Skip to content
Post Views: 5,065
“மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபா டில்லை உயிர்க்கு
மு.வ உரை:
மாறுபாடில்லாதா உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.”
ருத்ரேஸ்வரனோடு பின்னே வந்த செங்காந்தள் தயக்கமாய் கணவனின் அருகில் நின்று,
Advertisement
“எதுவும்.. எதாவது குழப்பத்தில் இருக்கீகளா மாமா?”
“நான் பண்ணின தப்பு எனக்குப் புரியுது. ஆனால் மாத்திக்க தான் முடியலை.”
“பாப்பா வளர வளர அவளுக்கு ஒரு நல்ல சூழலை கொடுக்க நினைக்குறேன். ஆனால் நான் பண்ணின தப்பு..”
Advertisement
“யார் தப்பு யார் சரிங்கிறதை விட இத்தனை நாள் இந்த கல்யாணத்தை நாம இரண்டு பேருமே காப்பாத்திட்டு தான மாமா இருக்கோம்.”
Advertisement
“ஆனால் அது ஊருக்காகவும் மத்தவங்களுக்காகவும் தான?”
“நான் என்ன பண்ணினா உங்களால நிம்மதியா இருக்க முடியும்னு சொல்லுங்க மாமா. நிச்சயமா நான் அதை பண்ணுவேன்.”
“நான் கட்டின இந்த தாலிக்காக நீ அதிகமாவே பண்ணிட்டு தான் இருக்க காந்தா. இனி மாற வேண்டியது நான் தான்.
Advertisement
விடு நீ போய் சோலியைப் பாரு.”, என்றவன் துண்டை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றிருந்தான்.
அந்த யோசனையோடே வெளியே வந்த நேரம் பாத்திரம் தேய்க்க பொன்னி வேலைக்கு வந்திருந்தாள்.
“எப்போ வந்த பொன்னி?”
“என்ன ஒரு அதிசயம் செங்காக்கா இந்நேரத்துக்கு சமையகட்டில் இல்லாம போனீக..”
“கேட்டதுக்கு பதில் சொல்லுதியா நீ?”
“முகம் என்னவோ குழப்பத்தில் இருக்கே. யக்கா நல்லாயிருக்கீக தான?”, என்றவளை வாஞ்சையாய் பார்த்தாள் செங்காந்தள்.
பொன்னி அம்மா இங்கு வேலைப் பார்த்த போதே அவளும் வருவாள் அப்போதிருந்தே பழக்கம் என்பதால் செங்காவுக்கு தங்கை போன்றவள்.
“ஒண்ணும் இல்ல டி.”
“அப்போ மாமனோட ரொமேன்ஸ்னு சொல்லுங்க.”
“ஏய் கழுதை என்னப் பேச்சு பேசுற!”
“சும்மா இந்த பேச்சு பிடிக்காத மாதிரி நடிக்காத செங்கா க்கா. உனக்கு உன் மாமனை எம்புட்டு பிடிக்கும்னு என்னை விட யாருக்குத் தெரியும்.”
“ம்ம் நூத்து கிழவி உனக்கு எல்லாம் தெரியுமாக்கும் போடி வேலையை பார்த்துட்டு. “, என்றவள் அவளுக்காக உணவைக் கொண்டு வரச் சென்றாள்.
தன்னை அந்த வீட்டில் ஒருத்தியாய் நினைக்கும் செங்காந்தள் பொன்னிக்கு மிகவும் பிடித்தமானவள்.
தாய்க்கு உடம்பு சரியில்லாத நேரத்தில் தேவையான அத்தனை உதவிகளையும் செய்து கொடுத்து உடன்பிறப்பாகவே அவளுக்குத் துணையிருந்தாள்.
அதுவுமில்லாமல் செங்காந்தள் அவளது கணவனைப் பற்றி மனம் திறந்து பேசுவதும் பொன்னியிடத்தில் மட்டுமே. செங்காந்தள் கொண்டு வந்த உணவுத் தட்டை கையில் வாங்கிக் கொண்டவள் அவளையே பார்த்த வண்ணம் உணவை உண்ண ஆரம்பித்தாள்.
சில நொடிகளுக்குப் பின்,
“மாமா ஏதேதோ பேசுறாக பொன்னி. எனக்கு அவுகளை இப்படி பார்க்கவே முடியலை.”
“..”
“எனக்காகதேன் என்னென்னவோ யோசிக்குறாக டி.”
“…”
“நான் எதாவது கேட்குறேனா? அவுக எப்படியிருந்தாலும் என் மாமா தானே? அப்பறம் ஏன் இப்படி விசனப்படுறாகளோ தெரியல.”
“..”
“என்ன டி அமைதியா இருக்க நான் பாட்டுக்கு பேசிகிட்டு இருக்கேன்.”
“பார்த்தாலும் பார்த்தேன் இப்படி ஒரு பொஞ்சாதியை எங்கேயும் பார்க்கலை. உங்க மாமாக்கு குழப்பம் கூட வரக் கூடாதா? ரொம்பதேன் பண்ணுதீக கா…”
“உன்கிட்ட போய் சொன்னேன் பாரு. போடி.”, என்றவள் தனது வேலையை கவனிக்கச் சென்றிருந்தாள்.
மதிய நேரத்தில் சகோதரர்கள் இருவரும் உணவு நேரத்தில் வந்திருக்க லிங்கமூர்த்தி தாயிடம்,
“ம்மா ராணியோட சித்தி மகளை பொண்ணு பார்க்க வாராக. நாங்க அங்கே போயிட்டு அப்படியே அவங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு வந்துரோம்.”
“ஏன் டா பொண்ணு பார்க்க எதுக்கு நீங்க போகணும்?”
“வானு கூப்பிடுதாக எப்படி போகாம இருக்க முடியும்?”
“சரிதான் மாமனார் வீட்டு சுகம் கண்டு போனியோ நீயும்? எப்போ பாரு அங்கே போய் கிடக்க?”
“ம்மா..”
“லிங்கா நாளைக்கு அவளும் பாப்பாவும் அவுக அம்மா வீட்டுக்கு போறாங்க. அதனால காலையில நீங்க வர்ற மாதிரி பார்த்துகோங்க.”
“அண்ணே இரண்டு நாள் இருக்கலாம்னு..”
“அதனாலதேன் இப்போவே சொல்லிட்டேன் டா. அவ போய் வர ஒரு வாரம் ஆகும். அதுக்கு ஏத்த மாதிரி பார்த்துகிடுங்க.”, என்றவன் எழுந்துச் சென்று விட சமையலறை வாசலில் நின்று அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ராணி செங்காந்தளிடம்,
“க்கா என்னக்கா அத்தான் இப்படி சொல்லிட்டு போறாக..”
“…”
“இரண்டு நாள் தானக்கா?”
“நானும் வாரேன்னு சொல்லிட்டேன் ராணி. அம்மா எதிர் பார்ப்பாங்க. முடிஞ்சளவு சீக்கிரம் வரப் பாக்குறேன்.
அதுவரைக்கும் பார்த்துக்கோ.”, என்றதில் வேண்டா வெறுப்பாய் தலையசைத்து வைத்தாள்.
லோட் ஏத்தும் விஷயமாய் ஒருவரைச் சந்தித்து கிளம்பும் நேரம் ருத்ரேஸ்வரனின் கைப்பேசி ஒலிக்க புது எண்ணாய் இருந்ததை கவனித்து அழைப்பை ஏற்றான்.
“ஹலோ..”
“ஹலோ ருத்ரா?”
“ஆமாங்க யாரு பேசுறது?”
“ஹே நான் ரம்யா பேசுறேன் எப்படி டா இருக்க?”
“ரம்யா! நான் நல்லாயிருக்கேன். எத்தனை வருசமாச்சு எப்படியிருக்க என்ன பண்ற?”
“ம்ம் ரொம்ப அக்கறை தான். உன்கூட பேசவே கூடாதுனு நினைச்சேன். ஆளு அட்ரெஸ்ஸே காணும். கல்யாணமே ஆயிடுச்சாம் கூப்டியா டா நீ?”
“யாரையுமே கூப்பிடலை ரம்யா. சூழ்நிலை அப்படி. நீ எப்படியிருக்க? என்ன பண்ற?”
“நல்லாயிருக்கேன் டா. நான் ஒரு டீவி சேனலில் ப்ரோகிராம் ட்ரெக்டரா இருக்கேன்.”
“ஓ பரவால்லயே. என் நம்பர் எப்படி கிடைச்சுது?”
“எனக்கு ஒரு ஹெல்ப் வேணும் டா. உங்க ஊர் பக்கம் ஒரு ப்ரோக்ராம்காக வரோம். நாங்க இரண்டு பொண்ணுங்க மூணு பசங்க ஒரு வாரம் தங்குற மாதிரி இருக்கும். நம்ம க்ரூப்பில் கேட்டப்போ தான் உன் ஊர் பக்கம்னு சொல்லி நம்பர் கொடுத்தாங்க பசங்க.”
“ஓ நல்ல விஷயம் என்ன உதவி வேணும்னு சொல்லு ரம்யா சிறப்பா பண்ணிடலாம்.”
“தங்குறதுக்கு பாதுகாப்பா ஒரு இடம் வேணும். நாங்க கவர் பண்ண போறது எல்லாமே கிராமங்கள் தான். அதனால சிட்டிக்குள்ளே ரூம் போட்டா கஷ்டம் உன்னால எதுவும் அரேண்ஞ்ச் பண்ண முடியுமா?”
“ம்ம் எங்க தோப்பு வீடு இருக்கு உங்களுக்கு பிரச்சனை இல்லைனால் அங்கேயே தங்கிக்கோங்க. நான் தேவையான ஏற்பாட்டை பண்ணி தரேன்.”
“ஹே எவ்வளவு பெரிய விஷயம் இப்படி சிம்பிளா முடிச்சுட்ட?!”
“இதில் என்ன இருக்கு. இத்தனை வருசம் கழிச்சு என்னை நியாபகம் வைச்சு நீ உதவி கேட்க நினைச்சதே எனக்கு சந்தோஷமா இருக்கு.
எப்போ வர்ற என்னனு விவரமெல்லாம் வாட்ஸ்அப் பண்ணிடு நான் இங்கே எல்லாம் அரேண்ஞ்ச் பண்ணி வைச்சுடுறேன்.”
“தேங்க் யூ சோ மச் டா ருத்ரா. சீக்கிரமே சந்திப்போம்.”
இரவு வீட்டிற்கு வந்தவன் மனைவியிடம் விஷயத்தை கூறிட தோட்டத்து ஆட்களை வைத்து வீட்டை சுத்தம் செய்து விடுவதாய் கூறினாள்.
“ஒரு வாரத்துக்கு பொன்னியை வேணும்னால் அவங்களுக்கு ஒத்தாசைக்கு அனுப்பி வை.”
“சரி மாமா நான் பார்த்துகிடுறேன்.”
“நாளைக்கு போறதுக்கு எல்லாம் எடுத்து வைச்சுட்டியா?”
“ம்ம் மதியம் அவ ஸ்கூலில் இருந்து வந்த பிறவு உங்களுக்கு போன் போடுதேன்.”
“சரி. அங்கே போய் பாப்பாவை பத்திரமா பார்த்துக்கோ பம்புசெட்டில் ரொம்ப ஆட்டம் போட போறா..”
“நீங்களும் சொல்லி அனுப்புங்க. அப்போதேன் என் பேச்சை கேட்பா.”, என்றதற்கு ஆமோதிப்பாய் தலையசைத்தான் ருத்ரேஸ்வரன்.
அறைக்குள் வந்தவனின் பார்வை ஓரமாய் வைக்கப்பட்டிருந்த பையில் பதிந்து மீண்டது.
ஒரு வாரமெல்லாம் அவன் இந்த அறையில் தனியாக இருந்ததேயில்லை.
ஒரு வேளை கூடவே இருப்பதால் தான் அருமை தெரியாமல் போய்விட்டதோ!
அந்த அறைக்கு மட்டும் இல்லை அவன் வாழ்க்கைக்கே உயிர்ப்பை கொடுப்பது மனைவி தான் என்பதை இந்த சிறு இடைவெளி அழுத்தமாய் உணர்த்தும் போலும்.
செங்காந்தள் அறைக்குள் வந்த நேரம் சிறிது பணத்தை அவளிடத்தில் செலவிற்கு வைத்துக் கொள்ளுமாறு கூறிக் கொடுக்க அதை வாங்கிக் கொண்டவள் ஏதோ கேட்க நினைத்து அமைதி காத்தாள்.
“வேறெதுவும் வேணுமா?”
“இல்ல மாமா இதுவே போதும். அது.. நீங்க தனியா..”, என்றவள் பேச்சை முடிக்காமல் கணவனை லேசாய் நிமிர்ந்து பார்த்தாள்.
“ஒரு வாரம் தானே ஒண்ணும் பிரச்சனையில்ல. நீ கொஞ்சமாவது ஓய்வு எடுத்துட்டு வா.”, என்றதற்கு தலையாட்டி நகர்ந்தாள்.
மறுநாள் மதியம் மனைவியையும் மகளையும் வண்டியில் அழைத்துச் சென்றவன் மாமியார் மாமனாரிடம் ஓரிரு வார்த்தை பேசி விட்டு கிளம்பத் தயாராக மனைவியும் மகளும் ஆளுக்கொரு புறம் நிலைப்படியில் நின்ற வண்ணம் மகள் மட்டும் அவனுக்காக கையசைத்து புன்னகைத்திருக்க மனைவியின் முகத்திலோ சொல்ல முடியா உணர்வு இருந்தது.
இருவருக்கும் பொதுவாய் தலையசைத்து கிளம்பியவனுக்கு வளைகாப்பு முடிந்து செங்காந்தளை இங்கு விட்டு வருவதற்காக அழைத்து வந்த நேரம் தலையைத் திருப்பி திருப்பி தன்னைப் பார்த்துச் சென்றவளின் நினைவு வந்து போனது.
வேலை முடித்து வேண்டா வெறுப்பாய் பத்து மணியளவில் வீட்டிற்கு ருத்ரேஸ்வரன் வந்த போது காமாட்சி அவனுக்காக காத்திருந்தார்.
“என்னய்யா இன்னைக்கு நேரமாகிப் போச்சா?”
“ம்ம் ஆமா மா..”
“இந்த பிள்ளையும் செங்காவும் இல்லாம வீடே என்னவோ போல இருக்கு. எனக்கு கையொடஞ்சாப்புல இருக்கு.
இந்த ராணி எப்போ பார்த்தாலும் அந்த போனை நோண்டிகிட்டே கிடக்காளே ஒழிய வாய் வார்த்தையா பேசியிருக்க மாட்டுக்கா.”
“…”
“சரி நீ போய் கை கால் கழுவி வா நான் சாப்பாடு எடுத்து வைக்கேன்.”, என்றவருக்குத் தலையசைத்து அறைக்குள் வந்தனுக்கு காலி மெத்தையும் சத்தமில்லாத அமைதியும் எரிச்சலைத் தான் கொடுத்தது.
இல்லையெனில் இந்நேரம் மகள் தன் தோள் மீது ஏறி அமர்ந்திருக்க அவனின் மஞ்சளழகியின் கொலுசொலி அவன் செவிகளை நிறைத்திருக்கும்.
அனைத்தையும் புறந்தள்ளி அறையை விட்டு வெளியே வந்தவன் உணவைப் பார்க்க அவனுக்குப் பிடிக்காத சப்பாத்தியும் குருமாவும் இருந்தது.
அவனுக்கு இந்த பட்டை சோம்பெல்லாம் அளவாய் இருந்தால் தான் குருமா உள்ளே இறங்கும்.
இன்றோ எதுவுமே சொல்ல முடியாத நிலை. அமைதியாய் இரண்டு சப்பாத்தியை மட்டும் உண்டு விட்டு தனிமையை நாடியவனாய் அறைக்குள் புகுந்து கொண்டான்.
கட்டிலில் விழுந்தவனுக்கு மனைவியின் வாசமும் அருகாமையும் இருப்பதை போன்ற பிரம்மை. தனது கைப்பேசியை எடுத்து அவளின் எண்ணைப் பார்க்க மகளோடு அவளிருக்கும் புகைப்படம்.
போன வருடம் பிள்ளையின் பிறந்தநாள் அன்று தாயோடு போட்டோ எடுக்க வேண்டும் என அடம் பிடித்து தீப்தி எடுத்துக் கொண்ட புகைப்படம்.
மகளோடு அவளிருக்கும் நேரமெல்லாம் தாய்மையின் பூரிப்பில் விகசிக்கும் முகம் அவளின் ஒட்டு மொத்த சந்தோஷத்தையும் எடுத்துரைப்பதாய் இருக்கும்.
ஆனால் அவனருகில் அவளின் முகம் தாங்கி நிற்கும் பாவம் என்னவென இன்றளவும் அவனால் கண்டுகொள்ள முடிந்ததில்லை.
அந்தப் புகைப்படத்தை பார்த்த படி இங்கு இவன் இப்படி தனிமையில் தவித்திருக்க அங்கு செங்காந்தளோ கையோடு எடுத்துச் சென்றிருந்த கணவனின் புகைப்படத்தை தலைக்கருகில் வைத்து வருடிக் கொண்டிருந்தாள்.
அவனது வாசனை நாசியைத் தொடாமல் ஏனோ தூக்கம் வருவேனாவென்றது.
அவனது குரலில் ஒரு வார்த்தையாவது கேட்டால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது.
இதற்காக தான் இங்கு வந்தாலும் அவள் தங்குவதெல்லாம் இல்லை. இந்த முறை அவனே கூறிய பின் மறுத்துப் பேச முடியாதவளாய் கிளம்பி வந்திருக்க இப்போது இந்த இரவை நெட்டித் தள்ளுவது பெரும்பாடாய் இருந்தது பெண்ணவளுக்கு.
error: Content is protected !!