Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே

நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே – 15.2

இப்படி ஏமாறும் அளவுக்கா இருந்திருக்கிறோம் எப்படி நடந்தது என்று ஆத்திரம்தான் தன்மீதே கழிவிரக்கம் என்னவோ அவர்களின் பகட்டும் தாங்கள் பணம் படைத்தவர்கள் என்ற அகந்தையும் பிடிக்கவில்லை ஆரம்பம் முதலே ஆகையால் இந்தத் திருமணம் வேண்டாம் என்றான்.

 

 



Advertisement

வாசன் அந்தக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தது இவனுக்கும் ஞாபகம் இருக்கிறது எங்கள் மகனுக்குப் பெரிய உத்தியோகம் மாதம் இத்தனை சம்பளம் என்று பெருமை பேசினர் அத்தையும் மாமாவும் தான் படிக்கவில்லை என்ற நக்கல் பேச்சும் அன்று அவன் வேலைக்குச் சேர்ந்தபோது அவர்களிடம் வெளிப்பட்டது.

 

Advertisement

 

Advertisement

தந்தைக்கு பதில் இவன் ஷேர் ஆட்டோ ஒட்டிய பல நாட்கள் வாசன் அந்தக் கம்பெனியின் உள்ளே செல்வதை பார்த்திருக்கிறான்,  இவர்களுக்குத் தெரிந்தவரின் மகன் அதே கம்பெனியில்  தேர்வாகி  இவனுடன் பணியாற்றியதையும்  அலுவலகம்பற்றிப் பேசுவதையும் கேட்டிருக்கிறான்.

 

Advertisement

 

அந்தப் பையன் மூன்று வருடத்தில் வெளிநாடு சென்றிருக்க ஒரு முறை ராமலிங்கம் கூட வாசனிடம்  கேட்டிருந்தார் “என்ன வாசா ஷங்கர் மகன் உனக்கு அப்புறம்தான் வேலைக்குச் சேர்ந்தான் அவன் வெளிநாடு போய்ட்டான் நீ போகலையா” என்று.

 

 

“எனக்கு இங்கதான் பிடிச்சிருக்கு ஆபீஸ்ல கேட்டாங்க எனக்கு விரும்மில்லை”  என்று அன்று சொன்னான்.

 

 

ஏன் திருமணம் முடிந்து பத்து நாட்கள் கடந்தபோது தாய் கூடச் சொல்லக் கேட்டானே “முன்னாடியெல்லாம் வீட்டில இருந்தே வேலை பாக்கலாமாம் இப்போ வாரத்துல ரெண்டு நாள் வரணும்னு சொல்லிட்டாங்களாம் அதனால ரெண்டு நாள் ஆபிஸ் போறாராம்” என்று அப்படியானால் எங்குச் செல்கிறான் அந்த இரண்டு நாட்களும்.

 

 

திருமணத்திற்கு வந்திருந்த அவனுடைய நண்பர்களிடம் எந்த வித்தியாசமும் இல்லை யாரும் இதைப் பற்றி  ஒன்றுமே பேசவில்லையே இல்லை தன் கவனத்தில் விழவில்லையா இனி என்ன அடுத்து என்னவென்று யோசிக்க ஒன்றும் புரியவில்லை நான்கு நாட்களுக்குப் பிறகு தந்தையிடம் பேசினான்.

 

 

 

அவர் நம்பவே இல்லை “மருமக தெரியாம சொல்லுமா இருக்கும் எத்தனை நாள் நானே அவர் வீட்டில் அந்தக் கம்ப்யூட்டர் பொட்டி முன்னாடி உக்காந்து வேலை செய்றதை பாத்திருக்கேன் கல்யாணம் முடிஞ்சு இந்தனை மாசம் ஆச்சு சித்ராவுக்கு தெரியாமலா இருக்கும் இல்லை சந்தேகம் வராம இருக்குமா” என்றார்.

 

 

“இது உண்மையாக இருக்க வாய்ப்பே இல்லை” என்றார் உறுதியாக “மருமக தப்பா சொல்லுதுன்னு இல்ல அது புதுசா சேர்ந்த புள்ள தான வேற யாராவதா இருக்கும் நல்லா விசாரி வேலு அப்புறம் முடிவு செய்யலாம்” என்றவர் வீட்டிற்குள் செல்லச் சுவற்றுக்கு பின்னில் நின்றிருந்தவள் வெளியில் வந்தாள்.

 

 

“நீங்கத் தப்பா நினைக்காதீங்க ராணியம்மா என்னாலேயே இதை ஏத்துக்கமுடியல அதுமாதிரி அப்பா…” என்றவனை தடுத்தவள் “எனக்குப் புரியுது மாமாவை நான் தப்பா நினைக்கல நீங்களும் விசாரிங்க இப்படி இல்லாம இருந்தா ரொம்ப நல்லது ஒருவேளை அப்படி இருந்தா என்னனு யோசிக்கணும்” என்றாள்.

 

 

வெளிநாடு சென்ற ஷங்கரின் மகனைப் பிடித்தான் அவன்மூலம் இங்கே வேலை செய்யும் அவனின் நண்பனைப் பிடித்து அவன்மூலம் வாசன் வேலை செய்த டீமில் ஒருவரை பிடித்து என்று இரண்டு வாரங்களுக்குப் பிறகு அனைத்து விஷயமும்  கைக்கு வந்து சேர்ந்தது உண்மைதான் அவள் கூறிய அனைத்தும் உண்மை.

 

 

அரசல் புரசலாக விஷயம் வாசனின் செவிக்குச் சென்றது அவர்களுக்கு முன் தான் முந்திக்கொள்ள நினைத்தவன் “ச்சி என்ன பொண்ணு இவ அப்போவே அத்தை சொன்னாங்க இவ சரியில்ல கல்யாணம் வேண்டாம்னு மச்சான் கேக்கல” என்றான் முகத்தை ஒருமாதிரி வைத்துக்கொண்டு.

 

 

“என்னங்க என்னாச்சு?” என்றாள் சித்ரா.

 

 

“என்ன ஆச்சு எல்லாம் உன் அண்ணியை பத்திதான் அவ ஆளும் பழக்கமும் ஒன்னும் சரியில்ல ஆம்பள பசங்ககூட அப்படி நடந்துக்குறா கல்யாணம் ஆன பொண்ணு ஒரு அடக்கம் வேண்டாம் அவனுங்க இவ மேல கைப்போடறதும் இவ அவனுங்க மேல கைப்போடறதும் அவனுங்க தம் அடிக்கிற இடத்துல அவனுங்க கூடவே இவ நிக்குறதும் ச்ச” என்றான் முகத்தைச் சுழித்து.

 

 

“என்னங்க சொல்ரீங்க”.

 

 

“எண்ணத்தைச் சொல்றது வேலையும் ஒன்னும் சரியா செய்றதில்லை இப்போவே நிறைய புகார் இருக்கு அது எப்படி வேலை நேரமுள்ள ஒக்காந்து வேலை செய்யாம எப்போவும் வெளிலதான சுத்துறா நேத்து நானும் கொஞ்சம் கண்டிச்சேன் எனக்குத் தெரியும் உங்க வேலையைப் பாருங்கன்னு சொல்றா இங்க பாக்குற பொண்ணே இல்ல அவ அவ்வளவும் நடிப்பு இங்க” என்றான்.

 

 

நன்றாகப் பற்றி  எரிந்தது சித்ராவிடம் அதை அப்படியே மறுநாள் காலைத் தாய்க்கு கடத்தினாள், காலையிலே வந்திருந்தார்கள் சித்ராவும் அவள் மாமியாரும் வேலைக்குக் கிளம்பிய காமாட்சி சோபியாவில் அமர்ந்து உண்டுகொண்டிருந்தாள்.

 

 

இவர்கள் மூவரும் அடுப்படி வாயிலில் நின்றிருந்தனர் அவள் கணவன் அங்கில்லை இரண்டு நாள் பயணம் சென்றிருந்தான் “என்னடி சொல்ற” என்றார் மயிலம்மா மகளிடம்.

 

 

“ஆமா மா அவர் சொன்னார் அண்ணாகிட்ட சொல்லிக் கவனிக்க சொல்லு” என்றாள் காமாட்சியை திரும்பிப் பார்த்துக்கொண்டே, தன்னைப் பற்றிய ஏதோ விஷயம் என்று புரிந்தது கணவன் அருகில் இல்லை வாய் விடக் கூடாது சீக்கிரம் கிளம்பிவிட வேண்டும் என்று எண்ணியவள் வேகமாகச் சாப்பிட.

 

 

“அக்காகாரி புத்தி கொஞ்சம் கூடவா இல்லாம போகும் நான் அப்போவே சொன்னேன் இவளுங்க சரியில்லைன்னு” என்றார் மயில்லம்மா சத்தமாக விழிகளை இறுக மூடித் திறந்தவள் தட்டைக் கழுகி வைத்து விட்டு வந்து கைப்பையை எடுத்துக்கொண்டு வண்டி சாவியை எடுத்தாள்.

 

 

“நில்லுடி பதில் சொல்லிட்டு போ ஆபிஸ்க்கு வேலைக்குப் போறியா இல்ல வேற எதுக்கும் போறியா” என்றவர் குரலில் சட்டென்று திரும்பி அவரைப் பார்த்தாள்.

 

 

“என்ன கேட்டிங்க” என்றாள் கோபத்தை அடக்கி.

 

 

“அதுதான் எல்லா விஷயமும் வெளில வந்திடுச்சே அப்புறமும் ஏன் நடிக்கிறீங்க அவர் எல்லாத்தயும் சொல்லிட்டார் நீங்க ஆபீஸ்ல என்ன செய்றீங்கன்னு” என்றாள் சித்ரா.

 

 

“ஓஹ்… ஆபிஸ்ல நான் என்ன செய்றேன்னு எனக்குத் தெரியும் எனக்குத் தாலி கட்டினவருக்கும் தெரியும் அதுபோதும் எனக்கு” என்றவள் கிளம்பபார்க்க.

 

 

“அது படிக்கல அதனால அண்ணனை ஏமாத்த உனக்கு ஈஸி ஆபிசுக்குள்ள  நீ என்ன செய்றன்னு அண்ணாக்கு தெரியவா போகுது” என்றாள் அவள்.

 

 

“இதையே நானும் சொல்லலாமே அதே ஆபிஸ்ல வேலை பாக்குற உங்க வீட்டுக்காரர் என்ன செய்றார் என்ன செய்யலன்னு உங்களுக்குத் தெரியுமா” என்றவள் வாசனின் தாயை அழுத்தமாகப் பார்த்தாள், அவருக்கு மெலிதான நடுக்கம் பிறந்தது.

 

 

“அப்பறம் இன்னொரு முக்கியமான விஷயம் இனிமே என் புருஷனை படிக்காதவர் விவரம் இல்லாதவர் இந்தமாதிரி எதுவும் பேசக் கூடாது நான் சும்மா இருக்க மாட்டேன்” என்றவள் வேகமாகக் கிளம்பிவிட்டாள்.

 

 

படிக்காதவனாம் அதனால் ஏமாத்துகிறாளாம் அவன் படிக்காமல் போனது இவளுக்கு இப்பொழுதுதான் தெரியுமா இந்தக் குடும்பத்தைக் காப்பாற்ற அவன் ஓடத்தொடங்கியதே படிப்பை விட்டுத்தானே,  ஏமாளியா அவர்… ஆமாம் ஏமாளித்தான் குடும்பம் என்று பார்த்து ஏமாந்து நிற்கிறான்.

 

 

என்னவோ அப்பொழுதே அவனைப் பார்க்க வேண்டும் அப்படியே அவன் அணைப்பில் அடங்க வேண்டும் அவனை இறுக கட்டிக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது நேற்று இரவுதான் கிளம்பியிருந்தான் அவன் இருந்திருந்தால் ஒருவார்த்தை பேசியிருப்பார்களா, இந்த வாசன்தான் ஏதோ சொல்லியிருக்கிறான் என்று புரிந்தது தன் தவறை மறைக்க இவளை மாட்டிவிட்டிருக்கிறான் என்றும் புரிந்தது.

 

 

இவள் வாசனை பற்றி எதுவும் பேசுவதாகயில்லை அதைக் கணவனே பேச வேண்டும் தான் பேசினால் அது பெரும் பிரச்சனையாகும் என்பதால் அவள் வாயே திறக்கவில்லை முடிந்தவரை தாயை நன்றாக ஏற்றிவிட்டாள் சித்ரா.

 

 

“நாளைக்கு அண்ணன் வந்திடுவான் நீ இங்கேயே தங்கு” என்றார் மயிலம்மா மகளிடம், மருமகளை இங்கேயே விட்டு வாசனின் தாய் வீடு சென்றார் அன்று மாலைபோல இட்லிக்கு மாவு அரைத்துவைத்திருந்தார் மயிலம்மா மகள் இட்லியும் வெங்காய சட்டினியும் வேண்டும் என்று கேட்டிருந்தாள்.

 

 

மருதவேலு காலை ஏழுமணிபோல வந்துவிடுவேன் என்று மனைவியிடம் சொல்லியிருந்தான் அவனுக்குச் சுட சுட இட்லியும் பூண்டு சட்டினியும் அவ்வளவு விருப்பம் நல்ல காரமாக இருக்க வேண்டும் காலைச் சீக்கிரம் எழுந்துகொண்டாள் காமாட்சி, அவன் இல்லாத இரண்டு இரவுகளே மூச்சு முட்டியது.

 

 

பூண்டு சட்னி செய்துவிட்டு இட்லிக்கு மாவை எடுக்க மயிலம்மா வந்துவிட்டார் “ஏய் யாரைக்கேட்டு மாவை எடுத்த” என்றார்.

 

 

“யாரை கேக்கணும்” என்பதாக அவரைப் பார்த்தாள்.

 

 

“அது சித்ரா இட்லி வேணும்னு கேட்டான்னு நான் அரைச்சு வெச்சேன்” என்றார்,  இருக்கட்டுமே அவர் மகனுக்குத்தானே “மாவு இருக்கே அத்த அவரும் வந்திடுவார் எல்லார்க்கும் இட்லி செய்யலாம் சட்னி அரைச்சுட்டேன்” என்றாள்.

 

 

“அவ வெங்காய சட்னிதான் கேட்டாள்” என்றார்.

 

 

“சரி கொஞ்சம் அதையும் செய்றேன்” என்றாள் அவள், அவளுக்கு அவசரம் கணவன் வருவதற்குள் செய்ய வேண்டும் பசியோடு வருவான் சவாரி என்றால் இரவு உண்ணமாட்டானே அவன் வந்து குளித்தவுடன் சாப்பிட கொடுக்க வேண்டும்.

 

 

“எல்லா மாவையும் எடுத்து இட்லி ஊத்திட்டா யார் அரைக்குறது நான் மூணு நாள் வரமாதிரி அரைச்சேன் வேணும்னா அரைச்சு வை” என்றவுடன் சட்டென்று பாத்திரத்தை அப்படியே வைத்துவிட்டாள் விழிகள் கலங்கிவிட்டது தன் மேல் உள்ள கோபத்தில் அவர் மகனுக்குத்தான் மருமகள் செய்கிறாள் என்பதையே மறந்து பேசுகிறார்.

 

 

அப்படி என்ன கோபம் இந்த வீட்டில் அவள் ஒன்றும் வேலை செய்யாமல் இல்லையே அவளும் செய்துகொண்டுதானே இருக்கிறாள் அழுகையை அடக்கியத்தில் மூக்கு விடைத்தது அவள் கிச்சனிலிருந்து வெளியில் வர ஹாலில் நின்றிருந்தான் மருதவேலு அருகில் மாமனார்.

 

 

அவனைப் பார்த்ததும் அழுகை பெரிதாக வெடித்தது அவள் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு அறைக்குள் சென்றான் அவனைக் கட்டிக்கொண்டு அப்படியொரு அழுகை,  இது இதற்காக மட்டும் அல்ல என்று அவனுக்குப் புரிந்தது அவன் அணைப்பை இறுக்கினான்.

 

 

தாயின் பேச்சில் அப்படியொரு கோபம் மாவை எடுக்கக் கூடாது என்றால்  இவள் யார் இங்கே தனக்காக என்றில்லை அவளுக்கும் இங்கே அணைத்து உரிமையும் இருக்கும்போது அவளிடம் இப்படி பேச எது இடம் கொடுக்கிறது இது அவர் வீடு என்ற என்னமா அவரின் அதிகாரம் தான் என்ற என்னமா,  இன்றுமட்டும்தான் நடக்கிறதா முன்பும் நடந்திருக்கிறதா தன்னிடம் மறைத்துவிட்டாளா இதற்கா இவளை இங்கே கொண்டுவந்தேன் என்று எண்ணங்கள் மண்டையை குடைந்தது.

 

 

அவளே அழுது ஓய்ந்து தேம்பிக்கொண்டு நிற்க “ஒரு இட்லிக்கா ராணியம்மா இவ்ளோ அழுகை” என்றான் கிண்டலாக அவளை இலகுவாக்க அவள் அமைதியாகவே இருந்தாள்.

 

 

“கிளம்புங்க நாம சரவணபவன் போய் நல்ல சாப்பாடு சாப்பிடலாம் அப்படியே ஆபிஸ்ல விடுறேன்” என்றவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து குளிக்கச் சென்றான் அவளும் சுடிதார் மாற்றித் தயாரானாள், அங்கு ராமலிங்கம் மனைவியிடம் கத்திக்கொண்டிருந்தார்.

 

 

மனைவியை அழைத்துக்கொண்டு வெளியில் வந்த மருதவேலு “அப்பா ஆபிஸ்ல விட்டுட்டு வரேன்” என்று முன்னே நடக்க.

 

 

“நீ அவளை ஆபிஸ்ல விட்டுட்டு வந்திடுற அவ உள்ள கண்ட ஆம்பளைங்களோட கூத்தடிக்குறா அது தெரியுமா உனக்கு மாப்ள சித்ராகிட்ட சொல்லியிருக்கார் மானமே போச்சு” என்று கத்தினார் மயிலம்மா.

 

 

“வாயை மூடுங்க” என்று கர்ஜித்தான் மகன் அந்தச் சத்தத்தில் கொஞ்சம் பின்னில் நகர்ந்தார் அவர்.

 

 

“ரெண்டு வருஷமா வேலைவெட்டி இல்லாம வீட்டில் இருக்கான்  உண்மைய மறச்சு கல்யாணம் செஞ்சிருக்கான் அந்த யோக்கியன் சொன்னதை கேட்டு என் பொண்டாட்டியை நீங்கப் பேசுவீங்களா நீக்கப் பாத்தீங்களா அதை,  எப்படி வாய்கூசாம  இப்படி பேசுறீங்க உங்க மகனோட மனைவி அவனோட சரிபாதி இதுல யாரை கேவலப்படுத்துறீங்க” என்று கத்தினான்.

 

 

“யார்? இவங்க சொன்னாங்களா அவருக்கு வேலை இல்லன்னு பத்தியாமா இவங்க தப்பு வெளில தெரியக்கூடாதுன்னு அவரைப் பத்தி எப்படி சொல்லியிருக்காங்க அதும் அண்ணன் வந்து அரைமணி நேரம் ஆகல அதுக்குள்ள என்னல்லாம் சொல்லியிருக்காங்க பாரு” என்ற சித்ராவை லூசா நீ என்று பார்த்தாள் காமாட்சி.

 

 

மருதவேலு தந்தையை பார்த்தான் அவர்தான் சொல்லியிருந்தார் பொறுமையாகப் பேசலாம் அவசரப்பட வேண்டாம் மகளின் வாழ்க்கை நீ போய் வாப்பிறகு பேசலாம் என்று.

 

 

“ஏய் அறிவு கேட்ட கழுத இது இன்னைக்கு இல்ல பதினஞ்சு நாளுக்கு முன்னாடியே தெரியும் இதை எப்படி உங்ககிட்ட சொல்லன்னு தடுமாறி நின்னுட்டு இருக்கோம் அது புரியாம கிறுக்கச்சி மாதிரி பேசாத” என்ற ராமலிங்கம் “உனக்கெல்லாம் அறிவே வராதா இத்தனை வயசாச்சே பேசறதுக்கு முன்னாடி யோசிக்க மாட்டியா” என்று மனைவியையும் கத்தினார்.

 

 

ஒன்று சொல்லி இரண்டு சொல்லிச் சண்டை பெரிதாக வெறுத்துபோனவன் “நான் சொல்லாம இங்க வரக் கூடாது நீ” என்று அவளை அப்படியே அவள் பாட்டி வீட்டில் சென்று விட்டுவிட்டான்.

 

 

அவர்களிடம் காரணம் கூறினான் மாமனாருக்கும் அழைத்து விவரம் கூறினான் “அவங்க கொஞ்ச நாள் இங்க இருக்கட்டும் மாமா நான் ஒரு வழி பண்றேன் அதுவரைக்கும்… இங்க இருக்கும்போது என்மேல கோபம் மட்டும் தான் இருக்கும் அங்க நிம்மதியே இருக்காது நான் இல்லாதபோ என்ன நடக்குதோன்னு எனக்கும் மனசு அடிச்சிக்கும் கொஞ்ச நாள் குடுங்க சார் பண்றேன்” என்றான்.

 

 

அவருக்குக் கொஞ்சம் வருத்தம்தான் என்றாலும் அங்கிருந்தால் மகளுக்கு நிம்மதி இருக்காது என்று புரிய “உங்களை நம்பித்தான் என் மகளைக் கொடுத்திருக்கேன் இப்போவும் அந்த நம்பிக்கையிலதான் இருக்கேன்” என்றிருந்தார்,  அன்று அவனிடம் பேசாமல் அவளின் அறைக்குள் சென்று கதவடைத்தவள்  தான் இன்றுவரைக்கும் அவனிடம் பேசுவதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!