Skip to content
Post Views: 2,578
ராஜ்மோகன் உற்சாகமாகவே தான் ஊருக்குக் கிளம்பி வந்தான்.
அவன் வீட்டில் அவன் அண்ணன் கல்யாணத்திற்கு பிறகு நடக்கும் சுபகாரியம்!
இடையில் அவன் அண்ணன் குழந்தைக்கு காது குத்து விழா நடந்தது தான் என்றாலும், அது வனிதாவின் வீட்டு நிதி நிலைமையைக் கருதி மிகவும் சிம்பிள் ஆக தான் நடந்தது.
பிள்ளைகள் படித்துக் கொண்டிருக்கிறார்கள், செலவு இப்போது அதிகம் என்று சீர் செய்வதற்கு மலைத்து அதை தள்ளிப் போட்டுக் கொண்டே போய்க் கொண்டிருக்க,
Advertisement
ராமு தான், “நீங்க சீர் எதுவும் பெரிசா செய்ய வேண்டாம், என் தம்பி லீவில் வந்திருக்கும் போதே பங்சன் வைத்து விட வேண்டும்” என்று சொல்லிவிட,
அந்த செலவுயுமே கூட தியாக செம்மல் – சுமைதாங்கி – திருவாளர் ராஜ் மோகன் தலையில் தான்!
“நாங்க, பாப்பா சடங்குக்கு நல்லா செய்வோம், அதுக்குள்ள வசந்த்தும் படிச்சு முடிச்சு ஒரு வேலையில உக்கார்ந்துடுவான்” என்று சாக்கு சொன்னார் வனிதாவின் அப்பா.
Advertisement
எனவே அவன் வீட்டில் நடக்கப் போகும் பெரிய சுபகாரியம் ப்ரியா பெண்ணின் திருமணம் தான்!
Advertisement
அது மட்டுமில்ல அதற்கு எல்லாம் மேல் அவனுக்கு அவன் அம்மாவை உடனே பார்க்க வேண்டும் என்ற எண்ணம் சமீப நாட்களாக ரொம்பவும் தோன்றிக் கொண்டே இருக்கிறது!
அம்மாவிற்கு அவன் லீவை கேன்சல் செய்து வேலைக்கு செல்வதில் அன்று விருப்பமே இல்லை!
“இருடா.. பாலு மாமா கிட்ட நான் மறுபடியும் பேசறேன். பொறுமையா இரு.
Advertisement
நான் சொன்னா அவர் எனக்காக செய்வார்”. என்று சொல்லிக் கொண்டிருப்பதைக் கண்ட ராமு,
“ஏன்மா, அவர் பாவம், நமக்காக அந்த மகேந்திரன் கிட்ட அவர் இன்னும் அசிங்கப்படனுமா?
நான் கேள்விப்பட்டேன்.
அவன் பாலு பெரியாப்பாவைக் கண்டபடி திட்டிட்டானாம்.
நீயெல்லாம் ஒரு பெரிய மனுசன்னு, உன் வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து எல்லா ஏற்பாடும் செஞ்சு வச்சதுக்கு,
எங்க பொண்ணுக்கு கெட்ட பெயர் வாங்கிக் கொடுத்திட்டீங்க நல்லா!
இனி மாப்பிள்ளை பார்க்கிறேன், அது இதுன்னு எங்க வீட்டுப் பக்கம் வந்திடாதீங்கன்னு கறாரா சொல்லிட்டானாம்.
இனி அவர் எப்படிம்மா அங்க போய் பேசுவாரு?”
“எல்லாம் நீயும், உன் பொண்டாட்டி, உன் அக்கா பண்ணி வச்ச வேலை!” மீண்டும் அவர் திட்ட ஆரம்பிக்க,
“அம்மா.. அம்மா விடுங்கம்மா.. நான் பார்த்துக்கிறேன்” என்று சொல்லி அவரை சமாதானம் செய்தான் ராஜு.
செய்து விட்டு தான், அவனே நேரிடையாக மகிக்கு போன் செய்தான். அவன் நம்பரை ப்ளாக் செய்து விட்டாள் அவள்!
அவன் சந்துருவிடம் “டேய்.. உன் போனில் அவ நம்பரைப் போட்டுக் கொடுடா” என்றதற்கு அவன் மறுத்து விட்டான்.
“அது கிட்ட நீ.. பேசி.. என்ன ஆகப் போகுது? நீ அவ கழுத்துல இப்பவே தாலி கட்டுறேன்னு சொல்லு.
நான் எப்படியாவது அவங்க வீட்டுல பொய் சொல்லி ஏமாத்திட்டவாவது, அத இங்க கூட்டிட்டு வரேன். நீ தாலி கட்டுறியா?
உன் அண்ணனை எதிர்த்து நீ அத செய்வியா?”
“அது..வந்து.. எப்படிடா? அண்ணன் எனக்கு அப்பா மாதிரி..” ராஜு தயங்க..
“அப்ப மூடிட்டு, ஊருக்கு கிளம்புற வேலைய பாரு” என்றான் அவன் கோபமாக.
ராஜு மேல் மிகுந்த வருத்தம் சந்துருவைப் போலவே அவன் அம்மாவுக்கும்.
அன்று அவனை வழியனுப்ப கூட வழக்கம் போல் அவர் ஏர்போர்ட்டுக்கு வரவில்லை.
வழக்கமாக, அவன் ஏர்போர்ட் உள்ளே சென்று அவர் கண்ணிலிருந்து அவன் மறையும் வரை பார்த்துக் கொண்டிருப்பார்.
அதன் பின் எவ்வளவு நேரமென்றாலும் அவன் பிளைட் கிளம்பிய பின்னரே வீடு திரும்புவார்.
ஆனால் அன்று வர மறுத்து விட்டார்.
“யம்மா.. நீங்க. இப்படி நான் ஊருக்குப் போகும் போது அழுது கிட்டு இருந்தா எப்படி?
நான் பத்திரமா ஊருக்குப் போய் சேர வேண்டாமா?” என்று சொன்னவுடன் தான் பதறி எழுந்தார்.
அவர் காலில் விழுந்து, விபூதி பூசிக் கொண்டு கிளம்பினான் ராஜு.
இதுவும் அவனின் வழக்கம் தான்!
ஊருக்கு சென்ற பின், தான் பத்திரமாக சென்று சேர்ந்ததை அவருக்கு அழைத்து சொன்னான்.
அதன் பின் அம்மா, தினமும் பேசினான் தான்!
ஆனால் அவன் அம்மா எப்போதும் போல பேசவே இல்லை!
ஓரிரு வார்த்தைகளை மட்டும் பேசி விட்டு வைத்து விட்டார்.
அம்மாவுக்கு இன்னமும் கோபம் போல என்று நினைத்துக் கொண்டான்.
அம்மாவாக அவனை அழைப்பதும் குறைந்தது!
அவனாக பேசினால் இப்படி இரத்தின சுருக்க பேச்சுக்கள்!
அதுவும் கடந்த கொஞ்ச நாட்களாக அம்மாவின் போன் வேறு எடுக்கவே மாட்டேங்குது.
அண்ணனை கேட்டால், “அம்மா போன் கொஞ்சம் மக்கர் பண்ணுது. வேற போன் வாங்கலாம்னா, இது ராஜு வாங்கி தந்ததுன்னு சொல்லி மாத்த மாட்டேங்குது! நான் என்ன பண்ண?” என்றான்.
அதுவும் போய், இப்போது எல்லாம் ஸ்விட்ச் ஆப் என்கிறது எப்போது அடித்தாலும்!
அவன் அண்ணன் போனில் தான் அம்மாவை அழைத்து பேசினான் சில முறை.
அதன் பின் ராஜு அழைக்கும் போதெல்லாம் ஒன்று அம்மா வீட்டில் இருப்பதில்லை, இல்லை ராமு வெளியே இருப்பான்.
இரண்டும் இல்லையென்றால் “அத்தை தூங்கிக் கிட்டு இருக்காங்க” என்று அண்ணி சொல்வாங்க.
மொத்தத்தில் அவன் அம்மாவுடன் பேசி இரண்டு மாதங்கள் ஆகப் போகிறது!
அம்மாவைக் காணும் ஆசையிலும், அப்படியே சான்ஸ் கிடைத்தால் மகியிடமும் பேச வேண்டும் என்ற ஆசையிலும் தான் அவன் வந்து கொண்டிருந்தான்!
கூடவே கையில் சீட்டு எடுத்த பணம் ஐந்து லட்சம்.
அம்மாவுக்கு அக்காவுக்கு அண்ணிக்கு எல்லோருக்கும் பட்டுப்புடவை எடுத்து தரணும்.
அம்மாவுக்கு ஒரு புதிய போன். கூடவே மகிக்கும் ஒன்று ரகசியமாய்!
நிறைய சாக்லேட்கள், தைல பாட்டில்கள், சென்ட் பாட்டில்கள் என்று அள்ளி வந்திருந்தான்.
வீட்டிற்கு வந்தான்.
அண்ணன் அவனை உற்சாகமாக தான் வரவேற்றான்.
ராஜுவின் கண்கள் அன்னையைத் தேடின.
“அம்மா எங்கண்ணே?”
“சொல்றேன். முதல்ல உள்ள வா. வனி, ராஜு வந்திட்டான். டீ போடு” என்றான்.
அதற்குள் அவன் அறைக்குள் சென்று ரெப்ரெஷ் ஆகி லுங்கிக்கு மாறி வந்தான் ராஜு.
டீயைக் குடித்துக் கொண்டே மீண்டும் கேட்டான்.
“அம்மா எங்கண்ணா? நான் வர்றது அம்மாவுக்கு தெரியாதா?”
“அம்மா இப்ப ஊரில் இல்லை. நார்த் இண்டியா டூர் போயிருக்கு!”
“என்ன? டூர் போயிருக்காங்களா? இங்க பேத்தி கல்யாணம் நடக்கப் போவுது. அதுக்கு இல்லாம..” ராஜு இழுக்க.
“அந்த கல்யாணத்துல இருக்க பிடிக்காம தான் அம்மா டூர் போனதே!”
“என்ன சொல்ற அண்ணே, அம்மாவுக்கு கல்யாணத்துல கலந்துக்க இஷ்டம் இல்லையா?”
‘ஆமா. இன்னும் என் மவன் தனிக்கட்டையா இருக்கான்.
அவனுக்கு ஒரு பொண்ணைப் பார்த்து கட்டி வைக்க துப்பில்ல.. நேத்து சமைஞ்ச குட்டிக்கு அதுக்குள்ள கல்யாணமாம்!
அப்படின்னு கண்டபடி திட்ட ஆரம்பிச்சுடுச்சு. நடு வீட்டில் உக்கார்ந்து ஒரே அழுகை. என்ன சொன்னாலும் நிறுத்தவே இல்லை!
மாமாவுக்கும் கோபம் வந்திடுச்சு. அவர் அக்காவை நம்ம வீட்டுக்கே போக கூடாதுன்னு சொல்லிட்டாரு.
அப்புறம் நான் தான் சமாதானம் செஞ்சு அம்மாவை கண்டிச்சு வைக்கிறேன் சொல்லி அப்புறம் தான் எல்லாம் சரியாச்சு.
அம்மா உன் பிரன்ட் சந்துரு கிட்ட சொல்லி அதுவே ஏற்பாடு பண்ணி டூர் கிளம்பிடுச்சு!” என்று கதை திரைக்கதை எல்லாம் சொல்லி முடித்திருந்தான் ராமு.
“ஓ. ஏன்.. இந்த அம்மா இப்படி பண்றாங்க. நானே வருத்தப்படல. இவங்க ஏன்?
சரி நான் வந்திருக்கிறதை போனில் சொல்லிடறேன்” என்று சொல்லி அம்மாவை அழைக்க போக,
“அம்மா போனை வீட்டில் வச்சுட்டு போய்டுச்சு” என்றான் ராமு தயக்கமாக.
“ஏன் அண்ணே அப்படி விட்டீங்க. இப்ப நாம எப்படி காண்டாக்ட் பண்றது?
கூட யார் போயிருக்கா, அவங்க யார் நம்பராவது இருக்கா? இல்ல டூர் ஏஜென்ட் நம்பர் இருக்கா?”
“அது எல்லாம் சந்துருவுக்கு தான் தெரியும்!” என்றான் ராமு.
சந்துருவும் ராஜுவும் இப்போது பேசிக் கொள்வதில்லை என்பதை அறிந்தவனாக!
“அப்ப நீ அம்மா கிட்ட பேசவே இல்லையா?”
“இல்லை. இங்க இருக்கும் போதே அம்மா என்கிட்ட பேசறது இல்லை! கோபம்!” என்றான் ராமு.
தளர்ந்து போய் உட்கார்ந்தான் ராஜு.
“ஏங்க.. இங்க வாங்க..” என்று ராமுவை அழைத்தாள் வனிதா.
“ஏங்க.. நீங்க போய் அந்த மருது அண்ணனை கூட்டிட்டு வாங்க. டேங்க் தண்ணீர் ரொம்ப நாறுது” என்றாள்.
“அவர் ஊர்ல இல்லையாம். அவர் பொண்டாட்டி சொன்னுச்சு. நாம வேற ஆள தான் பார்க்கணும்.” என்றான் ராமு.
“என்ன ஆச்சுண்ணே?”
“மேல வாட்டர் டாங்கில் ஒரு அணில் விழுந்து செத்து கிடக்குடா.
நேத்தே உன் அண்ணியே ஏணி மேல ஏறி பார்த்துட்டா.
அத கிளீன் பண்ண தான் மருது அண்ணனை கூப்பிட போனேன். அவர் வீட்டில் இல்லை!
வனிதா.. இப்போதைக்கு வெளியே இருக்கிற கார்ப்பரேசன் தண்ணிய பிடிச்சு வேலைய பாரு. அந்த தண்ணீய யூஸ் பண்ண வேணாம்”
“அய்யோ! அது இதுக்கு மேல இருக்கு. வாய்ல வைக்க முடியல! ஒரே ப்ளீச்சிங் பவுடர் வாடை. பாப்பா ரொம்ப அழறாங்க”
“என்னை என்ன பண்ண சொல்ற?” ராமு அவளிடம் சீறினான்.
“அண்ணே.. இரு. கோபப்படாதே! அவங்களும் வேலைக்கு கிளம்பனும் இல்ல!
அதான் டென்சன்! இருங்க அண்ணி” என்று சொன்னவன், சட்டையை அணிந்து கொண்டு பைக்கை எடுத்துக் கொண்டு போய் தெரு முனைக் கடையில் போய் வீட்டிற்கு இரு வாட்டர் கேன்கள் கொண்டு வந்து போட சொல்லி விட்டு வந்தான்.
பின்னாடியே ஒரு பையன் வந்து வாட்டர் கேன்களைப் போட்டு விட்டு. “கேனுக்கு ராஜு அண்ணன் டெபொசிட் கட்டி இருக்காங்க. நீங்க கேனை திருப்பி தரும்போது தருவோம்” என்று சொல்லி சென்றான்.
அதற்குள் ராஜு ஒரு ஷார்ட்ஸ் அணிந்து வந்து வாட்டர் டேங்கை சுத்தம் செய்ய மாடியில் ஏறி விட்டான்.
“டேய்.. இருடா.. நாளைக்கு மருது வந்து பண்ணட்டும் நீ ஏன்? நீயே இப்ப தான் வந்து இறங்கியிருக்க!”
“அட இருண்ணே, பாப்பாவுக்கு இன்பெக்சன் ஆகிடும். இந்த தண்ணிய யூஸ் பண்ணிட்டு இருந்தா!” என்று ராஜு மேலே ஏறப் போனான்!
“சொன்னா கேக்க மாட்டே.. இந்தா.. இந்த மாஸ்கையாவது போட்டுட்டு போ.. பயங்கர நாத்தம்!” என்றான் ராமு அவன் அருகில் வந்த வனிதாவைப் பார்த்து அர்த்தமாக சிரித்தபடி.
சிரிக்க மாட்டானா பின்னே!
அவன் தானே, “இருடி.. இன்னும் ஒரு நாள் மேனேஜ் பண்ணு. ராஜு வந்திடுவான்.
அவனே கிளீன் பண்ணிடுவான். மருதுவுக்கு ஏன் காசு கொடுத்துட்டு..
பாரு.. நானே காரை இன்னும் வாட்டர் வாஷ் பண்ணாம வச்சுருக்கேன்” என்று மேலும் அவளிடம் சொல்லி சிரித்தான் அவள் கொடுத்த இரண்டாவது காபியை குடித்த படி!
“ரொம்ப விவரம் தான்! பீத்திக்காதீங்க. நானும் தான் நாலு பட்டுப்புடவை எடுத்து வச்சுருக்கேன். அவன் வந்தா அயர்ன் பண்ணித் தர சொல்லி.
நாலு புடவை, அதுவும் பட்டுப் புடவைன்னா ரொம்ப காசு கேக்குறாங்க அயர்ன் பண்றவங்க”.
“அயர்ன் பண்றத பத்தி பேசவும் ஞாபகம் வருது. நான் எடுத்துக் கொடுத்த சர்ட்களை எல்லாம் அயர்ன் பண்ண கொடுத்து வாங்கிட்டியா?”
“ம்ம்.’ என்றாள் வனிதா.
“இப்படி இவன் வருவான்னு தெரிஞ்சிருந்தா, போன வாரம் அதுக்கு தண்டம் கொடுத்துருக்க மாட்டேன்” என்றாள் வனிதா.
அடப்பாவிகளா என்பது போல போட்டோவில் இருந்த அவர்களின் அப்பா சங்கரலிங்கம் பார்த்தார்!
பின்னே! அவை அனைத்தும் ராமுவின் பழைய, பற்றாமல் போய் விட்ட சட்டைகள்!
உட்கார்ந்து தின்று திங்கும் சோற்றினால் பெருத்துக் கொண்டிருந்த தொப்பையின் காரணமாக!
அவற்றை பழைய பாத்திரக் காரரிடம் போடப் போன வனிதாவைக் கண்டபடி திட்டி எடுத்து வைத்திருந்தான் ராமு.
“ஏய்.. அத்தனையும் பிராண்டட் சர்ட்ஸ். ஆலன் சோலி சர்ட்ஸ்!”
“அதுக்கு என்ன பண்ண முடியும்? உங்களுக்கு சைஸ் சரியாக இல்லையே இப்ப! என்ன தம்பி கிட்ட கொடுக்க சொல்றீங்களா? கொன்னே போட்டுடுவான் என்னை!”
“ உன் தம்பிக்கு யார் கொடுக்க சொன்னா? அத எல்லாம் எடுத்து வை. ராஜு போட்டுப்பான்.
நல்லா துவைச்சு அயர்ன் பண்ணி, அவன் ஊருக்குப் போகும் போது கொடுத்து விடலாம்.
அவன் என்ன அங்க எக்சிகியூட்டிவ் வேலையா பார்க்கிறான்?
வொர்க் டைமில் கம்பெனி யூனிபார்ம்.
அப்புறம் ரூமில் வந்து போட்டுக்க இது போதும்! எடுத்து வை” என்று சொல்லியிருந்த சர்ட்ஸ் அவை!
மாடியில் கர்ம ஸ்ரத்தையாக டாங்கை கழுவி முடித்தான் ராஜு.
இடையிடையே மோட்டார் ஆன் ஆப் செய்தது மட்டுமே ராமு செய்த உதவி!
நன்றாக கழுவி முடித்த ராஜு, கீழே வந்து கை கால்களை கழுவிக் கொண்டு, “டாங்க் மூடி வாங்கணும்” சொல்லி ஒரு ஹார்ட்வேர் கடையில் அவனே போய் சரியான சைசில் ஒரு மூடியை வாங்கி வந்து பொருத்தி விட்டான்.
“ராஜு.. குளிக்க போறியா? குளிக்க போகுமுன்னே, காரை கொஞ்சம் வாஷ் பண்ணிடறியா? பிரியா வீட்டுக்கு கொண்டு போய் விட்டுட்டு வரணும்.
கல்யாண வேலைக்கு வெளியே போக கொள்ள வேணுமாம்”.
காரையும் கழுவி விட்டு, குளித்து விட்டு, ராஜுவே காரை ஓட்டிக் கொண்டு, ப்ரியா வீடு சென்றான்.
அவன் காரை கொண்டு போய் நிறுத்தி விட்டு, கேட்டை திறக்க, அதில் நீட்டிக் கொண்டிருந்த ஒரு துருப்பிடித்த பிசிறு ஒன்று அவன் வேஷ்டியில் மாட்டி இழுத்தது. முழங்கையை கீறியது!
அதை மெதுவாக எடுத்து விட்டபடியே உள்ளே சென்றான் ராஜு.
“டேய்.. ராஜு வா.. வா.” என்று உற்சாகமாய் அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள் பிரியா!
“வாங்க மாப்பிள்ளை” என்றான் வேல்முருகனும்.
“வாங்க மாமா” என்றபடி வந்தாள் பிரியாவின் பெரிய பெண் ஐஸ்வர்யா.
“கல்யாணப் பொண்ணு எப்படி இருக்காங்க?” என்றபடி அவளை பாசமாக விசாரித்தான் ராஜு.
“எங்கே என் டார்லிங்?’ என்று சின்னவளை தேடினான். வெளியே வந்தாள் ப்ரியாவின் சிறிய மகள்.
இப்போது பாவாடை தாவணியில்! எல்லாம் ஒரு காரணமாக தான் அணிய வைத்திருந்தாள் ப்ரியா!
“அய்யோ.. என்ன இது? இப்படி வளர்ந்துட்டா.. நான் ஊருக்கு போகும் போது கூட கவுன் போட்ட குட்டி பாப்பாவா இருந்தா! இப்போ இப்படி வளர்ந்துட்டா!” என்று சொல்லி அதிசயித்தான் ராஜு.
“டேய்.. இப்போ அவளும் பெரிய மனுசி ஆயாச்சு. இவ கல்யாணத்தோட அவளுக்கும் சேர்த்து சடங்கு சுத்திடணும். அது தான் ஆசை தாய் மாமன் நீயும் வந்திட்டயே!” என்றாள் ப்ரியா.
“அதுக்கென்ன அக்கா ஜமாய்ச்சுடலாம்” என்றான் ராஜு, தன் முழங்கையை திருப்பி தேய்த்துக் கொண்டே!
அவன் கையில் இருந்த சிராய்ப்பைக் கண்ட பிரியா,
“என்னடா இது கையில?”
“இப்ப தான் உன் வீட்டு கேட்டில் கீறிக்கிட்டேன்” என்றான் ராஜு.
“ஏங்க.. உங்க கிட்ட எத்தனை வாட்டி சொல்லிட்டு இருக்கேன். அந்த கேட்டை சரி பண்ணுங்க. பண்ணுங்கன்னு. சரியா மூடவும் முடியல. தெரு நாய் வேற உள்ளே வந்துடுது கேப் வழியா!”
“நான் என்னடி பண்ணட்டும். கல்யாண வேலையப் பார்ப்பேனா இல்ல இதுக்கு அலைவேனா? இந்த மாதிரி சின்ன வேலைன்னா ஒரு வெல்டரும் வர மாட்டேன்கிறாங்க!
எனக்கு மட்டும் இப்படி கீறல் வாங்க ஆசையா? நேத்து கூட என்னோட சட்டையை பதம் பார்த்திடுச்சு!” என்றான் வேல்முருகன்.
அவனிடம், வெல்டரை எல்லாம் கூப்பிட வேண்டாம் என்று சொன்னவளே பிரியா தான்!
“அதான் ராஜு வர்றான் இல்லை! அவனே சரி பண்ணிக் கொடுப்பான்! அதுக்கு தானே அவன் படிச்சுருக்கான்.
நீங்க கல்யாண வேலையை பாருங்க. அப்புறம் ஆக்டிங் டிரைவர் கிடைக்கலன்னு சொன்னீங்க இல்ல!
அதுவும் யாரையும் பார்க்க வேண்டாம்! அதெல்லாம் ராஜுவே கார் ஒட்டுவான்” என்றும் சொல்லியிருந்தாள்.
காரை எடுத்துக் கொண்டு வந்த போதே டாங்க் டீசல் பில் பண்ணி தான் வந்திருந்தான் ராஜு.
பிரியா தானே பயன்படுத்தப் போகிறாள் அவள் போட்டுக் கொள்ளட்டும் என்று ராமு டீசல் போடவே இல்லை அதற்கு!
ப்ரியாவின் கணக்கு படியே தான் ராஜுவும் செயல் பட்டான்.
அவனே போய் ஒரு வெல்டிங் மெசினை வாடகைக்கு எடுத்து வந்து, கூடவே ஒரு அசிஸ்டென்ட் ஒருவனையும் கையோடு அழைத்து வந்து, அந்த கேட்டை சரி பண்ணியவன், பெயிண்டும் அடித்துக் கொடுத்து விட்டே வந்தான்.
அடுத்த நாள், ப்ரியா அடுத்த அடியை எடுத்து வைத்தாள்.
அவளுக்கும் அவன் புருசனுக்கும் ராஜு வந்திருக்கும் நேரம் ஒரே “சண்டை”.
அதன் விளைவாக, ப்ரியாவை அன்றும் அடித்து தள்ளினான் வேல்முருகன்!
ராஜுவின் கண் முன்னே!
“மாமா” என்றான் கோபமாக ராஜு.
“அக்கா, சம்பந்தம் கலக்க போறாங்க, அடுத்த வருஷம் பாட்டி கூட ஆகிடுவாங்க! இன்னமும் நீங்க அவங்கள இப்படி கை நீட்டுறது சரியில்ல!”
“விடுடா.. அவர் என்னை தானே அடிக்க முடியும். பேச முடியும்!
அங்க அவர் தங்கச்சி வீட்டில் எல்லாம் மனுஷன் வாயே திறக்க மாட்டார்!
வெளிய பொண்ணைக் கொடுத்தா கூட இவ்வளவு கறாரா இருக்க மாட்டாங்க போல!
சொந்த அத்தையா இருந்துகிட்டு, இப்ப போய் கடைசி நேரத்துல பைக் வாங்கி கொடுன்னா நாங்க எங்க போவோம்.
தலை தீபாவளிக்கு வாங்கித் தரோம்னு சொல்லி அங்க போய் பேச சொன்னா, அங்க போய் பேச துப்பில்ல. இங்க வந்து என்கிட்ட கையை நீட்டுறாரு! நான் தானே இவருக்கு இளிச்ச வாயி!”
“ஏய்.. துப்பில்ல கிப்பில்லன்னு பேசுன, உன் தம்பி இருக்கான்னு கூட பார்க்க மாட்டேன்! அப்படியே வாயை உடைச்சுடுவேன் பார்த்துக்கோ” வேல்முருகன் சீறினான்.
“அய்யோ.. மாமா விடுங்க. வீட்டுல கல்யாணத்தை வச்சுகிட்டு, இப்படி நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டா நல்லாவா இருக்கு!
இப்ப என்ன ? பைக் தானே? வாங்கிக்கலாம் வாங்க!” என்றான் ராஜு.
“டேய்.. வேணாம்டா.. ஏற்கனவே அம்மா என் மேல கோபமா இருக்கு! நீ வேற இத எல்லாம் செஞ்சா, அவ்வளவு தான்!” என்றாள் ப்ரியா நல்லவள் போல!
“இல்ல.. அம்மாக்கு தெரிய வேண்டாம்! நான் பார்த்துக்கிறேன்’
“நீ.. டவுன் பேமென்ட் மட்டும் கட்டு மாப்பிள்ளை. நான் மாசா மாசம் கட்டிக்கிறேன்” என்றான் வேல்முருகன் மெதுவாக.
“ம்ம்.. பார்க்கலாம்..வாங்க” என்று சொல்லி பைக் ஷோரூம் அழைத்து சென்ற ராஜு, ரெடி கேஷ் கொடுத்தே வாங்கி விட்டான்!
கல்யாணம் நன்றாக விமரிசையாகவே நடந்தது!
மணப்பெண்ணின் அம்மாச்சி மட்டும் மிஸ்ஸிங்.!
அப்படி எங்கே தான் இருக்கிறார் கமலா அம்மாள்? இருக்கிறாரா முதலில்?
error: Content is protected !!