Skip to content
Post Views: 8,596
அன்பு – 1
“வணக்கம் மக்களே!!! நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது உங்கள் அபிமான ‘ சிங்கிங் சேம்பியன்ஸ்(Singing champions).. உங்களுக்காக இதோ, அடுத்து பாட வருவது, நம்ம பிரபஞ்சன்!!!!!” என நள்ளிரவு இரண்டு மணியான போதும் குரலில் சிறிதும் உற்சாகம் குறையாமல், உதட்டில் எப்போதும் ஒட்டிக் கொண்டிருக்கும் புன்னகையுடன், ஒலிவாங்கியில்(மைக்) அறிவித்துக் கொண்டிருந்தாள் அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளினி மது!!
Advertisement
அவளின் அறிவிப்பைத் தொடர்ந்து, கேமராவின் பார்வையை சிறிதாக்கி(zoom out) செய்து அந்த பிரம்மாண்டமான மேடையை மீண்டும் ஒரு முறை அழகாக படம் பிடித்த ஒளிப்பதிவாளர், அந்நிகழ்ச்சியின் இயக்குநருக்கு சமிஞ்கை செய்ய, அவரும் புரிந்து கொண்டு, தன் காதில் மாட்டியிருந்த வயர்லெஸ் ப்ளூடூத்தில் ஏதோ சொல்ல, அடுத்த நொடி, அந்த மேடையின் நடுவில், எல்.ஈ.டி திரையை இரண்டாக பிளந்து கொண்டு ஒரு வழி பிறக்க, கேமராவின் கண்கள் அந்த வாயிலில் தற்போது தஞ்சமடைந்திருந்தது.
அந்த நவீன தானியங்கி கதவுகளில் உள்ளிருந்து, ஒடிசலான தேகத்துடன் ஒரு உருவம் பதட்டத்துடன் மெல்ல காலெடுத்து வைத்து வெளியே வர, சட்டென அந்த உருவத்தின் மேல் ஒளிவெள்ளம் பாய்ச்சியதைப் போல், அங்கே மேடையில் இருந்த அனைத்து குவிவிளக்குகளும் (Focus light) அந்த உருவத்தின் பக்கம் திரும்பியது.
Advertisement
Advertisement
முன்பே பதற்றத்தில் இருந்த அந்த ஒடிசலான தேகத்திற்கு சொந்தக்காரனுக்கு, இப்போது இந்த அதீத ஒளியும், அவனை வரவேற்பது போல் அங்கே கேட்ட கைதட்டலின் ஓசையும் மேலும் அவனை பயங்காட்ட, அதை அவனின் முகம் அப்படியே பிரதிபலித்தது!!
அதை தனக்கு முன் இருந்த சின்னத்திரையில் கண்டுகொண்டிருந்த இயக்குநர்,
Advertisement
“மது!!! ஹி லுக்ஸ் சோ நெர்வஸ்!!” என வயர்லெஸ் வழியாக தொகுப்பாளினிக்கு அறிவுறுத்த,
புரிந்து கொண்டதன் அடையாளமாக கண்மூடித் திறந்த மது, சினேகமான புன்னகையுடன் அவனை நெருங்கி,
“வார்ம் வெல்கம் மிஸ்டர் பிரபஞ்சன்!!! சிங்கிங் சேம்பியன்ஸ்க்கு உங்களை வரவேற்கிறதுல எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி!!!” என இயல்பாய் அவன் கரத்தைப் பற்றி வரவேற்ற மதுவிடம், பதிலுக்கு ஒரு சின்ன சிரிப்பைக் கூட சிந்த மறுத்த அந்த பிரபஞ்சனின் முகம் இன்னும் பயத்தில் வெளிறிப் போய் தான் இருந்தது!!
முதல் இரண்டுகட்ட திறன் தேர்வில் தேர்வாகி, இறுதியாக இவ்வளவு பெரிய மேடையில், இத்தனை பேரின் முன்பு வந்து நிற்கும் ஒரு சாமானியனின் மனநிலை எப்படி இருக்கும் என இத்தனை வருட அனுபவத்தில் உணர்ந்திருந்த மது, அழகாக அந்த சூழ்நிலையை கையில் எடுத்துக்கொண்டு, தான் ஒரு சிறந்த தொகுப்பாளினி என்பதை மீண்டும் இந்த திரை உலகிற்கு நிரூபித்தாள்.
“வெல் பிரபஞ்சன்!! நைஸ் நேம் ஆக்சுவலி!!” என அவள் ஆரம்பிக்க,
பிரபஞ்சனின் பார்வையோ, இன்று காலையில் தன்னுடைய கிழிந்த பர்சில் கிடந்த சில பழைய நோட்டுக்களை மொத்தமாய் விழுங்கிக்கொண்டு, தன் காலில் புதிதாய் இடம்பெற்றிருந்த அந்த ரப்பர் காலணியிலும், தன்னிடமிருந்து ஒரு வார்த்தையாவது வாங்கிவிடமாட்டோமா எனும் முயற்சியில் அவன் முன்பு புன்னகை முகமாக நின்றிருக்கும் மதுவிடமும் மாறி மாறி பயணித்தது!!
“சொல்லுங்க பிரபஞ்சன்!! பத்துவிரலும் கரெக்டா இருக்கா?? இல்லை ஒன்னு ரெண்டைக் காணோமா??” என மது தீவிரமான குரலில் கேட்க,
புரியாமல் குழம்பிய பிரபஞ்சனின் வாய்ப்பூட்டு மெதுவாய் திறந்தது!!
“எ..என்ன மேடம்??” என காற்றாய் வந்த அவனின் குரலைக் கேட்டு மது அழகாய் சிரித்தாள்.
“இல்லை ரொம்ப நேரமா உங்க காலையே ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்தீங்களே!! அதான்.. பத்து விரலும் அங்க கரெக்டா இருக்கான்னு கேட்டேன்”
அவளின் கேலியில் லேசாய் அசடு வழிந்த பிரபஞ்சன், இதற்கென்ன பதில் சொல்வது என லேசாய் சிரிக்க, அதற்கே அவனின் முகம் அவ்வளவு வசீகரமாய் காட்சியளித்தது!!
மாநிறத்துக்கும், கார்வண்ணனின் நிறத்திற்கும் இடையில் ஒரு புதுமையான நிறத்தைக் கொண்டிருந்தான் பிரபஞ்சன்!! புதுமை நிறம் என்றாலும், பார்ப்பவரை கட்டியிழுக்கும் வசீகரத்தை அவன் முகம் கொண்டிருந்தது!! அதுவும் அவனின் சிரிப்பிற்கு மயங்காத மாது இவ்வுலகில் என்பதைப் போல், சிரித்தால் பேரழகனாய்த் தோன்றும் பிரபஞ்சன், சிரிப்பதை மறந்தே நான்கு வருடங்கள் ஆகிவிட்டது!!
இன்று முகத்தின் முன்பு அவன் அழகுக்கு ஒரு பாராட்டு!! அதற்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று கூடத் தெரியாமல் அவன் சங்கடமாய் தலையை குனிந்து கொள்ள,
“ஓகே!! பர்ஸ்ட் நீங்க பாடுங்க!! அப்பறம் நம்ம பேசுவோம்!! ஆல் தி பெஸ்ட்!!!” என அவனின் மனநிலை உணர்ந்து, அவனுக்கான நேரத்தை கொடுத்த மது, அவனுக்கு மீண்டும் கரம் கொடுத்து வாழ்த்திவிட்டு விலகிச்செல்ல,
இப்போது மேடையில் தனித்து நின்றிருந்தான் பிரபஞ்சன்!!
சட்டென அங்கிருந்த குவிவிளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட, அவன் முன்பே என்ன பாடல் பாடப்போகிறான் என தெரிந்ததால், அதற்கேற்றவாறு இசைக்குழு, அனைத்தையும் தயார் நிலையில் வைக்க சற்று அவகாசம் கொடுக்கப்பட்டது!!
அப்போது பிரபஞ்சனை நெருங்கிய இணை இயக்குநர் கவின்,
“பிரபஞ்சன்!!! கூல்!! ரொம்ப டென்ஷனா இருக்கீங்க!! ரிலாக்ஸ் ஆகுங்க!!” என அவன் முதுகில் தோழமையாக தட்டிக்கொடுக்க,
பிரபஞ்சனும் ஆழ மூச்செடுத்து தன்னை நிதானத்திற்கு கொண்டு வர முயன்றான்.
“இங்க வந்து நில்லுங்க!!!” என அவனை மேடையின் நடுப்புள்ளியில் நிற்க வைத்த கவின்,
“பதட்டமில்லாம, நல்லா பாடுங்க!! ரெண்டு ரவுண்டு சூப்பரா கிளியர் பண்ணி வந்துட்டீங்க!! இதான் ஃபைனல்.. இதையும் நல்லா பாடி கிளியர் பண்ணா, உங்களோட வாழ்க்கையே மாறிடும்!!! உங்க கேரியருக்கு நல்ல வாய்ப்பு இந்த மேடை!!! மிஸ் பண்ணிறாதீங்க!! உங்களால முடியும்!! நல்லா பண்ணுங்க!!!” என மெலிதான குரலில் அவனுக்கு தைரியம் அளித்தான்.
அப்போது மீண்டும் அங்கே பிரசன்னமான மது,
“அதெல்லாம் ஃப்ரீயா விடு கவின்!! சார் கலக்கிடுவாரு!! சார் யாருன்னு தெரியும்ல!! ரெண்டு ரவுண்டலயும் ஃபுல் மார்க் வாங்கிட்டு வந்திருக்க ஃபர்ஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட்!!” என குறும்புடன் பேச, பிரபஞ்சன் ஆச்சரியமாய் அவளை நோக்கினான்.
“ரொம்ப ஷாக் ஆகாதீங்க பிரபஞ்சன்!! கேமரா முன்னாடி மட்டும் தான் ரொம்ப பொறுப்பா பேசுவா!! மத்தபடி எப்போ கட் சொல்றோமோ, அடுத்த நிமிஷம் இருந்து சந்திரமுகியா மாறி நம்ம உயிரை வாங்குவா!!” என கவின் சிரித்துக்கொண்டே கூற, பிரபஞ்சனின் முகத்திலும் லேசாய் ஒரு புன்னகை கீற்று தோன்றி மறைந்தது!!
“இதோ பாருடா!! இவளோ நேரம் நான் பேசினேன்.. என் மூஞ்சியைக் கூட பார்க்கலை நீ!! இப்போ மட்டும் சிரிப்பு வருதா உனக்கு!!” என மது பொய்யாய் கோபம் கொள்ள,
பிரபஞ்சனின் முகம் தவறு செய்து விட்டு முழிக்கும் குழந்தை போல் பாவமாய் திருதிருத்தது.
“அச்சோ!!! கியூட்டி டா நீ!!” என அவன் பாவனையில் தன்னை மறந்து அவனை கொஞ்சிக் கொண்டாள் மது!!
‘ என்ன இப்படியெல்லாம் பேசுறாங்க!!!’ என பிரபஞ்சன் லேசாய் அதிர்ந்தான். அதற்குள், இங்கே இயக்குநர், கவினுக்கு ஏதோ தகவல் சொல்ல,
“அவரை டென்ஷன் பண்ணாத மது!!” என கண்டித்தவன்,
“ஓகே சார்!! இப்போ நாங்க ஒன், டூ, த்ரீ கவுண்ட் பண்ணதுமே நீங்க பாட ஸ்டார்ட் பண்ணலாம்!!! சுத்தி இருக்க எல்லாத்தையும் மறந்திருங்க!! எதுக்காக இங்க இவளோ தூரம் வந்தீங்களோ அதை மட்டும் மனசுல கொண்டு வந்து நல்லா பாடுங்க!! ஆல் தி பெஸ்ட் ” என லேசாய் பிரபஞ்சனை அணைத்து விடுவித்த கவின், மதுவையும் அழைத்துக் கொண்டு கீழே சென்று விட்டான்.
இப்போது தனித்து நின்றிருந்த பிரபஞ்சனின் மனம் பந்தயக்குதிரை போல் வேகமாய் படபடத்து ஓடிக்கொண்டிருக்க, முயன்று கவின் சொன்னதை மனதில் நிறுத்தினான்.
கண்களை மூடி ஆழமாக சுவாசித்தவன், அவன் இங்கு வந்ததற்கான காரணத்தை மனக்கண் முன் கொண்டு வர, அவன் முகத்தில் இருந்த பயமும், பதட்டமும் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்தது!!
இங்கே இயக்குநர், சவுண்ட் செக், பேக்ரவுண்ட் செக் எல்லாம் முடித்துவிட்டு,
“பிரபஞ்சன்!! கெட் ரெடி!!” என குரல் கொடுக்க,
கேமராவின் கண்களோடு சேர்த்து, அந்த அரங்கத்தில் இருந்த அனைவரின் கவனமும் பிரபஞ்சன் மீது நிலைத்தது!!!
“ஒன்!!!”
“டூ!!”
“த்ரீ!!!”
“ஸ்டார்ட்!!!” என இயக்குநரின் குரல் அந்த அரங்கமெங்கும் எதிரொலிக்க,
பிரபஞ்சன் பாடப்போகும் பாடலுக்கான இசை அந்த அரங்கத்தை மெதுவாய் வந்து நிறைத்தது!!!
மூடிய அவன் விழிகளுக்குள், அழகாய் வந்து நின்று சிரித்தாள் ஒருத்தி!!!!
“பிரபா!!! உன்னால முடியலைனா, வேற யாரால முடியும்!!! கண்டிப்பா நீ தான் டா ஜெய்ப்ப!! பயப்படாம பாடு!!! நான் இருக்கேன் உன் கூட!!!” என அவளின் குரல் அவன் செவியில் ரீங்காரமாய் கேட்டுக்கொண்டே இருக்க, அவன் முகத்தில் இருந்த பதட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் நீங்கி, தெளிவு பிறக்க, தன் கவனம் முழுவதையும் இசையில் குவித்தான் அவன்!!
பாடல் தொடங்குவதற்கான நேரம் வந்துவிட,
“செலக்ட் ஆகிடுவேன் கவி!!!” என மனதோடு அவளுடன் பேசிக்கொண்டவன்,
“என் காதலே என் காதலே
என்னை என்ன செய்ய போகிறாய்”
என பாடத்துவங்க,
அங்கே ஓர் அசாத்திய அமைதி!!!
“ப்பாஹ்!! என்ன வாய்ஸ் டா!!!” என மது தன்னை மறந்து அவன் குரலை எண்ணி சிலாகிக்க, அவளை ஒத்தே அங்கிருந்த அனைவரின் மனநிலையும் இருந்தது!!
பிரபஞ்சனுக்கோ, அவன் முன் இருந்த உலகம் சுத்தமாய் மறைந்துவிட்டது. இசையும் அவளும் மட்டுமே அவனின் தற்போதைய உலகமாய் இருந்திட, பாடலில் மொத்தமாய் கலந்துவிட்டான் அவன்.
“சிலுவைகள் சிறகுகள்
ரெண்டில் என்ன தர போகிறாய்
கிள்ளுவதை கிள்ளி விட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்”
என அவன் உருகிட, இங்கு நடுவர்களாய் வந்திருந்த பெரும் இசை ஜாம்பவான்களுக்கு அவனின் திறமை எத்தகையது என உணர்ந்து கொள்ள முடிந்தது!!
‘ நிச்சயம் இசை உலகில் இவனுக்கென்று தனி இடம் ஒன்று கிடைக்கும் ‘ என அவர்கள் முழுமையாய் நம்பினார்கள்.
அப்படி ஒரு குரல் அவனுக்கு!!! மார்கழி மாத பனியில் குளித்திருக்கும் புல்வெளியில், பாதம் பட நடக்கும் போது உள்ளுக்குள், குளிர்ச்சியும், ஒரு குறுகுறுப்பும் உடலில் ஒரு புல்லரிப்பும் தோன்றுமே!!! அப்படி ஒரு இனிமையான குரல்!!!
மழையில் முகிழ்த்த மலரின் மணம் இதமாய வந்து நாசியை வருடி, இதயத்தைத் திருடிச் செல்லுமே!! அப்படி ஒரு காந்தக்குரல் அவனுடையது!!!
முதன்முதலாக உலகத்தைப் பார்க்கும் மழலையின் பஞ்சுப்பொதி போன்ற பாதங்களை வருடும் போது உடல் சிலிர்த்து அடங்குமே!!! அப்படி ஒரு புனிதமான குரல் அவனுக்கு!!!
அதுவும்,
“இனி மீள்வதா ஆஅ
இல்லை வீழ்வதா..
உயிர் வாழ்வதா ஆஅ
இல்லை போவதா..
அமுதென்பதா விஷம் என்பதா..
இல்லை அமுதவிஷமென்பதா”
எனும் வரிகளில் அவன் குரலில் பொங்கி வழிந்த உணர்வுகளில், அனைவரின் இதயமும் கசக்கி பிழிவதைப் போல் அப்படி ஒரு கனத்த உணர்வு!!
வார்த்தைகளில் இருந்த வலியை, தன் குரலால் கேட்பவர்களின் இதயத்தில் உணர வைக்கும் வல்லமை படைத்திருந்தது அவனின் குரல்.
அந்தப்பாடல் முடிய எடுத்துக்கொண்ட அந்த ஆறு நிமிடங்களும், தன் குரல் வளத்தால் அனைவரையும் கட்டுக்குள் வைத்திருந்தான் பிரபஞ்சன்!!!
“சிலுவைகள் சிறகுகள்
ரெண்டில் என்ன தர போகிறாய்
கிள்ளுவதை கிள்ளிவிட்டு…..”
என்று அவன் பாடலை நிறைவு செய்த பொழுது, ‘ அதுக்குள்ள முடிஞ்சிருச்சே!!!’ என அனைவருள்ளும் ஒரு ஏமாற்றத்தை எழச் செய்திருந்தான் பிரபஞ்சன்.
ஏதோ ஒரு தைரியத்தில் பாடி முடித்துவிட்டாலும், நடுவர்களின் முடிவு என்னவாக இருக்கும் என பயத்துடன் மெதுவாய் அவன் கண்களைத் திறக்க,
அரங்கை நிறைத்தது அனைவரின் ஆரவார கரவொலி!!!
அதுவும் நடுவர்கள் அனைவரும் எழுந்து வந்து மேடைக்கு ஓடி வர, பிரபஞ்சனுக்கு நடப்பதை நம்ப முடியாமல் ஆனந்த மிகுதியில் லேசாய் கண்கள் கலங்கிவிட்டது!!!
“வாவ்!!! சத்தியமா இந்த பெர்ஃபாமென்சை பாராட்ட என்கிட்ட வார்த்தைகளே இல்லை மிஸ்டர் பிரபஞ்சன்!!! கலக்கிட்டீங்க!!!” என மனமுவந்து மது பாராட்ட,
“தேங்க் யூ மேடம்!!!” என சிறு புன்னகையுடன் பிரபஞ்சன் அவளின் பாராட்டை ஏற்றுக்கொண்டான். அதற்குள் நடுவர்கள் அவனை நெருங்கி வந்து அணைத்திருந்தனர்!!!
“இத்தனை நாளா எங்கையா இருந்த???”
“மேன்!! வாட் அ பெர்பாமன்ஸ்!!! சான்ஸ்லெஸ்!!!” என மிகப் பிரபலமான அந்த இசையமைப்பாளர் அவனின் திறமை கண்டு பிரம்மித்து பாராட்ட, அவரைத் தொடர்ந்து மற்ற நடுவர்களும் தங்களின் பாராட்டை ஒவ்வொருவராய் தெரிவிக்க, பிரபஞ்சனுக்கு சந்தோஷத்தில் மூச்சடைத்த உணர்வு!!!
அவனின் திறமைக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்!!!
அதற்கு முழுமுதற்காரணம் அவள்!!!!
அவனின் திறமையை இந்த உலகம் காண வேண்டும் என அவனை விட பேராவல் கொண்டிருந்தது அவளல்லவா??!!!!
நிச்சயம் இந்த நொடி, அவள் உடனிருந்தால் உலகத்தை மறந்து அவனை கட்டிப்பிடித்து முத்தமழையால் அவனை நனைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருப்பாள் அந்த காதல் தீவிரவாதி!!!
சந்தோஷத்தின் கணத்தை தாங்க முடியாமல் அவன் அல்லாட, அவனைச் சுற்றி இருந்தவர்கள் அவனின் வெற்றியை சந்தோஷக் கூச்சல்களுடன் கொண்டாடினார்.
இரட்டிப்பு மகிழ்ச்சியாய், அந்த போட்டியில் ஒருவராக அவன் தேர்வான செய்தியோடு, அந்த வார ஸ்டார் பெர்ஃபாமராக அவனை அறிவித்து அவனை மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடித்தனர் நடுவர்கள்.
தொடர்ந்து தோல்வியையும், வலிகளையுமே கண்டு பழகிவிட்ட பிரபஞ்சனுக்கு, இந்த மகிழ்ச்சியைக் கையாளத் தெரியவில்லை!!! அவன் மனம் அவளின் அண்மைக்காக அந்தநொடி மிகவும் ஏங்கியது!!!
“கவி!!!! எங்கடி இருக்க??? என்கிட்ட வந்துடேன்!!! இந்த முறை உன்னை கண்டிப்பா தொலைக்க மாட்டேன் டி கண்ணம்மா!!!” என அவனின் உயிர் ஊமையாய் கதற, அந்தோ பாவம்!!! அவன் காதலைப் போல் அவனின் கதறலும் கேட்பாரற்றுக் கிடந்து தவித்தது!!!!
***
“அம்மு!!! ரிமோட்டை வச்சிட்டு சாப்பிடு!!!” என இரண்டரை வயதொத்த குழந்தை ஒருத்தியுடன் போராடிக்கொண்டிருந்தாள் மங்கை ஒருத்தி!!
“மா.. நோ.. நோ!!” என சாப்பிட மறுத்த குழந்தை தலையை இடவலமாய் அசைத்து அங்குமிங்கும் ஓடி அவளின் அன்னைக்கு போக்கு காட்டிக் கொண்டிருக்க,
விளையாட்டு ஆர்வத்தில் குழந்தையின் கையில் இருந்த தொலைவியக்கி, இயக்கப்பட்டு தொலைக்காட்சி உயிர்த்துவிட,
திரையில் தன் காதல் மொத்தத்தையும் குரலில் தேக்கி, உருகி வழிந்து கொண்டிருந்தான் அவன்!!
அந்தக் குரல்!!!
மங்கையவளின் உலகத்தை ஸ்தம்பிக்க செய்ய போதுமானதாக இருந்தது!!
மறக்கக் கூடிய குரலா அது!!!
வாழ்நாள் முழுக்க அவள் விரும்பிக் கேட்க நினைத்த கானமல்லாவோ அந்தக் குரல்!!!!
உலகம் மறந்து மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல் மங்கையவள் உறைந்து நின்றிருக்க,
தொலைக்காட்சியின் பக்கம் கண்களைத் திருப்பிய அந்த சின்னச்சிட்டின் கண்கள், தன்னைப்போல் விரிய,
“ம்மா!!… ப்பா!!!!” என அத்திசையில் கையைக் காட்டிய குழந்தையின் குரலில் இருந்த உணர்வு தான் என்ன????
“நினைவுகளுக்கும் நிதர்சனத்திற்கும் இடையில்
அல்லாடும் இதயங்கள் தான் இவ்வுலகில் எத்தனை எத்தனை!!!”
error: Content is protected !!