Skip to content
Post Views: 2,372
“அம்மாச்சின்னா அம்மாவோட அம்மா… நம்ம பக்கம் அப்படி தான் கூப்பிடுவோம், அப்பாவோட அம்மாவை அப்பத்தான்னு சொல்லுவோம்”
“ஹா ஹா.. நம்ம சிவு பாட்டியை அப்பத்தான்னு கூப்பிட்டோம்னு வைங்க.. அவ்வளவுதான்” என்றாள் ஹாசினி..
Advertisement
பாட்டி என்று அழைத்தாலே அவருக்கு பிடிக்காது. சிவு என்று தான் அழைக்க சொல்வார் பேரன் பேத்தியை. பூம்பாவை பேர் சொல்லி அழைக்க பழக்க கூடாது என்று கண்டிப்புடன் கூறி விடவே, பாட்டி என்று கூப்பிட சொல்லிவிட்டார்.
“நானூறு ஐநூறு வருஷத்துக்கு முன்னாடி இந்த ஊரை சேர்ந்த சொக்கநாதர் என்பவர் பக்கத்து ஊர்ல பிறந்த முத்தாயியை சீரும் சிறப்புமா கல்யாண செஞ்சு கூட்டிட்டு வந்தாராம். அந்த அம்மா ரொம்ப நல்லவங்களாம், எல்லாருக்கும் உதவி செய்வாங்களாம். அவங்க வீட்டுக்கு யார் வந்தாலும் சாப்பாடு போடாம அனுப்பவே மாட்டாங்களாம். அதே மாதிரி பசின்னு யாராவது வந்துட்டா, அவங்க வயிறு நிறையற வரைக்கும் சாப்பாடு போட்டு, அவங்களுக்கு அரிசி,பருப்புன்னு எல்லாமே கொடுத்து தான் அனுப்பி வைப்பாங்களாம்.
Advertisement
Advertisement
அவங்களுக்கு அடுத்தடுத்து அஞ்சு பெண் குழந்தைகள் தான் பிறந்துச்சாம்.
அந்த காலத்துல ஆண் குழந்தை வேணும் என்பது ரொம்ப முக்கியமானதா கருத பட்டுச்சாம். ஆண் குழந்தை இல்லைன்னா, ஆண்கள் மறுமணம் செய்துகிட்டாங்களாம்.
Advertisement
ஆனா அவங்க கணவர் சொக்கநாதனுக்கு முத்தாயின்னா உயிராம். யார் என்ன சொன்னாலும் வேற கல்யாணத்துக்கு ஒத்துக்கவே இல்லயாம்.
இதுனால சொந்தமும் சுற்றமும் அவரை ரொம்ப அவதூறா பேசி இருக்காங்க. ஆம்புள பிள்ளை இல்லாதவனெல்லாம் ஆம்புளையான்னு முத்தாயி அம்மா காது படவே பேசி இருக்காங்க.
ஐந்தாவது பெண் பொறக்கிறப்பவே, இன்னொரு குழந்தை பிறந்தா அவங்க உடம்பு தாங்காதுன்னு மருத்துவச்சி சொல்லி இருந்தாங்க.
மனைவி மேல இருக்கிற பாசத்துல அவர் இனி குழந்தை வேணாம்னு கண்டிப்பா இருந்தாராம்.
ஆனால், முத்தாயி அம்மா உங்க தூய்மையான அன்புக்கு என்னோட பரிசா ஒரு ஆண் குழந்தையை நான் பெத்து கொடுத்தே ஆகணும். ஊர்ல இருக்கிறவங்க முன்னே நீங்க தலை குனிய கூடாதுன்னு,அவரை பேசி சம்மதிக்க வச்சு மீண்டும் கர்ப்பம் ஆகி இருக்காங்க.
அப்பவே அவங்க மூத்த பெண் குழந்தைங்க பொன்னுத்தாயி செல்லத்தாயி ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி குழந்தைகளும் இருந்திருக்கு.
அவங்க மூத்த பொண்ணு பொன்னுத்தாயி தான் அவங்க அம்மா பிரசவத்தையே பார்த்தங்களாம்.
சொக்கநாதர் பயந்த மாதிரியே பிரசவம் சிக்கலாக இருந்திருக்கு.ஆனா அந்த அம்மா, கடைசி நிமிஷம் வரைக்கும் போராடி இருக்காங்க.. தங்க விக்ரகம் மாதிரி ஆண் குழந்தை பிறந்திருக்கு.
இனி பிழைச்சிடுவாங்கன்னு எல்லாரும் நினைச்சிருக்க, முத்தாயி அம்மாக்கு இனி இருக்க மாட்டோம்னு தெரிஞ்சிடுச்சு.
அவங்க அவங்க கணவர் கிட்ட, என்னோட முடிவுக்கும் இந்த குழந்தைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.. அதனால இவனை யாரும் ஒருசொல் சொல்லாம பார்த்துக்கணும் அப்படின்னு சத்தியம் வாங்கியிருக்காங்க.
அதே மாதிரி பசின்னு வரவங்க வயிறு வாடாம என்னிக்கும் பார்த்துக்கணும். நீங்க கொடுக்க கொடுக்க நம்ம வயல் பொன்னா விளையும்னு சொன்னாங்களாம்.
அவங்க சொன்னதாலோ என்னமோ, இந்த ஊர்ல பஞ்சம் வந்ததே இல்லை. வயல்ல விளைச்சல் இல்லாம இருந்ததே இல்லை தெரியுமா?”
“அப்புறம் என்னமா ஆச்சு?”
“அப்ப அவங்க மூத்த பொண்ணு தம்பியை வளர்க்கிறதுக்கு நான் பொறுப்பு நீங்க கவலை படாதீங்கன்னு சொல்லிருக்காங்க..”
“பொன்னுத்தாயி கையை கெட்டியா பிடிச்சிக்கிட்டு, மூச்சுக்கு சிரமம்பட்டிருக்காங்க.. அப்ப பொன்னுத்தாயி செல்லத்தாயி பிள்ளைகள் எல்லாம் அம்மாச்சி அம்மாச்சின்னு அழுதாங்களாம்.. அவங்க பாராட்டி சீராட்டி வளர்த்த பிள்ளைகள் இல்லையா?
யாரும் கலங்கக்கூடாது.. இந்த அம்மாச்சியை நினைச்சு கூப்பிட்டீங்கன்னா, உங்க கூடவே இருந்த உங்களை பார்த்துக்குவேன்னு சொன்னாங்களாம்.
தெய்வமா வாழ்ந்த அந்த அம்மாவை பார்க்க ஊரே கூடி இருந்துச்சாம். அப்ப அவங்க கடைசியா,’ பெண் பிள்ளைகள் அந்த முத்துமாரியின் வடிவம் தான்.. இனியாவது ஆண் பிள்ளை பெண் பிள்ளைன்னு பிரிச்சு பார்க்காதீங்க. என்னை பார்த்து பாடம் படிச்சுக்கோங்கன்னு’ சொல்லி கடைசி மூச்சை விட்டிருக்காங்க.
இந்த ஊர் கோவில்ல இருந்த முத்துமாரியைத் தான் அவங்க வணங்கி வந்திருக்காங்க. அதனால அவங்க ஆன்மா அங்கேயே சரணடைஞ்சதா நம்புறாங்க.
அப்போதில் இருந்து வழி வழியா அவங்க அஞ்சு பொண்ணுங்களோட குடும்பம் அவங்களை நினைச்சு கும்பிட்டுட்டு வராங்க.. இப்ப அது அஞ்சு ஊரை சேர்ந்த மக்களா ஆகிடுச்சு…”
“அப்ப அந்த ஆண் குழந்தை குடும்பத்தை சேர்ந்தவங்க என்ன ஆனாங்க?” என்று கேட்டது ஹாசினியோ ஹிருதய்யோ அல்ல, ஸ்ரீகாந்த்.
“அவங்க பொன்னுத்தாயியை தெய்வமா ஏத்துக்கிட்டு வழிபடறாங்க. அவங்க அம்மா மறைவுக்கு பின்னாடி தம்பியோட சேர்த்து மத்த மூனு தங்கச்சிங்களயும் வளர்த்து ஆளாக்கினது அவங்க தானாம்”
“முத்தாயி அம்மாச்சி நம்மளை போல மனுஷங்க தானே அம்மா? அப்புறம் எப்படி அவங்க சாமி ஆவாங்க?”என்றாள் ஹாசினி.
“முத்தாயி அம்மா சொன்ன மாதிரி ஒவ்வொரு பெண்ணும் முத்துமாரியின் வடிவம் தான் ஹாசும்மா… நம்ம தமிழர்கள் எப்பொழுதும் முன்னோர்களை தெய்வமா வழிபட்டவங்க. முத்தாயி அம்மாச்சியும் நம்ம முன்னோர்கள். அவங்களை தெய்வமா வழிபட்ட நாள்ல இருந்து எல்லாரும் நல்லா இருக்கிறதா நம்புறாங்க”
“இங்க நம்ம ஊர்ல இருக்கிற முத்துமாரியம்மன் கோவில்ல தான் முத்தாயி அம்மாச்சிக்கும் ஒரு சன்னதி இருக்கு.. “
“அப்ப பொன்னுத்தாயிக்கு?”
“அவங்களுக்கு தனியா சன்னதி இல்ல, அவங்க வாழ்ந்த வீட்லயே அவங்களை வழி படறாங்க.. அவங்களுக்கு புடவை வச்சு படைச்சு கும்பிடுவாங்க”
“முத்தாயி அம்மாச்சியை, மகள் வழி பிள்ளைகள் அம்மாச்சின்னு கும்பிடறாங்க.. மகன் வழி பிள்ளைகள் அப்பத்தான்னும் கும்பிடுவாங்க..”
“ஹனி, அப்ப எங்களுக்கும் இந்த மாதிரி ஒரு தெய்வம் இருக்குமா என்ன?”
“இதே மாதிரி இருக்குமா சொல்ல முடியாதுங்க. ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொரு மாதிரி.. கவலை படாதீங்க.. நாம முதல்ல இங்க சாமி கும்பிடுவோம், அந்த கேரளா ஹரிஹரன் சொன்ன மாதிரி வழி கிடைக்கும். எனக்கு நம்பிக்கை இருக்கு..”
பேசிக்கொண்டே அனைவரும் கண்ணயர்ந்தார்கள்.
————————
error: Content is protected !!