Skip to content
Post Views: 2,084
அத்தியாயம் 40
“கெட்டிமேளம் கெட்டிமேளம்” என்று இரண்டு ஐயர்களும் குரல் கொடுத்தனர்.
பக்கத்துக்கு பக்கத்தில் இரண்டு மணைகள் அமைக்கப்பட்டு இரண்டு ஜோடிகளும் அமர்ந்திருந்தார்கள். ஒரே நேரத்தில் மந்திரங்கள் எல்லாம் கூறி, முகூர்த்த நேரமும் வந்து விடவே இரண்டு மணமகன்கள் கையிலும் தாலி கொடுக்கபட்டது.
Advertisement
அனைவருக்கும் புது விதமான அனுபவமாக இருந்தது. எங்கே பார்ப்பது என்று புரியாமல், அனைவரும் மாறி மாறி இரண்டு ஜோடிகளையும் பார்த்து கொண்டிருந்தார்கள்.
Advertisement
“லூசு பயலுங்க.. இவனுங்களால… இங்கட்டும் அங்கட்டும் திரும்பி திரும்பி பார்த்து கழுத்து வலியே வந்துடும் போல?… அடுத்தடுத்த முஹுர்த்தத்தில தாலி ஆச்சும் கட்டுங்கடான்னா, முடியாதுன்னுட்டானுங்க…” என்று நொடித்துக்கொண்டார் பாட்டி.
Advertisement
இருவரும் கையில் தாலியை பெற்றுக்கொண்டு ,
“டேய் பாரி…”
Advertisement
“டேய் வில்வா…”
என்று ஒருவரை ஒருவர் எட்டி பார்த்து கட்டை விரலை காட்டி வாழ்த்துக்களை கூறி, அதன் பிறகே தங்கள் மனையாளின் கழுத்தில் பூட்டினார்கள்.
ஹர்ஷித்தாவிற்கு முன்றாவது முடிச்சை அருந்ததியும், வர்ஷிதாவிற்கு முன்றாவது முடிச்சை கருணாவும் போட்டனர்.
“ஊர் கண்ணே இவங்க நட்பு மேலே தான் சௌந்தரவள்ளி” என்றார் தாத்தா நெகிழ்ச்சியாக.
“ஆமாங்க, ஆனாலும் கடைசி நிமிஷம் கூட தாலியை கையில வச்சுக்கிட்டு இவனுங்க ஒருத்தரை ஒருத்தர் தானே பார்த்துக்கிட்டாங்க.. கொஞ்சம் ஓவர் தான்”
பின் மணமக்கள் பெரியவர்களிடம் எல்லாம் ஆசி வாங்கி, மற்ற திருமண சடங்குகள் அனைத்தும் சிறப்பாக நடந்தது.
விருந்தினர்கள் எல்லாம் புறப்பட்டு, நெருங்கின சொந்த பந்தங்கள் மட்டுமே எஞ்சி இருந்தனர்.
அவினாஷும் கருணாம்பிகையும் அனைவரிடமும் எப்படி சொல்லுவது என்று நேரம் பார்த்து கொண்டிருந்தார்கள்.
“நாளைக்கு காலையில இங்க இருந்து சென்னைக்கு புறப்பட மினி பஸ் ஒன்னு சொல்லி இருக்கேன், எல்லாரும் ஒன்னாவே புறப்பட்றலாம் இல்லையா?” என்றார் முருகானந்தம் தாத்தா.
“சரிப்பா அப்படியே செஞ்சுடலாம், நீங்க கொஞ்ச நேரம் ஓய்வா இருங்க, காலையில இருந்து சுத்திட்டே இருக்கீங்க” என்றார் தர்மராஜ் அக்கறையாக.
“எல்லாருமே கொஞ்ச நேரம் போய் ஓய்வு எடுங்க” என்றார் தாத்தா. விடிகாலை முஹூர்த்தம் என்பதால் அனைவருமே களைப்பாக தான் இருந்தார்கள்.
அனைவரும் அவரவர்களுக்கு கொடுத்த அறைக்கு சென்று விட்டார்கள்.
வேதாச்சலம் தாத்தா , “அவி ஒரு எட்டு அனந்தன் வீட்டுக்கு போய்ட்டு வரலாம் ப்பா” என்றார் பேரனிடம்.
“சரி தாத்தா, வாங்க இப்பவே போயிட்டு வந்துடலாமா? இல்லை கொஞ்ச நேரம் நீங்க தூங்கி எழுந்துகிட்டாலும் சரி, அப்புறமா போகலாம்”
“இல்லப்பா, இப்பவே போயிட்டு கொஞ்ச நேரம் பேசி இருந்துட்டு வருவோம்.. “
அருந்ததி , “நானும் வரேன்” என்று இணைந்து கொண்டாள்.
அவினாஷ் தன் காரிலேயே தாத்தாவையும் தங்கையையும் அழைத்து கொண்டு புறப்பட்டான்.
தாத்தாவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. வாழ்ந்து காட்டவேண்டும் என்ற வைராக்கியத்தோடு இங்கே இருந்து புறப்பட்டவர்கள், ஓரளவிற்கு நல்ல நிலைமைக்கு வந்து திரும்ப தங்கள் சொந்த ஊருக்கு வருவது அவர் மனதிற்கு நெகிழ்ச்சியாக இருந்தது.
“நீ நல்லா இருக்கனும் அவி கண்ணா… “ என்றார் திடீரென்று பெரியவர்.
அவினாஷிற்கு தாத்தாவின் மனது புரிந்தது, மென்மையாக சிரித்து கொண்டான்.
மூவரும் அவர் அவர் நினைவுகளில் மூழ்கி இருந்தனர். அமைதியான ஒரு சிறு பயணம். அருந்ததிக்கு தன் சிறு வயது நியாபகங்கள் அணி எடுத்து கண் முன் தோன்றியது.
அதில் நிச்சயம் அப்பா அம்மாவின் நியாபகங்கள் வரவில்லை. அண்ணா, தாத்தா, அனந்தன் தாத்தா, தங்கள் வீடு, நண்பர்கள், தெருவில் விளையாடியது, கீழே விழுந்து கையில் காயத்தோடு வீட்டிற்கு திரும்பியது, திடீர் என்று வந்த அத்தை.. இப்படி தான் காட்சிகள் அணிவகுத்தது.
இவர்களது வீட்டிற்கு எதிர்த்த வீடு தான் அனந்தன் தாத்தா வீடு, அவருக்கு ஒரு மகனும் மகளும். மகனும் மருமகளும் இவருடன் தான் இருந்தார்கள். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள். பெரியவன் ரகுராம் அவினாஷின் வயதுடையவன், இரண்டாமவன் ராகவராம் அருந்தியின் தோழன். அருந்ததியும் ராகவும் ஒரே வகுப்பு தான். சில நேரங்களில் எலியும் பூனையுமாக சண்டை இட்டு கொள்வார்கள், சில நேரம் நகமும் சதையும் போல சேர்ந்து சினேகமாக விளையாடுவார்கள். கடைக்குட்டி மீரா, இவர்கள் அங்கே இருந்து கிளம்புகையில் மூன்று வயது குழந்தை. பொம்மை போல இருந்த மீரா என்றால் அருந்ததிக்கு உயிர் என்று தான் சொல்ல வேண்டும். நேரம் கிடைக்கும் போது எல்லாம் தூக்க முடியாமல் மீராவை தூக்கி வைத்து கொண்டு சுற்றுவாள்.
“இப்ப எல்லாரும் வளர்ந்திருப்பாங்க இல்ல தாத்தா?” என்று தாத்தாவுடன் பழைய கதைகளை பேச ஆரம்பித்தாள் அருந்ததி.
அவினாஷிற்கு பதின் வயதில் அம்மாவின் ஆக்சிடென்ட், துபாய் சென்ற அப்பா, நான் இருக்கேன் என்று தைரியம் கொடுத்த தாத்தா, தன்னையே கெட்டியாக பிடித்து நின்ற குட்டி தங்கை, திடீரென்று சீர்கெட்ட தாத்தாவின் உடல்நிலை, தட்டு தடுமாறி குடும்பத்தை பார்த்துக்கொண்டு நிர்கதியான நிலை, அனந்தன் தாத்தாவின் வழிகாட்டுதல்,பிறகு அத்தையின் வரவு, சென்னை பயணம் என்று அவனது நினைவுகள் பயணித்தது.
“அண்ணா, அவங்க வீட்டுக்கு போகிறதுக்கு முன்ன ஸ்வீட் பழம் ஏதாவது வாங்கிட்டு போகணும்” என்றாள் அருந்ததி.
சரி என்று ஒரு ஸ்வீட் கடை முன்பு வண்டியை நிறுத்தினான். அங்கே கடையின் வெளிப்புறம் அமர்ந்து சாப்பிடுவது போல இரண்டு மூன்று டேபிள் சேர்கள் போடப்பட்டிருந்தது.
ஜூஸ், காபி டீ எல்லாம் இருந்தது.
“ஜூஸ் குடிக்கிறீங்களா தாத்தா?” என்றான் அவினாஷ்.
“எனக்கு வேண்டாம் ண்ணா, வயிறு புல்லா இருக்கு, நீங்க ரெண்டு பேரும் வாங்கி குடிச்சிட்டு இருங்க, நான் போய் என்ன எல்லாம் இருக்குன்னு பார்த்துட்டு வரேன்” என்றவளிடம், “நீயே பார்த்து அப்படியே வாங்கிட்டு வந்துடு பாப்பா” என்று பணத்தையும் கொடுத்து அனுப்பினான் அவினாஷ்.
தாத்தாவும் இவனும் ஜூஸ் வாங்கிக்கொண்டு ஒரு டேபிளில் அமர்ந்து கொண்டார்கள்.
“தாத்தா.. உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் தாத்தா..”
“சொல்லுப்பா..”
“நீங்க தப்பா நினைக்க கூடாது..”
“என்ன பீடிகை எல்லாம் பலமா இருக்கு? சொல்லு என்ன விஷயம்?”
“அது வந்து தாத்தா.. வந்து..”
“என்ன காதலா?”
அவன் ‘ங்கே’ என்று விழிகவும்,
”காதல் எனக்கு பிடிக்காது தான், ஆனா நீ காதலிக்கிற பொண்ணை எனக்கு ரொம்ப பிடிக்கும்..”
“உங்களுக்கு யாருன்னு தெரியுமா?”
“ஹா ஹா… பாரி வில்வா கல்யாணத்தை முடிச்சிட்டு அடுத்து உங்க கல்யாணத்தை பேசலாம்னு நாங்க எல்லாரும் ஏற்கனவே பேசி வச்சுட்டோம்.. நீங்க சொல்றதுக்காக தான் காத்துகிட்டு இருக்கோம்”
“தாத்தா…”
“நான் உனக்கு தாத்தன்டா.. “ என்று பெருங்குரலெடுத்து சிரித்தார் தாத்தா.
“நாங்களே நேத்து தானே சொல்லிகிட்டோம்..”
“போடா போக்கரி பயலே… உங்க ரெண்டு பேருக்குள்ள நேசம் உங்க ரெண்டு பேர் கண்ணுலயும் அப்பட்டமா தெரியுதே… கருணா மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும். எனக்கு இதுல மனப்பூர்வமான சம்மதம்தான்.. ஒரு விதத்துல எனக்கு இது ஒரு எல்லை இல்லாத நிம்மதியை தான் தருது. உன்னை உனக்கே புரிய வைச்சு, சிரிக்க வைச்சு, இயல்பாக மாத்தினதே பாப்பா தானே? பாப்பா திரும்ப வேலையில சேர்றதுக்கு முன்னமே கல்யாணத்தை நிச்சயம் செய்யலாம்னு தான் யோசிக்கிறோம் “
“ஆனா தாத்தா, அவ டெல்லிக்கு போய்டுவா..”
“நீயும் கூட போக வேண்டியது தானே..”
“நீங்க.. பாப்பா… நான் எப்படி? அதான் என்னால ஒன்னும் முடிவு செய்ய முடியலை, கொஞ்ச நாள் போகட்டும் “
“எல்லாத்தையும் போட்டு குழப்பிக்காத அவி…. கடவுள் எல்லாத்துக்கும் வழி காட்டுவார். நதி போகுற போக்குல அமைதியா போக பழகிக்க.. இவ்வளவு தூரம் கடவுள் தானே நமக்கு வழி காட்டி கூட்டிட்டு போறார், இனியும் போவார்” என்று கூறி பேரனின் கைகளை தட்டிக்கொடுத்தார்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் கை நிறைய பைகளோடு அருந்ததி வந்துவிட்டாள்.
தாத்தா மெல்ல அருந்ததியிடம் விஷயத்தை கூறவும்,
“அப்படியா தாத்தா… எனக்கும் முன்னாடியே டவுட் இருந்துச்சு ண்ணா.. அண்ணாஸ் கிட்ட கூட சொன்னேன், நானும் ராஜிம்மாவும் கண்டு பிடிக்க உங்க பின்னாடி கூட சுத்தினோம்… ஆனாலும் ரெண்டு பேரும் அழுத்தம் தான் போங்க”
“உனக்கு ஓகேவா பாப்பா?” என்றான் தங்கையிடம் பரிதவிப்பாக. அவள் சம்மதம் அவனுக்கு மிகவும் முக்கியம் அல்லவா?
“எனக்கு எவ்வளவு சந்தோசம்ன்னு வார்த்தையாலே சொல்ல முடியாது அண்ணா.. உங்களுக்கு பெஸ்ட்டா வைஃப் வரணும்னு தான் நான் தினமும் கடவுள்கிட்ட வேண்டிப்பேன். கருணாக்காவை விட பெஸ்ட்டா யாருமே இருக்க முடியாது ண்ணா. எனக்கு ரொம்ப ரொம்ப ஹாப்பி.. நான் அண்ணாஸ்களுக்கு சொல்லவா?” என்று ஆர்பரித்தாள்
“மெதுவா சொல்லலாம்.. இப்ப முதல்ல அனந்தன் தாத்தா வீட்டுக்கு போயிட்டு வரலாம் வாங்க” என்று கூறி இருவரையும் அழைத்து கொண்டு புறப்பட்டான் அவினாஷ்.
தாத்தாவிற்கு காதல் என்றால் பிடிக்காதே, எப்படி அவரை சம்மதிக்க வைக்க போகிறோம் என்று பெரிதாக கவலை இருந்தது அவனுக்கு. இப்பொழுது மனது மிகவும் லேசாக இருப்பதுபோல உணர்ந்தான். வண்டி ஓட்டுகையில், ஒரு பாட்டை ஹம் செய்து கொண்டே வந்தான்.
பூரிப்பாக இருந்த பேரனின் முகத்தை பார்த்து தாத்தாவிற்கு அத்தனை மனநிறைவாக இருந்தது.
‘இறைவா, என் பேரனுக்கு இந்த சந்தோஷத்தை நிலைக்க விடு’ என மனதார வேண்டிக்கொண்டார்.
மூவரும் மகிழ்ச்சியான மனநிலையுடனே அனந்தன் வீட்டிற்கு சென்றார்கள்.
“வேதா… வா வா” என்று சிறு பிள்ளையாக ஓடி வந்தார் அனந்தன் தாத்தா.
அவர்கள் சொந்தத்தில் ஒரு துக்கம் நிகழ்ந்ததால் திருமணத்திற்கு வர முடியாது என்று முன் தினமே அழைத்து கூறி இருந்தார்.
அவியை பார்த்து, “நீ ஆயிரத்துல ஒரு புள்ளப்பா.. என் வேதாவை பழையமாதிரி ஆக்கிடியே..” என்றார் கண்கள் கலங்க.
“ஹே பாப்பா… எப்படி இருக்க?” என்றார் அருந்ததியை தோளோடு அனைத்து.
அவர் பார்த்து வளர்ந்த பிள்ளைகள் அல்லவா.
வீட்டினர் அனைவரும் மகிழ்ச்சியாகவே வரவேற்றார்கள்.
“அக்கா..” என்று வந்தாள் அவர்கள் வீட்டு கடைகுட்டி மீரா.
“பொம்மி.. எவ்வளவு பெருசா வளர்ந்துட்டியே? என்ன படிக்கிற?” என்றாள் அருந்ததி அவள் கன்னத்தை கிள்ளி.
“நான் செவென்த் படிக்கிறேன்..” என்றாள் மீரா சிறு வெட்கத்துடன்.
அத்தை என்று மீராவின் அம்மாவை பார்த்த அருந்ததி அதிர்ந்தே விட்டாள். சினிமா நடிகை போல பளிச்சென்று இருந்த பெண்மணி இப்பொழுது வாடி வதங்கி தோற்றமளித்தார்.
மேலே புகைப்பட சட்டத்தில் சிரிப்புடன் காட்சியளித்த மாமா அதற்கான விடையாகி போனார்.
“எங்க உங்க ரெண்டு அண்ணாக்களுக்கும்?” என்றார் தாத்தா மீராவிடம்.
பல வருடங்களாக தொடர்பு இல்லாமல் போனதால், ஒரு இடைவெளி இருக்கத்தான் செய்தது.
அந்த ஏரியா, கீழ் நடுத்தர குடும்பங்கள் இருக்கும் இடம் தான். ஆனால் வீட்டின் தற்போது நிலைமை அவர்களது ஏழ்மையை எடுத்து கூறியது. அதை கண்டுகொண்டாலும் இவர்கள் காட்டிக்கொள்ளவில்லை.
“முதல்ல உட்காருங்க எல்லாரும், பொறுமையா எல்லாம் பேசலாம். நீ காபி கொண்டு வாம்மா” என்று மருமகளை உள்ளே அனுப்பிவிட்டு, இவர்களை அமரவைத்தார் அனந்தன்.
“பெரியவன் ரகு, திடீர்ன்னு ஒரு நாள் மாலையும் கழுத்துமா ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்தான். தலைச்சம் பிள்ளை தலையெடுத்து குடும்பத்தை உயர்த்துவான்னு எம்புள்ள நம்பிகிட்டு இருந்தான். அவனால் அதை ஜீரணிச்சிக்க முடியல, வீட்டை விட்டு அனுப்பிட்டான்.
ஏற்கனவே அவனுக்கு இதயத்துல்ல கோளாறு இருந்திருக்கு. எங்க கிட்ட சொல்லாமலே மறைச்சிருக்கான். இவன் வேலைக்கு போனதும் ஓய்வெடுக்கலாம்னு நினைச்சிருந்திருக்கான்.
மத்த ரெண்டு பிள்ளைகளையும் கரை சேர்க்கணுமேன்னு, உடம்பு முடியாம மில் வேலைக்கு தொடர்ந்து போய், உடம்பை கெடுத்து ஒரேடியா போய் சேர்ந்துட்டான்”
“எங்க கிட்ட சொல்லிருக்கலாமே அனந்தா.. . நாங்க வந்து அவனை ஒரு தடவை கடைசியா பார்த்திருப்போமே?”
“எனக்கு அப்ப ஒன்னுமே புரியல வேதா.. உன் பசங்க பொறுப்பில்லாமல் பிள்ளைங்களை உன் கிட்ட விட்டுட்டு போனாங்க. எம்புள்ள நிர்கதியா மனைவி மக்களை விட்டுட்டு போய் சேர்ந்துட்டான்.
அது ஆச்சு மூனு வருஷம். இப்பவும் வருத்தம் இருக்குன்னாலும் துக்கத்துல்ல இருந்த நாங்க வெளிய வந்துட்டோம். இருக்கிறதை எல்லாம் வித்து தான் சின்னவன் காலேஜ் படிச்சிட்டு இருக்கான். இது தான் கடைசி வருஷம்.. சென்னையில வேலை கிடைச்சிருக்கு.. அவன் வேலைக்கு சேரும் போது எல்லாருமே சென்னைக்கே போய்டலாம்னு சொல்லிட்டு இருக்கான்.
இப்ப தான் அவனை கடைக்கு அனுப்பி இருக்கா ரஞ்சி..”
அனைவருக்கும் தேநீருடன் வந்தார் ரஞ்சிதா. இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பொதுவாக பேச்சுகள் நகர்ந்தது.
“ஹாய் தத்தி” என்று ஆர்ப்பாட்டமாய் உள்ளே நுழைந்தான் ராகவ்.
“ஹாய் ரவா உப்மா” என்றாள் அருந்ததியும் உற்சாகமாக.
பின் தாத்தாவையும் அவினாக்ஷயும் வரவேற்று அம்மாவிடம் கடையில் இருந்து வாங்கி வந்த பையை கொடுத்தான்.
“இப்பதான் ராகவ் உன்னை பத்தி சொல்லிட்டு இருந்தேன்”
“என் அருமை பெருமைகளை எல்லாம் முழுசா சொன்னீங்களா இல்லையா?”
ராகவ் வந்ததும் கலகலப்பாக மாறியது சூழல்.
“எப்படி இருக்க ராகவா? எங்களை எல்லாம் நியாபகம் இருக்கா?” என்றார் வேதாச்சலம் தாத்தா.
“சத்தியமா இப்படி உங்களை நான் பார்ப்பேன்னு நினைக்கலை தாத்தா.. எப்படியிருந்த நீங்க இப்படி சூப்பரா ஹீரோ மாதிரி இருக்கீங்க… சூப்பர் தாத்தா” என்றான் பாராட்டுதலாக.
“சென்னையில வேலை கிடைச்சதுன்னு சொல்லிட்டு இருந்தாங்க.. என்ன படிச்சிட்டுயிருக்க ராகவ்? எங்க வேலை?” என்றான் அவினாஷ்.
“ரேடியோலஜி படிச்சிட்டு இருக்கேன் அண்ணா….கே.கே. ஹாஸ்பிட்டல்ல வேலை கிடைச்சிருக்கு”
“அப்படியா? எங்க பாப்பா பிஸியோதெரப்பி… அவளும் அங்க தான் பிளேஸ் ஆகிருக்கா..”
“வாவ்… அப்படியா சூப்பர் “ என்றான் அருந்ததியை பார்த்து.
பேசிக்கொண்டே நேரம் போனதே தெரியவில்லை.
“இவன் எங்க எல்லாரையும் சென்னைக்கு கூப்பிட்டுட்டு தான் இருக்கான்.. அவர் போனதுக்கு அப்புறம் எங்களுக்கும் இங்க பிடிப்பே இல்லை, இருந்தாலும் புது ஊர்ல விலைவாசி விக்கிற விலையில என்ன செய்ய போறோமோ?” என்றார் ரஞ்சி வருத்தமாக.
“நான் கூட முதல்ல சென்னைக்கு போக பிரியபடலை, மாற்றம் என்பது தான் மாறாத ஒன்னுமா ரஞ்சி, ராகவ் சொல்ற மாதிரி சென்னை வந்துடுங்க, எல்லாம் நல்லதாவே நடக்கும்” என்றார் வேதா தாத்தா ஆறுதலாக.
“நீங்க வாங்க தாத்தா, நாங்க எல்லாம் அங்க தானே இருக்கோம், பார்த்துக்கலாம்” என்றான் அவினாஷும்.
“இந்த வீடு மட்டும் தான் பாக்கி இருக்கு. அதை வித்திட்டு, மீராக்கு ஸ்கூல் முடிஞ்சதும் அங்கே வரலாம்ன்னு தான் யோசிக்கிறோம்”
“இனி அடிக்கடி போன்ல பேசிட்டு இரு அனந்தா… இனி எல்லாம் நல்லதாவே நடக்கும். உங்க பெரிய பேரனை சேர்த்துகிறதுனாலும் யோசிங்க, என்னை மாதிரி காலம் கடந்து ஞானம் வர வேண்டாம்” என்றார் வேதா மெதுவாக.
“அவன் காதலிச்சது கூட தப்பில்லை அப்பா, ஆனா குடும்ப பாரத்தை சுமக்க பிடிக்காம வேலை கிடைச்சதை கூட வீட்ல மறைச்சு சுயநலமாய், பெரிய இடத்து பொண்ணை, காதலிச்சு கல்யாணமும் பண்ணிக்கிட்டு அவங்க வீட்டோட மாப்பிள்ளையா போய்ட்டான். அவர் கடைசி காரியம் பண்ண கூட வரலை. நாங்க சேர்த்துக்க தயாரா இருந்தாலும் அவன் சேர தயாரா இல்லை. அது தான் உண்மை. அவன் சந்தோசமா இருந்துட்டு போகட்டும்,” என்றார் ரஞ்சி கலங்கிய குரலில்.
“விடும்மா… அதான் ராஜா மாதிரி நானும் ராஜகுமாரி மாதிரி பொம்மியும் இருக்கோம் இல்ல.. கவலையே படாத,” என்று அன்னையை தோளோடு அனைத்து கொண்டான்.
“நாளைக்கு காலையில நாங்க கிளம்பறோம், சென்னையில நீங்க தங்கறதுக்கு எல்லா ஏற்பாடுகளையும் நான் பார்த்துகிறேன். வேற என்ன உதவினாலும் தயங்காமல் கேளுங்க.. “ என்றார் வேதா தாத்தா.
“இந்த வீட்டை விக்க ஏற்பாடு பண்ணிட்டு இருக்கேன் வேதா, அந்த காசும் கைல இருந்தா கொஞ்சம் தெம்பா இருக்கும் இல்ல?”
“நான் முருகானந்தம் தாத்தாகிட்ட சொல்றேன் தாத்தா, நல்ல விலைக்கு ஏற்பாடு பண்ணுவாங்க”
“இன்னும் ஆறு மாசம் இருக்கனும் இங்க.. மெதுவா சொல்லலாம்”
“நான் உங்க நம்பரை தாத்தாகிட்ட கொடுக்கிறேன். அவங்களுக்கு இங்க நிறைய செல்வாக்கு இருக்கு இல்லையா? நமக்கு அது உதவியா இருக்கும். நானும் உங்க பேரன் தானே தாத்தா.. இனி நான் பொறுப்பு..”
அனந்தன் தாத்தா அவினாஷை ஆரத்தழுவி கொண்டார். ராகவிற்கு கண்கள் கலங்கியது. நான் பொறுப்பு என்று அவினாஷ் கூறியது அவனுக்கு யானை பலம் போல தோன்றியது.
“நீங்க இங்க இருந்தப்ப நான் பெருசா உங்களுக்கு உதவினது கூட இல்லையே அவினாஷ்”, என்றார் ரஞ்சி.
“என்ன அத்தை நீங்க, அப்ப மட்டும் தாத்தா இல்லேன்னா நான் என்ன ஆகிருப்பேனோ தெரியாது. அதுவுமில்லாமல் நீங்க எப்படி எங்களுக்கு உதவி இருக்க முடியும். அப்ப உங்க அம்மான்னு நினைக்கிறன், அந்த பாட்டி படுக்கையில இருந்தாங்க இல்லையா? பொம்மி வேற சின்ன குழந்தை.. உங்களுக்கு எங்க நேரம் இருந்தது. இது என்ன கொடுக்கல் வாங்கலா? எதையும் யோசிக்காம சென்னை வாங்க, பார்த்துக்கலாம்”
இரவு அங்கயே சாப்பிட்டுவிட்டு தான் அங்கே இருந்து புறப்பட்டனர்.
error: Content is protected !!