Skip to content
Post Views: 4,564
“மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே.
மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹிமே ஸதா.
ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதகே.
சரண்யே த்ரயம்பகே தேவீ நாராயணீ நமோஸ்துதே”
சுலோகம் சொல்லியபடி துர்க்கை சன்னதியின் விளக்கேற்றும் இடத்தில் எலுமிச்சைபழத்தில் விளக்கேற்றிக் கொண்டிருந்தாள் மகிழினி.
மகிழினி இருப்பது கும்பகோணம் அருகே உள்ளே பட்டீஸ்வரம் கிராமம். அங்கு புகழ்ப்பெற்ற துர்க்கை கோவில் உள்ளது!
அந்த கோவிலில் தான் இப்போது அவள் விளக்கேற்றிக் கொண்டு இருக்கிறாள்.
Advertisement
ஞாயிறு ராகு காலம் துர்க்கைக்கு உகந்த நேரம் என்பதால்!
“என்னம்மா, கல்யாணப் பொண்ணு, இப்பவே உன் முகத்தில் நல்லாவே கல்யாணக் களை வந்துடுச்சே!” என்றார் உமா மாமி, கையில் அர்ச்சனைத் தட்டுடன் அருகே வந்து.
அவரைப் பார்த்து சிநேகமாக சிரித்தாள் மகி.
Advertisement
நாளை காலை அவளைப் பெண் பார்க்க வருகிறார்கள்.
Advertisement
வருவது மட்டுமல்ல, கூடவே கையோடு உறுதியும் செய்யப் போகிறார்கள்.
பெண் பார்ப்பது என்பது எல்லாம் சும்மா ஒரு பார்மாலிட்டிக்கு தான்!
அதுவும் அவளும், கல்யாண மாப்பிள்ளை ராஜ்மோகனும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ள என்று தான்!
Advertisement
ஏற்கனவே வீடியோ காலில் அவர்கள் இருவரையும் பேச வைத்திருந்தார் இந்த திருமண ஏற்பாட்டை செய்த, பாலு தாத்தா!
ஏற்கனவே அவர் மாப்பிள்ளையின் தாயாரை மட்டும் தனியே கேசுவலாக அழைத்து வந்து பெண் பார்த்து, அவருக்கும் இவளை மிகவும் பிடித்து போய் விட்டிருந்தது!
அந்த அம்மாவை மகி தான் தன் டிவிஎஸ் பிப்டியில் அழைத்துப் போய் பஸ் ஏற்றி விட்டும் வந்தாள்.
பாலு தாத்தாவுக்கு குழந்தைகள் இல்லை!
ஆனால், மகிழினியின் குடும்ப சமூகத்திற்கு என்று ஒரு திருமண தகவல் மையம் நடத்தியதன் மூலம் ஏகப்பட்ட கல்யாணங்களை முன் நின்று வெற்றிகரமாக கடந்த முப்பது வருட காலமாக நடத்தி இருக்கிறார்.
அவர் கையில் அவர்கள் சமூகத்தில் தற்போது கல்யாணத்திற்கு காத்திருக்கும் அனைத்து ஆண் பெண்களின் டேட்டாபேஸும் இருக்கிறது!
தற்போது குறுகி வரும் கூட்டுப் குடும்ப வாழ்க்கையால், பணம் இருந்தும் ஆள்பலம் இல்லாமல், அதே சமயம் தற்போது இருக்கும் ப்ரோபசனல் இவன்ட் மேனேஜ்மென்ட் ஆட்களிடமும் கொடுக்க விரும்பாத ஆட்கள்,
இவரிடம் ஒரு வார்த்தை, நீங்கள் தான் முன்னின்று எல்லவாற்றையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி விட்டால் போதும்!
அனைத்து கல்யாண வேலைகளையும் அவரே முன்னின்று அதிகம் செலவை இழுத்து விடாமல், அதே சமயம் ஒரு சடங்கு சம்பிரதாயமும் மிஸ் செய்து விடாமல் நடத்தி தந்து விட்டு, மீதிப் பணத்தையும், சரியாக கணக்கு வைத்து பைசா பாக்கியில்லாமல் செட்டில் செய்தும் விடுவார் அவர்!
இதற்காக அவர் பணம் எதுவும் பெற்றுக் கொள்வதில்லை!
பிள்ளையில்லாத அவர், இதை ஒரு சேவையாக நினைத்தே செய்து வந்தார்!
அதனால் பெரிய அளவு பண பலம் இல்லாவிட்டாலும் கூட அவரது சொல்லிற்கு மதிப்பு மரியாதை இருந்து வந்தது!
அவர் கொண்டு வந்திருக்கும் வரன்!
அதுவும் அவரது நெருங்கின சொந்தத்தில்!
அவரது மாமா பெண் தான் மாப்பிள்ளையின் தாயார் கமலா அம்மாள்.
அவரது இளைய மகன் ராஜ்மோகனுக்கு தான் மகிழினியைப் பெண் கேட்டு ஜாதகம் வாங்கிப் போனார்.
பாலு தாத்தா நடத்திக் கொண்டிருக்கும் அந்த ஜாதக பரிவர்த்தனை மையத்தில் மகிழினியின் அம்மா பரமேஸ்வரி மகிழினியின் ஜாதகத்தை பதிந்து இருந்தார்!
மகிழினியின் ஜாதகம் ராஜ் மோகனுக்கு பொருந்தியிருக்கவே, அவரே வீட்டிற்கு வந்து பேசினார்.
மகிழினியின் அப்பா நாகேந்திரன் இப்போது உயிரோடு இல்லை.
அவர் ஒரு மெக்கானிக். கும்பகோணத்தில் ஒரு சிறிய பத்துக்கு பத்து இடத்தில் மெக்கானிக் கடை நடத்தி வந்தார்.
மஞ்சள் காமாலை வந்து சரியாக கவனிக்காமல் இருந்து, அவர் இறந்து விட்டிருக்க, அவருக்குப் பின் அந்த கடையை நடத்த ஆள் இல்லை!
ஒரு நல்ல விலைக்கு அதை கொடுத்து விட்டு கிடைத்த பணத்தை போஸ்ட் ஆபிசிலும் பாங்கிலும் போட்டு வைத்து விட்டு, மகிழினிக்கு கொஞ்சம் நகைகளுமாக வாங்கி வைத்து விட்டு, பரமேஸ்வரி விவசாய கூலி வேலைக்கு செல்ல தொடங்கினார்.
கூலி வேலைக்கு சென்று தான் மகிழினியையும் அவள் அண்ணன் மகேந்திரனையும் படிக்க வைத்தார்.
ஆனால் இருவருக்கும் அவ்வளவாக படிப்பு ஏறவில்லை தான்!
மகேந்திரன் எப்படியோ தட்டு தடுமாறி பிகாம் முடித்து ஒரு FMCG(Fast Moving Consumer Goods – நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு சாம்பூ, டூத்பேஸ்ட் முதலியன பொருட்கள்) டிஸ்ட்ரிபியூட்டரிடம் வேலைக்கு சேர்ந்து அதன் முதலாளியின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஆளாக வேலைப் பார்த்துக் கொண்டிக்கிறான்.
அவனுக்கு அங்கு பில்லிங் வேலைக்கு வந்த கங்காவோடு காதல் உண்டானது.
கங்காவுக்கும் அப்பா இல்லை! அவள் அம்மா வடிவு, இருக்கும் நகைகளை எல்லாம் விற்று அந்த பணத்தை வட்டிக்கு விட்டு தான் கங்காவை வளர்த்தார்!
இருவரின் காதல் பற்றி ஊரில் எல்லோருக்கும் தெரிந்து விட்டவுடன், வடிவு, பரமேஸ்வரியிடம் வந்து அழுதார்!
“நீங்களும் ஒரு பொண்ணைப் பெத்தவங்க தானே? நான் எப்படி ஆண் துணை இல்லாமல் பொம்பள பிள்ளையை பிள்ளையை வளர்க்க கஷ்டப்பட்டு கொண்டுருக்கேன்னு உங்களுக்கும் புரியும் தானே!
உங்களுக்காவது ஒரு ஆம்பளை பிள்ளை இருக்கான்! எனக்கு இந்த ஒத்த பொம்பளை பிள்ளை தான்! அவளும் இப்படி உங்க பையனோடு சேர்த்து பேசி பேர் கெட்டுப் போன பின்னே யார் அவளை கட்டிக்குவா?
நீங்களே பார்த்து ஒரு நல்ல முடிவா சொல்லுங்க” என்று காலில் விழுந்தார்!
பரமேஸ்வரிக்கு பாவமாக இருந்தது!
எனவே, முதலில் மகேந்திரன் கல்யாணத்தை நடத்தினார்.
அவரே எல்லா செலவும் செய்து!
பாங்கில் இருந்த பிக்சட் டெபாசிட்டை எடுத்து விட்டும், போதாதற்கு மகளிர் குழு லோன், அது இதுவென்று அங்கே இங்கே பணத்தைப் புரட்டி தான் நடத்தினார்!
அந்த கங்கா வீட்டில் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை!
“எல்லா பணமும் வெளியே நிக்குது அண்ணி! நமக்கு தேவைன்னு கேக்கிறப்போ, ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு கதை சொல்றான்” என்று அதற்கும் ஒரு பாட்டம் அழுகை!
மகேந்திரன் , “அம்மா. பாப்பா, இப்போ தானே ப்ளஸ் டூ படிச்சிட்டு இருக்குது.
படிப்பு முடிச்சவுடன், ஒரு வருசத்துல நானே செலவு பண்ணி கல்யாணம் செஞ்சு வைக்கிறேன்” என்றவன்,
அவனுக்கு கல்யாணம் முடிந்து, குழந்தையும் பிறந்து அது ஸ்கூல் சென்ற பிறகும் மகிழினியின் ஜாதகத்தைக் கூட அம்மாவிடம் கேட்டிருக்கவில்லை!
பத்தாதற்கு, தன் சேமிப்பு பணம், மாமியார் கொடுத்த பணத்தோடு சேர்த்து, மகிழினியின் கல்யாணத்திற்கு என்று வைத்திருந்த போஸ்ட் ஆபிஸ் பணத்தையும் கெஞ்சியும், சண்டைப் போட்டும், அழுதும் கூட வாங்கி அவர்கள் வீட்டுக்கு எதிரே விலைக்கு வந்த பழைய வீட்டை விலைக்கு வாங்கி விட்டான்.
“அம்மா.. என்னை நம்ப மாட்டியாம்மா? நான் மகியை அப்படியே விட்டுடுவேனாம்மா?
என் மேலே நம்பிக்கை இல்லியா உனக்கு? இப்போ இத விட்டுட்டா அப்புறம் இதே தெருவுல நமக்கு வீடு கிடைக்காதும்மா. இந்த விலைக்கு!
வீட்டு ஓனர் அப்பாவோட பிரன்ட் மணி மாமான்றதுனால, அதுவும் நமக்குன்றதுனால இந்த விலைக்கு கொடுக்கிறார்ம்மா!
என்னோட முதலாளியும் கொஞ்சம் பணம் கடனா தரேன்னு சொல்லியிருக்காரு, வட்டியில்லாத கடனா!
பாங்கிலும் லோனுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன்.
ப்ளீஸ்மா..” என்று அவரை சம்மதிக்க வைத்து, பணத்தை வாங்கிக் கொண்டு விட்டான்.
அந்த பழைய வீட்டை வாங்கி முழுவதும் இடித்து விட்டு, புதியதாகவே கட்டினான்.
கடைசி நேரத்தில் பணம் பற்றவில்லை என்று மகிழினிக்கு என்று வாங்கி வைத்திருந்த நகைகளையும் வங்கியில் அடமானம் வைத்து விட்டான்.
வடிவே கூட, “பணம் வேணுமின்னா சொல்லுடி, நான் தரேன்” என்று சொன்ன போது கூட, “அம்மா நீ சும்மாயிரு! அதான் கிழவி கொடுத்துடுச்சுல்ல! நீ பேசாம இரு.
அப்படியே உன்கிட்ட கையில காசு இருந்து நீ கொடுக்கணும்னு நினைக்கிற பணத்தையும் வெளியே வட்டிக்கு கொடு! அந்த வட்டி பணத்தில் நம்ம பாப்பாவுக்கு நகை சீட்டு போட்டுட்டு வா” என்று சொல்லி தடுத்து விட்டாள் கங்கா!
அதே போல மகேந்திரனால் அவ்வளவு சீக்கிரம் அந்த நகைகளை மீட்டு விட முடியவில்லை!
குடும்ப செலவு கையைக் கடித்தது!
இத்தனைக்கும் அவன் அம்மாவின் தங்கையின் சாப்பாட்டு செலவிற்கு கூட அவன் பணம் தருவதில்லை! அதற்கெல்லாம் அவர்களே தான் சம்பாதித்துக் கொள்கிறார்கள்.
புது வீடு கட்டிய பின், பழைய வீட்டில் அவர்கள் இருவரும் தனியாக தான் இருக்கிறார்கள்!
வீட்டு செலவிற்கு என்று அவன் தரும் பணத்தையும் பொய் கணக்கு சொல்லி சொல்லி, திருட்டுத் தனமாக சேமித்து வைத்து,
அவள் அம்மாவின் மூலம் வட்டிக்கு விட்டுக் கொண்டிருக்கும் மனைவி கங்காவை வைத்துக் கொண்டு அவனால் அந்த நகைகளை மீட்டுக் கொடுக்கவே முடியவில்லை.
வட்டியை மட்டும் கட்டி கட்டி திருப்பி திருப்பி அடமானம் வைத்துக் கொண்டிருந்தான்!
தற்போது அதிலும் புதிய விதிமுறைகள் வந்து, லோனை கட்ட முடியாமல் போக, நகை ஏலத்துக்கு வந்து விடப் போகிறது என்று பரமேஸ்வரி தான் வெளியில் கடன் வாங்கி மீட்டு மீண்டும் அடமானம் வைத்து இருக்கிறார்கள்.
பரமேஸ்வரி இன்னமும் வேலைக்குப் போகிறார்.
ஒரு பெரிய ஹோல்சேல் மளிகைக் கடையில் தானியங்களை எல்லாம் புடைத்து சுத்தம் செய்து தரும் வேலை!
ப்ளஸ் டூ முடித்த பின், மகி, அவள் அப்பாவின் பழைய நண்பரின் மகன் நடத்தும் ஆட்டோ மொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடையில் வேலைக்கு சேர்ந்து விட்டாள்!
அவளுக்கு படிப்பு தான் வரவில்லை! பத்தாம் வகுப்பில் அவள் எடுத்த மார்க்கிற்கு காமர்ஸ் குரூப் கிடைத்ததே பெரிய விஷயம்!
ஆனால், அதுவும் அவளுக்கு பிடிக்க வில்லை! க்ரடிட்டும் டெபிட்டும் அவளைக் கனவில் கூட வந்து பயமுறுத்தின!
எப்படியோ அவளும் பார்டரில் பாஸ் ஆகி விட்டாள்.
அவளுக்கு பள்ளிப் படிப்பு தான் ஏறவில்லை!
ஆனால் அவள் ஒன்றும் மக்கு அல்ல!
கண் பார்த்தால், கை செய்யும் என்பது போல எதையும் சீக்கிரமே கற்றுக் கொள்ளும் கற்பூர புத்தி!
அவள் அப்பாவின் மெக்கானிக் செட்டிற்கு சிறு வயதில் சென்று வந்ததாலோ என்னவோ அவளுக்கு ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் மீது அத்தனைப் பிடித்தம்!
ஒவ்வொரு ஸ்பேர் பார்ட்ஸ் பேரும் அவளுக்கு அத்துப்படி!
என்ன சர்வீசுக்கு என்ன பொருட்கள் கேட்டு வருவார்கள் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்!
அவள் வைத்திருக்கும் அவள் அப்பாவின் பழைய டிவிஎஸ் பிப்டியில் ஏற்படும் சிறிய சிறிய பழுதுகளை அவளே கழற்றிப் பார்த்து சரி செய்து கொள்வாள்!
இப்போது இருக்கும் வண்டிகளைப் பற்றியும் அவளுக்கு நன்றாகவே தெரியும்!
அவளுக்கும் வாய்ப்பு இருந்திருந்தால், ஒரு வேலை இஞ்சினியர் ஆகி இருக்கலாம் போல! ஆனால் விதி இந்த அளவிற்கு தான் அவளுக்கு வாய்ப்பு அளித்திருந்தது!
ஒரு வேளை கல்யாணம் ஆகி போகிற இடத்தில் அவளின் இந்த திறமை எங்காவது பயன்படுமோ என்னமோ!
மகியே தனியாகவே கடையைப் பார்த்துக் கொள்வாள்!
கடை முதலாளியின் நம்பிக்கையைப் பெற்றவள் அவளும்!
ஆண் பிள்ளை போல வேலைப் பார்த்தாலும் அவளுக்கு நிறைய கனவுகள் இருந்தன!
குறிப்பாக கல்யாண கனவுகள்!
வரப்போகும் கணவன் குறித்தும்!
நிறைய காதல் கதைகள் படிப்பாள்!
காதல் படங்கள் பார்ப்பாள்.
அவளும் அவள் தோழி புவனாவும் சேர்ந்து பழைய புத்தகக் கடையில் போய் பிரபல பெண் எழுத்தாளரின் காதல் கதைப்புத்தகங்கள் வாங்கி வந்து படிப்பார்கள்!
இப்போது ஆன்லைனிலும் படிக்கிறார்கள்!
இந்த உமா மாமி ஒரு நாள் தன் கணவருடன் கோவிலுக்கு வந்து விட்டு கிளம்பும் போது, அவர் கணவரின் பைக் ரிப்பேர் ஆகி நின்று விட்டது.
மகி தான் என்னவென்று செக் செய்து விட்டு, “ப்ளக்ல அடைப்பு இருக்கு சார். நான் மெக்கானிக்கை வர சொல்றேன், மைனர் சர்வீஸ் தான்!” என்றவள்,
அவளுக்கு தெரிந்த மெக்கானிக் கடைக்கு போன் செய்து அங்கிருந்து மெக்கானிக்கின் உதவி ஆள் வந்து வண்டியை எடுத்துப் போனான்.
உமா மாமியின் கணவருக்கு வேலைக்கு நேரம் ஆனதால், மகி தான் அவரையும் அவர் வேலை செய்யும் பாங்கில் கூட்டிப் போய் இறக்கி விட்டாள்.
அதிலிருந்து மாமி பழக்கம் அவளுக்கு.
அவர் தான் ஒரு டைரியில் அவளுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆக சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள் எல்லாம் எழுதிக் கொடுத்து படிக்க சொன்னார்.
துர்க்கைக்கும், அதே ஊரில் இருக்கும் இன்னொரு பாடல் பெற்ற ஸ்தலமான சக்திமுற்றம் கோவிலிலும் விளக்கு போட சொன்னார்.
“மகி, நீ நம்ம ஊர் சக்திமுற்றம் கோவில் மாதிரி வேற எங்கயும் அம்பாள் சிவனை ஆலிங்கனம் பண்ணிய கோலத்தில், அதாவது ஹக் பண்ணிட்டு இருக்கிற கோலத்தில பார்க்க முடியாது!
இங்க வேண்டிகிட்டா சீக்கிரம் கல்யாணம் நடக்கும்” என்று அறிவுறுத்தினார்.
அது முதல் தான் இப்படி விளக்கு போட்டு வருகிறாள் மகி.
அவர் சொன்னது போல, பார்க்க வந்த முதல் மாப்பிள்ளையே அவளுக்கு முடிவாகி விட்டது!
ராஜ் மோகன்!
அவளுக்கு பெயரே மிகவும் பிடித்து விட்டது. போட்டோவைப் பார்த்ததும் இன்னமும் பிடித்தது!
அவள் தோழி புவனாவைக் கல்யாணம் செய்யப் போகிறதும் இன்னொரு மோகன்!
ஆனால் அவன் சந்திர மோகன்.
சந்துரு அண்ணனும் ராஜ் மோகனும் கூட திருச்சியில் ஒன்றாக படித்தவர்களாம்!
அவர்களும் நெருங்கின நண்பர்கள் தாமாம்!
திருச்சி உறையூரில் தான் அவர் வீடும்.
மாப்பிள்ளையின் போட்டோவைக் புவனாவிடம் காண்பிக்க, அவள், சந்துருவிடம் காண்பித்த போது தான் தெரிந்தது, அவர்கள் இருவருமே நண்பர்கள் என்று!
எனவே கல்யாணத்திற்கு பிறகும் புவனாவைப் பிரிய வேண்டாம்!
அவளுக்கு எல்லாமே பிடித்து இருந்தது!
தற்போது துபாயில் வேலைப் பார்க்கும் ராஜ் மோகன், இன்று இரவு தான் ஊருக்கே வருகிறான்.
கல்யாணத்திற்கு பிறகு மகி இஷ்டப்பட்டால், தான் துபாயில் தொடர்ந்து வேலை பார்க்க போவதாகவும், இல்லையென்றால், இங்கேயே வேலையைத் தேடிக் கொள்வதாகவும் சொன்னான்.
மகியும் வேலைக்குப் போக ஆசைப்பட்டால் போகட்டும். இல்லை வீட்டில் இருந்தாலும் சரி தான் என்றும் சொல்லியிருந்தான்!
“நான் கொஞ்சம் கருப்பு. உங்களுக்கு நிஜமாவே என்னைப் பிடிச்சுருக்கா?
உங்க வீட்டுல எல்லோரும் நல்லா கலரா இருப்பீங்க போல! உங்கம்மாவே அப்படி ஒரு கலரா இருக்காங்க!” என்று அவள் சந்தேகமாகவே கேட்டாள் அவனுடன் வீடியோ காலில் பேசிய போது!
அவன் அதைக் கேட்டு வாய் விட்டு சிரித்தான்!
“அதனால தான் எனக்கு உன்னைப் பிடிச்சதே! எனக்கு உன்னை மாதிரி டஸ்கி ஸ்கின் டோன் இருக்கிற, நேச்சுரல் பியூட்டிய தான் பிடிக்கும்!
அதுவும் நீ சிரிக்கும் போது கன்னத்தில் குழி விழுது பார்!
எனக்கு அப்படியே எனக்கு என்னோட சின்ன வயசு க்ரஷ் அந்த தீபிகா படுகோனே என்கிட்ட பேசிட்டு இருக்கிற மாதிரி இருக்கு!” என்றான் ரசனையாக!
“நான் ரொம்ப படிக்கல! ப்ளஸ் டூ தான் படிச்சுருக்கேன்!”
“நானும் தான் படிக்கல. ஐ டி ஐ தான் படிச்சுருக்கேன். வெல்டிங்.
ஆனா நல்லா இங்கிலீஷ், ஹிந்தி பேச கத்துகிட்டேன், இங்க வேலைக்கு வந்த பின்னாடி!
ஆனா நான் இங்க பார்க்கிற வேலைக்கும் அதுக்கும் கூட சம்மந்தமே இல்லை!
இப்ப என்ன உன் பிரச்சினை? எனக்கு உன்னை பிடிச்சுருக்கு! ரொம்ப பிடிச்சுருக்கு போதுமா?” என்றவனை மகிக்கும் தான் ரொம்ப பிடித்து விட்டிருந்தது!
அவள் வீட்டில் ரொம்பவும் சந்தோசமாக வளைய வந்தாள்.
அவள் முகத்தில் இருந்த பிரகாசம், சந்தோசம், அவள் அம்மாவுக்கும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தந்து விட்டிருந்தது!
அவள் அண்ணனோ, கல்யாணம் உறுதி ஆகிட்டா, கல்யாண செலவுக்கு பணம் புரட்டணும். ஏற்கனவே வீட்டுக் கடன் இன்னமும் கொஞ்சம் மிச்சம் இருக்கு!.
சம்பளத்தில் பிடித்துக் கொள்கிறார்கள்.
அதாவது செய்தாரே அவன் முதலாளி!
கொஞ்ச நாள் முன்னாடி தான் ரொம்ப கஷ்டப் பட்டு அவ நகைகளை மீட்டேன். இப்ப கையில் கொஞ்சமும் சேவிங்க்ஸ் இல்ல!
என்ன பண்றது என்ற பெருங்கவலை அவனைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது!
ஆரம்பத்தில், தான் அம்மாவிடம் சொல்லியிருந்தபடி மகியின் கல்யாணத்திற்கு அவன் முயற்சி எதுவும் எடுக்காமல் தான் இருந்தான் அவன்!
ஆனால், பொறுத்துப் பொறுத்துப் பார்த்து விட்டு, பரமேஸ்வரியே, ஜாதகத்தை எடுத்துக் கொண்டு போய் பாலு தாத்தாவின் திருமண தகவல் மையத்தில் பதிந்து விட்டு வந்த பிறகுதான் நகை சீக்கிரம் மீட்டு விட வேண்டும் என்ற எண்ணமே அவனுக்கு வந்தது!
அதன் பின்னர் தான், அவன் தன் சம்பள உயர்வைப் பற்றி வீட்டில் சொல்லாமல் இருந்தும், கிடைத்த போனஸ் பணத்தைப் பற்றி மூச்சு விடாமல் கமுக்கமாக இருந்தும் மனைவிக்கு தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்தும், தன்னுடைய அறுந்து போய் விட்ட கழுத்து செயின் ஒன்றை விற்றும் பணத்தைப் புரட்டி விட்டான்.
ஒரு வழியாக தட்டி முட்டி, பணத்தை ஏற்பாடு செய்து, நகையை மீட்க பணம் கொண்டு வந்து கங்காவிடம் கொடுத்து மீட்க சொல்லி விட்டான்.
அவனுக்கு நேரம் இல்லாததால் அந்த நகைகளை கங்கா பேரில் தான் மறு அடமானம் வைத்து இருந்தான்.
அவள் அதை தன் பேரில் விவசாயத்திற்கு என்று சொல்லி நகைக்கடன் பெற்று இருந்தாள்.
அரசு ஏதாவது கடன் தள்ளுபடி செய்தாலும் செய்வார்கள் என்று ஆசைப்பட்டு!
பணம் கிடைத்து விட்டால் கூட மீட்கும் எண்ணமில்லை அவளுக்கு!
மகிக்கு இப்ப என்ன நாளைக்கேவா கல்யாணம் பண்ணப் போகிறார்கள்!
அது இப்போதைக்கு இல்லை!
ஏன் அவளே கூட வரும் வரன்களை எல்லாம் முடிந்தால் தட்டி விட்டுக் கொண்டு தானே இருக்கிறாள், பெண் பார்க்க கூட வர விடாமல் செய்து!
மகேந்திரனையும் அவன் அம்மாவிடம் போய் மகியின் ஜாதகத்தை வாங்கி, பெண் கேட்டு வருபவர்களிடம் கொடுக்கவும் விட வில்லை! ஏதாவது சாக்கு சொல்லி தட்டி விட்டுக் கொண்டு இருந்தாள்.
அப்படி இருக்கையில் ஒரு நாள் அவள் கணவன் முதலாளி கடனாக கொடுத்தார் என்று சொல்லி பணத்தைக் கொண்டு வந்து கொடுத்து நகைகளை மீட்க சொல்லி விட்டான்!
ஆனால், அவள் அதை மீட்டால் தானே!
வட்டியை மட்டும் கட்டி விட்டு, அந்த பணத்தை அதிக வட்டிக்கு அவள் தாயின் மூலம் வெளியே வட்டிக்கு விட்டு விட்டாள்!
அவள் கணவனோ, நகைகளை அடமானத்தில் இருந்து மீட்டு, மனைவி வீட்டுப் பீரோ லாக்கரில் பத்திரமாக வைத்து இருக்கிறாள் என்று நம்பிக் கொண்டிருக்கிறான்!
அதையே மெயின்டெயின் பண்ணிக் கொண்டிருந்தாள் அவளும்!
ஆனால் இப்போது.. இந்த வரன் முடிந்து விடும் போலயே!
பாலு தாத்தா ஈடுபட்டு இருக்கும் வரன்!
அதுவும் அவரின் சொந்தக்காரர்கள் வேறு!
அப்போ. அப்போ இந்த கல்யாணம் நடந்து விடுமா?
நான் பணத்தை ஏற்பாடு செய்யணுமா, நகைகளை மீட்க?
நல்லா வட்டி வந்திட்டு இருக்கு ரெண்டு மாசமாக!
அதைப் போய்..
ச்சே.. இப்ப நான் நினச்சாலும் இத.. இந்த கல்யாணத்தை கலைச்சு விட முடியாது!
என்ன பண்ணலாம்? அவள் யோசித்துக் கொண்டிருப்பது தெரியாமல், மகியோ ரொம்பவும் அடுத்த நாளை சந்தோசமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்!
——-
மறுநாள் காலை..
“என்ன இதுவோ என்ன இதுவோ என்னை சுற்றி ஒரு வட்டம்.
….. ….
நேற்றுப் பார்த்தேன் நிலா முகம். தோற்றுப் போனேன் ஏதோ சுகம்!
ஏ..தென்றல் பெண்ணே! இது காதல் தானடி..” என்று மெல்லிய குரலில் பாடியபடி தலை வாரிக் கொண்டு இருந்தான் ராஜ் மோகன்!
அவன் வீட்டிலும் அவன் கல்யாணத்தை கெடுக்க ஆப்புகள் கொம்பு சீவப்பட்டு காத்துக் கொண்டிருப்பது தெரியாமல்!
error: Content is protected !!