Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

எந்தன் ஜீவநதி

எந்தன் ஜீவநதி – 14.1

நதி 14
ஆண்கள் முதல் பந்தியில் மணமக்களோடு உண்டு முடித்திருக்க அனைவரும் வெளியே போடப்பட்டிருந்த சேர்களில் அமர்ந்தனர்.


Advertisement

தீனதயாளன் முகமோ சற்று முன் நடந்ததில் அத்தனையாய் மலர்ந்து கிடந்தது. 
அவனின் அருகில் வந்து அமர்ந்த தங்கமணிக்கு அவனின் மலர்ச்சி மட்டற்ற நிறைவை தர அவனையே பார்த்திருந்தார்.

Advertisement

Advertisement

அதனை கண்டு கொண்ட தீனா கேள்வியாய் அவரை காண, “உன்னைய இப்படி பார்க்க தான் ரொம்ப வருஷமா ஏங்கிட்டு இருந்தேன்டா.. இப்ப தான் நிம்மதியா இருக்கு..” என்றார் உளமார.
அவரின் வாய்மொழியின்றியே அவரை அவன் தான் அறிவானே.. அதனால் அவரின் கையை பற்றுதலாய் பற்றி தன் நெகிழ்வை அவருள் அவனும் கடத்தினான்.

Advertisement

இது அனைத்தும் ஒரு விழியில் அச்சுரம் பிசகாது பதிவாகி அவரின் கோபத்தை கூட்டிக் கொண்டிருப்பதை அவ்விருவரும் அறிந்திருக்க நியாயமில்லை.
அவர்களின் மோன நிலையை கலைப்பது போல,
“சீலா, கண்ணாலத்த தா இப்புடி அவதில செஞ்சாச்சு. நம்ம உறவு முறையெல்லாம் அழச்சு ஒரு விருந்து கொடுத்து பொண்ணுக்கு எல்லாரயும் அறிமுகோ செஞ்சாத்தானே நாளப்பின்ன நல்லது கெட்டதுக்கு கூடினா அந்த புள்ளைக்கும் உறவு ஜெனங்கல தெரியும்..” என மூத்தவர் ஒருவர் சொல்ல பதில் சொல்லாமல் தீனாவிடம் பார்வையை பதித்தார் ஜெயசீலன். 
அவரின் அந்த பார்வைக்கு அர்த்தம் உணர்ந்த தீனாவிற்கு மனதே விட்டுப்போனது.
‘இத்தன வருஷமா நா கொடுத்த எல்லாத்தையும் என்ன செஞ்சாங்க..? இப்போ விருந்து செலவுன்னாதும் என் முகத்த பார்த்தா நா என்ன செய்ய..?’ என்ற ஆற்றாமை அவனுள்.
அவனிடம் இருந்த கையிருப்பில் தான் யமுனாவிற்கு தங்கத்தில் தாலி வாங்கியிருந்தான் அன்று காலை.
‘யமுனாவோடு தான் இனி தன் வாழ்க்கை..’ என முடிவான பின் சேர்த்தது தான் அந்த பணமும். 
இப்படி திடீரென திருமணம் நடக்காது நாட்கள் சென்று என்றிருந்தால்.. இனி வரும் வருமானத்தை முறையாக சேர்த்து வைத்து மற்றவரை எதிர்பார்க்காமலேயே சிறப்பாக நடத்திக்கொண்டிருப்பான் தன் திருமணத்தை.
அவனுமே அப்படி ஒரு நிகழ்வு அன்றே நடக்கும் என எதிர்பார்க்கவில்லையே..!
அப்போதே திருமணம் என முடிவான கணத்தில், தங்கமணி அவராக செய்ய வந்ததற்கு மறுத்து விட்டு மொத்தமாய் தன்னிடமிருந்ததை அவரிடம் கொடுத்து தந்தையையும் உடனனுப்பி அவர்களின் முறைப்படி தாலி வாங்கி வரச்செய்திருந்தான். 
இப்போது, ‘மறுபடியும் எங்கிருந்து கொடுக்க..?’ என்ற தவிப்பு அவனிடம்.
அவனின் முகத்தை பார்த்திருந்த தங்கமணிக்கா விசயத்தை யூகிக்க முடியாது..?
‘இப்ப கூட என்கிட்ட கேட்க தோணல தானே..?’ என கோபம் வந்த போதும் தீனாவை அவருக்கு அத்தனை பிடிக்க காரணமும் அது தானே. 
‘தனக்கு மறுக்காமல் எதையும் செய்வார்..’ என தெரிந்தால், ‘அவரிடம் எப்படி வாங்கலாம்..?’ என காரணம் தேடி உலாவும் காலத்தில் இருந்து கொண்டு.. அள்ளிக்கொடுக்க தயாராக இருந்தாலும் கேட்காமல் சமாளிக்க நினைப்பது உயர்ந்த குணம் தானே.
அப்படிப்பட்டவனுக்காக எதையும் செய்ய நினைப்பவருக்கு இதெல்லாம் ஒரு விசயமா..? 
அதிலும் தீனா அவரிடம் வந்த பின் அவரின் தொழிலில் வந்த ஏறுமுகம் அவரே எதிர்பாராதது.
“உங்க பொண்ணுங்களுக்கு வர்ற மாப்பிள்ளைங்க கம்பெனிய எடுத்து நடத்துவாங்களான்னு ஏன் நினைக்கறீங்க..? 
அடுத்த வீட்டுக்கு போனாலும் தங்கச்சிங்க சுயமா நிற்க இந்த தொழிலும், அதுல வர்ற வருமானமும் எப்பவும் உறுதுணையா இருக்காதா..? அப்படி யோசிங்க அண்ணே..” என சொல்லி தொழிலை விரிவு படுத்த வைத்திருந்தான்.
தனக்காக என்றில்லாமல் தன் மகள்களின் எதிர்காலத்தையும் பற்றி யோசித்து செயல்பட்டவனை சங்கடத்தோடு அமர்ந்திருக்க விடுவாரா அவர்..?
“உங்க முறைப்படி என்ன செய்யனுமுன்னு சொன்னா மொத்த ஏற்பாட்டையும் திருப்பூர்ல வச்சே ரிஷப்ஷன் மாதிரி ஏற்பாடு செஞ்சிடலாம். பொறுப்பு அத்தனையும் என்னோடது..” என தீனாவின் கையை தட்டி கொடுத்தபடி சொன்ன போது, ‘கண்கள் கலங்கிடுமோ..?’ என்ற அச்சம் தீனாவிடம்.
அதனை கண்டுகொண்டவர் தன் கண்ணை மூடி திறந்து அவனுக்கு ஆறதலை தந்ததோடு அதில் லேசான கண்டிப்பும். 
அதை புரிந்து இதழில் லேசான புன்னகை அரும்ப அவரை பார்க்க, ‘இது.. இதான் எனக்கு வேணும்..’ என்ற விழிமொழி அவரிடமிருந்து.
இருவரின் மௌனபாசையை இப்போதும் கண்டு கொண்ட ஜெயசீலனுக்கு ஏற்கனவே மகன் அவரின் வசமாகி இருக்க, 
காலை சகுந்தலாவிடம் தான் சொன்ன, “இனி நம்மள எங்கே அவன் கவனிப்பான்..?” என்ற வார்த்தையும் நினைவில் எழ,
‘இத்தன வருசோ அவன தனியா வச்சிருந்ததால நம்ம கேட்ட நேரமெல்லா பணத்த அனுப்பினான். இனி அங்கனவே போயிட்டா.. அவனுக்குன்னு குழந்தை குட்டின்னு வந்துட்டா..?
நாளப்பிள்ள இவனோடவே வச்சுக்கிட்டா என்ன செய்ய..?’ என்ற குதர்க்கமான எண்ணங்கள் அவரை பாடாய் படுத்த தொடங்கியது.
அதற்கு வலு சேர்ப்பது போல, “நீ எப்போ அங்கே வர்றேன்னு சொல்லுடா.. வீடு வேற பார்க்கனுமே. இத்தன வருஷம் இருந்த மாதிரி இருக்க முடியாது தானே..?” என தங்கமணி சொல்ல,
‘எங்கள மொத்தமா தலமுழுகிடுன்னு சொல்லாம சொல்றானே இந்தாளு..’ என்ற கடுப்பும், கோபமும் ஜெயசீலனுக்கு.
தங்கமணிக்கு தீனா பதில் சொல்லும் முன் முந்திக்கொண்ட ஜெயசீலன், “இத்தன வருசோந்தா அவென் தனியா இருந்தான். அதனால அப்புடியே உட்டுட்டோம். 
ஆனா இப்போ மருமவ வந்த பின்னாடியு அப்புடி விடமுடியுங்களா..? அவிங்க ரெண்டு பேரு இங்கே தானுங்க இருக்கோனும்..” என்று நைச்சியமாய் பேச கேட்டிருந்த தீனாவிற்கே அதிர்ச்சி தான்.
அவரிடமிருந்து இப்படி ஒன்றை அவன் தான் எதிர்பார்த்திருக்கவே இல்லையே..?! அதனால் வந்த அதிர்வு அது.
தங்கமணிக்கு ஜெயசீலனின் எண்ணம் புரிந்ததோ என்னவோ அதனால், “தீனாக்கு வேலை அங்கே தானே இருக்கு. இங்கே இருந்தா என்ன பண்ணுவான்..?” என்றார் கூர்மையாய்.
“அது அவென் இங்கிருந்து போயிட்டு வரட்டுமுங்க. யாரு வேணாமுன்னா..?.” என்றார் மனசாட்சியின்றி.
கேட்டிருந்த உறவுகளுக்கே அவரின் யோசனை கடுப்பை தான் கொடுத்தது.
“என்ன சீலா.. புரியாம பேசறே..? தெனமும் எம்பது கிலோமீட்டருக்கு மேல போயி வந்தா ஒடம்பு என்னத்துக்கு ஆவும்..?” என்றதும்,
“அதுக்காக என்ற மருமவள எப்புடி எங்கையோ போயிருன்னு அனுப்ப முடியும். 
இல்லன்னா ஒண்ணு செய்யலாமுங்க பெரியய்யா. மருமவ இங்கையே எங்க கூட இருக்கட்டும்.
இவென் வாரத்துக்கு ஒரு தடவ ரெண்டு தடவ ன்னு நேரங்கெடக்கையில வந்து போவ இருக்கட்டும்..” என்று சொல்ல, தீனாவிற்கு, ‘அய்யோ..’ என்றானது.
அவரின் பேச்சுக்கு பின் இருக்கும் காரணங்களை மற்றவர் அறிய வாய்ப்பில்லை தான். 
ஆனால் அவரை முற்றும் முழுதாய் அறிந்தவனுக்கு நெஞ்சமெல்லாம் அழுத்தம் கொண்டது.
இப்படி எதாவது வருமென்று தானே.. திருமணம் என்ற ஒன்றை அவன் நினைக்கவே மறுத்தது.
அவனின் பயத்திற்கு ஏற்ப நடக்கும் விசயங்கள் இருக்க.. யமுனாவை எண்ணி இப்போதே தவிக்க துவங்கியது மனது. 
இதை விட பெரிதாய் இன்னும் சில மணி நேரத்தில் நடக்க போவது தெரியாமலேயே..!!!
“அதில்லங்க டெய்லி வந்து போறது எல்லாம் நார்மல் வொர்க்குக்கு ஓகே. தீனா பார்க்கற வேலைக்கு அவன் வேலை முடுச்சு வீடு வர்றதுக்கே பதினொன்னு ஆகும். 
அதுலையும் சனிக்கிழமை எல்லாம் எப்படின்னு சொல்லவே முடியாது. இடையிலையும் வந்து போகன்னு இருக்கறது சரியா வருமுன்னு தோணலங்க..” என தங்கமணி பொறுமையாய் எடுத்துச்சொல்ல,
“இத்தன குறைஞ்ச சம்பளத்துக்கு மாடு மாதிரி உழைக்க ஒருத்தன் கிடைச்சிருக்கான் விடுக்கூடாதுன்னு தான் இத்தன பாடு படறீங்களோ..?” என ஜெயசீலன் குதர்க்கமாக கேட்க வாயடைத்து போனார் தங்கமணி.
‘அவரின் மகனின் உடல்நிலை, மணவாழ்க்கை பற்றிய கவலையில் அவர் பேசப்போக, 
கடைசியில் அவரின் வருமானத்திற்காக அவனை பயன்படுத்தி கொள்வது போல பேசி விட்டாரே இவர்..!’ என்ற அதிர்வு அவரின் முகத்தில்.
அதை கண்ட தீனாவிற்கு அத்தனை சங்கடம். 
‘தனக்காக.. தன் சந்தோஷத்திற்காக.. எதையும் செய்ய தயாராய் இருந்த ஒருவருக்கு தன்னால் இப்படி ஒரு அவப்பெயரா..?’ என்ற எண்ணம் அவனை உந்த,
“அண்ணே.. நா டெய்லி இங்கிருந்தே வர்றேன்..” என்றிருந்தான் அவசரமாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!