Skip to content
Post Views: 1,626
நாட்கள் வேகமாய் கரைந்து நிச்சயமும் நடந்து முடிந்திருக்க, காதல் பறவைகளாய் இருவரும் உலா வரத்தொடங்கினார் அவர்களின் தோட்டத்தில்.
தவறான தொடுகையோ பேச்சோ இன்றி கண்ணியமான பார்வையோடு.. இடைவெளி விட்டு நின்று காதல் மொழி பேசும் தயாநிதியை மிகவும் பிடித்து போனது கஸ்தூரிக்கு.
Advertisement
சிறு பெண்.. என்ற அவனின் எண்ணம், அவனை கண்ணியமாய் அவளிடம் நடக்க வைத்ததோ என்னவோ..?!
தினமும் அவனின், “மான் குட்டி..” என்ற கொஞ்சல் மொழி கேளாமல் அன்றைய நாளே நிறைவு பெறாது அந்த பாவைக்கு.
Advertisement
Advertisement
தோட்டத்திற்கு வேலைக்கென வருபவர்களில் யார் பார்த்தாலும் திருட்டுத்தனம் செய்யாத.. ஒழுக்க நெறியோடு இடைவெளி விட்டு அமர்ந்து பேசுபவர்களை கண்டு புன்னகையோடு கிண்டலடித்து செல்வது வழமையான ஒன்றாகி இருந்தது.
மாதம் வேகமாய் கடந்து இன்னும் சில தினங்களில் திருமணம்.. என இருந்த நிலையில்..
Advertisement
அன்று பந்தக்கால் நடுவதற்காக சொந்தங்கள் கூடியிருக்க மணமகளுக்கே உரித்தான பூரிப்போடு, ‘இன்னும் சில தினத்தில் தன்னவனின் அருகில் தான்..’ என்ற எண்ணம் கொடுத்த வெக்கத்தோடு புடவை உடுத்தி மஞ்சள் பூசிய முகத்தோடு அமர்ந்திருந்தாள் கஸ்தூரி.
தயாநிதியோடு அவளின் வாழ்க்கை பற்றி ஆயிரமாயிரம் விசயங்களை அவன் ஆசையாய் அவளிடம் பேசியிருந்தானே..
அந்த இனிய நினைவுகள் கொடுத்த சுகத்தில் இன்னும் அதீதமாய் ஜொலித்தது அவளின் பூமுகம்.
பெற்றவராய் பரமசிவத்திற்கு அத்தனை நிறைவு தன் மகளின் முகம் பார்த்து.
பந்தக்கால் ஊன்றி முடித்து, ‘நலங்கு என்றைக்கு, யார் வைப்பது..?’ என அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கும் போது பரமசிவத்தின் போன் ஒலித்தது.
புதிய எண்ணாக இருக்க யோசனையோடு எடுத்தவர் அதில் சொன்ன செய்தியில், “அய்யோ… எம்புள்ள வாழ்க்கே..” என கதறலோடு தலையில் அடித்து அழ, கூடியிருந்த சொந்தங்கள் அனைவரும் ஒரு நொடி ஸ்தம்பித்து பின் என்னவென அவரை உசுப்பி கேட்க,
“மாப்.. மாப்ளே..” என்றவருக்கு அடுத்த வார்த்தை தொண்டை தாண்டி வர மறுத்தது.
வெளியே கேட்ட தன் தந்தையின் குரலில் வாசலுக்கு வந்திருந்த கஸ்தூரிக்கு மனதில் லேசாக அச்சம் பரவ, “அவருக்கு என்னாச்சுங்ப்பா..?” என்றாள் தவிப்போடு தந்தையை நெருங்கி.
“அய்யோ.. நா என்னன்னு சொல்லுவே..? மணக்கோலத்துல சித்த நாள்ல இருக்க வேண்டிய என்ற மகள இப்படி நிறுத்திப்புடுச்சே அந்த சாமி..” என அவர் மேலும் கதறியழ,
கஸ்தூரியின் மொத்த உடலும் ஆடி போனது அவர் சொல்ல வந்தது புரிந்தது போல.
“ப்பா… அவ.. அவரூ..” என அப்போதும் உறுதியாக்கி கொள்ள வினவ,
அவளை அணைத்துக்கொண்ட உறவுகள், “மனச உட்டுப்போடத கண்ணு. நாங்க இருக்கோம்..” என தேற்ற தொடங்க,
மொத்த உடலும் உணர்வின்றி மரத்த நிலையில் உறவுகளின் கை பொம்மையாய் மாறி போனாள் அப்போதிருந்து.
“பரமூ.. விசயோ தெரிஞ்சு போகாத இருந்தா நல்லா இல்ல.. வா, ஒரெட்டு போயிட்டு வந்திடுவோம்..” என வந்திருந்த உறவுகளில் சிலர் தயாநிதி வீட்டிற்கு பரமசிவத்தோடு சென்றனர்.
அவர்களின் வருகை கண்ட தயாநிதியின் தாயோ ஆங்காரமாய் வந்து அவர் முன் நின்றவர்,
“வாய்யா.. மவராசா.. உன்ற புள்ளைக்கு பரிசத்த போட்டு.. என்ற புள்ளைய பாடையில ஏத்திட்டாளே..
அவள பாத்த அப்பவே என்ற புள்ளைக்கு அந்த எம தேதிய குறிச்சிட்டானோ..!
எம்புட்டு ஆசையா காலைல வண்டி எடுத்துட்டு போனா.. இப்புடி மூட்டையா கட்டி போட்டிட்டாங்களே.. என்ற புள்ளைய..
அந்த ராசி கெட்டவ வேணாமுன்னு சொன்னேனே.. யாருமே கேட்கலையே..!
பெரிய மனுஷி ஆகவே.. அவ ஆத்தால முழுங்குனா.. இப்போ, தாலி வாங்கற நேரத்துல அவளுக்குன்னு வந்தவன விழுங்கிட்டாளே.. பாவி நல்லா இருப்பாளா அவ..
பைய ஆசப்பட்டான்னு.. தகுதி பாக்காத கல்யாணத்த நடத்த பாத்தாங்களே..
இப்போ அவனோட ஆசையெல்லாம் ஆவியா போச்சுதே..” என மார்பில் அடித்துக்கொண்டு கதறியவரை கைத்தாங்கலாக அவர்களின் உறவுகள் பிடித்துக்கொள்ள, அங்கிருந்த அத்தனை பேரின் வாயிலும் அவலாகி போனாள் கஸ்தூரி.
‘அத்தனை ஆசையோடு வாழ நினைத்த வாழ்க்கை.. தொடங்காமல் இப்படி அந்தரத்தில் நிற்கும்படி ஆனதே..?’ என ஏற்கனவே வருத்தத்தில் அங்கு வந்தவருக்கு,
இந்த விதமான பேச்சுக்கள் மகளின் வாழ்க்கை பற்றிய பயத்தை விதைக்க வீடு திரும்பும் வழியிலேயே நெஞ்சை பிடித்துக்கொண்டு சாய்ந்துவிட்டார் பரமசிவம்.
அடுத்து அவரை காப்பதற்கான போராட்டம் தொடங்கியது.
உணர்வு துடைத்த முகத்தோடு மூலையில் எங்கோ வெறித்து அமர்ந்திருந்த கஸ்தூரிக்கு தந்தையின் நிலையை சொல்ல எந்த எதிர்வினையும் ஆற்றக்கூட இயலாதவளாய் விழித்தவளை கண்டு பயமெழுந்தது அனைவருக்கும்.
அதோடு கண்விழித்த பரமசிவமும் மகளை எண்ணி தவிக்க, “இப்ப என்ன பரமூ.. அந்தம்மா பேசினா நம்மூட்டு புள்ள அதிஷ்டக்கட்டையா போயிடுவாளோ..?
நீ மட்டும் சரின்னு ஒத்த வார்த்தே சொல்லு.. இந்த ஊரே பாக்க அதே மூகூர்த்தத்துல நம்ம புள்ள கண்ணாலத்த நடத்த நாங்க ஆச்சு..” என பரமசிவத்தின் பங்காளிகள் சிலர் சொல்ல,
‘மகளின் வாழ்க்கை சீரானால் போதும்..’ என்ற எண்ணத்தில், ‘மகளின் மனநிலை இப்போது எப்படி இருக்கும்.. வருபவன் அவளின் மனதை உணர்ந்து நடந்து கொள்வானா..?’ என்பதை பற்றி கூட நினைக்காமல் அவர் தலையசைக்க,
அடுத்த நாளே ஜெயசீலன் கஸ்தூரியின் மணவாளனாய் சொந்தங்களால் நிறுத்தப்பட்டார்.
வசதி வாய்ப்பு குறைவு.. என்பதை தாண்டி தாயோடு சாதாரண கூலி வேலை செய்தாலும் நல்ல பிள்ளை என சான்றோடு முன்நிறுத்தப்பட்டவரிடம் வேறெந்த குறையும் காண முடியாததால் அவரையே ஒருமனதாக முடிவு செய்து கஸ்தூரியிடம் விசயம் பகிரப்பட்டது.
ஏற்கனவே ஜடமாய் மாறியிருந்தவளுக்கு இந்த செய்தி இன்னும் அவளை உள்ளே சுருண்டு போகச்செய்தது.
மறுக்கும் வாய்ப்பு.. என்பது அவளின் தந்தை தன் முன் கண்ணீரோடு கையேந்தி நின்ற போது தோன்றவும் இல்லை.
தயாநிதியோடு திருமணம் முடிவு செய்யப்பட்ட அதே மூகூர்த்ததில்.. நெஞ்சில் பெரும் வலியோடு மற்றொருவனின் மனைவியாய் மாறியிருந்தாள் கஸ்தூரி.
ஜெயசீலனின் தாயார் கமலம்மாவும் அவளை தாங்கிக்கொள்ள, பரமசிவமோ கண்ணில் பெருகும் நீரோடு ‘மகளின் வாழ்க்கை சிறப்பாக அமைந்து விட்டது. இந்த வாழ்க்கையில் சீரும் சிறப்புமாக அவள் வாழ வேண்டும்..’ என்ற வேண்டுதலோடு வழியனுப்பி வைத்தார் புகுந்த வீட்டிற்கு.
சுற்றி நடப்பவை விழிப்பார்வைக்கு பட்டாலும்.. அது அகம் வரை செல்லாமல், ஆட்டுவிப்போர் கைவிசைக்கு ஆடும் கைப்பாவையிருந்தாள்.. அந்த சின்னப்பெண்.
மனைவியின் மனநிலை பார்த்து.. காத்திருந்து.. மணவாழ்க்கை தொடங்க ஜெயசீலன் ஒன்றும் சீரியல் ஹீரோ இல்லையே..!
ஆசாபாசங்கள் நிறைந்த சாதாரண மனிதன். அழகு சிலையாய் கண்முன், ‘மனைவி..’ என்று வந்து நின்ற பெண்ணின் உடல் தான் அப்போதைக்கு அவரின் தேவையென்றாகிவிட, அடுத்த மாதமே ஜெயசீலனின் மகள் கஸ்தூரியின் வயிற்றில் உதித்திருந்தாள்.
விசயம் கேள்விப்பட்ட பரமசிவத்திற்கு, ‘மகளின் வாழ்க்கை செழித்துவிட்டது..’ என்ற சந்தோஷம் எழ ஆனந்தமாய் வந்தவர் மகளின் முகத்தை கண்டு துடிதுடித்து போனார்.
கண்ணில் துளியும் ஜீவனின்றி தன் உடலின் பாரமே தன்னால் தாங்க முடியாது.. எனும்படியாக ஓய்ந்து போன தோற்றத்தோடு நின்றவளை கண்டு பதறி போனார்.
ஜெயசீலனின் தாயும், மற்றவர்களும்.. மசக்கை தந்த ஓய்ந்த தோற்றமென சொன்னாலும், தந்தைக்கு தெரியாதா மகளின் நிலைக்கு காரணம்..?
‘அவசரப்பட்டு விட்டோமோ..?’ என முதன் முறையாக பயம் அவரை கவ்விக்கொண்டது அந்த கணம் முதல்.
கிடைக்கும் நேரமெல்லாம் மகளிடம் ஓடி வந்து அவளை பார்த்து செல்பவருக்கு.. மனைவியின் இழப்பு இப்போது பேரிழப்பாய் தோன்றியது.
‘அவ உசுரோட இருந்திருந்தா.. என்ற புள்ள மனச புருஞ்சு, அப்போ பேசியிருப்பாளோ..?
இப்பவும் அவ உசுரோட இருந்தா என்ற புள்ளைய கூட்டிட்டு போயாச்சும் கூடவே வச்சு பாத்துப்பேனே..! இப்புடி என்ற புள்ளைய கலங்க வச்சுட்டேனே..
இந்த பாவத்த எப்புடி கழுவ போறேனோ..’ என்ற இயலாமை தந்த வலி அவருள் பெருக அவரிடம் தள்ளாமை மெல்ல ஆட்கொள்ள தொடங்கியது.
மாதங்கள் கடக்க வயிற்றில் அசையும் சிசுவின் அசைவில் மெல்ல தெளிய ஆரம்பித்தாள் கஸ்தூரி.
வாணியின் வரவு அவளையும் மறுபிறவி கொண்டது போல உயிர்ப்பித்திருக்க தனது கடுமையான கடந்த காலத்திலிருந்து மீண்டிருந்தாள் முழுதாய்.
பூந்தேரிலே நீ ஆடவே
உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்
ராஜாங்கமே ஆனந்தமே
நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்
மானே உன் வார்த்தை ரீங்காரம்
மலரே என் நெஞ்சில் நின்றாடும்
முத்தே என் முத்தாரமே
சபையேரும் பாடல்
நீ பாடம்மா நீ பாடம்மா
error: Content is protected !!