Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Manathodu Manvaasam

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 7.1

மண்வாசம் : 7

 

சந்திர…ரே சூரிய…ரே

சாமி பகவா…னேஏஏ



Advertisement

சந்திரரே நான் நினைச்சி

சாய்ச்சேன் திரு அலவு

சாய்ச்ச திரு அலவு

Advertisement

சமச்சி பறி ஏறனும்

Advertisement

எடுத்த திரு அலவு

எழுந்து பறி ஏற…னும்ம்ம்ம்

 

Advertisement

கண்டாங்கி சேலைகட்டி தலைமுடியை தூக்கிக் கொண்டையிட்டு சேற்று வயலேறி நாற்று நடும் பெண்களின் நடுவே வெண்நாரையும் வந்து வீற்றிருக்க, கடவுளை வாழ்த்திப் பாடிய பெண், நன்னேரம் பார்த்து, முதலில் நிலத்தின் சனி மூலையில் நாற்று நடவு செய்ய ஆரம்பித்தார்.

 

அவர் ஒவ்வொரு அலகாக நட, நட்ட பயிர் நிமிர்ந்து வளர்ந்து நல்விளைச்சல் பெருக வேண்டுமென வேண்டி மற்ற பெண்களும் பாடலைப் பாடியபடி நாற்று நடவு செய்தனர். 

 

எங்கெங்கு காணினும் பசும் காணிகளே!

 

ஒருபுறமோ வயல்வெளி! மறுபுறமோ தென்னங்தோப்புகள்! அதற்கு நடுவே அமைந்த சாலையில் மாட்டு வண்டிகள் ஒன்றின் பின் ஒன்றாக சென்றுகொண்டிருந்தன.

 

சொர்க்கம்!

 

அப்படித்தான் தோன்றியது அரசிக்கும்.

 

நாற்றுக் கட்டை தலையில் சுமந்தபடி வரப்பில் வரிசையாய் செல்லும் பெண்களைக் காண்கையில், தானும் தனது பள்ளிப்பருவத்தில் சக தோழியரோடு இணைந்து அதுபோல் சென்றதெல்லாம் அரசியின் நினைவில் வந்து போனது.

 

வரப்புகளுக்கு இடையில் ஓடும் சிறு வாய்க்கால், அதன் குளிர் மணலில் கால் பதித்து நடந்து போகும் சுகமே சுகம் தான். ஐந்து ஆண்டுகள் இந்த சொர்க்கத்தை விட்டுவிட்டு அங்கு எப்படித்தான் நாட்களை கடத்தினோம் என்று இருந்தது. தாயகம் திரும்பிய பறவையென தன் சொந்த பூமியில் சுதந்திரமாய் சுற்றிக் கொண்டிருந்தாள் அரசி.

 

“வேகாத வெயில்ல என்னையப் போட்டு வாட்டி எடுக்குறாளுகளே” என நாயகியின் புலம்பலில் அவர் புறம் திரும்பிய அரும்பு,

 

“உங்களை ஆரு ஆத்தா வரச்சொன்னது? நானும் அரசியும் மட்டும் கிளம்புறோம், நீங்க வீட்டுலயே இருங்கன்னு தானே சொன்னோம். நீங்களா வந்துட்டு நாங்க ஏதோ உங்க கையையும் காலையும் கட்டி தூக்கியாந்தமாறி இல்ல பேசுறீங்க” என,

 

‘வேலாத்தா பேத்தியா சும்மாவா! என்னமாஆ வாயடிக்குறா பாரு’ எனப் பார்த்திருந்தார் நாயகி.

 

அப்படியே சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்தபடி வயலைத் தாண்டி மறுபுறம் இருந்த தோப்புக்குள் நடைபோட்டனர்.

 

வாய்க்கால் வரப்பு சாமி

வயக் காட்டுப் பொன்னு சாமி

களை எடுக்கும் பெண்களுக்கு

காவலுக்கு வந்த சாமி

மலையோரம் கிணறு வெட்டி  

மயிலக் காளை ரெண்டு பூட்டி

அத்தை மவன் ஓட்டுந்தண்ணி

அத்தனையும் சக்கரையே!

 

அலுப்பு தெரியாதிருக்க பாடல்களைப் பாடியபடி களை பறித்துக் கொண்டிருந்த பெண்கள் நாயகியைக் கண்டதும்,

 

“என்னங் பெரியாத்தா இவ்வளவு தூரம்?” என்று விசாரிக்க,

 

“என்ர சின்ன பேத்தி வந்திருக்கா. நம்ம தோட்டமெல்லாம் பாக்கோணுமுன்னு சொன்னா, அதான் கூட்டியாந்தேன்” என்று ஒவ்வொருவருக்காய் பதிலளிக்கவே அவருக்கு போதும் போதுமென இருந்தது.

 

“இதேன் வெளிநாட்டுக்கு படிக்க போன சின்ன அம்மணி” என்று ஆளாளுக்கு அரசியை கைகாண்பித்து பேசியவண்ணம் இருக்க, 

 

[the_ad id=”6605″]

 

 

 

“அட போதும் ஆளாளுக்கு என்ர பேத்திய வேடிக்கை பாத்தது. பேசாம வேலைய பாருங்க” என்று நாயகியின் குரலில் அவர்கள் வேலையைத் தொடர்ந்தனர்.

 

தங்களது கரும்புக்கொல்லை, சோளக்காடு, தென்னந்தோப்பு என அனைத்தையும் பார்வையிட்டாள் அரசி. அடுத்து வேலுச்சாமிக்கு சொந்தமான மாந்தோப்பையும் பார்க்கவேண்டும் சென்று சொல்ல, தன்னால் நடக்க முடியாதென்றுவிட்டார் ரங்கநாயகி. அதை அடுத்து அரசியும் அரும்பும் மட்டும் செல்ல,

 

“ரொம்ப தூரம் போயிறாதீங்க புள்ளைகளா. சட்டுன்னு வந்துறோனும்” என்று குரல் கொடுத்துவிட்டு, களை பறிக்கும் பெண்களை மேற்பார்வையிட்டபடி நிழல் படிந்த ஒரு வரப்பின் மீது அமர்ந்துகொண்டார்.

 

விக்ரமனின் மாந்தோப்பில் மாங்கனிகள் காய்த்துக் குலுங்கின. அதற்கு கிளிகள் கீச்சிட்டுக் கொண்டு அங்கும் இங்கும் பறந்த வண்ணம் இருந்தது. பசுமை கண்களை நிரப்ப, கிளிகளின் கானம் காதை நிரப்ப, மரங்கள் பொழிந்த குளிர் நிழலில் நின்றிருந்தவளின் மேனியை தென்றல் காற்று தழுவிச் செல்ல, மெய்மறந்து தான் போயிருந்தாள் அரசி.

 

“இது செந்தூரம். இது நடுச்சாலை. இது மனோரஞ்சிதம். இது மல்கோவா. இது கிளி மூக்கு. இது காளையபாடி. கடைசியா இருக்குறது அல்போன்சா” என அனைத்து வகையான மாமரங்களையும் வரிசையாய் விளக்கிக் கொண்டிருந்தாள் அரும்பு.

 

எந்த வகை மரத்திற்கு எந்த உரம் ஏற்றது என்றெல்லாம் அவள் அத்தனை ஆர்வமாய் சொல்லிக் கொண்டிருக்க, அவளையே தான் பார்த்திருந்தாள் அரசி.

 

அரும்பு, பி.எஸ்.சி வேளாண்மை படித்தவள். அவளது கனவும் காதலும் அதுவே. படித்து பல அரும்பெரும் காரியங்கள் ஆற்றுவாள் என்றிருக்க, அவளுக்கான காலம் இதுவரை கனியவில்லை. அவளது கனவு கைகூடவில்லை என்றதில் அரசிக்கு தான் அரும்பைக் காட்டிலும் அதீத வருத்தம். 

 

“இதைய சாப்பிட்டுப்பாரு அரசி. பங்கனபள்ளி ரொம்ப இனிப்பா இருக்கும்” என்று அரும்பு ஒரு மாங்கனியை பறித்து நீட்ட, அதை வாங்கிச் சுவைத்தாள் அரசி.

 

அதன் சுவை உமிழ்நீரோடு கலந்து தொண்டையில் இறங்கிய போது உள்ளமெல்லாம் தித்திப்பாய் இருந்தது.

 

சிறு சிறு வரப்பெல்லாம் சத்தமின்றி தண்ணீர் பாய்ந்தோடிக் கொண்டிருக்க, தூரத்தில் கேட்ட நீரின் சலசலப்பில் இருவரும் பம்பு செட்டின் அருகே செல்வதற்காக அங்கிருந்த பெரிய வரப்பின் மீதேறி நடந்தனர்.

 

“அரும்பு! நான் ஊர்ல இல்லாதப்போ எத்தனை தடவ ரேக்ளா போட்டி நடந்திருக்கு?” என்று அரசி திடீரென நினைவு வந்தவளாய் கேட்க,

 

“ஒரு நாலோ அஞ்சோ நடந்திருக்கும்” என்றாள்.

 

அரசி அரும்பை பார்த்த பார்வையில் அடுத்து அவள் என்ன கேட்கப் போகிறாள் என்பதை உணர்ந்து,

 

“இதுவரைக்கும் அந்த கிளிமூக்கனும் சப்பவாயனும் ஜெயிச்சதில்ல அரசி. இந்தத் தடவை தான் நீயே நேர்ல பாத்திருப்பயே” என்றிருந்தாள் அரும்பு.

 

அதில் சிறு புன்னகை வந்து ஒட்டிக் கொண்டு அரசியின் இதழ்களை அலங்கரித்தது. பின் இருவரும் பேசிக்கொண்டே பம்பு செட்டை நெருங்கிய போது, அதன் அருகில் ஆண்களின் சட்டை இருப்பது கண்டு,

 

“எவன்டா அது பம்பு செட்டுல குளிக்கறது?” என்று அங்கிருந்தபடியே குரல் கொடுத்தாள் அரும்பு.

 

“எவடி அவ ஆம்பளைக குளிக்குற இடத்துல நின்னு அசிங்கமா எட்டிப் பாக்குறது?” என்று அங்கிருந்து வந்த பதில் குரலில் அரும்பு தன் தலையில் அடித்துக் கொள்ள,

 

[the_ad id=”6605″]

 

 

 

“ஆனாலும் உன்ர மாமனுக்கு வாய் கொஞ்ச நஞ்சம் இல்ல” என்று தலையை இடவலமாய் அசைத்தாள் அரசி.

 

“நீங்க தான்னு சொல்ல வேண்டியது தானே மாமா” என அரும்பு மீண்டும் குரல் கொடுக்க,

 

“ஏன் நீ வேற ஆருன்னு நெனைச்ச?” என்றபடி தன் மேற்சட்டையை எடுத்து போட்டுக்கொண்டு வரப்பின் மேலேறி வந்தான் குலசேகரன்.

 

“நான் அந்த கிளிமூக்கனும் சப்பவாயனும் தான் வந்திருக்கானுகளோன்னு நெனைச்சேன் மாமா” என்று வேண்டுமென்றே கூற, அவளை முறைத்து வைத்தான்.

 

அதற்குள் கை கால் அலம்பிக் கொண்டு, முகத்தை துண்டால் துடைத்துவிட்டு தன் மேற்சட்டையை அணிந்தபடி விக்ரமனும் வெளிப்பட்டான்.

 

“ஆரு அந்த லோக்கல் லோகநாதனும் சேத்துமடை சேதுராமனுமா?” என்று தெரியாததுபோல் அரசியும் கேட்டு வைக்க, சட்டையின் பொத்தானை போட்டுக் கொண்டிருந்த விக்ரமன் நிமிர்ந்து வரப்பின் புறம் பார்க்க, அரசியும் அவனைத் தான் பார்த்திருந்தாள்.

 

பாண்டியர்களோடு லோகநாதனுக்கும், சேதுராமனிற்கும் பகை உண்டாக பிள்ளையார் சுழி போட்டவர்களே இந்த அம்மணிகள் தான்.

 

ரும்பும் அரசியும் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த வேளை அது!

 

பள்ளி முடிந்து அவர்களது வீட்டுக்கு சைக்கிளில் திரும்பிக் கொண்டிருக்க, அவ்வழி போக வரும் பெண் பிள்ளைகளிடம் வம்பு செய்வதையே வழக்கமாய் வைத்திருந்தனர் சேதுராமன், லோகநாதன் மற்றும் சிலர்.

 

அவர்களை கவனித்த அரும்பும், அரசியும் அவர்களிடமிருந்து ஒதுங்கி தங்களது சைக்கிளில் வந்துகொண்டிருந்தனர்.

 

“தைரியம் இருந்தா ஊர்த்தலைவர் பொண்ணு கிட்ட உன்ர வீரத்தை காமி” என்றொருவன் தூண்டிவிட,

 

“ஏய் நெட்டச்சி குட்டச்சி வாங்க இங்க” என்று அவர்களை உரக்க அழைத்தான் சேதுராமன்.

 

இருவரும் அவர்களை முறைத்துக் கொண்டே செல்ல, ஓடி வந்து சைக்கிளை மறித்து முன்னால் நின்றவன்

 

“வரச்சொன்னா வரமாட்டியா?” என்றபடி அரும்பின் ஒரு கையையும் அவளது மடித்துக் கட்டிய ஒரு ஜடையையும் பிடித்து இழுத்தான். இதற்கும் சேதுராமன் அவளுக்கு சொந்தக்காரன் தான். இருந்தும் அவளோடு வம்பு வளர்க்க,

 

“யாருடா குட்டச்சி?” என கோபத்தில் அவன் மூக்கில் ஓங்கிக் குத்தியிருந்தாள் அரும்பு.

 

“டேய் லோகா! இவ என்ர மூக்குலையே குத்திப் போட்டாடா. பொலபொலன்னு ரத்தம் வருதுடா” என்று ஓட, சைக்கிளில் இருந்து இறங்கிய அரசி அங்கிருந்தபடியே லோகநாதனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

 

உடனே வேகமாய் அவர்கள் அருகில் வந்த லோகநாதன் அரும்பை அடிக்கச் செல்ல, குறுக்கே வந்து அவன் கையை எட்டிப் பிடித்த அரசி

 

“நெட்டச்சினு சொன்னதக் கூட போனா போகுதுன்னு விட்டிருவேன். என்ன தைரியம் இருந்தா என்ர முன்னாடியே அரும்ப அடிக்க வருவ?” எனப் பளார் என்று அவன் கன்னத்தில் அறைந்திருந்தாள்.

 

அவனோடிருந்தவர்கள் எல்லாம் அதிர்ந்து போய் அக்காட்சியைப் பார்க்க, நொடியும் தாமதிக்காது அரும்பை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றிருந்தாள் அரசி. அனைவர் முன்பும் அவமானமாகிவிட, அவர்களைப் பின்தொடர நினைத்த லோகநாதனைத் தடுத்து,

 

“அவளுகளை இன்னொருநாள் பாத்துக்கலாம் மாப்ள. இப்போ ஊருக்குள்ள போனா பஞ்சாயத்தாயிரும்” என்று சேதுராமன் சொல்ல, அமைதியானான்.

 

அரசியும் அரும்பும் வீட்டை எட்டுவதற்குள், அவர்கள் செய்த விஷயம் வீட்டை எட்டி இருந்தது.

 

“வெதை ஒன்னு போட்டா வித்தொன்னா முளைக்கும்? புள்ளைய வளத்தி வெச்சிருக்கா பாருன்னு ஊரே சிரிக்குது. எல்லாரு முன்னாடியும் வெச்சு என்ர குடும்ப மானத்தை வாங்கிட்டு வந்திருக்கா பாரு உன்ர மவ” என மரகதத்திடம் பாய்ந்தார் வேலாத்தாள்.

 

அதற்குள் முத்துச்சாமி வந்துவிட,

 

“உனக்கு வாய்ச்சது தான் இப்படினா உனக்கு பொறந்ததும் இப்படி இருக்கே முத்துச்சாமி. நம்மட குடும்ப மானத்தை சந்தி சிரிக்க வெச்சுட்டாளே! இதுக்குத்தான் இவள படிக்க அனுப்பாதின்னு தலைபாடா அடிச்சுகிட்டேன். அந்த வீணாப் போன குலசேகரன் பேச்சை கேட்டுக்கிட்டு நீ படிக்க அனுப்புன, அந்த திமிருல இன்னைக்கு ஆம்பள பசங்க மேலையே கைய வெச்சிட்டு வந்திருக்கா பாரு. இவ படிச்சது போதும் பேசாம ஒரு வருஷம் போய் நம்ம சரோஜினி மவனுக்கு கட்டி கொடுத்துற வேண்டியது தான்” என்று மகனிடம் பெரிதாய் முடித்தார் வேலாத்தாள்.

 

அவர் சொன்ன சொல் தாங்காது தன் புடவை முந்தானையால் வாயைப் பொத்தியபடி மரகதம் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்க, படிக்க வேண்டாம் என்றதில் கோபமடைந்த அரும்பு

 

“நான் அப்படித்தான் படிக்க போவேங் ஆத்தா. என்ரமேல என்ன தப்பு? அவன் பண்ணுனது தானே தப்பு. நானா போய் வம்பிழுத்தேன்? அவன் கையோங்கிட்டு வந்தா நான் கைகட்டிட்டு போகனும்ங்களா?” என்று பதிலுக்கு பேச,

 

“அந்த பையன் நம்ம சொந்தம் வேற, அவன் மூக்கை ஒடச்சதும் இல்லாம இப்போ என்ரகிட்டயே கூடக்கூட பேசுறா பாரு முத்துச்சாமி. நீயும் அவள பேசவிட்டு பாத்துகிட்டே இருக்குற, இதெல்லாம் நல்லதுக்கு இல்லப்பா. அவ்வளவுதேன் நாஞ்சொல்லுவேன்” என, அரும்பு ஏதோ பேச வாயெடுப்பதற்குள் சுளீரென்று அவள் மேல் விழுந்திருந்தது ஒரு அடி.

 

“அம்மாஆஆ…” என்று அவள் அலறிய மறுநொடி மரகதம் குறுக்கே வந்து தடுக்க,

 

“மொதல்ல இவளுக்கு ரெண்டு விழுகோணும். எல்லாம் இவ பழக்குற பழக்கம்” என்று வேலாத்தா சத்தமிட, மரகதத்தை பிடித்து தள்ளிய முத்துச்சாமி மீண்டும் அரும்புக்கு பெல்டால் ஒன்றை வைத்தார்.

 

“இப்போ உங்களுக்கு சந்தோசமாங் ஆத்தா?” என்று அவள் வேலாத்தாவை பார்த்தபடி கண்களில் நீர்பெருகக் கேட்க, அரும்பை நோக்கி மீண்டும் முத்துச்சாமி தன் கையிலிருந்த பெல்டை ஒங்க,

 

“மாமா! எதுக்கு இப்போ அவளப் போட்டு அடிக்குறீங்க” என்று அவரிடம் விரைந்து பெல்டை பறித்து எரிந்திருந்தான் குலசேகரன். அவன் வேலாத்தாவை ஒரு பார்வை பார்க்க,

 

“வந்துட்டான் சீம ராசன்” என முகத்தை திருப்பிக் கொண்டு உடனே அங்கிருந்து வெளியே சென்றுகொண்டார்.

 

“நீ பேசாத டா. எல்லாம் உன்ரனால தான். உன்ர கூட சேர்ந்து தான் இவளும் உருப்படாம போறா” என்று குலசேகரன் மேல் பாய்ந்தார் முத்துச்சாமி.

 

“நீ உள்ளாரா போ மா” என அரும்பை உள்ளே அனுப்பியவன், தன் அக்காவைப் பார்த்து

 

“நீ என்னத்துக்கு அழுதுகிட்டு இருக்குற? ஏதோ அரும்பு அவங்க வீட்டு வாரிசா போயிட்டாளேன்னு தான் பொறுமையா இருக்குறேன். அதுக்குன்னு உன்ர மேல எல்லாம் கையவெச்சா நான் பாத்துக்கிட்டு சும்மாவா இருப்பேன்? அது ஆரு என்ன எவ்வளவு பெரிய ஆளுன்னு எல்லாம் வெச்சு பார்க்க மாட்டேன். அப்பறம் நடக்குறதுக்கு நான் பொறுப்பில்ல” என்று வேலாத்தாவிற்கு கேட்கும்படி கூறியவன், பின் முத்துச்சாமியை பார்த்தபடி,

 

“ஊர்ல இருக்குற உருப்படாதவன் பேச்சை எல்லாம் கேட்டுட்டு நம்ம வீட்டு புள்ளைய போட்டு இந்த அடி அடிக்குறதா? நம்ம புள்ள நம்மளை பார்த்து தானே வளரும். நம்ம கை நீட்டுறது மட்டும் நியாயமோ? இதுல எங்க சேர்க்கை சரி இல்லையாமா. அவ வந்ததுல இருந்து ஒன்னும் சாப்டுருக்க மாட்டா, அதெல்லாம் கண்ணுக்கு தெரியாது. நீ அவ சாப்பிட எதாவது எடுத்து வை க்கா” என்று பேசிவிட்டு உள்ளே செல்ல,

 

“பாத்தியா உன்ர தம்பிய, எப்படி ஜாடை பேசிட்டு போறான்” என அவன் பேசியதற்கும் மரகதத்தை சாட, அவரோ எதுவும் பேசாது முகத்தை திருப்பிக் கொண்டு சென்றார்.

 

[the_ad id=”6605″]

 

 

 

“தம்பியை கண்டுட்டா போதுமே இவளுக்கு” என பெல்டை உதறி இடுப்பில் போட்டபடி முத்துச்சாமியும் நகர்ந்தார்.

 

அரும்பு அழுதுகொண்டே இருக்க, குலசேகரன் அவளை சாப்பிட அழைக்க வர மறுத்துவிட்டாள்.

 

“அப்பத்தா படிக்க வேண்டாம்னு சொல்லுறாங்க மாமா. அப்பாவும் அவங்க பேச்சை கேட்டுட்டு என்னைய பள்ளிக்கூடத்துல இருந்து நிறுத்தப் போறாரு. நான் எப்படி இனிமேல் படிக்குறது” எனத் தேம்பி அழ,

 

“மூக்குக்கு கீழ மீசை வளந்த அளவுக்கு உங்கப்பனுக்கு மண்டைக்கு மேல மூளை வளரல. உங்க அப்பதாளுக்கு மூளைங்கற சமாச்சாரமே சுத்தமா இல்ல. நீ இதுக்கெல்லாம் அழுகாதடி. நான் இருக்கும்போது உன்ர படிப்புக்கு தடை போட விட்டுடுவேனா? உனக்கு விருப்பப்பட்டதை படிக்கலாம். நான் படிக்க வைக்குறேன் விடு” என்றதும் தான் அரும்பு இலகுவானாள்.

 

மரகதம் இருவருக்கும் உணவை எடுத்து வைக்க, அரும்பை வற்புறுத்தி உண்ண வைத்தான் குலசேகரன். மகளின் முகம் அழுது வீங்கி இருக்க, கைகளில் ஆங்காங்கு தடித்திருந்ததைப் பார்த்த மரகதம்,

 

“இந்த மனுஷனுக்கு கோபம் வந்தா கண்ணுமண்ணு தெரியாம நடந்துக்க வேண்டியது. வயசு புள்ளைய போய் இந்த அடி அடிச்சிருக்காரு பாரு” என்று புலம்ப, கண்களால் அவரை உள்ளே செல்லச் சொன்ன குலசேகரன்  அவனே அரும்புக்கு பரிமாறினான்.

 

“அப்பா ஏன் மாமா இப்படி இருக்குறாரு? நாஞ்சொல்லுறதையும் காது கொடுத்து கேக்கலாமில்ல” என்றாள் அரும்பு பாவமாய்.

 

“அப்படி இல்லடா. மீசை உன்ர மேல உசுரையே வெச்சிருக்காரு. நம்ம புள்ளைய நாலு பேர் இப்படி சொல்லிட்டாங்களேன்னு ஒரு கோபம், அதைய உன்ர மேல காட்டிட்டாரு. கோபம் போனதும் உன்னைய அடிச்சதை நெனச்சு அவரும் வருத்தப்படுவாரு” என்று அவள் தந்தையை எண்ணி வருந்திப் பேசும்போதெல்லாம் அவன் கூறுவது போல், இன்றும் நன்மதிப்பாகவே கூறினான்.

 

“ஆமா நீ அந்த புலி கூட தானே சுத்துற? அவ கூட சுத்துனா மட்டும் பத்தாது, அவளோட்டம் தகுரியமாவும் இருக்கோணும். அவ எல்லாம் எதுக்கும் அசர மாட்டா. எது வந்தாலும் ஒத்தையா நின்னு சமாளிப்பா. நீயும் தான் இருக்கியே அழுது மூஞ்சி வீங்கிப் போன மூஞ்சி எலியோட்டம்” என்று சீண்ட,

 

“போ மாமா, எனக்கு எங்கப்பாவ பாத்தா மட்டுந்தேன் பயம். மத்தபடி நானும் அரசியோட்டம் தகுரியமானவ தான்” என்று முகத்தை திருப்பிக் கொண்டாள். அதில் லேசான புன்னகை அரும்பியது அவனுக்கு.

 

இருவரும் அரசியின் நிலை தெரியாது அவளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!