Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

முத்தாயி அம்மாச்சி

முத்தாயி அம்மாச்சி 1

அத்தியாயம் 1

பாம்… பாம்…



Advertisement

“வண்டிய ஓட்டாம உருட்டிட்டு இருக்கானுங்க.. மாங்கா மடையனுங்க..“

பாம்… பாம்…

Advertisement

Advertisement

“பேரு தான் ஹை வேய்.. ஆனா பாரு எப்படி ஊர்ந்துக்கிட்டு போகுதுன்னு..” 

பாம்… பாம்…

Advertisement

“ஒருத்தனுக்கு கூட ஒழுங்கா வண்டி ஓட்டவே  தெரியலை.. யாரு இவனுங்களுக்கு எல்லாம் லைசென்ஸ் கொடுத்தாங்களோ தெரியலை”

பாம்… பாம்…

 

விடாமல் ஹார்ன் அடித்து கொண்டும், தவறாக வண்டி ஓட்டுபவர்களை திட்டிக்கொண்டும் கடுப்பாக வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார் ஸ்ரீகாந்த். வெளியே இருந்த போக்குவரத்து நெரிசலே பரவாயில்லை என்று தோன்றிவிட்டது வண்டியின் உள்ளே அமர்ந்திருந்த மற்றவர்களுக்கு. 

“கொஞ்ச நேரம் இந்த ஹாரனை அடிக்காம தான் இருங்களேன். எவ்வளவு ஹார்ன் அடிச்சாலும் ஒன்னும் ப்ரயோஜனம் இல்லை” என்று கடுப்படித்தார் பக்கத்தில் அமர்ந்திருந்த அவரது தர்மபத்தினி பூம்பாவை.

“நீ ஓட்டி பாரு அப்ப தான் தெரியும்.. சொகுசா உக்காந்துட்டு வர இல்ல?”

“நீங்க மட்டும் என்ன நின்னுக்கிட்டா வண்டிய ஓட்டுறீங்க? என்னமோ ரிக்க்ஷாவை மிதிச்சுக்கிட்டு வர மாதிரி.. ஆட்டோமேட்டிக் கார் ஓட்றதுக்கு என்ன பேச்சு?”

பாம்… பாம்… பாம்… 

கொஞ்ச தூரம் சென்றதும் கொஞ்சம் டிராபிக் குறைந்தது. ஒரே சீரான வேகத்தில் வண்டி நகர்ந்தது இப்பொழுது.

திடீரென ஒரு நாய் குறுக்கே ஓடி வந்து விடவே,

‘கிரீச்…’ என்ற சத்தத்துடன் வண்டியை பிரேக் போட்டு நிறுத்தினார் ஸ்ரீகாந்த்.

“அட லூசு நாயா இருக்கும் போல.. இப்படியா வரும்?” என்று பொரிய ஆர்மபித்தார் ஸ்ரீகாந்த்.

ஒரு வினாடி அவர் சுதாரிக்கவில்லை என்றால் அந்த நாய் நிச்சயம் இவர்கள் வண்டியில் அடி பட்டிருக்கும்.

“பிரேக் போட்டா சொல்லிட்டு போட மாட்டீங்களா? மனுசனுக்கு அப்படியே ஒரு நிமிஷம் உயிரே போயிடுச்சு…” என்று கடுப்படித்தார் பூம்பாவை.

“ஆமா, நாய் எங்கிட்ட முன்னாடியே போன் போட்டு சொல்லிடுச்சு.. நான் குறுக்க வர போறேன், நீங்க பிரேக் போடுங்கன்னு.. நான்தான் உங்கிட்ட சொல்ல மறந்துட்டேன்..”

“எல்லாத்துக்கும் ஏன் இப்படி குதர்க்கமாவே பதில் சொல்றீங்க?”

“குதர்க்கமா கேள்வி கேட்டா, குதர்க்கமா தான் பதில் வரும்”

“வண்டிய கொஞ்சம் வாஷ்ரூம் இருக்க இடமா பார்த்து நிப்பாட்டுங்க.. நீங்க ஓட்ற  அழகுல, எனக்கு முடியல..”

“சுத்தம், உன்னை எல்லாம் கூட்டிட்டு எங்கேயுமே போகக் கூடாது.. இப்ப தான்  டிராபிக் குறைஞ்சு கொஞ்சம் வேகமா போக ஆரம்பிச்சோம், அதுக்குள்ள வண்டிய நிப்பாட்ட சொல்ற”

இவர்கள் மும்முரமாக சண்டையிட்டுக்கொண்டு வந்தார்கள்.

“அண்ணா, நான் அப்பவே சொன்னேன், நாம கேரளா எல்லாம் போக வேண்டாம்னு.. நீ தான் இப்படி போனாத் தான் கேரளாவை பார்க்க முடியுமும்ன்னு சொல்லி கூட்டிட்டு வந்த.. இவங்க கூட போறதுக்கு பேசாம வீட்லயே இருந்திருக்கலாம்”

“இது என்ன நமக்கு புதுசா? விடு  ஹாஸி…நீ பாட்டுக்கு பாட்டு கேட்டுட்டு வா”

“இவங்க சத்தத்துல ஹெட் போன்ஸ் போட்டா கூட பாட்டு கேக்க மாட்டேங்குது..  தலை எல்லாம் வலிக்குது..”

“நீ வேணா கொஞ்ச நேரம் தூங்க பாரு, நான் வேலைக்கு போனதும் உனக்கு நாயிஸ் ப்ரூப் ஹெட் போன்ஸ் வாங்கி தரேன்.”

“பேசாம நீ வண்டிய வாங்கி ஓட்டு ண்ணா” 

“கேட்டதும், கொடுத்துடுவாரா என்ன? உனக்காக அடுத்து நிப்பாட்டும் போது கேட்டு பார்க்கிறேன்..”

“ப்ச்ச்ச்..சரி அண்ணா”

இப்படி அண்ணனும் தங்கையும் பின் இருக்கையில் புலம்பிக்கொண்டு அமர்ந்திருந்தனர்.

சென்னையில் இருந்து கேரளாவை நோக்கி சென்று கொண்டிருந்த அந்த மகிழுந்தில் ஸ்ரீகாந்த் அவரது மனைவி பூம்பாவை, மகன் ஹிருதய், மகள் ஹாசினி நால்வரும் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.

அடுத்து ஒரு சிறு ஹோட்டல் முன் வண்டியை நிறுத்தினார் ஸ்ரீகாந்த். அனைவரும் இறங்கி கொஞ்சம் ரெஃபரஷ் செய்து கொண்டு தேநீர் பருகினார்கள்.

“அப்பா, நீங்க ரொம்ப களைப்பா தெரியுறீங்களே? நான் கொஞ்ச தூரம் வண்டியை ஒட்டவா?” என்றான் ஹிருதய் தந்தையிடம்.

“டீ குடிச்சிட்டேன் இல்ல, இப்ப நான் ஓகே தான், நானே பார்த்துகிறேன்”

ஹிருதய் என்ன செய்வது என்று தங்கையை பார்த்தான்.

அவள் முகம் மிகவும் வாட்டமாக இருந்தது. சிறு வயதில் இருந்தே தினமும்  சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள் ஸ்ரீகாந்தும் பூம்பாவையும். ஹிருதய்  பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டான். ஆனால் ஹாசினிக்கு இது ஒரு வகைகில் மன உளைச்சலை  கொடுத்துக்கொண்டே இருந்தது. அதை  உணர்ந்த ஹிருதய்  தான் தங்கையுடன் நேரம் செலவழிக்க தொடங்கினான். அவன் வீட்டில் இருக்கும் நேரங்களில் தங்கையுடன் இருப்பது போல பார்த்துக்கொண்டான். 

ஹிருதய் இப்பொழுது தான் பொறியியல் முடித்து நான்கு மாதங்கள் ஆகிறது. ஹாசினி பதினொன்றாம் வகுப்பில் இருக்கிறாள்.

“ஆமாமா.. இவரே ஓட்டுனா தானே, நான் கஷ்டப்படறேன்.. இந்த குடும்பத்தையே தலையில தூக்கி வச்சிக்கிட்டு நிக்குறேன்னு சீன் போட முடியும்” என்றார் பூம்பாவை நக்கலாக.

ஸ்ரீகாந்த் பதில் சொல்ல வாய் திறப்பதற்குள் அவசரமாக, “அண்ணாக்கு கார் ஓட்டணும்ன்னு ஆசையா இருக்காம்.. கொஞ்ச நேரம் அவன் ஒட்டட்டுமே ப்ளீஸ்” என்றாள் ஹாசினி.

அது சற்று வேலை செய்தது..

ஒரு வழியாக ஹிருதய் வண்டியை எடுத்தான்.

ஸ்ரீகாந்த்தும் பூம்பாவையும் பின்னிருக்கையில் ஏற செல்லவும், ”அய்யயோ.. என்ன செய்றீங்க இரண்டு பேரும்?” என்று பதறினாள் ஹாசினி.

“என்னடீ, அதான் ஹிருதய் வண்டிய எடுக்கிறான் இல்ல, நாங்க பின்னாடி இருக்கோம்”என்றார் அன்னை.

“இந்த கதையே வேண்டாம்.. திரும்ப ரெண்டு பேரும் சண்டையை ஆரம்பிக்கவா? பேசாம ஒருத்தர் முன்னாடி ஏறுங்க ஒருத்தர் பின்னாடி ஏறுங்க..”

பூம்பாவை முன்னேயும் ஸ்ரீகாந்த் பின்னேயும் ஏறிக்கொள்ள வண்டி புறப்பட்டது.

மிதமான ஒலியில் பாடல்களை ஒலிக்க விட்டான் ஹிருதய்.

அதன் பிறகு அமைதியாக தொடர்ந்தது அவர்களது பயணம்.

ஒவ்வொருவரும் அவர்கள் சிந்தனை உலகத்திற்குள் சென்றுவிட்டனர்.

ஸ்ரீகாந்த்.. இரண்டு மாதங்கள் முன்புவரை ஒரு தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்து வந்தார். திடீர் என்று ஒரு நாள், நிர்வாகத்தின் தலைமை மாறியதால் பலரை வேலையை விட்டு நீக்கினார்கள். அதில் ஸ்ரீகாந்தும் ஒருவர். காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றிக்கொண்டிருந்தவரை, திடீரென்று வேலையை விட்டு  நீக்கி விடவும் அவருக்கு உலகமே ஸ்தம்பித்த நிலை. எப்பொழுதுமே சுறுசுறுப்பாக உயர் பதவி தந்த கர்வத்தில் இருந்தவர், இப்பொழுது அவரது இயலாமை தந்த எரிச்சலில் அனைவரிடமும் கடுகடு என இருக்கிறார்.

பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். அப்பா சில வருடங்கள் முன்பு தான் காலமாகி இருந்தார். அம்மா சிவங்கரி அவரின் அக்கா மிருதுளா வீட்டில் ஆறு மாதம் இவர்களுடன் ஆறுமாதம் என்று இருக்கிறார். மாமியாருக்கும் மருமகளுக்கும் எப்பொழுதும் ஏழாம் பொருத்தம் தான்.

பூம்பாவை தஞ்சாவூர் அருகில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர். திருமணம் என்று வருகையில் ஸ்ரீகாந்தின் அப்பா ஜாதக பொருத்தம் பார்த்து, தங்கள் இனத்தை சார்ந்தவரை தான் மணமுடிக்க வேண்டும் என்று கூறி மருமகள் மருமகன் இருவரையும் ஊர் பக்கம் இருந்தே தேர்ந்தெடுத்திருந்தார். அதிலே அம்மா மக்களுக்கு வருத்தம்தான் இன்று வரை.

பூம்பாவை, அவர் அப்பா அம்மாவிற்கு நாள் சென்று பிறந்த ஒற்றை பெண் குழந்தை. படிப்பில் அவர் மிகவும் கெட்டி. தஞ்சாவூரில் உள்ள சிறந்த பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்திருந்தார்.

ஆனால் ஏதோ குக்கிராமத்தில் இருந்து வந்ததை போல அவளை இளக்காரமாகவே நடத்துவார் ஸ்ரீகாந்த்தின் அம்மா சிவங்கரி.

“அது என்ன பேர் பூம்பாவைன்னு.. பட்டிகாடுன்னு பெயரிலேயே தெரிஞ்சிடும்”

“சுடிதார் போட்டா மாடர்ன்னு நினைப்போ? நீ போடற கலரை வச்சே உன் லட்சணம் தெரிஞ்சிடும்… மிட்டாய் ரோசும் அடிக்கிற மஞ்சளும் யாரவது போடுவாங்களா?”

 திருமணம் ஆன புதிதில் இப்படி எல்லாத்துக்கும் மட்டம் தட்டியே பேசுவார்.

“புகுந்த வீட்ல பொறுத்து போகணும் கண்ணு… அவங்களுக்கு ஏத்த மாதிரி நீ உன்னை மாத்திக்க கண்ணு.. நல்லவங்க தான் எல்லாரும்” என்று கூறி கூறி ஆரம்ப காலத்தில் அவரை அடக்கி விட்டனர் அவளது பெற்றோர்கள்.

கல்லூரி இறுதி ஆண்டு முடியவும் திருமணம், திருமணம் ஆகி சில மாதங்களிலேயே கருவுறவே வேலைக்கு எல்லாம் போக அவர் யோசித்து இருக்கவில்லை. 

முதலில் தன்னை மாற்றிக்கொண்டால் கணவருக்கு பிடிக்கும் என்று நினைத்து தன்னை  நாகரிகமாக மாற்றுவதில் முனைப்பாக இருந்தார். ஸ்ரீகாந்திற்கு மனைவியை பிடிக்கும். அவள் அழகு, குணம் என்று எல்லாமே பிடிக்கும். ஆனால் தாயை போல பிள்ளை என்பது போல, அவ்வப்பொழுது அவளை பட்டிக்காடு பட்டிக்காடு என்று சீண்டிப் பார்ப்பார். அவரை பொறுத்த வரைக்கும் அது வெறும் விளையாட்டு கேலி பேச்சு.

பெண்களுக்கு கேலி செய்வது பிடிக்கும் என்று இந்த ஆண்களுக்கு யார் சொன்னதோ? உண்மையில் அது பூம்பாவைக்கு கணவன் மீது ஒரு பிடித்தமின்மையை தான் வளர்த்தது.

“என் புள்ள சொல்ற மாதிரி பட்டிக்காடு தான் நீ… இந்த காலத்துல யார் இவ்வளவு நீளமா முடி வச்சிருக்காங்க, அதையும் பின்னல் போட்டு”  என்று மாமியார் வேறு கடுப்பேற்றுவார். உண்மையில் பூம்பாவையின் முடியை பார்த்து அவருக்கு பொறாமை. அவருக்கு இருக்கும் நாலே நாலு முடியில் பின்னல் எல்லாம் போட முடியாது. அதனால் ஒரு கிளிப் போட்டிருப்பார்.

“என் தம்பிக்கு மாடர்ன்னா வேலைக்கு போற பொண்ணை கட்டிக்கணும்னு தான் ஆசை.. என்ன செய்றது? யாருக்கு யாருன்னு அந்த கடவுள் தான் முடிவு செய்யணும்” என்று நாத்தனார் அவர் பங்கை சிறப்பாக செய்வார். என்ன ஒன்று, அவர் வேளைக்கு செல்லுகையில் உரிமையாக தன் மகன் ப்ரதமேஷை தம்பி மனைவியின் பொறுப்பில் விட்டு செல்வதை மறந்துவிடுவார்.

ஹிருதய் பிறந்த பிறகு குழந்தையுடன் அவரை  முழுவதுமாக  ஈடுபடுத்திக்கொண்டார் பூம்பாவை. “இங்க பாரு ஹனி.. குழந்தைக்கு நான் தான் ஸ்டையிலா பெயர் வைப்பேன்.. எங்க வீட்ல பாரு, எல்லார் பெயரும் எப்படி மாடர்ன்னா இருக்கு.. உன் பெயர் தான் ஓல்ட் பேஷன்” என்று கூறி மகனுக்கு ஹிருதய் என்று பெயர் வைத்தார் ஸ்ரீகாந்த்.

பூம்பாவையின் பெற்றோர்கள் மகளை காண வரும்பொழுது எல்லாம் அரிசி, காய்கறிகள் என்று எல்லாம் எடுத்து கொண்டு வருவார்கள். 

‘கிராமத்துல பொண்ணை எடுத்தா இப்படி தான்டா அரிசி மூட்டையும் காய்கறி கூடையுமா வந்து இறங்குவாங்க..’ என்று மகனிடம் நக்கல் செய்வார் சிவங்கரி. 

ஆனால் அனைத்தையும் எடுத்து உள்ளே வைத்து கொள்வார். ஊரில் இருந்து கொண்டு வரும் காய்கறிகளின் ருசியே அருமையாக இருக்கும். ஸ்ரீகாந்தின் அப்பா ஈஸ்வர் மட்டும் தான் அவர்களுடன் இயல்பாக பேசி பழகுவார். 

ஹாசினி பிறந்ததும், குழந்தையை ஆசையாக தூக்கி ‘எங்கள பெத்த தாயீ’’

‘எங்க குலசாமி’ என்று கொஞ்சினார்கள் பூம்பாவையின் பெற்றோர்கள். அவர்களுக்கு பெண் குழந்தை என்றால் அவ்வளவு இஷ்டம்.

“இங்க பாருங்க மாமா, என் பொண்ணு உங்க பொண்ணு மாதிரி எல்லாம் இல்லை.. நீங்க இப்படி எல்லாம் அவளை கூப்பிட கூடாது… அப்புறம் அவளும் பட்டிக்காட்டு வாசத்தோடு வளருவா.. என்னை கேட்டா நீங்க என் பொண்ணு கூட அதிகமா பேசவே வேண்டாம்னு தான் சொல்லுவேன். அவ என் பிரின்சஸ்.. க்யூட்டி பேபி.. “ என்று விட்டான் ஸ்ரீகாந்த்.

என்ன தவறு செய்தோம் என்று புரியாமலே கண்கள் கலங்க நின்றனர் அவர்கள் இருவரும். இந்த சம்பவம் தான் பூம்பாவை மனதை பெரிதும் பாதித்து விட்டது.

ஹாசினி பள்ளி செல்ல தொடங்கவுமே பூம்பாவைக்கு வாழ்க்கை சலிப்பாக  தோன்ற ஆரம்பித்தது.

அதற்கு பிறகு தான் பூம்பாவை திரும்ப பேச ஆரம்பித்தார். கணவர் கிழக்கு என்றால் மேற்கில் நின்றார், நூடுல்ஸ் என்றால் கூழ் செய்து வைப்பார்.. நாளொரு சண்டையும் பொழுதொரு வழக்கும் என்று அவர்களது வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது.

மாமியார் நாத்தனாரை  எல்லாம் அஸால்ட்டாக டீல் செய்ய தொடங்கிவிட்டார். கணவன் மனைவி இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மனதின் அடி ஆழத்தில் நூலளவு காதலும் இருக்கிறது. அதனால்தான் வாழ்க்கை வண்டி ஓடி கொண்டிருக்கிறது.

சண்டைகள் இருந்தாலும் இருவருமே குழந்தைகள் விஷயத்தில் நல்ல அப்பா அம்மா.. அவர்களுக்கு தேவையானதை எல்லாம் சரியாக செய்து விடுவார்கள். ஒரு குறையும் இருக்காது. இவர்களது சண்டைகளும் குழந்தைகளை பாதிக்கும் என்று மட்டும் இருவருமே யோசிக்கவில்லை.

ஸ்ரீகாந்த் தன் மாமனார் மாமியாருடன் நன்றாக தான் பழகினார். அவர்களது கடைசி காலத்தில் சென்னைக்கே அழைத்து வந்து வைத்தியம் எல்லாம் பார்த்தார். ஆனால் அவரது ஒரே குறை மனதை புண் படுத்துவது போல அவ்வப்பொழுது பேசிவிடுவார். நாகரிக மோகம் கொஞ்சம் இருக்குமே  தவிர நல்லவர் தான்.

கடைசி நாட்களில், அதனால் மகளிடம் தான் “மாப்பிள்ளை கூட சண்டை இல்லாமல் இரு கண்ணு.. எல்லா மனிதர்களிடமும் குறை இருக்கும். குறையை பார்க்காம நிறையை பார்த்து நிறைவா இருடா கண்ணு” என்றே கூறினார்கள்.

இருவரும் சில வருடங்கள் முன்பு ஒருவர் பின் ஒருவராக இறைவனடி சேர்ந்துவிட்டார்கள்.

மனமொத்த தம்பதியினராய் இல்லாவிட்டாலும், வாழ்கை ஏதோ ஒரு ராகத்தில் இசைத்து கொண்டிருந்தது. அதில் அபஸ்வரமாய் முதலில் ஸ்ரீகாந்தின் வேலை போனது. அடுத்து பூம்பாவையின் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டது. வயிற்றில் நீர் கட்டி இருப்பதாகவும், சர்ஜெரி செய்ய கூடிய இடத்தில் அது இல்லை என்றும் மருத்துவர்கள் கூறினார்கள். அதனால் அதிக சோர்வு எரிச்சல் என்று இருந்தார் பூம்பாவை. கணவனின் ஆதரவை எதிர்பார்த்த சமயத்தில் தான் அவரது வேலை போனது. இருவரும் ஒருத்தருக்கு ஒருத்தர் துணை நிற்காமல், மற்றவரின் துணைக்காக எதிர்பார்த்து ஏமாந்து எரிச்சலாகி இருக்கிறார்கள்.

இதில் ஹிருதய் கேம்பஸ்சில் நிச்சயம் வேலை கிடைக்கும் என்று நினைத்திருந்தான். அவனுக்கு கிடைக்கவில்லை. மகனாவது வேலைக்கு சென்றுவிட்டால் நிலைமை கொஞ்சம் சமாளிச்சிடலாம் என்று நினைத்ததில் மண்  விழுந்தது. 

ஹாசினி குடும்ப சூழ்நிலை காரணமோ வேறு காரணமோ அடிக்கடி மயங்கி விழுகிறாள். மருத்துவர்கள் ஒன்னும் பிரச்னையை இல்லை.. ஸ்ட்ரெஸ் என்று கூறினார்கள்.

இப்படி திடீரென்று எல்லா பக்கமும் இடி என்று நொந்து நூடூல்ஸாகி  இருக்கிறார்கள்.

அப்பொழுது தான் சிவங்கரியின் தங்கை, 

“ஏதோ நேரம் சரியில்ல போல ஸ்ரீகா.. நான் சொல்றதை கேளு.. கேரளாவுல ஒரு பெரிய ஜோசியர் ஒருத்தர் இருக்கார். அவரை போய் பாருங்க.. நான் விலாசம் தரேன். அவர் ஏன் இப்படி வரிசையா பிரச்சனை வருது? தோஷம் இருக்கா?  பரிகாரம் எல்லாம் சொல்லிடுவார். நான் தான்டா உன்னை தூக்கி வளர்த்தேன்.. அந்த பாசத்துல தான் சொல்றேன்” என்றார்.

காதம்பரி தான் ஸ்ரீகாந்தை குழந்தையில் பார்த்துக்கொண்டது. அவருக்கு குழந்தை இல்லை. ஸ்ரீகாந்தை தன் சொந்த மகனாக தான் பார்க்கிறார். அவரை  பூம்பாவைக்கும் பிடிக்கும். இருவருக்கும் பிடித்த ஒரே நபர் என்றால் அது  காதம்பரி சித்தி தான்.

“உன் சித்தி சரியான ஹம்பக்.. அவ சொல்றான்னு நீ ஏன்டா போற?” என்று போர் கொடி தூக்கினார் சிவங்கரி.

மாமியாருக்கு இதில் உடன் பாடில்லை என்பது ஒன்றே பூம்பாவைக்கு அங்கே செல்வதற்கு போதுமான காரணமாக இருந்தது.

பெரிதாக இதில் நம்பிக்கை இல்லை என்றாலும் எதை தின்றால் பித்தம் குறையும் என்ற நிலையில் இருந்த ஸ்ரீகாந், “சித்தி என் மேல இருக்கிற அக்கறையில் தானே சொல்றாங்க. நாங்க போய் பார்த்துட்டு வரோம், நீயும் வரியா?” என்றான் அம்மாவிடம்.

 

“நான் வரலை.. என்னமோ செஞ்சுக்குங்க” என்று முடித்துக்கொண்டார் அவர்.

மிருதுளா தான், “தம்பி, முடிஞ்சா எனக்கும் கேட்டுட்டு வாடா.. எங்க வீட்லயும் ஒரே சண்டை சச்சரவா தான் இருக்கு, என்ன நான் வெளியே சொல்றது இல்லை. அம்மாகிட்ட கூட சொல்லலை. அவருக்கு இன்னொரு பொண்ணுகூட தொடர்பு இருக்குமான்னு சந்தேகமா இருக்குடா” என்றார் யாருக்கும் தெரியாமல்.

“அத்தான் அப்படி எல்லாம் இல்லை அக்கா.. சும்மா நீயா கற்பனை பண்ணாதே”

“நீ சொல்ற மாதிரி இருக்கணும்னு தான் நானும் கடவுளை வேண்டிக்கிறேன்.. எதுக்கும் நீ எனக்காக கேட்டுட்டு வாயேன்.. நம்ம பிரதமுக்கும் கல்யாணத்துக்கு  பார்க்க ஆரம்பிக்கலாமான்னு கேட்டுட்டு வா..” என்று கூறி இருந்தார்.

ஹிருதயும் ஹாசினியும் வீட்டிலே இருப்பது ஒரு மாதிரி இருக்கிறது, நாங்களும்    கேரளா வருகிறோம் என்று இணைந்து கொண்டார்கள்.

உடனடியாக ட்ரெயினில் டிக்கெட் கிடைக்கவில்லை. அதிக நாள் கடத்த வேண்டாம் என்று தங்கள் காரிலே கேரளாவிற்கு சென்று கொண்டிருக்கிறார்கள் இவர்கள் நால்வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!