Skip to content
Post Views: 1,770
நதி 16
“அம்மணி.. எங்கன இருக்கே கண்ணு..?” என பரபரப்போடு வீட்டினுள் நுழைந்தார் பரமசிவம்.
Advertisement
“நா இங்க இருக்கெனுங் ப்பா.. என்ன விசயமுங்க..?” என்று தனது ஈரக்கையை துடைத்தபடி வந்து நின்றார் பதினெட்டு வயது கஸ்தூரி பாவாடை தாவணியில்.
“தொழுவத்துல என்னறா கண்ணு செஞ்சிட்டிருந்தே..?”
Advertisement
Advertisement
“அங்கன பூராவும் குப்பையா கிடந்துச்சுங் ப்பா.. அதானுங்க பெருக்கி எடுத்துட்டு இருந்தேனுங்க..”
“அதெல்லா நீயே தா கண்ணு பாக்கோனுமா..? ஆள வுட்டு செஞ்சா ஆவாதா..?” என்றார் பரமசிவம் வருத்தத்தோடு.
Advertisement
“இதுக்கெல்லா ஆளு போட்டா ஆவுங்களா ப்பா.. ஆமா, நீங்க என்ன காட்டுக்கு போறேன்னுட்டு இப்போவே வந்து நிக்கறீங்க..? என்ன ஜோலிங்க ப்பா..?” என்றாள் கேள்வியாய்.
“அட.. அத மறந்துப்போட்டேன் பாரு..! உன்ற கண்ணால விசயமா நம்ம மணியங்கிட்ட சொல்லியிருந்தேனில்ல. நல்ல இடமா கொண்டு வந்திருக்கான் கண்ணு.
அதே உன்ற கிட்ட விசயத்தே சொல்லிப்போட்டு போவலாமுன்னு காட்டுக்கு கூட போவாம திரும்பிட்டேங் கண்ணு..” என்றார் உற்சாகமாக.
“ஓ.. அப்புடிங்களா..? சரிங் ப்பா..” என்ற கஸ்தூரியின் சுருதி இறங்கி ஒலித்தது.
“என்றா கண்ணு.. கொரலு உள்ளார போவுது.. உன்ற அப்பன உட்டுப்போட்டு எப்புடி கண்ணாலத்த பண்ணன்னு யோசிக்கறையோ..?
அந்த விசனமே வேணாங் கண்ணு.. மாப்பிள்ள தூரமெல்லா இல்ல..
நம்ம காட்டுக்கு வடக்கால பெரிய தோட்டமிருக்கல்லோ.. அந்த தோட்டத்துகாரர் ராஜவேலு ரெண்டாவது மயனுக்குத்தேன் உன்னைய கேட்கறாங்க கண்ணு..” என்றதும் மனதில் ஒரு உற்சாகம் கஸ்தூரிக்கு.
இளம் வயதில் தாயை இழந்தவளுக்கு தாயுமானவராய் இருந்து வளர்த்த தந்தையை தனியே விட்டு எங்கோ திருமணம் செய்து போவதில் துளியும் விருப்பமில்லை.
இப்போது பரமசிவம் சொல்லும் வரனை முடித்தால், பக்கத்து ஊராய் இருந்தாலும் எப்படியாவது தினமும் அவரை சந்தித்து கொள்ள நல்ல வாய்ப்பு.
நேரம் கூடி வந்தால் அவரோடு இருக்கவும் முடியும்.. என்ற எண்ணத்தால் அவருக்கு தன் சம்மதத்தை தெரிவித்தார் சந்தோஷமாகவே.
ஏற்கனவே பெண்ணை நன்கு தெரியும் என்பதால் இன்னும் ஒரு வாரத்தில் சாங்கியத்திற்காக பெண் பார்க்கும் படலமும், அன்றே நிச்சயதார்த்தமும் வைப்பது என முடிவு செய்யப்பட்டிருந்தது.
அன்று மதியம் தந்தைக்கு உணவு கொண்டு சென்றவள் அவள் ஆசையாய் வளர்க்கும், ‘செல்வி..’ என்ற ஆட்டு குட்டியையும் உடன் அழைத்து வந்திருந்தாள்.
கஸ்தூரியின் விளையாட்டு தோழி என்றும் சொல்லலாம் அதை.
கஸ்தூரி உணவு கூடையை மோட்டர் அறையில் வைத்துவிட்டு வருவதற்குள் செல்வி எங்கோ சென்றிருக்க,
“ஏன்டீ செல்வி.. எங்கன இருக்கடீ..?” என சத்தமாக அழைத்துக்கொண்டே காட்டுக்குள் தேடலை தொடங்கினாள் கஸ்தூரி.
“அம்மணி.. செலுவிய தேடறீயோ..? அது இந்தா.. அந்த பக்கமா போச்சுது..” என்று காட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர் ஒரு திசையை காட்ட, அந்த திசையில் தேடலை தொடந்தபடி முன்னேறினாள்.
“அடி செல்வி.. எங்கடீ போனவ..?” என கத்திக்கொண்டே தனது பாவாடையை லேசாக உயர்த்தி பிடித்தபடி வந்தவளை தூரத்திலிருந்து பார்த்திருந்த இரு கண்ணில் அத்தனை சுவாரஸ்யம்.
அவளோ தேடலின் மும்முரத்தில், ‘எங்கு வந்திருக்கிறோம்..?’ என தெரியாது வந்து கொண்டிருக்க அவளின் கை யாராலோ பற்றி இழுக்கப்பட்டது.
அதில் அதிர்ந்து கத்தப்போனவள், “ஏ..புள்ள.. கத்திப்புடாத.. நாந்தா..” என்ற கம்பீரக்குரலில் யாரென புரிந்து திரும்ப, அவளின் எண்ணத்தை பொய்யாக்காமல் அவளின் முன் புன்னகை பூக்க நின்றிருந்தான் தயாநிதி.
அவளுக்காக பரமசிவத்தால் முடிவு செய்யப்பட்டிருக்கும் மாப்பிள்ளை.
சிறுவயது முதலே அடுத்த அடுத்த காடு அவர்களுடையது என்பதால் தூரமிருந்து ஒரு சில முறை பார்த்த பழக்கமிருக்க அவனை கண்டதும் அடையாளம் தெரிந்து விட்டது பெண்ணவளுக்கு.
அவனை இத்தனை அருகில் இதுவரை கண்டதுமில்லை. உரிமையாய் பேசியதுமில்லை. இப்போது இப்படி வந்து நிற்க பெண்ணவளுக்கோ நாணமும், அச்சமும் அவசரமாய் வந்து ஒட்டிக்கொண்டது.
‘அய்யோ..! இங்கன வந்து.. இப்புடி நாங்க நிக்கறத யாராச்சும் பாத்தாக்க என்ன நெனப்பாங்க..?’ என எண்ணி மருண்டு விழித்தவள்,
அவசரமாக அவ்விடம் விட்டு ஓடி விட நினைத்து திரும்ப அவள் எண்ணத்தை யூகித்த தயாநிதி,
“ஏ மானுக்குட்டி.. நில்லு..” என்றான் வேகமாய்.
“என்ன..! மான் குட்டியா..? நா இங்கன ஆட்டுக்குட்டி தேடித்தானே வந்தேன்.. மான் குட்டி இருக்கா என்ன இவுக காட்டுல..? எங்க இருக்கு..?” என ஆச்சர்யமாக கண்கள் விரித்து அவன் புறம் திரும்பி நின்றவள் சுற்றிலும் தேட,
அவளின் மைவிழியின் பாவனையில் மொத்தமாய் சாய்ந்திருந்தான் அந்த ஆண்மகன்.
அவளின் தேடலை கண்டு இதழ் வளைத்து ஓர் நளின புன்னகையை உதிர்த்துவாரே,
“எதுர்லயே நிக்குது. கண்ணுக்கு அகப்படலையோ..?” என்றான் குறும்பாய்.
“தெரியலையே..!” என மேலும் விழியை சுழற்றியவளை கண்டு சத்தமாக அவன் சிரிக்க,
அதில் அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு ஏதோ புரிய, “விளாடுறீங்களா என்றகிட்ட..?” என்றாள் முகம் சுருங்க,
“அது தெரிய என்ற மான்குட்டிக்கு இம்புட்டு நேரமாச்சாக்கும்..” என்றவனின் வார்த்தையில்,
“என்ன..! என்னையவா அப்புடி சொல்றாங்க..?” என விழி விரித்தவள்,
அதன் பிறகே இருக்கும் நிலை உணர்ந்து மீண்டும் ஓடப்பார்க்க அவளின் குறுக்கே வந்து வழி மறைத்தவன்,
“ஏ மான் குட்டி.. உன்னைய நானென்ன செஞ்சுப்புடுவேன்னு இந்தா ஓட்டமெடுக்கறே..?” என்றான் சற்று காட்டமாகவே.
“அதில்லங்க.. அப்பா தேடுவாங்க.. அதே..” என அவன் முகம் பார்க்காமல் தாவணி முந்தனையை திருகியபடி சொல்ல,
“அதெல்லா தேடமாடாக.. நீ சித்த நேரோ இங்கன இரு..” என்றிட,
“அடி ஆத்தே.. கண்ணாலத்துக்கு முன்னே இப்புடி பாத்து பேசறது தப்புங்க..” என்று அவள் பதற,
“உன்னைய என்ன.. என்ன கட்டிப்புடி ன்னா சொல்றேன்..? சித்த நேர பேசுன்னு தானே சொல்றேன்.. அதுக்கு உன்ற பேரு மாதிரி துள்ளிக்கிட்டு ஓடறவ.. சரியாத்தேன் பேரு வச்சிருக்கேன்.. என்னோட மானுப்பொண்ணே..” என்று அவன் செல்லம் கொஞ்ச,
அவன் முதலில் சொன்ன விசயத்தில், “ஆத்தே..! கட்டி புடிக்கவா..?” என அதிர்ந்து விழித்தவள்,
அவனின் பிந்தைய பேச்சின் சாராம்சம் புரிந்து வெக்கத்தில் முகம் சிவந்தாலும், அவனின் ஆசைக்கு இணங்க முடியாது தவிப்புடன் பார்த்தவள்,
“இல்லங்க இது தப்பு.. இன்னு நமக்கு நிச்சயங்கூட ஆவல..” என அவள் மெல்லிய குரலில் சொல்ல,
அவளின் அச்சமும் தயக்கமும் உணர்ந்தவன், “அப்போ.. நிச்சயோ முடுஞ்சாக்க பேசுவீயா.. மான் குட்டி..?” என்றான் ஆசையாய்.
“அதெப்புடிங்க..’ என ஆரம்பித்தவள், அவனின் எதிர்பார்ப்பான பார்வையில் தயங்கி பின் சரியென தலையசைக்க,
“என்ற ரொம்ப வருஷத்து கனவு நீ. அது கூடிய சீக்கிரோ நடக்க போவுது.
வெள்ளிகிழம நிச்சய முடுஞ்சப்பறோ வாக்கு தவறாம நீ வந்துடுவேன்னு இங்கனவே காத்திருப்பேன் மான் குட்டி.. ஏமாத்தி புடாதே..” என கண்கள் ஒளிர புன்னகையோடு தனது முறுக்கு மீசையை லேசாக முறுக்கி விட்டவாறு சொல்லி அவளின் வழியை விட்டு விலகி நின்றான்.
அவன் சொன்னவற்றை அசைபோட்டபடி தலை குனிந்து அவனை கடந்து வந்தவள் சிறிது தூரம் வந்ததும் அவன் சொன்னதன் அர்த்தம் உணர்ந்து,
‘அப்போ.. அவுக நம்மள விரும்புனதால தா பொண்ணு கேட்டிருக்காங்களா..?’ என அதிர்ந்து திரும்பி பார்க்க அதற்காகவே காத்திருந்தது போல,
தனது கரத்தில் முத்தம் வைத்து அதை அவள் புறம் பறக்க விட அழகான வெக்கச்சிரிப்போடு அவ்விடம் விட்டு ஓடி மறைந்தாள் கஸ்தூரி.
‘ஓட்டத்த பாரு.. மான் மாதிரி துள்ளிட்டு..’ என நினைத்தவன்,
“பாத்துப்போ.. வரப்புல விழுந்துடாதே மான் குட்டி..” என்றான் கத்தி.
அதற்கு பதிலாக தலையை வேகமாய் உருட்டினாலும் அவளின் ஓட்டமும் நிற்கவில்லை.
படபடவென அடித்துக்கொண்ட இதயத்தோடு முகம் முழுக்க வெக்கத்தை சுமந்து கொண்டு தனது வீட்டை அடைந்தவளுக்கு அன்று முதல் அடியை எடுத்து வைத்து அவளின் மனதில் புகுந்திருந்தான் தயாநிதி.
error: Content is protected !!