Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

முத்தாயி அம்மாச்சி

முத்தாயி அம்மாச்சி 3.1

அத்தியாயம் 3

இவர்கள் ஊருக்கு வர மாலை ஐந்து மணி போல ஆனது. பல வருடங்கள் கழித்து தான் பிறந்து வளர்ந்த கிராமத்திற்கு தன் வீட்டிற்கு வருவதனால் பூம்பாவை மிகவும் உணர்ச்சி வசப்பட்டிருந்தார்.



Advertisement

தாய் தந்தை இருக்கும் வரையில் வருடத்திற்கு ஒரு முறையேனும் வந்து செல்வார். அப்பொழுதும்,  குழந்தைகளை அதிகம் அனுப்ப மாட்டார் ஸ்ரீகாந்த். ‘அந்த கிராமத்துல என்ன இருக்குன்னு பிள்ளைகளை கூட்டிட்டு போற? இங்க ஸ்விம்மிங் கிளாஸ், ஸ்போர்ட்ஸ்ன்னு லீவ்ல உபயோகமா நேரத்தை செலவழிக்கட்டும்’ என்று விடுவார்.

பேரப் பிள்ளைகளை பார்க்க அந்த பெரியவர்கள் தான் சென்னைக்கு வந்து செல்வார்கள்.

Advertisement

Advertisement

அந்த காலத்து வீடு, மகளின் திருமணத்திற்கு பிறகு கொஞ்சம் வசதியாக மாற்றி கட்டி இருந்தார் அவளின் தந்தை. வீட்டை சுற்றி நிறைய இடம் விட்டு  நல்ல காத்தோட்டமாக இருக்கும். 

வீட்டின் பின்புறம் மாட்டு தொழுவம் இருந்தது. அதை பராமரிக்கவும், வீட்டை பாதுகாக்கவும் அங்கே ஒரு ரூம் கட்டி ஒரு சிறு குடும்பத்தை வாடகைக்கு வைத்திருந்தார் பூம்பாவை. கணவனும் மனைவியுமாக இருவர் இருந்தனர். சந்தானம், ராஜாத்தி.

Advertisement

மாட்டை பார்துகொள்வது ராஜாத்தி என்றால், தோட்டத்தை சந்தானம் பார்த்துக்கொள்கிறார். பகலில் வெளியே வேலைக்கு சென்றுவிடுவார் சந்தானம். இதை எல்லாம் பூம்பாவை கணவனிடம் கூறி இருந்தார் தான். ஆனால் சிரத்தையுடன் எதையும் கேட்டுகொண்டதில்லை அவர்.

இவர்கள் வரவும், சந்தானம் விரைந்து வந்து கேட்டை திறந்து விட்டார்.

 

“காரை உள்ளேயே விட்டுடலாம் போலயே ப்பா..” என்றான் ஹிருதய்.

“ஆமா ஹிருதய், அது எல்லாம் இங்கே வசதி தான்”

“கண்ணு.. “ என்று பூம்பாவையின் பெரியம்மா உள்ளே இருந்து வெளிய வேகமாக வந்து அவரை கட்டி அனைத்து கொண்டார்.

“இப்ப தான் உன் வீட்டுக்கு வர வழி தெரிஞ்சுதா கண்ணு?”

கண்கள் கலங்க பூம்பாவை வீட்டினை கண்ணெடுக்காமல் பார்த்திருந்தார்.

“கலங்காத கண்ணு, உங்க ஆத்தா அப்பச்சி இங்கன தான் இருப்பாங்க.. நீ குடும்பத்தோடு வந்து போக இருக்கணும்னு தான் அவங்களுக்கு கொள்ளை  ஆசை. இப்பதான் அவங்க மனசு  நிறைஞ்சு இருக்கும். உள்ளார வாங்க.. வாங்க தம்பி.. நம்ம பிள்ளைகளா கண்ணு, நல்லா வளர்ந்துட்டாங்களே.. வாங்க வாங்க” என்று அனைவரையும் உள்ளே அழைத்து சென்றார்.

அவரிடம் தான் வீட்டு சாவியை கொடுத்து வைத்திருந்தார் பூம்பாவை. அவர் தான்  ஆள்விட்டு வீட்டை சுத்தப்படுத்தி பராமரித்து வருகிறார்.

“நீங்க மட்டும் இல்லைனா எங்களுக்கு சிரமமா போயிருக்கும்.. ரொம்ப தேங்க்ஸ் பெரியம்மா..”

“என்ன கண்ணு, எனக்கு போய் தேங்க்ஸ் எல்லாம் சொல்ற? சரி எல்லாரும் குளிச்சு கொஞ்சம் ஓய்வெடுங்க. நான் போய் உங்களுக்கு ரவைக்கு சாப்பாடு கொடுத்து அனுப்பிறேன். நாளைக்கு நிதானமா பேசுவோம்”, என்று அவர்களுக்கு  கொஞ்சம் தனிமை கொடுத்து சென்றுவிட்டார்.

“நம்ம அம்மாச்சியோட அக்காவா அம்மா இவங்க” என்றாள் ஹாசினி.

“அக்காதான் ஆனா கூட பிறந்தவங்க இல்ல, நம்ம அம்மாச்சியோட  பெரியஅம்மாச்சி மகளோட பொண்ணு”

“ஓகே ஓகே …”

அங்கே வீட்டில் சகல வசதிகளும் இருந்தது. வாட்டர் கெய்சர் முதல் வாஷிங் மெஷின், கிரைண்டர், மிக்ஸி என்று அனைத்தும் இருந்தது. மகள் குடும்பத்தோடு  வந்து தங்கினால், வசதி குறைவாக இருக்க கூடாது என்று அனைத்தையும் வாங்கி வைத்திருந்தார்கள்.

“வெளியில இருந்து பார்க்கிறப்போ பழைய வீடுமாதிரி இருந்துச்சு.. உள்ள  நல்லா  இருக்கே ம்மா.. நம்ம வீட்ல இருக்க மாதிரி பீல் ஆகுது அம்மா” என்றான் ஹிருதய்.

“இதுவும் நம்ம வீடுதான் கண்ணா”

பேரனுக்கு ஒரு ரூம், பேத்திக்கு ஒரு ரூம், மகள் மாப்பிளைக்கு ஒரு ரூம் என்று இருந்தது. அவர் அவர் ரூமிற்கு முன் அவர்களது புகைப்படத்தை மாட்டி வைத்திருந்தார்கள். 

பின் அனைவரும் பிரெஷ் ஆகி, இலகுவான ஆடைகளை உடுத்தி வந்தார்கள். அங்கே முற்றத்தில் ஒரு பெரிய ஊஞ்சல் இருந்தது.

“எவ்வளவு பெரிய ஊஞ்சல், பத்து பேர் கூட ஒரே நேரத்துல உட்காரலாம் போலவே?” என்று ‘ஆ’ வாய் பிளந்து கூறினாள் ஹாசினி.

“ஆமா, நான் ஒரே பொண்ணா போயிட்டேன் இல்லையா? அதனால நான் நிறைய குழந்தைகள் பெத்துக்கிட்டு, எல்லா பிள்ளைகளையும் கூட்டிட்டு வந்து இந்த ஊஞ்சல் ஆடணும்னு எங்க அப்பாக்கு ஆசை” என்றார் பூம்பாவை பழைய நினைவுகளில். 

“இப்ப என்ன ம்மா நம்ம நாலு பேரும் உட்கார்ந்து ஆடலாமே? வாங்க” என்று அம்மாவின் கை  பிடித்து அழைத்து சென்று ஊஞ்சலில் அமரவைத்தான் ஹிருதய். ஹாசினி அப்பாவை அழைத்து வந்தாள்.

இன்று ஏனோ ஸ்ரீகாந்த்திற்கு மறுக்க தோன்றவில்லை. அந்த வெள்ளந்தி மனம் கொண்ட அத்தையும் மாமாவும் ஏக்கமாக இவரை பார்ப்பது போல தோன்றியது.

நடுவில் அப்பா அம்மாவை அமர  வைத்து பிள்ளைகள் ஆளுக்கொரு பக்கம் அமர்ந்து கொண்டு அந்த ஊஞ்சலை ஆட்டினார்கள்.

யாரும் பேசவில்லை. ஊஞ்சல் ஆடும் சத்தம் மட்டும் ஒரு லயத்தோடு ஒலித்துக்கொண்டிருந்தது. மனதில் ஒரு  இதம்.. உடம்பில் ஒரு சுகம்.. தன்னை அறியாமலே கணவனின் தோள் சாய்ந்தார் பூம்பாவை.. அவரும் ஆதூரமாக மனைவியை அனைத்து கொண்டார். அப்பா அம்மாவை இப்படி பார்த்து கண்கள் கலங்கியது பிள்ளைகளுக்கு… 

மௌனமாய் ஒரு சரணடைவு… 

மௌனமாய் ஒரு உடன்பாடு… 

மௌனமாய் ஒரு ஒப்புதல்…

மௌனமாய் ஒரு இணக்கம்…

அனைவர் மனதிலும் ஓரே எண்ணம் தான்.. இந்த நிமிடம் மட்டும் போதுமே!

சற்று நேரத்தில் சுட சுட உணவுடன் வந்தார் பூம்பாவையின் பெரியம்மா.

“நீங்க தனியாவா இருக்கீங்க அம்மாச்சி?” என்றாள் ஹாசினி அவரிடம்.

“இல்லடா, வீட்ல உங்க அய்யா இருக்காரு. வயசாயிடுச்சு இல்ல, இப்ப ரொம்ப நடக்க முடியறது இல்லை, வீட்டுக்குள்ளாற மட்டும்தான் நடக்கிறாரு “

“நீங்க எதுக்கு அலைஞ்சிட்டு இருக்கீங்க பெரியம்மா.. நாளைல இருந்து நாங்களே பார்த்துகிறோம்”

“இந்த பேச்சே வேணாம் சொல்லிப்புட்டேன்.. நீங்க இருக்கிற வரைக்கும் எங்க வீட்ல இருந்து தான் சாப்பாடு, ஆமா “

உண்மையில் இவர் அன்பில்  ஸ்ரீகாந்த்திற்கு அவரது அத்தை மாமா தான் நினைவிற்கு வந்தனர். கள்ளம் கபடமற்ற அன்பு உள்ளம் கொண்டவர்கள். இப்படி ஆற அமர உட்கார்ந்து இதை எல்லாம் இதுவரை அவர் நினைத்துப்பார்த்ததே இல்லை.

“சரி, அம்மாச்சி இனிமே நீங்க போன் போடுங்க, நான் வந்து வாங்கிட்டு வரேன், நீங்க அலையாதீங்க” என்றான் ஹிருதய்.

“சரி ராசா.. அப்படியே உங்க அய்யாவை கொண்டு பிறந்திருக்க” என்றார் தங்கை கணவனின் நினைவில். இவர்கள் கஷ்டப்பட்ட காலத்தில் அவர் தான் இவர்களை அரவணைத்து, கை தூக்கிவிட்டது. அந்த நன்றி உணர்வு தான் இந்த எல்லையில்லா அன்பிற்கு ஒரு வகையில் காரணம்.

“முத்தாயி அம்மாச்சி கோவிலுக்கு போகணும் பெரியம்மா.. பொங்க வச்சு சாமி கும்பிட்டுட்டு வரணும்” சாப்பிட்டு முடித்ததும் அவரிடம் கூறினார் பூம்பாவை.

“உங்க ஆத்தா இருக்கிற வரை பொங்கல் வைக்காம இருக்கவே மாட்டா. வருஷத்துல இரண்டு தடவை கட்டாயம் செஞ்சிடுவா. அவ சாகுற வரைக்கும் செஞ்சிட்டு தான் போனா.. நல்லா வைச்சு கும்பிடு கண்ணு.. அந்த முத்தாயி உங்களுக்கு ஒரு குறையும் வர விடாம பார்த்துக்குவா..”

“நீங்களும் வர்றீங்களா பெரியம்மா?”

“இல்ல கண்ணு, எங்க சின்ன மாமனார் தவறி போய் ஒரு மாசம் தான் ஆகுது, எங்களுக்கு தீட்டு கண்ணு”

“ஓ சரி பெரியம்மா…”

“உனக்கு தான் எல்லாம் தெரியுமே? போய் சாமி கும்பிட்டு வாங்க..” 

சற்று நேரம் பேசி இருந்துவிட்டு அவர் சென்றுவிட்டார்.

அவர் சென்றதும் சந்தானம் வந்து வெளி கேட்யை பூட்டிவிட்டு, “ஏதாவது வேணும்னா ஒரு குரல் கொடுங்க” என்று சென்றுவிட்டார்.

“அம்மா தனியா படுக்க ஒரு மாதிரி இருக்கு, நான் உங்க கூடவே படுத்துக்கிறேன்” என்று வந்தாள் ஹாசினி.

“அங்க பாய் தலைகாணியெல்லாம் இருக்கும் பாரு.. எடுத்துட்டு வாடா, நாம ஹால்லயே படுத்துப்போம். ஜன்னல் திறந்து வச்சா காத்து சூப்பரா வரும்”

பூம்பாவையும் ஹாசினியும் பாய் போட்டு படுக்கவே, ஹிருதயும் சென்று ஒரு பாய் கொண்டு வந்து இவர்கள் பக்கத்திலே படுத்துவிட்டான்.

ஸ்ரீகாந்த், ‘நம்மளை மட்டும் விட்டுட்டாங்களே’ என்று பாவமாக முழித்துக்கொண்டு நின்றிருந்தார்.

“ உங்க அப்பா இப்ப தான் இந்த வீட்டுக்கு புது மாப்பிள்ளை பாரு? தனியா ஆள்  வச்சு கூப்பிடுவாங்களா, மாப்பிள்ளையை தங்க தங்கமாய் தாங்க எங்க அப்பா அம்மா தவமிருந்தப்ப இந்த பக்கம் எட்டி கூட பார்த்தில்ல, இப்ப என்னவாம்? பேசாம லைட்டை அமர்த்திட்டு வந்து படுக்க சொல்லுடா ஹாசிம்மா..” என்றார் பூம்பாவை 

பின் மகன் சென்று தந்தைக்கு பாய் எடுத்து வந்து விரித்து கொடுத்து, “படுங்க அப்பா” என்று கூறி, அவனே சென்று லைட்யை ஆப் செய்து வந்து அவனும் படுத்துகொண்டான்.

“அப்பா எப்பவுமே உங்களோட கஞ்சி போட்ட சட்டை மாதிரி விறைப்பா  இருப்பீங்க, இப்ப அப்படியே அம்மாவோட பட்டு புடவை மாதிரி சாஃட்டா  இருக்கீங்க.. எனக்கு இந்த பட்டு அப்பாவை தான் பிடிச்சிருக்கு என்று செல்லம் கொஞ்சினாள் மகள்”

“ஹாசி, உனக்கு எப்ப ஸ்கூல் திறக்குது?”

“இன்னும் இருபது நாள் இருக்கும்மா..”

“அப்ப இங்க இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போலாமா?”

“நாலு நாளாவே இருக்கலாம் ஹனி.. எனக்கு மட்டும் அங்க என்ன வேலை, வெட்டி ஆஃபிசர் தானே?”

“நெகட்டிவா பேசாதீங்க.. ப்ளீஸ்”

“அம்மா, அம்மாச்சின்னா பாட்டி தானே? அது என்ன உங்க குலதெய்வம் பேர் முத்தாயி  அம்மாச்சி? அவங்க என்ன பாட்டியா? அவங்க கதையை  சொல்லுங்களேன்” என்றான் ஹிருதய் ஆர்வமாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!