகாய வெளியில் மிதந்தான்.
தன் தரப்பில் சம்மதம் கிடைத்து விட்டதே…
“———————“
திருச்சி விமான நிலையம் வந்திறங்கிய பவித்ராவை மணவாளன் காத்திருந்து அழைத்து சென்றார்.
சற்று முக வாட்டத்துடன் இருந்த பவித்ராவை கண்டு வருந்தினார்.
மாமா எல்லாரும் நல்லா இருக்காங்களா?
ம்ம்ம்ம் என்றார் புன்னகையுடன்.
அம்மாச்சி,அத்தை, சரண்யா, சந்தோஷ்….
எல்லாரும் சூப்பரா இருக்காங்கம்மா.
சரண்யா உன் வரவிற்கு காத்துட்டு இருக்கா.
உங்க தங்கச்சி காத்துட்டு இல்லையா? முகம் சுருக்கினாள்.
என் தங்கச்சி உன் அம்மான்னு நினைக்கிறேன்… அதிராமல் கோபம் கொண்டார்.
ம்ம்ம்ம்ம்…. என்றாள் வெளியே வேடிக்கை பார்த்தப்படி.
இன்னைக்கு தான் வர… உடனே உன் விஷயம் பேச வேண்டாம். ரெண்டு நாள் நிம்மதியா இரு…! தம்பி தங்கச்சியோட சந்தோஷமா நேரம் செலவிடு. அப்புறம் நான் வந்து பேசறேன்.
அக்காவோடு நேரம் செலவிட வேண்டும் என்று யுவராஜ் கல்லூரியில் இரண்டு நாள் விடுப்பு எடுத்து வந்திருக்கிறான்.
தங்கை காயத்ரியும்தான் தமக்கைக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறாள் அமெரிக்காவிலிருந்து அக்கா என்ன பரிசு பொருள் வாங்கி வந்திருப்பாள் என்ற ஆர்வம் கூடுதலாகவே அவளுக்கு இருந்தது.
மணவாளனின் மனைவி மகன்,மகள்… பவித்ராவின் பெரியப்பா பரமசிவம் குடும்பம், பாட்டி சுசிலா என்று குடும்பமே பவித்ராவிற்காக காத்திருந்தது.
தவிப்புடன் கலங்கி நின்றது தமயந்தி மட்டும்தான். இப்போதாவது மகள் முகம் கொடுத்து பேசுவாளா… வழக்கம்போல் தன்னை புறக்கணித்து ஒதுங்கி செல்வாளா என்ற கவலை அவருக்கு.
பவித்ராவிற்கு பிடித்த உணவுகள் தயார் நிலையில் இருந்தது.
நொடிக்கு ஒரு முறை வாயிலையே பார்த்து நின்றனர் குடும்பத்தார்.
மூன்று மாத பிரிவு என்றாலும் உண்மை அன்பு கொண்ட நெஞ்சங்களுக்கு நீண்ட நெடிய பிரிவாக தோன்றுவது இயல்பு தானே…?
“————————“
கார் ஹார்ன் சத்தம் கேட்டு தெருமுனைக்கு ஓடி சென்றான் யுவராஜ்.
மனதில் எத்தனை அலைப்புறுதல் இருந்தாலும் சொந்த பூமியை மிதிக்கும் போது சொர்க்கத்தில் நுழைந்த உணர்வு தோன்றும் அல்லவா…. பவித்ரா விற்கும் அதே உணர்வு அதே சிலிர்ப்பு.
ஒரு மனிதன் சுதந்திரமாய் எங்கெங்கு ஆடி பாடி திரிந்தாலும் அவன் கூ(வீ)ட்டிற்கு சென்று அடையும் போது கிட்டும் நிம்மதி அலாதியானது.
அக்கா என்று ஓடிவந்து கார் கதவை திறந்து விட்ட தம்பியை அன்பு நிறைந்த விழிகளுடன் ஆவலாய் பார்த்து ரசித்தவள் ஆசையாய் அவன் கன்னம் கிள்ளி முத்தமிட்டாள்.
மூன்று மாதத்தில் தம்பி மூன்றடி வளர்ந்து விட்டது போன்றதொரு பிரம்மை.
மணவாளனுடன் சேர்ந்து பெட்டிகளை இறக்க உதவிக் கொண்டிருந்தான் யுவராஜ்.
தன் வீட்டு வாயிலை மிதிக்கும் போது கொஞ்சம் பயம், கொஞ்சம் பரவசம் அவளுக்கு.
பவிக்கா என்று ஓடிவந்து அணைத்துக் கொண்டாள் மணவாளனின் மகள் சரண்யா.
ஹேய் சரண்… தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டாள் அன்பு மாமன் மகளை.
பவி செல்லம் என்று வாஞ்சையுடன் கன்னம் வருடிய சுசிலாவை பாட்டி என்று கொஞ்சி கொண்டே மறுபுறம் அணைத்துக் கொண்டாள்.
தமயந்தி மட்டும் அமைதியாக எதுவும் பேசாது மகளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.
வாம்மா எப்படி இருக்க என்று அவரும் கேட்கவில்லை… அம்மா நல்லா இருக்கீங்களா என்று பவியும் கேட்கவில்லை.
தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் தாயை கண்டும் காணாதது போல் ஓரவிழியால் பார்வையிட்டாள்.
மிகவும் இளைத்து போய் இருந்தார் தமயந்தி.
பெரியப்பா, பெரியம்மா என்று அவர்களோடு சிறிது அளவளாவி குளித்து வருவதாக தனது அறைக்கு சென்றாள்.
அட விடுங்க மாமா பிள்ளைங்க சந்தோஷம் தான் முக்கியம்….!
மணவாளன் மொபைல் கிணு கிணுத்தது.
அழைப்பை பார்த்தவர் மெல்ல எழுந்து சென்று விட்டார்.
சொல்லுங்க தம்பி!
சார் பவித்ரா வீடு போய் சேர்ந்தாச்சா?
நான் பிக்கப் பண்ணிட்டு வந்துட்டேன்.
வந்துட்டேன்னு ஒரு மெசேஜ் கூட போட முடியாதா? எவ்வளவு நேரம் அவளுக்கு ட்ரை பண்றேன் நாட் ரீச்சபிள் வருது. நான் எவ்வளவு அப்செட் ஆகிட்டேன் தெரியுமா? கடு கடுத்தான்.
இல்ல தம்பி வந்து சாப்பிட்டு சொந்த பந்தங்களோட பேசிட்டு இருக்கா.
இருக்கட்டும். அதுக்காக என்னை மறந்துடணும்னு இல்லையே…
ச்ச… ச்ச ஏன் இப்படி பேசறீங்க?
உங்க தங்கச்சிட்ட ஏதாவது பேசினீங்களா?
இன்னும் இல்ல… ரெண்டு நாள் போகட்டுமேன்னு.
அதுவும் சரிதான்!
ப்ரீயா ஆனபிறகு பவியை எனக்கு கால் பண்ண சொல்லுங்க!
சரிங்க தம்பி….
அப்புறம் என் வீட்டு சைடு ஓகே பண்ணிட்டாங்க! உங்க சைடு சொல்லப்போற பதிலுக்காக தான் வெயிட்டிங்!
அப்படியா தம்பி ரொம்ப சதோஷம்.
நான் தமயந்திட்ட பேசிட்டு சொல்றேன்!
நல்ல பதில் சொல்வீங்கன்னு நம்புறேன்!
இவன் பேச்சு பணிவில் சேராது மிரட்டலில் தான் சேரும் மனதிற்குள் கடு கடுத்துக் கொண்டார்.
“———————“
தம்பிக்கு டேப் தங்கைக்கு டிஜிட்டல் கேமிரா மாமா பெரியப்பாவிற்கு வாட்ச் சரண்யாவிற்கு மேக்கப் செட் சந்தோஷிற்கு பெயிண்டிங் செட் என்று எல்லோருக்கும் வாங்கி வந்ததை கொடுத்தாள்.
பாட்டி உங்களுக்கு மூட்டு வலி தைலம் வாங்கி இருக்கேன் என்று அவரிடம் கொடுத்தவள்.
பெரியம்மா இதுல சரவணனுக்கு வாட்ச் இருக்கு. உங்களுக்கு குட்டி ஜுசர் வாங்கி இருக்கேன்.
தமயந்திக்கு அழகிய முத்து கம்மல் ஒன்று வாங்கி இருந்தாள்.
யுவி இதை அம்மாக்கு கொடுத்துடு என்று ஜாடை காட்டினாள்.
எனக்கு வேண்டாம் யுவி. என் புருஷன் வாங்கி போட்ட இந்த வெள்ளைக்கல் கம்மலே சாகுற வரை எனக்கு போதும்.
இவ கையால கொடுக்க மாட்டாளாம்…. நடுவுல ஒரு ஆள் வச்சு கொடுத்தா நாங்க இளிச்சுக்கிட்டு வாங்கிக்கனுமாக்கும்… சத்தமாகவே முணங்கி விட்டு போனார்.
செம்மையா இருக்கு… தன் காதில் வைத்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் காயத்ரி.
காயத்ரியிடம் இருந்து கம்மலை வாங்கி நகைபெட்டியில் வைத்து மூடி பீரோவில் வைத்து விட்டாள்.
இவளுக்கே இவ்வளவு பிடிவாதம் இருந்தா இவளை பெத்தவ நான் எனக்கு எவ்வளவு இருக்கும்?
“—————-“
சோர்வுடன் கொட்டாவி விடும் பேத்தியை கண்ட சுசிலா போய் கொஞ்சம் தூங்கி எழும்மா என்றார்.
பரபரப்பு ஓய்ந்து அறைக்குள் நுழைந்த பிறகு தான் நினைவு வந்தது.
வந்து சேர்ந்த செய்தியை ஹரிக்கு இன்னும் தெரியடுத்தவில்லை என்று.