Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

எந்தன் ஜீவநதி

எந்தன் ஜீவநதி – 14.2

அதை கேட்டு இன்னும் அதிர்ந்தவர், “டேய் புரியாம பேசாத. புதுசா கல்யாணமாகி இருக்கு. 
உனக்கு கொஞ்சமாச்சும் நேரம் காலம் வேணாமா..‌? போக வரவே உனக்கு பொழுது போயிடும். இது விளையாட்டா..? யமுனாவ யோசி..” என அவனுக்கு மட்டும் கேட்கும் படி சுசகமாய் சொல்ல, 


Advertisement

“வேற வழியில்ல ண்ணே.. நா மறுத்தா இன்னும் வேற மாதிரி பேசுவாரு. இவர பத்தி உங்களுக்கு தெரியாது..” என அவருக்கு மெல்லிய குரலில் தலை குனிந்தபடி பதிலுரைத்தவன்,
“நா பார்த்துக்கறே ண்ணே..” என்றான் நிமிர்ந்து அவரின் கண்ணை பார்த்து திடமாய்.

Advertisement

Advertisement

அவருக்கு மறுத்து பேச வாய் துறுதுறுத்தது தான்.
ஆனால், ‘ஏற்கனவே தான் அவசரப்பட்டு அங்கு வருவதை பற்றி பேசியதால் தான் தீனாவுக்கு சிக்கலோ..? 

Advertisement

அதும் அவன் வாழ்க்கை தொடங்கப்போகும் அன்று..’ என்ற குற்ற உணர்வு உண்டாக,
‘எதுவானாலும் கொஞ்ச நாள் போகட்டும்..’ என நினைத்து அமைதியாகி போனார்.
“அப்புறோ விருந்து எல்லா எங்க சொந்தத்துக்கு இங்கன வச்சு போடறது தான் சரியா வரும். 
வெறும் சோறு திங்கன்னு அம்புட்டு தொலவுக்கு வரச்சொன்னா நல்லா இருக்காது. அதனால இங்கையே நாள கழிச்சு வச்சுடலாம்.. ஏனுங்க பெரியய்யா நாஞ்சொல்லறது சரி தானுங்க..?” என ஜெயசீலன் சொல்ல,
“வாஸ்துவம் தான் சீலா.. விருந்துன்னு எம்பது கிலோமீட்டர் தாண்டி வரச்சொன்னா சொனங்கத்தான் செய்வாங்க..” என்றார் அவரும் யோசனையோடு.
தீனாவின் பிரச்சனையை உணர்ந்திருந்த தங்கமணி அவன் கையில் லேசான அழுத்தத்தை கொடுத்து விழியால் சைகை செய்ய,
பெருமூச்சோடு அனைவரையும் பார்த்த தீனா, “அப்படியே ஏற்பாடு செஞ்சிடலாம். பக்கத்துல இருக்கற காலி இடத்துல சாமையான பந்தல்ல டேபிள் சேர் போட்டு விருந்து கொடுத்துக்கலாம்.
யாரை கூப்பிடன்னு நாளைக்கு முடிவு பண்ணிட்டா போன்ல தகவல் சொல்லிட்டு, மொத்த ஆள் கணக்கு தெரிஞ்சாதும் மேற்படி சமைக்க ஆள் பார்க்கறதா.‌. இல்ல ஆர்டர் கொடுக்கறதா.. ன்னு முடிவு பண்ணிக்கலாம்..” என்றான் முடிவாக.
‘அப்பாடா.. இப்புடித்தா என்னுனாலும் என்ற முடுவுக்கு வந்து நிற்கோனும். இனி காலத்துக்கும் இவென் நம்மள உட்டு போமாட்டான்..‌’ என தனது குரூர எண்ணத்தில் ஆழ்ந்திருந்தார்.
பேச்சு வார்த்தை முடிவுக்கு வரவும் அனைவரும் உண்டு முடிக்கவும் சரியாக இருக்க, வந்திருந்த சொந்தங்களில் அருகிருக்கும் ஊரிலிருப்பவர்கள் நாளை காலை வருவதாய் சொல்லி செல்ல.. மீதமிருந்த ஒரு சிலரை சக்தி அவனின் வீட்டிற்கு அழைத்து சென்றிருந்தான் மாமனாரையும் சேர்த்தே.
ஜெயசீலனின் வீடு அளவில் மிகப்பெரியது தான் என்றாலும் இருந்தது ஒற்றை படுக்கை அறை. 
கூடத்தில் நிறைய பேர் படுக்கலாம் என்றாலும்.. முதல் இரவு நடக்கும் போது ஆட்கள் அங்கிருந்தால் அவர்களுக்கும் மணமக்களுக்கும் சங்கடம் என்பதால் அவ்வாறு செய்திருந்தான்.
வாணி கூட எல்லா ஏற்பாடும் செய்த பின் அவளின் வீட்டிற்கு செல்வதாய் தான்‌ முடிவு.
அனைவரும் சென்ற பின், “உங்கிட்ட புது புடவை இருக்கா.. யமுனா..?” என்றிட,
யமுனாவின் தாய் தந்த அவளின் உடை பெட்டியை தீனா வாணியிடம் கொடுத்திருந்தான் தான். 
ஆனால் அதில் இருப்பது என்ன..? என‌ வாணிக்கு தெரியாது தானே..?! அதனாலேயே யமுனாவிடம் யோசனையாக கேட்டாள்.
“அம்மா என்னோட ட்ரஸ் எல்லாம் பேக் பண்ணி தான் கொடுத்திருக்காங்க அண்ணி. அதுல புடவை வச்சிருக்கறதா அம்மா சொன்னாங்க..” என்றதும்,
‘அப்பாடா..’ என்ற நிம்மதியோடு உடையை எடுத்து கொடுத்து வெளியே இருக்கும் குளியலறையில் குளிக்க அனுப்பினாள்.
சகுந்தலா எப்போதுமே கூடத்தில் ஓரத்தில் இருக்கும் கட்டிலில் படுப்பது தான் வழக்கம் என்பதால் அங்கு அமர்ந்திருந்த அவரை நெருங்கிய வாணி,
“சித்தி.. நீங்களும் ஜெகதீஷோட அந்த வீட்டுக்கு போலாமே..?” என்று தயக்கத்தோடு சொல்ல,
“எனக்கு எடமாறி படுத்தா ஒறக்கம் வராதுன்னு தெரியாதாக்கும் உனக்கு..? 
நானென்ன உன்ற தம்பிக்கு இடைஞ்சலாவா இருக்கேன்..? சிவனேன்னு ஒரு மூலையில ஒடுங்கி தானே கிடக்கேன்..” என கடுகடுக்க,
“அதில்ல சித்தி..’ என ஆரம்பித்தவள், பின் அவரிடம் வாதாடுவது வீண் என உணர்ந்து அமைதியானாள்.
பின் அறைக்குள் சென்று அதை கூட்டி சுத்தம் செய்விட்டு வந்தவள், 
“சித்தி.. புது பெட்சிட் எதாச்சும் பீரோல இருக்கா..?” என்றிட,
“இதெல்லா கண்ணாலமாயி புதுசா வாறவ கொண்டு வரோனும். நானென்ன கெனாவா கண்டேன். இப்புடி திடுதிப்புன்னு ஒருத்திய கட்டி கூட்டியாருவ உன்ற தம்பின்னு..” என நீட்டி முழக்கினார்.
அதை கேட்டு கடுப்பானாலும் பொறுத்துக்கொண்ட வாணி, 
‘அவருக்கு கூப்பிட்டு வீட்டுல இருக்கறத கொண்டு வரச்சொல்லலாமா..?’ என நினைக்கும் போது தான் சக்தியின் போன் தன்னிடமிருப்பது நினைவுக்கே வந்தது.
அவன் அலைச்சலில் இவளிடம் கொடுத்து சென்றிருக்க, இப்போது என்ன செய்வது.. என்ற புரியாத நிலை.
“ஏன்டீ, இங்கன இருக்கறதுல ஒன்ன விரிச்சா அவுகளால படுக்க முடியாதோ..?” என சகுந்தலா இளக்காரமாய் கேட்க,
பெருமூச்சை இழுத்து விட்டு வேகமாய் உள்ளே சென்ற வாணி இருந்திலேயே நன்றாக இருந்த ஒன்றை அங்கிருந்த மெத்தையில் விரித்து, சக்தியிடம் சொல்லி வாங்கி வந்திருந்தவற்றை கொண்டு அலங்கரிக்க துவங்கினாள் தன்னை திட்டிக்கொண்டே..
“அறிவே இல்லடீ உனக்கு.. கூறு கெட்டவ.. உனக்கே தெரியுமே இவுங்கள பத்தி.. 
இத்தன வாங்க சொல்ல வாய் வந்துச்சு.. கூட ஒரு ஜெமுக்காலத்த சொல்லியிருந்தா ஆவாதா..?” என புலம்பினாலும், 
‘தன் தம்பியின் வாழ்க்கை.. அது நிறைவாய் தொடங்க வேண்டும்..’ என நினைத்து பார்த்து பார்த்து எல்லாவற்றையும் செய்து முடிக்கும் போது சரியாக சக்தி அங்கு வந்திருந்தான்.
அவன் கையில் இருந்த பேக்கை கண்டுவிட்டு கேள்வியாய் வாணி பார்க்க, “உன் தம்பி ட்ரஸ் எல்லா அங்க நம்மூட்டுல தானே இருந்துச்சு. காலைக்கு மாத்தி உடுத்த வேணாமா..? 
அதோட உள்ள அனுப்ப நானும் இருக்கனுமாமே..‌ அத்த சொல்லி அனுப்பினாங்க.. 
நைட்டுக்கு மாப்ளே புதுசு உடுத்த புது வேட்டியும் நீ தீவாளிக்கு அவ வந்ததும் எடுத்ததுல ஒரு சட்டை புதுசும் அங்க இருந்துச்சுல்ல.. அதா அதையும் எடுத்துட்டு வந்தேன்..” என சொன்ன பிறகே வாணிக்கும் அது தோன்ற,
“ரொம்ப நல்லதுங்க. நானும் சிலத மறந்து தொலச்சுட்டேன். இனி எதையும் மாத்த முடியாது. 
நீங்க போய் அவன குளுச்சு ரெடியாக சொல்லுங்க. அதுக்கு முன்னே அவன ரூமுக்கு போகாம பாத்துக்கோங்க..” என அவசரமாய் சொல்லிவிட்டு யமுனாவை பார்க்க சென்றார்.
அப்போது தான்‌ யமுனா குளித்து வந்திருக்க அரையும் குறையுமாக சுற்றியிருந்த புடவையோடு சமையலறை அழைத்து சென்றவள் அழகாய் அதை கட்டிவிட்டு அங்கேயே தலை வாரி வாங்கி வந்திருந்த மல்லிகை சரத்தை சூட்ட அதுவரை இல்லாத கூச்சம் யமுனாவிடம்.
அவளின் சிவந்த முகத்தை கண்டு நெட்டி முறித்த வாணி, “என்னோட தம்பியோட சந்தோஷம் மட்டுமில்ல இனி உன் சந்தோஷமும் எனக்கு ரொம்ப முக்கியம் யமுனா. 
நீயும் சந்தோஷமா இரு.. அவனையும் சந்தோஷமா பாத்துக்கோ..
அப்புறம் மறக்காம சந்தனத்த கறச்சு வச்சிருக்கேன். எந்தம்பிகிட்ட சொல்லி பூசிக்கோ..” என்றிட, 
புரியாமல் விழித்தவளை நெருங்கி காதோடு, “உன்னைய தொட எந்தம்பிக்கு சாக்கு வேணாமா..? அதான் சந்தனத்தோட மணமா ஆரம்பிக்கட்டுமே..” என வாணி சொன்ன விதத்திலேயே அடிவயிற்றில் பரவ தொடங்கியது சுகமான அதிர்வலை ஒன்று.
அதில் பொங்கிய வெக்கத்தால் அவளின் உடல் மெல்லிய நடுக்கத்தோடு சிலிர்த்து சிவக்க மேலும் வாணியின் பேச்சு அவளை மொத்தமாக தவிப்புக்கு உள்ளாக்கியது.
இறுதியில், “அச்சோ.. அண்ணி ப்ளீஸ் போதும்..” என தனது இரு கரம் கொண்டு முகத்தை மூடியவளை கண்டு அதற்கும், “இப்புடி பேச்சுக்கே முகத்த மூடுனா எந்தம்பி பாடு என்னத்துக்கு ஆகறது யமுனா..?” என சொல்ல,
எப்போதுடா இவரிடமிருந்து தீனாவிடம் சென்று சேர்வோம் என்ற நிலைக்கு சென்றிருந்தாள் யமுனா. 
அவனை எதிர்கொள்வது இவரின் பேச்சை விட மிக எளிது என நினைத்தவளுக்கு அது அதை விட மிகவும் கொடுமை என்பது புரியவில்லை.
யமுனாவின் நிலையோ இங்கே இப்படி இருக்க.. அங்கே தீனதயாளனோ தங்கமணி சென்ற பின் உறவுகளும் விடைபெற அன்றைய நாளில் முடிவில்,
‘அவன் எதிர்பார்த்திருந்த நேரம் வந்துவிட்டது..’ என்பதை கூட உணராது சற்று முன் நடந்ததையே நினைத்தபடி தனது மீசையை தடவியபடி ஆழ்ந்த யோசனையோடு வானை வெறித்து சேரில் சாய்ந்திருந்தான்.
சக்தி அவரின் வீட்டுற்கு சென்றது திரும்ப வந்தது.. என எதுவுமே அவனின் கவனத்தில் கூட பதியவில்லை. 
சக்தி வந்து, “மாப்ளே..” என அவனின் தோளை தொட்ட பிறகே சுயத்திற்கு வந்தவன், 
“என்ன மாமா..?” என புருவம் சுருக்கி, ‘இவங்க இந்த நேரத்துல இங்கே என்ன பண்ணறாங்க..?’ என்ற யோசனை மிக கேட்க,
“யமுனா குளிச்சிட்டு உள்ள போயாச்சு. நீயும் போய் குளிச்சிட்டு இந்த உடுப்ப போடு..” என தயங்கிக்கொண்டே சக்தி சொன்ன பிறகே அடுத்த விசயம் நினைவில் எழுந்தது அவனுக்கு.
கூடவே ஒரு ஆசுவாசம். ‘இனி அவனின் மனம் அவளிடம் சென்றால் சமாதானம் ஆகிவிடும்..’ என.
எதுவும் சொல்லாமல் அமைதியாக எழுந்து சென்றவன் குளியலை முடித்து வீட்டு கூடத்திற்கு வந்து சேர்ந்தான்.
அதற்குள் யமுனாவை வாணி தயார் செய்திருக்க இருவரையும் ஒன்றாக சாமி கும்பிட வைத்த வாணி, சக்திக்கு சைகை காட்ட, “மாப்ளே வா..” என அவனை உள்ளே அழைத்து சென்றான்.
வாணி திரும்ப சமையலறை சென்றவள் காய்ச்சி தயாராக வைத்திருந்த பாலை கொண்டு வந்து யமுனாவிடம் கொடுத்து அவளை அறைக்கு அழைத்து செல்ல, அதற்குள் சக்தி வெளியே சென்று நின்றிருந்தான் தீனாவிடம் சொல்லிவிட்டு.
வாணியும் சந்தோஷத்தோடு யமுனாவை உள்ளே அனுப்பி வைத்து திரும்ப, 
இவர்களின் செய்வதை பார்க்காமல் பார்த்திருந்த சகுந்தலாவின் செய்கையில் வாணியின் சந்தோஷம் மங்கிப்போனது.
ஜெகதீஷூம் அவரோடு படுத்திருக்க இருவரையும் கண்டதும், 
‘சக்தியிடம் சொல்லி பார்க்கலாமா..?’ என்ற எண்ணம் தோன்றிய வேகத்தில் அடங்கியும் போனது.
ஏனெனில் பேச ஆரம்பித்தால் அவரின் பேச்சை உள்ளே இருக்கும் இருவரும் கேட்க வேண்டியது வரும். 
‘வாழ்க்கை தொடங்க போகும் அவர்களுக்கு.. இது எதற்கு இடைஞ்சலாக..’ என நினைத்து சிறு தலையசைப்போடு சித்தியிடம் விடைபெற்று தன் வீட்டிற்கு சென்றாள் வாணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!