Skip to content
Post Views: 2,189
நதி 5
கம்பெனி குறித்த விசயங்களை கங்கா தன் அக்கா வாய் வார்த்தையாய் சொல்லி கேள்விப்பட்டிருந்த போதும், நேரில் காணும் போது.. புதுவித அனுபவமாய் இருக்க ஆசையாய் அக்கா அமர்ந்து தைக்கும் மிஷினை தடவிப்பார்த்தாள் குதூகலமாய்.
Advertisement
அங்கிருந்த மிஷின்கள், எது.. எதற்கு.. பயன்படுகிறது என்று புரியாத போதும், விதவிதமான மிஷின்களில் துணிகளை அவர்கள் லாவகமாக உள்ளே விட, அது தையலோடு வெளியே வருவதை பார்க்கவே.. அத்தனை பிரம்மிப்பு அந்த பிள்ளைக்கு.
“அக்கா.. நா ஒரு டைம் உன்னோட மிஷின்ல தச்சு பாக்கவா..?” என அக்காவின் அருகே நின்று, அவள் ஆண்கள் அணியும் ட்ரக் பேன்ட்டுக்கு போடும் பாக்கெட்டை பார்த்த படி ஆசையாய் கேட்க,
Advertisement
Advertisement
கைகள் லாவகமாய் துணியை திருப்பி தைக்க வாகாக கொடுக்க, “கங்கா.. விளையாட்டில்லடீ இது. கொஞ்சம் ஏமாந்தாலும் ஊசி கையில ஏறிடும்.
மிஷினை முதல்ல மிதிச்சு, அதோட நேக்கு கத்துக்கிட்டு தான் தைக்கனும். ஆர்வத்துல அதிகமா மிதிச்சே.. சோலி சுத்தம் பாத்துக்கோ..!
Advertisement
முதல்ல தைக்கறதவங்கள நல்லா கவனி. அவங்க கைய எப்படி எடுத்து.. எப்படி துணிய விடறாங்கன்னு பாரு.
அப்புறம், மிஷின் ஆஃப்ல இருக்கும் போது நூல் எப்படி கோர்த்திருக்குன்னு பார்த்து படி.
அதுக்கும் அப்புறமா.. தையல் மிஷின்ல உட்காரலாம்..” என்று ஆசானாக தங்கைக்கு பாடம் சொன்னபடி தனது வேலையிலும் கண்ணானாள் யமுனா.
‘தான் சொன்னது.. கங்காவின் காதோடு சென்றதா..? இல்லை, மூளையிலும் ஏற்றிக்கொண்டாளா..?’ என்பதை கவனித்திருக்கலாம்.. யமுனா.
அதை செய்யாமல் போனதால் உண்டான விளைவு…
*****
“தீனா ண்ணே.. பதினாலாம் நெம்பர் ஊசி பஹதூர் அண்ணே வாங்கிட்டு வரச்சொல்லுச்சு..” என வந்து நின்ற பையனை பார்த்து,
“காலைல வந்ததுமே.. ஒரு பாக்கெட் எடுத்துட்டு போனானேடா.. இப்ப மறுபடியுமா..?” என்று யோசனையாய் கேட்டபடியே,
தனது போனிலிருந்து பஹதூரை அழைத்தவன், “எதுக்குடா மறுபடியும்..?” என்றான் சுருக்கமாக.
அவனின் கேள்வி புரிந்தவனும், “அண்ணே.. ஒரு மிஷின் காலைல இருந்து தகராறு பண்ணுது..” என்று சொல்ல,
“ஊசி உடையுதோ..?” என்றான் யோசனையோடே.
“ஆமா.. நானும் மாத்தி கொடுக்கறேன். போல்டிங் மொத்தமா இருக்க.. அங்கே ஏறி இறங்கும் போது ஊசி உடையுதுன்னு அந்த அக்கா சொல்லுது..” என்று விளக்க,
“சரி இரு.. நா வர்றேன்..” என்றவன், ஊசி பாக்கெட்டை கையோடு எடுத்துக்கொண்டு ஸ்டிச்சிங் செக்ஷனுக்கு விரைந்தான்.
கம்பெனியில் இது போன்ற வேலையில் இருப்பவர்கள் ஓரளவு மிஷினில் உள்ள குறைபாட்டை சரி செய்யவும் பழகி வைத்திருப்பர்.
அப்படி அவர்களால் முடியாத பட்சத்தில் அதற்கென மெக்கானிக் பலர் இங்கு இருப்பதால் அவர்களில் ஒருவரை அழைத்து சரி செய்ய சொல்வார்கள்.
தீனாவை எல்லா விதத்திலும் தங்கமணி பழக்கியிருக்க, ஓரளவு பிரச்சனையை கண்டு கொள்ளும் திறமை அவனுக்கு உண்டு. சிலதை அவனே சரியும் செய்துவிடுவான்.
அவனால் முடியாத பட்சத்தில்.. ஆட்களை உடனே வரவைத்து சரி செய்து கொடுத்துவிடுவான்.
அதுவரை வேறு காலியாக உள்ள மிஷினுக்கு அவர்களை மாற்றி வேலையை தொடர வைப்பான்.
அவனை பொறுத்தவரையில் வேலை நிற்காமல் நடக்க வேண்டும்.
அதற்குரிய எல்லாவற்றையும் தயார் நிலையிலேயே இருக்கும் படி பார்த்துக்கொள்வது அவனின் சிறப்பு.
மேலே சென்றவன் அங்கு ஒலித்துக்கொண்டிருந்த பாடலை கேட்டு அதை முணுமுணுத்த படி, அந்த குறிப்பிட்ட மிஷினில் இருந்த பெண்மணியை எழுப்பி விட்டு ஊசியை மாற்றி தைக்க பட்டென உடைந்தது ஊசி.
அதில் சந்தேகம் எழ மிஷினை ஆராய்ந்தவன், “என்ன க்கா.. இவ்வளவு நூல் கீழ சுத்தி கிடக்கு..! நீங்க அதை கட்பண்ணி.. உருவி எடுத்திருக்கீங்க.. போல..?” என்றான் அவரை கூர்ந்து பார்த்து.
“நேத்து சிக்குச்சு.. அதை புல்லா எடுத்துட்டு.. நேத்து தைக்கும் போது நல்லா தச்சுதே..!
இப்ப கொஞ்ச நேரம் வரை கூட.. நல்லா தான் இருந்துச்சு.. இப்ப தான் இப்படி..” என அவர் பூசி மொழுக,
“அக்கா காலைல இருந்து ஊசி மாத்தி தான் தைக்கறீங்க.. இவ்வளவு நேரத்துல மொத்தமா ஒரு கட்டு கூட முடிக்கல.. இதுலையே தெரியுதே..” என்று தீனா கண்டிப்போடு கேட்க,
பதில் சொல்ல முடியாமல் திருதிருத்தவர், “நேத்து நல்லா தான் ப்பா தச்சது..” என்று அவரின் பிடியிலேயே நின்றார்.
சுற்றிலும் வேலை செய்பவர்களுக்கு மிஷின் சத்தத்தோடு ஒலிக்கும் பாட்டு சத்தத்திலும் இதை கவனிக்க வில்லையா..? அல்லது,
அவரவர் வேலையை முடிக்கும் முனைப்புடன் இருந்தனரோ..! இவருக்கு சப்போர்ட் பண்ணவோ.. இவரை மாட்டி விடவோ.. யாரும் வரவில்லை.
தங்களுக்கான வேலையை செய்து கொண்டு இருந்தால் தான் வருமானம் பார்க்க முடியும்.. என்று அடுத்தவரை நோட்டம் விடாமல் அவரிடத்தில் சரியாக இருந்து கொள்பவர் தான் அதிகம் இங்கே.
அப்படிப்பட்டவர்கள் தான்.. ஒரே கம்பெனியில் நீண்ட காலம் வேலை பார்க்க முடியும்.
இல்லாவிட்டால் வேலையில் கோட்டை விட்டுவிட்டு.. அடிக்கடி வேறு கம்பெனிக்கு மாறிக்கொண்டே இருக்க வேண்டியது தான்.
இப்போது பேசும் பெண்மணி.. அந்த ரகத்தை சேர்ந்தவர். ‘இந்த கம்பெனி இல்லன்னா வேற.. அதுக்காக நான் தப்புன்னு ஒத்துக்கனுமா..?’ என்ற எண்ணத்தோடே நிற்க,
இந்த பத்து வருடத்தில்.. அவரை போல எத்தனை பேரை பார்த்திருப்பான் தீனா.
அதனால், “மெக்கானிக் வந்து தான் சரி பண்ணனும். இப்போதைக்கு முடியாது. நீங்க வீட்டுக்கு கிளம்புங்க. மிஷின் சரியானா போன் பண்ணறேன்..” என்று சொல்லி முடித்துவிட அந்த பெண்மணிக்கு சப்பென ஆனது.
போன முறை இந்த மாதிரி ஆன போது அங்கிருந்த வேறு மிஷினில் அவரை தைக்க சொல்லிவிட்டு.. இதை சரி செய்தது போல.. இன்றும் நடக்கும்.. என எதிர்பார்க்க, ‘வீட்டிற்கு செல்ல சொல்லிவிட்டானே..!’ என்ற கடுப்பு அவர் முகத்தில்.
ஆடி மாதம் இங்கு டல் சீசன்.. என்று சொல்வார்கள்.
ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கே கட்டு கிடைக்காது. அப்படி இருக்க புதிதாய் டெய்லரை சேர்ப்பது கடினமே.
அதிலும் இது போன்ற ஆட்களை நிச்சயமாக எடுக்கவே மாட்டார்கள். இனி புரட்டாசி ஆயுத பூஜைக்கு பின் தான் ஓரளவு சீசன் சூடு பிடித்து ஆட்களையும் சேர்ப்பார்கள்.
‘அதுவரை வேலை இல்லாவிட்டால்.. எப்படி சமாளிப்பது..?’ என்ற கவலை வர,
“என்ன தீனா.. இப்படி சொல்லிட்டே..? நீ ரெடி பண்ணி கொடு. நா இங்கேயே இருக்கேன்..” என்று சொல்ல,
“அக்கா.. நூல் ஃபுல்லா சுத்தி.. அதை இழுத்ததுல.. டைமிங் செட்டிங் மாறி இருக்கு மிஷின்ல..
அதை மெக்கானிக்கை வரச்சொல்லி தான் சரி பண்ணணும். நீங்க இப்ப இருந்தாலும் வேலைக்கு ஆகாது..” என்று நாசூக்காக,
‘நீ கிளம்பு..’ என்று விட்டவனிடம், ‘இன்னும் நின்று பேசி ஒன்று செய்ய முடியாது.. நாளை வந்து பார்த்துக்கொள்ளலாம்..’ என்ற எண்ணத்தோடு அவர் கிளம்பி சென்றார்.
பஹதூருக்கு கட்டுக்களை வந்திருப்பவர்களுக்கு பிரித்து கொடுப்பது, தைப்பது சரியாக இருக்கிறதா..? என பார்க்கவே காலை நேரம் சரியாக இருக்கும்.. என்பதால் தான் தீனா உள்ளே வந்ததே..
இல்லாவிட்டால் பஹதூர் தான் இதையெல்லாம் பார்ப்பான். அவனால் முடியாது போனால் தான் தீனாவிடம் விசயம் போகும். அடுத்து மெக்கானிக்..
இன்று பஹதூருக்கு பதில்.. தீனா வந்ததும் எதிர்பார்த்ததை விட மிஷின் அதிக சிக்கலாகி போனதும்.. அந்த பெண்மணி எதிர்பாராதது.
பஹதூர் எனில் அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுத்து வெளியே சென்றிருக்க மாட்டார்.
பேசியே அவனை வேற மெஷினை கொடுக்க வைத்திருப்பார். அது தீனாவிடம் நிச்சயம் எடுபடாது என்பதால் தான் அவரும் பணிந்து சென்றதே.
அந்த பெண் கிளம்பும் போது, டீ டைம் வந்திருக்க தையல் மிஷினுக்கு ஓய்வு கொடுத்து.. வெளியே கேனில் டீ கொண்டு வந்தவரிடம் வாங்கி குடிக்க சிலரும்.. அருகே இருக்கும் பேக்கரியை நோக்கி சிலரும் செல்ல.. பாத்ரூம் செல்பவர்கள் மேல் மாடிக்கு விரைந்தனர்.
கம்பெனிக்கு அருகேயே வீடு எடுத்து தங்கியிருக்கும் பெண்கள் சிலர், காலை முடிக்காமல் விட்ட வேலையை முடித்துவிட்டு வரும் நோக்கோடு வீட்டிற்கு கிளம்பினர்.
ஆக மொத்தம் வெகு சிலரை தவிர, ஏனையோர் அங்கிருந்து சென்றிருக்க, தீனா தனது கைபேசியிலிருந்து மெக்கானிக்குக்கு அழைத்தவன்.. நிலைமையை பேசிக்கொண்டு அந்த மெஷின் ஸ்டூலிலேயே அமர்ந்து கொண்டான்.
error: Content is protected !!