46.3 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:1,294
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் அத்தியாயம் 46.3
.
அதிகம் பேசிவிட்டனர். பேசியதையும், கேட்டதையும் இருவரும் மௌனமாக அசைபோட்டுக் கொண்டே இலக்கில்லாது நடந்தனர். இரவு நேர நடையின் போது நிறையப் பேசுவார்கள் தான். கூடவே மகளும் இருப்பாள். அதனால் பேச்சு இப்படியான பாதையில் சென்றதே இல்லை. இன்று என்னவெல்லாம் பேசிவிட்டனர்? நினைத்த அனைத்தையும் பேசும் அளவிற்கு எப்பொழுது இருவரும் நெருங்கினர்? இருவருக்கும் உள்ளுக்குள் குறுகுறுத்தது.
Advertisement
அவன் பார்வை யசோவின் மீது விழுந்த அதே நேரம் அவளும் அவனைத் திரும்பிப் பார்த்தாள். கண்கள் நான்கும் சந்தித்த அந்த நொடி சின்ன தடுமாற்றம் இருவரிடமும். தங்களுள் எழுந்த தடுமாற்றத்தை எப்படி மூடி மறைப்பது? அதைப் புன்னகைக்குள் மறைக்க முடியும் என இருவரும் நம்பி, இதழை இழுத்துப் பிடித்து புன்னகை என்ற ஒன்றைப் பிரயத்தனப்பட்டு உதிர்த்தனர். அதில் இருவரும் திருப்தியும் கொண்டனர்.
ஆழ மூச்சிழுத்து, விட்ட நடையைத் தொடர்ந்தனர். பூங்காவைக் கடந்து அரை மணி நேரம் ஆகிவிட்டதை இருவரும் கவனிக்கும் நிலையில் இல்லை என்பதால்… கால் போன போக்கில் இருவரும் நடந்தனர். மெலிதான இருட்டும், முன் இரவு காற்றும், யாருமற்ற வீதியில் நடந்து கொண்டிருந்தவர்களோடு கை கோர்த்துக் கொண்டன. வீதியில் கொட்டிக் கிடந்த மரமல்லியின் வெண் மலர்கள் அவனை ஏதோ செய்தது. அவன் வனதேவதை அவனைப் பார்த்து மந்தகாசமாக புன்னகைத்தாள். திரும்பி யசோவை பார்த்தான்.
Advertisement
Advertisement
வீசிய காற்று அவள் மீதிருந்த மணத்தை அவன் நாசிக்குள் இறக்கியது. மரமல்லியின் வாசம் அவள் மீதிருந்தா வருகிறது? என்ற ஆராய்ச்சியில் மனம் இறங்கியது. முகத்தை மெல்லத் திருப்பி மூச்சை ஆழ இழுத்தான். நருமண மலர்களோடு, புதிதாக மொட்டவிழ்ந்த மரமல்லியின் கலவையில் பெண் மணத்தாள். மரமல்லியின் மணம் நாசி வழியே இதயத்தினுள் நுழைந்தது. அவள் வனதேவதையாக அவனுக்குக் காட்சி அளித்தாள், யசோ.
அவன் கனவு காதலி நிஜ உலகிலும் காதலி ஆனால்? அந்தக் காட்சி கண்களுக்குக் குளுமையும், தொண்டைக்குள் இனிமையையும் வாரி ஊற்றியது. அவள் மணத்தைச் சுவாசிக்க மூக்கு ஏங்கியது. மூக்கை முந்திக்கொண்டு நிலச்சரிவைக் கண்டது போல் அவன் இதயம் யசோவின் மீது சரிந்து விழுந்தது.
Advertisement
அவன் பார்வையின் கூர்மையைப் பார்த்தவள், “என்ன?” என்றாள். ஒற்றை வார்த்தைக்கு நீள நீள விரல்கள் பேசின, புருவங்கள் பேசின, கருவண்டு விழிகள் பேசின, போதாதற்கு செவ்விதழும் அல்லவா அசைந்து கொடுத்தது. அம்மாடி… இன்னும் என்னை என்னவெல்லாம் செய்யப் போகிறாய் பெண்ணே என நினைத்தவன், “பரதம் பார்க்கிற மாதிரி ஒரு ஃபீல்” என்றான் ஆழ்ந்த குரலில்.
“டைரக்டர் சார் முன்ன பின்ன பரதம் பார்த்தது இல்லையோ?” என வாயசைத்துக் கண்சிமிட்டி பற்கள் தெரிய இதழ் விரித்துப் புன்னகைத்தாள். அவள் சிரிக்க மாலையறுந்து முத்துகள் சிதறியது அவனுள்.
முதல் முறை ஒரு பெண்ணின் சிறுசிறு அசைவுகளையும் பார்க்கிறான். இமைக்காது அவளைப் பார்த்தான்… பரவசமானான். வீசிய தென்றலுக்கு அடங்காத முடி கற்றைகள் நடனமாடின. வாய்க்குள் நுழைந்த முடியை நாக்கை வைத்துத் தள்ளிவிட்டாள். குகைக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் சிகப்பு நாகத்தின் மேல் பார்வை விழுவதை அவனால் தவிர்க்க முடியவில்லை. நாகம் கக்கும் விஷம் வேண்டும் என்றது இளமை.
‘உன் நிர்வாணமும் கூட… அடி சாதாரணம் நேற்று
உன் கால் கெண்டையின் மென்மை, அது தீ மூட்டுதே இன்று
பார்வை பார்வை பார்த்தால்
என் நரம்புகள் சிலிர்க்குது’, கௌதமனுள் யசோ இசை மீட்டினாள்.
கண்ணிற்குள் புகமுயன்ற குட்டை முடிக்கு பயந்து கண்களை சுருக்கினாள், இமைகளுக்கு இடையை மாட்டி நசுங்கி போனான். அடித்த சென்ற காற்றிற்கு மாராப்பு விலக, ஒற்றை கை மார்பிற்கும் மற்றது இடையை நோக்கிப் போக அவள் கையோடு அவன் பார்வை சென்ற அந்த ஒரு நொடி அவன் ஆடித்தான் போனான்.
‘பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்…’ என ஆரம்பித்த வைரமுத்துவின் வரிகள் இரண்டு நினைவில் வந்து போகாது இருந்தால் அவன் ரசிகனே இல்லை!
அவளின் இடப்பக்கம் நடந்திருக்கக் கூடாதோ? கூடாது என மனம் கூறவில்லை. இடையின் சின்ன மடிப்பும், விரிந்த இடுப்பும் அழகு தான் என்றது கௌதமனின் கண்கள். சற்றே உயர்ந்த விழிகளைத் தாய்மை கொடுத்த அழகு நிறைத்தன. பார்த்த காட்சியில் தலை சுற்றிப் போனது நிஜம் என்றதால் கௌதமனும் ஆசை கொண்ட ஆண்மகன் என்றே எடுத்துக்கொள்ளலாம்.
நேற்று வரை தீண்டபடாத ஏதேதோ உணர்வுகள் எட்டி பார்த்து சிரித்தன. சம்பந்தமே இல்லாது அடுக்களையில் இடித்துக் கொண்டது நினைவில் வந்து வாலிபனின் இளமையைச் சோதித்தது. மென்மை தாக்கிய நெஞ்சை ஆசையாக நீவிக் கொண்டான் கௌதமன்.
சறுகு இப்படி தான் ஆடிகாற்றுக்கு நிலையில்லாது பறக்குமோ? காற்றின் கையை பிடித்து பறக்கும் சறுகாய் மாறியிருந்த கௌதமனுக்கு தோன்றியதெல்லாம், ‘சைஸ் சீரோ எல்லாம் அழகுன்னு எந்த மடையண்டா சொன்னது?’ என்றுதான்!