Skip to content
Post Views: 4,547
கொதிக்க கொதிக்க கஞ்சி தண்ணீரை கையில் கொட்டிக்கொண்டான் மருதவேலு எரிச்சலில் “அவுச்” என்று கையை வேகமாக உதறிக்கொண்டான்.
Advertisement
“டேய் டேய் வேலு ஏண்டா இப்படி பண்ற சொன்னாலும் கேக்க மாட்டற ஐயோ ஏற்கனவே காயம் பட்டதிலேயே கொட்டிக்கிட்டயே” என்று பதறி அவன் கையைப் பிடித்தார் மயிலம்மா, வேகமாக அவர் கையை உதறியவன் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு வெளியில் சென்றான்.
Advertisement
Advertisement
“ஏங்க நீங்களும் ஒண்ணுமே கேக்க மாட்டறீங்க இவன் இப்படி பண்றானே” என்றார் கணவனைப் பார்த்து.
Advertisement
“அவன் வேற என்ன செய்யணும்னு எதிர்பாக்குற நீ” என்றவர் “இதெல்லாம் எங்க போய் முடியபோகுதோ ஒத்த ஆம்பள புள்ளய பெத்து என்ன பிரோயோசனம் அவன் வாழ்க்கைல நிம்மதி இல்ல அவன் ஆசைப்பட்டதை நடத்திக்கொடுக்க முடியாத நான் எல்லாம் என்ன அப்பன்” என்றவர் அவரும் வெளியில் சென்றுவிட்டார்.
கடந்த மூன்றுமாதமாக இதே கதைதான் இங்கே, அன்று காமாட்சி வீட்டிற்கு சென்று கத்திவிட்டு வந்த மறுநாளே வீட்டிற்கு வந்துவிட்டான் மருதவேலு ஆனால் வேலைக்குச் செல்வதில்லை காலை ராமலிங்கம் மட்டும் ஷேர் ஆட்டோ ஓட்டச் சென்றார்.
அவன் வீட்டிலேயே படுத்துக் கிடந்தான் அதன் பிறகு வெளியில் செல்பவன் குடித்துவிட்டு எங்கோ விழுந்து கிடக்கிறான் என்று சொல்லி அவனை அழைத்து வருவார் ராமலிங்கம், சில நாட்கள் இரண்டு மூன்று நாட்கள் வரமாட்டான்.
வேலைக்குச் செல்லாததால் வீட்டில் செலவுக்கும் பணம் தருவதில்லை ராமலிங்கமும் பாதி நாள் உடல்நிலை சரியில்லை என்று படுத்துவிடுவார் மயில்லம்மா திண்டாடினார் அத்தியாவசிய தேவைக்கே பொருட்கள் இல்லை வாங்க காசும் இல்லை வண்டிக்குப் பெட்ரோல் போடக் கூடக் காசு இல்லடி என்று எரிந்து விழுவார் ராமலிங்கம்.
அதற்கிடையில் எங்குச் சாப்பிடுகிறான் சாப்பிடுகிறானா இல்லையா என்று தெரியாமல் இருந்தது சில நாட்கள், பிறகு கொஞ்சமாக மளிகை பொருட்களை வாங்கிவந்து வீட்டிலே சமைக்க தொடங்கினான் கையில் வீர தழும்புகள் பல வந்ததே ஒழிய அவனுக்குச் சமையல் வர வில்லை.
நேற்று தான் கத்தரிக்காயை அருவாமனையில் வெட்டும்போது விரலையும் சேர்த்து வெட்டிக்கொண்டான் அதிலே இன்று சூடான நீரும் விழுந்திருந்தது தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டார் மயிலம்மா.
வழியும் கண்ணீரை துடைக்கக்கூட முடியாமல் மூக்கை உறிஞ்சிக்கொண்டே அவனுக்கு மீன் குழம்பு ஊற்றிய சாதத்தை பிசைந்து ஊட்டிக்கொண்டிருந்தாள் காமாட்சி.
“அழாதீங்க ராணியம்மா சின்னக் காயம்தான்” என்றான்.
“இது சின்னக் காயமா ஏன் இப்படி செய்றீங்க நான்தான் சமைச்சு கொண்டு வரேன்னு சொல்றேனே அப்புறமும் ஏன்” என்றாள் ஆற்றாமையோடு.
அவள் கண்ணீரை துடைத்து முடியைச் செவியின் பக்கம் ஒதுக்கியவன் “நீங்கச் சமைச்சு நான் சாப்பிட்டு சொகுசா இருந்தா மயிலாம்மா எப்போ மனசு இறங்குறது நீ எப்போ என்னை வந்து சேர்ரது, உங்க அப்பா வேற எங்க வீட்டில எல்லார் சம்மதமும் வேணும் கல்யாணத்தை சொந்த பந்தமெல்லாம் கூப்டு பெருசா செய்யணும் தனிக்குடித்தனம் வேண்டாம் அப்படின்னு கண்டிஷன் போடுறாரு இல்லனா பொண்ணு குடுக்க மாட்டாராம்” என்றவனை பாவமாகப் பார்த்தாள்.
“அவர் பொண்ணை பெத்தவர் அவர் பயம் எனக்குப் புரியுது எனக்கும் அம்மா அப்பாவை விட்டுட்டு தனியா போகணும்னுல்லாம் இல்லை ஆனாலும் எங்க அம்மாவை எப்படி வழிக்குக் கொண்டு வரது அதான் இப்படி” என்றான்.
வீட்டிலிருந்து வெளியில் சென்றவன் நேரே மருத்துவமனை சென்று மருந்திட்டு ஊசியும் போட்டுக்கொண்டு காமாட்சியை அழைத்தான் “பசிக்குது ராணியம்மா சாப்பாடு எடுத்துட்டு வரீங்களா” என்றிருந்தான்.
மீனை வாங்கி உள்ளே வைத்திருந்தார் அவளின் பாட்டி மதியம் குழம்பு வைக்க ஜெட் வேகத்தில் அதைக் குழம்பு வைத்துக் கொஞ்சம் வறுத்து எடுத்துக்கொண்டு ஆபிஸ்க்கு அரைநாள் லீவ் சொல்லிவிட்டு நேரே அவன் சொன்ன மெக்கானிக் கடைக்கு வந்துவிட்டாள், அவன் நண்பனின் கடை உள்ளே தனியாக அமர்ந்துகொண்டனர்.
“போதும் வயிறு நிறைஞ்சுடுச்சு நீ கிளம்பு” என்றான் அவள் அசையாமல் அமர்ந்திருந்தாள்.
“என்ன” என்றான்.
“ரொம்ப வலிக்குதா மடில படுத்துக்குறீங்களா நான் லீவ் போட்டுக்குறேன்” என்றாள்.
அவன் இதழ்களில் மெலிதான புன்னகை “ரொம்ப ஏங்கிப்போய் இருக்கேன் மடில இப்போ படுத்தா சரியா வராது நீ கிளம்பு ஒன்னும் பிரச்சினையில்ல” என்றான் அவளும் ஒன்றும் சொல்லாமல் கிளம்பிவிட்டாள்.
இவனுடைய போராட்டத்துக்குத் தந்தையும் உதவி ஆகாயலே அவனால் சரியாகக் கொண்டுபோக முடிகிறது, முதல் இரண்டு நாட்கள் மட்டுமே வீட்டில் வெட்டியாக அமர்ந்திருந்தான் அதன் பிறகு ஊர் சுற்ற போவதாகக் காண்பித்துக்கொண்டு சாவரிக்குதான் சென்றான்.
வெளியூர் பயணம் என்றால் அவன் குடித்துவிட்டு லாட்ஜில் கிடப்பதாகக் கதை சொல்லுவார் ராமலிங்கம் அதே போல உன் புள்ள பஸ்ஸ்டாப்ல படுத்துக்கிடக்குறான் அவன் பிரென்ட் அந்த மெக்கானிக் இருக்கானே அவன் கடைல விழுந்து கிடக்கிறான் என்று அவன் சவாரி செல்லும் போதெல்லாம் இவராக நேரில் பார்த்ததுபோலக் கதை சொல்லுவார்.
“நீங்க ஷேர் ஆட்டோ ஓட்டுன காசுன்னு இதைக் கொடுங்க அம்மாகிட்ட” என்று இவன் காசு கொடுக்க “அந்தப் பிள்ளையைச் சீக்கிரம் கட்டிக்கணும்னு ஆசை இருக்கா இல்லையா உனக்கு” என்றார் அவர்.
“ஏன்” என்றான் இவன்.
“உங்க அம்மாக்கு காசு கைல வந்தா அவ உன்னைப்பத்தியோ என்னைப்பத்தியோ ம**** கூட மதிக்க மாட்டா நானும் முழு காசையும் கொடுக்கமாட்டேன் இப்படியே கைல காசு இல்லாதமாதிரியே போகட்டும் நீ பேசாம இரு” என்றுவிட்டார்.
இன்று ஒரு சவாரி இருந்தது விழுப்புரம் வரை கையில் எரிச்சல் இருந்தது வண்டி ஓட்ட முடியுமா தெரியவில்லை அவளிடம் சொல்லவில்லை சொன்னால் அதற்கும் அழுவாள் போக வேண்டாம் என்பாள் அவன் யோசனையில் அமர்ந்திருக்க உள்ளே வந்தார் ராமலிங்கம்.
“டாக்டர்கிட்ட போனியா” என்றார்.
“ஹ்ம்ம்” என்றான்.
“இன்னைக்கு சவாரி இருக்குல்ல நீ போக வேண்டாம் நான் போறேன்” என்றார் அவர்.
“அது சரியா வராது போக வர அஞ்சு மணிநேரம் ஆகும் உங்களால அவ்ளோ தூரம் போக முடியாது” என்றான்.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல நீ போக விட மாட்ற அதான் நான் போறதில்ல இப்போ என்ன இன்னைக்கு ஒருநாள் தானே நான் போயிட்டு வரேன்” என்றவர்.
“அப்புறம் கல்யாணத்துக்கு போறதுக்கு ஒரு குடும்பம் வேன் கேட்டிருக்காங்க நம்ம ரமேஷ்கிட்ட சொல்லியிருக்கேன் அவன் பாத்துப்பான் நான் விழுப்புரம் போய்ட்டுவாரேன்” என்றவர் “டேய் கதிர் திருப்பதிக்கு ஒரு ட்ரிப் இருக்கு சுமோதான் கேட்டாங்க வண்டியை இங்க விட்டுட்டு போறேன் உனக்குத் தெரிஞ்ச ட்ரைவர் இருந்தா அனுப்புவிடு ராத்திரி எட்டு மணிக்கு அது ஒரு பக்கம் போயிட்டு வரட்டும்” என்றவர்.
“மகனிடம் ஒரு ரெண்டு நாள் இங்கேயே ரெஸ்ட் எடு அப்புறமா சவாரிக்கு போலாம் கொஞ்சம் சொல்றதை கேளுடா பாவம் அந்தப் பொண்ணு உன்னைய நினைச்சே அந்தப் புள்ள வாடிப் போகுது” என்றார்.
“ஆமா” என்ற கதிர் “இன்னைக்குக்கூட அழுதுகிட்டே போகுது பாவம்” என்றான்.
சமையல் கூட அவனே தனியாகச் செய்யத் தொடங்கிவிட்டான் எதுவும் செய்யத் தெரியாது என்றாலும் முடிந்தவரை தனியே செய்தான் தாய் செய்யும் எதையும் தொடுவதில்லை மயில்லம்மாவிற்கு சிறிதாகப் பயம் வரத் தொடங்கியிருந்தது.
வேலைக்குச் செல்லாமல் குடியும் தொடங்கிவிட்டது இவனை நம்பித்தானே நம் இறுதிக்காலம் இப்படியே போனால் எப்படி என்று ஒரு முறை தோன்றும் அடுத்த முறை ஏதோ அவ மேல இருக்குற ஆசைல இப்படி இருக்கான் கொஞ்ச நாள் போனா சரியாப்போவும் என்று எண்ணிக்கொள்வார், தெரிந்தவரிடம் கடன் வாங்கித்தான் செலவுகளைச் செய்துகொண்டிருந்தார்.
மாலை வேலை முடிந்து வீட்டிற்கு சென்றவள் இட்லியும் சாம்பாரும் எடுத்துக் கொண்டு அவனைக் காண வந்திருந்தாள் “எதுக்கு இந்த நேரத்துல வந்த ஒரு வேலை சாப்பிடலானா செத்தா போய்டுவேன் இல்ல ஹோட்டல்ல சாப்டா செத்துப்போயிடுவேனா” என்று அவளிடம் எகிற உதட்டைக் கடித்து அழுகையை அடக்கினாள்.
இந்த இரவு நேரத்தில் வண்டியை ஒட்டிக்கொண்டு தனியே வந்திருக்கிறாள் என்று சட்டென்று வந்த கோபத்தில் பதட்டத்தில் கத்திவிட்டான் இப்பொழுது மனம் வலித்தது தன்னோடு சேர்த்தனைத்தான்.
“ராணியம்மா ராத்தரில இப்படி தனியா வந்துடீங்களேன்னு கோவத்துல… சாரி சாரி” என்றான்.
“ஹ்ம்ம்” என்று தலையை ஆட்டினாள்.
“சாப்டீங்களா” என்றான்.
“இல்லை” என்று தலை அசைந்தது.
“வா” என்று அழைத்துச் சென்றவன் “எடு சாப்பிடலாம்” என்றான்.
“இல்ல உங்களுக்கு மட்டும்தான் கொண்டுவந்தேன்” என்றாள்.
எட்டு இட்லி இருந்தது அவன் உண்ணும் அளவுதான் “எடு” என்றவன் அவளையே பார்த்திருக்க தட்டில் வைத்து அவனுக்கு ஊட்டிவிட வாங்கிக்கொண்டான்.
நான்கு இட்லி சாப்பிட்டவன் “நீ சாப்பிடு” என்க.
“இல்ல உங்களுக்கு…” என்றவள் வாயை அடைத்தவன் “சாப்பிடு” என்றான், அவள் இரண்டு மட்டும் எடுத்துக்கொண்டு “போதும்” என்றாள் பாவமாக மீதியை அவன் உண்டான்.
“நான் வந்து விடுறேன்” என்றான்.
“இல்ல கை…”.
“கையைவிட நீ எனக்கு முக்கியம் இனிமே என்னைக் கேக்காம வரக் கூடாது” என்றான்.
“சரி” என்றாள் அவளிடம் வண்டியை எடுக்கச் சொல்ல “ஏது!!” என்று அதிர்ந்தாள்.
“எடு” என்றான்.
“எனக்குப் பாலன்ஸ் பண்ண முடியாது” என்றாள் மெல்ல.
“இதுவே முடியாதுன்னா என்னய கட்டிக்கிட்டு எப்படி சமாளிப்பீங்க” என்றான்.
“என்ன” என்றாள் அவனைப் பார்த்து.
“ஒண்ணுமில்ல அதெல்லாம் முடியும்னு சொன்னேன்” என்றவன் அவள் பின்னே அமர்ந்துகொண்டான் அவளுக்குக் கையெல்லாம் நடுங்கியது அவள் வண்டியை ஸ்டார்ட் செய்தாள் ஆனால் ஓட்டமுடியவில்லை.
பின்னிலிருந்து தன் கையை முன்னே கொண்டுவந்தவன் அவள் கைகளின் மீது தன் கையை வைத்துக்கொண்டான் அவள் அவனைத் திரும்பிப் பார்க்க அவள் கன்னத்தோடு கன்னம் இழைத்தவன் “முன்னாடி பாத்து ஓட்டுங்க ராணியம்மா” என்றான்.
அவள் எங்கே ஓட்டினாள்… அவள் முதுகோடு ஒட்டிக்கொண்டிருந்தான் முழங்கை இடையை உரசிக்கொண்டிருந்தது தாடியும் மீசையும் கன்னத்தைக் குறுகுறுக்க வைத்தது அந்த இரவின் குளிரை விட அவன் அருகாமை ஏற்படுத்திய சிலிர்ப்பில் தவித்தது தேகம்.
வீட்டின் அருகில் வந்துவிட்டார்கள் “வீடு வந்திடுச்சு” என்றான்.
“ஹ்ம்ம்” என்றவள் அவன் கைகளையே பார்த்திருந்தால் இன்னும் அவன் கைகள் அவள் கைகளின் மீதே.
“எடுக்கணுமா?” என்றான்.
என்ன சொல்லுவாள் “நீ சொன்னாதான் செய்வேன்” என்றான்.
“நேரம் ஆச்சு தேடுவாங்க” என்றாள் மெல்ல.
அவன் கரங்களை விலக்கிக்கொண்டு இறங்கி நின்றான் “போ” என்க.
“நீங்க எப்படி போவீங்க” என்றாள், இந்த நேரம் அந்தப் பக்கம் வண்டிகள் வராது.
“அதெல்லாம் பிரச்சனையில்லை மெய்ன் ரோட்டுக்கு போனா ஏதாவது வண்டி வரும்” என்றான்.
“அதுவரைக்கும் நடக்கனுமே” என்றவளை பார்த்தவன் அருகில் நெருங்கி “ஆமால நானும் யோசிச்சேன் பேசாம இன்னைக்கு இங்கேயே தங்கிடுறேன்” என்றவன்.
அவள் இடையோடு கையிட்டு தன்னோடு சேர்த்துக்கொண்டு அவள் செவியில் “ஆனா உன்கூட உன் ரூம்லதான் தூங்குவேன் இப்படி உன்னைக் கட்டிக்கிட்டு ஓகே வா” என்க வாயில் கைவைத்து அவனைப் பார்த்தாள்.
காலைலயே மயிலம்மாவிற்கு நல்ல செய்தி வந்து சேர்ந்தது மகளிடமிருந்து சித்ரா தாய்மை அடைந்திருந்தாள் செய்தி கேட்டதிலிருந்து கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை அப்பொழுதே மகளைச் சென்று காண வேண்டும் என்று பரபரத்தார் மயிலம்மா.
இரண்டு நாட்கள் ஓய்வுக்கு பிறகு அன்றுதான் வீடு வந்திருந்தான் மருதவேலு பார்க்க என்னவோ பஞ்ச பரதேசி போலத்தான் இருந்தான் உண்மையாகவே குடிகாரனை போலவேறு இருந்தான், குளித்து வேறு உடை மாற்றி ஹாயாகப் படுத்துக்கொண்டான்.
ராமலிங்கம் காலை நேர ட்ரிப் முடித்து வந்திருந்தார் “வேலு சித்ரா முழுகாம இருக்காளாம் இப்போதான் போன் வந்துச்சு” என்றார் மயிலம்மா மகனிடம்.
உள்ளுக்குள் சந்தோஷம்தான் ஆயிரம்தான் இருந்தாலும் தங்கை அல்லவா ஆனால் அவள்மீது தீராக் கோபமும் இருந்தது தாயிடம் தனக்காகப் பேசாமல் காமாட்சிக்கு எதிராகத் தாயை இன்னும் முறுக்கி விடுபவள் அவள் என்று தெரிந்தே இருந்தது அவனுக்கு.
“சந்தோசம்” என்றவன் திரும்பிப் படுத்தான்.
“நாம போய்ப் பாக்கணும் வேலு பிள்ளைக்குச் சேலை பூப்பழம் சத்தான சாப்பாட்டு பொருள் எல்லாம் வாங்கணும்” என்றார்.
“வாங்கிட்டு போங்க அதையேன் என்கிட்டே சொல்றீங்க” என்றான்.
“நீ தாய் மாமன் ஆகப்போற நீதானா செய்யணும்” என்றார் அவர்.
அவரைப் பார்த்து நக்கலாகச் சிரித்தவன் மீண்டும் திரும்பிக்கொண்டான் “என்னங்க இவன் சிரிக்கிறான்” என்றார் கணவனிடம்.
“தப்பா சொல்ற நக்கலா சிரிக்கிறான்” என்றார் ராமலிங்கம்.
கணவனை முறைத்த மயிலம்மா “ஏன்” என்றார்.
“தாய் மாமன் எல்லாம் சரி… நான் எப்போ அப்பனாகுறதுன்னு கேக்குறான் அதுவும் நியாயமான கேள்விதானே, வயசு இப்போவே முப்பத்தி ரெண்டு ஆச்சு” என்றார் அவர்.
“நான் வேண்டாம்னா சொல்றேன் இப்போகூட பொண்ணு தயாரா இருக்கு இவன்தான் ஒத்துக்க மாட்றான்” என்றார் அவர்.
“உன்கிட்ட மனுஷகுன் பேசுவானா” என்ற ராமலிங்கம் அவர் ஒரு பக்கம் படுத்துக்கொண்டார்.
“என்னங்க நீங்களும் படுத்துட்டீங்க வாங்க போய்ச் சித்ராவை பாத்துட்டு வரலாம்” என்றார்.
“என்கிட்டே ஒத்த பைசா கிடையாது நீ சொல்றதையெல்லாம் இப்போ வாங்க என்கிட்டே காசும் இல்ல நாளைக்கு பாக்கலாம்” என்றார் அவர்.
முன்பே கடன் வாங்கியிருந்த பெண்ணின் பெயரைச் சொல்லி “அவகிட்ட காசு வாங்கிட்டு வரேன் நீங்கக் கிளம்புங்க” என்றார் மயிலம்மா.
“ஏண்டி உன் இஷ்டத்துக்கு வாங்கி குமிக்குறியே இதெல்லாம் யார் திருப்பிக் கொடுக்குறது என்கிட்டே காசு கிடையாது” என்று ராமலிங்கம் கத்த இவன் அறைக்குள் நுழைந்து கதவடைத்தான்.
என்ன செய்ய என்று தெரியாமல் அங்கும் இங்கும் நடந்தார் மயிலம்மா வெகுநேரம் பிறகு வேறு வழி இல்லாமல் அந்தப் பெண்ணிடம் ஐந்தாயிரம் கடன் வாங்கினார்.
“அக்கா இதோட பதிமூணாயிரம் ஆயிடுச்சு கொஞ்சம் சீக்கிரம் திருப்பிக் குடுத்திடுங்க” என்றாள் அவள்.
“சரி சரி” என்றவர் கணவனனையும் அழைத்துக்கொண்டு கடைக்குச் சென்று அனைத்தையும் வாங்கிக்கொண்டு மகளைச் சென்று பார்த்து வந்தார்.
“என்ன வேலு வரலையா ஒரே தங்கச்சி மாசமா இருக்கா அண்ணன் வந்து பாக்க வேண்டாமா” என்றார் அவளின் மாமியார்.
“அண்ணா ஏன்மா வரல ஒரு போன் கூடப் பண்ணல” என்றாள் அவள் மயிலம்மா எப்படியோ சமாளித்து வந்துவிட்டார் மகன் சென்று தங்கையைப் பார்க்காததில் மிக வருத்தம் அவருக்கு அவனிடம் அதைக் கேட்கவும் முடியவில்லை.
இப்படி அனைத்தையும் யோசித்து வீட்டு வாயிலில் அவர் அமர்ந்திருக்க “எந்தக் கோட்டையைப் பிடிக்கப் போற” என்றார் ராமலிங்கம்.
“ஆமா அது ஒண்ணுதான் கொறச்சில்” என்றவர் “அந்த ரமேஷ் பயலை பாத்தேன் வண்டியெல்லாம் எடுக்காம இப்படி மாசக்கணக்கா போட்டே வெச்சிருந்தா வீணா போய்டும் ஏன் அண்ணே சவாரி எடுக்கிறதில்ல புதுசா குடிக்கவேற செய்றாரு என்ன சேதின்னு கேக்குறான்”.
“வண்டியைக் குடுக்குறீங்களா நான் வாங்கிக்குறேன்னு வேற கேக்குறான், இவன் என்னதான் நினைச்சுகிட்டு இருக்கான் இப்படியே போனா எப்படி” என்றார் மயிலம்மா.
“அதயேதான் அவன்கிட்ட நானும் கேட்டேன் சம்பாரிச்சு யாருக்கு சொத்து சேக்க போறேன் ஆசைப்பட்டவளை கட்ட முடியல அப்புறம் என்னாத்துக்கு கஷ்டப்பட்டு வேலை செய்யணும்னு கேக்குறான் அதுவும் சரிதான்” என்றார்.
“என்னய்யா சரி அப்போ நாம எங்க போறது நம்மள யார் பாத்துப்பா” என்றார் மயிலம்மா ஆவேசமாக.
“உன்னையும் என்னையும் அவன் எதுக்குடி பாத்துக்கணும் இவ்ளோ நாள் செஞ்சான்தானே திரும்ப நீ என்ன செஞ்ச அவன் வாழ்க்கையை அழிச்ச அவன் சம்பாத்தியத்துல ஒக்காந்து தின்னு அவனுக்கே துரோகம் செஞ்சவதானே நீ உனக்கு எப்படி செய்வான் என்ன அவசியத்துக்கு செய்யணும்னு கேக்குறேன், உன்னைக் கட்டுன பாவத்துக்கு நானும் சேர்ந்து அனுபவிக்கிறேன்”.
“இதோட முடியாதுடி இப்போ கடன் வாங்கிட்டு போய் மகளைப் பாத்துட்டு வந்த நாளைக்கு வளைகாப்பு இருக்கு அது முடிஞ்சு தலை பிரசவம் தாய் வீட்டில பாக்கணும், பிரசவ செலவு இருக்கு பிள்ளையையும் அம்மாவையும் கொண்டு போய் விடும்போது சீரு, பேரு வைக்கணும் மொட்டைப் போடணும் எவ்ளோ கிடக்குது”.
“பேசாம ஒன்னு செய்யலாம் நீயும் எங்கயாவது வேலைக்குப் போ நானும் நேரம் காலம் பாக்காம சவாரி போறேன், ஆனா எவ்ளோ நாள் ஓட முடியுமோ தெரியல இப்போவே அடிக்கடி உடம்புக்கு முடியமாட்டது” என்றவர்.
“ஆனா ஒரு விஷயம் நீ இல்லாம நான் இருந்தா கூட எனக்கு ஒரு சோறு போடுவான் போல நானும் இல்லாம போய்ட்டா உன் நிலைமை என்னவாகுமோ தெரியல” என்று மயிலம்மா வயிற்றில் புளியை கரைத்து சென்றார் ராமலிங்கம்.
மீண்டும் மீண்டும் யோசித்து பார்த்தார் மயிலம்மா எப்படி முடியும் எப்படி சமாளிக்க ஒன்றும் புரியவில்லை கணவர் சொன்னது மட்டுமல்லாது மகனின் இந்தப் பாராமுகம் பயமுறுத்தியது யோசித்து யோசித்து இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்திருந்தார்.
error: Content is protected !!