Skip to content
Post Views: 3,310
“டேய்.. ராமு.. இந்த அம்மா எப்போடா, நமக்கு தெரியாம போய் ராஜுவுக்கு பொண்ணு பார்த்துட்டு வந்துச்சு?” வீட்டினுள் உள்ளே நுழையும் போதே, பதை பதைப்புடன் கேட்டுக் கொண்டே தான் வந்தாள் பிரியதர்ஷினி.
ராஜ் மோகனின் அக்கா.
“அவரைக் கேட்டா? நேரா போய் உங்கம்மாவையே கேளுங்க! அவங்க தானே பெத்த புள்ளைங்கள கூட நம்பாம அந்த பாலு கிழத்து கிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணி, கமுக்கமா போய் பொண்ணு பார்த்துட்டு வந்திருக்காங்க!” என்றாள் வனிதா கடுப்பாக.
“ஏய்.. சும்மாயிரு.. நான் என் தம்பிகிட்ட கேக்குறேன்! நீ சொல்லுடா? அம்மா எப்படிடா அவ்வளவு தூரம் தனியா போயிருக்கும்? நீ கூட்டிட்டு போகாம?”
Advertisement
“என்கிட்ட நவகிரக கோவில் டூர் போறோம்னு சொல்லிட்டு, இது மாதிரி வயசானவங்களா சேர்ந்து ஒரு வேன் ஏற்பாடு பண்ணி போனாங்க.
நானும் சரி, நம்மள கூப்பிடாம, அதுவா எங்கியோ போயிட்டு வரட்டும்னு அனுப்பி விட்டேன். காசு கூட நான் கொடுக்கல! அந்த சந்துரு பயதான் பணம் கட்டினான்.
அங்க போன அம்மா, கூட வந்தவங்க கிட்ட, கொஞ்சநேரம் வெயிட் பண்ணுங்க, இங்க பக்கத்துல ஒரு சொந்தக்காரங்க வீட்டுக்கு போயிட்டு ஒரு மணி நேரத்துல வந்திடறேன்னு சொல்லிட்டு, நைஸா கிளம்பி போய் பார்த்துட்டு வந்திருக்கு! எல்லாம் அந்த பாலு பெரியப்பா ஏற்பாடு.
Advertisement
அங்க போய் பொண்ணைப் பார்த்து, அதுக்கும் பிடிச்சுப் போய், அங்கே இருந்தே ராஜூகிட்ட வீடியோ காலில் பேசவும் வச்சுருக்கு! அவனும் பொண்ணை ரொம்ப பிடிச்சுருக்குன்னு நேரா அந்த பொண்ணு கிட்டயே சொல்லிட்டானாம்!
Advertisement
அதுதான் இப்ப நம்மள உறுதி பண்ண கிளம்ப சொல்லுது” என்றான் கணேஷ் ராம், ராஜுவின் அண்ணன்.
பிரியதர்ஷினிக்கும் ராஜ்மோகனுக்கும் நடுவில் பிறந்தவன்!
ராஜ் மோகனின் பெற்றோர் – சங்கரலிங்கம் கமலா அம்மாள்.
Advertisement
சங்கரலிங்கம், தனக்கு முதலில் பெண் குழந்தை பிறந்ததும், வருங்காலத்தில் எல்லோர் மேலும் மிகவும் ப்ரியமாக இருப்பாள் என்று நினைத்து இந்த பெயரை வைத்தவர்,
தன் கடைசி நாட்களில் அதை எண்ணி வருந்தும்படி ஆகிற்று, அவர் மகள் பிரியதர்ஷினி இல்லை, பேராசை தர்ஷினி என்று அறிந்த போது!
அதே போல் அடுத்தவன் கணேஷ் ராம்.
உண்மையில் அவன் கணேஷ் ராம் அல்ல! ஒரு சரியான கமிசன் ராம்!
சொந்த வீட்டிலேயே கமிசன் அடிப்பவன்! சொந்த தம்பியிடமே பொய்க் கணக்கு சொல்லி கமிசன் அடித்துக் கொண்டிருப்பவன்!
அவனுக்கு ஜாடிக்கு ஏத்த மூடியாய் மனைவி வனிதா!
சங்கரலிங்கம் கமலா அம்மாவிற்கு மொத்தம் மூன்று குழந்தைகள்.
சங்கரலிங்கம், இரும்பு கம்பிகள் தயாரிக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்தார்.
சரியாக மூத்தவள் ப்ரியாவிற்கு திருமணத்தின் போது, பல்வேறு நிர்வாக பிரச்சினைகள் காரணமாக அந்த நிறுவனம் மூடப்பட்டு விட்டது!
ஆனால் அவருக்கு செட்டில்மென்ட் தொகை கொடுத்தே அனுப்பியிருந்தார்கள்.
அந்த பணத்தைக் கொண்டும், பத்தாதற்கு வீட்டின் மீது கடன் வாங்கியும் தான் அவர் அவள் திருமணத்தை நடத்தியதே!
சீர்வரிசை ஒன்றிற்கும் ஒரு குறைவும் அவர் வைக்கவில்லை, என்ற போதும், ப்ரியாவிற்கு மட்டும் அது நிறைவாகவே இல்லை!
பிரிட்ஜ் கேளுங்க, வாஷிங் மெசின் கேளுங்க என்று அவளே மாப்பிள்ளை வீட்டை விட்டு கேட்க கூட செய்தாள்!
மேலும் அடுத்து வந்த இரண்டு வருடங்கள் எவ்வளவு கேட்டு கேட்டு வாங்கிக் கொள்ள முடியுமோ அவ்வளவும் வாங்கிக் கொண்டுவிட்டாள்!
“என் ஓரகத்தி வீட்டில் வெள்ளி குத்து விளக்கு வாங்கி கொடுத்திருக்கிறார்கள், எனக்கும் அது போல வேணும்” என்று சொல்லி தலை கார்த்திகையின் போது ஒரு ஜோடி வெள்ளிக் குத்துவிளக்கு கேட்டு வாங்கிப் போனாள்.
அதே போல, ஓவ்வொரு விசேஷத்திற்கும் என் மாமியார் வீட்டுப் பழக்கம் அது இது என்று பலதும் சொல்லி சொல்லி வாங்கி போய் விடுவாள்.
அதே போல் பிரசவ செலவும் பயங்கரமாக இழுத்து விட்டு விட்டாள்.
முதல் பிரசவத்திற்கு இங்கிருந்து கொண்டு கமலா அம்மாவை படாதபாடு படுத்திவள், அடுத்து இரண்டாவது பிரசவத்திற்கும் மீண்டும் வளைக்காப்பு அது இதுவென்று ஒரு செலவை இழுத்து விட்டாள்.
சங்கரலிங்கம் ரிட்டயர்ட் ஆன பின்னும் சும்மா வீட்டிலிருக்காமல், ஒரு கட்டிட சாமான்கள் விற்கும், இரும்பு டிஎம்டி கம்பிகளின் டீலர் ஒருவரிடம் வேலைக்கு சேர்ந்து சம்பாதித்தும் கூட அந்த வீட்டின் கடனை முழுமையாக அடைக்க முடியவில்லை!
அவருக்கு உடல்நிலை மோசமானது தான் மிச்சம்!
அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டு, டயாலிசிஸ் செய்யும்படி ஆகி விட்டது!
மேலும் வீட்டின் மேல் தான் கடன் வாங்கி செலவு செய்தார்கள்!
கடன் மேலும் மேலும் ஏறிக் கொண்டிருந்தது, அடுத்து வந்த மருத்துவ செலவுகளால்!
அப்போதும் கூட ப்ரியா தன் அம்மா வீட்டில் எதையும் வாங்கி செல்லாமல் இருந்ததில்லை!
வாங்கி வைத்திருக்கும் ரேசன் பொருட்களைக் கூட கேட்டு வாங்கி போய் விடுவாள்.
ஒரு கட்டத்தில் சிகிச்சைகள் கொடுத்தும் பலனில்லாமல் சங்கரலிங்கம் இறந்த போது, கணேஷ் ராம் பாலிடெக்னிக் பைனல் இயர் படித்துக் கொண்டிருந்தான்.
அதுவும் ப்ளஸ் டூவில் அவன் வாங்கிய மார்க்கை வைத்துக் கொண்டு ஆர்ட்ஸ் காலேஜில் கூட சீட் கிடைப்பது கடினம்! அப்படியே படித்தாலும் உடனே வேலை கிடைப்பது அதை விட கடினம்!
எனவே தான் அவனை பாலிடெக்னிக்கில் சேர்த்து விட்டார்கள்! சிவில் தான் கிடைத்தது! அப்போதையை நிலவரப்படி!
ராஜ்மோகன் டென்த் பெயிலாகி இருந்தான். அவன் அப்பாவுடன் ஹாஸ்பிட்டலுக்கு அலைந்து அலைந்து!
அப்பா இறந்த பின், யாராவது வேலைக்குப் போய் தான் குடும்பத்தைக் காப்பற்ற வேண்டும் என்ற நிலையில், ராமுவை வேலைக்கு போக சொன்னார் கமலா அம்மாள்.
“ம்ம். நான் மாட்டேன். நான் பிஈ சேரணும். டைரக்ட் செக்கன்ட் இயர்!” என்று சொல்லி, மேலும் கடன் வாங்கி காலேஜில் சேர்ந்தான்.
தானாவது சீக்கிரம் வேலைக்கு போய் அம்மாவின் கஷ்டத்தை தீர்க்க வேண்டும், வீட்டுக் கடனையும் அடைக்க வேண்டும் என்று நினைத்து ராஜு தானாகவே ஐடிஐ யில் வெல்டிங் கோர்ஸ் சேர்ந்து விட்டான்!
கமலா அம்மா, அடுத்து வந்த ஓரிரு வருடங்களை எப்படி தான் கடந்தார் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!
ஜம்பமாக பிஈ சேர்ந்துவிட்ட ராமிற்கு படிப்பு வரவில்லை!
அவன் படித்து முடித்த போது அறுதி பெரும்பான்மை அரியர்களோடு வெளியே வந்திருந்தான்.
ராஜு அதற்குள் தன் நண்பனின் அப்பா மூலம், எந்த வேலைஎன்றாலும் செய்ய தயார் என்று சொல்லி விசா வாங்கி தன் பதினெட்டு வயது முடிந்த இரண்டாம் மாதத்திலேயே துபாய்க்கு ப்ளைட் ஏறி விட்டான்!
இங்கு, சங்கரலிங்கத்தின் மகன் என்பதால் அத்தனை அரியர்கள் இருந்தும் ஒரு கட்டிட இஞ்சினியர் ராமுவை தன் உதவி ஆளாக சேர்த்துக் கொண்டார்.
ஆனால் அவன் அங்கு அவருக்கு நேர்மையாக இல்லாமல், செங்கல்லில் ஆரம்பித்து, சிமென்ட், கட்டிட வேலை செய்யும் எடுக்கும் பொருட்களின் வாடகை வரை, வகை தொகையில்லாமல் கமிசன் அடித்தும், பொய் கணக்கு எழுதியும் முதலாளியின் பெயரையே கெடுக்க பார்த்தான்!
அவனை வேலையை விட்டு அனுப்பி விட்டார் அந்த இஞ்சினியர்!
அதன் பின் வேறு பல இடங்களில் வேலை செய்தும், இந்த கமிசன் அடிக்கும் புத்தியால் அவனுக்கு வேலை நிரந்தரமாக கிடைக்க வில்லை!
அவன் உருப்படியாக எதையும் கற்றுக் கொள்ளவும் இல்லை!
எதைப் பார்த்தாலும் அவன் புத்தி இதில் எப்படி கமிசன் அடிக்கலாம் என்றே தான் எண்ண ஆரம்பித்தது!
அது பின்னாட்களில் வீட்டிலும் தொடர்ந்தது!
ராஜ்மோகன் துபாயில் ஒரு கார் சர்வீஸ் ஸ்டேசனில் தான் வேலைக்கு சேர்ந்திருந்தான்!
கிடைக்கும் ஓய்வு நேரத்திலும் ஓடி பார்த்து காசு சேர்த்து ஊருக்கு அனுப்புவான்.
அதைக் கொண்டே இங்கு அனைத்தும் நடந்தது!
கொரானா காலத்தில் ஒரு சிலர் வேலையில்லாமல் போய் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க, இவர்கள் வீட்டில் எல்லோரும் வகை வகையாய் செய்து சாப்பிட்டார்கள்!
பாதாம் அல்வா தான்! பால் கோவா தான்! கறி விருந்து தான்!
ப்ரியா வேறு தன் இரு குழந்தைகளோடு இங்கேயே டென்ட் அடித்து தங்கி விட்டாள் பல மாதங்களாக!
நல்ல வாயன் சம்பாதிப்பதை நாற வாயன் சாப்பிடும் நிகழ்வுகள்!
பழசும் பட்டும் சாப்பிட்டு விட்டு, ராஜு துபாயில் கஷ்டப்பட்டு அதிகபடி ஒடி பார்த்து, அவர்களுக்குள் நடத்திக் கொள்ளும் ஏலசீட்டில் சேர்ந்து பணம் சேமித்து ஊருக்கு அனுப்பிக் கொண்டிருந்தான்!
கொஞ்சம் கொஞ்சமாக அந்த வீட்டுக்கடனை முழுவதுமே அடைத்து விட்டான் ராஜு!
அந்த கடன் முடிந்து அப்பாடா என்று மூச்சு விடவும் விடவில்லை சூழ்நிலை!
அடுத்து, ராமுவுக்கு திருமணம் , ஒரு தனியார் பேங்கில் வேலை பார்த்த வனிதாவோடு !
திருமணத்தின் போதும் ராமு எந்த வேலையும் பார்த்துக் கொண்டிருக்க வில்லை!
ரியல் எஸ்டேட் பிஸினஸ், அப்புறம் அவன் என்ஆர்ஐ தம்பியின் இன்வெஸ்ட்மென்ட்களை,
ஷேர் மார்க்கெட் போர்ட்போலியோ பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அவன் சொல்லியதையும்,
சொந்த வீட்டையும், கூடவே அவனது பாங்க் ட்ரான்சாக்சன்களையும் நம்பி அவனுக்குப் பெண் கொடுத்தார்கள்!
ஆனால் கல்யாணம் ஆன கொஞ்ச நாட்களிலேயே வனிதாவிற்கு அவன் ஒரு வெட்டி ஆபிசர் என்று தெரிந்து விட்டது!
அவளுக்கும் நிரந்தரம் இல்லாத வேலை தான்!
அவள் வீட்டிலும் அவள் அப்பா மிகவும் கஷ்டப்பட்டுதான் படிக்க வைத்தார் அவளையும் அவள் தங்கை அனிதாவையும்!
அப்போது தான் அனிதா பிஈ சேர்ந்து இருந்தாள்!
எனவே, தான் கோபித்துக் கொண்டு தாய்வீடு போனாலும், ஒன்றும் ஆகப் போவதில்லை!
அவள் கணவன் வேலைக்கு தான் போவதில்லையே தவிர, பணம் சம்பாரித்துக் கொண்டு தானே இருக்கிறான்!
என்ன, அவன் தம்பி முழித்துக் கொண்டு உஷாராகும் வரை கவலை இல்லை!
ஆனால் அவனோ, இவள் நினைத்தற்கும் மேலாக இளிச்சவாயனாக, அண்ணன் ராமன் போட்ட கோட்டை தாண்டாத லட்சுமணன் போல இருந்தான்!
அண்ணன் சொன்னால் சரி. ஏன் எதற்கு என்று கேள்வி கேட்காமல் பணம் அனுப்பி விடுவான்!
ஒரு நாளும் என்ன கணக்கு என்று கேட்டதே இல்லை!
அதனால் தான், அங்கங்கு சல்லிசாக வரும் பிளாட்களை தன் பேரில் வாங்கிப் போட்டு கொண்டிருக்கிறான் ராமு!
அதே போல வீட்டின் கொல்லைப்புறம் இடத்தை விலைக்கு கேட்டு கேட்டு தொந்திரவு செய்த பின்பக்க வீட்டுக்காரரிடம் ஒரு நல்ல தொகைக்கு ஒரு சிறிய இடத்தை, ராஜு லீவுக்கு ஒருமுறை ஊருக்கு வந்தபோது விற்ற போதும், என்ன விலைக்கு கொடுத்த, என் பங்கு எவ்வளவு என்று எல்லாம் அவன் கணக்கு கேட்கவே இல்லை!
வெறுமனே வந்து கையெழுத்து மட்டும் போட்டான்!
அப்போதும் பிரியா தகராறு செய்தாள், விற்ற பணத்தில் பங்கு கேட்டு!
“இது அப்பாவோட வீடு. நானும் கையெழுத்துப் போட்டா தான் உங்களால விக்க முடியும்! சட்டப்படி பொண்ணுக்கும் உரிமை உண்டு!” என்று சட்டம் பேசினாள்.
“ஓ. அப்படியா? அப்பா சொத்தில் பங்கு கேக்கற இல்ல? அப்போ அப்பா வச்சுட்டு போன கடன்லயும் உனக்கு பங்கு உண்டுதானே!
உன் கல்யாணத்துக்கு தான் அப்பா வீட்டின் மேலே கடன் வாங்கினார்!
அப்போ அந்த கடன் எவ்வளவு, எவ்வளவு வட்டிக் கட்டினோம்னு கணக்குப் பார்த்து சொல்றோம்.
நீ அதில உன் பங்கை கொடுத்திட்டு, மீதிய, அது இருந்தா வாங்கிட்டுப் போ.. இல்ல நீ கொடுக்கிற மாதிரி இருந்தா இப்பவே, இங்கயே எண்ணி வச்சாகணும்” என்றி ராமு கறாரான குரலில் சொல்லி விட,
“அண்ணே, ஏன் அண்ணே” என்ற ராஜுவை அடக்கினான் ராமு.
“அய்யோ. மாப்பிள்ள, அதெல்லாம் வேண்டாம், இவ கிடக்கிறா, போடி அந்த பக்கம்” என்று பிரியாவின் கணவன் வேல்முருகன் அவளை அடக்கி அழைத்து சென்றான்.
“ஏங்க என்னை அடக்கி வைக்கறீங்க? நமக்கு ரெண்டும் பொம்பள பிள்ளைங்க தான் தெரியுமா?
இவனுங்க இப்பவே இப்படி இருக்காங்க!
அம்மா பார்த்துக்க.. உன் காலத்துக்கு அப்புறம், என்னோட கதி?” என்று ஒரு பாட்டம் அழுது, கடைசியில்,
“அக்கா, நீ என்னோட ஷேர் அமவுண்ட் நீ எடுத்துக்கோ” என்று ராஜு வாயைத் திறந்து சொல்லும் வரை அழுது தீர்த்தாள் அவள்!
“இல்லடா.. ராஜு. வீட்டுப் பொறந்த பொண்ணு என்னிக்கும் கண் கலங்க விடக் கூடாது! அது குடும்பத்துக்கு ஆகாது!
அதான் நான் இவ்வளவு சொல்றேன்!
ஆனா, அம்மா இப்ப கூட உன் சின்ன மவன் தான் நான் அழறத பார்த்து இரக்கப்படுறான்! ஆனா நீ ஒரு பேச்சுக்கு கூட உன்னோட ஷேர் பணத்தை பேத்திகளுக்கு வச்சுக்கோன்னு கொடுக்க மனசு இல்லல உனக்கு!
என்ன இருந்தாலும் என்னோட பொறந்தவன் ராஜு தான்!
எனக்கு அப்பா இடத்துல தெரியறான்” என்று டயலாக் விட்டாள்.
“ஆமா இதுக்கொன்னும் கொறைச்சல் இல்லை! சீர் வாங்கிக்க மட்டும் தான் பொறந்த வீடு, பொறந்தவன்!
ஆனா செய்யும் போது இல்ல! ஆமா.. எங்களுக்கு குழந்தை பிறந்தப்போ அத்தை நீங்க என்ன சீர் செஞ்சீங்க என் பொண்ணுக்கு?
கேட்டா எங்க மாமியார் வீட்டில் அதெல்லாம் பழக்கம் இல்லன்னு சொல்லிட வேண்டியது!
வாங்கிக்க ஒரு ரூல்ஸ், செய்யறதுக்குன்னா அப்போ பழக்கம் இல்லைன்னு கத சொல்றது!
இங்க பாருங்க.. இந்த பொறந்த பொண்ணு கண் கலங்க கூடாதுன்ற செண்டிமெண்ட் எல்லாம் உங்களுக்கு அப்லையே ஆகாது!” என்று வனிதா சண்டைக்கு நின்றாள்!
அக்காவும் தம்பியும் இப்படியாக நாயும் பன்றியுமாக அடித்துக் கொண்டாலும், ஒரு விசயத்தில் மட்டும் மகா ஒற்றுமை!
அது ராஜுவின் கல்யாண விஷயம்!
முடிந்த வரை அவன் கல்யாணத்தை தள்ளிப் போடவே முயன்றனர்!
அதை திறம்பட செய்தும் வந்தனர்!
அப்படியே அவனுக்கு கல்யாணம் பண்ணி தான் ஆக வேண்டும் என்றாலும் கூட, தங்களின் கைகளில் கண்ட்ரோலில் அடங்கி இருக்கும் அப்பிராணி பெண் யாராவது கிடைத்தால் வேண்டுமானால் பண்ணி வைக்கலாம்!
ஆனால், இந்த காலத்தில் எந்த பெண் அப்படி இருக்கிறாள்?
படித்தாலும், படிக்காவிட்டாலும், கிராமம் என்றாலும், நகரம் என்றாலும் பெண்கள் எல்லாம் படித்து விவரமாக தானே இருக்காங்க! பார்ப்போம் என்று அவன் கல்யாணத்திற்கு பெரிய தடைக்கல்லாக இருந்தார்கள் உடன்பிறப்புகள்!
கமலா அம்மா தான் புலம்புவார்!
“நான் கண்ணை மூடுவதற்குள் என் மவன கல்யாணக் கோலத்தில் பார்த்துட்டு சாக வேண்டும்” என்று!
“நாங்க என்னம்மா, பார்க்காமலா இருக்கோம்! எல்லாம் பார்த்துட்டு தான் இருக்கோம்! எங்க காலம் மாதிரி இல்ல இப்ப!
ஒரு ஒரு பொண்ணு வீட்டுக்காரங்க எல்லாம் எவ்வளவு ரூல்ஸ் போடுறாங்க தெரியுமா?
சொந்த வீடு, கார் இருக்கணும், ஆனா அக்கா தங்கச்சி இருக்க கூடாது!
அப்படியே இருந்தாலும் அவங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி போய் இருக்கணும்!
அப்புறம் மாப்பிள்ளை சம்பளம் ஐம்பது ஆயிரம் கம்மியா இருந்தா ஜாதகத்தை கையில கூட வாங்க மாட்டேங்கிறாங்க தெரியுமா உனக்கு!
இப்படி நிறைய இருக்கு!
சும்மா வீட்டில உக்காந்து கிட்டு பொண்ணு பார்க்கல பார்க்கலன்னு எங்களே குறை சொல்லிட்டு இருக்காதே!” என்றான் ராமு.
“அது மட்டுமில்ல, வெளி நாட்டில் வேலைப் பார்க்கும் மாப்பிள்ளைக்கும் பொண்ணை தர யோசிக்கிறாங்க” என்றாள் ப்ரியா!
“அப்போ என்ன தாண்டி சொல்றீங்க? என் மவனுக்கு கல்யாணமே ஆகாதா?”
“ஆகாம என்ன? அதான் பார்த்துட்டு இருக்கோமே!”
“என்னத்த பார்க்க, நான் ஒண்ணு பண்றேன்! நான் பேசாம என் பேத்தியவே பொண்ணு கேக்கப் போறேன்! உங்க வீட்டுக்கு வந்து!”
பிரியா அதிர்ந்து போனாள்!
அய்யோ, இது என்ன அம்மா மனசுல இப்படி ஒரு எண்ணம் இருக்கா?
நானே ரெண்டும் பொண்ணு பொண்ணுன்னு சொல்லியே ராஜு கிட்ட பணத்தை வாங்கி,
அதுல நல்லா படிச்ச, டீசண்ட்டா இருக்கிற கை நிறைய சம்பாதிக்கிற ஒரு ஐடி மாபிள்ளையை இல்ல என் பொண்ணுக்கு பார்ப்பேன்! ராஜுவை போய் எப்படி? என்று மனதுள் நினைத்தவள்,
“அய்யோ அம்மா, அப்படி ஏதும் வந்து நின்னுடாத! தாய் மாமன், தாய்க்கு சமானம்! அவனுக்குப் போய்..” என்று பிரியா சொல்ல,
இப்போது, வனிதாவும் அவளுக்கு துணைக்கு வந்தாள்.
அய்யோ, இது என்ன கிழவி இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுது!
இது சொல்ற மாதிரி ப்ரியாவோட பொண்ணு, இங்க வந்திட்டா, நானும் என் புருசனும் தலையில துண்டைப் போட்டுக்கிட்டு வெளியே போக வேண்டியது தான்!
பொண்ணைக் கட்டிக் கொடுத்துட்டு சட்டமாக இங்க வந்து டேரா போட்டுடும் இந்த பிரியா!
இப்பவே அம்மா வீட்டுக்கு வந்து விட்டு போகும் போது, இங்கிருந்து என்ன மேக்சிம் பீராய்ந்து கொண்டு போக முடியுமோ அவ்வளவையும் கொண்டு போய்டுது.
கிழவி, தனக்கு ரவை உப்புமா வயிற்றுக்கு சேர மாட்டேன்கிறது என்று இடுப்பு வலிக்க, திருகையில் திரித்து வைத்திருக்கும் அரிசி உப்புமா ரவையைக் கூட விடாது, அப்படியே டப்பாவோடு எடுத்துட்டு போய் விட்டாள் போன வாரம்!
பின் அந்த சில்வர்டப்பாவும் திரும்ப வரவே வராது!
அரிசி ரவையே இப்படியென்றால் பிரிட்ஜில் இருக்கும் முந்திரி பாதாம் எல்லாம் எம்மாத்திரம்! எல்லாம் ஸ்வாகா தான்!
அதுமட்டுமல்ல, உடன்பிறப்புகளில் அவங்க ரெண்டு பேரும் மெஜாரிட்டி ஆகி, தானும் தன் புருசனும் தனியாளா போய்டுவோம்!
நல்லவேள, இந்த பிரியாவே இதுக்கு ஒத்துக்கிடல! என்று மனசுக்குள் நினைத்தவள்,
“ஆமா அண்ணி சொல்றது சரிதான்! தாய்மாமனை, இல்ல ரத்த சொந்தத்தில் யாரையுமே கல்யாணம் பண்ணக் கூடாது!
மீறி பண்ணினா, பொறக்கற குழந்தை ஊனமாக பிறக்க நிறைய சான்ஸ் இருக்கு!” என்று ப்ரியாவுக்கு ஒத்து ஊதினாள்!
“அப்போ, உன் தங்கச்சிக்கு பேசலாமா?” இதக் கேட்டவுடன் வனிதாவிறகு தூக்கி வாரி போட்டது!
“என்ன.. என்னோட தங்கச்சிக்கா? நீங்க கொஞ்சமாச்சும் புத்தியோட தான் பேசுறீங்களா?
அவ ஒரு இஞ்சினியர்! அவளுக்கு எப்படி ஒரு கம்பெனியில கார் கழுவுற வேலை செய்யறவனுக்கு பொண்ணு கேக்குறீங்க? அடுக்குமா இது?” என்று கத்த ஆரம்பித்து விட்டாள்!
கமலா அம்மா அதிர்ந்து போனார்!
என்ன இப்படி என் மகனைக் கேவலமா பேசுறா இவ!
“ஏய்.. வாயை அடக்கி பேசு. அவன் அப்படி கார் கழுவி சம்பாரிச்சு அனுப்புற பணத்துல தான் நீயும் உன்னோட புருசனும் நல்ல உக்காந்து வக்கனையா வகை சொல்லி வகை சொல்லி தின்னுட்டு இருக்கீங்க!” என்றார் கோபமாக!
அவ்வளவு தான்!
“ஏங்க இங்க பாருங்க. உங்கம்மா பேசுற பேச்சை! நாம் இங்க உக்காந்து ஓசி சோறு திங்கறோம்னு சொல்லிக் காட்டுறாங்க!
தம்பி.. தம்பின்னு நீங்க அவனுக்கு பார்த்து பார்த்து செஞ்சுட்டு இருக்கீங்க!
ஆனா இவங்க பேசுற பேச்சைப் பாருங்க! நீங்க முதல்ல கிளம்புங்க!
என் அம்மா வீட்டுக்கு போய்டலாம்!
இவங்கள் உங்க தம்பியே வந்து இருந்து பார்த்துக்கட்டும்! இல்ல தன்னோடவே கூட்டிட்டு போகட்டும்!
கிளம்புங்க நீங்க” என்று சொல்லி ஆடித் தீர்த்து விட்டாள்!
விஷயம் ராஜு காது வரை போய்,
“நீ ஏன்மா, அவங்க கிட்ட போய் பொண்ணு கேட்ட?”
“இல்லடா, அன்னிக்கு அவ தங்கச்சிக்கு கடைசி வருஷம் பீஸ் கட்ட பணம் இல்ல மாப்பிள்ளைன்னு அவ அப்பா உனக்கு போன் பண்ணி அழுதாருன்னு, நீ சந்துருவுக்கு பணம் அனுப்பி என் மூலமா கொடுத்தப்ப எல்லாம் நீ என்ன வேலை பார்க்கிறன்னு அவங்க கண்ணுக்கு தெரியலையா?
இப்ப மட்டும் இவ்வளவு பேசுறா!”
“சரி விடும்மா. நான் எதை எதிர்பார்த்தும் பணம் அனுப்பல! நாம தான் படிக்க முடியாம போச்சு! ஒரு படிக்கிற பிள்ளைக்கு உதவலாம்னு தான் நான் பணம் தந்தேன்!”
“இல்லடா.. இப்படியே நீ இருந்துடுவியோன்னு பயமா இருக்குடா! உனக்கு நான் கண்ணை மூடறதுக்குள்ள ஒரு கல்யாணத்தைப் பண்ணி பார்க்கணும் அதான்!” போனிலே அழுது விட்டார் கமலா அம்மாள்!
“சரி விடும்மா. எனக்குன்னு ஒருத்தி இன்னும் பொறக்காமலா இருப்பா! விடு பார்த்துக்கலாம்!” என்று அவன் சொல்லி விட்டாலும் கமலா அம்மா விட்டு விடாமல் தன் அத்தை மகன் பாலுவிடம் ராஜுவின் ஜாதகத்தைக் கொடுத்து இருந்தார் பெண் பார்க்க!
வீட்டில் யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டார். எல்லாம் முடிந்த பின்னே தான் சொல்ல வேண்டும் என்று!
இதோ பெண் வீட்டிற்கு கிளம்ப வேண்டியது தான்!
சபையில் வைத்து என்ன பண்ணி விட முடியும் இவர்களால்!
பெண் பார்த்து விட்டு, கையோடு தட்டு மாற்றிக் கொண்டு வந்து விட வேண்டியது தான்!
கமலா அம்மா நினைப்பில் நெருப்பை அள்ளிப் போட்டாள் ப்ரியா!
மகியின் வீட்டில் போய் பெண் பார்த்து விட்டு, பஜ்ஜி கேசரி எல்லாம் சாப்பிட்டு விட்டு, கேட்டாள்.
“பொண்ணோட ஜாதகம் கொடுங்க! எங்க குடும்ப ஜோசியர் பார்த்து சொன்ன பின்னாடி தான் மேற்கொண்டு பேச முடியும்!”
error: Content is protected !!