Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அமுதமழை சாரல்

அமுதமழை சாரல் 41

அத்தியாயம் 41

வீடே ஒரே கலகலப்பாக இருந்தது. நேரம் என்னவோ காலை ஐந்து மணி தான். “சீக்கிரமா கிளம்புங்க அத்தை” என்று சுமதியை விரட்டி கொண்டிருந்தாள் வர்ஷித்தா.



Advertisement

“ஏம்மா, நான் மெதுவா நீங்க எல்லாரும் வேலைக்கு போனதுக்கு அப்புறமா வாக்கிங் போய்க்கிறேனே… உனக்கு நான் வாக்கிங் போகனும் அவ்வளவு தானே?”

“யாரு நீங்களும் தமி ஆன்ட்டியும் சேர்ந்து போறதுக்கு பேர் வாக்கிங்கா?”

Advertisement

Advertisement

“நல்லா கேளு வர்ஷ்…ரெண்டு பேரும் கதை பேசிக்கிட்டே அன்னநடை போட்டுக்கிட்டு இங்குட்டு நாலு அடி அங்குட்டு நாலு அடி.. அவ்வளவு தான், அப்புறம் அந்த பார்க் பென்ஞ்ச்ல உட்கார்ந்து அரட்டை தான்” என்று எடுத்து கொடுத்து கொண்டிருந்தார் பாட்டி.

சங்கரன் ட்ராக் பாண்டில் வந்து நின்றார்,”சுமி போலாமா என்று?”

Advertisement

“நீங்களும் டிராக் பாண்ட் டீ ஷர்ட் போட்டுக்கோங்க அத்தை.. நடக்க ஈஸியா இருக்கும்..”

“எனக்கு அது செட் ஆகல வர்ஷ், இதுவே நல்லா தான் இருக்கு..” 

“மாமா, அத்தை கேக்குறாங்கன்னு திரும்பி வரும் போது வடை சமோஸான்னு ஒன்னும் வாங்கி கொடுக்க கூடாது…” என்றாள் ஸ்ட்ரிக்ட்டாக. 

“சரிம்மா, நாங்க கிளம்புறோம்” என்று சுமதியோடு வாக்கிங் கிளம்பினார் சங்கரன் உற்சாகமாக.

அவர்கள் கிளம்பவும், வர்ஷித்தா பாட்டியிடம் கூறிவிட்டு ஜாகிங் கிளம்பினாள்.

இதே போல அங்கே தர்மராஜ் தமயந்தியை கிளப்பி விட்டு ஹர்ஷ் ஜாகிங்க்கு வர்ஷுடன் இணைந்து கொண்டாள்.

இப்பொழுது இது தினசரி பழக்கமாக மாறி இருந்தது. 

தர்மராஜ் தமயந்தியுடன் இப்பொழுது தான் மறுபடியும் நேரம் செலவழிக்கிறார். புதிதாக பிசினெஸ் ஆரம்பித்து அதில் ஒரு நிலைமைக்கு வருவதற்காக தன்னை அதிலே முழுதாக ஈடுபடுத்திக்கொண்டார். ஹர்ஷித்தா வந்து தான் இந்த கட்டாய நடை பயிற்சி.

“ஏன் தமா, தங்கமான பிள்ளைங்க இல்ல இரண்டு மருமகள்களும்.. எவ்வளவு சுறுசுறுப்பு?”

“ஆமா தர்மா, பேச்சு மட்டும் கம்மி தான் இரண்டு பேரும், வேலை எல்லாம் ரொம்ப சீக்கிரமா பண்ணிடறாங்க… கொஞ்சம் கூட அலட்டல் இல்ல.. சமர்த்து பிள்ளைங்க…” 

“ஆனா பாரேன், நம்ம எல்லாரையும் கிளப்பி வாக்கிங் அனுப்பிடுதுங்க.. பாரி வில்வாவ மட்டும் விட்டுடறாங்க..”

“நீங்க வேற, அவனுங்க எழுந்தா பேசி பேசி வேலையை கெடுக்குறாங்களாம்.. அதனால தயவு செஞ்சு எழுந்திருக்காதீங்கன்னு சொல்லிட்டாங்க…”

“அதைச் சொல்லு…” 

ஆறரை மணிக்கு போல இவர்கள் அனைவரும் வீடு திரும்பவும், தாத்தாக்கள் அணி வாக்கிங் கிளம்பும்.

“காலக்கொடுமை, ஆளாளுக்கு வாக்கிங் வாக்கிங்ன்னு நடக்கறது என்ன? டயட் டயட்ன்னு போக்கறது என்ன? சின்ன பிள்ளைங்க போனாக்கூட தேவல, காலம் போன கடைசியில இந்த பெருசுங்க பண்ற கூத்து.. அதுவுமில்லாமல் அந்த பார்க்ல நின்னுகிட்டு ஹா ஹா ஹான்னு சிரிக்கிறது வேற..” என்று பாட்டியின் பகடி பேச்சு பின் தொடரும்.

பாட்டியிடம் மட்டும் வர்ஷுக்கும் ஹர்ஷுக்கும் கொஞ்சம் பயம், அவரிடம் அடக்கியே வாசிப்பார்கள்.

அன்பான குடும்பம், குறும்பும் காதலும் கொண்ட கணவன்மார்கள் என்று பெண்கள் இருவரும் நன்றாக பொருந்தி போயினர். அடிக்கடி அத்தை வீட்டிற்கும் சென்று பார்த்துக்கொள்கிறார்கள்.

————————–

கருணா டெல்லியில் வேலைக்கு சேர்ந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. அவினாஷும் கருணாவும் எளிமையாக கோவிலில் தான் திருமணம் என்று சொல்லிவிடவே உடனடியாக திருமணத்தை வைத்துக்கொள்ளத்தான் பெரியவர்கள் யோசித்தார்கள்.

ஆனால் இருவர் ஜாதகத்திலும் இன்னும் ஆறு மாதம் கழித்து திருமணத்தை  வைத்து கொள்வதே சிறப்பாக இருக்கும் என்று கூறி விட்டார்கள். 

முருகானந்தம் தாத்தா தான் ஆறு மாதத்திற்குள் வீட்டை கொஞ்சம் பெரிது படுத்தி கட்டுமாறு கூறினார். கீழே இன்னொரு ரூமும், மாடியில் ஒரு போர்ஷன் வாடகைக்கு விடுவது போலவும் கட்டி கொண்டிருக்கிறார்கள். 

டெல்லியில் வேறு வேலை தேடுமாறு வேதா தாத்தா அவினாஷிடம் கூறினார். அவன் வேலை பார்க்கும் கம்பெனி டெல்லியிலும் இருப்பதால், அங்கே இருந்தும் வேலை செய்யலாம் இங்கே இருந்தும் வேலை செய்யலாம். அவனது திறமை, திட்டமிடல், அயராத உழைப்பு இது அனைத்தும் வேலை செய்யுமிடத்தில் அவனிற்கு தனி மரியாதையும் சலுகைகளும் பெற்று தந்திருந்தது.

 

கருணா ராஜி வீட்டில் தான் தற்போதைக்கு தங்கி இருக்கிறாள். டெல்லியில் தனியே வீடு பார்க்க ராஜி ஒத்து கொள்ளவே இல்லை. “கல்யாணத்துக்கு பிறகு யோசிக்கட்டும், இப்ப எங்க வீட்ல தான் இருக்கனும்” என்று கட் அண்ட் ரைட்டாக கூறிவிட்டார்.

—————–

காலை ஆறு மணிக்கு ராஜியும் விக்ராந்த்தும் வரவேற்பறையில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்கள்.

“ஆன்ட்டி, சப்பாத்தி கட்டை இருந்தா கொடுங்க” என்று வந்தாள் கருணா.

“எதுக்கு ம்மா, இன்னிக்கு காலைல டிபனுக்கு ரவா தோசை தான்.. அதுவும் மது இப்ப வந்துடும்.. நீ எதுக்கும்மா சப்பாத்தி எல்லாம் செஞ்சுகிட்டு..”

“நான் இன்னும் பல்லே தேய்க்கலை ஆன்ட்டி, நீங்க சப்பாத்தி உருட்டு கட்டையை  கொடுங்க..”

கருணாவின் கையில் இருந்த பேஸ்ட்யை பார்த்து விட்டு விக்ராந்த், ”ராஜி, பேஸ்ட் தீர்ந்துடுச்சு போல.. வேற எடுத்து கொடு… “ என்றார் ராஜியை பார்த்து.

அதற்குள் கருணாவே சென்று சப்பாத்தி கட்டையை எடுத்து வந்து டைனிங் டேபிள் மீது காலி பேஸ்ட் ட்யூபை வைத்து, சப்பாத்தி உருட்டு கட்டையை வைத்து அதன் மீது உருட்டினாள்.

ராஜி என்ன செய்கிறாள் என்று பக்கத்தில் வந்து எட்டி பார்க்கவும், இதோ என்று அவள் ப்ரஷில் ட்யூபில் இருந்து வந்த சிறிதளவு பேஸ்ட்டை வைத்துக்கொண்டாள்.

ஆங் 

“நாளைக்கு சிஸ்சர் வைச்சு இங்க குறுக்க கட் பண்ணா, இன்னொரு நாள் வரும் ஆன்ட்டி, அப்புறம் புது பேஸ்ட் எடுத்தா போதும்” என்று கூறி  சென்று விட்டாள்.

ராஜி பேஸ்ட் டியூபையும் சப்பாத்தி கட்டையையும் மாறி மாறி பார்த்துவிட்டு பின் என்ன இது என்று விக்ராந்தை பார்த்தார். 

அவர் சிரித்து கொண்டே எழுந்து  உள்ளே சென்றுவிட்டார்.

ராஜி உடனே ராஜி , வில்வா, பாரி, அருந்ததி நால்வர் இருக்கும் குரூப்பிற்கு கால் செய்தார்.

“ஹாய் ராஜிம்மா” என்று பாரியும் வில்வாவும் அவர் அவர் வீட்டில் இருந்து காலில் இணைந்தார்கள்.

“வில்லு, பாரு நானும் பல வருஷமா சாப்பாத்தி, ரொட்டி, பரோட்டா, ஆலு  பரோட்டா, கோபி பரோட்டா, பன்னீர் பரோட்டா இப்படி எத்தனையோ சமைச்சிருக்கேன். எங்க கல்யாணத்தப்ப எங்க அம்மா கொடுத்த சப்பாத்தி  கட்டை தான் இத்தனை வருஷமா யூஸ் பண்றேன்”

“என்னாச்சு ராஜிம்மா… காலையில எதுக்கு இந்த தகவல்?” என்றான் பாரி.

“கட்டை உடைஞ்சிடுச்சா..? மாமியார் வீட்ல கட்டை உடைஞ்சா மருமகன் தான் வாங்கி கொடுக்கணுமா?” என்றான் வில்வா.

“இல்லப்பா..  இத்தனை வருஷம், இத்தனை விதமா அதை யூஸ் பண்ண எனக்கு அதை இப்படி கூட யூஸ் பண்ண முடியும்னு கருணா காமிச்சு கொடுத்தா பாருங்க… எனக்கு தலையே சுத்திடுச்சு..”

“ஹா ஹா.. பேஸ்ட் தீர்ந்து போச்சா?” என்றனர் இருவரும் கோரஸ்ஸாக.

“எப்படி கண்டுபிடிச்சீங்க?”

“நீங்க தானே சண்டை போட்டு அவளை உங்க வீட்ல தங்க வச்சீங்க.. இப்படி டிசைன் டிசைனா பல விஷயம் செய்வா.. அலெர்ட்டாவே இருக்கணும், கொஞ்சம் அசந்தா நமக்கே பெரிய ஆப்பா வரும்”

“ஹா ஹா.. சரி என்ன பண்ணிட்டு இருக்கீங்க?”

“நாங்க என்ன உங்க புருஷன் மாதிரியா வீட்ல பொறுப்பே இல்லாம இருக்கிறோம்.. எங்க பொண்டாட்டிங்க ஜாகிங் போய் இருக்காங்க.. அவங்க வந்ததும் குடிக்க ப்ரோட்டீன் ஷேக் ரெடி பண்ணிட்டு இருக்கோம்” என்றான் பாரி.

“நீங்க எவ்வளவு போட்டி போட்டாலும் என் ஆளு பக்கத்துல வர முடியாது.. அவர் காதல் மன்னன் தெரியுமா?”

“அய்யயோ ராஜிம்மா, தயவு செய்து காலையில உங்க காதல் காவியத்தை சொல்ல ஆரம்பிக்காதீங்க, நிறைய வேலை இருக்கு” என்றான் வில்வா.

“டேய் பாரி அங்க என்ன டிபன்னு தெரியுமா?

“இங்க இட்லி மாதிரி தெரியது வில்வா… மாவு இருக்கு, பக்கத்துல தேங்காய் எல்லாம் வச்சிருக்காங்க..”

“ப்ச்ச்…  இங்கேயும் அதான் போலடா பாரி ..”

“முதல்ல அந்த இட்லி மெஷினை ஒழிச்சு வச்சிடுங்க, அப்ப தான் இதுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்” என்றார் ராஜி சீரியஸாக.

“ஹலோ” என்று வந்து காலில் இணைந்து கொண்டாள் அருந்ததி.

“குட் மார்னிங் சின்னு”

“குட் மார்னிங் ராஜிம்மா.. அண்ணாஸ் ஈஸியா சமைக்கிற மாதிரி ஒரு டிபன் சொல்லுங்க”

“என்னாச்சு சின்ன பாப்பா, நீயா சமைக்க போற?”

“இந்த மாசத்தோடு காலேஜ் முடியுதாம், அடுத்த மாசம் வேலைக்கு போக போறேனாம், நாளைக்கே எனக்குன்னு ஒரு குடும்பம் வருமாம், கொஞ்சம்  பொறுப்பு வரணுமாம்…”

“யாரு பாரு, வில்லு  நம்ம சின்னுவ இப்படி எல்லாம் கொடுமை படுத்தறது?” என்று இடையிட்டார் ராஜி.

“நீங்க வேற ராஜிம்மா.. அது எல்லாம் கண்டு பிடிக்கவே முடியாது.. மூனு முரட்டு தாத்தாஸ், ஒரு நாட்டாமை பாட்டி, ரெண்டு ரூல்ஸ், பத்தாததுக்கு இப்ப உங்க ரெண்டு பயில்வான்ஸ்.. இப்படி ஒரு படையே இருக்கு… பொதுவா நாங்க ரெண்டு பேரும் தான் மாட்டுவோம், இப்ப சின்ன பாப்பாவையும் சேர்த்துட்டாங்க போல..”

“ச்சு..ச்சு .ச்சு..”

“சீக்கிரம் ஒரு ஐடியா கொடுங்க யாரவது ஒருத்தர்” 

“பேசாம உப்மா பண்ணிடு பாப்பா” என்றான் பாரி.

“பண்ணலாம், ஆனா நான் சமைக்கிறதை தான் இன்னிக்கு நானும் சாப்பிடணுமாம், உங்க ரெண்டு பேரு வீட்டுக்கு வரகூடாதுன்னு அண்ணா சொல்லிட்டு தான் மேலே பில்டிங்க்கு தண்ணீ ஊத்த போயிருக்காங்க”

“அட பாவமே! அப்ப உப்மா வேணாம் சின்ன பாப்பா, நூடுல்ஸ் போட்டுடேன்?” என்றான் வில்வா.

“தாத்தா சாப்பிட மாட்டாங்க.. மாவுகூட இல்லை தோசை சுடலாம்னா”

“சின்னு, இங்கே ரவா தோசை… அது செய்றியா?”

“ஈஸியா ராஜிம்மா”

“பத்து நிமிஷத்துல மாவு ரெடி பண்ணிடலாம். அரை மணி நேரம் ஊறனும், அதுக்குள்ள நீ சட்னி அரைச்சிட்டு, குளிச்சிட்டு வந்து ஊத்தினா சரியா இருக்கும் சின்னு”

“சரி ராஜிம்மா, நீங்க ஒவ்வொரு ஸ்டெப்பா சொல்லுங்க, நான் செஞ்சுடறேன்”

ராஜி கூற கூற அருந்ததி தயார் செய்தாள். இடை இடையே பாரியுடனும் வில்வாவுடனும் பேசிக்கொண்டிருந்தார் ராஜி.

 

இவர்கள் அரட்டை கச்சேரியில் மூழ்கி விட்டனர்.

அதற்குள் விக்ராந்தும் கருணாவும் தயாராகியே வந்து விட்டார்கள். அங்கேயும் வாக்கிங் சென்றவர்கள் திரும்பி வந்து கிளம்பி, காலை  உணவும் தயாராகி விட்டது.

சுமதியும் தமயந்தியும் தான் சமைப்பார்கள், ஹர்ஷ் வர்ஷ் இருவரும் மாமியார்கள் கூறும் அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பார்கள்.

“ராஜி, எப்ப பார்த்தாலும் போன் தான்.. டையத்துக்கு சாப்பிட்டு அப்புறம் போன் பேசு” என்றார் விக்ராந்த் கண்டிப்பாக.

“நீங்க தான் சார் செல்லம் கொடுத்து கொடுத்து அவங்களை கெடுக்குறீங்க..

இவ்வளவு நேரம் போன் பேச என்ன அவசியம்? சொல்லுங்க” என்றாள் கருணா விக்ராந்திடம்.

அந்த பக்கம் பாரியும் வில்வாவும் சிரிப்பது இங்கே ராஜிக்கு கேட்டது. அவர் அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டார்.

“இந்த நடிப்பெல்லாம் வேண்டாம் ஆன்ட்டி… இனிமே இப்படி போன் பேசிட்டே இருந்தீங்கனா, அப்புறம் வீட்ல லேண்ட்லைன் போன் மாத்திட சொல்லிடுவேன்” என்றாள் கருணா .

பின் ராஜியிடம் இருந்து போனை வாங்கி, “இப்ப தானே சென்டர் ஆரம்பிச்சிருக்கீங்க.. வீட்டில வேலை இல்லைனா சீக்கிரமா போய் அங்க என்ன செய்யலாம், எப்படி இம்ப்ரூவ் பண்ணலாம்னு யோசிங்க.. அதைவிட்டு காலையிலே என்ன அரட்டை கச்சேரி?” என்று பாரியையும் வில்வாவையும் வாங்கு வாங்கு என்று வாங்கிவிட்டு போனை வைத்து விட்டாள்.

கருணாவின் குரல் கேட்டதுமே அருந்ததி போனை வைத்துவிட்டு உஷாராக சென்றுவிட்டாள்.

மது தீதி வந்து மூவருக்கும் சூடாக  ரவை  தோசைகளை  ஊற்றி கொடுத்தார்.

கருணாவும் விக்ராந்தும் வேலைக்கு கிளம்பி சென்றுவிட்டார்கள்.

“பாவம் அவினாஷ்” என்று குரூப்பில் மெஸ்சேஜை தட்டிவிட்டார் ராஜி.

“இப்படி அப்பாவியா இருக்கீங்களே ராஜிம்மா.. யாரு பாவம்.. கருணாகிட்டயும் அவினாஷ்கிட்டயும் தனி தனியா மாட்டுனாலே முழி பிதுங்கும்.. இதுல இவங்க ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்தா அவங்க பாவம் இல்லை, நம்ம தான் பாவம்” என்று வில்வா உடனே பதில் அனுப்பினான்.

யெஸ்.. என்று அருந்ததியும், பாவமான எம்மொஜியை பாரியும் அனுப்பினார்கள்.

———————-

தாத்தாவும் அவினாஷும் மாடியில் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்.

“அனந்தன் நேத்து போன் பண்ணியிருந்தான் அவி, அவங்க வீடு நல்ல விலைக்கு ஒரு பார்ட்டி கேக்குறாங்களாம். ராகவுக்கும் அடுத்த மாசம் இங்கே வேலையில சேரனும் போல.. அதான் இங்கே வீடு லீசுக்கு கிடைக்குமான்னு பார்க்க சொன்னான்”

“தாத்தா, எனக்கு ஒரு யோசனை.. அவங்களை இங்க நம்ம வீட்டு மாடியிலே குடி வச்சா என்ன?”

“எனக்கும் தோணுச்சு அவி… ஆனா அவங்க ஒத்துக்க மாட்டங்கன்னு நினைக்கிறேன்”

“பிரீயா இருக்க சொன்னா தான் யோசிப்பாங்க.. நம்மக்கிட்டயே லீஸ் பணத்தை கொடுக்கட்டும்.. நீங்க தாத்தாகிட்ட பேசிப்பாருங்க.. நான் டெல்லிக்கு போறப்ப அவங்க உங்களுக்கு துணையா இருப்பாங்க இல்லையா. இது நல்ல ஏரியா, அவங்களுக்கும் இங்கே சீக்கிரம் எல்லாம் செட் ஆகிடும், நம்ம பாப்பா படிச்ச ஸ்கூலேயே மீராவையும் சேர்த்துடலாம்”

எப்படியும் வாடகைக்கு விடுவது போலத்தான் மாடி போர்ஷனை கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

அவினாஷ் சொல்வது சரியாக படவும் நண்பனுக்கு அழைத்து பேசினார்.

அவரும் மருமகளிடமும் பேரனிடமும் கலந்து ஆலோசித்து சரி என்று கூறிவிட்டார்.

அருந்ததி விஷயத்தை தன் அண்ணாஸ்களுக்கு உடனே சென்று கூறினாள்.

“என்ன சின்ன பாப்பா இது, ஆல்ரெடி மூனு தாத்தாஸ்.. இப்ப ஒன் மோர்ரா? வர வர தாத்தாஸ் பாப்புலேஷன் அதிகமா ஆகுதே! ”

“இந்த தாத்தா ரொம்ப ஜாலி டைப் தான், அவங்க வீட்ல இன்னும் அத்தை , ராகவ், பொம்மி எல்லாம் இருக்காங்க.. “ என்றாள் துள்ளலாக

“அவங்க வரதுல்ல நீ ரொம்ப ஹாப்பி போலயே பாப்பா.. நீ ஹாப்பின்னா  நாங்களும் ஹாப்பி தான் “ என்றான் பாரி.

“இத்தனை பெருசுங்களையும் சமாளிக்க எனக்கு ஒரு யோசனை, பாரி” 

“என்ன வில்வா?” 

“சட்டு புட்டுன்னு நாம ஆளுக்கு ரெண்டு பிள்ளைங்களை பெத்து இங்க இருக்க எல்லா ஓல்ட் டிக்கெட்ஸ் கையிலும் ஆளுக்கு ஒன்னா கொடுத்துடனும்..”

“சட்டு புட்டுன்னு எப்படிடா ஆளுக்கு ரெண்டு வரும்?”

“பாரி, உன் பொண்டாட்டியும் என் பொண்டாட்டியும் ட்வின்ஸ் தானே?” 

“ஆமா” என்றனர் அருந்ததியும் பாரியும் கோரஸாக.

“அந்த ஜீன் படி நமக்கும் ட்வின்ஸ் பொறக்க வாய்ப்பு இருக்குல்ல?”

“இருக்கு…  இருக்கு …”

“ஆனாலும் அண்ணா, ரெண்டு பேருக்கும் ட்வின்ஸ் பொறக்கனும்னு எப்படி கன்பார்ம்மா சொல்ல முடியும்?”

“அதானே? அப்படியே நடந்தாலும் நமக்கு என்ன லாபம்?”

“பாரி, பெரியவங்க எல்லாரும் புள்ளைங்களோட பிஸியா இருந்தா தான், நாம நம்ம பொண்டாட்டிங்க கூட லவ்ஸ்ஸா இருக்க முடியும்” 

இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே அட பாவிங்களா? என்று வந்தனர் வர்ஷித்தாவும் ஹர்ஷித்தாவும்.

“உங்களுக்கு மட்டும் எப்படி இப்படி எல்லாம் ஐடியா வருமோ?” என்றாள்  வர்ஷித்தா.

“அது எல்லாம் உன் மாமன் அறிவு வர்ஷிக்குட்டி”

“ஒரு ஹனிமூன் கூட்டிட்டு போக முடியல, கல்யாணம் ஆகி நாலு மாசம் முடிய போகுது. இதுல ஐடியா மட்டும் நல்லா வரும்”

“நாங்க கூப்பிட்டோம் நீங்க தான் வரலை” என்றான் ரோஷமாக.

ஹனிமூனிற்கு வில்வாவும் பாரியும் ஒன்றாக வர கூடாது என்று பெண்கள் கூறியதே அதற்கு காரணம். ஹனிமூன் வந்தும் உங்க நட்புக்காக படத்தை பார்க்க முடியாது என்று மறுத்துவிட்டார்கள்.

“சரி விடு , கருணா அவி கல்யாணாம் முடிஞ்சதும் அவங்களையும் சேர்த்து கூட்டிட்டு போகலாம்” என்றான் வில்வா தோரணையாக.

ஓங்கி கணவன் காலை மிதித்து விட்டு உள்ளே சென்று விட்டாள் வர்ஷித்தா.

அய்யோ அம்மா என்று வில்வா அலறிக்கொண்டு பின்னாடி திரும்பி பார்த்தால், ஒருத்தரையும் காணும்.

வாசலில் எட்டி பார்த்தால், இவனுக்கு டாட்டா காட்டிவிட்டு, ஹர்ஷித்தாவுடன்  புல்லட்டில் அமர்ந்து சென்றுவிட்டான் பாரி.

“வர்ஷி.. வர்ஷிம்மா… வர்ஷிக்குட்டி..” என்று இவன் மனைவி இருக்கும் அறைக்கு சென்றான்.

காலை தாங்கி தாங்கி, “முடியல வலிக்குதே” என்று அலப்பறையை கூட்டினான்.

“மிதிச்ச எனக்கு எப்படி மிதிச்சேன்னு தெரியும் வில்வன், ரொம்ப பண்ணுனீங்கன்னு வைங்க நிஜமாலுமே நடக்க முடியாத மாதிரி மிதிச்சு விட்டுடுவேன்” என்று மிரட்டினாள்.

“கோவக்கார பக்கிரி… இரு வரேன்” என்று வெளியே சென்று கையில் ஒரு கிண்ணத்தோடு வந்தான்.

“இங்க பாரு.. உனக்காக என்ன கொண்டு வந்திருக்கேன்னு..” 

கிண்ணம் நிறைய சாக்கோ வெண்ணிலா ஐஸ் கிரீம்.

“இந்தா” என்று அவளுக்கு ஊட்டிவிட்டான். ஐஸ் கிரீமுடன் அழகாக நகர்ந்தது அவர்களது சமாதானமும் சீண்டல்களும்.

பெண்கள் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து, பாரியும் வில்வாவும் இரு ஜோடிகளுக்கும் தனி தனியே ஹனிமூன் ஏற்பாடு செய்திருந்தனர். அதை கூறாமல் மனைவியை விளையாட்டுக்கு சீண்டி கொண்டிருந்தான் வில்வா.

முதலில் பாரியும் ஹர்ஷித்தாவும் ஒரு வாரம் அந்தமான் சென்று வந்தார்கள். அவர்கள் வந்ததும் வில்வாவும் வர்ஷித்தாவும் ஒரு வாரம் அந்தமான் சென்று வந்தார்கள்.

  

விடுமுறை நாட்களில் பாரி வீட்டு மொட்டை மாடியில் ஹர்ஷித்தாவும் வர்ஷித்தாவும் அக்கம் பக்கத்து பிள்ளைகளுக்கு கிக் பாக்ஸிங் சொல்லி கொடுக்க தொடங்கினார்கள்.

“தர்மராஜ் தான் இவர்களது ஈடுபாட்டினை பார்த்து, நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு பாக்ஸிங் அகாடெமி ஆரம்பிக்கலாமே?” என்றார்.

இவர்களது பிசியோ சென்டர் பக்கத்தில் இருக்கும் இடத்திலே பாக்ஸிங் அகாடெமி பில்ட்டிங் கட்ட ஆரம்பிக்கலாம் என்று முருகானந்தம் தாத்தா யோசனை கூற, அதன்படி அந்த வேலைகளையும் தொடங்கினார்கள். 

பாக்ஸிங் அகாடெமியின் கீழ் தளத்தில் ஆபிஸ் ரூம் ஒன்றும் அதனை ஒட்டி ஒரு கடையையும் கட்ட திட்டமிட்டார்கள். மேலே இரண்டு தளங்களில் கச்சிதமாக தயாரானது அகாடெமிக்கான பிளான்.

அந்த கடையில் ஜூஸ் கடை அல்லது ஸ்னாக்ஸ் கடை போல ஒன்றை அனந்தன் தாத்தாவின் மருமகள் ரஞ்சி ஆன்ட்டிக்காக யோசித்து வைத்திருந்தான் அவினாஷ். அகாடெமி வேலை தொடங்குவதற்கு முன்பே அவினாஷ் வீட்டு வேலைகளை துரிதப்படுத்தி விரைவாக முடித்து விட்டனர். 

ஒன்றுகூடினால் உண்டு வாழ்வு.. என்பது போல அனைவரும் இணைந்து செயல்பட்டனர். ஒருவருக்கு ஒருவர் துணையாக நின்று அனைவரும் சேர்ந்தே வேலைகளை பகிர்ந்து செய்தார்கள்.

வீட்டு வேலைகள் முடிந்ததும் சின்னதாக ஒரு பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தான் அவினாஷ். இம்முறை கண்டிப்பாக கருணா இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டதால், கருணா இரண்டு நாட்கள் வந்து சென்றாள்.

அடுத்த மூன்று மாதத்தில் கருணா அவினாஷின் திருமண தேதி குறிக்கப்பட்டது. கருணா அவினாஷ் இருவரும் அந்த நாளிற்காக ஆவலுடனும் ஆசையுடனும் காத்து கொண்டிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!