Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

எந்தன் ஜீவநதி

Enthan Jeevanathi 5 2

அவனுக்கு இடையில் டீ, காபி என குடிக்கும் பழக்கம் இல்லாதததாலும், அன்று இடைப்பட்ட நாள் என்பதால், அவனுக்கு அவசரமாக செய்ய வேண்டிய வேலையும் இல்லாது இருந்ததால், மெக்கானிக் வந்ததும், ‘என்ன பிரச்சனை..’ என்று சொல்லிவிட்டு செல்லலாம்.. என்று அங்கேயே அமர்ந்துவிட்டான்.
போனில் மெக்கானிக்கோடு பேசிக்கொண்டே தலையை சுழற்றி எல்லாவற்றையும் ஒரு பார்வை பார்த்தபடி அமர்ந்திருந்தவன்.. ஒரு குறிப்பிட்ட மிஷினில் அமர்ந்திருந்த பெண்ணிடம் தனது பார்வையை நிலைக்க விட்டான்.


Advertisement

அவன் அனுமானம் தப்பாமல் அந்த பெண்ணும் அதை செய்ய,
“ஏய்…!!” என கத்தியபடி ஓடியும்.. அவன் செல்லும் முன் அது நடந்திருந்தது.

Advertisement

Advertisement

****
டீ டைம் வந்ததும் சாரதா, “யமுனா.. தங்கச்சிய கூட்டிட்டு வா.. டீ குடிக்கலாம்..” என அழைக்க,

Advertisement

கங்காவோ, “அக்கா.. எனக்கு வேணாம்.. நீ வேணுமுன்னா போ..” என்றுவிட,
தங்கையை விட்டு செல்ல மனமில்லாது, “அக்கா, நீங்க வசந்திக்கா கூட போங்க..” என்று சொன்னவள்,
“கங்கா, நா பாத்ரூம் போகனும். நீயும் வர்றீயா..?” என்றாள் தங்கையிடம்.
“நா வரலக்கா..” என்று சொல்லி அவள் யமுனாவின் ஸ்டூலில் அமர்ந்து கொண்டாள் சோர்வாக.
முதல் நாள் பஸ்ஸில் வந்தது.. இரவு தூக்கமில்லாத பதட்டம்.. எல்லாம் அவளை வெகுவாக சோர்ந்து போக வைத்திருந்தது.
“சரி, அமைதியா உட்கார். பஹதூர் அண்ணாகிட்ட சொல்லியிருக்கேன். அவரோட வேலைய முடுச்சிட்டு.. என்னன்னு சொல்றேன்னு சொல்லியிருக்கார்.
வேலை பார்க்காம இப்படி வெட்டியா இந்த சத்தத்துல இருந்தா ஒரு மாதிரி தான் இருக்கும். உனக்கு வேலை ஒதுக்கினா போர் அடிக்காது, சரியா..?” என்று,
தங்கைக்கு வேலை பார்க்காமல் இருப்பதால்.. அலுப்பாக இருப்பதாய் நினைத்து சொன்னவள் அவளை விட்டுவிட்டு மேலே நடந்துவிட்டாள்.
பவர் மிஷினை பொறுத்த வரை.. அது அணைக்கப்பட்ட பின்னும் கூட, ‘கண்டன்ஷர்..’ எனப்படும் பகுதியில் மின்சாரம் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.
அது முற்றிலும் காலியாக சிறிது நேரம் தேவைப்படும்.
அந்த நேரத்திற்கு முன், “ஆஃப்ல தானே இருக்கு..” என நினைத்து பெடலில் கால் வைத்தால் அது சற்று ஓடியே நிற்கும்.
இதை கங்காவிடம் யமுனா சொல்லாமல் சென்றிருக்க, ஏற்கனவே ஆர்வக்கோளாரில் இருந்த கங்கா மிஷினில் எல்லாவற்றையும் தடவி பார்த்தபடி காலை பெடலிடம் கொண்டு போக,
அவளின் செய்கையையே பார்த்திருந்த தீனாவிற்கு.. நன்றாக புரிந்தது.. அந்த பெண் அடுத்து செய்யப்போவது..!
அதோடு அந்த பெண் பார்வையே சொன்னது.. அவள் புதியவள் என்று.. அதனால் தான் பதறி அவன் ஓடி வர,
அதற்கு முன்னரே.. கங்கா பெடலில் அழுத்தத்தை கொடுக்க, தடவிக்கொண்டிருந்த கை மிஷின் அதிர்வில் கீழிறங்க, சிங்கர் மிஷின் என்பதால்.. தடுப்பு ஏதுமின்றி இருந்த ஊசி அவளின் விரலில் ஆழமாக இறங்கியிருந்தது.
நொடியில் நடந்துவிட்ட விபத்து தான். ஆனால் வழியும் ரத்ததையும்.. விரலில் சொருகிய ஊசியையும் கண்டு பதட்டத்தில் கையை உருவ பார்த்த கங்காவின் கரத்தை கெட்டியாக பிடித்தது தீனாவின் கரம்.
“கைய இழுக்காதே..! இழுத்தா இன்னும் டேமேஜ் ஆகிடும்..” என்று சொல்லும் போதே,
‘ஊசி எந்த வாக்கில் உள்ளே இறங்கியிருக்கிறது.. அதை எப்படி லாவகமாய் எடுக்க..’ என ஆராய்ந்தது அவன் விழிகள்.
எலும்பில் பட்டு ஊசி வளைந்து போயிருக்க.. ‘ஊசியை மிஷினிலிருந்து கழட்டினால் தான்.. கையிலிருந்து அதை எடுக்க முடியும்..’ என்று புரிந்தவன்,
“கைய அசைக்காம வச்சிருக்கியா..? நா டூல் கிட் எடுத்துட்டு வர்றேன்..” என்று அவளின் முகம் பார்த்து சொல்ல,
கண்ணில் நீரோடு பார்த்த அவளின் மிரட்சி பார்வையை கண்டு கையை விடவே தயங்கினான் தீனா.
‘நிச்சயமாக தான் கையை விட்டதும்.. அவள் அவசரமாக அதை இழுக்க பார்ப்பாள்..’ என்பது அவனுக்கு நன்றாக புரிந்துவிட்டது.
தலையை தூக்கி பார்வையை சுழலவிட்டவன் நான்கு மிஷின் தள்ளி அமர்ந்திருந்த ஒருவரின் பெயரை சொல்லி கத்த, அவர் மிஷினை நிறுத்திவிட்டு தீனா இருந்த பக்கம் திரும்பினார்.
அந்த அறையில் ஒலித்துக்கொண்டிருந்த பாடல் ஒலியோடு, மிஷினின் சத்தத்திலும்.. நடந்ததை அவர் இதுவரை உணரவே இல்லை.
தீனா நின்ற நிலையும், அந்த சிறு பெண்ணின் கண்ணில் வழிந்த நீரும்.. ‘அவருக்கு என்ன நடந்திருக்கும்..?’ என்பதை உணர்த்த,
அவசரமாக மிஷினை அணைத்துவிட்டு விரைந்தவர், “என்ன வேணும் தீனா..?” என்றார்.
இது போன்ற விசயங்கள் அடிக்கடி இல்லையென்றாலும், எப்போதாவது நடப்பது தானே.. அந்த அனுபவத்தில் தான் அவர் உடனடியாக அப்படி கேட்டது.
“அந்த மிஷின் மேல.. டூல் கிட் இருக்கு பாருங்க..” என, இப்போது அவன் சரி செய்ய வந்த மிஷினை காட்ட ஓட்டமாய் ஓடி அதை எடுக்க சென்றார்.
அப்போது தான் சுற்றி இருந்த சிலருக்கும் விசயம் புரிய.. அனைவரும் தங்களிடத்தை விட்டு யமுனாவின் மிஷினுக்கு வந்திருந்தனர்.
அதில் இருந்த பெண் ஒருவர், கங்காவின் தலையை.. தன் வயிறோடு அழுத்திக்கொண்டு, “ஒன்னுமில்ல பாப்பா.. அழாத.. சரியா..?” என ஆறுதல் படுத்த,
அதுவரை லேசாக வழிந்த கண்ணீர்.. ஆறுதலுக்கு ஆள் கிடைத்ததும்.. பெரும் அழுகையாய் மாறிப்போனது.
மாடியிலிருந்து இறங்கி வந்த யமுனாவின் காதில் கங்காவின் அழுகை குரல் விழ, “என்ன ஆச்சு..?” என பதறி ஓடி வந்தவள் சுற்றி நின்ற கூட்டத்தை விலக்கி முன்னே வந்தாள்.
வந்தவள் தங்கையின் நிலை கண்டு “அய்யோ..!!” என அலற அதுவரை ஊசியை கவனமாக கழட்டிக்கொண்டிருந்தவன்,
‘யாருடா அது.. இந்த கத்து கத்தறது..?’ என கடுப்போடு நிமிர இரு கையையும் உதறியபடி நின்றிருந்தாள் யமுனா.
“ஓய் பாப்பா..! நீயா..?. பயப்படாதே.. உன்னோட அக்காவா இது..? அக்கா கூட வந்தியா..? இப்ப ஊசிய எடுத்திடலாம்.. அக்காவுக்கு எதுவும் இல்ல. நீயும் அழத சரியா..?” என்று சொன்னவன்,
அவள் பார்வை முறைப்பாக மாறவும்.. ‘எதுக்கு இந்த பாப்பா இப்படி முறைக்குது..?’ என்ற குழப்பத்தோடு தன் பேச்சை நிறுத்தவும் சுற்றி நின்றவர்கள் சிரிக்கவும் சரியாக இருந்தது.
‘ஏன்..?’ என பார்வையால் ஒருவரிடம் வினவ,
“நீ பாப்பான்னு சொன்னீயே.. அந்த பொண்ணோட தங்கச்சி தான் இந்த பொண்ணு..” என்றவர்,
யமுனாவின் புறம் கை காட்டி, “யமுனா, கிட்ட தட்ட ரெண்டு வருஷமா.. இங்கே தான் சிங்கர் டெய்லரா வேலை பாக்குது. உனக்கு தெரியாதா..? நீ நினைக்கற அளவு குட்டி பொண்ணெல்லாம் இல்ல..” என்று சொல்ல,
‘பாத்தா.. குட்டி பாப்பா மாதிரி இருக்காளே..?’ என்று அவள் புறம் திரும்ப,
தனது குட்டி கண் கொண்டு முறைத்தவளின் வாயோ, “பாப்பாவாம் பாப்பா.. என்னைய பாத்தா.. அப்படியா இருக்கு..?” என முணுமுணுத்துக் கொண்டிருந்தது.
அதில் லேசான சிரிப்பு வந்த போதும் அவன் கை.. லாவகமாய் ஊசியை மிஷினிலிருந்து கழட்டியிருந்தது.
பின், கட்டிங் பிளேடு கொண்டு.. ஊசியை இழுக்க ரத்த சிதறலோடு வெளிவந்தது ஊசி.
அதில் மேலும் கத்தி அழுதவளை, “கங்கா அழாதடீ.. சரியாகிடும்..” என தன்மேல் சாய்த்துக்கொண்டாள் யமுனா.
“அக்கா.. வலிக்குதுக்கா..” என மறுகரத்தால் அக்காவின் இடையை கட்டிக்கொண்டு அழுபவளை பார்க்க அனைவருக்குமே பாவமாய் போனது.
அதற்குள் விசயமறிந்த பஹதூர், ‘பஸ்ட் எய்ட் கிட்..’ டோடு வர, அதிலிருந்த பஞ்சை டிஞ்சர் தொட்டு அழுத்தி பிடிக்க, அது தந்த எரிச்சலில் இன்னும் கண்ணீர் பெருகியது கங்காவிற்கு.
அக்கா தங்கை இருவரையும் பார்த்தபடி, “ஹாஸ்பிட்டல் போய்.. டிடி போடனும்..” என்று சொல்ல,
‘மறுபடியும் ஊசி போடனுமா..?’ என இன்னும் அழுகை தான் சின்னவளுக்கு.
“அழுகாத கங்கா.. டாக்டர்கிட்ட போய் மருந்து போட்டா வலிக்காது.
ஊசி போடாட்டி செப்டிக் ஆகிடுமில்ல.. நா பாத்ரூம் போயிட்டு வர்றதுக்குள்ள இப்படியாடீ பண்ணி வைப்பே..?” என ஆறுதலாகவும், ஆதங்கத்தோடும் யமுனா பேசிக்கொண்டிருக்க,
பார்த்திருந்த தீனாவிற்கு சின்னவளின் வலியும், அவளின் கண்ணீரையும் கண்டு யமுனாவின் மீது கோபமாய் வந்தது.
“அறிவிருக்கா.. உனக்கு. கூட கூட்டுட்டு வந்தா.. அந்த புள்ளைய பத்திரமா பாத்துக்கனும்.
இல்ல, கூடவே கூட்டிட்டு போயிருக்கனும்.. அதவிட்டு இப்போ சமாதானம் செஞ்சா ஆச்சா..?” என உரிமையாய்(?!) திட்டியவன்,
“பஹதூர்.. மிஷின்ல ப்ளட் கொட்டியிருக்கு, பாத்து க்ளீன் பண்ணிடு. இல்லன்னா பல்செட் ஜாம் ஆகும்.
நா, இந்த பொண்ணை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிட்டு வர்றேன். மெக்கானிக் வந்ததும் அந்த மிஷினை பார்க்க சொல்லு..” என்றுவிட்டு,
பஞ்சோடு சேர்த்து பிடித்திருந்த விரலின் பிடியை தளர்த்தாமல் அங்கிருந்து அவன் நகர அவனோடு உடன்பட்டு அவன் வழி சென்றாள் கங்கா.
.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!