Skip to content
Post Views: 4,808
உடைந்த மனங்கள் ஒட்டாதா?…
அத்தியாயம் 4
பரமு ஊருக்கு வந்ததும் முதலில் பார்த்தது வெண்பா தான்.
“என்ன சொல்ற அத்தை உங்க பொண்ணு?”
Advertisement
“என்னத்த சொல்றது வெண்பா. இந்த பிள்ளை பிடி கொடுக்கவே மாட்டாது வெண்பா. ரொம்ப வீம்பா, பிடிவாதமா இருக்கா” என்றதும்,
“வேற என்ன பண்றது அத்தை. என் தம்பி எவ்வளவு நாளைக்கு அவ பின்னாடியே திரிய முடியும். எல்லா பொண்ணுங்களும் சரியான ஆம்பிளைக கூட தான் குடும்பம் நடத்துறோமா? நான் பார்க்காத கஷ்டமா? கண் பார்க்க என் புருசன் எல்லாம் வேற பொண்ணு கூட ஜோடி சேர்ந்து சுத்துனாங்க. அப்படிப்பட்ட மோசமான ஆளையும் சரி கட்டி நான் வாழலையா? என் தம்பிக்கு இவ்வளவு வசதி இருந்தும் மீனாவ தவிர வேற யாரவது ஏறெடுத்து பார்த்திருக்கானா?”
உண்மை தான். இப்போ மட்டுமல்ல இருவரும் சேர்ந்து வாழ்ந்த காலத்திலும் கஷ்ட நஷ்டத்திலும் மீனாவை தவிர வேறு யாரையும் அவன் ஏறெடுத்து கூட பார்த்ததில்லை. அதில் எல்லாம் நல்லவன் தான். ஆனால், ஒரு பொண்ணு நிறைவாக வாழ, அது மட்டும் போதாதே… மீனா மீது அவனுக்கு அளவற்ற காதல் உண்டு. அந்தக் காதல் கல்யாணத்தில் முடிந்தது. ஆனால், கல்யாண வாழ்க்கைக்கு காதல் மட்டும் போதாதே.. அங்கு தொடங்கிய சிக்கல்தானே மூன்று பிள்ளைகளோடு தனித்தனியாக நிற்கிறார்கள். அதை எல்லாம் வெண்பாவிடம் சொல்ல முடியாது. அவளைப் பொறுத்தவரை திருமணமான பெண்களுக்கு ஆண் துணை மிக அவசியம். ஒரு பெண் நினைத்தால் எப்படிப்பட்ட கணவனையும் சரிகட்டி வாழ்ந்து விடலாம் என்பதுதான் அவள் கணிப்பு.
Advertisement
“அவ அண்ணங்களை கூட்டிட்டு போய் பேசுறேன் வெண்பா. எல்லாரும் சொல்லும் போது அவளும் புரிஞ்சுப்பா” என்றார் பரமு.
Advertisement
“நீங்க சரி கட்டிட்டே இருங்க அத்தை. ஒரு ஆம்பள எவ்வளவு நாளைக்கு அமைதியா போவியான். ரெண்டு வருசம் ஆக போகுது. கொஞ்சம் கூட இளக மாட்டேங்குறா உங்க மக… பிள்ளைகளை கூட அப்பன் கிட்ட அண்ட விடலையாம். அவ்வளவு வீம்பா? தமிழுக்கு தெரியாது இது நம்ம அப்பான்னு.. அப்படி இருந்தும் நிமிர்ந்து கூட பார்க்காதுகலாம். சின்ன பிள்ளைகளை கூட அப்படி உங்க மக மிரட்டி வச்சு இருக்கா?…” கோபமாக ஆரம்பித்தவள்,
“என்னவோ போங்க அத்தை. பொண்டாட்டி இல்லாம வாழுற வயசு கிடையாது அவனுக்கு… வேற ஒருத்தி வந்தா உங்க பொண்ணு வாழ்க்கை என்ன ஆகும். உங்க பேரன், பேத்திகளுக்கு இடம் இருக்குமா? நான் சொல்றதை சொல்லிட்டேன். பெத்த மக, உங்களுக்கு இல்லாத அக்கறையா?” என்றவாறு நகர்ந்தாள் வெண்பா.
பரமுக்கு கண் எல்லாம் கலங்கி போனது. வெண்பா சொல்வது நியாயமாக பட்டது. இவளின் பிடிவாதம் தன் பேரன், பேத்தி வாழ்க்கையை கேள்வி குறியாக்குமோ?… சோர்வாக வீடு வர,
Advertisement
“என்னம்மா முகம் ஒரு மாதிரி இருக்கு” என்றான் அர்ச்சுனன்.
“எல்லாம் உனக்கு அப்புறம் பொறந்தவளை நினைச்சு தான்” என்று வெண்பா கூறிய அனைத்தையும் சொன்னார்..
“அவங்க சொல்றதும் சரிதானா அத்தை. எந்த வீட்டுல தான் புருசன், பொண்டாட்டி சண்டை இல்லை. சண்டையே போடாம சாகுற புருசன் பொண்டாட்டி யாராவது இருக்காங்களா?.. தப்புதான். தப்பு பண்ணிட்டேன் திரும்பி வாழ நினைக்கிறேன் என்று சொல்ற புருசனை ஒதுக்கி வைக்கிறது உங்க மகளாக தான் இருப்பா? கடைசி வரை திருந்தாமே போய் இருந்தா உங்க மகள் என்ன பண்ணி இருப்பா? உங்க வளர்ப்பு சரியில்லை” என்று மருமகள் குற்றம் சாட்ட,
எதுவும் பேச முடியாமல் மகனை பார்த்தார் பரமு. அர்ச்சுனன் அமைதியாக தான் இருந்தான். காலம் எவ்வளவு வேகமாக மாறி விட்டது.
“ஆம்பள திமிரு.. எல்லா நேரமும் அடங்கியே போக மாட்டாங்க. துணிஞ்சு நின்னா, பாதிக்க பட போறது உங்க மக தான். எதுக்கு உடனே வந்தீங்க, கூடவே இருந்து புத்தி சொல்லுங்க” வெண்பா போலவே மருமகள் பேச, அதை மகனும் ஆதரித்தான்.
மிக பயமாகி போனது பரமுக்கு.. எல்லோரும் சொல்வது போல மருமகன் மனம் மாறி போவானோ என்று இருந்தது. உடன் பிறந்த அண்ணன்களை தள்ளி நிற்க, மீனா ஆதரவற்றுப் போவாளோ என்று பரிதவித்தார் தாய். மறுநாளே மீண்டும் மீனா வீட்டிற்க்கு சென்று விட்டார். எப்படியாவது மருமகன் உடன் மகளை சேர்த்து வைத்து விடுவது என்று…
ஊருக்கு சென்ற ஒரு நாளிலே தாய் திரும்ப வந்ததும், யோசனையாக பார்த்தாள் மீனா. ஆனால், எதையும் வெளிக்காட்டாமல் எப்பவும் போல இருக்க, மகள் அமைதி தாயை கொதிக்க வைத்தது. இங்கு அவள் வாழ்க்கையே திசை மாறி போகும் போல இருக்க, எதுவும் நடக்காதது போல மகள் நடத்தை கோபத்தை கிளப்பியது.
“அம்மா, வடைக்கு மாவு திப்பி திப்பியா இருக்கு.. ஒழுங்கா ஆட்டி வை” என்றாள் மீனா.
“ஆமா, அது ஒன்னு தான் குறைச்சல். வாழ்க்கையை ஒழுங்கா வாழ தெரியல, மாவு ஒழுங்கா ஆட்டி வைக்கணுமாம்” முகத்தை தூக்கி வைத்திருந்தார்.
“என்ன ஆச்சு உனக்கு?”
“எனக்கொன்னும் இல்லை. உனக்கு தான் புத்தி மாறி போச்சு” தாயின் பேச்சு திசை மாறவும், வாய் மூடி கொண்டாள் மீனா.
அடுத்து வந்த இரண்டு நாட்களும் பரமு என்னவாது பேசி கொண்டே இருந்தார். மீனா பொறுமை பறந்தது. அன்றும் அப்படித்தான் மீனா ஏதோ வேலையாக இருந்தாள்.
“தமிழ், அம்மா போன் அடிக்குது எடு..” என்று சத்தம் கொடுக்க,
போம்மா, நான் டீவி பாக்குறேன். நீயே எடு” என்றாள் மகள்.
“நான் மாவு கலக்கி வைக்கிறேன். போன் அடிக்குது பாரு, ஏதாவது அவசரமா இருக்க போகுது”
தம்பியை எடுக்க சொல்லு, நான் எழுந்து எடுக்க மாட்டேன்” என்றவள் டீவியில் தலையை கொடுத்து அமர்ந்து இருந்தாள்.
இரண்டு முறை போன் அடித்து ஓய்ந்தது. மீனாவே கைகளை சுத்தம் செய்து வந்து போன் எடுத்தாள்.
“என்னடி, வாய் உனக்கு.. அம்மா சொன்னா ஒரு வேலை செய்ய மாட்டியா? தம்பி உன்னை விட சின்ன பையன். நான் அவ்வளவு தூரம் கத்துறேன், காதுல வாங்குறீயா” என்று மேலும் மீனா மகளை சத்தம் போட, தமிழ் அதை காதிலே வாங்க வில்லை. டீவியை விட்டு கண் அகற்றவும் இல்லை.
மீனாக்கு வந்ததே ஒரு கோபம். “தமிழ்” என்று பெரிதாக அதட்டல் போட,
“என்னம்மா?” என்றாள் எரிச்சல் குரலில்..
மீனா அப்படியெல்லாம் பிள்ளைகளுக்கு டிவி பார்க்க அனுமதிக்க மாட்டாள். பள்ளி, டியூஷன், சிலம்பம் கிளாஸ், கராத்தே என்று ஏதாவது ஒன்று பிள்ளைகளுக்கு தொடர்ந்து இருக்கும். சிறிது நேரம் தான் அவர்களுக்கு டிவி பார்ப்பது.. அதனால் அந்த நேரத்தை தமிழ் விட்டுக் கொடுப்பதே இல்லை. மீனாக்கு தன் மகளைப் பார்க்கையில் முன்பொரு காலத்தில் தன்னை பார்ப்பது போலவே இருந்தது. அப்படியே அவளின் குரலில் இருக்கும் அலட்சியம், தெனாவட்டு எல்லாம் மீனாவுக்கு உரியது.
மீனா இவ்வளவு பேசும்போதும் தமிழின் பார்வை டிவியிலிருந்து வெளியேறவில்லை. பட்டென்று அவள் தொடையை பிடித்து கிள்ளி வைத்தாள் மீனா. நல்ல வலி போல பிள்ளைக்கு.. சத்தமாக கத்தியது.
“என்ன ஆச்சு?” ஓடி வந்தார் பரமேஸ்வரி.
தமிழ் அப்படியொரு அழுகை, பயந்து போய் தாயை பார்த்தாள்.
“அப்படி என்ன உனக்கு திமிரு.. எத்தனை முறை கூப்பிடுறேன். நான் யார் உனக்கு? அம்மான்னு பயம் இருக்கா.. சொல்றதை கேட்க மாட்டியா?” என்று கையை பிடித்து இழுக்க,
“அடியே மீனா, எதுக்கு பிள்ளை மேல கை வைக்கிற”
பரமு பேரப்பிள்ளைகளுக்கு அதிக செல்லம் கொடுப்பார்.
“அம்மா நீ இதுல தலையிடாத, விடு.. இவ வயசுக்கு பெத்தவ சொல்றத கேட்க மாட்டேன்றா? ரெண்டு அடி போட்டா தான் ஒழுங்கு வரும். இவளை பார்த்து தான் அடுத்து இருக்க ரெண்டு வளரும்”
“மீனா விடு, ஏதோ சின்ன பிள்ளை டிவி பாக்குற ஆர்வத்துல, உன்னை கவனிக்கல போல.. அதுக்காக எல்லாம் என் பேத்தி மேல கை வைக்காதே”
“அம்மா ப்ளீஸ்.. நான் அவளை அரட்டுனா, அடி போட்டா, நீங்க வராதீங்க. அப்பத்தான் அம்மான்னு என் மேல ஒரு பயம் இருக்கும். சொல்ற பேச்சைக் கேட்காட்டி என்ன பிள்ளை. அம்மா என்ன சொல்றாங்கன்னு எப்பவாவது காதுல வாங்கி இருக்காளா? இப்பவே ரொம்ப வாய், சேட்டை” என்று மீனா சொல்லி கொண்டிருக்கும் போதே,
“நீ மட்டும் உன்னை பெத்தவங்க சொல்ற பேச்செல்லாம் கேட்டு நடந்துட்ட.. உன் பிள்ளைக்கு புத்தி சொல்றயோ? அவை வேணாம்னு எத்தன தடவ தலையில அடிச்சோம். கொஞ்சமாவது காது கொடுத்து கேட்டியா? நீ ரெண்டு பங்கு, உன் புருசன் நாலு பங்கு. உங்களுக்கு பிறந்த பிள்ளை எப்படி இருக்கும்” குத்தலாக கேட்டார் பரமு..
“தப்புதான்ம்மா. பெத்தவங்க உங்க பேச்செல்லாம் கேட்காம போனதுக்கு தான் இப்ப வாழாவெட்டியா நிக்கிறேனே.. அனுபவ பாடம் ரொம்ப பெருசு. அதான் எம் பிள்ளைகளை அதட்டி வைக்கிறேன்”
“அன்னைக்கு தான் எங்க பேச்ச கேக்கல, இன்னைக்காவது பெத்த அம்மா என்ன சொல்றான்னு கேக்குறியா? இப்பவும் உன் திமிருக்கு தான் இருக்க? இவ்வளவு வயசாகியும் நீயே உங்க அம்மா பேச்ச கேக்க மாட்டேன்ற. அந்த சின்ன பிள்ளை அதுக்கு என்ன விவரம் தெரியும். நீ பெரிய பெரிய தப்பு பண்ணிட்டு, குழந்தையை மிரட்டிட்டு இருக்க. அடக்கி வைக்க ஆள் இல்லை. என் பேச்சு அம்பலம் ஏறாது”
மீனாவுக்கு அசிங்கமாக இருந்தது. தன் திருமண வாழ்க்கை தான் பெற்ற மகள் முன்னாள் ஆலசப்படுவது.. இந்த மாதிரி பேச்சுக்கள், அவளுக்கு விருப்பமே இல்லை.
“தப்பு தான் ம்மா. நான் என் வாழ்க்கையில செஞ்ச பெரிய தப்பு பெத்தவங்க பேச்சை கேட்காம போனது தான். அதுவே எத்தனை வருஷத்துக்கு சொல்லி காட்டுவீங்க. ஒவ்வொரு நாளும் நினைச்சு நினைச்சு செத்துட்டு இருக்கேன். எனக்கு எதுக்கு இந்த விரக்தியான வாழ்க்கை. எதுக்கு இவ்வளவு கோபம், வீம்பு, வைராக்கியம்?”
“உங்களுக்கு நல்ல மகளா இல்லை. உண்மை தான்.. ஆனா, அந்த ஆளுக்கு நல்ல மனைவியா தான இருந்தேன். எனக்கு எதுக்கு இவ்வளவு வலி. அவரோட வாழ்ந்து என்ன சுகத்தை கண்டேன். கல்யாணம் ஆகி ஆறு வருஷம் தான் ஆச்சு. வரிசையா மூணு பிள்ளை விட்டுட்டு ஓடிப்போயிட்டான். நான் அந்த ஆளை விட்டுட்டு நிக்கலையே? சாப்பாட்டுக்கே வழியில்லாத போதும் பிள்ளைகளை இழுத்துட்டு அவன் பின்னாடி தான ஓடினேன். நமக்கு பொண்டாட்டி பிள்ளை இருக்குன்னு கொஞ்சமாவது நெனச்சு பார்த்தானா? இன்னைக்கு நாலு காசு இருக்கு.. அதனால நான் செல்லா காசா போனேன்”
error: Content is protected !!