Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அமுதமழை சாரல்

அமுதமழை சாரல் 43-1

அத்தியாயம் 43 

திருமணம் முடிந்து கருணாம்பிக்கையை முறையே அவினாஷின் வீட்டில் விட்டுவிட்டு அனைவரும் வீடு திரும்பினார்கள்.

அவினாஷின் அறையை முதலிரவுக்காக பாரியும் வில்வாவும் தான் தயார் செய்திருந்தார்கள். வேறு யாரையும் உள்ளே விடவே இல்லை.

அருந்ததியை தமயந்தி அவருடனே அன்று தாங்கிக்கொள்ள அழைத்து கொண்டார், மணமக்கள் சங்கோஜமின்றி இருக்கட்டும் என்று நினைத்து வேதா தாத்தாவும், “நானும் இன்னிக்கு உங்க கூடவே வரேன்” என்று அவர்களுடன் சென்றுவிட்டார்.



Advertisement

அனைவரும் சென்றதும், ஒரே அமைதியாக இருந்தது வீடு.

“சூடா ஏதாவது குடிப்போமா கருணா?” என்றான் அவினாஷ்.

“சாப்பிட்டதே ஹெவியா இருக்கு, சுக்கு மல்லி காஃபி மாதிரி எதாவது குடிச்சா நல்லா இருக்கும் அவினாஷ்”

Advertisement

“சரி, வா ரெண்டு பேரும் சேர்ந்தே போடுவோம்” என்று அடுப்படிக்குள் சென்றான்.

Advertisement

இலகுவான பருத்தி புடவை அணிந்திருந்தாள். ஒரு சிறிய புன்னகை இருவர் உதடுகளிலும் உறைந்து நின்றது.

“சுக்கு ஒரு துண்டை எடுத்து, இதை நல்லா தட்டி கொடு” என்று அவளிடம் கொடுத்தான்.

பின் அவன் லேசாக மல்லியை வறுத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடித்து எடுத்துக்கொண்டான்.

Advertisement

இரண்டு டம்பளர் நீரை கொதிக்க விட்டு, இடித்த சுக்கையும் பொடித்த மல்லியையும் அதில் போட்டான்.

கொதிக்கும் வாசனையே தொண்டைக்குள் இதமாக இறங்கியது.

“இன்னும் குடிக்கவே இல்லை, ஆனா வாசனையே தொண்டைக்கு இதமா இருக்கே எப்படி?” என்றாள் கருணா.

“சில விஷயங்கள் அப்படி தான், ஒன்னோடு ஒன்னு கனெக்ட் ஆகி இருக்கும், கண்ணுக்கு தெரியாது. இப்ப மனசுக்கு ஒன்னுன்னா சில சமயம் வயத்துல பட்டாம்பூச்சி பறக்குது இல்லையா.. “

பேசிக்கொண்டே கொஞ்சம் நாட்டு சக்கரையை அதில் சேர்த்து வடிகட்டி இருவருக்கும் டம்பளர்களில்  ஊற்றினான்.

இருவரும் ஆளுக்கொன்றை கையில் எடுத்து கொண்டு ஹாலிற்கு வந்தார்கள்.

“சின்ன வயசுல படபடன்னு பேசுவ கருணா.. இப்ப எல்லாம் அந்த படபட பேச்சு குறைஞ்சிடுச்சு இல்ல?”

கருணா சிரித்து கொண்டு ஒரு வாய் சூடான காஃபியை பருகினாள்.

“படபட பேச்சு இப்ப பக்குவபட்ட பேச்சா மாறிடுச்சு..”

“இது என்ன? கல்யாண நாள் அதுவுமா இப்படி ஒரு ஆராய்ச்சி?”

“அதுவும் சரிதான், சரி நீ ஏதாச்சும் சொல்லேன்”

“இன்னும் ஒரு வாரத்துல நாம் டெல்லிக்கு கிளம்பணும், ஏற்கனவே பேசுனது தான். இருந்தாலும் எனக்குள்ள ஒரு சின்ன உறுத்தல் இருக்கு. நீங்க அங்கே இருந்துப்பீங்களா?”

“இந்த உறுத்தல் வாய் மொழியால் போகிறது இல்ல கருணா.. நாம வாழுற  வாழ்க்கையால தான் அது மறையும்..” 

“ஹ்ம்ம்.. சரி நம்ம வாழ்கை பத்தி உங்க கனவுகளை சொல்லுங்க கேட்போம்”

“நான் ஒரு புத்தகத்துல படிச்சேன்.. காதல் வசனம் பேசுறதோ, கொஞ்சி குலவுறதோ மட்டுமே தாம்பத்யத்தை முழுமை ஆக்கிவிடாதாம்”

“ஹா..ஹா..ஹா அது எல்லாம் நம்ம ரெண்டு பேருக்கும் வருமான்றதே சந்தேகம் தான்..”

“எந்த ஒரு தம்பதியினர் மனதில் உள்ள எல்லாத்தையும் முழுமையா தயக்கமே இல்லாம பகிர்ந்துக்கிறாங்களோ, அதற்கான புரிதலும் நம்பிக்கையும்  இருக்குதோ அவங்க நல்ல தம்பதியினராம்”

“அதே மாதிரி, குழந்தைகள், உறவுகள், கடமைகள் இதை தவிர உலக விஷயங்களை எல்லாமுமே பேசி , ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் இருந்தா, அவங்க இல்லறம் முதுமை காலத்திலும் இனிமையாகவே  இருக்குமாம்.. அப்படி நாம ரெண்டு பேரும் ஆத்மார்த்தமா வாழனும் கண்ணம்மா..”

அவினாஷ் கூற கூற கருணாம்பிகை அவனது கனவில் தன்னையே தொலைத்தாள்.

“சரி, இப்ப  உன் கனவு என்னனு சொல்லு கருணா?”

“இனி நான் வேற நீங்க வேற இல்ல.. உங்க கனவு வேற என் கனவு  வேற இல்ல… நம்ம கனவை தான் நீங்க சொல்லிட்டீங்களே…”

“நேரமாச்சு, ரூமுக்கு போலாமா கண்ணம்மா?” என்று அவினாஷ் எழுந்து கருணாவிற்கு முன் தன் கையை நீட்டினான்.

இருவரும் கைகோர்த்து சேர்ந்தே அறைக்குள் நுழைந்தார்கள்.

“அட பாவிகளா!!!” என்று இருவரும் தலையில் அடித்து கொண்டு ஒருநிமிடம்  நின்றுவிட்டார்கள்.

கதவு திறந்ததும் நேரே 

‘கருணாம்பிகை அவினாஷின் முதலிரவு’

‘உங்கள் இருவரையும் அன்புடன் வரவேற்கிறோம். உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்!! 

எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

ஏதேனும்  சந்தேகம் இருந்தால் கீழே  உள்ள நம்பருக்கு அழைக்கவும்

(கருணாவின் தாத்தா பாட்டியின் தொலைபேசி எண்கள்  போடப்பட்டிருந்தது.)

இப்படிக்கு என்றும் உங்கள் நலம்விரும்பிகள்,

பாரிவேந்தன் – வில்வநாதன்’

 என்று போஸ்டர் ஒன்றை வைத்திருந்தார்கள்.

“சரியான லூசுங்க” என்று திட்டி கொண்டே கருணா உள்ளே சென்றாள்.

கட்டில் மேலே ஒரே ஒரு சிவப்பு ரோஜாப்பூவை வைத்து அதன் கீழே ஒரு லெட்டர் வைத்திருந்தார்கள்.

அவினாஷ் அதை பிரித்து படித்தான்.

‘தேவையில்லாமல் செலவு செய்தால் கருணாவுக்கு பிடிக்காது என்பதால் ஒரே ஒரு பூவை வைத்துள்ளோம்.

எப்படியும் கசங்கி போக போகுதுன்னு தெரிஞ்சு எதுக்கு பெட்ல பூ போட்டு வச்சிருக்கீங்கன்னு திட்டுவா..’

படிக்கும் பொழுதே அவினாஷின் முகம் வெட்கத்தில் சிவக்கத் தொடங்கியது..

“கொஞ்ச கூட கூச்ச நாச்சமே இல்லாமல், எப்படி  எழுதி வச்சிருக்கானுங்க பாருங்க” என்றாள் கருணா.. அவளது குரலும் உள்ளே சென்றுவிட்டது.

‘அவினாஷ், இன்னிக்கு உங்களுக்கு ப்ர்ஸ்ட் நைட்.. அதனால நாங்க சொல்ல  வர்றது என்னன்னா, இன்னிக்கும் கடமை கண்ணியம் கட்டுப்பாடுன்னு ரெண்டு பேரும் மொக்கை போடாம, சீக்கிரம் எங்களுக்கு ஒரு குட்டி மருமகனையோ மருமகளையோ ஏற்பாடு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

பின் குறிப்பு:

தயவு செய்து குட்டி கருணாவை ரெடி பண்ணிடாதீங்க.. இந்த ஜென்மத்துல ஒரு கருணாவே இந்த வீட்டுக்கு போதுமானது. உன்னை மாதிரி சமத்தா குட்டி அவினாஷை ரெடி செய்யவும்.

இப்படிக்கு,

வில்வா-பாரி’

“முதல்ல இந்த போஸ்ட்டரை எடுங்க.. இந்த லெட்டரையும் கிழிச்சு குப்பையிலே போடுங்க” என்றாள் கருணா உர்ரென்று.

“அவங்க சொன்னா சொல்லட்டும் கருணா.. எனக்கு உன்னை மாதிரி குட்டியா ஒரு கருணா தான் வேணும்..” சொல்லும் பொழுதே அவன் குரல் அன்பில் தோய்ந்து இருந்தது. 

கருணா அவினாஷின் நேசத்தில் உருகி தான் போனாள். 

“உங்க அளவுக்கு நான் உங்களை நேசிக்கிறேனான்னு எனக்கே சந்தேகமா தான் இருக்கு அவினாஷ்”

“நான் சொன்ன மாதிரி, உன் சந்தேகம், உன்  தயக்கம், உன் உறுத்தல் இது எல்லாத்துக்கும் நாம வாழுற வாழ்க்கையில தான் விடை கிடைக்கும்” 

கைகளை விரித்து வா என்று கருணாவை அழைத்தான்.

கருணாவும் அவன் கைகளுக்குள் சுகமாக புகுந்து கொண்டாள்.

 அதற்கு பிறகு அவர்களுக்கான ஏகாந்த நேரம்.

“கண்ணம்மா.. கண்ணம்மா.. கண்ணம்மா” என்று அவினாஷின் குரல் தான் அந்த அறை முழுவதும் எதிர் ஒலித்துக்கொண்டிருந்தது.. 

காதலாக..

கிறக்கமாக..

மயக்கமாக.. 

மந்தகாசமாக…

ஏக்கமாக.. 

ஏகாந்தமாக.. 

உருக்கமாக..

உன்னத்தமாக..

நிறைவாக என் கண்ணையா என்ற கருணாவின் ஒற்றை அழைப்பில் சுகமாக கண்ணயர்ந்தார்கள் இருவரும்.

—————

மறுநாள் மறு  வீட்டு விருந்து கருணா வீட்டில். அனைவரும் அங்கே தான் ஒன்று கூடி இருந்தார்கள்.

காலை உணவிற்கு பிறகு அனைவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“எங்க கல்யாண செலவுக்கான காசை என்ன செய்றதுன்னு சொல்லவா?” என்றாள் கருணா.

அனைவரும் ஆவலாக கேட்டுகொள்ள தயாராகி அமர்ந்து கொண்டனர்.

வர்ஷித்தா கணக்கில் மொத்தம் ஐந்து லட்சம் இருப்பதாக கூறினாள். 

“கருணா, அவினாஷ் பிஸினஸுக்கு வச்சுக்கலாமே?” என்றார் சங்கரன் வேகமாக. அவருக்கு மகள் அதை நிச்சயம் சமூக சேவைக்கு கொடுத்து விடுவாள் என்று தெரியும், அதனாலே முந்தி கொண்டு கூறினார்.

“ஏன் வில்வா, ஏன்டா உங்க அப்பா இன்னும் அப்பிராணியாவே இருக்காரு”

“என்ன பாரி பண்றது அவர் டிசைன் அப்படி.. இன்னும் அவர் சொல்றதை கருணா கேப்பான்னு நம்பிகிட்டு இருக்காரு..”

“இது அதுக்கான பணம் இல்லையே அப்பா.. இப்ப கல்யாணத்துக்கு நீங்க செலவு செய்ய வச்சிருந்த காசு தானே, அதுக்கும் பிஸினஸுக்கும் என்ன சம்பந்தம்?”

“பாப்பா சொல்லும் இல்ல சங்கரா? ஏன் அவசர படுற” என்றார் தர்மராஜ்.

“பார்த்தியா வில்வா, எங்க அப்பா பேசுறத.. நாம சொல்ற எதையாவது நயா பைசாவுக்கு மதிச்சிருக்காரு?”

“அதுக்கு எல்லாம் இனி வாய்ப்பே இல்லை பாரி..”

விக்ராந்திற்கு கூட கருணா என்ன செய்ய போகிறாள் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது.

“எல்லாரும் அமைதியா இருங்க.. கருணாம்பிகை சொல்றதை முதலில் கேளுங்க” என்றார் வீரராகு தாத்தா.

“ஒரு எட்டு பெண்கள், நான் போன தடவை நான் வந்தப்ப கவெர்ன்மெண்ட் ஸ்கூல்ல ஸ்பீச் கொடுத்தப்ப பார்த்தேன்..”

“சரி..”

 “டென்த் படிச்சிட்டு இருந்தாங்க..”

“சரி..”

“மேலே படிக்க முடியாது, வேலைக்கு போய் தான் ஆகணும், என்ன வேலைக்கு போகலாம்னு என்கிட்டே கேட்டிருந்தாங்க..”

“சரி..சரி”

கருணா சொல்ல சொல்ல சரி சரி என்று ராஜி கூறிக்கொண்டிருந்தார்.

அனைவரும் ராஜியை பார்க்கவும், 

“பாவம் கருணா தனியா சொல்லிட்டே இருக்கா, எல்லாரும் பிடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி அமைதியா இருக்கீங்க.. அவளுக்கு சுவாரசியமா இருக்காது இல்லையா.. அதான் நான் சரி சரின்னு சொல்றேன்.. அதுக்கு எதுக்கு என்னை பார்க்கறீங்க எல்லாரும்?”

“அவங்களை டைய்லரிங் கோர்ஸ் படிக்க சொல்லி இருந்தேன்… சீதா லட்சுமி மிஸ் தான் ஒரு டிரஸ்ட் மூலமா அதகற்கான பீஸ் ஏற்பாடு செஞ்சு அவங்களை கைட்டு  பண்ணது..”

“ஓ சரி சரி..”

“இப்ப அவங்க எட்டு பேருக்கும் தையல் மெஷின் இதுல இருந்து வாங்கி கொடுக்க போறோம்..”

“அதுக்கு எவ்வளவு காசு வரப்போகுது?” என்றனர் சுமதியும் தமயந்தியும்.

“இல்லம்மா, இது பிசினஸ் பர்போஸ் மெஷின்… எம்பிராய்டரி எல்லாம் பண்ணலாம்.. அதனால் ஒரு மெஷின் முப்பதாயிரம் கிட்ட வரும்..”

“நல்ல யோசனை தான் கருணா” என்றனர் அனைவரும்.

“ஆனா நாம இதை இலவசமா கொடுக்க போறது இல்லை.. லோன் மாதிரி தான், ஆனா இண்டெர்ஸ்ட் இல்லாம.. மாசாமாசம் ஒரு தொகையை  அவங்க கொடுக்கட்டும்..”

“நம்ம கிட்ட இருக்கிற பணத்தை வச்சு பிரீயாவே செய்யலாமே?” என்றார் விக்ராந்த்.

“இலவசமா கொடுக்கிறதுனால பொறுப்பு வராம போயிடும்.. அவங்க திருப்பி கொடுக்கிறதை வச்சு  நாளைக்கு தேவை இருக்கிற வேற ஒருத்தருக்கு இதை பயன்படுத்தலாம் இல்லயா?”

“இந்த அக்கவுண்ட்ஸ் எல்லாம் தாத்தா பார்க்கட்டும், அவர் கேட்கும் பொழுது மத்தவங்க உதவி செய்யட்டும். மெஷின் வாங்குறது அவங்ககிட்ட கொடுக்கிறது எல்லாம் அண்ணியும் ஹர்ஷித்தாவும் பார்க்கட்டும்”

“அப்பாடா, இந்த தடவை நாம எஸ்கேப் போலடா பாரி..”

“நீ வேற ஏன்டா வில்வா…அவ மிச்சம் இருக்கிற காசுக்கு வேற பிளான் வச்சிருப்பா, அநேகமா அதுக்கு நம்மளை தான் போடுவான்னு நினைக்கிறேன்..”

“அப்படியா சொல்ற?”

இவர்கள் வழக்கம் போல குசுகுசுவென தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“அப்படி என்னத்தை தான்டா பேசுவீங்க ரெண்டு பேரும்.. ஒன்னாங் கிளாஸ்ல இருந்து பேசுறீங்க.. இன்னும் விஷயம் இருக்கா பேச?” என்றார் பாட்டி..

“அதானே!!!” என்றனர் வர்ஷித்தாவும் ஹர்ஷித்தாவும் கோரஸாக.

“அடுத்து மீதமிருக்கிற பணத்துல, நம்ம வீட்ல வேலை செஞ்ச ரமணிம்மா இருக்காங்க இல்லை, இப்ப வயசானதால வீட்டு வேலை செய்ய முடியலைன்னு சொன்னாங்க, ஆனாலும் குடும்பத்தை பார்க்கணும் இல்ல கண்ணுன்னு வருத்தப்பட்டாங்க..

அவங்களுக்கு நம்ம பிள்ளையார் கோவில் வாசல்ல பூ, பூஜை சாமான் கடை ஒன்னு வைக்க ஏற்பாடு பண்ணலாம்னு நினைக்கிறேன்”

“நல்ல யோசனை கருணா.. இங்கேயும் பூக்கடை எதுவும் இல்லை பக்கத்துல..” என்றார் பாட்டி.

“அதன் வேலை எல்லாம் பாரிவேந்தன், அண்ணா, அருந்ததி மூணு பேரும் செய்யட்டும்..”

“அதானே பார்த்தோம்.. நாங்க இல்லாமலயா?” என்றனர் நண்பர்கள். அதில் மகிழ்ச்சியே இருவருக்கும். அருந்ததிக்கும் ஏக கொண்டாட்டம். அண்ணாஸ் கூட என்ன செய்தாலும் அவளுக்கு மகிழ்ச்சியே!

அதன் பிறகு கருணாவும் அவினாஷும் மதியம் விருந்துக்கு, சீதாலட்சுமி மிஸ் வீட்டிற்கு சென்றனர்.

இருவரையும் கட்டாய படுத்தி மூன்று நாள் ஹனிமூனிற்கு மூனார் அனுப்பி வைத்தனர் குடும்பத்தினர்.

அதன் பின், அவினாஷும் கருணாவும் டெல்லிக்கு புறப்பட்டனர். அருந்ததியும் தாத்தாவும் என்ன நினைப்பார்களோ? என்று கருணா அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்துகொண்டேயிருந்தாள்.

வேதா தாத்தா தான்,

“இதுவே அவினாஷ் வேலை டெல்லியில இருந்தா, கல்யாணம் பண்ணி அவன் மனைவியை அவன் கூட அழைச்சிட்டு தானே போவான், வெளிநாட்டு வேலைக்குன்னாலும் எங்களை விட்டுட்டு போய் தானே ஆகணும்? வேலைக்காக பிரிஞ்சு தூரமா போறது சகஜம் தானே பாப்பா?

இதுல வேலை அவனுடையதா  உன்னுடையதான்னு கேள்வியே இல்லை, கல்யாணத்துக்கு பின்னாடி கணவன் வேறு மனைவி வேறு இல்லை.. 

நீ  அப்பவே என்கிட்ட என்ன சொன்ன தெரியுமா, சூழ்நிலையை சரியா கையாளனும், தமயந்தி விஷயத்துல தான் நீங்க சரியா செய்யல, அவினாஷ் விஷயத்துல சரியா செய்யிங்கன்னு.. அவனுக்காக என்கூடவே சண்டை போட்டவ பாப்பா நீ… நீ தகப்பன் சாமி மாதிரி பாப்பா.. எனக்கு நீயும் அவினாஷும் வேற வேறையா தெரியவே இல்லை.

எங்களுக்கு தேவைன்னா நீங்க ரெண்டு பேரும் கண்டிப்பா இருப்பீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.. அதனால சந்தோஷமா போய்ட்டு வாங்க ரெண்டு பேரும்” என்று அவளை சமாதான படுத்தி மனதார  அனுப்பி வைத்தார்.

அருந்ததியை கொஞ்ச நாள் டெல்லியில் வந்து இருக்குமாரு கருணா அழைத்ததிற்கு,

“அய்யோ.. உங்க ரெண்டு பேரு கூடவே வா.. தாங்காது அண்ணி.. தாங்காது.. என்னால ஒரே சமயத்துல உங்க ரெண்டு பேர் ரூல்ஸ் பால்லொவ் பண்ண முடியாது. நான் இங்க அண்ணாஸ் கூட ஜாலியா இருப்பேன்.. இங்க எல்லாரும் இருக்கும்போது நான் ஏன் அண்ணி தனியா இருப்பேன்னு நினைக்கிறீங்க.. ஹாப்பியா போய்ட்டு வாங்க” என்று பெரிய மனுஷியாக அனுப்பி வைத்தாள்.

ராஜியின் வீட்டின் பக்கத்திலே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கே தங்கள் புது வாழ்க்கையை தொடங்கினார்கள் இருவரும்.

இருவரும் சேர்ந்தே காலையில் எல்லா வேலையும் முடித்துவிட்டு, அவர் அவர்  வேலைக்கு சென்றார்கள். இரவும் சேர்ந்தே பேசிக்கொண்டு சமைத்து சாப்பிட்டு, பின் காதலில் திளைத்து என வண்ணமயாக சென்றது அவர்களது நாட்கள்.

இந்த வேலை பிடித்திருந்தாலும், கருணாவிற்கு பேச்சு என்பதே முழு நிம்மதியை கொடுத்தது. 

விடுமுறை நாட்களில், கல்லூரிகள், பள்ளிகள், என்று பல இடங்களுக்கு பேச சென்றாள். டெல்லியில் மட்டுமில்லாமல், அங்கே உள்ள பல கிராமகங்களுக்கும்  சென்று பேசினாள். இந்திய மொழிகளில் பத்து மொழிகளை சரளமாக பேச கற்றுக்கொண்டிருந்தாள்.

பல ஊர்களில் இருந்தும் அவளுக்கு அழைப்பு வந்தது. பொருளாதாரத்தை எப்படி முன்னேற்றலாம்? கல்வியின் முக்கியத்துவம்? மோட்டிவேஷனல் தலைப்புகள்  என்று பல்வேறு தலைப்புகளில் பேசினாள்.

முடிந்த சமயங்களில் அவினாஷ் கருணாவுடன் துணைக்கு சென்றான். அவனுக்கு வேலை இருந்தால் ராஜி உடன் சென்றார்.

மூன்று மாதத்திற்கு ஒரு முறை சென்னை வந்து சென்றார்கள். அங்கேயும் கருணா பேசுவதற்கு சென்றுவிடுவாள். சென்னை என்றால், பாரியும் வில்வாவும் தான் உடன் செல்வார்கள்.

கல்யாண செலவுகளில் ஆரம்பித்த செயல்பாடுகளை, தாத்தாக்கள் அனைவரும் சேர்ந்து ஒரு டிரஸ்ட் போல ஆரம்பித்து அதை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

அனைவருமே மாதம் மாதம் அதற்காக தங்களது பங்கை கொடுத்து விடுகிறார்கள். 

இதற்கிடையில் பாக்ஸிங் அகாடெமியையும் ஆரம்பித்துவிட்டனர். அதன் திறப்பு விழாவையும் எளிமையாக முடித்துக்கொண்டு, ஒரு குறிப்பிட்ட தொகையை  வர்ஷித்தா ஹர்ஷித்தா இருவருமே டிரஸ்ட்டிற்கு கொடுத்துவிட்டனர்.

ரஞ்சி ஆன்ட்டி, அங்கேயே ஸ்னாக்ஸ் அண்ட் ட்ரிங்க்ஸ் என்று அவரது கடையை அங்கே ஆரம்பித்துவிட்டார். 

அவினாஷை போல ராகவ் இப்பொழுது பொறுப்பாக தன் அம்மா, தங்கை, தாத்தாவுடன் அருந்ததி வேதா தாத்தாவையும் கவனித்து கொள்கிறான்.

ஒரிஸாவில் வெள்ளம் வந்து பல பேர் பாதிக்க பட்டிருந்தார்கள். அரசு சார்பில் கருணாவை தான் பொருளாதார வகையில் பேரிடர் மீட்புத் திட்டம் மற்றும் உத்திகளை  திட்டமிட நியமித்திருந்தனர். கருணாவின் திட்டமிடலின் படி அந்த முறை, அணைத்து மக்களுக்கும் சரியாக நிவாரணம் சென்று அடைந்திருந்தது. மக்கள் இயல்பு வாழ்விற்கு விரைவாக திரும்பி விட்டனர். அரசாங்கத்தால் பெரிதும் பாராட்டப்பட்டாள் கருணாம்பிகை. 

அதன் பிறகு வெள்ளம், பூகம்பம்,  நிலச்சரிவு, வறட்சி  போன்ற  இயற்கை பேரிடர்கள் (Natural Disasters) அனைத்திற்கும் இந்தியாவிலும் சரி, பிற நாடுகளிலும் சரி, இந்திய அரசின் சார்பாக கருணாவை பொருளாதார ஆலோசகராக அனுப்பி வைத்தனர். 

கருணாவின் திறமையினாலும் புத்திகூர்மையினாலும் பேச்சினாலும் ஈர்க்கப்பட்டு பல அரசியல் கட்சிகள் அவளை தங்கள் கட்சியில் சேருமாறு வற்புறுத்தினர்.

“என்னுடைய பேச்சினால் எந்த அரசியல் பாதிப்பும் இருக்காது. தனி  மனிதரின் முன்னேற்றம், கல்வியின் அவசியம், பெண்களின் முன்னேற்றம், பொருளாதாரத ரீதியாக ஒவ்வொருவரும் எப்படி முன்னேறலாம்? என்று பொதுவான சமூக சிந்தனை கொண்டதாக மட்டுமே என்னுடைய பேச்சும் செயலும் இருக்கும். 

மக்களின் முன்னேற்றத்தை தடை செய்து முன்னேறும் அரசியல் இப்பொழுது நம் நாட்டில் இல்லை.. மக்கள் நன்றாக இருந்தால் தான் நாடு மென்மேலும் முன்னேற முடியும் என்ற முற்போக்கு சிந்தனை பெற்றுவிட்டது நம் நாடு, “ என்று சாதூர்யமாக கூறி அரசியல் அழைப்புகளை மறுத்துவிட்டாள்.

————————–

அன்று சென்னையில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்காக ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்படிருந்தது.அதில் மோட்டிவேஷனல் ஸ்பீச்சிற்காக கருணாவை அழைத்திருந்தார்கள். கருணாவின் செக்ரெட்டரியாக செயல்படுவது ராஜி தான். அவளது பேச்சை கேட்பதற்காக அன்று வீட்டில் இருந்து அனைவரும் வந்திருந்தார்கள். 

எப்பொழுதையும் போலவே மிகவும் சிறப்பாக இருந்தது அவளது பேச்சு. கேட்பவர்களை எப்பொழுதும் காந்தம் போல கட்டிபோட்டுவிடும் அவள் பேச்சு.

இறுதியில் மாணவர்கள் கேள்விகள் கேட்கலாம் என்று கூறவும் உற்சாகமாக சில மாணவர்கள் கேள்விகளை கேட்டனர். கருணாவும் அழகாக பதில்களை கூறி கொண்டிருந்தாள்.

அப்பொழுது  ஒரு மாணவி, ”அக்கா நீங்க தான் என் ரோல் மாடல்.. நீங்கள் ஒரு கதாநாயகி தெரியுமா, நான் உங்களை மாதிரி வர வேண்டும்” என்று கூறினாள்.

அதற்கு கருணாம்பிகை,

“நிச்சயம் நான் கதாநாயகி தான்.. என் கதைக்கு நான்தான் கதாநாயகி.. அதே மாதிரி அவர் அவர் கதைக்கு அவர் அவர்தான் கதாநாயகன் நாயகியாக இருக்க வேண்டும்.. கடவுள் அனைவருக்கும் தனி தனியே ஒரு வாழ்க்கையை கொடுத்திருக்கிறார்.. எந்த பாகுபாடும் அதில் இல்லை.. உன் வாழ்கை உன் கையில்.. அதில் நீ கதாநாயகி ஆகவும் மாறலாம்.. கோமாளியாகவும் வாழலாம்.. அது உன் இஷ்டம்.. 

நல்லா படிங்க.. லட்சியத்தோடு படிங்க… நல்ல சிந்தனைகள் நேர்மறையான எண்ணங்கள், கடின உழைப்பு.. தன்னம்பிக்கை.. எல்லாம் இருந்தால் வெற்றி நிச்சயம், வாழ்த்துக்கள் மாணவர்களே!!!”  என்று தனது அன்றைய உரையை முடித்து கொண்டாள். 

கரகோஷம் காதை பிளந்தது.

அந்த கரகோஷம் அமுதமழை சாரலாய் சுகமாக அனைவரையும் நனைத்தது.. 

என் மகள் இவள், என் மனைவி இவள், என் பேத்தி இவள், என் சகோதரி இவள், என் தோழி இவள், என் சொந்தம் இவள்.. என்று ஒவ்வொருவரும் கருணாவை எண்ணி பெருமை பட்டுக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!