Skip to content
Post Views: 3,562
வானத்து நிலவை வெறித்துக் கொண்டிருந்தவன் மனதும் வெறித்தே இருந்தது.
எங்கு அவளுக்கு நம்பிக்கை கொடுக்க தவறினோம்…?
என் காதல் அவளுக்குள் என்னைபற்றி எவ்வித தெளிவையும் ஏற்படுத்தவில்லை எனில் அதற்கு பெயர் காதலே இல்லையே….?
அவள் புற அழகில் மயங்கி நான் அவளை விரும்பவில்லையே..
Advertisement
இவ்வளவு குழப்பத்திலும் தடுமாற்றத்திலும் இருப்பவள் கிருஷ்ணா குடும்பத்து மூத்த மருமகளாக எப்படி இந்த பெரிய குடும்பத்தை தாங்கி நிற்பாள்….? அவனுக்குள் அவ்வளவு வருத்தம் மண்டி கிடந்தது.
மூச்சடைக்க வைக்கும் மல்லிகை வாசமும் மெல்லிய கொலுசொலியும் அவனை சமீபித்தது.
உடலும் உள்ளமும் இறுகி நின்றான்.
Advertisement
இரவின் நிசப்தம்….. அவ்விடத்தில் மௌனம், மௌனம், மௌனம் மட்டுமே….
Advertisement
ஐந்து நிமிடம்… பத்து நிமிடம்… அவனும் திரும்பவில்லை… அவளும் அவ்விடம் விட்டு நகரவில்லை.
எவ்வளவு நேரம் இப்படியே நின்றுவிட முடியும்?ஆழ்ந்த மூச்சு எடுத்தவன் திரும்ப எத்தனிக்க…. பின்னிருந்து வளைகரம் அவனை வளைத்துக் கொண்டது.
வளைத்த வளைகரம் அவன் இறுக்கத்தை உணர்ந்து கொண்டது.
Advertisement
அவன் பறந்துபட்ட முதுகு வளைகரத்தின் கண்ணீரை உணர்ந்து கொண்டது.
கோபம் இன்னும் அதிகமாகியது….
ம்ம்ச்….. சலிப்புடன் அவள் கரத்தை விலக்கிவிட்டு அவன் திரும்ப அவனை நேருக்கு நேராய் பார்த்து கண்ணீரை துடைத்துக்கொண்டு அவன் தோளில் சாய்ந்து நின்றாள்.
தோளில் சாய்ந்தவளை அவன் பரிவுடன் சாய்த்துக் கொள்ளவில்லை.
மட்டுப்பட்ட கண்ணீர் மீண்டும் அவளுக்கு வெடித்து வந்தது …. தாய் கண்டுகொள்ளவில்லை எனில் கவனம் ஈர்க்க குழந்தை மீண்டும் அழும் அல்லவா… அந்த மனநிலையில் அவள் இருந்தாள்.
ஷ் ஷ்… இப்போ எதுக்கு அழற…? எரிச்சல்பட்டான்.
சாரி பாவா…. மெல்லிய விசும்பல் அவளிடமிருந்து.
நீ ஏன் சாரி கேட்கணும்? அவ்வளவு கோபம் அந்த அழுத்தமான குரலில்.
சாரி…. நான்… நான்… உங்களை கஷ்டப்படுத்தணும்னு நினைக்கலை.
ஓ…. அப்போ என் கோபத்தின் காரணம் உனக்கு தெரிந்திருக்கு…?
இல்ல… நான் அப்படி நினைச்சு…. அவளுக்கு வார்த்தை வெளிவரவில்லை…
வேறென்ன நினைச்ச? இவனெல்லாம் ஒரு ஆளான்னு நினைச்சிருக்க அப்படிதானே…? பல்லை கடித்துக் கொண்டு அறைக்குள் நுழைந்து கொண்டான்.
ஐயோ பாவா…. விசும்பிக் கொண்டே உள்ளே ஓடிவந்தாள்.
கண்ணைமூடிக் கொண்டு சோபாவில் அமர்ந்திருந்தவனின் முகம் அவ்வளவு கடுத்து இருந்தது.
பாவா…. என்னை உங்களுக்கு புரியலையா…? கண்ணீருடன் அவன் காலடியில் அமர்ந்தாள்.
பல்லை உடைச்சுடுவேன்… நான் உன்னை கேட்க வேண்டிய கேள்வியை நீ என்னை கேட்டு உன்னை நியாயப்படுத்திக்க பார்க்கறியா….? கையை ஓங்கி விட்டான்.
பயத்தில் அவளுக்கு கண்கள் தானாய் மூடிக்கொண்டது.
ச்சை…. என்ன பொண்ணுடி நீ… அவள் கன்னம் பற்றி இறுக்கினான்.
அழுகை நிற்கவே இல்லை அவளுக்கு…. இப்படி அழுது ஆக்ட் பண்ணின கழுத்தை திருகி போட்டுடுவேன்… மூச்சு திணறியது உச்சபட்ச கோபத்தில் இருந்தவனுக்கு.
சாரி பாவா…. உங்களுக்கு சொல்லி உங்களை டென்ஷன் பண்ண வேண்டாமேன்னு தான்…. அவன் கரம் பற்றி தேம்பினாள்.
நானா உனக்கு பாவா….? உன் ராஜேஷ் அத்தானை விடவா நான் உனக்கு முக்கியம்?
வேண்டாம்….. வேதனையுடன் தலை அசைத்தவள் சோர்ந்து அமர்ந்து விட்டாள்.
நான் உன்னை உண்மையா விரும்பலையா? என் மேல, என் லவ் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா…? வலியுடன் கேட்டான்.
இப்படி என்னை வார்த்தையால் கொல்லாதீங்க… நான் தாங்க மாட்டேன்…. தேம்பி தேம்பி அவன் சட்டையிலே முகம் தேய்த்துக் கொண்டாள்.
ஓவர் ஆக்ட்டிங் உடம்புக்கு ஆகாதும்மா….
நீ பண்ணினது தப்புன்னு உனக்கு தெரிஞ்சிருக்கு. சொன்னா நான் கோபப்படுவேன்னு தெரிஞ்சிருக்க உனக்கு… சொல்லலைனா அதைவிட கோபப்பப்படுவேன்னு தெரியலையே….
என்னை என்ன புரிஞ்சு வச்சிருக்க…? எந்த நம்பிக்கையில் எனக்கு கழுத்தை நீட்டின?
நம்பிக்கை இல்லாம என்னோட வாழ ரெடியாகிட்டியா?
அவள் பேச்சற்று நின்றாள். அவனின் ருத்ர தாண்டவத்தை தாங்கி நிற்க இயலாது வியர்க்க தொடங்கியது.
எனக்கு எதுவும் தெரியாதுன்னு சின்ன பிள்ளை தனமா நம்பியிருக்க பாரு…. கை தட்டி சிரித்தான்.
இல்லை… நான்…. உதடு துடித்தது… நெஞ்சம் தடதடத்தது அவளுக்கு.
ஹரிக்கு தெரியாம ஏதாவது நடக்க முடியுமா?மீண்டும் சிரித்தான்…!
அவள் எச்சில் கூட்டி விழுங்கினாள்.
நீ ராஜஸ்தான் ஓடி ஒளிந்தியே நான் தேடி வந்தேனே… அப்போ புரியல உனக்கு… ஹரி எப்படின்னு?
உன் ஆசை அத்தான் எங்கே வேலை பார்க்கிறான்… என்ன சம்பளம் வாங்குறான்.. யாருக்கு கால் பண்றான்,எத்தனை நிமிஷம் பேசி இருக்கான், ஒரு நாளைக்கு எத்தனை முறை இருமினான் தும்மினாங்கிற வரை நோண்டி நொங்கெடுத்தேனே… அப்போகூடவா புரியல இந்த ஹரிசரணை…?
அவனது உறுமலில் அவளுக்கு மேனி நடுங்க தொடங்கி விட்டது.
உன்னை ஹாஸ்பிடலில் மிரட்டிட்டு போன உன் செல்ல அத்தான் கை கால் உடைந்து கிடந்தானே… உனக்கு தெரிந்து இருந்தது தானே… அது ஹரியின் திருவிளையாடல் என்று…
அசைவின்றி அவள் நின்ற தோரணை அவனை இன்னும் வெறுப்பேற்றியது….
உனக்கு ஒரு பிரச்சனை வர விட்டுவிடுவேனா….? என் பார்வையில் இருந்து எதுவும் தப்பிவிடுமா?என் பார்வை வட்டத்தில் இருக்கும் உனக்கு எதுவும் நடந்து விடுமா…?
சொல்லு… சொல்லு… ஆவேசமாய் அவளை பிடித்து உலுக்கினான்.
அவளோ பயத்திலும் குற்ற உணர்விலும் நடுங்கிக் கொண்டிருக்க… இரக்கமற்று இடித்து கட்டிலில் தள்ளினான்.
அவள் அழுது கரைந்து சுருண்டு கொண்டாள்.
ஆவேசம் குறையாது அவளை அள்ளி உட்கார வைத்தான்.
படபடவென்று அவள் இமைகள் அடித்துக் கொண்டது.
இனி நான் தாங்க மாட்டேன் என்பது போல் அவள் மனம் கதறியது.
ராஜேஷ் கை நரம்பை கட் பண்ணி டிராமா பண்ணின அடுத்த நிமிஷமே எனக்கு தெரியும்!
உனக்கு பேசும் போதெல்லாம்… ஏதாவது பிரச்னையா? ஏதாவது பிரச்னையான்னு கேட்டுட்டே இருந்தேனே…. ஏன் தெரியுமா? அப்போவாவது என்கிட்ட சொல்லிட மாட்டியான்னு ஒரு நப்பாசை தான்.
கல்யாண கனவுகளில் மிதக்க வேண்டியவ…வெளியில் போக பயந்துட்டு… எந்நேரம் எந்த பிரச்னை நடக்குமோன்னு உள்ளுக்குள் வைத்து மருகிட்டு ஒவ்வொரு நாளும் திக் திக்குன்னு நடுங்கிட்டு இருந்தியே…. அப்போ கூட எனக்கு சொல்லணும்னு உனக்கு தோணலை பாரு… அங்கே தோத்துட்டான் இந்த ஹரி.
அவனால ஏதாவது செய்ய முடியும்னு நம்பின நீ இந்த ஹரியால் எதுவும் முடியாதுன்னு நினைச்சுட்டியா?
இல்ல…. இல்ல… என்பதாய் வேகமாய் தலை ஆட்டினாள்.
ஆந்திராக்கு வந்து கூட கலவரமா இருந்தியே ஏன்…? அவ்வளவு பெரிய பிஸ்தாவா அந்த நாய்? அவனை தோலை உரித்து உப்பு மிளகாய்பொடி தேய்த்து பொசுக்கி எடுக்க அஞ்சு நிமிஷம் போதும் எனக்கு.
வேண்டாம்…. இப்படி பேசாதீங்க… கை கூப்பினாள்.
வேறெப்படி பேச…? தாலி கழுத்தில் ஏறும் கடைசிநிமிஷம் கூட பயத்தோட வாசலை பார்த்தியே… என் மனசை அறுக்குது உன் நடவடிக்கை.
உங்களுக்கு ரொம்ப கோபம் வரும்… நீங்க… நீங்க ராஜேஷை ஏதாவது செய்துட்டா.. அந்த பயத்தில் தான்…. நடுங்கி நடுங்கி பேசிவிட்டாள்.
என்ன செய்திடுவேன்… கொலையா செய்திடுவேன்…? அப்படியே அந்த நாயை அடித்து கொன்னால் தான் என்ன..?
விருப்பம் இல்லாத பெண்ணை இமோஷனல் பிளாக் மெயில் பண்ண டிராமா போடுற நாய் இருந்தா என்ன? போனா என்ன?
அந்த நாயிக்கு அவ்வளவு இம்பார்டன்ஸ் கொடுத்து நீ தவித்து என்னை வெறுப்பேற்றி… இந்த இருபது நாளா நான்…. வெறித்தனமாய் தொடையில் குத்திக் கொண்டான்.
விடுங்க இந்த பேச்சு வேண்டாம்… கெஞ்சினாள்.
எது… விடறதா…? அந்த மானங்கெட்டதொங்கவை நினைத்து நீ தவித்தது இல்லைன்னு ஆகிடுமா?
என்கிட்ட ஒரு வார்த்தை நீ சொல்லலையேன்னு நான் பட்ட வருத்தம் இல்லைன்னு ஆகிடுமா? நம்ம கல்யாண மூடையே ஸ்பாயில் பண்ணிட்டியே அது திரும்ப வருமா?
என் குலாபிக்கு எல்லாமே நான்தான்னு திமிரா இருந்தேனே.. என் நம்பிக்கையை உடைச்சுட்டியே… எப்படி அதை மீட்டெடுப்ப….?
ப்ளீஸ் பாவா…நடந்ததை பேச வேண்டாமே… மன்றாடினாள்.
நடந்தது சாதாரண விஷயமா? உடனே துடைச்சுட்டு போயிட முடியுமா?
எனக்கு எவ்வளவு வேலை நெட்டித் தள்ளினாலும் தினமும் ஏன் உன்கிட்ட பேசினேன் தெரியுமா? காதலோடு பேசினேனோ இல்லையோ நீ கவலைபடக் கூடாதுன்னு உன்னை சகஜமாக்க பேசினேன்.
சாரி…
அழுத்தகாரிடி நீ…! தலையணையை தூக்கி வீசினான்.
உங்களுக்கு தான் தெரியுமே… எனக்கு தைரியம் சொல்லி இருக்கலாமே… இயல்பாய் கேட்டு விட்டாள்.
இடியட்…. இடியட்…. சோபன ராத்திரியில் எங்கிட்ட அடி வாங்கி சாகப்போறடி … நான் ஏன்டி சொல்லணும்?
இவ வாயில் கொழுக்கட்டை வைச்சுட்டு சுத்தி வருவா… நான் கண்ணே மணியேன்னு உனக்கு காவடி தூக்கணுமா?
அவனின் ஆவேசம் உச்ச நிலைக்கு சென்று விட்டது.
அரண்டு விட்டவளுக்கு உடல் சோர்வும் மனசோர்வும் கொடுத்த அழுத்தத்தில் கண் திறந்து பார்க்கவோ… அவன் கோபத்தை தாங்கவோ அதற்கு மேலும் தெம்பில்லை…. கண்கள் அதுவாய் மூடிக் கொண்டது.
என் மேல உனக்கு நம்பிக்கை வரும்போது… என்னை மீறி உனக்கு எதுவும் நடக்காது என்ற தைரியம் வரும்போது என்னை நெருங்கி வா…. அதுவரை என் கட்டிலில் மட்டும் தான் உனக்கு இடம் .. நீ நீயா இருந்துக்கோ…. ரெஸ்ட் ரூம் சென்று வந்தவன் கட்டிலின் மறுபுறம் வந்து படுத்துக் கொண்டான்.
அழுது அழுது கரைந்து இனி அழுகை வராது என்ற நிலையில் மயங்கி உறங்கிவிட்டாள் அவன் சகதர்மினி. அவனுக்கு தான் ஒரு பொட்டு உறக்கமில்லை.
தாலி கட்டும் அந்த கடைசி நிமிடம் அவள் கண்களில் காதலை தேடியவன் அவள் பயந்து பயந்து வாயிலை நோக்க… உடைந்து நொறுங்கி விட்டான்.
சினிமா படங்களில் வருவது போல் கடைசி நிமிடம் ராஜேஷ் வந்து நின்றுவிடுவானோ என்ற அச்சம் அவளுக்கு.
அவள் பார்வையும் பயமும் ஹரியை நொறுக்கிவிட்டது.
இந்த திருமணத்திற்கு எத்தனை காத்திருப்பு… எத்தனை போராட்டம்? அணுஅணுவாய் ரசித்து நினைவு பெட்டகத்தில் சேமிக்க வேண்டிய முக்கிய நிகழ்வை வேறுமாதிரி ஆக்கிவிட்டாளே…
“——————-“
கதிரவன் பொன்னிற கதிர் பரப்பி…கிருஷ்ணா இல்லத்தில் அழகாய் விடியல் தொடங்கி விட்டது.
பால் பண்ணையில் இருந்து பெரிய கேனில் பால் வந்து விட்டது. சர்வதனி வாசல் பெருக்கி கோலமிட்டாள்.
தாரணி பூஜை செய்துவிட்டு வந்துவிட்டார்.
எல்லாரும் காபி முடித்து விட்டனர். காலை உணவு தடபுடலாய் தயாராகி கொண்டிருந்தது.
நிவி அடிக்கடி மாடியை பார்த்துக் கொண்டிருந்தாள்.
சர்வதனி அவளை விலாவில் இடித்து கண்சிமிட்டி சிரிக்க….என்ன சிரிப்பு வெட்கத்துடன் விரட்டினார் தாரணி.
மூத்த மகன் திருமணத்தில் அவருக்கு பத்து வயசு குறைந்து விட்டது போல் இருந்தது. அவ்வளவு மகிழ்ச்சி அவர் முகத்தில். மகன் இனி தன்னோடு இருந்துவிடுவான் என்ற திடம், அவன் ஆசைப்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து விட்டோம் என்ற நிம்மதி… மகனுக்கு பொருத்தமான வாழ்க்கைத் துணை கிடைத்து விட்டது என்ற திருப்தி… எல்லாமும் சேர்ந்து அவர் முகத்தில் தேஜஸ்.
நிவேதா கிசு கிசுப்பாக எதுவோ பெரியண்ணையின் காதில் கூற… நாக்கை கடித்து மிரட்டி அவள் காதை திருகினார் தாரணி.
அவர்கள் பேச்சின் சாராம்சம் என்னவென்று உணர்ந்த மணவாளனின் மனைவி அஞ்சுகம் இந்த பவித்ரா பொண்ணு இன்னும் எழுந்து வரலையே… மணி ஏழரை ஆகப்போகுதே என்று கூடத்தில் இருந்த கடிகாரத்தை நொடிக்கு ஒரு முறை அவஸ்தையாய் பார்த்துக் கொண்டிருந்தார்.
பிள்ளைத்தாச்சி பெண் போல் அவஸ்தையாய் நெளிந்து கொண்டிருந்தவர் அருகில் வந்த தாரணி வாஞ்சையுடன் அவர் கரம் பற்றி உங்களுக்கு என்ன டிபன் பிடிக்கும் என்று அழகாய் பேச்சை மடை மாற்றினார்.
விடியற்காலை ஐந்து மணிக்கு மேல் கண்ணயர்ந்த ஹரி தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருக்க…. தோட்டத்து பறவைகளின் கிரீச் கிரீச் ஓசையில் பதறி எழுந்தாள் பவித்ரா.
சுற்றும் முற்றும் ஒரு வினாடி திகைத்து நோக்கியவளுக்கு இரவின் நிகழ்வு கண்முன்னே படம் போல் ஓடியது… பெருமூச்சுடன் எழுந்து காலைக்கடன் முடித்தாள்.
குளிப்பதற்கு உடை எடுக்க அலமாரியை திறந்தவள்… குழந்தை போல் உறங்கும் தன் பாவாவை ஆசை தீர ஐந்து நிமிடம் நின்று ரசித்தாள்.
பார்த்தது போதும்…போய் தலைக்குளிச்சுட்டு புடவை கட்டிட்டு கீழே போ…! கண்ணை திறவாமலே கட்டளை பிறப்பித்தான் மாயக்கண்ணன் அவன்.
பதறி அடித்துக் கொண்டு குளியலறை புகுந்தாள் அவனின் அம்மாயி.
குளித்து உடைமாற்றி ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் வந்து நின்றவளிடம்…. சர்வா நிவி எல்லாம் கொஞ்சம் கலாய்ப்பாங்க கவனமா நடந்துக்கோ….!
ஸ்டிக்கர் பொட்டு வைக்காம குங்குமம் வச்சுக்கோ… அம்மா அப்படி தான் இருப்பாங்க…!(அவனுக்கும் அது தான் பிடிக்கும் )
எனக்கு டயர்டா இருக்கு காபி வேண்டாம் நானே பத்து மணிக்கு மேல் எழுந்து வரேன்… நீ டிபன் சாப்பிடு…. கவிழ்ந்து படுத்துக்கொண்டு செய்தியாய் வாசித்து முடித்து உறக்கத்தை தொடர்ந்தான்.
துளிர்த்த கண்ணீரை துடைத்துக்கொண்டு தலைவாரி திலகமிட்டு தயக்கத்துடன் கீழே இறங்கி வந்தாள்….
கூடத்தில் அமர்ந்து தன் மகனுக்கு காலை உணவை ஊட்டிக் கொண்டிருந்த நிவேதா வளைத்து வளைத்து அவளையே பார்த்தாள்.
முகம் சிவந்து தலை குனிந்து வந்த பவித்ராவை கண்டு உள்ளுக்குள் அவளுக்கு திருப்தியே…. உறங்காத அவள் விழிகளை உற்று உற்றுப் பார்த்தாள் சர்வதனி.
ஆக வீட்டு பெண்கள் ஹரிசரண் பவித்ரா இல்லற வாழ்க்கை தொடங்கி விட்டதாகவே நினைத்துக் கொண்டனர்.
அழுது வீங்கி சிவந்திருந்த அவள் முகம் அவர்களுக்கு வேறு எதையோ உணர்த்திவிட்டது போலும்…
வாம்மா பூஜை அறையில் போய் சாமி கும்பிட்டு திலகம் வைத்துக்கொள் என்றார் தாரணி.
வதின இந்த பூவை வச்சுக்கோங்க…. நெருக்கி தொடுத்த மல்லிகை சரத்தை இரு முழமாக சூட்டிவிட்டாள் நிவேதா.
பாவாக்கு காபி கொடுக்கலையா?சர்வதனி எதேச்சையாய் கேட்க…
இல்ல…. அவர் தூங்குறாரு ரொம்ப டயர்டா இருக்காம் எழுப்ப வேண்டாம்னு சொன்னார்…. பாவம் வெள்ளந்தியாய் அவள் சொல்ல…
இருக்காதா பின்ன அண்ணையாக்கு ரொம்ப டயர்டா இருக்கும் என்ற நிவேதாவின் பேச்சில் சர்வதனி குபீர் என்று சிரித்து விட்டாள்.
ச்சீ… போங்கடி தாரணி விரட்ட ஆளுக்கொரு மூலையாய் தெறித்து ஓடினர்.
லேட்டாய் பல்பு எரிந்த பவித்ராவிற்கு கன்னம் சிவந்து விட்டது.
“——————-“
அவன் எழுந்து வர லேட் ஆகும் நீ வாம்மா சாப்பிடலாம்… தாரணி அழைக்க
இல்ல அத்தம்மா நீங்க சாப்பிடுங்க நான் அவரோட சேர்ந்து சாப்பிடுகிறேன் என்றாள்.
அனைவரும் சாப்பிட அமர பவித்ரா பக்குவமாய் பரிமாறினாள்.
அவளுக்கு பசி வயிற்றை கிள்ளியது ஆனாலும் கணவனுடன் சேர்ந்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை.
அப்புறம் என்று திருப்தியாய் சாப்பிட்டு வாயை துடைத்துக்கொண்டு நிவேதா எழுந்து வர எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது என்று நழுவி ஓடிவிட்டாள் பவித்ரா.
கீழே இருந்தால் இவர்கள் எக்குத்தப்பாய் பேசி வைப்பார்கள் என்று அறைக்குள் நுழைந்து கொண்டாள்…. கணவன் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்க என்ன செய்வது என்று தெரியாமல் பால்கனிக்கு சென்று அங்குள்ள பீன் பேக்கில் அமர்ந்துகொண்டு தோட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆசைப்பட்ட வாழ்க்கை அமைந்துவிட்டது என்றாலும் முதல் கோணலாய் கணவன் மனதில் காயத்தை ஏற்படுத்தி விட்டோமே என்ற எண்ணம் அவளை கதிகலங்க செய்தது.
எதைச் சொல்லி எப்படி அவனை சமாதானம் செய்யபோகிறோம் என்னும் வழிவகை தெரியாமல் சோர்வுடன் கண் மூடி சரிந்து விட்டாள்.
உன்னை சாப்பிட சொன்னேன்… இங்கே வந்து தூங்கிட்டு இருக்க…ஆளை அடித்து வீழ்த்தும் அவன் அதட்டலில் அரண்டு எழுந்து விட்டாள்.
வா சாப்பிடலாம்… மிரட்டலாய் அழைத்து விட்டு அவன் முன்னே செல்ல… ஆட்டுக்குட்டி போல் பவ்யமாய் பின் தொடர்ந்தாள் .
மகனும் மருமகளுமாய் இறங்கி வருவது கண்டு மனம் நிறைந்து விட்டது தாரணிக்கு.
தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக் கொண்டிருந்த சுப்புவிற்கும் அத்தனை மனநிறைவு.
மறுபடி தூங்கிட்டியா பவி மணவாளன் மனைவி அஞ்சுகம் லேசாய் கடிந்தார் ?
இல்லத்தை லேசா தூக்கம் வர மாதிரி…. தடுமாறினாள்.
பின்னி…அவ தலைவலின்னு சொன்னா நான் தான் கொஞ்சம் தூங்கி எழ சொன்னேன்.
அப்புறம் அங்கு யார் கேள்வி கேட்க முடியும்?
புதுமண தம்பதிகளை அமர்த்தி தாரணி பரிமாறினார்.
உனக்கு ஸ்வீட் பிடிக்குமே….தன் இலையில் இருந்த ப்ரூட் கேசரியை அள்ளி மனைவிக்கு வைத்தான்.
ம்ம்மா அவளுக்கு மிளகாய் சட்னி வைக்காதீங்க… அவளுக்கு காரம் சேராது என்றான்.
தேங்காய் சட்னி வச்சுக்கோ அதுல காரம் இல்லை… தானே பரிமாறினான்.
என்னடா இது… காண்பது நிஜமா? கனவா? பே என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
பொங்கல் வேண்டாமா? பத்மாக்கா ஒரு தோசை கிச்சனில் இருக்கும் சமையயல்கார பெண்மணிக்கு குரல் கொடுத்தான்.
தாரணிக்கு சிரிப்பு வந்து விட்டது அவர் நாசுக்காய் நகர்ந்து விட்டார்.
பொங்கலை ஏன் வேஸ்ட் பண்ற… இல்ல அது எச்சில்… அவள் தயங்கி சிறுகுரலில் பேச…. அதனால் என்ன…?அவள் இலையில் இருந்து அவன் எடுத்துக் கொண்டான்.
இப்படி ஒரு காதல் மனைவி நமக்கு வாய்க்குமா….? ஏங்கி நின்ற தேவ் சரணுக்கு ஏனோ காயத்ரி முகம் ஒரு நொடி மின்னல் கீற்றாய் வந்து போனது.
அறைக்கு வந்து மீண்டும் அந்நியனாக மாறிவிட்டான்.
அவ்வளவு வலித்தது கணவனின் புறக்கணிப்பு.
பெற்றோர் பார்த்து வைத்த மாப்பிள்ளை எனில் இந்த புறக்கணிப்பு வலித்திருக்காதோ என்னவோ…. தன் காதல் கணவனின் ஒதுக்கம் அவளை அவ்வளவு வதைத்தது.
அவன் ஸ்பரிசம் வேண்டும் என்பதல்ல அவனின் அன்பான பார்வை போதுமே… பெண் மனம் பேதை மனம் ஏங்கியது.
அன்று இரவும் அவள் கண்ணீர் காவியம் தலையணையில் அச்சேறியது.
உறக்கத்தில் புரண்ட மனையாளின் மதிமுகம் அவனுக்கு நிம்மதியை கொடுத்தது.
என் அறையில் என் படுக்கையில் எனக்கானவளாய் நீ…. அந்த நினைப்பே தித்திப்பு. . நேற்று அளவிற்கு இன்று கோபம் இல்லை சற்று மட்டுப்பட்டிருந்தது. மஞ்சள் கயிறு மின்ன புது மணப்பெண்ணிற்கு உரிய அதீத அழகுடன் அவன் குலாபி ஓவியம் போல் உறங்குகிறாள்….
அவனுக்கு தான் உறக்கம்வரவில்லை… எப்படி வரும்?
லேசாய் புடவை விலகிய இடை அவனை இம்சிக்க…. உடல் சிலிர்த்து உணர்வுகள் பீறிட்டது …. அடக்க முடியா தாபத்துடன் அவளை கண்டு எச்சில் விழுங்கியபடியே கடுப்புடன் எழுந்து பால்கனிக்கு சென்று விட்டான்.
“———————-“
மறுநாள் கிருஷ்ணா குடும்பத்தார் திருப்பதி தேவ ஸ்தானத்தில் VIP தரிசனத்தில் இருந்தனர்.
அவர்கள் குலதெய்வம் திருப்பதி ஏழுமலையான் தான். புது மணமக்கள் வேங்கடவன் அருள் பெற வருவது வழக்கம்.
தாரணி வேண்டுதல் வைத்திருந்தார். மகன் திருமணம் நல்ல விதமாய் முடிந்தாள் வைரதாலி உண்டியலில் காணிக்கை செலுத்துகிறேன் என்று….
மணமக்கள் கரத்தினால் வைர மாங்கல்யம் ஸ்ரீவாரி உண்டியலில் செலுத்தப்பட்டது.மகிழ்வுடன் வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.
ஹரி குடும்பத்தின் தயவில் இவ்வளவு பக்கத்தில் பாலாஜி தரிசனம்.
ஜருகண்டி ஜருகண்டி என்று இழுத்து பிடித்து தள்ளி விடாமல் ஆர அமர வெங்கடாசலபதி அருளை பெறும் பாக்கியம் கிடைத்ததை எண்ணி பூரித்து போனார் மணவாளன்.
எவ்வளவு பெரிய அந்தஸ்துள்ள குடும்பம்! அஞ்சுகத்திற்கு அவ்வளவு பெருமை.
சுப்ப கிருஷ்ணா, வெங்கட கிருஷ்ணாவிற்கு சிவப்பு வண்ண அங்கவஸ்திரம் அணிவித்து நாமம் போட்டு கழுத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்களே…
சந்தோஷ் நான் ஏழுமலையானை பக்கத்தில் பார்த்தேன்னு என் பிரண்ட்ஸ்க்கு சொல்வேன்… சரண்யாவிற்கு குதூகலம்.
வி ஜபி லட்டு ஒரு கிலோ சைசில் பத்து பீஸ் கொண்டு வந்து பிரசாதமாக கொடுத்தனர்.
சந்தோஷ் எண்ணமெல்லாம் நெய் மணக்கும் லட்டின் மீது தான்.
ஏழுமலையானிடம் கையேந்தி கண்ணீருடன் இறைந்து நிற்கும் மனையாளின் முகம் கண்டு கலங்கி நின்றான்
தன் குலாபியை தனக்கு கொடுத்ததற்கு மனமார மகிழ்வுடன் பெருமாளுக்கு நன்றி கூறினான்.
சீக்கிரம் எங்கள் குழந்தையுடன் வரும் பாக்கியத்தை அருள வேண்டும் என்று மனமுருகி வேண்டிக் கொண்டான்.
“——————–“
மணமக்கள் நல்லதுகுடிக்கு மறுவீட்டு விருந்துக்கு விஜயம்…
வாசலில் நிறுத்தி ஆரத்தி சுற்றி உள்ளே அழைத்தனர்.
நிவேதா அவள் கணவன் குழந்தையுடன் மாப்பிள்ளை வீட்டு சார்பாக உடன் வர .. நானும் தான் வருவேன் என்று அடம்பிடித்து கொசுரு பீசாக ஒட்டிக் கொண்டு வந்து சேர்ந்தான் தேவ் சரண்.
மகளை பார்த்த தமயந்தி, அண்ணி அஞ்சுகத்திடம் ஏதோ கேட்க அவர் புன்னகை முகமாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.
இப்போது தமயந்தி முகத்தில் நிம்மதி.
இவன் ஏன் வந்திருக்கான்… காயத்ரி நடுக்கத்துடன் ஜூஸ் டிரேயை நீட்ட… அவள் வளையல்களை நிரண்டிவிட்டு சமத்து பிள்ளையாய் ஒரு கிளாஸ் எடுத்துக்கொண்டான்.
அவள் பயந்து நடுங்கி பின் முறைப்புடன் பார்க்க… அழகாய் அசால்ட்டாய் கண் சிமிட்டினான் தேவ். ஹரியின் தம்பி அல்லவா?
புது மருமகனுக்கு என்று அறையில் புதிதாய் ஏசி மாட்டி இருந்தனர்.
டிரஸ் சேஞ்ச் பண்ணிக்கோங்க…! அவள் வெளியேற…
ஏய் எங்க போற… புது இடம் எனக்கு ஒரு மாதிரி இருக்கு இங்கே என்கூடவே இரு என்றான்.
ம்ம்ம்ம்கும்… ஒருமாதிரி, அதுவும் இவனுக்கு… உள்ளுக்குள் நொடித்துக் கொண்டவள் அமைதியாய் கட்டிலில் அமர்ந்தாள்.
எழுந்து போய் அறைகதவை தாழிட்டு வந்தவன் சட்டையை கழற்றி ஹேங்கரில் மாட்டிவிட்டு ஆம் கட் பனியனுடன் கட்டிலில் படுத்து விட்டான்.
கண்மூடி படுத்திருந்தவனை லஜ்ஜையின்றி பார்த்துக் கொண்டிருந்தாள்.
என் பாவா எவ்வளவு அழகு…! அவன் மீசையை திருகிவிட துடித்த கரங்களை அரும்பாடு பட்டு அடக்கிக் கொண்டாள்.
தூக்கம் வந்தா படு! இல்லைனா நான் தூங்குறவரை இங்கேயே இருந்துட்டு அப்புறமா போ என்றான்.
அடப்பாவி…. ஏன்டா ஏன் இப்படி படுத்துற…? திட்டி தீர்த்துக் கொண்டிருந்தாள்.
பவிமா…. பவிமா சுசிலாவின் குரல் கேட்க…
அப்பாடா தப்பித்தோம் என்று நிம்மதி பெருமூச்சு விட்டபடி எழுந்து ஓடி கதவை திறந்தாள்.
சிரிப்புடன் மீசையை நீவிக் கொண்டு கால் மீது கால் போட்டு தோரணையாய் படுத்திருந்தான்.
———தொடரும் ———
error: Content is protected !!