Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நேற்று பார்த்த நிலா முகம்

நேற்று பார்த்த நிலா முகம் – 11

“டேய்.. என்னடா சொல்ற? அம்மா முதியோர் இல்லத்துல இருக்காங்களா?

அவங்கள யார்டா கொண்டு போய் அங்க விட்டா?” அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சிகளைத் தாங்க முடியாமல் கேட்டான் ராஜு!

“ம்.கும். அவங்கள யாரும் கொண்டு போய் விடல! அவங்களா தான் போய் சேர்ந்துக்கிட்டாங்க!

வீட்டை விட்டு துரத்தி விட்டா அவங்க வேற என்ன பண்ணுவாங்க வயசான காலத்துல!”



Advertisement

“டேய். என்னடா சொல்ற? அம்மாவை வீட்டை விட்டே துரத்தினாங்களா? யாருடா? என் கிட்ட அம்மா டூர் போயிருக்கிறதா தாண்டா சொன்னாங்க!” ராஜுவால் தாள முடியவில்லை!

கண்ணீரே வந்து விட்டது!

“யார்டா? என் அண்ணனா? அண்ணன் செஞ்சாலும் செஞ்சுருப்பான், அவன் கலர் எனக்கே இப்பதானே தெரிஞ்சது!

Advertisement

அப்படின்னா கூட இந்த அம்மா அக்கா வீட்டுக்குப் போக வேண்டியது தானே!

Advertisement

அங்க இருந்து ஒரு போன் பண்ணினா நான் அடுத்த ப்ளைட்ல ஓடி வந்திருக்க மாட்டேனா?” என்றான் ராஜு ஆதங்கத்துடன்!

“உன் அக்காவும் சேர்ந்து தாண்டா இத பண்ணியிருக்கு! அதான் வேற வழியில்ல அம்மாவுக்கு!”

“நீ எங்கடா போய் தொலைஞ்ச அன்னிக்கு?” ராஜு குமுறும் குரலில் கேட்டான்.

Advertisement

“டேய்.. நான் அன்னிக்கு பூரா வெளியூர் சவாரி போயிட்டேண்டா ஆக்டிங் டிரைவரா!

அதுவும் இல்லாம அம்மா கிட்ட போனும் இல்ல அப்ப!

அம்மாவோட போனை வாங்கி அவங்க உடைச்சுப் போட்டுட்டாங்கடா!

ஏற்கனவே ஒரு சண்டையின் போது அம்மா உனக்கு போன் பண்ண போக, அத வாங்கி உடைச்சுட்டான் உன் அண்ணன்!

நான் தான் அத மறுபடி சரி பண்ணி கொடுத்திருந்தேன்.

மறுபடியும் அன்னிக்கு சண்டையில, உஷாரா உன் அண்ணி தான் முதல்ல போனை வாங்கி உடைங்கன்னு சொல்லி உடைச்சிப் போட்டுச்சாம்!”

“எதுக்குடா அம்மா சண்டை போட்டாங்க?”

“அது அடிக்கடி நடக்கிறது தாண்டா!

மகியோட நடக்க இருந்த உன் கல்யாணத்தைக் கெடுத்துடுச்சுடுங்கன்னு அம்மா ஆதங்கப்பட்டு அடிக்கடி சண்டை போடுவாங்க!

அதுவும் உனக்கு கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி ஐஸ்வர்யாவுக்கு கல்யாணம் வைக்கவும், பொண்ணோட தாய் மாமனுக்கு ஏதோ குறை போல, அது தான் பேத்திக்கு  கல்யாணம் பண்ணுறாங்கன்னு பேசிடுவாங்க.

அதனால ராஜு கல்யாணம் முடியட்டும்னு அம்மா சொன்னதுக்கு,

அக்கா ஒத்துக்கவே இல்லை!

அதோட விடல, உங்கம்மா கழுத்துல போட்டுருக்கிற அந்த அஞ்சு பவுன் செயினை கேட்டும் வம்பு பண்ணுச்சு!

என் பொண்ணு கல்யாணத்துக்கு பவுன் குறையுது, கொடுன்னு சொல்லி!

அதுக்கு அம்மா, அது ராஜு முத முதலா எனக்கு வாங்கிப் போட்ட செயின்!

அது என் காலத்துக்கு அப்புறம் அவன் பொண்டாட்டிக்கு தான் கொடுப்பேன்!

உனக்கு எல்லாம் போதும் போதும்கிற அளவு செஞ்சாச்சு!

உனக்கு எவ்வளவு வாங்கிட்டாலும் மனசு திருப்தி படாது!

அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்க!

அதுக்கு உன் அண்ணன், நீ என்ன அழுது கெஞ்சினாலும் அம்மா கொடுக்காது.

நானே வீட்டுல அம்மாவுக்கு இருக்கிற பங்கை எழுதிக் கேட்டுட்டு இருக்கேன்!

கையெழுத்துப் போட மாட்டேங்குது! அப்படி போட்டுச்சுன்னா, அதில உன் பங்கா ஒரு அமவுண்ட் நானே கொடுப்பேன்.

ஆனா அம்மா போட மாட்டேங்குதேன்னு சொல்லியிருக்கான்.

ஆமாண்டா போட மாட்டேன், ஏற்கனவே ராஜு கிட்ட கையெழுத்து வாங்கி அவன் பங்கையும் எடுத்துகிட்ட, வீட்டை எடுத்துக் கட்டினது முழுக்க அவன் காசு! அவன் உழைப்பு!

அதோட அவன் காசை நீயும் ஒட்ட ஒட்ட வாங்கி சொத்து சேர்த்துகிட்ட!

நாளைக்கு அவன் திரும்பி வந்தா கொடுக்க என்ன இருக்கு!

அம்மா நீ கூட ஒண்ணுமே கண்டுக்கலயானு அவன் என்னைப் பார்த்துக் கேட்டா, நான் என்ன பதில் சொல்லுவேன்னு சொல்லி அம்மா அவங்க சொன்ன எதையும் கேக்க மாட்டேன்னு சொல்லிடவும்,

அப்பன்னா, உன் சின்ன மவன் வந்தவுடனே வீட்டுக்குள்ள வா!

இப்ப வெளியே போ! என்று வீட்டிலிருந்து வெளியே அம்மாவைப் பிடித்துத் தள்ளி விட்டிருக்கிறான் ராமு!

அம்மாவும் விடல!  நான் ஏண்டா வெளியே போகணும்? இது என் புருஷன் வீடு, எனக்கும் இதில பங்கு இருக்கு! நான்  போக மாட்டேன்னு சொன்னதுக்கு,

அப்படியா போ.. போய் கோர்ட்டில் கேசு போடு.. என்று சொல்லி அவங்கள  வெளியே தள்ளி, கதவைத் தாளிட்டு விட்டான் உன் அண்ணன்!

அப்ப கூட உங்கண்ணி, உங்கம்மா போலிஸ் ஸ்டேஷன் போய் கம்ப்ளைண்ட் பண்ணிட போறாங்க என்று பயந்து சொன்னதுக்கு கூட

அதெல்லாம் போக மாட்டாங்க. போலிஸ் கோர்ட்டுனு போனா, வில்லங்கம் பிடிச்ச குடும்பம்னு பேர் கெட்டுப் போய்டும்.

அப்புறம் ராஜுவுக்கு யாரும் பொண்ணு கொடுக்க மாட்டாங்க!

அந்த பயம் அம்மாவுக்கும் இருக்கும்!

எங்க அப்படி போய்டும்?

நேரா அந்த சந்துரு வீட்டுக்குப் போகும்! ரெண்டு நாள் அங்க இருக்கட்டும்.

அப்புறம் நானே போய் அவனையும்  ரெண்டு திட்டி, கூட்டிட்டு வந்திடலாம்னு அசால்ட்டா சொல்லியிருக்கான்!

அதனால தான் ஆறுமுகம் அப்பா என்ன கேட்டும் ஒண்ணும் சொல்லாம அம்மா, அப்படியே ப்ரீ பஸ்ல ஏறி போய் சாய்பாபா கோவிலில் இருந்திருக்காங்க!

அங்கேயே அவங்க ரொம்ப நேரம் இருக்கிறத பார்த்துட்டு, கோவில் நிர்வாகி விசாரிச்சு, அப்புறம் அவங்க தான் பக்கத்தில் இருக்கிற முதியோர் இல்லத்தில் சேர்த்துருக்காங்க!

நானே போன வாரம் தான்,  அங்க ஒரு பேமிலி அவங்க கல்யாண நாளுக்கு முதியோர் இல்லத்துக்கு சாப்பாடு போட வந்தவங்களோட சவாரி போனப்ப அங்க அம்மாவைப் பார்த்துட்டு ஷாக் ஆகிட்டேன்.

அப்புறம் சவாரிய இறக்கி விட்டுட்டு திரும்ப வந்து என் வீட்டுக்கு கூப்பிட்டேன்!

ஆனா அவங்க வர மறுத்துட்டாங்க. நான் அங்க வந்தா அவன் மறுபடியும் வந்து உன் கிட்ட தகராறு பண்ணுவான்!

ராஜு வரட்டும். அவன் வந்தவுடன் நானே வரேன்னு சொல்லிட்டாங்க!

நான் உனக்கு போன் போட்டேன். அப்போ உனக்கு போகல!

சரின்னு நேரா உன் வீட்டுக்கு வந்து அங்க என்ன நிலவரம்னு பார்க்க வந்தா, நீயே ஊர்ல இருந்து அங்க வந்திருக்க!

வந்து கூடவா அம்மாவை தேடி வராம இருக்கன்னு எனக்கும் கோபம் வந்து, நான் பேசாம கிளம்பி வந்துட்டேன்! “

என்ற சந்துரு, மேலும் தொடர்ந்தான்.

“ஆனா அம்மா தான் அப்பவும், இல்ல ராஜு கிட்ட அவங்க ஏதாச்சும் பொய் சொல்லி இருப்பாங்க.

இப்ப அவனுக்கு லீவே கிடையாது! இருந்தும் வந்திருக்கான்னா, அவனுக்கு என் நினைப்பு வந்திருக்கும்.

நானும் அவன் கிட்ட போனில் பேசி ரொம்ப நாளாச்சு!

நீ போய் ஆறுமுகம் அண்ணன்கிட்ட விசாரின்னு சொல்லி அனுப்பினாங்க.

அப்புறம் அவர் சொல்லி தான் நீ உன் அண்ணன் கிட்ட சண்டைப் போட்டுக்கிட்டு வெளியே வந்திட்டதை அவரும் சொன்னார்.

இத போய் நான் அம்மா கிட்ட சொன்னப்போ,

ஓ.. ப்ரியா வீட்டில் இருக்கானா? இருக்கட்டும். பொறு.

ராமுவோட சுயரூபம் தெரிஞ்சிகிட்ட மாதிரி அவளோட சுயரூபமும் தெரிஞ்சிக்கிட்டு  தெளியட்டும்.

அதுவர நீ அவன பார்க்க வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டாங்க.

நானும் அதுக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.

நீ உன் அக்கா வீட்டில் இருந்து உன் பாகை தூக்கிட்டு வெளியே வந்ததும் தெரிஞ்சுடுச்சு!

அங்க என்ன நடந்திருக்கும்னு!

நீ இப்ப தெளிவாகியிருப்பன்னு புரிஞ்சது!

அதான் இப்ப நானே உன்கிட்ட பேச வந்தேன்” என்று நீளமாக பேசி முடித்திருந்தான் சந்துரு!

ராஜுவுக்கு மயக்கமே வரும் போல இருந்தது!

“டேய்.. ப்ளீஸ் இப்பவே என்னை அம்மா கிட்ட கூட்டிட்டு போடா” என்றான் பலவீனமான குரலில்!

சந்துருவும் அவன் நிலையை உணர்ந்து கொண்டவனாய், வா என்று சொல்லி அந்த முதியோர் இல்லத்திற்கு அழைத்து சென்றான்.

அங்கு ராஜு கண்டது, காதிலும் கழுத்திலும் ஒன்றுமில்லாமல் ஒரு ரேசன் புடவையைக் கட்டிக் கொண்டு இருந்த கமலா அம்மாவை!

கண்டவன் அதிர்ந்து போய், “அம்மா..ஆ”” என்று கூவியே விட்டான்!

“ராஜு” என்று அவன் அருகில் சின்னப் பெண் போல ஓடியே வந்தார் கமலா அம்மா!

“என்னம்மா இது கோலம்? உங்கள இப்படி பார்க்கவா, நான் இத்தனை வருஷம் மாடா உழைச்சேன்!” ராஜு அழவே தொடங்கி விட்டான்!

“டேய்..டேய்.. பயப்படாதே.. நான் நகையை எல்லாம் சந்துரு கிட்ட கொடுத்து விற்க சொல்லி இருக்கேன்.

எப்படியும் உன்னை ஓட்டையாண்டி ஆக்கி நல்லா உறிஞ்சிட்டு தான் அனுப்புவாங்கன்னு எனக்கும் தெரியும்டா!

அதான், சந்துரு மாதிரி  ஒரு டாக்ஸிய  ஓட்டிட்டு நீ, இங்கயே அம்மா கூடவே இருந்திருப்பா” என்றார்!

“இல்லம்மா.. ராஜு நான் இன்னும் விக்கலடா, எதுவா இருந்தாலும் நீ வந்து சுயமா முடிவெடுக்கட்டும் தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்” என்றான் சந்துரு.

“அத எல்லாம் அப்புறம் பார்க்கலாம், நீ முதல்ல அம்மாவை இங்கிருந்து வெளிய கூட்டிட்டு வர வேலையப் பாரு” என்றான் ராஜு.

சந்துருவும் ராஜுவும்  போய் முதியோர் இல்ல நிர்வாகியிடம் நன்றி சொல்லி, அம்மாவை தங்களுடன் அழைத்துப் போவதாக சொல்லி பேசிவிட்டு, கிளம்பும் போது ராஜு

“இப்போதைக்கு என்னால் முடிந்தது” என்று சொல்லி கையில் மீதியிருந்த சில ஆயிரங்களை நன்கொடையாக கொடுத்து விட்டு அம்மாவைக் கூட்டிக் கொண்டு வந்தார்கள்.

நேரே தன் வீட்டுக்கு அழைத்து சென்று விட்டான் சந்துரு.

வந்ததும் முதலில் பீரோவை திறந்து கமலா அம்மாவின் நகைகளை எடுத்துக் கொடுத்து அணிந்து கொள்ள சொன்னான்.

பின் மூவருக்கும் தோசை ஊற்றிக் கொடுத்தாள் புவனா.

சாப்பிட்டு விட்டு மொட்டை மாடியில் நின்று கொண்டு வேடிக்கைப் பார்த்தனர் நால்வரும்!

அப்போது அங்கு இருந்த துணி துவைக்கும் கல் போடப்பட்டிருக்கும் இடத்திற்கு ஒரு காக்கா தண்ணீர் குடிக்க வந்தது.

ஆனால் அங்கு கொஞ்சம் கூட தண்ணீர் இல்லை!

பாக்கெட்டுகளும் கப்புகளும் கூட கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன.

ராஜு அதைப் பார்த்துக் கொண்டிருந்தவன், கப்பில் தண்ணீர் பிடித்து அதற்கு குடிக்க வைக்கலாம் என்று எண்ணி நகருவதற்குள், அந்த காக்கா, வேகமாக தத்தி எழுந்து அந்த தண்ணீர் குழாயின் மேல் வேகமாக உட்கார்ந்தது!

உட்கார்ந்து, தன் அலகால் அந்த பைப்பை ஒரே பக்கமாக வேகமாக கொத்த தொடங்கியது! இரண்டு மூன்று முயற்சிக்குப் பிறகு, அந்த பைப் திறந்து கொள்ள தண்ணீர் வந்தது!

கொட்டும் தண்ணீரை பருகியது அந்த காக்கா! நன்கு குடித்து முடித்து விட்டு அங்கிருந்து பறந்து சென்று விட்டது!

சிரித்துக் கொண்டே போய் அந்த பைப்பை மூடிய புவனா,

“ராஜு அண்ணா , பாருங்க காக்கா கூட காலத்துக்கு ஏத்த மாதிரி அப்டேட் ஆகிடுச்சு!

நீங்க தான் இன்னமும் சொசைட்டிக்கு அன்பிட்டா இருக்கீங்க!” என்றாள்.

“என்னால இப்ப கூட நம்ப முடியல! எப்படி அண்ணா இப்படி இருந்திருக்கீங்க?

அதுவும் இந்த காலத்துல? எனக்கென்னமோ உங்கள பார்த்தா, பழைய காலத்து ஆளுங்க மாதிரி தோணுது!

இருவது முப்பது வருஷம் முன்னாடி வேணுமின்னா, உங்கள மாதிரி ஆட்கள் இப்படி ஏமாளியா இருந்திருப்பாங்க.

ஆனா இந்த காலத்துல மனுசங்க எல்லாம் எப்படி எப்படி இருக்காங்க நீங்க என்ன அண்ணா?” புவனா ஆதங்கப்பட்டாள்!

“அவன் மேல தப்பு இல்லைம்மா, நானும் ராஜுவோட அப்பாவும் அவனை அப்படியே வளர்த்துட்டோம்!

பெரியவங்க சொன்னா கேட்டுக்கணும்.

ஏன் எதுக்குன்னு எதிர்கேள்வி கேக்க கூடாது.

அவங்க எல்லாம் நம்ம நல்லதுக்கு தான் சொல்வாங்க அப்படின்னு. அண்ணன் அக்கா பேச்சைக் கேட்டு நடக்கணும் எல்லாம் நாங்க சொல்லிக் கொடுத்தது தான்!

அவன் எந்த அளவு சொல்பேச்சு கேட்டு நடக்கிற பையன்னு சொல்றேன் கேளு!

அப்ப ராஜுவுக்கு ஒரு ஆறு வயசு இருக்கும். எல்லோரும் சொந்தக்காரங்க ஊருக்கு ஒரு திருவிழாவுக்குப் போயிருந்தோம்.

அப்ப எங்க சொந்தக்காரர் ஒருத்தர் மிலிட்டரில இருந்து ரிட்டயர்ட் ஆனவர். பார்க்க பயங்கரமா இருப்பார்.

குழந்தைங்க எல்லாம் அவருக்கு ரொம்ப பயப்படுவாங்க.

அன்னிக்கு காலையில குழந்தைகளுக்கு எல்லாம் ஒரே பந்தி!

ராஜுவோடு எல்லா குழந்தைங்களும் சாப்பிட உக்கார்ந்தாங்க.

எல்லோரும் சாப்பிட்டு முடிச்ச பிறகும், ராஜு மட்டும் கண்ணுல தண்ணீ வர, வர, அவன் இலையில் மிச்சம் இருந்த சட்னி, சாம்பார்ல இருந்த பச்சை மிளகாய் எல்லாத்தையும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்!

நான் போய், டேய்.. எழுந்திருடா. ஏன் இப்படி பச்சை மிளகாயைப்  போய் சாப்பிட்டுட்டு இருக்க? என்று அவனை கூப்பிட்டால் அவன் சொல்றான்,

“அம்மா.. மிலிட்டரி மாமா சொன்னாங்க, இலையில ஒண்ணும் மிச்சம் இருக்க கூடாது. மிச்சம் வைக்காம சாப்பிட்டு விடணும்னு! அதான் என்றான்! எல்லோரும் சிரித்து விட்டார்கள்!

அப்படி சொல்பேச்சு கேக்கிற பையன் அவன்!

ஆனா பெரிசாகியும் அவன் அப்படியே இருந்தது தான் பிரச்சினையே!” என்றார் அங்கலாய்ப்புடன்!

“ஆனா ஒன்னும்மா.. அவன் அண்ணன் ராமுவும் இவ்வளவு மோசம் எல்லாம் இல்லம்மா, சின்ன வயசுல!

எப்போ வேலைக்கு போய் அங்க கமிசன் அடிச்சு பழகுனானோ அப்போதிலிருந்து அவன் புத்தியே கெட்டுப்போச்சு!

அதே மாதிரி தான் ப்ரியாவும். இங்க வீட்டுல கொஞ்சம் நல்லா வசதியா வளர்ந்துட்டா.

ஆனா போன இடத்தில கொஞ்சம் வசதி குறைவு!

அதுக்கே அவ்வளவு சீர் செய்ய வேண்டியதா போய்டுச்சு அப்போ!

நம்ம வீட்டுக்கு வந்தா கிடச்சத எல்லாம் கொண்டு போக ஆரம்பிச்சா.

அப்புறம் என்ன கொண்டு போலாம்ன்ற புத்தி அதிகமாயிடுச்சு!

ஆனா அதுவே அளவுக்கு மீறி, ராஜுவை சம்பாரிச்சு போடுற மெசினா நினைக்க ஆரம்பிச்சு, அவனுக்கு கல்யாணமே ஆக கூடாது!

அப்படி ஆகிட்டா, வர்றவ ஒண்ணும் செய்ய விட மாட்டான்ற நினைப்பு இவ்வளவு தூரம் கொண்டு வந்து விட்டுடுச்சு!

ராஜுவும் இங்கயே இருந்து இருந்தா கூட இங்க நடக்கிற நாலு நல்லது கெட்டது தெரிஞ்சிருக்கும்!

என்ன பண்ண? அவன் தான் அவனோட அந்த வெகுளித் தனம் மாறுவதற்குள் வெளிநாடு போய் விட்டான்!

குடும்ப அரசியல் அவனுக்கு தெரியாமலே போய்டுச்சும்மா!

இனிமே தான் அவன் எல்லாம் உணர்ந்து நடக்கணும்!” என்றார் கமலா அம்மா பெருமூச்சுடன்.

“அதெல்லாம் இனி அவனுக்கு நல்ல காலம் தான்ம்மா” என்றான் சந்துரு.

“டேய்.. ராஜு.. எல்லாம் கை விட்டு போய்டுச்சு மட்டும் நினைச்சுடாதே!

உனக்கு இனி தான் நல்ல காலமே! உன்னை பிடிச்ச பீடையெல்லாம் தான்  உன்னை விட்டு போய்டுச்சு!

நீ இப்படி ஏமாளியா இருக்கேன்னு தான், அம்மா ஒரு காரியம் பண்ணி வச்சுருக்காங்க உனக்கு தெரியாமல்!” என்றான் சந்துரு.

“அப்படி என்னடா பண்ணியிருக்காங்க?”

“அது இருக்கட்டும். நாலு வருஷம் முன்னாடி நான் உன்கிட்ட கொஞ்சம் பணம் கடனா வாங்கியிருந்தேன் ஞாபகம் இருக்கா?”

“ஆமா ஏதோ பிளாட் வாங்க போறேன்! பணம் கொஞ்சம் பத்தலைன்னு கேட்டு வாங்கின!

நான் தான் மெதுவா கொடுன்னு சொல்லியிருந்தேன். அதுக்க்கென்ன இப்போ?”

“ஆனா அத இப்ப கூட நீ திரும்ப கேக்கல இல்ல?”

“உனக்கு புரட்ட முடிஞ்சிருந்தா, நீயே இந்நேரம் கொடுத்துருப்பியே? அதான் கேக்கல!” என்றான் ராஜு.

“உனக்கு ஒண்ணு தெரியுமா? அந்த பணம் எனக்கு தேவையாவே இல்ல அப்போ! உன் அம்மா தான் அப்படி கடனா கேட்டு வாங்க சொன்னதே!”

“அம்மாவா, கடனா, உன் மூலமாவா? எதுக்கு?”

“உன்பேர்ல பிளாட் வாங்க தான்!”

“என் பேர்ல வாங்கணும்னா நேரா என்கிட்டய கேட்டு வாங்கி இருக்கலாமே? ஏன் இப்படி?”

“எல்லாம் உன் குணமும் உன் அண்ணன் புத்தியும் தெரிஞ்சு தான்!

நான் அவன் கிட்ட தான் போய் இந்த மாதிரி பிளாட்கள் விலைக்கு வருது. ராஜு கிட்ட சொல்லி வாங்கிப் போடுங்கன்னு சொன்னேன்!

அதுக்கு அவன் நீ சொல்ற இடமெல்லாம் ஒரு காலத்திலும் டெவலப் ஆகாது!

நீ சும்மா உன் ப்ரோக்கர் கமிசனுக்கு ஆசைப்பட்டு அவன கோத்து விடாதே!” அப்படின்னான்.

“இல்லைண்ணே, அந்த ஏரியா பக்கம் தான் புது பஸ் ஸ்டாண்ட் கட்டப் போறாங்க, நல்ல விலைக்குப் போகும். வாங்குங்க” அப்படின்னு சொன்னதுக்கு மாட்டவே மாட்டேன்னு சொல்லிட்டான்.

ஆனா அத கேட்டுட்டு இருந்த அம்மா, வழக்கமா அவங்களுக்கு தெரிஞ்ச கோவில் பிரண்ட்ஸ் மூலம் விசாரிச்சுட்டு வந்து,

“ராஜூகிட்ட கடனா பணம் கேளுடா. உனக்கு கஷ்டம்னா அவன் அனுப்புவான் கண்டிப்பா.

அப்படி அவன் அனுப்புற பணத்தில பிளாட் வாங்கிப் போடு. பின்னாடி அவன் இங்க ஊரோடு வந்துட்டா, அவனுக்கு உதவும் அப்படின்னு சொல்லி ரெண்டு பிளாட் வாங்கிப் போட்டுருக்காங்க.

நீ கொடுத்த பணத்துல, பிளாட் வாங்கினது போக மிச்சம் இருந்த பணம், அப்புறம் அந்த சேலில் என்னோட ப்ரோக்கர் கமிசன்னு சொல்லி கொஞ்சம் பணம் அந்த ரியல் எஸ்டேட் ஆளுங்க கிட்ட வாங்கினேன்.

ரெண்டையும் டவுன் பேமென்டா கட்டி ஒரு கார் எடுத்தோம் அம்மா பேர்லயே!

அது இப்ப ஒரு ட்ராவல்ஸ்ல அட்டாச் பண்ணி ஓடிட்டு இருக்கு! அதுல வர்ற பேமென்ட்டை வச்சு கை வைக்காம எடுத்து எடுத்துக் கட்டியே அம்மா அந்த கார் லோனையே கிட்டத்தட்ட முடிச்சுட்டாங்க!

இப்பவும்,  நீ ஒண்ணும் இல்லாத ஓட்டையாண்டி ஒண்ணும் இல்லை!

உன்கிட்ட பல லட்சம் பெறுமானமுள்ள பிளாட்கள் ரெண்டும், ஒரு டாக்சியும் இருக்குடா! உன் அம்மாவோட புத்திசாலித் தனத்தால்!”

ராஜுவுக்கு அப்படியே மயக்கம் வராத குறை தான்!

“அம்மாவுக்கு என்ன தெரியும்? அம்மாவுக்கு உலக நடப்பு தெரியாது! அம்மா வெள்ளந்தியானவங்க! அவங்க பார்த்து முடிவு செஞ்ச சம்பந்தம் சரியான்னு விசாரிக்கணும்” அவன் அண்ணனின் சொற்கள் காதில் மீண்டும் வந்து ஒலித்தன!

அவன் மனதை புரிந்து கொண்டவனாய் சந்துரு சொன்னான்.

“என்னடா உன் அம்மா இவ்வளவு தூரம் பண்ணியிருக்காங்களே, அவங்கள போய் அண்டர் எஸ்டிமேட் பண்ணி வச்சுருந்தோமேன்னு நினைக்கிறியா?

டேய்..உன் அப்பா இறந்த பின், நீ வேலைக்கு துபாய் செல்லுமுன் இருந்த அந்த ரெண்டு மூணு வருஷம், உங்கம்மா தானேடா எல்லாத்தையும், சமாளிச்சாங்க!

 அப்ப அவங்க என்ன விவரம் இல்லாத முட்டாளா?

இல்ல அவங்க பார்த்து பார்த்து முடிவு பண்ணின அந்த சம்பந்தம் தப்பா? இல்ல மகி தான் உனக்கு ஏத்த பொண்ணு இல்லையா?” அடுக்கடுக்காய் கேட்டான் சந்த்ரு ஆதங்கத்துடன்

“எனக்கு ரொம்ப பிரமிப்பா இருக்குடா. ரொம்ப பெருமையா இருக்கு என் அம்மாவை நினைச்சா? என்றான் ராஜு ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டு!

“டேய்.. இப்படி மலைச்சு நின்னுட்டே இருக்காதே. அவன் கூட சேர்ந்து போய், நமக்கு ஒரு வீட்டை வாடகைக்குப் பாரு!” என்றார் கமலா.

“ம்ம். ஆமாடா.. நல்ல ஒரு அப்பார்ட்மென்ட் வீடா பாருடா. அம்மாவுக்கு அது தான் வசதியா இருக்கும்!” என்றான் ராஜு. சொன்னவன்.

இந்த இந்த செயினை வித்து பணம் வாங்கிட்டு வா, வீட்டு அட்வான்ஸ் கொடுக்க” என்று அவன் கழுத்து செயினை கழற்றப்போக,

“டேய்..டேய்.. அதெல்லாம் வேண்டாம். இந்தா” என்று ஒரு ஏடிஎம் கார்டை நீட்டினார் கமலா.

அவருடைய பணம்! டாக்ஸி ஓடி சம்பாரித்த பணம் மற்றும், அவருக்கு அரசாங்கம் கொடுக்கும் உரிமைத் தொகை சேர்த்து வைத்தது!

“ஆனா நான் சொல்ற மாதிரி வீட்டைப் பாருங்க” என்றார் கமலா.

அவர் சொன்னபடி ஒரு ஸ்டோர் வீட்டில் பால் காய்ச்சி குடியேறினான் ராஜு.

ரொம்ப நேரமாக படுத்துக் கொண்டு பழையதை நினைத்துக் கொண்டிருந்த ராஜு நடப்புக்கு வந்திருந்தான், வாசலில் பால்க்காரர் பெல் சத்தம் கேட்டு!

நாளை அம்மாவோடு போய் மகியை சந்திக்க வேண்டும் என்று மனதில் தீர்மானித்தவனாய்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!