46.2 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:1,153
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் அத்தியாயம் 46-2
.
‘என்ன இவ்வளவு சீக்கிரம்?’ என நினைத்தாலும் அதைக் கேட்காது, “வா…ங்க” என இரும்பு கதவைத் திறந்துவிட, எந்த தயக்கமும் இல்லாது வீட்டினுள் நுழைந்தான் கௌதமன்.
Advertisement
“யசோ, தல வலிக்குது ஒரு கப் டீ போட்டு தாயேன்” என சோஃபாவில் அமர்ந்து கொண்டான். அரவிந்தன் இல்லை என்றால் கதவின் பக்கம் கூட வராதவனின் இந்தச் செயலுக்கு என்ன அர்த்தம் கற்பிப்பது?
அவன் சிவந்த விழிகளும், சோர்ந்த முகமும் அவன் களைப்பைக் காட்ட, “ஃபை மினிட்ஸ்” என்றவள், அங்கிருந்த மின்விசிறியை உயிர்ப்பித்து, குளிர்ந்த நீரைப் பருக கொடுத்தவள் அடுக்களைக்குள் நுழைந்தாள்.
Advertisement
Advertisement
தேநீரோடு வந்தவள் பார்வையில் தலை தொங்கத் தூங்கிக் கொண்டிருந்தவன் விழுந்தான். தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்ப மனமில்லாது, அவளுக்கான தேநீரைப் பருக ஆரம்பித்தாள். உதடு தேநீரை விழுங்க, விழிகள் இரண்டும் எதிரில் இருந்தவனை விழுங்கிக் கொண்டிருந்தன.
அப்பா கூறிய, குடும்பம், குழந்தை என அனைத்தும் காதுகளுக்குள் மீண்டும் ஒரு முறை ஒலித்து, ‘கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லுவன்னு நம்பறேன்’ என ஓய்ந்தது. விழிகளை இறுக மூடி திறந்தாள்.
Advertisement
இவன் என்றால்… சம்மதிப்பாயா? என மனம், காலை கேட்ட அதே கேள்வியைக் கேட்டது. இம்முறை, முடியாது எனப் பதில் வரவில்லை என்றாலும், முடியும் என்ற பதிலும் வரவில்லை. ஆனால் யாழி வேண்டும் என மனம் கூப்பாடு போட்டது. இவன் இல்லாது யாழி ஏது? இவன் எட்டா கனியாம்… பெருமூச்சொன்றை விட்டாள்.
தேநீர் பருகியவள், அடுக்களையில் சிறிது நேரம் செலவிட்டாள். காரச் சட்டினிக்கென வெங்காயம் பூண்டு எனத் தேவையானவற்றை வதக்கி ஆறவிட்டாள். குழந்தை வந்ததும் உண்ணவென கிச்சடி கிண்டி வைத்தாள். வீட்டின் பின் உலரப் போட்டிருந்த துணிகளோடு வீட்டினுள் நுழைந்தாள். பின்வாயில் இரும்பு கதவு மூடும் சத்தம் கேட்டு பட்டெனக் கண்விழித்தான் கௌதமன்.
“எ..எ..எழுப்பீட்டேனா?” என அவள் கேட்க, “தூங்கிட்டேனா?” என அவன் சிரித்தான்.
“இன்னைக்கு படுத்தி எடுத்துட்டானுங்க. சாப்பிட கூட நேரம் இல்ல. பசி, தலவலின்னு… ச்சை” என்றவன், சோம்பல் முறித்தவாரே எழுந்தான். எழுந்தவனின் அடுத்த கேள்வி, “பேபி?” என முடிந்தது. மகளை கொடுத்தால் சென்றுவிடுவேன் என நின்றிருந்தான்.
“எ..எங்க கிளம்பிட்டீங்க? யாழியும் சர்வேஷும் அப்பாவோட ப்..பிளே கிரௌண்ட் போயிருக்காங்க. நீங்க ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு உக்காருங்க” என்றவள் அவன் பதிலுக்குக் காத்திராது ஒரு துண்டை அவன் கரத்தில் கொடுத்து அடுக்களைக்குள் நுழைந்தாள்.
பின் வாசல் திறக்கும் சத்தம் கேட்டது. இவர்கள் இருவரைத் தவற யாருமற்ற வீட்டில் தனித்திருக்கிறோம் என்ற எண்ணம் இருவருக்குமே இல்லை. முகத்தைத் துடைத்துக்கொண்டே அடுக்களைக்குள் நுழைந்தவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். சூடான தோசைக் கல்லைப் பார்த்தவன், “என்ன பண்ற?” என அடுக்களை மேடையில் சாய்ந்து நின்றான்.
“எ..எனக்கும் பசிக்குது. சாப்பிடுவோமே” என்றவள், கிச்சடியைத் தட்டில் வைத்து “சாப்பிட ஆரம்பிங்க. தோசயோட வரேன்” எனத் தோசை மாவைக் கல்லில் ஊற்றி, வதக்கி வைத்திருந்ததை மிக்சியில் போட்டு அரைக்க ஆரம்பித்தாள். குளிர்சாதனப் பெட்டியில் இருந்த சாம்பாரும் அடுப்பில் சூடாகக் காத்திருக்க, கௌதமனுக்கு இருந்த பசிக்கு, கையும் வாயும் நன்றாக அதன் வேலையைச் செய்தன.
“இப்போ நீ சாப்பிடு” என்றவன் அவனுக்குத் தெரிந்த மாதிரி ஏதோ ஒரு வடிவில் தோசை ஊற்றிக் கொடுக்க, தோசையையும் அவனையும் பார்த்தவள், அங்கு நின்றவாரே உண்டு முடித்தாள்.
“நிஜமாவே எதுவும் செய்ய தெரியாதா?” கேட்ட யசோ அவனைப் பார்க்க, உதட்டைப் பிதுக்கியவன், “எங்க நாலு பேருக்கு சமைக்க வீட்டுல ரெண்டு குக், ஒரு ஹெல்ப்பர்ன்னு மூணு பேர்” எனச் சிரித்தான்.
“ஓஹ்… ராஜா வீட்டு கன்னு குட்டியா” என சிரித்தவளோடு அவனும் இணைந்தான்.
இருவருமாகப் பால் கலக்காத தேநீரை அடுக்களை மேடையில் சாய்ந்து நின்றே பருகினர். என்னவோ இவனோடு யசோவால் இயல்பாக இருக்க முடிகிறது. மகளின் விருப்பப்படி மூவரும் ஒரே வீட்டில் இருக்க முடியும் என்றது அந்த நொடி. யசோவின் எண்ண அலைகள் மீண்டும் போர்வையைக் களைந்து கொண்டு வெளிவந்தது.
‘அப்பா யாரையாவது கூட்டிட்டு வரதுக்குள்ள, இவன்ட்ட ஒரே வீட்ல இருக்கலாமான்னு கேளு’ என ஊக்கியது. அப்பா, யாழி என இருவருக்காக இவன் வாழ்வை நாசம் செய்வதா? ‘ம்கூம்… கூடாது. தப்பு தப்பா யோசிக்காத’ என எண்ணத்திற்கு கொட்டு வைத்தாள்.
யோசனையோடே கோப்பையைக் கழுவ சென்றவள், வெளியே செல்ல எத்தனித்தவன் மீது பலமாக மோதி நின்றாள். இவள் மோதியிருக்க, அவன் “சாரி” என்றான்.
ஏன் சாரியாம்? ஓஹ்… நான் இடித்ததற்கா? கண் சிமிட்டி, புன்னகைத்தவள் காபி கோப்பைகளை அலசி வைத்தாள்.
“தேங்கஸ்” என்றான் நிம்மதி மூச்சோடு.
‘எதுக்கு?’ என்பது போல் அவள் கண்களும் கைகளும் கேட்க, “வாய் பேச ஆரம்பிச்சாலும், இன்னும் உன் கண்ணும் கையும் பேசறத விடல என்ன?” எனப் புன்னகைத்தவன், அவள் கேள்விக்கான பதிலை உரைக்கவில்லை. களைத்து வீட்டினுள் பசியாக வரும் வேளை, இன்முகமாக வரவேற்று, வயிற்றுப் பசியைப் போக்கி, இப்படிக் கூடவே இருக்க ஒருத்தி கிடைத்தால் நன்றாகத் தான் இருக்கும் எனத் தோன்றியது கௌதமனுக்கு.
‘ஒருத்தி வேண்டுமா… இல்லை இவள் வேண்டுமா கௌதமா?’ அவன் மனம் கேட்டது. தாக்ஷாவோடான திருமணம் முறிப்பட்டு சில மாதங்களே ஆன நிலையில் இதென்ன? எழுந்து தலை காட்ட நினைத்த உணர்வுகளைத் தட்டி உள்ளே அனுப்பினான் கௌதமன்.
“நாமளும் பார்க் போவோமா?” என அவன் கேட்க, “ட்டூ மினிட்ஸ்” எனப் படுக்கை அறைக்குள் மறைந்தாள். ஐந்து நிமிடங்களுக்குப் பின் கதவு மூடப்பட்டது. யசோதராவும் கௌதமனுமாக தங்கள் மகளைக் காணப் பூங்காவை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.
இன்று இருவருக்கும் இடையே மகள் இல்லை. அதை இருவருமே யோசிக்கவில்லை. இளமாலை நடை நன்றாகவே இருந்தது இருவருக்கும். பேசிக்கொண்டே அவளோடு நடந்தான்.
“இங்க தான் சைக்கிள் ஓட்டுவேன்”, “இது என் கிளோஸ் ஃப்ரெண்டு பார்வதி இருந்த வீடு” என அவனோடு அவளும் பேசிக் கொண்டே நடந்தாள்.
“லாவண்யா தான் உன் கிளோஸ் ஃப்ரெண்டுன்னு நினைச்சேன்” என்றான், அன்று அவர்கள் பேசிக் கொண்டவற்றை நினைவு கொண்டவனாக.
“லாவண்யாவும் பார்வதியும் நானும் ஒரு செட். லாவ் பெரியவ” என ஆரம்பித்தவளுக்கு என்ன தோன்றியதோ, “நீ..நீங்க ரொம்ப பணக்காரங்களா?” எனக் கேட்டாள்.
அவளின் இடப்பக்கமாக நடந்து கொண்டிருந்தவன் அவளைத் திரும்பிப் பார்த்தான். இதழோடு கண்களும் சிரித்தன.
“ம்ம்ம்” என்றவனுக்கு அவள் என்ன கேட்கப் போகிறாள் என்ற ஆர்வம் எட்டிப் பார்த்தது.
லாவண்யாவின் இன்றைய நிலையைப் பற்றியும் அதற்கு வித்தாக இருந்த அவளின் இளமைக் காலத்து ஒரு நாள் காதலைப் பற்றியும் மேலோட்டமாக கூறினாள்.
“ஹலோ… அது பேரு காதல் இல்ல மா. ஒரு ஆர்வம் அவ்வளவு தான். டீன் ஏஜ் ஹார்மோன் செஞ்ச சேட்டையில கட்டி பிடிச்சா… அதுக்கு இப்படியா அவங்க வீட்டுல ரியாக்ட் பண்ணுவாங்க? இடியட்ஸ்! அந்த பாஸ்கரோட பேரன்ஸ் எவ்வளவு பக்குவமா டீல் பண்ணினாங்க. தப்பு சரி எதுன்னு எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கிறத விட்டுட்டு உன் ஃப்ரெண்ட அவங்க அம்மா இப்பிடி பண்ணி இருக்க வேண்டாம்.” என இவன் பேசிக் கொண்டே போக… இதே போன்ற வரிகளை ரகுவின் வாயிலாகக் கேட்டவளுக்கு இதயம் துள்ளி வாய் வழியே குதித்துவிடும் போல் இருந்தது.
“ஹலோ… ஹலோ யசோ மேடம்” என மெல்ல அவள் தோளை அவன் உலுக்க, “ஆங்?” என அவனைப் பார்த்தாள்.
“அப்பப்போ கனவு காண போயிடுற. சரி சொல்லு… இப்போ எதுக்கு உன் ஃப்ரெண்டு கதைய ஆரம்பிச்ச?”
“ம்ம்ம்… அவங்க வருமானத்துல அவள ஆயிசுக்கும் பார்த்துக்க முடியாதுன்னு உண்மை நிலைய சொல்றாங்க. அவ ஒழுங்கா படிப்பை முடிக்கதுக்கு முன்னாலயே கல்யாணம் ஆகிடுச்சு. அவளுக்கு நல்லதா ஒரு வேலை கிடைக்கிறது கஷ்டம். நம்ம யாழியோட பிளே ஸ்கூல்ல கூட வேலைக்கு கேட்டா, ஆனா கிடைக்கல. நீங்க வசதியானவங்கன்னா… உங்களுக்கு நாலு பேர தெரிஞ்கிருக்கலாம். அதுதான்… உங்களால ஏதாவது நம்பகமான இடத்தில வேல வாங்கி தர முடியுமா? ஒரு வீட பார்த்து அவ தனியா இருந்துப்பா” ஏதாவது செய்துவிட மாட்டானா என்றவளின் எதிர்பார்ப்பைப் புரிந்தவனாக, “ரெண்டு நாள் டைம் கொடு. நல்ல பதிலா தரேன்” என்று அவள் தலையில் பனி மழை பொழிந்தான்.
நடைபாதை கடையில் பல வண்ண வளையல்களைப் பார்த்தவள், “போன்… பர்ஸ்ன்னு ஒண்ணும் எடுத்துட்டு வரல. காசிருக்கா?” எனக் கேட்டு, மகளுக்குச் சிகப்பும் கருப்பும் கலந்த நூல் வளைகளை வாங்கிக் கொண்டாள்.
மகளைப் பற்றி அனைத்தும் அறிந்த தகப்பனிடம், “பேபிக்கு ரெட் கலர் ரொம்ப பிடிக்கும்” என யசோ கூற, “ஓஹ்…” எனக் கேட்டுக் கொண்டான்.
“இப்போ சர்வேஷ் தான் யாழியோட பெஸ்ட் ஃபிரெண்ட் தெரியுமா?” என மகளின் சேட்டைகளைத் தகப்பனிடம் பெருமை பொங்கக் கதை வாசித்தாள்.
“ஓ..ஹோ…” என்றவன் முகத்தில் புன்னகை வாடவில்லை.
“ஆமா… உங்களுக்கு சைல்ட்ஹுட் பெஸ்ட் ஃப்ரெண்ட் யாராவது இன்னும் கான்டாக்ட்ல இருக்காங்களா?”
“விக்ரம். துண்டு சிகரெட்ல இருந்து திருட்டுத்தனமா பார்த்த பிட்டு படம் வரைக்கும் என் வாழ்க்கைல நடந்த எல்லாமே அவனுக்குத் தெரியும்” என இவன் சிரிக்க, அவள் முறைத்தாள்.
“என்ன?” என்றவனுக்கு அப்படி ஒரு சிரிப்பு. “அது ஒரு வயசு… எல்லாத்தையும் தெரிஞ்சுக்க ஓர் ஆர்வம் இருந்த வயசு.”
“அந்த ஆர்வம் தான் தாக்ஷாவா?” கேட்டபின், கேட்டிருக்கக் கூடாதோ என அவனைப் பார்த்தாள். அவனுக்கு அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை போலும்…
“தாக்ஷா… தாக்ஷாயினி…” என நீள மூச்சை இழுத்து விட்டவன், “என் எக்ஸ்” என்றான். “காலேஜ் டேஸ்ல ஒண்ணா சுத்தினோம். கூடவே ஒரு அழகி இருந்தா அதோட மதிப்பே தனின்னு ஒரு மாய உலகம் அது. காலேஜ் முடிஞ்சுது. எங்க உறவும்! அப்பறம் யாழிக்கு எட்டு மாசம் இருக்கும் போது, திரும்பவும் என் வாழ்க்கையில நுழைஞ்சா.”
“அப்போ… உங்க யசோதரா?”
“என்ன?”
“பேபியோட அம்மா?”
யசோவிடம் எதையும் மறைக்கும் எண்ணமில்லாது, “அவ யாருன்னே எனக்குத் தெரியாது.” என்றான். ‘என்னது?’ என நினைத்தவளுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. அதெப்படி யாரென்றே தெரியாத பெண்ணோடு ஒரு குழந்தையைப் பெற்றான்?
“ப்புரிய..ல. அப்படினா?”
“அந்த யசோதராவ நான் பார்த்தது இல்ல. அவ நல்லவளா கெட்டவளா? கருப்பா செவப்பா… எதுவும் தெரியாது. இதுக்கு மேல வேண்டாமே…” என நிறுத்தினான். திருமணப் பேச்சு எழுந்ததால் மட்டுமே தாக்ஷாவிடம் பகிர்ந்ததை ஏன் இவளிடம் கூறினான் என அவனுக்குத் தான் வெளிச்சம்.
அதன்பின் அவன் பேச்சை நிறுத்திவிட, “தாக்ஷா நுழைஞ்சான்னா… என்னவா? லவ்வா? ஃப்ரெண்டா” என விட்ட இடத்திலிருந்து இருந்து எடுத்துக் கொடுத்தாள் யசோ.
“ம்ம்ம்… அவ என்னை விரும்பினா. எனக்கும் அவள பிடிச்சுது. பேபிக்கும் பிடிச்சுது. ஆனா தாக்ஷவ, அம்மாவா என் பொண்ணால பாக்க முடியல. தாக்ஷாவால, பேபிய மகளா பார்க்க முடியல. எப்படியோ… நிச்சயம் வரைக்கும் போச்சு. மோதிரம் மாத்தி ஒரு மூணு மணி நேரம் அது என் கையில இருந்திருக்கும்ன்னு நினைக்கிறேன். அவ்வளவு தான். எல்லாம் முடிஞ்சு போச்சு. ஒரு மாசம் ஒரு மாதிரி இருந்துது. வலியா ஏமாற்றமான்னு தெரியல. ஆனா அவ இல்லாம என்னால எப்பவும் போல வாழ முடியுது. அது என்ன விதமான காதல்ன்னு இன்னுமே புரியல. அவனவன் காதலுக்காக உயிரயே விடுறான். எனக்கு அப்படி எல்லாம் ஏன் தோணலன்னு தெரியல.”
“பிரிஞ்சுட்டீங்களா? சாரி.”
“என் பேபிக்கு அம்மா கிடையாது. என் யாழி பேபிக்கு அம்மா அப்பான்னு எல்லாமே நான் தான். கல்யாணத்துக்கு அப்பறமும் அதுதான்னா… அது எப்படி? கடைசியா, தாக்ஷாவா… பேபியான்னு வந்து நின்னுது. தாக்ஷாவோட சேர்ந்து வாழ்ந்தா நல்லா இருக்கும்ன்னு தெரியும். அவ இல்லாம வாழ முடியுமான்னு யோசிச்சேன்.
என் பேபி இல்லாம ஒரு வாழ்க்கைய யோசிக்க கூட பிடிக்கல. கேள்விக்குப் பதில் வேண்டி நின்னவட்ட, ‘பேபி’ன்னு சொல்லிட்டேன்.” என்றவன் பார்வை எதையோ வெறித்தது.
‘ஆக… அந்த பார்பி டால் இவன் வாழ்வில் இல்லாமல் போன கதை இதுதானா? அவ என் யாழி குட்டிக்கு அம்மாவா இருக்க பொருத்தம் இல்லன்னு சொன்னேன் இல்ல…’ என மனதைப் பாராட்டிக் கொண்டாள். கௌதமன், யாழியின் பெற்ற தகப்பன் இல்லை என அவன் கூறாதே அறிந்து கொண்டாள் யசோ.
என்னவிதமான நேசம் இது? பெறாத மகளுக்காக, அவன் உலகத்தை விட்டு எப்படி வர முடிந்தது? இந்த அன்புக்கு மேலான ஓர் அன்பை அவளால் பார்க்கத்தான் முடியுமா? இப்படி ஒருவனை வேண்டாம் என அந்தப் பெண்ணால் எப்படிக் கூற முடிந்தது? பெருமூச்சு வந்து போனது.
“ஏனோ… அப்பா இருந்தும் அப்பா இல்லாம என் குழந்தை வளர கூடாதுன்னு ஒரு ஆழமான எண்ணம். முதல் தரம் என் குழந்தைய என் கையில் எடுக்கும் போதே அவ எனக்குள்ள ஆழமா இறங்கிட்டா. தாக்ஷா என்ன… என் பெண்ணுக்குப் போட்டியா வந்த என் அம்மாவும் ரெண்டாம் இடத்துக்கு போயிட்டாங்க.” என்றவன் முகத்தில் அழகான புன்னகை குடி கொண்டது.
அவன் பேச பேச, யசோவினுள் ஒரு சின்ன உருவம் வந்து போனது. அப்பா இருந்தும் அப்பா இல்லாது போனால் எப்படி இருக்கும் என அந்தச் சின்ன உருவத்தின் ஈர விழிகள் கதை கூறின. கௌதமன் உயர்ந்து நின்றான் யசோவின் பார்வையில்.
இருவரின் பேச்சு, என்றும் போல் இன்றும் எல்லா இடங்களையும் தொட்டுத் தழுவிச் சென்றது. அது இருவருக்குமே பிடிக்கவும் செய்தது.
“இ..இன்னைக்கு ரொம்ப வேலையா?”
“கொஞ்சம் டைட். டிராவல் தான் கடியா இருக்கு. ஆனா… வொர்த் இட். இன்னைக்கு சீன் நல்லா வந்துது. ஒரு அழகான பொண்ணுக்கு ஒரு வாட்டசாட்டமான எலிஜிபில் பேச்சலரோட ஒரு சில வார கப்பல் பயணம். பயணம் முடியறதுக்குள்ள, காதல்ன்னா அப்படி ஒரு காதல் அவங்களுக்குள்ள.
ரெண்டு பேரும் அடுத்த கட்டத்துக்குக் காதல கொண்டு போகணும். இப்போ குடும்பம் எல்லாம் கண்ணுக்கு தெரியுது. அப்போ தான் அவனுக்கு… அதாவது படைத் தலைவனுக்கு தெரியவருது அவ, அவங்க நாட்ட உளவு பாக்க வந்த பக்கத்து நாட்டு அழகின்னு. வெறும் அழகி இல்ல… இளவரசி. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசை படலாமா? அவன் எங்க… அவ எங்க?
இப்போ அவங்க ரெண்டு பேரும் என்ன பண்ணுவாங்க? சேர முடியாத காதல் கதை. ரெண்டு பேரும் நாட்டுக்காக பிரியறதா… இல்லை யாரும் வேண்டாம் போங்கடான்னு எங்கையாது ஓடி போறதா… இல்லை சேர்ந்தே செத்து போறதாங்கற ஃபிலிம் ஷூட் இன்னைக்கு.
பிடிச்சும்… பிரியணுமேன்னு ஒரு வலி. ரெண்டு பேரும் என்ன அழகா அந்த உணர்வ முகத்துல காட்டினாங்க தெரியுமா? பார்க்கும் போது அவ்வளவு பொறாமையா இருந்துது. அப்படியான ஒரு காதல என் பிரெண்ட்ஸ் கிட்ட கூட நான் பார்த்தது இல்ல.”
‘என் ரகு… என் காதல்… நான் அனுபவித்த மெய்காதல்…’ நா வரை வந்ததை, உள்ளுக்குள் போட்டுப் புதைத்தாள்.
“உன் அப்பாவ முன்னமே பார்த்திருக்கேன் யசோ. மகாபலிபுரத்துல. அவர் காதலும் அப்படித் தான் இல்ல? ஒரு தரமாவது காதலிச்சிடனும் யசோ. சேர முடியாம போனாலும்… சேர்ந்து இருக்கக் கொஞ்சக் காலம், அந்தக் காதல் தரச் சுகத்தையும், வலியை ஒரு தரமாவது உணரணும்ன்னு புது ஆசை.” என அவன் புன்னகைக்க,
அவளால் பதிலுக்குப் புன்னகைக்க முடியவில்லை. வலி வேண்டுமாமே. அந்த வலியிலிருந்து விடுபடத் தெரியாது அவள் பட்ட மற்றும் படும் வேதனைகளும், அவலங்களும் சொல்லி மாளுமா?
“என்ன பார்வ இது? காதல்ன்னா என்னன்னு தெரியுமா?” என அவனை வினோதப் பார்வை பார்த்தவளிடம் கேட்டான்.
‘காதல் என்றால்?’ என்ற கேள்விக்கு, ‘என் லகு’ என இதயம் எடுத்துக் கொடுத்தது. முகம் புன்னகையைப் பூசிக் கொண்டது. இப்பொழுது கௌதமனை பார்த்தவளின் பார்வையில் மாற்றம் இருந்தது. ‘நீயும் காதலி கௌதமா’ என்றதே அந்தப் பார்வையின் பொருளாக இருக்க, அது அவனுக்குப் புரிய வேண்டாமா?
காலம் அவனுக்கு நன்கு பாடம் எடுத்திருக்க, அவன் புரிந்த காதலை… அவளுக்குப் புரியாத புதிராக இருக்கும் காதலை, விளக்க முற்பட்டான்.
“காதல்ல அன்பு அடக்கம். நட்புல அன்பு அடக்கம். நேசத்தில அன்பு அடக்கம். ஆனா… அன்பு மட்டுமே காதல் ஆகாது. காதல்ல மட்டுமே ரெண்டு உயிரோட ஆன்மா புதைந்திருக்கும். காதல்ல ஈர்ப்பும், காமமும் அடங்கியிருக்கு. இது எல்லாத்துக்கும் மேல… காதலோட அங்கமா ரெஸ்பான்சிபிலிட்டியும் கமிட்மென்ட்டும் இருக்கு யசோ. உன் பொறுப்ப என்னுதா நான் ஏத்துக்க முடியாட்டா… உன்னோட ஏற்ற இறக்கதுல நான் உன் கூடவே இருக்கத் தயாரா இல்லன்னா… அது காதலே இல்ல.” என முடித்தான்.
அவன் முடித்தது தெரியாது, “அப்போ, தாக்ஷா தன்னோட இழப்போட மதிப்ப தெரிஞ்சு, முழு காதலோட திரும்பவும் வந்தா, உங்க புது ஆசை நிறைவேறும் தான?” எனக் கேட்டாள்.
அவன் அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். அதற்கு என்ன அர்த்தம்?
“ம்ம்ம்?” எனக் கண்களால் கேள்வி கேட்டாள்.
அதற்கும் புன்னகையே பதிலாக வந்தது. ‘நான் என்ன அவ்வளவு சீப்பா போயிட்டேனா?’ என அவன் ஈகோ புன்னகைக்க, ‘அவ வந்தா போதும்ன்னு நினைக்கிறான் போல’ என அவள் அர்த்தம் கற்பித்துக் கொண்டாள்.