Skip to content
Post Views: 738

அம்பிகாவை வீட்டை விட்டு வெளியில் விடுவதே இல்லை… ஆண்டாள் உடன் இருந்து கொண்டே தான் இருந்தார்… அன்றும் அப்படி தான் அம்பிகா உள்ளே இருக்க ஆண்டாளின் நெருங்கிய உறவினர் இறந்து விட நாச்சியாரும் அவரும் அங்கு சென்று விட்டனர்….
Advertisement
வீட்டில் யாரும் இல்லை… அம்பிகா மட்டுமே இருந்தார்.. வேலை செய்பவர்களும் இருந்தார்கள் தான் அவர்களால் அம்பிகாவை தடுக்க முடியுமா ஆண்டாளும் நாச்சியாரும் வெளியில் சென்ற பத்து நிமிடத்தில் அம்பிகாவும் வெளியில் சென்றுவிட்டார்… வேலையாட்கள் எதுவும் செய்ய முடியாமல் கையை பிசைந்து கொண்டு நின்று இருந்தனர்… ஆனால் சென்று கால் மணி நேரத்தில் வீட்டிற்கு வந்துவிட்டார்… வந்ததும் அவரே அறைக்குள் சென்று அடைந்து கொண்டார்…
Advertisement
அதன் பின் அம்பிகா கருணா தான் வேண்டும் என அடம் செய்யவில்லை… ஆனால் திருமணம் மட்டும் வேண்டாம் என முடிவாக கூறிவிட்டார்… அழகர்சாமியும் ஒரு வருடம் போகட்டும் என விட்டுவிட்டார்… அம்பிகாவும் வீடு தோட்டம் என வர போக இருந்தார்…
Advertisement
நாட்கள் அதன்போக்கில் செல்ல அந்த விடியலே துயர செய்தியோடு தான் அந்த ஊருக்கு விடிந்தது… அனைவரும் சொந்த வீட்டில் ஏற்பட்ட துயரத்தை போல் அழுது கொண்டே தான் கருணா வீட்டை நோக்கி சென்றது…
Advertisement
வடிவாம்பாள் விஷ்ணுவை மடியில் படுக்க வைத்து அழுது கொண்டு இருக்க கருணா மௌனமாக கண்ணில் எந்த வித உணர்ச்சியும் இன்றி அங்கு உயிரற்ற உடலாய் படுத்து இருக்கும் மைதிலியை தான் பார்த்து கொண்டு இருந்தார்…
நேற்று இரவு எப்போதும் போல் விஷ்ணுவிற்கு உணவை ஊட்டி விட்டு பள்ளி பாடம் எழுத சொல்லி கொடுத்து வடிவாம்பாளிடம் “அத்தம்மா நாளைக்கு எனக்கு இட்லி மீன் குழம்பு வேணும்… இன்னிக்கு நைட்டே மீன் குழம்பு செஞ்சு வைங்க” என்று கூறி அவர் செய்த பின் ஒரு சிறிய மீன் துண்டு சாப்பிட்டு விட்டு “நீங்க வைக்குற மீன் குழம்பு மாதிரி யாரும் வைக்க முடியாது” என்று கூறி உறங்க சென்றவர் விடியலில் எழவே முடியாத அளவிற்கு ஆழ்ந்து நிரந்தர உறக்கத்திற்கு சென்று இருந்தார்….
எப்படி என யாருக்கும் தெரியவில்லை…. அடுத்து என்ன செய்ய வேண்டும் என கூற வேண்டிய இருவரும் தன்னிலையில் இல்லை… ஆக வேண்டியதை அழகர்சாமியும் ராஜதுரையும் தான் பார்த்து கொண்டனர்…
விஷ்ணுவிற்கு ஒன்னும் புரியவில்லை… தன் தாய் ஏன் படுத்து கொண்டு உள்ளார் அவரை சுற்றி ஏன் அத்தனை பேர் அழுது கொண்டு உள்ளனர்… ஏன் மாலை போட்டு உள்ளனர் என புரியாமல் அழுது கொண்டு இருந்தான்… வடிவாம்பாளிற்கோ ஒன்றுமே புரியவில்லை…
அனைத்தும் முடிந்து மைதிலியின் உடலை சுடுகாடிற்கு எடுத்து செல்லும் போது தான் கருணாவிற்கு நடப்பே புரிந்தது… மைதிலியின் உடல் மேல் விழுந்து “மைத்து எழுந்திரி… உனக்கு என்ன ஆச்சு… நேத்து நைட் கூட நாம அஞ்சு பேர் சந்தோசமா இருக்கலாம்னு சொன்னியே… எங்க மூனு பேரை மட்டும் விட்டுட்டு நீங்க ரெண்டு பேர் எங்க போறீங்க….” என்று மைதிலியின் வயிற்றில் கை வைத்து கேட்டார்….
கருணா கூறியதை கேட்டு இன்னும் அனைவருக்கும் அதிர்ச்சி தான்… வடிவாம்பாள் அதை கேட்டு மயங்கியே விழுந்துவிட்டார்….
கருணாவோ மேலும் “மைத்து நானும் உன்கூட வரேன்…. என்னையும் உன்கூடவே கூட்டிட்டு போயிடு…. என்னால நீ இல்லாம இருக்க முடியாது…” என்று கூறி கையை கிழிக்க எதோ இருக்கிறதே என பார்க்க ஆரமித்து இருந்தார்… அங்கு இருக்கும் யாருமே கருணாவின் கண்களுக்கு புலபடவில்லை…. தன் மனைவியுடன் செல்ல வேண்டும் என்பது மட்டுமே அவருக்கு குறிக்கோளாய் இருந்தது….
அவரை யாராலும் கட்டு படுத்த முடியவில்லை… ராஜதுரை தான் அவரின் கன்னத்தில் அறைந்து “கருணா என்ன பண்ற… நீ போயிட்டா எல்லாம் சரி ஆகிடுமா… உன்னை நம்பி இன்னும் ரெண்டு பேர் இருக்காங்க… அவங்க என்ன பண்ணுவாங்க… விஷ்ணுவை பாரு ரொம்ப பயந்து போய் இருக்கான்.. என்று அவரை அமைதி படுத்த முயன்றார்…
ஒரு வழியாக தன்னிலை வந்த கருணா “துரை பாரு டா என் மைத்து பாரு… என்னை தனியா விட்டுட்டு போயிட்டா பாருடா.. என் மைத்து எனக்கு வேணும் டா… அவ இல்லாம என்னால இருக்க முடியாது டா… என் உசுரே அவ தான் டா…” என்று துரையை அணைத்து கொண்டு அழுதுவிட்டார்…
பார்ப்போர் அனைவர் கண்ணிலும் கண்ணீரை வர வைத்து இருந்தது அவர் கதறல்…. வடிவாம்பாள் தன் மகனின் கதறலை கேட்டு உடைந்து விட்டார்….
அவருக்கு அனைத்தும் அவர் மகன் தான்… கருணா சிறு வயதாக இருக்கும் போதே அவரின் அப்பா பாம்பு கடித்து இறந்து இருக்க ஒற்றை தாயாய் கருணைவை வளர்த்தவர் தன் மகன் ஆசைப்பட்டான் என்பதற்காக மைதிலியை திருமணம் செய்து வைத்தார்… மைதிலியையும் மருமகளாய் பார்க்காமல் மகளாய் பார்த்து கொண்டார்…
ஆனால் தற்போது மைதிலி இல்லை என்பதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை… எப்படியோ கருணாவை சமாளித்து செய்ய வேண்டிய காரியங்களை செய்து மைதிலியின் உடலை தூக்கும் போது விஷ்ணு தன் அம்மாவை எங்கோ தூக்கி கொண்டு போகிறார்கள் என எண்ணி அம்மா அம்மா என்று சத்தமிட் டு அழுதான்… வடிவம்பாளும் ஒரு பக்கம் அழுக நாச்சியார் தான் அவனை சமாதானம் செய்தார்..
மைதிலியின் உடலை இடுகாட்டிற்கு கொண்டு சென்று சடங்குகளை செய்து அவரின் உடலை எரியூட்டும் போது கருணா மிகவும் உடைந்துவிட்டார்.. ராஜதுரை தான் அவரை மிகவும் கஷ்டப்பட்டு அந்த இடத்தில் இருந்து அழைத்து சென்றார்… அதன்பின் கருணா வீட்டில் சந்தோசம் என்பதே இல்லாமல் போய்விட்டது…
ராஜதுரை நாச்சியாரும் தான் மூவரையும் பார்த்து கொண்டனர்… கருணா வேலைக்கு கூட செல்வதில்லை… விஷ்ணுவை நாச்சியார் தான் தீனாவுடன் பள்ளிக்கு அனுப்பிவிட்டார்… கருணா அதிக நேரம் வயலில் தான் கழித்தார்… அன்றும் அவர் அங்கு இருக்கும் போது ராஜதுரை அவரிடம் பேச வந்தார்…
அங்கு அவர் பார்த்த காட்சியில் அதிர்ந்துவிட்டார்… அங்கு கருணா அமர்ந்து மது அருந்தி கொண்டு இருந்தார்.. அதை பார்த்து கோபமடைந்த ராஜதுரை “டேய் கருணா எப்போ இருந்து குடிக்க ஆரம்பிச்ச நீ.. நீ குடிச்சா தங்கச்சி திரும்பி வந்துருவாங்களா… விஷ்ணு அத்தை எல்லாத்தையும் யாருடா பார்ப்பா… வேலையை ரிசைன் பண்ணிட்டனு கேள்விப்பட்டேன்… வீட்டுக்கும் போகாம வேலைக்கும் போகாம என்ன பண்ண போறா… இதுல இந்த வீணாப்போன குடி வேற…. தயவுசெஞ்சு இப்படி இருக்காதா டா…” என்று கோவத்தில் ஆரம்பித்து கெஞ்சலில் முடித்தார்…
கருணா போதையில் ஒரு மாதிரி சிரித்து கொண்டே “துரை என் மைத்து எனக்கும் வேணும்டா… இது குடிச்சா என் மைத்து என்கூடவே இருக்காடா.. என்னை பார்த்து சிரிக்குறா… என்கிட்ட பேசுறாடா…” என்று பேசிக்கொண்டு இருந்தவர் திடீரென “துரை என்னால முடியலடா… ரொம்ப வலிக்குதுடா… அவ எப்படிடா என்னை விட்டு போனா.. அவளுக்கு தெரியாதாடா அவ இல்லாம என்னால இருக்க முடியாதுனு அவளுக்கு தெரியும்ல டா.. அப்பறம் ஏன்டா என்னை விட்டு போனா… எனக்கு அவ வேணும் டா…” என்று சிறுபிள்ளை போல் அவரை அணைத்து கொண்டு அழுதுவிட்டார்….
ராஜதுரையால் அவரை சமாதானம் செய்யவே முடியவில்லை… அழுத சோர்விலும் மது போதையிலும் மயங்கி இருக்க அவரை தனியாக விடாமல் கருணாவின் வீட்டிற்கு அழைத்து சென்றார்… அங்கு வடிவாம்பாள் மட்டும் இருக்க நாச்சியார் விஷ்ணுவை வீட்டிற்கு அழைத்து சென்று இருந்தார்… தன் மகன் மது போதையில் மயங்கியவாறு ராஜதுரையுடன் வருவதை பார்த்து வடிவாம்பாள் துடித்து விட்டார்…
ராஜதுரை எதுவும் பேசவில்லை… கருணாவை அவர் அறையில் படுக்க வைத்தவர் “பாத்துக்கோங்க அத்தை” என்று கூறி கிளம்பிவிட்டார்… வடிவாம்பாளும் தன் மகன் அறையில் அவர் தலைக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டார்.. அவர் கண்கள் மட்டும் கலங்கி கொண்டே இருந்தது…
அங்கு ராஜதுரை வீட்டில் தீனாவும் விஷ்ணுவும் விளையாடி விளையாடி உறங்கி இருக்க நாச்சியார் மட்டும் ராஜதுரையின் வருகைக்காக காத்து கொண்டு இருந்தார்… அதே போல் வீட்டில் மற்றவர்களும் தூங்கி இருந்தனர்… ராஜதுரை சோர்ந்து போய் வருவதை பார்த்து அவர் முகம் கழுவி விட்டு வரும் வரை காத்திருந்தவர் அவர் வருவதற்குள் சூடாக சாதத்தை எடுத்து வைத்து இருந்தார்…
ராஜதுரையும் வந்தவர் சாப்பிட ஆரம்பித்தார்.. “ஏன் மாமா உங்க முகம் வாட்டமா இருக்கு… அண்ணனை பார்க்க போறேன்னு தானு சொல்லிட்டு போனீங்க… அண்ணா எப்படி இருக்காங்க..” என்று கேட்டார்…
ராஜதுரை வருத்தமாக “அவன் புதுசா குடிக்க ஆரம்பிச்சு இருக்கான் நாச்சி… அவனுக்கு குடிக்கறதை பார்க்குறது கூட பிடிக்காது… ஆனா அவன் குடிக்குறான்… ரொம்ப கஷ்டமா இருக்கு நாச்சி… எப்பவும் தங்கச்சி ஞாபகம் தான்… நான் மட்டும் போகலனா அவன் அங்கயே மயங்கி போய் இருப்பான்… அத்தையும் அவனை பார்த்துட்டே தூங்காம இருந்து இருப்பாங்க… அவனை எப்படி மீட்டு கொண்டு வர போறேன்னு எனக்கு தெரியல…” என்று கூறினார்…
நாச்சியாரோ “அவரோட இழப்பு மிகப்பெரிய இழப்பு மாமா… அவரை கொஞ்சம் கொஞ்சமா தான் மீட்டு கொண்டு வரனும்… அவர் கொஞ்சம் நீங்க சொன்னா தான் கேட்பாரு… நீங்க தான் பாத்துக்கனும் மாமா… இப்போ சாப்பிடுங்க…” என்று கூறினார்…
ராஜதுரையும் சாப்பிட்டு முடித்து இருக்க நாச்சியார் பாத்திரத்தை கழுவி வைத்தவுடன் இருவரும் அறைக்கு சென்றனர்… அவர்கள் இருவரும் வெளியில் சென்றவுடன் மறைந்து நின்று கேட்ட ஒரு உருவம் ஒரு திட்டத்தை உருவாக்கி இருந்தது… அந்த உருவம் மறைந்து இருந்ததை பார்த்து இருந்தால் இன்னும் நடக்க கூடிய பிரச்னையை தவிர்த்து இருக்கலாம்….
error: Content is protected !!