Skip to content
Post Views: 2,499
ராஜ்மோகன் குரல் வந்த திசை நோக்கி, பஸ்சின் உள்ளே பார்த்தவள், அங்கே நிஜமாகவே அவனைக் கண்டு ஒரு கணம் அதிர்ந்து தான் போனாள்!
இவன் எப்படி இங்கே? அதுவும் பஸ் டிரைவராக!
ஆள் என்ன இப்படி ஆகி விட்டான்?
கொஞ்சம் இளைத்து, நிறம் மங்கி, தாடியும் தம்பட்டையுமான்னு சொல்வாங்களே அந்த மாதிரி! ஏதோ தேவதாஸ் போல!
Advertisement
அவளுக்குள் சட்டென்று ஒரு நப்பாசை!
ஒரு வேளை அவனும், நான் அவனையே நினைச்சுகிட்டு இருக்கிறத போல, என்னையே நினைச்சுக்கிட்டு தான் இப்படி இருக்கானா?
தனக்கு ஏன் அவனை பார்க்கும் போது தேவதாஸ் நினைவு வரணும்?
Advertisement
உனக்கு ரொம்ப நினப்பு தாண்டி!
Advertisement
அவன் என்னமோ உன்னையே நினைச்சுக்கிட்டு இப்படி தாடியோட அலையறான்னு நினைப்பா?
அவன் என்ன உன்னை மாதிரி லூஸா?
நீ தான் இன்னும் அவனை மனசுல வச்சுக்கிட்டு, உன் அத்தையும் அம்மாவும் கொண்டு வர வரன் எல்லாத்தையும் வேண்டாம் வேண்டாம்னு சொல்லி தட்டி விட்டுட்டு இருக்கிற!
Advertisement
போன வருசமே கூட உன் அத்தை, அவங்க கொழுந்தன் பையனுக்கு உன்னை கேக்குறாங்க மகின்னு சொல்லுச்சு.
“ரொம்ப நல்ல பையன், உன்னைப் பிடிச்சு போய் தான் பொண்ணே கேக்கிறாங்க” அப்படின்னு அவ்வளவு தூரம் சொல்லியும், நீ தான் கேக்கவே இல்ல!
அவங்களும் உனக்காக ஒரு ஆறு மாசம் பொறுத்துப் பார்த்துட்டு, அப்புறம் தான் வேற பொண்ணையே கட்டினாங்க.
நீ அப்படி இருந்தா அவனும் அப்படியே இருக்கணுமா?
அவன் எல்லாம் இந்நேரம் அவங்க அண்ணன், அக்கா சொன்ன மாதிரி நல்லா சிவப்பா, கலரா ஒரு பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணியிருப்பான்!
இந்த தாடி விட்டிருக்கிறது கூட அவன் பொண்டாட்டி மாசமா இருக்கிறதால கூட இருக்கலாம்!
நீ ரொம்ப ஓவரா நினைச்சுகிட்டு இருக்காத!
ஆனா.. என் மகிழினின்னு ஏன் சொன்னான்?
என். என் பார் நாகேந்திரன்.
அது தானே உன் அப்பா பேரு. உன்னோட இனிசியல்!
அத சொல்லியிருக்கான்!
பரவாயில்ல போ.. இன்னும் உன்னோட இனிசியல் கூட மறக்காம இருக்கானே!
சந்தோசம்… அவள் மனம் இடித்துரைத்தது!
சந்தோசமா? எதுக்கு உனக்கு சந்தோசம்? எதனால சந்தோசம்? ஏன் சந்தோசம்? அவன திரும்ப பார்த்ததாலா?
ஏய்,, மகி.. அறிவிருக்கா உனக்கு? அவன் இன்னொருத்தியோட புருஷன்! நினைவு இருக்கட்டும்!
அய்யோ என்று தலையைப் பிடித்துக் கொண்டாள் மகி!
இவன் ஏன் இப்ப இங்க வந்து தொலைச்சான்?
இந்த கம்பெனி பஸ் எப்போ சரியாகும்?
எது வரை இந்த ஸ்பேர் பஸ் வரும்?
எத்தனை நாள் இவன் அதை ஒட்டிக்கிட்டு வந்து தொலைப்பான்?
பேசாம, கம்பெனி பஸ் ரெடியாகுற வரை லீவ் போட்டுட்டு வீட்டுல இருந்துக்கலாமா?
எனக்குன்னு இருக்கிற ஒரு இடம், நான் கவலைய மறந்து கொஞ்சம் நிம்மதியா இருக்கிற இடமே இந்த கம்பெனி தான்!
ஏன்.. ஏன்டா, அதையும் கெடுக்க இங்க வந்து தொலைக்கிற? அவள் உள்ளுக்குள் புலம்பினாள்.
இன்றைக்குன்னு பார்த்து, டிரைவர் சீட் அருகே இருக்கும் அந்த இரண்டாவது சீட்டில் உட்காரும் படி வேறு ஆகி விட்டது!
பஸ் ஓட்டும் போது, ராஜ் மோகன், அவ்வபோது அவளையே பார்க்கிற மாதிரி இருந்தது!
ச்சே. அவன் உன்னை பார்க்கல, சைட் மிர்ரர தான் பார்க்கிறான் என்று தனக்கு சமாதானம் செய்து கொண்டே எப்படா வீடு வரும் என்று முள்ளின் மேல் உட்கார்ந்து இருப்பது போல உட்கார்ந்து இருந்தாள் மகி.
அடுத்த நாள் சிக் லீவ் எடுத்துக் கொண்டு வீட்டிலேயே இருந்து கொண்டாள்.
ஆனால் அவள் எண்ணியது போல, அந்த பஸ் ஒன்றும் ஸ்பேர் பஸ் ஆக வந்திருக்கவில்லை!
அவள் கம்பெனி ஸ்டாப் பஸ்களின் ரூட்கள் சிலவற்றை வெளியே உள்ள ட்ராவல்ஸ் கம்பெனிகளுக்கு அவுட்சோர்சிங் முறையில் விட்டிருப்பதாக சொன்னார்கள்!
மகி போகும் பஸ், அந்த மாதிரி அவுட்சோர்ஸ் சர்வீஸ் பண்ணும் ட்ராவல்ஸின் வண்டி.
எனவே அதன் டிரைவர்களும் அந்த ட்ராவல்ஸிடம் வேலைப் பார்க்கும் டிரைவர்கள் தாம்!
அவர்களுக்கும் அவர்களின் தனிப்பட்ட ஆவணங்கள்(KYC Documents) வாங்கப்பட்டு ஐடி கார்டும் கொடுக்கப்பட்டு விட்டது!
இது லீவ் முடிந்து அடுத்த நாள் வேலைக்கு செல்ல பஸ் ஏறிய மகி திகைத்தாள்!
இப்போதும் ஓட்டுனர் இருக்கையில் ராஜ்மோகன்!
அய்யோ! இனி அப்போ, தினம் தினம் அந்த ராஜ் மோகன் முகத்தில் விழித்து தான் ஆக வேண்டுமா?
மகிக்கு அழுகை வரும் போல இருந்தது!
கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு, பஸ் பின் கோடி இருக்கையில் போய் அமர்ந்து கொண்டாள்.
வீடு திரும்பும் போது, ராஜ் மோகன் அவளிடம் ஏதோ பேச வந்தான்.
அவளோ அதை கண்டு கொள்ளாது போனையே பார்த்துக் கொண்டு வந்தாள்.
அடுத்த நாள் அவளுக்கு வீக் ஆப்.
நேராக சமயபுரம் கோவிலுக்கு சென்றாள்.
அம்மன் முன் நின்று மானசீகமாக அழுதாள்!
ஏம்மா.. ஏம்மா இப்படி. என்னை மட்டும் நிம்மதியாவே வைக்க மாட்டியா?
நானே அவன மறக்க முடியாம, நடந்தத மறக்க முடியாம, வேதனையில இருந்தாலும்,
ஏதோ எனக்கு பிடிச்ச வேலை கிடைச்சு, கொஞ்சம் சந்தோசமா நிம்மதியா செஞ்சுகிட்டு என்னோட வாழ்க்கைய ஓட்டிட்டு இருக்கேன்!
அது கூட உனக்கு பொறுக்கலையாம்மா?
இப்ப எதுக்கு அந்த ஆள மறுபடியும் என் கண் முன்னாடி கொண்டு வந்து நிறுத்தி என்னை சோதிக்கிற?
என்ன தான் நான் திடமான ஆளா இருந்தாலும், அவன அவன் பொண்டாட்டியோட ஜோடி போட்டுக்கிட்டு என் கண் முன்னாடி வர்றதை எல்லாம் பார்க்கிற சக்தி எனக்கில்லைம்மா.
ப்ளீஸ் எனக்கு ஒரு வழி காட்டு!
என்னால இந்த வேலைய விட்டு எல்லாம் போக முடியாது!
எனக்கு, நான் ஆசைப்படுகிற இந்த வேலையாச்சும் நிலைச்சு இருக்கட்டுமேம்மா!
என்னை இன்னமும் சோதிக்காத! மனுமுருகி வேண்டிக் கொண்டு பிரகாரம் சுற்றினாள்.
அப்படி சுற்றிக் கொண்டு இருக்கும் போது, யாரோ ஒருத்தன் அவன் மனைவியை போனில் திட்டிக் கொண்டு இருந்தான்!
“லூஸு மாதிரி பேசாதடி.. நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இங்க ஒண்ணும் நடந்துடல! எல்லாம் அப்படியே தான் இருக்கு! எதுவும் மாறல!”
என்று சொல்லி திட்டிக் கொண்டு இருந்தான்.
“அண்ணா கொஞ்சம் நகருங்க” என்று சொல்லி தன் அடிப் பிரதட்சணத்தை தொடர்ந்தாள் மகி.
—
கடந்த வாரம்.
“டேய்.. ராஜு. இன்னிக்கு வியாழக் கிழமை. நான் பாபா கோவிலுக்கு போய்டுவேன்.
அங்கேயே மதிய சாப்பாடும் சாப்பிட்டு விட்டு, ஆட்டோவில் வீட்டுக்கு வந்திடுவேன். பக்கத்து வீட்டு சாவித்திரியும் வருது என் கூட.
நீ மதியம் எங்கியாச்சும் வெளிய சாப்பிட்டுக்கோ” என்றார் கமலா அம்மாள்.
“சரிம்மா” என்று சொன்னான் ராஜு. அவன் போன் ஸ்க்ரீனில் சிரித்துக் கொண்டு இருந்த மகியின் போட்டோவைப் பார்த்துக் கொண்டே!
“அப்போ சீக்கிரம் போய் குளிச்சுட்டு வா. தண்ணீர் நின்னுட போகுது” என்று அவனைக் குளிக்க அனுப்பினார் அவர்.
ராஜுவும் அவன் அம்மாவும் இப்போது இருப்பது திருவானைக் கோவிலில்!
ஒரு ஸ்டோர் போன்ற ஒண்டு குடித்தன வீட்டில்!
அப்பார்ட்மெண்ட் வீடு தான் பார்த்தான் ராஜு முதலில்.
கமலா அம்மா தான் பிடிவாதமாக மறுத்து விட்டு, இப்படி ஒரு வீடு பார்த்து வந்திருக்கிறார்.
அவருக்கு, அக்கம்பக்கம் இருக்கும் நாலு மக்கள், மனுசங்க கிட்ட பேசிட்டு இருக்கணும் என்று சொல்லி, அவரே அவர் நட்பு வட்டத்தில் சொல்லி வீடு அமர்த்திக் கொண்டு விட்டார்.
“டேய்.. வர்ற ஞாயித்துக்கிழமை உனக்கு ஒண்ணும் வேலை இல்லையே?”
“ஏம்மா.. லீவு தான்” என்றான் ராஜு.
“இல்ல.. அன்னிக்கு நாம ரெண்டு பேரும் திருப்பங்களி(திருப்பைஞ்சீலி கோவிலை தான் அப்படி சொல்லுகிறார்) கோவிலுக்கு போகணும்.
அங்க கல் வாழை பரிகாரம் பண்ணிட்டு வந்தா சீக்கிரம் கல்யாணம் நடக்குமாம்.
பாபா கோவிலில் ஒரு அம்மா சொன்னுச்சு. நாம போயிட்டு வந்திடலாம்” என்றார் கமலா.
“நான் வரல. நீ வேணுமின்னா போய் அங்க இருக்கிற யமன் சந்நிதிக்கு போய் யமனை நல்லா வேண்டிகிட்டு வா! அங்க மட்டும் தான் யமனுக்கு கோவில் இருக்காம்” என்றான் ராஜு கிண்டலாக.
“ஆமாண்டா. உனக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி, ஒருத்தி கையில உன்னை ஒப்படைக்கிற வர, நானும் செத்துடக் கூடாது தான்.
அதனால வா. ரெண்டு பேருக்கும் போய் வேண்டிக்கிட்டு வந்திடலாம்” என்றார் கமலா அம்மாவும் விடாமல்!
“பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு குளிக்க சென்றான் ராஜு.
அவன் தற்காலிகமாக மகி வேலை செய்யும் கம்பெனியில் ட்ரான்ஸ்போர்டேசன் சர்வீஸ் காண்ட்ராக்ட் போட்டிருக்கும் ட்ராவல்ஸ் ஓனர் கேட்டுக் கொண்டதால் பஸ் ஓட்டிக் கொண்டிருக்கிறான்.
முதலில் அதற்கு அவனும் ஒத்துக் கொள்ளவில்லை!
“இல்லைண்ணே. நான் சொந்தமா டாக்ஸி ஓட்டப் போறேன். எனக்கு சம்பளத்துக்கு ஓட்டுறதுக்கு இஷ்டமில்லை” என்றே சொல்லி விட்டான்.
“சரிப்பா. எனக்கு டிரைவர் கிடைக்கிற வரை, ஒரு மாசம் மட்டும் நீ ஓட்டு. அதுக்குள்ள நான் வேற ஆள் பார்த்துக்கிறேன்.
ஒரே ஒரு டிரைவர் மட்டும் சார்டேஜ். முன்ன மாதிரின்னா, நானே ஓட்டிடுவேன். இப்போ எனக்கு கொஞ்சம் வயசாகிடுச்சு அதான்ப்பா” என்று அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.
“நீங்க விடுங்கண்ணே..அதெல்லாம் வருவான்” என்று சொல்லி சந்துரு அவரிடம் வாக்கு கொடுத்தான்.
“டேய்.. நீ ஏண்டா அவர்கிட்ட அப்படி சொல்லியனுப்பின? நான் எல்லாம் போக மாட்டேன்!” என்றான் ராஜு.
“நீ போக மாட்டே?”
“மாட்டேன்”.
“இந்த சந்துரு சொன்னா கூட போக மாட்டே?”
“எந்த வெண்ணெய் சொன்னாலும் போக மாட்டேன்! இஷ்டம் இல்லன்னா விடேன்டா.” என்று ராஜு சலித்துக் கொண்டான்.
“இவங்க வர்ற பஸ் ன்னாலும் கூடவா?” என்று மகி கம்பெனி யுனிபார்ம் போட்டுக் கொண்டு பஸ் ஏறும் அந்த போட்டோவைக் காட்டியபடி மீண்டும் கேட்டான்.
ராஜு முதலில் சரியாக கவனிக்கவில்லை!
“என்ன பெரிய பிரிட்டிஷ் மகாராணியா அவங்க? போடா…”
“அவங்க பிரிட்டிஷ் மகாராணியில்ல தான்!
ஆனா என் நண்பன் ராஜுவோட ராணி!
அவன் மனசுல இன்னமும் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கிட்டு இருக்கிற மகாராணி மகிழினி தேவி அவர்கள்!” என்று சொல்லி, போனை பாக்கெட்டில் வைத்து கொண்டு விட்டான் சந்துரு.
“டேய்.. டேய்.. காட்டு.. காட்டு.” ராஜு அவன் பான்ட் பாக்கெட்டில் கை விட்டு அந்த போனை எடுக்க முயன்றான்.
“உனக்கு தான் பஸ் ஓட்ட இஷ்டமில்லையே.. அப்புறம் என்ன?”
“டேய்.. விளையாடாதடா..” என்ற ராஜு ஒரு கணம் அப்படியே நின்று விட்டான்.
“இல்ல வேண்டாம். நீ காமிக்க வேண்டாம். நானும் பார்க்க விரும்பல!”
“ஏண்டா?” என்றான் சந்துரு.
“டேய்.. அவளுக்கு.. அவளுக்கு ஒரு வேளை இப்போ கல்யாணம் ஆகியிருந்தா.. வீணா நான் ஏன் அவளைப் பார்க்கணும். அப்புறம் ஹர்ட் ஆகணும்!
இனி எனக்கு அடி வாங்க, அதிர்ச்சிய தாங்க மனசுல சக்தி இல்லடா” என்றான் ராஜு! அவன் கண்கள் கலங்க தொடங்கியிருந்தன!
“டேய்.. டேய்..நிறுத்துடா.. நீ இவ்வளவு இமோசனல் ஆகுற அளவு ஒண்ணும் நடந்துடல. அப்படி இருந்திருந்தா, மகி டாபிக்கை நான் உன் கிட்ட எடுத்துருப்பனா?
அவளுக்கு இன்னமும் கல்யாணம் எல்லாம் ஆகலடா. அதோட மனசுல இன்னமும் நீ தான் இருக்க போல.
அதனால தான் அது அடுத்து எந்த மாப்பிள்ளை பார்க்கவும் ஒத்துக்க மாட்டேங்குது!” என்றான் சந்துரு.
“அவ வேற மாப்பிள்ளை பார்க்க ஒத்துக்கலன்றதுனால மட்டும் அவ மனசுல நான் இன்னமும் இருக்கேன்னு அர்த்தம் இல்லையே, கல்யாணத்தையே வெறுத்துட்டுக் கூட அப்படி இருக்கலாம்” என்றான் ராஜு,
இன்னமும் பெரிய நம்பிக்கை வளர்த்துக் கொண்டு பின்னாடி கஷ்டப்பட்டு விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையில்!
“நீ சொல்ற லாஜிக் எல்லாம் சரி தான்! ஆனா நான் ஒண்ணும் சும்மா இத சொல்லல!”
“மகி, யாருக்கும் தெரியாம, நீங்க பேசிக்கிட்ட அந்த வாட்ஸ்அப் சாட்களை அடிக்கடி போட்டு போட்டு கேக்கும்னு என் பொண்டாட்டி புவனா சொல்லியிருக்கா!
உன் நம்பர ப்ளாக் பண்ணினாலும், அவ உன்னை இன்னமும் அவ மனசுல ப்ளாக் பண்ணலடா. நீ வேணுமின்னா பாரேன்.” என்று சொல்லி மகியை போனில் அழைத்தான்.
“நாந்தாம்மா. சந்துரு பேசுறேன்” என்றான் போனை ஸ்பீக்கரில் போட்டு விட்டு.
“சொல்ல்லுங்கண்ணா.. புவனாவுக்கு செக்கப் பண்ணிட்டீங்களா. நேத்து ஏதோ முக்கியமா பண்ண வேண்டிய Anomaly Scan இருக்குனு சொன்னா.
ஸ்கேன் பண்ணியாச்சா. பாப்பா நல்லா இருக்குல்ல?” என்றாள் மகி
“ம்ம். அதெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்ல! பாப்பா நல்லா ஹெல்தியா இருக்குனு சொல்லிட்டாங்க.
உன் பிரன்ட் கல்யாணம் ஆகி புருசன் பிள்ளைன்னு ஆகிட்டா. நீ எப்பம்மா கல்யாணம் பண்ணி எனக்கு ஒரு மாப்பிள்ளையையோ, மருமகளையோ பெத்து தரப்போற?”
“அட போங்கண்ணா, உங்களுக்கு வேற வேலை இல்லயா! போங்க. சவாரி ஒண்ணும் இல்லையா? போங்க. புள்ளக்குட்டிய பாருங்க” என்றாள் மகியும் கிண்டலாக.
“அதெல்லாம் பார்க்கலாம் மகி. புவனாவுக்கும் உனக்கும் ஒரே நேரம் கல்யாணம் ஆகப் போவுதுன்னு அவ ரொம்ப சந்தோசப்பட்டா.
இப்ப நீ மட்டும் இப்படியே இருக்கிறத நினைச்சு அவ ரொம்ப கவலைப்படுறாம்மா. நீ ஏன் இப்படி கல்யாணத்துக்கு ஒத்துக்கவே மாட்டேங்கிற?”
“அய்யோ. சாமி.. அண்ணே உங்களுக்கு இன்னிக்கு நிஜமாவே வேலை ஒண்ணும் இல்லையா?” மகி பேச்சை மாற்றினாள்.
“நான் நேராகவே கேக்குறேன் மகி. இன்னமும் அந்த பய ராஜுவ தான் நீ நினைச்சுகிட்டு இருக்கியா? ஆனா அவன் ஒண்ணும் அவ்வளவு ஒர்த் இல்லம்மா!
அவனோட அக்கா அண்ணன் பின்னாடியே வால் பிடிச்சுகிட்டு போனவன் தானே அவன்!
இன்னமும் அவன் நினைப்பு எதுக்கு உனக்கு? உன்னை ஆசை காட்டி மோசம் பண்ணின அவன் எல்லாம். .நல்லா..”
அவன் முடிக்கும் முன்னரே குறுக்கிட்டு விட்டாள் மகி.
“அண்ணே வேண்டாம்னே. விட்டுடுங்க” அவள் வேகமாக அவனை சொல்ல விடாமல் தடுக்க,
“ஏன்மா தடுக்கிற? நீ இன்னமும் அவனை தான் நினைச்சுக்கிட்டு இருக்கியா?”
அவளிடம் பதில் இல்லை.
“யாரா இருந்தா என்ன அண்ணே, எங்கியோ நல்லா இருந்தா சரி. நாம நம்ம வாயால ஒண்ணும் சொல்ல வேண்டாம்.
சரிண்ணே. எனக்கு டைம் ஆகிடுச்சு. வேலைக்கு கிளம்பனும்” என்று சொல்லி போனை கட் செய்தாள் மகி.
“இப்ப என்ன சொல்ற?” என்றான் சந்துரு.
“எப்படா சாவி வாங்க போறோம்?” என்று சொல்லிக் கொண்டு எழுந்த ராஜு,
“டேய். சோம்பேறி. மச மசன்னு நின்னுட்டு இருக்காதே எப்போ பாரு போனு.. பொழுதுக்கும் இப்படி போனில் வெட்டி பேச்சு பேசிட்டு தான் இருப்பியா? கிளம்புடா..” என்றான் ராஜு.
“நீ எல்லாம் நல்லா வருவ.. நல்லா வருவடா. என்றான் சந்துரு.
அதன் பின் தான் அவன் மகியைப் பார்த்து என் மகிழினி என்றதும்!
ஆனால் ராஜு எப்போது துபாயில் இருந்து இங்கு வந்தான்? அப்படி வர அவன் அண்ணன் எப்படி விட்டான்?
error: Content is protected !!