Skip to content
Post Views: 2,309
அத்தியாயம் 6
“இந்தா ப்ரதம், உனக்கு பிடிக்கும்னு தான் சேப்பங்கிழங்கு வறுத்தேன், இன்னும் கொஞ்சம் வச்சுக்கோ..”
Advertisement
பதில் கூறாமல் தட்டை மட்டும் பூம்பாவையின் பக்கம் காட்டினான்.
“ஏன்டா, அத்தைகிட்ட பேசமாட்டியா?”
Advertisement
Advertisement
“———-”
“உன்னையும் தானே நான் கிளம்பும் போது கேரளாவுக்கு கூப்பிட்டேன், நீ தானே எனக்கு ஆஃபீஸ்ல மீட்டிங் இருக்கு, வர முடியாதுன்னு சொன்ன?என்னமோ நான் வேணும்னே விட்டுட்டு வந்த மாதிரி கோச்சுக்கிற?”
Advertisement
“நீங்க இரண்டு நாள்ல வந்துடுவீங்கன்னு நினைச்சேன்.. நீங்க கேரளால இருந்து அப்படியே இங்க ஊருக்கு வந்து ஒரு வாரம் இருப்பீங்கன்னு எனக்கு எப்படி தெரியும்?”
“நாங்க தான் இங்க வந்துட்டு உங்களுக்கு போன் பண்ணோம் இல்ல?”
“இருந்தாலும் உங்களை பார்க்காம நான் இத்தனை நாள் இருந்தது இல்ல இல்லயா அத்தை”
பூம்பாவைக்கு திருமணம் முடிந்து செல்கையில் ப்ரதமேஷ் ஆறு மாத குழந்தை. மிருதுளா அப்பொழுது தான் மட்டர்னிட்டி லீவ் முடிந்து வேலைக்கு திரும்ப செல்ல வேண்டி இருந்தது. அப்பொழுதில் இருந்து அவனை தூக்கி வளர்த்தது பூம்பாவை தான். அதனாலே அவனுக்கு அத்தை மீது ஒட்டுதல் மிகவும் அதிகம்.
“இனிமே அதிக நாள் விட்டுட்டு போக மாட்டேன், இப்ப சாப்பிடு”
“அப்படியே மடியில போட்டு தாலாட்ட சொல்லுடா உங்க அம்மாவை.. ரொம்பத்தான்” என்றார் சிவங்கரி ஹிருதய்யிடம் கடுப்பாக.
“அத்தை உங்க சமையலை சாப்பிடாம நாக்கே செத்து போச்சு தெரியுமா? இன்னும் கொஞ்சம் ரசம் ஊத்து அத்தை, ரசத்தை தான் அதிகமா மிஸ் பண்ணேன் தெரியுமா?”
ஊரில் இருந்து இவர்கள் வருகிறார்கள் என்று தெரியவும், பூம்பாவை வீட்டில் சமையலுக்கான ஆயத்தங்களை செய்துவிட்டார். சமையல் செய்ய உதவவும் ராஜாத்தியை சேர்த்துக்கொண்டார். மாடி பகுதியில் மூன்று ரூம்கள் இருக்கவே, அதையும் சுத்தம் செய்து இவர்களுக்காக தயாராக வைத்திருந்தார்.
முதலில் ஸ்ரீகாந்த், சிவங்கரி, மிருதுளா அவரது கணவர் தணிகாச்சலம் நால்வரும் உணவருந்திவிட்டு ஓய்வாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
பூம்பாவை ஹிருதய், ப்ரதமேஷ், ஹாசினி மூவருக்கும் பரிமாறிக்கொண்டிருந்தார்.
“ஏன் பிரதம்ஸ், அம்மா செய்யுற சிக்கன் மட்டன் எல்லாம் சொல்லாம ரசத்தை மிஸ் பன்றேன்னு சொல்ற?”
“அது என்னமோ தெரியல ஹாசினி, அத்தை வைக்கிற ரசம் இருந்தா மட்டும் போதும்ன்னு எப்பவுமே எனக்கு தோணும். சின்ன வயசுல இருந்தே, காய்ச்சல் வந்தாலோ, இல்ல வெளிய விளையாடிட்டு களைச்சு போய் வீட்டுக்கு வந்தாலோ, யார் கூடவாவது சண்டை போட்டு கோவமா இருந்தாலோ, எக்ஸாம்ல மார்க் குறைஞ்சு சோகமா இருந்தாலோ, அத்தை சாதத்தை நல்லா பிசைஞ்சு அதுல ரசம் ஊத்தி கலந்து, எனக்கு ஊட்டி விடுவாங்க.. அதனால் அவங்களை மிஸ் செய்றோம்னு தோன்றப்ப அவங்க கைல சாப்பிடற ரசம் சாதம் தான் நியாபகம் வரும்”
“விட்டா எங்க அத்தை வைய்த்த ரசம்னு புக்கே எழுதிடுவ போல” என்று நொடித்துக்கொண்டார் பாட்டி.
“விடும்மா, சின்ன வயசுல இருந்து தூக்கி வளர்த்த பாசம் இருக்குமில்ல.. “ என்றார் மிருதுளா.
“இவன் ஏக்கமா இருக்கான்னு, நான் கூடத்தான் அவனுக்காக பார்த்து பார்த்து ரசம் வச்சு கொடுத்தேன். ஒரு தடவையாச்சும் பாட்டி நீங்க வச்ச ரசம் அமிர்தமா இருந்துச்சுன்னு சொன்னானா சொல்லு?”
“எது நீங்க வச்சதுக்கு பேர் ரசமா?”
“என்னது நீங்க ரசம் வச்சீங்களா?” என்றார் பூம்பாவை அதிர்ச்சியாக.
“அத ஏன் அத்தை கேக்குறீங்க.. பார்த்து பார்த்துன்னா போனை பார்த்து பார்த்து வைச்சு கொடுத்தாங்க பாட்டி.. ரசம் வைக்க கூட யூ ட்யூப் பார்த்து வைச்ச பாட்டி நம்ம பாட்டியாத்தான் இருக்கும்”
“டேய், எங்க அம்மா உனக்காக ஆசையா செஞ்சா கிண்டல் செய்றீயா நீ?” என்றார் ஸ்ரீகாந்த்.
“நீங்க அந்த ரசத்தை சாப்பிட்டிருக்கணும் மாமா… ஒழுங்கா தமிழ் சேனல் பார்த்து வச்சிருந்தா கூட பரவாயில்லை.. நான் எல்லாம் வில்லேஜ் ஸ்டைல்ல வைக்க மாட்டேன்னு அமெரிக்கன் சானெல்ல பெப்பர் டேமரிண்ட் சூப் ன்னு பார்த்து வச்சாங்க..”
“கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.. போடா போடா ..”
“எல்லார் வீட்லயும் பாட்டிங்கன்னா சூப்பரா சமைப்பாங்க, பக்குவம் தெரியும்னு சொல்லுவாங்க தானே. ஆனா நம்ம பாட்டிக்கு மட்டும் தான் சமையல்ன்னா என்னன்னே தெரியல. ஏதோ அத்தையை கல்யாணம் செஞ்சதால உங்க வண்டி ஓடுது மாமா..”
“ஓவராத் தான் போற பிரதம்… உங்க அத்தையை என்ன பொறக்கும் போதேவா கல்யாணம் செஞ்சிருந்தான் என் புள்ள?”
“அவங்களுக்கு கல்யாணம் ஆகி இருபத்திரண்டு வருஷம் ஆச்சு பாட்டி” என்றான் ஹிருதய்
“அதுக்கு முன்னாடி எப்படி சமைச்சிருப்பாங்களோ தெரியலையே” என்றான் ப்ரதமேஷ்.
“எங்க அம்மா எங்க டா சமைச்சாங்க? அப்ப எங்க பாட்டி இருந்தாங்க, அவங்க சமைச்சாங்க” என்றார் மிருதுளா.
“அட பாவமே! அப்ப உங்க வாழ்க்கையிலேயே நீங்க சமைச்சது நாலு நாள் முன்ன வச்ச ரசம் மட்டும் தானா?” என்றான் ப்ரதமேஷ் ஏற்ற இறக்கத்தோடு.
“ப்ரதம்ஸ் அது ரசம் இல்ல, பெப்பர் டேமரிண்ட் சூப்..” என்று கூறி ஹைஃபை கொடுத்தாள் ஹாசினி.
இவர்கள் கலாட்டாவில் அனைவரும் சிரித்து விட்டனர்.
“ஏன்டா ஸ்ரீ, நாளைக்கு எத்தனை மணிக்கு பூஜை?” என்றார் சிவங்கரி
“காலையில ஏழு மணிக்கு கோவில்ல இருக்கணும்மா”
“சித்தி நாளைக்கு காலையில ட்ரைன்ல வந்துடறதா சொன்னாங்க.. ஒருத்தர் போய் அவங்களை கூட்டிட்டு வரணும்”
“நானும் ஹிருதய்யும் போறோம் மாமா” என்றான் ப்ரதமேஷ்.
“இல்ல, ஒருத்தர் மட்டும் போங்க, இங்க வேலை இருக்கும்”
“எதுக்குடா இப்படி ஊர் வேலையை இழுத்து போட்டுக்கிட்டு செய்ற? பத்தோடு பதினொன்னா நாமளும் போனா பத்தாதா? ஏற்கனவே காசை வேற வாரி இறைச்சிட்டு இருக்க?”
“அப்படி சொல்லாதீங்க அத்தை, குல தெய்வ தோஷம் தான் நம்ம எல்லாருக்கும் பிரச்சனையா வருது. நாம கோவிலுக்கு செய்றதுல கணக்கு பார்க்க வேணாம்” என்று தன்மையாகவே சொன்னார் பூம்பாவை.
“எனக்கு இதுல எல்லாம் நம்பிக்கை இல்ல, சுத்த ஹம்பக்.. இப்ப ஸ்ரீக்கும் வேலை இல்ல, ஹிருதய்க்கும் வேலை கிடைக்கல, எல்லா காசையும் கரைச்சிட்டீங்கன்னா, நாளைக்கு என்ன செய்வீங்க? நான் ப்ராக்டிக்கல்லா சொல்றேன்”
“அம்மா உங்க கவலை எனக்கு புரியது மா. சீக்கிரம் எல்லாம் சரி ஆயிடும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. இப்ப இந்த கோவில் விஷேசத்தை நல்ல படியா முடிப்போம்”
“ஆமாம்மா.. ஸ்ரீகா சொல்றது தான் எனக்கும் சரியா படுது” என்று மிருதுளாவும் கூறினார்.
“எனக்கு நீங்க எல்லாரும் நல்லா இருக்கனும் அவ்வளவுதான்.. “ என்று கூறி அத்துடன் முடித்துக்கொண்டார்.
அதன் பிறகு வேலைகள் சரியாக இருந்தது.
ஹாசினி தான் பாட்டியிடமும் அத்தையிடமும் கேரளா சென்றது, ஹரிஹரனை பார்த்தது, அவர் சொன்னது, பின் ஊருக்கு வந்தது, முத்தாயி அம்மாச்சி கோவிலுக்கு சென்றது, மாலதியை சந்தித்தது, அவர்கள் வீட்டிற்கு சென்றது, அங்கு நடந்த பேச்சு வார்த்தை, பிறகு கோவிலை கண்டுபிடித்தது, வேலைகள் நடந்தது, சாமி பெயர் கண்டுபிடித்தது என வரிசையாக ஒன்று விடாமல் கதை கூறினாள்.
பெண் பிள்ளைகளுக்கே உரிய தனி சிறப்பு இது, ஒன்று விடாமல் நடந்தவைகளை கோர்வையாக கூறும் பாங்கு.
ஸ்ரீகாந்த் உடன் நின்று உதவிகள் செய்தார் தணிகாச்சலம்.
அன்று இரவு உணவிற்கு பிறகு,
“காலையில ஆறு மணிக்கு ட்ரெயின் வந்துடும் ஹிருதய், நீ பெரிய அம்மாச்சி வீட்ல இருக்கிற பைக்ல போய் சித்தியை கூட்டிட்டு வந்திடு” என்றார் பாவை.
“நாளைக்கு என்ன எல்லாம் செய்வாங்க”, என கேட்டார் சிவங்கரி மருமகளிடம்.
“நாளைக்கு காலையில் ஹோமம்.. அப்புறம் பதினாறு குடங்களில் தண்ணீர் வைச்சு கலச பூஜை செய்வாங்க. பதினாறு பெண்கள் கலசத்தை எடுத்து மூனு முறை கோவில்ல சுத்தி வந்து வச்சதும், கோவில் கோபுர கலசத்துல ஊத்தணும்.
அப்புறம் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் பண்ணி தீபாராதனை காட்டுவாங்க.. அப்புறம் அங்கேயே டிஃபனுக்கு ஏற்பாடு செஞ்சிருக்காங்க.
அதுக்கப்புறம் எல்லாரும் சேர்ந்து கூட்டு பொங்கல் வச்சிடலாம்னு சொன்னாங்க.. அதாவது ஓரே பெரிய பானையில் பொங்கல் வச்சு சாமிக்கு படைப்போம்னு…”
“இவ்வளவு இருக்கா?”
“நம்ம கோவில்ல முன்ன பூசை செய்த பூசாரிக்கு இப்ப எண்பது வயசு. இந்த மாதிரி கோவிலை புதுப்பிக்கிறோம்னு தெரிஞ்சு அவரே முன்ன வந்தார். அவர் இனி தினமும் காலையிலயும் மாலையிலயும் பூசை செய்றதா சொல்லி இருக்காரு”
“ஹ்ம்ம்.. சரி சரி, என்னமோ போ, எப்படி இருந்த என் புள்ளைய இப்ப இப்படி மாத்தி வச்சிருக்க..
கிராமத்து வாசனையே படாம வளர்த்து வச்சிருந்தேன்.. இப்ப என்னடான்னா இங்கேயே பிறந்து வளர்ந்தவன் மாதிரி இல்ல இருக்கான்” என்று நொடித்து விட்டு மாடிக்கு சென்று விட்டார்.
பூம்பாவைக்கு நாக்கு துருதுருக்கத்தான் செய்தது. இருந்தாலும் சாமி கும்பிடுவதில் தடை எதுவும் வரக்கூடாது என்று அமைதி காத்தார்.
“விடு பாவை, அம்மா எப்பவுமே அப்படித்தான். எனக்கு இப்பத்தான் இந்த அருமை எல்லாம் தெரியுது..” என்று மிருதுளா தான் சமாதானம் கூறினார்.
பாவை தலையை மட்டும் ஆட்டிவிட்டு சென்றுவிட்டார். ப்ரதமேஷிடம் மட்டுமே அவருக்கு ஒட்டுதல். தன்னை இளக்காரமாக நடத்திய நாத்தனார் மீது அவருக்கு பிரியம் இல்லை.
மிருதளாவின் முகமே வாடிவிட்டது.
“அத்தை வாங்க நாம ஊஞ்சல் ஆடலாம்” என்று ஹாசினி அவரை ஊஞ்சலில் உடன் அமர வைத்து ஆடினாள்.
கந்தசாமி வீட்டிலேயும், சௌந்தர் வீட்டிலேயும் நேரே சென்று அழைப்பு விடுத்திருந்தார்கள் இவர்களது பங்காளிகள். அவர்கள் இல்லை என்றால், இத்தனை விரைவாக இந்த வேலை முடிந்திருக்க வாய்ப்பில்லை.
பாவையும் ஸ்ரீகாந்த்தும் கூட தனியே சென்று அவர்களை அழைத்திருந்தார்கள். அதனால் அவர்களும் வருவதாக இருந்தது.
அந்த வாரம் அரசு விடுமுறை வேறு வரவே, தொடர்ந்து மூன்று நாட்கள் லீவ் இருந்தது.
அதனால் மாலதி குடும்பம் அவர்கள் சொந்த கிராமத்திற்கு முன் தினமே வந்துவிட்டார்கள்.
“நாளைக்கு காலைல முத்து வருது. நான் போய் அதை கூட்டிட்டு வந்துடறேன், நீங்க எல்லாரும் விரெசா கிளம்பி இருங்க” என்றார் கந்தசாமி.
“பிள்ளை இல்லாத வீட்ல கிழவன் துள்ளி விளையாண்டான்னாம்.. நீங்க எதுக்கு காலையிலேயே அந்த பனியில்ல உங்க புல்லட்டை உறுமிக்கிட்டு போகணும்.. சௌந்து போவான்” என்றார் கந்தசமியின் மனைவி நித்யகல்யாணி.
“இந்த பாரு நித்யா, நான் என்ன செய்யணும்ன்னு நீ சொல்லாத? நான் போய் முத்துவை கூட்டிட்டு வரேன், அம்புட்டுத்தேன்”
“இதோ பாரு மாலதி.. நான் கேட்க கூடாதாம்ல வேற யாரு கேட்பாங்கன்னு கேளு உன் மாமனை”
“விடுங்க அத்தை, எப்படியும் போகணும்னு முடிவு செஞ்சுட்டாங்க மாமா, நாம சொன்னா கேட்கவா போறாங்க”
“எம் பேத்தியே ஆறு மாசம் சென்டு இப்பத் தான் ஊருக்கு வருது.. நான் போகாம வேற யாரு போவா?” என்று கடுப்படித்தார் தாத்தா.
“என்னமோ செய்ங்க” என்று மாமியாரும் மருமகளும் நாளைக்கு உடுத்திக்கொள்ளும் புடவைகளை எடுத்து வைக்க சென்றுவிட்டார்கள்.
“அண்ணா நீ கூட ஹாஸ்டல்ல படிச்சிருந்தா தாத்தா உன்னையும் இப்படித் தான் ஆசையா கூப்பிட வந்திருப்பார்” என்றாள் ரம்யா.
“யாரு என்னையவா? நீ வேற.. இந்த ஸ்பெஷல் கவனிப்பு எல்லாம் அந்த மகாராணிக்கு தான்.. நீயோ நானோ வந்தா, ஆட்டோ பிடிச்சு வராதீங்க காசு வீனா செலவாயிடும், டவுன் பஸ்ல வாங்கன்னு” சொல்லிட்டு போயிட்டே இருப்பாரு.
“அப்படியா சொல்ற?”
“அப்படியேத்தான்.. வா நாம போய் நம்ம வேலையை பார்ப்போம். அவ வந்துட்டா நம்மளை யாரு கண்டுக்க போறாங்க?”
இப்படியாக மறு நாள் கோவில் பூஜைக்காக அனைவரும் தயாராகி கொண்டிருக்கிறார்கள்.
——————————————
error: Content is protected !!