Skip to content
Post Views: 3,241
என்னாச்சு? பதறி ஓடிவந்தனர்.
அம்மாயி…. பவி செல்லம்… முழிச்சுக்கோடா…? தன் தோளில் மயங்கி கிடந்தவளை கண்ணீர் வழிய தட்டிக் கொண்டிருந்தான்.
அக்கா….அக்கா பயத்துடன் தண்ணீர் எடுத்து அவள் முகத்தில் தெளித்தான் யுவி.
மாமய்யா என்னன்னு பாருங்க… பாலாஜியிடம் உருகினான்.
ஷியாமளாவின் அண்ணன் பிரபல மருத்துவர் பாலாஜியே தான். பெண் பார்க்க அவரும் வந்திருந்தார்.
ஒன்னும் இல்ல ஹரி…. மன அழுத்தத்தில் வந்த பட படப்பா இருக்கும்… அவர் ஆறுதல் கூறினார்.
ஷியாமளாவின் மகள் மருத்துவரான நிவேதா நாடி பிடித்து பார்த்து விட்டு பல்ஸ் நார்மல் தான். பயப்பட ஒண்ணுமில்ல… அண்ணனுக்கு ஆறுதல் அளித்தாள்.
மாமய்யா இன்னும் கண் விழிக்கலையே…. பாலாஜியிடம் பதட்டமாய் கேட்டான்.
தமயந்தி அழ தொடங்கி விட்டார். சுசிலா ஒரு பக்கம் அழுக… யாருக்கும் கை கால் ஓடவில்லை.
காயத்ரி ஓடிவந்து ஜுஸ் புகட்டினாள். மின் விசிறியை ஐந்தில் வைத்து விட்டான் சந்தோஷ்.
ஹாஸ்பிடல் போகலாம்… மணவாளன் சப்தம் போட…ஹரி அள்ளி எடுத்துக் கொண்டான் … மெல்ல கண்ணிமை சுருக்கி புருவம் சுழித்து இமை திரை விலக்க முயன்றாள்.
என் பொண்ணு இப்படி இருக்க நான் தானே காரணம்… உள்ளுக்குள் அழுது கரைந்தார் தமயந்தி.
பிள்ளை உள்ளுக்குள்ளே உருகி கரைந்து பொம்மையா நடமாடுச்சே…. சுசிலா வாய்விட்டே புலம்பினார்.
மெல்ல கண் விழித்தவளின் பார்வை நாலா புறமும் சுழன்றது.
தன்னை தாங்கி நிற்கும் ஹரியை கண்டதும் கண்ணீர் உடைப்பெடுத்தது.
அவன் சட்டையை இறுக்கி பிடித்துக்கொண்டாள்.
கொஞ்ச நேரத்துல பயமுறுத்திட்ட பவிம்மா மணவாளன் ஆசுவாசம் கொண்டார்.
மெல்ல அவளை படுக்கையில் கிடத்தினான்.
சாப்பிட்டியா? உருகியது ஹரியின் குரல்.
ம்ம்ம்ம்ம் என்றவள் சங்கோஜமாய் சுற்றி இருந்தவர்களை பார்த்தாள்.
வதினா கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கட்டும் அண்ணையா நீங்க கூட இருங்க…! வாங்க நாம கொஞ்ச நேரம் வெளியில் இருப்போம் தேவ் எல்லோரையும் அப்புறப்படுத்தினான்.
“—————–“
மணவளனுக்கு தங்கையின் மாற்றம் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.
எதற்கும் அசைந்து கொடுக்காத தமயந்தி தாமாய் சம்மதம் சொன்னது ஆச்சரியமே….
அன்று…. தலை துவட்டிக் கொண்டிருந்த தமயந்தி மாப்பிள்ளையை வர சொல்லுங்கண்ணே என்றாரே..
என்னம்மா சொல்ற…? மணவாளன் சோர்ந்து போனார்.
அந்த ஆந்திராக்கார தம்பியை குடும்பத்தோட வர சொல்லுங்க!
என்னம்மா சொல்ற…? திகைத்து நின்றார்.
ஆமாண்ணே இப்போ ஒரு சாவுக்கு தான் போயிட்டு வரேன்.
யாரும்மா? பட படப்புடன் கேட்டார்.
பெருமாள் கோயில் தெரு நடேசன் வாத்தியாரு பொண்ணு சுருக்கு மாட்டி செத்து போச்சு.
ஐயோ ஏம்மா?
இருபத்து மூனு வயசு பொண்ணு. கல்யாணம் ஆகி ரெண்டுமாசம் தான் ஆகுது.
என்னாச்சுமா?
அந்த பொண்ணு காலேஜ் படிக்கிறப்போ ஒரு பையனை ஆசைப்பட்டிருக்கு. வாத்தியாருக்கு தெரிஞ்சு அவங்க சொந்தத்துல மாப்பிள்ளை பார்த்து அவசரமா கல்யாணம் பண்ணி கொடுத்துட்டார்.
கல்யாணம் பண்ணி அந்த பொண்ணு புருஷன் கூட மனசு ஒப்பி வாழல போலிருக்கு. மாப்பிள்ளை வீட்டுக்கு அந்த பொண்ணு காதல் விவகாரம் தெரிஞ்சு போயிருச்சு போல…
ஏதேதோ நடந்து விருப்பம் இல்லாத வாழ்க்கையை வாழ விரும்பாம மனசு வெறுத்து அந்த பிள்ளை தற்கொலை முடிவை எடுத்துடுச்சு.
போலீஸ் கேசாகி போஸ்ட்மார்டம் செய்து பிரேதத்தை கொடுத்திருக்காங்க. பொண்ணோட உடலை வாத்தியாரு இங்கே வாங்கிட்டு வந்துட்டாரு.
பாவம்மா… வாழ வேண்டிய பொண்ணு! மணவாளன் மிக வருந்தினார்.
அதுல என்ன கொடுமைன்னா… சாவு வீட்டுல அந்த பிள்ளையோட நடத்தையை என்னலாம் பேசினாங்க தெரியுமா …? நெஞ்சே பதறிடுச்சு!
கல்யாணத்துக்கு முன்னாடியே கெட்டு போன பொண்ணு… கல்யாணத்துக்கு அப்புறமும் காதலிச்சவன் கூட தொடர்பு இருந்திருக்கு.
எந்த புருஷன் சகிச்சுப்பான்? கொடுமை படுத்தி கொன்னுட்டாங்க… அப்பப்பா… எத்தனை பேச்சு? என்ன மனுஷங்க… எல்லாரும் புள்ளக்குட்டி பெத்தவங்க தானே.?
கண்ணாடி பொட்டிக்குள்ள சவமா படுத்திருந்த அந்த பொண்ணு இடத்துல பவியை நினைச்சேன்…. அந்த நிமிஷம் உறைஞ்சுட்டேன்.
என் பொண்ணு ஆசை பட்டவனை கட்டிக்கிட்டு நல்லா இருக்கட்டும்.
நிஜமா தமயந்தி? நம்பமாட்டாமல் கேட்டார் மணவாளன்.
ஆமாண்ணே… என் பொண்ணு நிம்மதியா வாழனும்னா அந்த பையன் கூட தான் கல்யாணம் பண்ணனும். நாம வேற இடத்துல கட்டிக் கொடுத்து அவ மனசு ஒத்து வாழலைன்னா…? இவ காதல் விவகாரம் தெரிந்து நம்ம பொண்ணு நடத்தையை அசிங்கமா பேசி அவளை தினமும் சித்திரவதை பண்ணினா… வேணாண்ணே எந்த சாதி குலமோ அந்த பையனுக்கே கட்டி வச்சிடுவோம்.
தமையா எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? மனிதர் பூரித்து போனார்.
மாப்பிள்ளை வீட்டுல பேசிடுண்ணே… பெரிய இடம் பெரிய இடம்னு சொல்லிட்டு இருந்த… அவங்க வசதிக்கு நம்ம சீர் செய்ய முடியாது. நம்மால முப்பது பவுன் தான் போட முடியும்னு சொல்லிடு!
நீ பொண்ணு கொடுத்தா மட்டும் போதும். அத்தனை குதூகலம் அவருக்கு.
“———————“
ம்ம்மா இன்னைக்கு ஏப்ரல் ஒன்னு கூட இல்லையே… யுவி வாயை கொடுத்து சுரீரென்று முதுகில் ஒன்று வாங்கி கொண்டான்.
சுசிலாவும் தான் அதிசயித்து போனார்.
தம்பி உன் தங்கச்சிக்கு சொல்லி வை…இப்போ ஏதோ ஒரு யோசனையில் சம்மதம் சொல்லிட்டு அப்புறம் அவங்க வந்து நின்ன பிறகு அசிங்கப்படுத்திடக் கூடாது! சுசிலா அவ்வளவு யோசித்தார்.
காயத்ரிக்கு சந்தோஷம் தான். அக்கா காதல் நோயில் பலவீனப்பட்டு அணு அணுவாய் உருகி உருமாறி போய் விட்டாளே… இனியாவது அவள் மகிழ்ச்சியாய் இருக்கட்டுமே…
எப்படியும் ஏத்துக்குவா உங்க தம்பி பொண்டாட்டின்னு எனக்கு அப்போவே தெரியும்….! இட்லி குண்டானை தூக்கி பொத்தென்று வைத்தார் ஜெயலட்சுமி.
அதுல உனக்கென்ன வருத்தம்? பரமசிவம் கடுப்பாகி விட்டார்.
எனக்கென்ன வருத்தம்?அண்ட வீட்டுக்காரி ஆண்பிள்ளை பெத்துபுட்டான்னு அடிமடியில குத்திக்கவா முடியும்?
பெரிய இடமா வரும்போது வேணாமுன்னு தட்டி விட விவரம் இல்லாதவளா உன் தம்பி சம்சாரம்.
சாதி குலம் மாறி போச்சே நம்மலாம் என்ன நினைப்போமோன்னு பிரமாதமா ஒரு நடிப்பு நடிச்சு ஒரு ஆறுமாசம் இழுக்கப் போட்டு அழகா இப்போ கல்யாணம் முடிக்கப் போறா அந்த தமயந்தி. எவ்வளவு விவரம் பாரு ஆத்தாலும் மகளும்… நீ அடிக்கிற மாதிரி அடி நான் அழுவுற மாதிரி அழுவறேன்னு…அவ்வளவு வெறுப்பும் வன்மமும் அவர் வார்த்தையில்.
ச்சீ… நீயும் ஒரு பொம்பளயா? கை ஓங்கி விட்டார் பரமசிவம்.
“——————“
இரவு எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்த பவித்ராவிற்கு இரவு உணவை எடுத்து வைத்துக் கொண்டே பேச்சை ஆரம்பித்தார் சுசிலா.
பவிம்மா உனக்கு கல்யாணம் தகைஞ்சு வந்திருக்கு… பேசிக் கொண்டே சூடான தோசையை தட்டில் வைத்தார்.
வாயில் வைக்க போன தோசை அப்படியே நின்றது.
மாப்பிள்ளை யாரு தெரியுமா?அத்தனை ஆர்வம் மேலோங்கியது அவருக்கு.
யாரு என்று அவள் கேட்கவில்லை.
மறுபடியும் முதலில் இருந்தா என்ற பெருங்கவலை நொடி நேரத்தில் அவளை ஆட்கொண்டது.
பாட்டி சர்பிரைஸ் கொடுத்து ஷாக் ஆக்காதீங்க. பவியோட இதயத் துடிப்பு எனக்கே கேட்குது… கேலியாய் சிரித்தாள் காயத்ரி.
கருவிழி அகலாது ஒரிடமாய் நிலைத்து நிற்க…. பாட்டியை யோசனையாய் பார்த்தாள்.
பில்டப் கொடுக்காம சொல்லிடுங்க பாட்டி… பவி பாவம். காயத்ரி தமக்கையின் வாட்டம் பொறுக்காது சிரித்தாள்.
அட எங்க அக்காவை ஏன் இன்னும் வருத்தப்பட வைக்கிறீங்க? பவிக்கா ஹரி பாவா தான் மாப்பிள்ளை என்று ஒரே போடாய் போட்டு விட்டான்.
தன் காது கேட்டது நிஜம் தானா? மூளைக்கு உடனடியாய் கட்டளை பிறப்பிக்க தெரியவில்லை. தட்டில் இருக்கும் தோசையை வெறித்துக் கொண்டிருந்தாள்.
அக்கா கேட்டுச்சா இல்லையா? ஹரி பாவாக்கு உன்னை கட்டி கொடுக்க அம்மா சம்மதம் சொல்லியாச்சு! அக்காவை ஆனந்தமாய் கட்டிக் கொண்டான்.
அசைவற்று அமர்ந்திருந்தாள்.
அக்கா… சற்று பயத்துடன் உலுக்கினான்.
ம்ம்ம்ம்ம்… என்றாள் உணர்வற்று…
அவளிடம் மிகப்பெரிய ஆர்ப்பரிப்பை எதிர் பார்த்திருந்தவர்கள் கவலையுடன் அவளை பார்த்தனர்.
தட்டில் கைகழுவி எழுந்து கொண்டாள்.
பவிம்மா சாப்பிடவே இல்லையே தங்கம்… பதறினார் சுசிலா.
பசிக்கல பாட்டி… ஒரு சொம்பு தண்ணீரை மொத்தமாய் குடித்து விட்டு எழுந்து கொண்டாள்.
அவள் மனதிற்குள் என்ன ஓடுகிறது என்று யாருக்கும் புரியவில்லை.
அந்த தம்பிட்ட பேசு! சங்கரனின் படத்தின் கீழ் இருந்த மொபைலை கொண்டு வந்து கொடுத்தார் சுசிலா.
ஆறு மாதமாக அந்த போன் அங்கேயே தான் இருந்தது. எப்போதாவது காயத்ரி சார்ஜ் போட்டு வைப்பதுண்டு. அத்தனை வைராக்கியமாய் பவி அதை தொடாமல் இருந்தது அனைவரையும் அதிசயிக்க வைத்தது மட்டுமில்லால் அசைத்தும் பார்த்து விட்டது.
“——————-“
ஹலோ தம்பி என் தங்கச்சி கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிடுச்சு! கண்டேன் சீதையை என்பது போல் ஒரே வரியில் சொல்ல வந்ததை சொல்லி விட்டார் மணவாளன்.
மறுமுனையில் அமைதி….
ஹலோ… ஹலோ…. சரியான எண்ணுக்கு தான் தொடர்பு கொண்டோமா என்ற ஐயம் அவருக்கு.
காற்று நிரம்பிய வெற்றிடமாய் மிக கனத்த மௌனம் சூழ்ந்து கொண்டது. ஓரிரு நிமிடத்திற்கு பிறகு ஹலோ என்றான்.
என்ன தம்பி…? மணவாளனுக்கு சிறு பதட்டம்.
ஒண்ணுமில்ல சார்… எங்க வீட்டுல பேசிடுங்க… நயனா நம்பர் அனுப்புறேன். அவருக்கு தமிழ் பேச தான் வராது ஆனா நல்லாவே புரியும்.
சரிங்க தம்பி…. என்றார்.
என்ன ஹரி… யோசனையில் உட்கார்ந்திருக்க…? நகம் கடித்து அமர்ந்திருந்த நண்பனின் தோளில் தட்டினான் அகிலன்.
பவி அம்மா மேரேஜ்க்கு சம்மதம் சொல்லியாச்சு.
என்னடா சொல்ற…. உற்சாகம் ததும்ப நண்பனை இறுக்கி அணைத்துக்கொண்டான்.
சௌமி… இங்கே வாடி.. கூச்சலிட்டான்.
எதுக்குடா கூச்சல் போடற?
எதுக்கு ஏலம் போடறீங்க? ரெண்டும் ஒரே நேரத்துல எழுந்து ஊரை கூட்டும்… மாவு அரைத்த கையோடு வந்து நின்றாள்.
செம்ம ஹேப்பி நியூஸ்…. அவளை கட்டி அணைத்து நெற்றி முட்டியவன் அவள் கையில் இருந்த மாவை வழித்து கன்னத்தில் பூசினான்.
அய்யோ… வெட்கத்தில் நெளிந்தவள் என்ன ஹேப்பி நியூஸ் என்றாள்.
ஹரிக்கும் பவிக்கும் டும் டும் டும்.
என்னங்க சொல்றீங்க? நம்ப இயலாது நின்றாள்.
டேய்… என்னடா ரியாக்ஷனே இல்லாத தெலுங்கு ஹீரோ மாதிரி நிற்கிற…. நண்பனை புரியாமல் பார்த்தான்.
ஹரி என்னாச்சு? சௌமி பயந்து விட்டாள்.
தெரியல சௌமி… எப்படி ரியாக்ட் பண்றதுன்னு தெரியல… குரல் மட்டும் உடைந்தது. கொஞ்சம்
பட படத்தது பேச்சும் மூச்சும்.
இதுக்கு பேரு தான் ஹேப்பினஸ் மீண்டும் நண்பனை அணைத்துக்கொண்டவன். சௌமி டார்லிங் முந்திரி நிறைய போட்டு சர்க்கரை தூக்கலா ஒரு சேமியா பாயசம் பண்ணிடு என்று மனைவிக்கு கட்டளை இட்டான் அகிலன்.
“———————–“
ஹலோ மாமா நான் யுவி….
தெரியுது சொல்லுங்க சார்!
என்ன மாமா நீங்களும் இவ்ளோ டல்லா பேசறீங்க?
நீங்களும்னா?
அக்காவும் டல்லா தான் இருக்கு. அது முகத்துல ஒரு சந்தோஷமே இல்லை.
அப்படியா?
அக்காக்கு நீங்க பேசுங்க மாமா… அக்கா ஏன் இப்படி இருக்குன்னு எங்களுக்கு புரிஞ்சுக்கவே முடியல. உடன்பிறந்தவனுக்கு அவ்வளவு கவலை.
சரி நான் பேசறேன். எப்படி உங்கம்மா மலையிறங்கினாங்க ஆயாசமாய் கேட்டான்.
அதெல்லாம் மாமாக்கு தான் தெரியும்.
எனக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கு மாமா. அக்கா இனிமே சந்தோஷமா இருக்கும் தானே….
ம்ம்ம்ம்… கண்டிப்பா சந்தோஷமா இருப்பா.
உங்க அக்கா கையில் போன் இருக்கா?
ம்ம்ம்ம்… நேத்தே பாட்டி கொடுத்து உங்கட்ட பேச சொன்னாங்க!
சரி நான் பார்த்துக்கறேன்.
மாமா உங்க வீட்டுல வந்து சுமுகமா பேசுவாங்க தானே?
ஏன்டா?
இல்ல…. நிறைய வரதட்சணை கேட்டு ஏதும்…
ச்சீ போடா…உண்மையில் கோபம் தான் ஹரிசரணுக்கு.
“———————-“
சந்தோஷத்தில் சிறுவன் போல் துள்ளிவிட்டார் சுப்ப கிருஷ்ணா.
வெங்கி இந்த ஆந்திராவிலே இப்படி ஒரு விவாகம் நடந்திருக்க கூடாது.
இன்னும் பொண்ணு பார்க்கவே போகல… சிலிர்த்துக் கொண்டார் ஷியாமளா.
பொண்ணு பார்க்க போறது ஒரு பார்மாலிட்டி தான். உடனே நிச்சயதார்த்தம், அடுத்து உடனே விவாகம் தான்.
பொண்ணு பார்க்க நம்ம சைடில் எப்படியும் ஒரு ஐம்பது அறுபது பேர் போக வேண்டி வரும்.
நயனா அண்ணையா இப்போ தான் கால் பண்ணாரு…. சொந்த பந்தம் யாரும் கூட்டம் சேர்ந்து போக வேண்டாம்… நம்ம வீட்டோட போய் வந்தால் போதும்னு சொல்லிட்டாரு. அடுத்த புதன் அண்ணையா வராரு.
அதெப்படி நம்ம சொந்த பந்தத்தை விட்டுட்டு போக முடியும்? வெங்கி எகிறினார்.
நாம கூட்டம் சேர்ந்து போய் அவங்களுக்கு சங்கடத்தை உண்டு பண்ண வேண்டாம். அவங்க ரொம்ப யோசித்து கலங்கி தவித்து இப்போ தான் இறங்கி வந்திருக்காங்க.
நிச்சயத்தை கூட சிம்பிளா வச்சுக்கலாம் என்றார் தாரணி.
நான் ஒத்துக்க மாட்டேன்… பொண்ணு பார்க்க வேணா நம்ம வீட்டோட போவோம். எம்புள்ள நிச்சயம் ரொம்ப விமரிசையா நடக்கணும் கண்கள் ஜொலிக்க ஆசையும் ஏக்கமும் இரு கண்ணிலும் வழிய ஒரு தகப்பனாய் அவ்வளவு ஆர்வம் மேலிட்டது சுப்புவிற்கு.
“——————“
ஆறு மாதமாய் பேசாமல் இப்போது என்ன பேசுவது?
ஒரு வார்த்தை அவரோடு கலந்து பேசாமல் நானே முடிவெடுத்து அவரை கஷ்டப்படுத்தி விட்டேனே…
என் வீட்டில் சம்மதம் வாங்க நான் கஷ்டப்பட்டுவது சரி… அவரிடம் பேசாமல் இருந்து அவரை கலங்க வைத்தது எவ்வளவு பெரிய தவறு?
என்னை சரியாய் புரிந்து கொண்டிருப்பாரா…? தான் என்ற அகந்தை கொண்டவள் என்று கோபம் கொண்டிருப்பாரா?
நான் பேசவில்லை சரி… அவரும் என்னிடம் பேச முயற்சி செய்யவில்லையே…
அம்மா இவ்வளவு கடுமையாய் நடந்துவிட்டு இப்போது சம்மதம் சொன்னதற்கு அப்போதே ஏற்றுக் கொண்டிருக்கலாமே…
ஆறு மாதம் நான் அனுபவித்த வலி, வேதனை
ஹரி குடும்பத்தாருக்கு ஏற்பட்ட அவமானம் எல்லாம் இல்லை என்றாகி விடுமா?
மனதில் அவளுக்கு ஆயிரம் யோசனைகள்…. மகிழ்ச்சியில் துள்ளி குதிக்க வேண்டிய மனம் பாரம் ஏற்று தவித்துக் கொண்டிருந்தது.
எப்படி ஹரியை எதிர்கொள்வேன்? எப்படி அந்த வீட்டில் இயல்பாய் வாழ்வேன்?
கையில் மொபைலை வைத்துக்கொண்டு யோசனையோடு அமர்ந்திருந்தான் ஹரி.
என்னோடு பேசாமல் இவளால் ஆறு மாதம் இருக்க முடிந்திருக்கிறதே… வேதனை கொண்டது அவன் காதல் மனம்.
நீயும் தான் அவளோடு பேசவில்லை என்று இடித்துரைத்தது ஆழ்மனம்.
அவள் நம் காதலுக்காக தான் போராடினாள் என்பது அவனுக்கு புரியாமல் இல்லை. ஆயினும் காதல் கொண்ட மனம் வலித்து, வதைத்து வேதனை கொண்டது.
தினமும் அவன் அனுபவித்த வலியை அவளும் தான் அனுபவித்தாள் என்பதை மறுப்பதற்கில்லை.
பெருமூச்சுடன் குலாபி என்ற எண்ணுக்கு அழைப்பு விடுத்தான்.
முழுதும் ரிங் சென்று ஓய்ந்தது, இரண்டாவது முறையும் அழைப்பு விடுத்தான் மீண்டும் நிராதாரவாய் அலறி அடங்கியது. புரிந்து கொண்டான் அம்மாயி வேண்டுமென்றே தவிர்க்கிறாள்.
அவள் கையில் தான் மொபைல் இருந்தது…. பாவா என்ற எண் மின்னும் போதே அவள் இதயத்தில் ரத்தம் கசிந்தது.
என்ன பேசுவேன்? எப்படி பேசுவேன்? சாரி சொல்லிவிட்டால் சரி ஆகிவிடுமா? நான் குத்தியது வலித்ததா என்றா கேட்க முடியும்?
சாரி பாவா சாரி…. கண்ணீரில் நனைந்து சுருண்டு விட்டாள்.
என்ட்றா பங்காரம் என்ற மெசேஜில் தலையணையில் முகம் புதைத்து கதறி விட்டாள்.
அதன் பிறகு அவனும் அழைக்கவில்லை, அவளும் அழைக்கவில்லை.
“——————“
திருமணத்திற்கு சம்மதித்து விட்டாரே என்றெல்லாம் தமயந்தியிடம் அவள் பேசவில்லை. எப்போதும் போல் அதே மௌனம், அதே ஒதுக்கம்.
ஒருவித அழுத்தத்துடனே நடமாடினாள்.
ராஜஸ்தானில் இருக்கும் தோழி சந்தியாவிற்கு அழைத்து தாயின் மனமாற்றம் குறித்து பேசினாள். அவளும் மனதார வாழ்த்தினாள்.
சௌமியும் அகிலனும் அழைத்து தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
ஹரி அமெரிக்காவில் இருந்து கிளம்பும் போது நிச்சயத்திற்கு கண்டிப்பாக வந்து சேர வேண்டும் என்று அகிலன்,சௌமியாவை மிரட்டி உருட்டி
அன்பு க்கட்டளை இட்டுவிட்டு தான் கிளம்பினான்.
“—————–“
தெலுங்கு குடும்பம் பவித்ராவை பெண் பார்க்க வரும் சங்கதி அக்கம் பக்கம் சொந்த பந்தம் என்று பரவியது.
காதல் கல்யாணம் போல என்ற கிசு கிசு ஒரு புறம் கசிந்து கொண்டிருந்தது.
நம்ம இனத்துல இதுவரை இப்படி சாதி மாறி யாரும் பொண்ணு கொடுத்ததும் இல்லை எடுத்ததும் இல்லை என்று வியாக்கியானம் பேசிய மனைவியை அற்ப பதறே உன் பொண்ணு காதலிச்சு ஓடினாளே அவன் என்ன சாதி என்று கண்களால் கேட்டார் பரமசிவம்.
இந்த கம்பியூட்டர் காலத்துல இதெல்லாம் சகஜம், வெளிநாட்டு பொண்ணு மாப்பிள்ளையையே ஏத்துக்குறாங்க…. சுசிலா இன்றைய நிலவரம் பற்றிய நிதர்சனம் பேசினார்.
விஷயம் கேள்விபட்ட கலாவதி போன் பண்ணினார்.
என்னம்மா உன் பேத்தி ஆந்திராகாரனை பிடிச்சுட்டா போல… நல்ல கைகாரிங்க தான் உன் மருமகளும் பேத்தியும். பிளான் பண்ணி பொண்ண அமெரிக்காவுக்கு அனுப்பி இருக்கா பாரு உம்மருமக… இதெல்லாம் என்ன பொழப்பு? த்தூ….
செருப்பால அடிப்பேன் எச்சக்கல நாயே… யாருகிட்ட பேசிட்டு இருக்க…? உன்னை நான் தலை மூழ்கி மூனு வருஷம் ஆகப்போகுது.
அம்மா வீடுன்னு இந்த ஜென்மத்துல அடி எடுத்து வச்சிடாத அசிங்கப்படுத்திடுவேன்.
எங்க இஷ்டம், என் பேத்தியை யாருக்கு கொடுக்கணும்னு எங்களுக்கு தெரியும். போய் உன் பொழப்பை பாரு!
உன்னை கல்யாணத்துக்கு யாரும் வெத்தல பாக்கு வச்சு அழைக்க மாட்டோம்…
நீ கௌரவமா உன் சாதி பெருமையோடு சந்தோஷமா உன் புள்ளைக்கு கல்யாணம் பண்ணு! இனி போன் போட்ட நேரில் வந்து காரி துப்பிடுவேன்… பேய் ஆட்டம் ஆடிவிட்டார் சுசிலா.
இதெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த பவித்ராவிற்கு இதயத்தில் இன்னும் வலி கூடியது.
என்னவோ திட்டமிட்டு கோடீஸ்வர மாப்பிள்ளையை வளைத்து விட்டது போன்ற பேச்சே நாலாபுறமும்….
பெண் பார்க்கும் வைபவத்தில் அவள் மனம் லயிக்கவில்லை.
மனம் சதா எதையோ யோசித்துக் கொண்டே இருந்தது. எதுவும் அவள் கருத்தில் பதியவில்லை. இந்த காதல் தனக்கு வராமல் இருந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றாமலும் இல்லை.
இப்படியான அழுத்தத்தில் தான் ஹரியை நேர்கொண்டு பார்க்க இயலாது மயங்கி சரிந்து விட்டாள்.
error: Content is protected !!