Skip to content
Post Views: 4,982
“அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு
பொற்றான் நெடிதுய்க்கும் ஆறு
மு.வ உரை: முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.”
செங்காந்தள் உள்ளே நுழைந்த நேரம் வீட்டின் பக்கவாட்டில் குரல் கேட்க அங்கே சென்றாள்.
குழாய் அடியில் சர்வேஸ்வரன் அமர்ந்திருக்க காமாட்சியும் லிங்கமும் அவனின் கன்னத்தைத் தட்டி போதையை தெளிய வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர்.
Advertisement
“அத்தை..”
“வாத்தா போயிட்டு வந்துட்டியா? உன் புருசன் உள்ளேயா இருக்கான்?”, என்றவர் பதட்டமாய் எட்டிப் பார்க்க,
“இல்லத்தை அவங்க கிளம்பிட்டாங்க.”
Advertisement
“நல்ல வேளை. ஏலேய் எந்திரிச்சு தொலை டா. இப்படியா மூக்கு முட்ட குடிச்சுத் தொலையுவ. ஊரில் யாரும் பார்த்தா மானமே போவும்.”, என்றவர் மகனின் தோளில் சரமாரியாய் அடித்தார்.
Advertisement
“யம்மா அவனே நினைவில்லாம கிடக்கான். அடிச்சு உன் கையை ஏன் புண்ணாக்குற. போ உள்ளே, நீ போடுற கூப்பாடுலேயே கூட்டம் கூடிடும்.”, என்ற லிங்கமூர்த்தி தம்பியை இழுத்துக் கொண்டு உள்ளே சென்றான்.
அங்கு தொழில் நடக்கும் இடத்திற்கு வந்தவன் வேலையில் மூழ்கி விட்டிருந்தான்.
தொழில் ரீதியாய் ஒரு சிலர் வந்து பேசி விட்டு கிளம்ப அனைவரையும் அனுப்பி விட்டு தனது அலுவக அறைக்குள் ருத்ரேஸ்வன் நுழைந்திருந்தான்.
Advertisement
“என்ன சம்முகம் சின்னப் பையனா தெரியுது? நம்பி தொழில் வைச்சுக்கலாமா?”
“என்ன இப்படி கேட்டுட்டீக. மெத்த படிச்ச மேதாவியப்பா. போடுற உரத்தில் இருந்து பேங்கில் பணம் கட்டுற வரை எல்லாம் கணகச்சிதமா தெரியுற ஆளு.
உதவிக்கு ஆளே இல்லைனாலும் தனியாவே சமாளிச்சு தொழிலை தூக்கி நிறுத்துற சாமர்த்தியம் இருக்குய்யா.”
“ம்ம் நீ சொன்னா சரிதேன். குடும்பமெல்லாம் எப்படி?”
“ஊரில் பஞ்சாயத்துக்காரர் குடும்பம்னால் சின்ன பிள்ளைக்கு கூடத் தெரியும். அவுக அய்யாவும் அம்மையும் எப்படி இருந்தாகளோ அதே மாதிரி தேன் இவரும் பொஞ்சாதியும்.
சபைக்கு எடுப்பா இரண்டு பேரும் வந்து நின்னா பார்க்க இரண்டு கண்ணு பத்தாது. இந்தக் காலத்து பிள்ளைக மாதிரியெல்லாம் இல்லாம சேலையும் மங்களகரமான முகமும்னு..
சின்ன பிள்ளைதேன் ஆனால் பார்த்தா கையெடுத்து கும்பிடத் தோணும்.”
“என்ன சித்தப்பூ பிடிக்காத கல்யாணம்னு ஊருக்கே தெரியும். நீ என்னவோ அடிச்சு விட்டுட்டு கிடக்க?”
“என்னலே பெரிய பிடிக்காத கல்யாணம் அதுக்காக உன்னையும் உன் பொஞ்சாதியும் மாறி நித்தமும் அடிச்சுகிட்டா கிடக்காக.
வீட்டுச் சத்தம் வெளியே வராம அந்த பிள்ளை குடும்பம் நடத்துற அழகு போதாதா எப்படி வாழுதுனு தெரிஞ்சுக்க.”
இப்படியாய் இவர்கள் பேசியதெல்லாம் அவனது அறை ஜன்னல் வழி ருத்ரேஸ்வரனின் காதில் தெளிவாய் விழுந்தது.
மாலை மனைவியை கடைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைவு வந்தவனாய் ஆறரை மணியளவில் வீட்டிற்கு கிளம்பியிருந்தான்.
வரவேற்பறையில் அமர்ந்தவன் டீவி சேனலை மாற்றிய படி உர்ரென அமர்ந்திருந்த தம்பியை கவனித்து,
“என்ன டா நேத்து வீட்டுக்கு வரலையாம்? எங்கே போன?”
“எல்லாத்தையும் சொல்லிருவாகளா உனக்கு?”
“என்ன சத்தம் எகிருது. வீட்டில் இருக்குற ஒருத்தன் வரலைனால் சொல்ல மாட்டாகளா? அப்படி என்ன வெட்டி முறிக்குற வேலை?”
“ஆம்பளைக்கு ஆயிரம் சோலி இருக்கு எல்லாத்தையும் சொல்லிட்டு கிடக்க முடியாது. ஏன் நீங்க அப்படிதேன் உங்க வீட்டுக்காரிட்ட எல்லாம் சொல்லுதீகளோ?”
“ஏலேய் விளக்கமாறு பிஞ்சு போவும். அண்ணன்கிட்ட பேசுதோம்னு நினைவு இருக்கட்டும் சொல்லிட்டேன்.”
“சும்மா என்ட்ட கத்தாத மா. உன் பெரிய பிள்ளை பண்றதையும் தட்டி கேளு அப்போ. ஊருக்காக சும்மா ஒரு வாழ்க்கை. இதில் என்னாலதேன் மானம் போகுதாம்.”, என்றதில் பல்லைக் கடித்த படி இருக்கையை விட்டு எழுந்திருந்தான் ருத்ரேஸ்வரன்.
“எய்யா ருத்ரா..”
“என்னப் பேச்சு பேசுறான்னு பாரும்மா. மட்டு மரியாதை இல்ல அடுத்தவங்க வாழ்க்கையை எட்டிப் பார்க்க கூடாதுங்கிற சாதாரண அறிவு கூட இல்ல.”
“ம்ம் அப்போ நீங்க மட்டும் ஏன் என் வாழ்க்கையில் மூக்கை நுழைக்குறீங்க?”
“இப்படியே குடிச்சே அழிஞ்சு போறேன்ங்கிறியா நீ?”, என்ற நேரம் தீப்தி தந்தையைத் தேடி ஓடி வந்திருக்க பேச்சை அப்படியே நிறுத்தி விட்டு தம்பியை முறைத்தபடி நின்றான்.
“ப்பா..”
“ஒண்ணுமில்ல டா சித்தப்பா ரொம்ப சேட்டை பண்றான் உன்னை மாதிரியே.. நீ வெளியே போய் வண்டியில் உக்காரு நான் வந்துரேன்.”, என்றவன் மகள் வாசலை கடக்கும் வரை வாய் திறக்காமல் நின்றிருந்தான்.
“இன்னொரு தடவை குடிச்சனு தெரிஞ்சுது அப்பறம் இருக்கு உனக்கு.”, என்றவன் வார்த்தைகளை கடித்துத் துப்பி விட்டு தம்பிக்கு பின்னால் பார்க்க செங்காந்தள் வேகமாய் வாசலை நோக்கிச் சென்றிருந்தாள்.
தந்தையின் கோபம் உணர்ந்தவளாய் தீப்தி அமைதியாகவே வர ருத்ரேஸ்வரன் கண்ணாடி வழி மனைவியைப் பார்த்தான்.
எப்போதும் போல் எவ்வித அலட்டலுமின்றி சாதாரணம் போல் அமர்ந்திருந்தாள்.
உண்மையில் ஒரு கூட்டுக் குடும்பத்தில் மூத்த மருமகளாய் இருப்பதற்கு முதல் தகுதியே கண் குருடாய் காது செவிடாய் வாய் ஊமையாய் இருப்பது தான்.
அதற்கு ஆகச் சிறந்த உதாரணமாய் இருப்பாள் செங்காந்தள்.
என்றுமே எதிலுமே தன் கருத்தையோ பிடித்தமின்மையையோ காட்டியதே இல்லை.
அவள் உண்டு அவள் வேலை உண்டு என்பதான மனநிலை. யாரைப் பற்றியும் புறங்கூறியோ பழி பேசியோ பார்த்ததேயில்லை.
ராணி இவளை விட இரண்டு வயது சிறியவள் திருமணமான புதிதில் எல்லாம் ஒன்றும் தெரியாது என்று கூறியே பாதி நாட்களை கடத்தி விட்டவள் அதன் பின் மசக்கை பிரசவம் என தாய் வீட்டோடு தான் பாதி நாட்கள் கழியும்.
ஆனால் செங்காந்தள் அவளிடம் ஒரு நாள் கூட வேலை செய்யவில்லை நான் மட்டும் ஏன் செய்ய வேண்டும் என்பது போன்ற எந்த கேள்விகளையும் கேட்டேதேயில்லை.
ஆனால் இன்று தம்பியின் பேச்சு ஏனோ ருத்ரேஸ்வரனுக்கு சுருக்கென இருந்தது.
உடன் பிறந்தவனே இப்படி கேட்கிறான் எனில் ஊரில் யார் யார் என்னவெல்லாம் நினைத்துக் கொண்டு இருப்பார்கள் என்று தோன்றியது.
இப்படியான சிந்தனைகளில் சுழன்றவன் கடை வாசலில் வண்டியை நிறுத்தியிருக்க தாயும் மகளுமாய் இறங்கி கடைக்குள் சென்றனர்.
செங்காந்தள் வேண்டியவைகளை வாங்கி விட்டு மகளுக்கு தினசரி உபயோகத்திற்கு இரண்டு மூன்று உடைகளை எடுத்துக் கொண்டு கணவனிடம் வந்தாள்.
“எல்லாம் வாங்கிட்டியா? போலாமா?”
“அது.. உங்களுக்கு ஒரு சட்டை?”
“எனக்கு இப்போ என்னத்துக்கு இருக்குறது போதும். கொடு பில் போட்டு வாரேன்.”
“உங்க பிறந்த நாளுக்கு போட புதுசு இல்லையே?!”, என்றதில் தான் பிறந்த நாள் நினைவு வந்தவனாய் அவளோடு ஆண்கள் பிரிவிற்குச் சென்று ஒரு சட்டையை எடுத்து வந்தான்.
“ப்பா பரோட்டா சாப்பிடலாமா?”
“வெளியே வந்தாலே ஹோட்டல்ல சாப்பிடனுமா உனக்கு?”
“ஆமா அம்மா எப்போவாவது தான வரா. மூணு பேருமா போனால் நல்லாயிருக்கும். போலாம் பா..”, மகள் வளர்ந்து கொண்டு இருப்பதை அவ்வப்போது அவனுக்கு உணர்த்திக் கொண்டிருக்க அங்கிருந்த உயர்தர ஹோட்டல் வாசலில் வண்டியை நிறுத்தினான் ருத்ரேஸ்வரன்.
மகளும் தாயும் ஒரு புறம் அமர ருத்ரேஸ்வரன் மறுபுறம் அமர்ந்து அமைதியாய் வேடிக்கை பார்த்திருந்த மனைவியைத் தான் பார்த்திருந்தான்.
“என்ன வேணும்?”
“பரோட்டா..”
“நீ தான் சொல்லிட்டியே நான் அம்மாவை கேட்டேன்.”, என்றதில் கணவனை ஏறிட்டவள் தனக்கு வேண்டியதை கூற மூவருக்குமான உணவை ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தனர்.
“ப்பா.. உன் பர்த்டேக்கு சட்டை எடுத்தல. அம்மா பர்த்டேக்கு ஏன் எடுக்கலை?”
“!!!”
“எனக்கு புதுச் சேலை இருக்கு பாப்பா..”
“அதை வேற எதுக்காவது கட்டிக்கோ. இப்போ நாங்க வாங்குறதை பர்த்டேக்கு கட்டு.”
“எனக்கு இப்போ பிறந்த நாள் இல்ல பாப்பா..”
“பொய் சொல்லாத நீ சொல்லிருக்கியே உனக்கும் அப்பாக்கும் ஒரே நாள் தான் பிறந்த நாள்னு. அப்பா நான் சொல்றது கரெக்ட் தான?”
தெரியாத ஒன்றிற்கு என்ன பதில் கூறுவது என்று விழித்தவனாய் ருத்ரேஸ்வரன் அமர்ந்திருக்க மகளுக்கான உணவு வந்ததில் மனைவி சாமர்த்தியமாய் பேச்சை திசை மாற்றியிருந்தாள்.
இத்தனை வருடங்களில் பிறந்தநாள் திருமண நாள் எல்லாம் கொண்டாடியதில்லை.
காலையில் அவன் அலமாரியில் முதலில் இருக்கும் சட்டையை எடுத்து அணிந்து கொள்வான். காமாட்சி திருநீறு பூசி விடுவார் இவ்வளவு தான் பிறந்தநாள் கொண்டாட்டமெல்லாம்.
ஆனால் அவளுக்கும் தனக்கும் ஒரே நாளில் பிறந்த தினம் என்பதைக் கூட தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோமே என்பது இப்போது லேசான குற்றவுணர்ச்சியைக் கொடுத்திருந்தது.
சமீப காலமாக மகள் சுற்றி நடக்கும் அனைத்தையும் பார்த்து புரிந்து கொள்கிறாள் என்பதிலேயே ருத்ரேஸ்வரன் வெகுவாய் மனம் குழம்பியிருந்தான்.
தங்களது திருமணத்தை இப்படியே கொண்டு செல்வது அவளது வருங்காலத்தை பாதிக்குமோ என்ற எண்ணம் ஒரு புறம்.
குடும்பத்தினரோ மற்ற எவருமோ மகளிடம் தேவையற்ற பேச்சுகளை இன்று சர்வஸ்வரன் போல் பேசி விடுவார்களோ என்ற எண்ணம் ஒரு புறமுமென தனக்குள் மருகிக் கொண்டு தான் இருக்கிறான்.
இப்போது அந்த குழப்பம் இன்னுமாய் அதிகரித்திருந்தது. மகள் பொறுமையாய் உணவை உண்டு கொண்டிருக்க இருவரையும் அங்கேயே இருக்குமாறு கூறிவிட்டு வண்டியை எடுத்துக் கொண்டு அந்த துணிக்கடையை அடைந்திருந்தான்.
மீண்டுமாய் அவன் ஹோட்டலுக்கு வந்த நேரம் செங்காந்தள் மகளோடு கல்லாவிற்கு அருகில் போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தாள்.
“எங்கப்பா போன? நான் அப்போவே சாப்பிட்டுட்டேன்.”
“நீ தான அம்மாக்கு புது ட்ரெஸ் எடுக்கணும்னு சொன்ன?”
“ஆமா!”
“அதான் எடுத்தாச்சு.”, என்றவன் கையிலிருந்த கவரை மனைவியிடம் நீட்ட ஆச்சரியமும் அதிர்ச்சியுமாய் அதை கையில் வாங்கிக் கொண்டாள்.
“ம்மா பாரு என்ன கலர் சேலை?”, என்று மகள் அங்கேயே குதிக்க நிதானத்திற்கு வர முடியாதவளாய் மகளிடம்,
“பாப்பா இங்கேயே எல்லாம் பேசணுமா? வீட்டுக்கு போய் பார்க்கலாம் வா.”, என்று கூறி கணவனை ஓரப்பார்வை பார்த்து நிற்க ருத்ரேஸ்வரன் வண்டியைக் கிளப்பியிருந்தான்.
மூவருமாய் வீட்டிற்கு வந்த நேரம் காமாட்சி மட்டுமே வெளித் திண்ணையில் அமர்ந்திருந்தார்.
“அத்தை சாப்டீங்களா?”
“என்னத்தையோ உப்புமானு கிண்டி கொண்டு வந்து வைச்சா. உப்புமில்ல உரப்புமில்ல. இவ என்னைக்குதேன் சமைக்க கத்துகிடுவாளோ டி.”
“ஆச்சி நான் புரோட்டா சாப்பிட்டேனே…”
“அதான கடையில சாப்பிடுறதுனா உனக்குத் தனி வயிறு வந்துருமே..”, என்றவர் பேத்தியின் கன்னம் வழித்து முத்தம் வைத்துக் கொண்டார்.
செங்காந்தள் உள்ளே சென்றிருக்க ருத்ரேஸ்வரன் தாயின் அருகில் அமர்ந்தான்.
“என்னம்மா பண்றான்? சாப்பிட்டானா?”
“சாப்பிட்டான் டா. நல்லாயிருந்தானே ருத்ரா! எங்கே எங்க வளர்ப்பு தப்பா போச்சோ தெரியலையே!”
“இவன் திமிரெடுத்து பண்றதுக்கு நீயும் அப்பாவும் என்ன பண்ண முடியும் மா? நானும் லிங்கமும் இப்படியில்லையே?”
“ஆனால் மூணு பேர் வாழ்க்கையும் உருப்படியா இருக்குற மாதிரி தெரியலையே ருத்ரா!”
“ம்மா!”
“இல்லப்பா அவன் பேசினது தப்பு தான் ஆனால் சொன்ன விசயம் உண்மை தான? இன்னும் எத்தனை வருசத்துக்கு உன் பிடிவாதத்தை தூக்கி சுமந்துட்டு இருக்க போற.”
“..”
“நம்ம வீட்டு மவராசி டா உன் பொண்டாட்டி. அந்த பிள்ளை வாழ வேண்டிய வயசைத் தொலைச்சுற கூடாதுனு மனசு கிடந்து அடிச்சுக்குது டா ருத்ரா.
படிச்சவன் நீ உனக்கு நான் சொல்லித் தெரிய ஒண்ணுமில்ல.”
“..”
“இந்த லிங்கம் உனக்கு எதிர்மாறா பொண்டாட்டியை ஒரு வார்த்தை சொல்ல மாட்டேங்குறான். கடைசி பிள்ளைனு செல்லம் கொடுத்ததுக்கு அவன் வேற ரகமா இருக்கான்.”
“..”
“இந்த சகவாசத்தை எப்போ விட்டொழிப்பானோ தெரியலை எனக்கு.”, என்றவர் கலங்கிய கண்களைத் துடைக்க செங்காந்தள் அவருக்காக மோரில் உப்பும் பெருங்காயமும் போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள்.
“நீ போத்தா மத்த வேலையை காலையிலே பார்த்துக்கலாம்.”
“சரித்தை நான் பார்த்துகிடுறேன். நீங்களும் மனசை போட்டு குழப்பாம போய் படுங்க.”, என்றவள் அறைக்குச் சென்று வேகமாய் புடவையை மாற்றிக் கொண்டு மறுநாளுக்குத் தேவையான படி சமையல் மேடையை ஒதுங்க வைத்து விட்டு மகளுக்கும் கணவனுக்குமாய் பாலை எடுத்துக் கொண்டு அறைக்குச் சென்றாள்.
error: Content is protected !!