48 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:1,276
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் அத்தியாயம் 48.1
.
“சலி பிக்கி மாமா. ஆலி பேபி, பெலிய பாவல சட்டல வலுவேன்” என உறங்கி வழியும் விழிகள் இரண்டையும் கடினபட்டுப் பிரித்து வைத்து, தன் விக்கி மாமனோடு பேசிக் கொண்டிருந்தாள் யாழினியாள்.
“டேய், சரியான நேரத்துக்கு அங்க இருப்போம். இப்போ பேபிய தூங்க விடுடா” எனக் கைப்பேசியை அணைத்து, மகளைப் படுக்கைக்குத் தூக்கிச் சென்றான் கௌதமன்.
Advertisement
“அப்பா, பிக்கி மாமாட்ட போவாம்” என்றாள் குழந்தை கண்களைக் கசக்கிக் கொண்டே.
“டூ டேஸ் கழிச்சு போலாம் சரியா? இப்போ தூங்கலாம்” என்ற தகப்பனைப் பார்த்த குழந்தை, “டூ தேஸ்சா?” என இரு விரல்களைக் காட்ட, “ஆமா” என்றவன், மகளை மெத்தையில் கிடத்தி, விளக்கணைத்து அவனும் படுத்தான்.
“எப்போ டூ டேஸ் வலும்?” என மீண்டும் ஆரம்பித்தாள் குழந்தை.
Advertisement
“டூ டைம்ஸ் தூங்கி எழுந்து, ஸ்கூல் போயிட்டு வந்தா, டூ டேஸ் வரும். விக்கி மாமாவ பாக்கணும்ன்னா இப்போ தூங்கு” என்றபின் யாழி வாய் திறக்கவில்லை. இரு முறை தூங்கி விழித்தால் தன் பிக்கி மாமாவை பார்க்கலாம் என்ற ஆசையில் கண்களை மூட, அடுத்த இரண்டு நிமிடங்களில் மகளும், தகப்பனும் உறங்கியிருந்தனர்.
Advertisement
கடைசிக் கட்ட படப்பிடிப்பு சென்று கொண்டிருக்க, கௌதமனுக்கு வேலை சற்று அதிகமே. இரவாகிவிட்டது இன்று வீட்டிற்கு வந்து சேர. யசோவின் புண்ணியத்தால் மகள் உண்டு, பல் தேய்த்து, குளித்து, கதை படித்து என அனைத்து இரவு சடங்குகளையும் முடித்து இரவு உறக்கத்திற்குத் தயாராகி இருந்தாள். விட்டால் போதும் என ஓடிவந்தவன், இருந்த அலுப்புக்குப் படுத்ததும் உறங்கியிருந்தான்.
காலை விடியல் அப்பாவிற்கும் மகளுக்கும் என்றும் போல் விடிந்தாலும், அடுத்த பத்தாவது நிமிடம் மலரிடம் இருந்து அழைப்பு வந்தது. அவசரமாகத் தன் அன்னையின் வீட்டுக்குச் செல்லவிருப்பதால் இருதினம் விடுப்பு கேட்டாள். மலர் இல்லாது எப்படிச் சமாளிப்பான்? ஒரு நாள் பால் காய்ச்சிய சாதனைக்குப் பின் அந்தப் பக்கம் சென்றானில்லை. இன்று எதைக் கொடுத்து மகளின் வயிற்றை நிரப்புவான்? மதிய உணவுக்கு எதைக் கொடுத்து அனுப்புவான்?
கைப்பேசியைக் கீழே வைத்தவனை “அப்பா…” எனக் குழந்தை இழுத்துக் கொண்டாள். இவன் கேளாதே காலை உணவுக்கு அழைத்தார் அரவிந்தன். காலை உணவை முடித்தவனிடம், “யாழிய நாங்க பார்த்துகிறோம் பா. நீ கிளம்பு” என நெஞ்சில் பால் வார்த்தார் பெரியவர்.
Advertisement
காலை வேளை மகளோடு ஓடிப்பிடித்து மூச்சு வாங்கச் சென்றது யசோதராவிற்கு. “டூ டைம்ஸ் தூண்னா ஆலி பேபியும், அப்பாவும் நாளைக்கு பிக்கி மாமா வீட்டுக்குப் போலோம்” எனத் தந்தையும் தானும் சென்னைக்கு இரு தினங்களில் செல்லப் போவதை ஒருவருக்கும் புரியாத மழலையில் ஒப்பித்தாள்.
“அம்மாவும் டாடா போயிட்டு டூ டேஸ்ல வருவேன். நீ வரும் போதும் அம்மா இல்லாட்டா தேடக் கூடாது” என்று இவள் கூறியது அந்தச் சிட்டுக் குருவிக்கு என்ன புரிந்ததோ மண்டையை மண்டையை ஆட்டி வைத்தாள் குழந்தை.
ஓர் இடத்தில் நிற்காது ஓடிக் கொண்டிருந்த குழந்தையை ஒருவழியாகக் கிளப்பி, அவளை விளையாட்டு விடுதியில் விட்டு வந்தாள் யசோதரா. விட்டினுள் நுழையும் வேளை சித்தார்த்திடமிருந்து அழைப்பு வந்தது.
அவன் ஆரம்பிக்கும் முன்னமே, “என்னோட மூணு ஃபுளூட்ஸ், கிரீன் ஸாரி, நீ கேட்ட சென்பா அத்த போட்டுக் கொடுத்த இறால் ஊருக்காய்… எல்லாம் எடுத்து வச்சுட்டேன். சாப்ட்டு கிளம்பினேன்னா, பத்தரைக்கு முன்னமே பஸ் ஸ்டாப்ல இருப்பேன். நீ என்னை கொச்சின்ல நைட் ஏழேகாலுக்கு பார்க்கலாம். பஸ் ஸ்டாப்புக்கு வரதுக்கு அரை மணி நேரம் முன்னமே உனக்கு ஒரு மெசேஜ் போட்டுட்டு, லொகேஷன் ஷேர் பண்ணிடுவேன். அங்க இருந்து உன்ன தவிர யார் கூடவும் போக மாட்டேன்.” என ஒரே மூச்சில் கூற, வாய் விட்டுச் சிரித்தான் சித்தார்த். அவன் தான், கச்சேரிக்காக கொச்சி பயணம் என்றதுமே, ‘கவனமா வரணும்’ என ஆரம்பித்து விட்டானே.
அவர்கள் குழுவில் இருக்கும் அனைவரும் சென்னையிலிருந்து நேற்று இரவே கிளம்பி இன்று காலையில் கேரளா அடைந்திருந்தனர். இவளும் இரவே பயணப்படலாம் என நினைத்திருந்தாள். அரவிந்தன் இரவு பயணத்திற்குச் சரி என்றிருக்க, இவன் முடியவே முடியாது என மறுத்து அவனே காலை நேரப் பயணச் சீட்டை வாங்கியிருந்தான்.
“சாயங்காலம் ரிகர்சல்ல வச்சுட்டு, நைட் வந்து நின்னா சரியா வருமா?” எனக் கேட்டும் அவன் ஒத்துக் கொள்ளவே இல்லை. “ஒரு மணி நேரம் லேட்டானா ஒண்ணும் ஆகாது” எனக் கூறிவிட்டான்.
“சிரி கிளம்பி வா. சரியா ஏழுக்கு ஸ்டாப் வந்து, உனக்காக காத்திட்டு இருப்பேன்” எனக் கைப்பேசியை வைத்தான் சித்தார்த்.
அவன் கைப்பேசியை வைக்கவும், அறை வாயிலில் நின்றிருந்த அரவிந்தன், “சார்ஜர எடுத்து வச்சுகோமா” என மகளுக்கு நினைவு படுத்த, “தேங்க்ஸ் பா, மறந்துட்டேன்” என அதையும் எடுத்து கைப்பையில் வைத்தாள்.
“நேரம் ஆகுது, சாப்பிட வாமா” என அழைத்தவரை, அழைத்தது அவரின் கைப்பேசி.
பெட்டி மற்றும் கைப்பையை நடுகூடத்தில் வைத்து, அப்பாவை தேடி போக, “சரி மா. சரியா ரெண்டு மணிக்கு வந்துடுறேன்” எனக் கைப்பேசியை வைத்தவர், யோசனையோடே கைப்பேசியைப் பார்த்து நின்றிருந்தார்.
“யார் பா?”
“ம்ம்ம்…?” என்றவர் முகத்தில் கவலை அப்பிக் கிடந்தது.
“ஃபோன்ல யாரு? எங்க போறீங்க ரெண்டு மணிக்கு?” எனக் கேட்கும் மகளிடம் எதையும் மறைக்கும் எண்ணமில்லாதவர், “டாக்டர் ரிப்போட்ட பார்த்துட்டு இன்னைக்கே வர சொன்னாராம். ரெண்டு மணிக்கு அப்பாயிண்ட்மென்ட் கொடுத்திருக்காங்க” என்றார்.
“ஓஹ்…” என்றவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. ஏதேனும் அவசரம் என்றால் மட்டுமே இப்படியான அழைப்பு வரும் என அறிவித்திருந்தனர். அவசர அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்தவள் அமைதியாக அமர்ந்துவிட, “நீ சப்பிட்டு கிளம்பு மா. நான் போய் பார்த்துட்டு என்னன்னு சொல்றேன்” என மகளைக் கிளப்பினார்.
“இல்ல பா… நானும் வரேன்.” என்றாள் எதையும் யோசியாது.
“மா… தப்பு மா. கமிட் பண்ணி இருக்க. உன்ன நம்பினவங்கள ஏமாத்திறது சரி இல்ல. நீ கிளம்பு” என்றார். அவள் என்ன கூறியும் அவர் காதில் வாங்கவே இல்லை.
“முதல்லயே முடியாதுன்னு சொல்றது வேற. நம்பிக்கை கொடுத்த பின்னாடி உன் வார்த்தைக்கு நீ மதிப்புக் கொடுத்துத் தான் ஆகணும்” என்றார் பிடிவாதமாய்.
ஓரளவிற்கு மேல் அப்பாவிடம் போராட முடியாது, பிரபுவோடு பேசி, சித்தார்த்திற்கு அழைத்து, விஷயத்தை கூறியவள், “என்னால அப்பாவ தனியா விடமுடியாது. நைட்டுக்கு டிக்கெட் கிடைக்குமான்னு பாரு. நாளைக்கு நைட் தான ஈவன்ட், காலையில நான் வந்ததும் ஒரு தரம் ரிகர்சல் பார்த்துகலாம்” என இரவு பேருந்தில் பயணச்சீட்டை வாங்கிக் கொண்டாள்.
இரண்டு மணிக்கு மருத்துவமனைக்குச் சென்றால், மலரும் இல்லாத நிலையில் யாழியை யார் அழைத்துக் கொள்வது? அனைத்தும் பின்னுக்குப் போக யாழி மட்டுமே யசோவின் முன் நின்றாள். கௌதமனை அலைபேசியில் பிடிப்பதற்கே பிரம்ம பிரயத்தமாகி போனது.
“நீ அப்பாவ கவனி யசோ. நான் மூணு மணிக்கு வந்து கூப்பிட்டுகிறேன்” என யசோவின் டென்ஷனை குறைத்தான்.
மதிய உணவை முடித்து மருத்துவமனை வந்து சேர்ந்தனர் அப்பாவும் மகளும். காலையில் ஆரம்பித்த பரபரப்பு அவளுக்கு மட்டும் தானா? அப்பாவைப் பார்த்தால், அவர் அமைதியாக இருப்பது போல் தோன்றியது. படபடப்பை அடக்கும் வழி தெரியவில்லை யசோவிற்கு. எதை எதையோ யோசித்து தன் கவனத்தைத் திசை திருப்ப முயன்று தோற்றாள்.
கைப்பேசி சிணுங்கியது. கௌதமனிடம் இருந்து குறுந்தகவல் வந்திருக்க, அவசர அவசரமாக வாசித்தாள்.
‘நான் கிளம்பிட்டேன். பேபிய நேரத்துக்கு கூப்பிட்டுகிறேன். நீ டென்ஷன் ஆகாத. ஐயாக்கு ஒண்ணும் ஆகாது. ஏதாவது பிரச்சைனைன்னு சொன்னா… என்ன ஏது… என்ன டிரீட்மென்ட், டிரீட்மென்டோட சைட் எஃபெக்ட், ரெக்கவரி டைம்ன்னு எல்லாத்தையும் கவனமா கேட்டுக்கோ. வேற டாக்டர்சையும் பார்க்கலாம். நீ பயந்து அவரையும் பயமுறுத்தாத. நான் இருக்கேன். எவ்வளவு செலவானாலும் பார்த்துக்கலாம். டென்ஷன் ஆகாத.’ என்ற வார்த்தைகளை மீண்டும் மீண்டும் படித்தாள். தனித்து நின்றிருந்தவளின் கரத்தை ஆறுதலாகக் கௌதமன் பற்றியது போல் தோன்றியது. என்னவோ அந்த நொடி உள்ளுக்குள் ஓர் அமைதி ஏற்பட, மெல்லப் படபடப்பு குறைந்தது.
இரண்டு நாற்பது போல் கௌதமன் அழைத்தான் யசோதராவிற்கு. “என்ன சொல்றாங்க?” எனக் கேட்டவனிடம், “இன்னும் டாக்டர பார்க்கல. எங்க முன்ன போன பேஷியன்ட் வெளியில வந்த பிறகு தான் கூப்பிடுவாங்க. நேரம் ஆகும்” என்றவள் குரல் நடுங்கியது.
“என்னன்னு தெரியாமலே ஏன் டென்ஷன் ஆகுற? பார்த்துக்கலாம்… பயப்படாத” எனக் கௌதமன் கூறிக்கொண்டிருக்க, “மிஸ்டர். அரவிந்தன்” எனச் செவிலி அழைத்தார். “டாக்டர் கூப்பிட்டாங்க. வந்து பேசறேன்” எனக் கைப்பேசியை அணைத்தவளோடு அரவிந்தனும் எழுந்து கொள்ள, “வாங்க” எனப் புன்னகை முகமாக மருத்துவரின் அறைக்குள் அழைத்துச் சென்றார்.
“வாங்க, உக்காருங்க” என அழைத்த மருத்துவர் அரவிந்தனிடம், “ரொம்ப மூச்சு வாங்குதா? எப்போ எல்லாம்? வாக்கிங் போறதுண்டா? மாடிப் படி ஏற முடியுதா? தூக்கம் எப்படி? டென்ஷன் எடுத்துக்கிறீங்களா? இப்போ என்னென்ன மருந்து எடுத்துக்கிறீங்க? என்ன டையட் ஃபாலோ பண்றீங்க?” என ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டு, பதில் பெற்று, அவர் முன்னிருந்த ரிப்போர்ட் அனைத்தையும் மீண்டும் ஒரு முறை பார்த்தார்.
மருத்துவரின் தலை அசைப்பையும், மருத்துவ அறிக்கையைப் பார்த்து அவர் முகம் காட்டும் பாவனைகளையும், பேய்ப் படம் பார்ப்பது போல் எச்சில் விழுங்க மறந்து பார்த்திருந்தாள் யசோதரா. அதுவரை குறைந்திருந்த ரத்த அழுத்தத்தை மருத்துவரின் முகபாவம் ஏற்றிவிட்டது. அப்பாவிற்கு ஏதேனும் ஆனால்? நினைப்பே கசந்து வழிந்தது.
மருத்துவர், அவரின் மடிக்கணினியை இருவரின் பக்கமும் திருப்பி வைத்தார். அரோகியமான இதயத்தின் செயல்பாட்டைக் காட்டினார். இதய அடைப்பு இருக்கும் இதயம் திணறுவதையும் காட்டினார். அவர்கள் சந்தேகங்களை நிதானமாக விளக்கினார்.
“இதோ… இங்க தான் உங்களுக்கு அடைப்பு இருக்கு. வேல்வ்ல கால்சிஃபிகேஷன் இருக்கனால, பிளட்ட பம்ப் பண்ணும் போது இதயத்துக்கு அதிக அழுத்தம் ஏற்படுது. அடைப்ப மருந்து மாத்திரைனால எடுக்க முடியாது. கண்டிப்பா சர்ஜரி பண்ணித் தான் ஆகணும். இதே நிலை நீடிச்சா, ரெண்டு ரெண்டரை வருஷம் உங்க இதயம் இயங்கும். அதுக்கு மேல கண்டிப்பா முடியாது” என இன்றைய அரவிந்தனின் நிலையைப் போட்டுடைத்தார்.
‘அதுக்கு மேல முடியாது என்றால்?’ இதயம் நின்று துடித்தது யசோதராவிற்கு.
“ஓப்பன் ஹார்ட் தவிர வேற ஆப்ஷனே இல்லையா டாக்டர்?”
“இங்க அது மட்டும் தான். சென்னை மாதிரி சிட்டில, ட்ரான்ஸ்கேத்தெட்டர் அயோர்டிக் வால்வ் டிரான்ஸ்பிளான்ட் பண்ணறாங்க. ஆனா அதுல ஸ்ட்ரோக், கிட்னி ஃபெயிலியர், வேல்வ் லீக்… அப்படியான சைட் எஃபெக்ட்ஸ் வரதுக்கு வாய்ப்புகள் அதிகம். பத்து வருஷம் வரைக்கும் புது வேல்வ் தாங்கும்.
எழுபது வயசுக்கு மேலயோ… சர்ஜரிக்கு தகுதி இல்லாத, வீக்கா இருக்க ஹார்ட் பேஷியன்ட்ஸ்சா இருந்தா மட்டும் தான் அத பரிந்துரை செய்வேன். ஒரு சென்டிமீட்டர் காயம் மட்டும் தான்… சோ, அதுல வலியோ, ரெண்டு நாளுக்கு மேல ஹாஸ்பிட்டல் ஸ்டேயோ, காயம் குணமாகிற பிரச்சனையோ இருக்காது. காஸ்ட், இருபத்தி அஞ்சுல இருந்து முப்பது லட்சம் வரைக்கும் போகும்.
இப்போ, நீங்க ஆரோகியமா இருக்கீங்க. லங்க்ஸ் நல்ல கண்டிஷன்ல இருக்கு. உங்க உடம்பால ஒரு அறுவைசிகிச்சையை தாங்க முடியும். இதுக்கு செலவும் பத்தோட முடியும். நான் சர்ஜரி தான் ரெக்கமென்ட் பண்ணுவேன். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பண்றது நல்லது” என்றார் மருத்துவர்.
அரவிந்தன் முகம் தெளியவில்லை. அவர் அருகே அமர்ந்திருந்தவள் முகத்தில் ஜீவன் வடிந்திருந்தது.
“நாலு வருஷம் முன்ன, பிரோக்கன் ஹார்ட் சின்ட்ரோம் வந்து, மைல்ட் அட்டாக் வரைக்கும் போய்… செத்து பிழைச்சீங்க இல்லையா?”
“பெரிய இழப்பு… தாங்க முடியாம,” என ஆரம்பித்தவர் முடிக்காமலே நிறுத்தினார்.
“திரும்பவும் ஒரு அட்டாக் வந்தா… நிலம கஷ்டம்ன்னு சொல்லி இருப்பாங்களே”
மருத்துவர், “நீங்க எத்தன டாக்டர்ஸ்ச வேணும்னாலும் கேட்டு பாருங்க. இதையே தான் சொல்லுவாங்க. இப்போவே செய்தா, நல்லது. நாள் ஆக ஆக, உங்களுக்கு மூச்சு விடச் சிரமமா இருக்கும். இப்படியே போனா ரெண்டரை வருஷம் தான் மேக்சிமம்.” என மிக மிகப் பொறுமையாகவும், அழுத்தமாகவும் ‘அறுவை சிகிச்சையில் பிழைக்கிறீர்களோ, இல்லையோ… அறுவைசிகிச்சை செய்யாது போனால் நிச்சயம் பிழைக்க வழி இல்லை’ என்று கூறிவிட்டார்.
மீண்டும் மீண்டுமாக இதே வரிகள்! கடவுளின் மீதிருந்த நம்பிக்கையை இழந்த பின்னும் ‘கடவுளே… என் மகளின் நிலை’ என்று கண்ணுக்குத் தெரியாத அந்த இறைவனிடம் முறையிட்டார் அரவிந்தன்.
மருத்துவமனையை விட்டு வெளியே வந்தவர்களுக்காக வாயிலில் காத்திருந்தான் கௌதமன். இருவரின் இரத்தப் பசையற்ற முகம் பார்த்தவன் எதுவும் கேட்காது காரின் கதவைத் திறந்து விட்டான். காரினுள் மகளைக் காணாது, “மணி மூன்றை ஆகப்போகுது. யாழி எங்க?” எனக் கேட்டாள் யசோ.
“நான் வர வரைக்கும் பார்த்துக்கோங்கன்னு ஃபோன் போட்டு சொல்லியிருக்கேன். ஏறுங்க” என்றவன், அவர்களோடு மகளின் விளையாட்டு விடுதி சென்றான்.
இது தான் முதல் முறை இப்படிக் கௌதமனோடு அவன் காரில் பயணப்படுவது என்பதால் சற்று தயக்கமாகவே இருந்தது தந்தை மற்றும் மகளுக்கு. அடிக்கும் வெயிலுக்கு மகிழுந்து இதமான குளிரை ஏந்தியிருந்தது. சிகப்பு நிற லெதர் சீட்டும், காரின் உள்ளமைப்பும் என்றோ அரவிந்தன் கூறிய, ‘ரெண்டு… ரெண்டரை கோடி மதிப்புள்ள கார டெய்லி யூசுக்கு ஓட்டுற கௌதமன் மகளுக்கு நீ என்னைக்குமே அம்மா ஆக முடியாது யசோமா’ என்றது உள்ளுக்குள் ஒலித்து, ‘நான் இருக்கேன்’ என்ற கௌதமனின் வார்த்தைகளைப் பின்னுக்குத் தள்ளியது.
கார், மழலையர் விடுதியின் வாயிலில் நின்றது கவனத்தில் பதியவில்லை என்றாலும், “அம்மா” என்ற யாழியின் சத்தம் யசோவின் கவனத்தை ஈர்த்தது. அவள் பார்வையில் கௌதமனும் யாழியும் விழுந்தனர். மகளைச் சிறுவர்களுக்கான சீட்டில் அமர்த்தி, சீட் பெல்ட் அணிவித்துக் கொண்டிருந்தான் கௌதமன்.
களைத்த கௌதமன் கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்த மகள், “நாளைக்கு அம்மா டாடா போலாங்க” எனக் கதை அளக்க ஆரம்பித்திருந்தாள். யாழிக்கு, இன்று, நேற்று, நாளை அனைத்துமே நாளைக்குள் அடங்கிவிடும். “ஆலி பேபி டூ டைம்ஸ் தூணா பிக்கி மாமாட்ட போலாம்” எனக் குதூகலித்தாள்.
“அம்மா… ஒன் டூ பக்கிள் மை ஷூஸ்… லைம்ஸ் ஆன்ட்டி சொல்லினாங்க. நீங்களுக்கு தெலியுமா?”. அத்தனை நேரம் மகிழுந்தை நிரைத்திருந்த மௌன கீதம் கலைக்கப்பட்டு, மழலையின் மழலை நிறைத்தது.
மகளின் ஒவ்வொரு ‘அம்மா’விலும் யசோவின் தொண்டை குழி ஏறி இறங்கியது. ‘பட ஷூட்டிங் முடிஞ்சதும் அப்பாவும் பொண்ணும் கிளம்பிடுவாங்க. அதுக்கு அப்பறம் உன்ன சுத்தி வரக் கௌதமன் பொண்ணு இங்க இருக்க மாட்டா’ அரவிந்தனின் கூற்று உள்ளுக்குள் பேரிரைச்சலை ஏற்படுத்தியது.
வீடு வந்திருந்தது. மந்திரித்து விட்டது போல் நின்றிருந்த யசோவின் கரம் பற்றி, “அம்மா கூட போலேன் அப்பா” என மகள் ஆசையாகக் குதித்தாள்.
“குளிச்சு சாப்பிட்டுட்டு அம்மாவ பாக்க போலாம்… இப்போ பை சொல்லு” என்ற கௌதமனின் குரலுக்கு மனதே இல்லாது உடன்பட்ட குழந்தை, “குல்சுட்டு வலேன். பை அம்மா. பை தாத்தா” என்றாள். அதுவரை ஏதோ நினைப்பில் இருந்தவள், “பை” என் கன்னம் வருடிச் சென்றாள்.
நான்கு அடி எடுத்து வைத்தவள் நினைவு வந்தவளாக, “மலர் இல்லையே… என்ன சாப்பிடுவீங்க? பேபிக்கு பசிக்கும். ரெண்டு பேரும் குளிச்சுட்டு வாங்க. டிஃபன் ரெடி பண்றேன்” எனவும், அவளை அன்போடு தழுவியது கௌதமனின் விழிகள்.
அது எப்படி, பூகம்பமே வந்தாலும் யாழி அவளின் முதன்மையாக இருக்கிறாள்? பெற்றவளுக்கு மட்டும் தானே பிள்ளையின் வயிறும், மனமும் முதன்மை பெரும்? கௌதமனால் வியக்காது இருக்க முடியவில்லை.
“ஹாஸ்பிட்டல்ல உங்களுக்கு வெயிட் பண்ணும் போது ஃபூட் ஆடர் போட்டுட்டேன். அரை மணி நேரத்துல வந்திடும். நீ எதுவும் செய்யாத. பிரெஷனப் ஆகு, காபி டிப்ஃபனோட நைட்டுக்கும் சாப்பாடு வந்துடும்” என்றான்.
அப்பாவும் மகளும் குளித்து வந்த நேரம் வாயில் காவலாளி, “சார் சாப்பாடு ஆடர் போட்டிருந்தீங்களாம்” என உணவுப் பொட்டலங்களோடு வந்தான். அவர்களுக்கானதை எடுத்தவன், “இத ஐயா வீட்டுல கொடுத்துடு, இது உனக்கு” எனப் பிரித்துக் கொடுத்தான்.
“அப்பா தூணலாம்” என்ற மகளை அவன் கேள்வியோடு பார்க்க, “ஒன் டைம் நாளைக்கு தூணேன். டூ டைம் தூணா பிக்கி மாமா போலாம்” என்றாள் தன் பிக்கி மாமனை நினைத்தவளாய்.
“நீயும் உன் பக்கி மாமனும்.” எனச் செல்லமாக அலுத்துக் கொண்டாலும், “சாப்பிட்டு, சர்வேஷோட விளையாடு. நைட் தூங்கலாம்.” என்றவன் மகளின் வயிற்றை நிரப்ப ஆரம்பித்தான்.
கௌதமன் மனம் பின்வீட்டையே சுற்றி வந்தது. யோசனையில் மூழ்கியிருந்த அரவிந்தனின் முகமும், வாடியிருந்த யசோவின் முகமுமே நிலமை ‘கொஞ்சம் சீரியஸ்’ என்றது. அரவிந்தனிடமே பேச முடிவெடுத்தவன் காதில், “யாலி… சல்வேஷ் வந்திக்கேன். யாலி…” என்ற சத்தம் விழ முகம் புன்னகையில் மலர்ந்தது.
“வாங்க பெரிய மனுஷா” என்றவனைப் பார்த்த குழந்தையின் முகத்தில் வெட்கம் பரவியது. “யாலி வேணும்.” என்றான் சிறுவன்.
குட்டி சைக்கிளோடு நின்றிருந்தவனோடு, “சல்வேஷ், நீயே வந்துடியா” என இணைந்து கொண்டாள் யாழி. முற்றம் பெரிது என்பதால் ஆளுக்கு ஒரு சைக்கிளில் வலம் வர ஆரம்பித்தனர்.
பேரனோடு வந்திருந்த கோபாலன், கௌதமனோடு சற்று நேரம் பேசியவர், “வாச்மேன் இருக்கனால வெளியில போக மாட்டாங்க. நான் அரவிந்தன பார்த்துட்டு வரேன்” என்று, தன் தோழனைக் காணச் சென்றார்.