Skip to content
Post Views: 8,306
உடைந்த மனம் ஒட்டாதா?….
அத்தியாயம் 1
அதிகாலை மூன்று மணி. மக்கள் எல்லாம் தன்னை மறந்து அசந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். எங்கும் நிசப்தமாக இருக்க… அந்த தெருவின் கடைக்கோடி வீட்டில் மட்டும் ஒருத்தி நடமாட்டம் தெரிந்தது. அது அவளுக்கு பழக்கம் தான்.
தனி வீடு உள் நுழைந்தால் பெரிய கூடம். முன்பு கூடமாக இருந்திருக்க வேண்டும் தற்போது அவள் சமையலறையாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறாள். கூடத்தை சமையலறையாக பயன்படுத்த வேண்டும் என்றால்?… ஆம், அந்தப் பெண் நடத்துவது சாப்பாட்டுக்கடை. ஹோட்டல் மாதிரி இல்லாமல் பார்சல் மட்டும் வாங்கிப் போகும் அளவுக்கு ஒரு சின்ன கடை.
Advertisement
ஒரு பக்கம் சாம்பாருக்கு பருப்பு ஊற வைத்திருக்க, ஒரு பெரிய தூக்கு நிறைய தக்காளி கழுவி வைத்திருந்தாள். உருளைக்கிழங்கு வெட்டி வைத்தாள். முன்னேற்பாட்டு வேலையெல்லாம் முடிய, ஒரு பக்கம் சுடுதண்ணீர் கொதித்துக் கொண்டிருந்தது.
அன்று வெள்ளிக்கிழமை என்பதால் தலைக்கு குளிக்க சீகக்காய் ஒரு கிண்ணத்தில் நீர் விட்டு கலந்து வைத்தாள். அவளுக்கு நீளமான முடி எல்லாம் கிடையாது. ஆனால், அடர்த்தியான முடி. ஒரு கைப்பிடியில் அடங்காது. சுருட்டை முடி நெளிவு நெளிவாக முதுகு வரை படர்ந்து இருக்கும்.
வெந்தய கலரில் குட்டி குட்டியான சிவப்பு பூக்கள் போட்ட லேசான சேலையை எடுத்துக் கொண்டவள்.. சுடுதண்ணியை தூக்கிக் கொண்டு வெளியே குளிக்க வந்தாள். அந்த வீட்டில் பாத்ரூம் வெளியே இருந்தது. நடு இரவு என்றாலும் வெளியே தான் வர வேண்டும். அவளுக்கு பயம் எல்லாம் எப்போதும் கிடையாது.
Advertisement
அவள் யார்?… மீனாட்சி. குட்டி முகம், பெரிய கண்கள், சராசரி உயரம். கலர் மட்டும் சிவப்பா கருப்பா என்று பிரித்து அறிய முடியாது. ஏதேனும் விசேஷ தினங்களில் தலைக்கு குளித்து அலங்காரம் செய்யும் பொழுது அவள் நிறம் மின்னும். அதேநேரம் சாதாரண நாட்களில் தலைக்கு எண்ணெய் வைத்து பார்க்கும் போது கொஞ்சம் கருத்த பிள்ளை தான்.
Advertisement
சூடு பொறுக்கும் அளவுக்கு தண்ணியை கலந்தவள், சத்தம் இல்லாமல் படுக்கையறை சென்று எட்டிப் பார்த்தாள். முத்து முத்தாக மூன்று முத்துக்கள். அசந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். மீனாட்சி லேசாக தொட்டியை விலக்கிப் பார்த்தாள். இரண்டரை வயது மகள் நல்ல உறக்கம். இந்த கடை குட்டிக்கு தான் மீனா சத்தம் இல்லாமல் எட்டிப் பார்த்தது. சின்ன சத்தம் கேட்டாலும் உடனே எழுந்து அழ தொடங்கி விடுவாள். அடுத்து மீனாட்சிக்கான வேலையே கெட்டுப் போகும்.
அமைதியாக பிள்ளைகளை பார்த்தவள் மெல்ல கதவை சாத்திவிட்டு, குளிக்க சென்றாள். முடியின் நுனியில் ஈரம் சொட்ட, பெரிய இட்லி பாத்திரத்தில் திருநீறு குங்குமம் வைத்து கும்பிட்டவள், இட்லி ஊத்த அடுப்பில் ஏற்றினாள்.
அடுத்த ரெண்டு மணி நேரத்திற்கு இறக்கை கட்டி பறக்க மட்டும் தான் இல்லை. அப்படி ஓடி கொண்டிருந்தாள் மீனா. காலை ஆறு மணியை தொடும்போது, இட்லி சாம்பார் சட்னியோடு.. தயிர் சாதம், தக்காளி சாதம்,புளி சாதம்,லெமன் சாதத்தோடு மாங்காய் ஊறுகாயும் உருளைக்கிழங்கு வறுவலும் இடம்பெற்று இருந்தது.
Advertisement
வெள்ளி, செவ்வாய் மட்டும் முட்டை இருக்காது. மற்ற நாட்களில் முட்டை தொக்கோடு ஒரு பார்சல் சாப்பாடு எழுவது ரூபாய். இங்கு பார்சல் மட்டுமே கிடைக்கும். வீடும் சின்னது, அத்தோடு தனி பெண்ணொருத்தியாக ஹோட்டல் நடத்தும் அளவுக்கு நிர்வாக திறமை கிடையாது. மீனா வசிக்கும் இடம் பெரும்பாலும் நடுத்தர வர்க்கமும், அதற்கு கீழ் நிலையில் உள்ளவர்களும்…
தினக்கூலி, லோடுமேன், காய்கறி வியாபாரிகள், அத்தோடு ஆபீஸ் வேலைக்கு செல்பவர்களும் அந்த பகுதியில் அதிகம். அதனால் சீக்கிரம் கிளம்பி செல்பவர்கள் அவசரமாக மீனாவிடம் தங்களுக்கு தேவையான உணவை வாங்கி செல்வார்கள். ஓரளவு நல்ல வருமானம் தான் மீனாவுக்கு… அதனால்தான் மூன்று பிள்ளைகளோடு வளமான வாழ்க்கை இல்லாவிட்டாலும் வறுமையான வாழ்க்கை இல்லை.
மீனா பார்சல் கட்ட இலை வெட்டும் போது சரியாக வந்து நின்றாள் விமலா. கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி. கஷ்ட ஜீவனமான குடும்பம், ரெண்டு மணி நேரம் தான் மீனாவிடம் வேலை. அதாவது மீனாவோடு சேர்ந்து உணவுப் பொருட்களை தனித்தனியாக பார்சல் கட்டி வைப்பது… 200 ரூபாய் கொடுப்பாள் மீனா. சேர்த்து வைத்தால் ஆறு மாதத்திற்கு ஒரு முறை கட்டும் செமஸ்டர் பீஸ்க்கு சரியாக வரும். காலை, மதியம் உணவும் கொடுத்து காசும் கிடைக்க, விமலா நிற்காமல் வந்து கொண்டிருக்கிறாள்.
இரு பெண்களும் அவசரமாக இட்லி, சாம்பார்,சாதம் என்று தனித்தனியாக பார்சல் கட்டினார்கள். இவர்களுக்கு வருமானமே காலை ஆறு மணி முதல் எட்டு மணி வரை தான். அப்போதுதான் வியாபாரம். அவசரத்தில் வேலைக்கு செல்பவர்களே, அவர்கள் வாடிக்கையாளர்கள். அதனால் அந்த நேரத்தில் தான் மீனாவின் குட்டி கடை படு வேகமாக இயங்கும்…
அவளின் வீட்டிற்கு வெளியே இடது புறம் பாத்ரூம், குட்டி வாராண்டா வலது புறம் இருக்கும். அங்கு டேபிளை போட்டு பார்சலை அடுக்கி, மீதம் இருக்கும் பாத்திரத்தையும் தூக்கி வைத்து விடுவார்கள். வாடிக்கையாளர்களுக்கு தக்க அடுத்தடுத்து பார்சல் கட்டி விடுவார்கள். மீனா ஒரு குட்டி ஸ்டூல் போட்டு கீழே அமர, மாடியிலிருந்து ஒருவன் வந்தான்.
அவன் ஜெகேந்திரன். மாடியில் தகர செட் போட்ட ஒரு பெரிய அறை மட்டுமே உள்ளது. கடந்த ஒன்றை வருடமாக அங்கு வாடகைக்கு இருக்கிறான். குளிப்பதற்கு கீழ் இருக்கும் பாத்ரூம் சென்றான். இது ஒன்றுதான் மீனாவுக்கு பிடிக்காதது. அவளும் அங்கு வாடகைக்கு தான் இருக்கிறாள்.
ரெண்டு வீட்டுக்கும் ஒரு பாத்ரூம் தான். ஜெகன் மோட்டார் வண்டிகளுக்கு தேவையான உதிரி பாகங்கள் விற்கும் கடை ஒன்றே நடத்தி வருகிறான். அத்தோடு ஐந்தாறு ஆட்டோ, குட்டியானையெல்லாம் வாடகைக்கு விட்டு இருக்கிறான். அங்கு ஒரு பாத்ரூம் தான் என்பதால் குளிப்பதற்கு மட்டும் தான் கீழே வருவான். ஆனால், அது கூட மீனாவுக்கு பிடிக்காது. அவள் என்ன செய்வாள்? தனி ஒருத்தியாக மூன்று பிள்ளைகளோடு வாழ்கிறாள்.
இப்படி ஒரு இளைஞன் தன் வீட்டு மாடியில் குடியிருந்தால், அவளுக்கு சங்கடமாக தான் இருந்தது. ஜெகனுக்கும், மீனாவின் சாப்பாட்டு கடையில் தான் உணவு. மற்ற எல்லோரும் பார்சல் வாங்கி செல்ல இவன் மட்டும் கீழே ஒரு சேரை போட்டு கொண்டு அமர்ந்து உண்ணுவான். அதுவே மீனாவுக்கு சுத்தமாக பிடிக்காது.
பார்சல் வாங்கி செல்லலாம். ஆனால், அங்கேயே வீடு இருக்க எதுக்கு பார்சல்? ஒரு தட்டில் ஐந்து இட்லிகளை வைத்து கொடுத்தால் நின்று கொண்டே உணவை முடித்து விடுவான். அவனுக்கு மட்டும் அல்லாமல் அவன் கடையில் வேலை செய்யும் எட்டு பேருக்கும் அங்கு தான் உணவு. அது மீனாவுக்கு நல்ல வருமானம்.. அதனால்தான் அவனை ஒன்றும் சொல்லவும் முடியவில்லை. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் ஜெகன் மட்டும் தான் அங்கு அமர்ந்து உண்ணுவான்.. மற்றபடி அவன் கூடவே இருக்கும் குமரன் கூட அங்கு அமர்ந்து உண்ண அனுமதி கிடையாது.
மீனா, ஜெகனோடு ஜகஜமான பேச்சு வார்த்தை கூட வைத்துக் கொள்ள மாட்டாள். நரம்பில்ல நாக்கு எப்படியும் சுழலும் என்பதால் மிக கவனமாக இருப்பாள் நடத்தையில்… ஜெகனும் பெரிதாக மீனாவோடு பேச ஆர்வம் காட்ட மாட்டான். அங்கு அவனை பெரிதும் ஈர்க்கும் விஷயம் மீனாவின் கடைக்குட்டி தான். தத்தி தத்தி வீட்டை சுற்றியே ஓடிக்கொண்டிருப்பாள். குழந்தையின் பேச்சும் சிரிப்பும் அவனை ரசிக்க தூண்ட, மீனா அவன் பக்கம் கூட விடமாட்டாள்.
அவள் கடைக்கு வரும் நிறைய பேர் கடைக்குட்டியை செல்லம் கொஞ்சி செல்ல, மீனா ஜெகன் அருகில் விடமாட்டாள். ஒரே வீட்டில் தான் இருக்கிறோம். தனி தனி குடித்தனமாக இருந்தாலும், ஜெகன் கல்யாணம் ஆகாதவன். மீனா மூன்று பிள்ளைகளோடு தனியாக வாழும் பெண். தேவையில்லாத பேச்சுக்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று அக்கம் பக்கத்து உறவுகளிடம் கூட ஒரு எல்லைக்குள் தான் இருப்பாள்.
ஜெகன் குளித்து முடித்து மேலே சென்றவன், வெள்ளை சட்டை கருப்பு ஜீன்னில் கையை மடித்து விட்டு வேகமாக படி இறங்கி வந்தான். வியாபாரம் ஜோராக நடந்து கொண்டிருந்தது. கீழே வந்ததும் மீனா வீட்டு நிலைப்படிக்கு உள்ளே ஒரு சேர் கிடக்க, இரண்டு எட்டில் அதை எடுத்தவன் வராண்டா கேட் அருகே அமர்ந்து கொண்டான்.
மீனா பல்லை கடித்தாள். அது என்ன என் வீட்டு நிலைப்படியை தாண்டுவது? தன்னை முறைத்துப் பார்க்கும் பெண்ணை உணராமல் போனை பார்த்துக் கொண்டிருந்தான் ஜெகன். அவன் மேல் ரசனையாக விமலாவின் பார்வை விழுந்தது. அதை மீனாவும் கவனித்தாள்.
சமீபமாக மீனாக்கு வந்திருக்கும் தலைவலி இது ஒன்னு… தன்னை நம்பி தன் வீட்டு வேலைக்கு அனுப்புகிறார்கள். இவள் பாட்டுக்கு காதல் அது என்று ஆரம்பித்து விட்டால், தன் தலை அல்லவா உருளும்… அத்தோடு லேசான கவலை வேறு, குடும்ப கஷ்டத்தை உணராமல் இருக்கிறாளே இந்த பெண் என்று…
ஒரு தட்டில் ஐந்து இட்லிகளை வைத்து சட்னி சாம்பார் விட்டு மீனாவே கொண்டு போய் ஜெகன் கையில் கொடுத்து விட்டு வந்தாள். முன்பு அவள் கண்டுகொள்ள மாட்டாள், விமலா தான் செய்வாள். எப்போது விமலாவின் பார்வை மாறியதோ அப்போதே மீனா சுதாரித்துக் கொண்டாள்.
இன்று என்னவோ வியாபாரம் வேகமாக நடந்தது. முன்பு பார்சல் செய்து வைத்திருந்த அனைத்தும் தீர்ந்து போக, மீனா வேகமாக வாழை இலையில் இட்லிகளை கட்டிக் கொண்டிருந்தாள். காதோரம் இரு பக்கமும் முடி எடுத்து கிளிப் குத்தி இருந்தவள். அடுத்து கீழ் இருக்கும் மொத்த முடியும் கொண்டை போட்டு இருந்தாள்.
காலை வெயில் மீனா முகத்தில் பட்டது. ஜெகன் பார்வையை திருப்பிக் கொண்டான். இட்லி நல்ல சூடு.. ரெண்டை எடுப்பதும் நீரில் கைவிடுவதுமாக இருந்தாள் மீனா.
அப்போது அம்மா என்று ஒரு சினுங்கள் சத்தம் கேட்டது. மீனாவுக்கு பெருமூச்சு. யார் என்று தெரியும். எல்லாம் அந்த வீட்டின் கடைக்குட்டி தான். குளிருக்கு ஸ்வெட்டர் போட்டு, தலைக்கு குள்ளா வைத்து, கையில் குட்டி துண்டை பிடித்த படி தாயை தேடி வந்தாள். அவளின் மற்ற இரு உடன்பிறப்புகள் நல்ல உறக்கத்தில் இருக்க, இந்த சின்ன குட்டி தான் தாயை தேடி வந்தது.
ஜெகனின் முகம் ரசனையாக சின்ன குட்டி மேல் விழுந்தது. வேகமாக தாயை நோக்கி எட்டு வைத்து வர,
“மலர், உங்க அண்ணே அக்காவோட போய் தூங்கு.. அம்மா இப்ப வாரேன்” உறக்கத்திலிருந்து எழுந்து வந்த பிள்ளையை தூக்காமல் மீனா பதில் சொல்லிக் கொண்டிருக்க,
சினுங்கள் அழுகையாக மாறியது. அவசரமாக வேலை செய்து கொண்டே ஒற்றை கையால் மகளை தன் புறம் இழுத்தவள், மடியில் படுக்க போட்டாள்.
முதுகில் ரெண்டு தட்டு தட்ட, ஜெகனுக்கு அவள் அடிக்கிறாளோ என்று ஒரு சந்தேகம். ஆனால், மலருக்கு தாயின் கதகதப்பை உணர்ந்ததும் விட்ட உறக்கத்தை துவங்கினாள். அவ்வளவுதான் மீனாவுக்கு பிள்ளையின் கவனிப்பு. மகள் தலைப்பக்கம் இருக்கும் தன் காலை லேசாக ஆட்டிக்கொண்டே இட்லிகளை தனித்தனியாக பார்சல் போட்டாள். தொட்டியில் போட்டு ஆட்டி விடுவது போல உணர்ந்த மலரும் நன்றாக உறங்க தொடங்கினாள்.
இட்லி முடிந்து போக தன் கடையில் வேலை செய்பவர்களுக்கு பார்சல் வாங்க ஜெகன் அமர்ந்திருந்தான். மலரைத் தொட்டிக்கு மாற்றி, அவசரமாக அடுத்த ஈடு இட்லி ஏற்றினாள் மீனா. இவன் ரெகுலர் கஸ்டமர். அவனை பகைத்துக் கொள்ள முடியாது. நேரத்தை பார்த்தவள், அடுத்த அடுப்பில் பால் ஏற்றி வைத்தாள்.
சு lடு இட்லிகளை இறக்கி நீர் தெளிக்கும் போதே, இரண்டாவது மகன் புகழ் வேந்தன் அம்மாவை தேடி வந்தான்.
“எங்கடா அக்கா எழுந்திருக்கலையா?” என்றதும், புகழ் பின் புறம் திரும்பி பார்க்க, மூத்தவள் தமிழ் அமிர்தா நடந்து வந்தாள். மூத்ததுக்கு ஐந்து வயது, அடுத்ததுக்கு நாலு, கடைக்குட்டிக்கு இரண்டரை வயது. மலர் கனி மட்டும் இன்னும் பள்ளி செல்லவில்லை.
ஜெகனை கடந்து இரு பிள்ளைகளையும் அழைத்துச் சென்றவள், பாத்ரூம் போக விட்டு முகத்தை கழுவி அழைத்து வந்தாள். அந்த இடத்தில் இருவரும் அமர்ந்து கொள்ள, பாலும் பிஸ்கட்டும் எடுத்துக் கொடுத்தாள். இன்று விடுமுறை என்பதால்தான் பிள்ளைகள் சாவகாசமாக எழுகிறார்கள். மற்ற நாட்களில் மீனாக்கு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப அதிகம் வேலை இருக்கும்.
பிள்ளைகள் உண்பதை ஒரு கண்ணில் பார்த்துக் கொண்டே மற்றைய இட்லிகளை பார்சல் கட்டி ஜெகனிடம் கொடுத்தாள்.
வாங்கிக்கொண்டு அவன் நகர, அவன் கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்தாள் விமலா. அதை கவனித்த மீனா,
“விமலா”
“அக்கா”
“நேத்து டிவில அலைகள் ஓய்வதில்லைன்னு ஒரு படம் போட்டாங்களே பார்த்தியா?”
“ஓ… பார்த்தேனே” என்றால் சிரிப்பாக..
“ஆமா, ரெண்டு பேரும் படிக்கும் போதே காதலிச்சு. அந்தக் காதலில் ரொம்ப உறுதியான நின்னு போராடி ஜெயிப்பாங்க”
“ஆமா, அக்கா ரொம்ப நல்ல படம். எங்க பாட்டியே அந்த படத்தை ரசிச்சு பாப்பாங்க”
“ஆனா நிஜத்துல யாரும் ரசிக்க மாட்டாங்க விமலா” என்றதும்,
“என்னக்கா சொல்றீங்க” புரியாமல் பார்த்தாள்.
“சினிமால காதலிக்கிற ரெண்டு பேரு சேரனும்னு ஆர்வமா பாக்குற யாரும், நிஜத்துல காதலிக்கிறேன் ரெண்டு பேர் சேரனும் நினைக்க மாட்டாங்க”
விமலா அமைதியாக நிற்க,
“அந்தப் படத்தோட கிளைமாக்ஸ் என்னன்னு தெரியுமா? ரொம்பவும் போராடி, ஃப்ரெண்ட்ஸ் அவங்களை சேர்த்து வைக்க, ஊரை விட்டு ஓடி போற மாதிரி முடிப்பாங்க. அப்பாடா காதலிச்ச ரெண்டு பேரும் சேர்ந்துட்டாங்கன்னு கையத்தட்டிட்டு நம்மளும் வீட்டுக்கு வந்துருவோம்”
“ஆனா, நிஜம் என்னன்னு தெரியுமா? படிக்கிற வயசுல படிப்பு கூட முடிக்காம காதலிச்சு ஓடிப்போகிற ரெண்டு பேரோட வாழ்க்கை நிஜத்துல எப்படி இருக்கும் விமலா? காதலோட வெற்றின்றது காதலிச்சவங்களை கல்யாணம் பண்ணிக்கிறது இல்ல… கல்யாணத்துக்கு அப்புறம் வாழ்ற வாழ்க்கையில இருக்கு. அந்த வாழ்க்கையில தோத்துப் போன நான் சொல்றேன் காதல் வேணாம்” என்றாள் உறுதியாக…
error: Content is protected !!