அதெல்லாம் முதல்ல ஜாதகம் பார்த்து நல்லா பொருந்தியிருக்கவும் தான் நான் மேற்கொண்டு பேச வந்ததே” என்றார் கமலா அம்மா.
“ஆமாங்க.. உங்கம்மா முதல்லயே அதெல்லாம் பார்த்து நல்லா பொருந்தியிருக்குன்னு சொல்லிட்டுதான் முதல்ல அவங்க வந்து பார்த்துட்டு,
பொண்ணை எனக்கும் என் பையனுக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு.
நான் ஊருக்குப் போய் நல்ல நாள் பார்த்துட்டு, என் வீட்டு ஆளுங்களோட வரேன்.
வந்து அன்னிக்கே நிச்சயம் பண்ணிட வேண்டியது தான், நீங்க தயாரா இருங்கன்னு, வீட்டு பெரிய மனுசி அவ்வளவு உறுதி கொடுத்ததால தான் நாங்க இப்ப நிச்சயம் பண்ணவே ரெடியா இருக்கோம்!
இப்ப என்ன நீங்க வந்து இப்படி பேசுறீங்க” என்றார் பரமேஸ்வரி!
“அதான் சொன்னேனே.. எங்கம்மா ரொம்ப வெள்ளந்தி! அவங்க பேச்சு மட்டும் முடிவு இல்லை எங்க வீட்டுலன்னு!
இந்த காலத்துல என்னென்ன கோல்மால் பண்றாங்க தெரியுமா?
எப்படியாவாது கல்யாணம் பண்ணிடணும்னு பையன் ஜாதகத்துக்கு ஏத்த மாதிரி பொண்ணு ஜாதகத்தையோ,
இல்ல பொண்ணு ஜாதகத்துக்கு ஏத்த மாதிரி பையன் ஜாதகத்தையோ ஜோசியரை கைக்குள்ள போட்டுக்கிட்டு மாத்தி எழுதி கூட கல்யாணங்கள் நடக்குது அங்கங்க!
அதனால் எங்களோட பேமிலி ஜோசியர்கிட்ட காண்பிச்சு அவர் ஓகே பண்ணினா தான் மேற்கொண்டு பேச முடியும்!
உங்க பொண்ணோட பிறந்த நேரம், தேதி சொல்லுங்க!
நாங்களே ஜாதகம் எழுதிக் கொண்டு பொருத்தம் பார்க்கிறோம்” என்றாள் ப்ரியா.
“என்னம்மா.. இப்படி சொல்றீங்க? உங்கம்மா கொடுத்த உறுதியில, எங்க பொண்ணும் உங்க பையனும் போனில் பேசிக்க கூட ஆரம்பிச்சுட்டாங்க!
இப்ப போய் இப்படி சொல்றீங்க?” கங்கா இந்த விஷயத்தையும் சபையில் சொல்லி வைப்போம், எங்கயாச்சும் பத்திக்கிதான்னு பார்ப்போம் என்று நினைத்து சொன்னாள்!
“அதுக்குள்ளயா? என்னங்க இது? இன்னும் நிச்சயம் பண்ணவே இல்லை! அதுக்குள்ள உங்க பொண்ணை ஏன் எங்க பையனோட பேச விட்டீங்க?
என்ன அவசரம்? எனக்கு இப்ப தான் உங்க மேல கொஞ்சம் சந்தேகமே வருது?
டேய்.. ராமு.. நீ பாட்டுக்கு அம்மா சொல்லிடுச்சுனு எதாச்சும் அவசர முடிவு எடுத்திடாதே!
நிதானமா இரு. முதல்ல நாம ஜாதகம் பார்ப்போம். அப்புறம் தான் மேற்கொண்டு பேசணும் சொல்லிட்டேன்!” என்ற பிரியாவிடம், கங்கா
“என்னங்க நீங்க? உங்க பேச்சே சரியில்லையே!
என்னமோ நாங்க எங்க பொண்ணை விட்டு பேச சொல்லி, உங்க பையனை வளைச்சுப் பிடிச்சுட்ட மாதிரி இல்ல இருக்கு நீங்க சொல்றது?” கங்கா கோபமாக பேசுவது போல எடுத்துக் கொடுத்தாள்!
“கொஞ்சம் எல்லோரும் சும்மா இருக்கீங்களா?” என்றார் பாலு தாத்தா.
“அம்மாடி ப்ரியா, ஜாதகம் பொருத்தம் அவங்க மட்டும் பார்க்கல, நானும் தான் பார்த்துருக்கேன்! நல்லா பொருந்தியிருக்குன்னு நான் தான் கமலா கிட்ட சொன்னதே!
அதுவும் இல்லாம முப்பது வயசுக்கு மேல தான் ரொம்ப டீப்பா ஜாதகம் பார்க்க தேவையில்லை!
அதனால நீ கொஞ்சம் பேசாம இரு. நல்ல விசயத்தை தள்ளிப் போடக் கூடாது!
ஏற்கனவே இந்த காலத்துல பொண்ணு கிடைக்கறது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு!
இன்னும் பெட்டர், இன்னும் பெட்டர்ன்னு போயிட்டே இருந்தா பிள்ளையார் மாதிரி ஆத்தங்கரையில உக்காந்துக்க வேண்டியது தான்” என்றார் பாலு தாத்தா.
“அது எப்படிங்க. கல்யாணம் ஆயிரங்காலத்துப் பயிர்!
வாழ்க்கையில ஒரு வாட்டி தான் நடக்கிற விஷயம்!
அதுல எதுக்கு இப்படி காம்ப்ரமைஸ் ஆகணும்?” என்றான் ராமு இப்போது வாயைத்திறந்து!
“இதில காம்ரமைஸ் ஆகுற அளவு எங்க பொண்ணுகிட்ட என்ன குறை?” என்றான் மகேந்திரன்!
“நிறம் தான்! எங்க பையன் கலருக்கு, உங்க பொண்ணை கல்யாணம் பண்ணி ஜோடியா கூட்டிட்டு போனா, என்ன இது? ஏன் இப்படி ஒரு பொண்ணைக் கட்டி வச்சுட்டாங்க இந்த பையனுக்கு?
அக்கா, அண்ணன்லாம் இருந்தும் இந்த பையனுக்கு சரியா பொண்ணு தேடல போல!
ஏனோ தானோன்னு பார்த்து வச்சுட்டாங்கன்னு எங்கள தான் குத்தம் சொல்லுவாங்க” என்றாள் ப்ரியா.
“அப்படி உங்க பையன் அரவிந்த சாமின்னா, ஏன் உங்க பொண்ணைக் கொடுக்கல?
ஏன் உங்க பெரிய தம்பி அவரோட கொழுந்தியாக்கு கட்டல?
உங்க வீட்டு விஷயம் எனக்கும் தெரியும்! நானும் விசாரிச்சுட்டேன்.
“இப்ப என்ன? எங்கயும் பொண்ணு கிடைக்காம தான் உங்க வீட்டு ரதிய பொண்ணு கேட்டு வந்தோம்னு சொல்ல வரியா?” என்றாள் ப்ரியா காட்டமாக!
“இல்லம்மா.. அவ கிடக்கா.. ஏதோ பேச தெரியாம பேசுறா.. ஏய். கங்கா.. நீ சும்மாயிரு கொஞ்ச நேரம்!” என்று அவளை அடக்கி விட்டு நிலைமையை சரியாக்க நினைத்தார் மகியின் அத்தை அன்னம்!
“என்னங்க பேசத் தெரியாம பேசுறாங்க! அதெல்லாம் நல்லா தெரிஞ்சு தான் பேசுறாங்க!
அதுக்குள்ள எங்க வீட்டு உள் விவகாரம் வரை தோண்டியெடுத்து மூக்கை நுழைக்கிறாங்க இப்பவே!
டேய்.. ராமு. ஆகுறதுக்கு இல்ல..” என்று அவள் ஆரம்பிக்குமுன்னே,
“என்ன இது சரியா வராது சரியா வராதுன்னு நீங்களே சொல்லிட்டு இருக்கீங்க? மாப்பிள்ளை பையன் சொல்லட்டும்! அவர் என்ன சின்னப் பிள்ளையா?
நீங்க சொல்லுங்க தம்பி” என்று ராஜுவையும் வம்புக்கு இழுத்தாள் கங்கா.
அவன் மட்டும் பிடிச்சிருக்குன்னு சொன்னால் அந்த பிரியா, மகியையும் அவள் குடும்பத்தையும் இன்னும் அசிங்கமாக தான் பேசுவாள்!
ப்ரியாவை சரியாக ஊகித்து தான் கங்கா இதை சொன்னாள்!
மகியைப் பிடிக்கவில்லை, என்று சொன்னாலும் மகி, இனி அவன் முகத்தில் கூட முழிக்க மாட்டாள்.
இனி கொஞ்ச நாட்களுக்கு வேறு கல்யாணப் பேச்சையும் எடுக்க விட மாட்டாள்!
ஒரு கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்க நினைத்தாள் கங்கா!
ராஜு என்ன சொல்லுவான்?
அவன் மகியின் முகத்தை பார்த்தான்!
தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தவள், பேச்சிழந்து அவன் முகத்தையே அவனும் பார்த்தாள்!
அவன் ஒருமுறை மகியின் முகத்தைப் பார்த்து விட்டு மவுனமாக தலை குனிந்து கொண்டு விட்டான்!
ப்ரியாவும், ஒருவேளை அவன் அப்படி பெண்ணைப் பிடித்து இருக்கு என்று சொல்லி விட்டால்,
அடுத்த அவச்சொல்லை பேச தயாராக தான் இருந்தாள். எனவே அவன் மவுனமாக இருக்கவும்,
“என்னடா பேசாம இருக்க? ஓ. பிடிச்சுருக்கா?
நான் நினைச்சேன்! என்னடா இது நிச்சயம் ஆகுறதுக்குள்ள இந்த பொண்ணு இவன் கிட்ட பேச ஆரம்பிச்சுடுச்சே! இது சரியில்லையேன்னு!
இன்னிக்கு வரும்போது கூட போனில் சாட்டிங்கில் பேசிக் கொண்டு தான் வந்திருக்கே இந்த பொண்ணோட! இப்ப தான் வனிதா சொன்னா.
இன்னிக்கு தான் முத முத நேர்ல பார்க்க போறா!
ஆனா அதுக்குள்ள அப்படி என்ன அவசரம் உங்க பொண்ணுக்கு, எங்க பையன் கிட்ட பேச?
எங்க நாங்க எதாச்சும் தடை சொல்லிடுவோம்னு, அப்படி சொன்னா கூட பையனை உங்க பக்கம் வளைச்சுக்கலாம்னு தானே உங்க பொண்ண அவனோட பேச விட்டீங்க!
அது சரியா வேலை செஞ்சுடுச்சு! இது வரை ராம லட்சுமணன் மாதிரி அண்ணன் சொல்லைத் தட்டாத என்னோட தம்பி, இன்னிக்கு அண்ணன் கிட்ட கலந்துக்காம பெரிய முடிவை எடுக்குற அளவு கொண்டு வந்துட்டீங்க!
கழுத்துல இன்னும் தாலி ஏறல! அதுக்குள்ள பையனை வளைச்சுப் போட்டுட்டாங்க!
டேய் ராமு! எழுந்திருடா! இனி அவனுக்கு அண்ணன் அக்கா எல்லாம் தேவையில்ல!
அவனே பார்த்துப்பான்! அது தான் மச்சான் இருக்கான்!
அவன் பார்த்துப்பான்! நீ கிளம்பு என்றாள் ராமுவைப் பார்த்து!”
“கொஞ்சம் நில்லுங்க. எங்கள் இவ்வளவு தூரம் கேவலமா நினைக்கிற உங்க குடும்பத்துல இனியும் எங்க பொண்ணைக் கட்டிக் கொடுத்தா, அப்புறம் நீங்க சொன்ன இந்த அபாண்டம் எல்லாம் நிஜமாகிடும்!