Skip to content
Post Views: 4,839
“தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்
மு.வ உரை: பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு விடும்.”
இன்று அழுகை மட்டுபட ஏனோ பல நிமிடங்கள் எடுத்தது செங்காந்தளிற்கு. அதற்கு முழு காரணமும் கணவனின் அந்த ஆதரவான அணைப்பு தான்.
இப்படியெல்லாம் இவர்களுக்குள் இருந்ததில்லை.
உரிமையாய் அவள் அவனின் மார் சாய்வதும் ஆதரவாய் அவன் அவளின் தோள் பற்றுவதெல்லாம் கனவிலே தான் சாத்தியம் எனும் நிலை.
Advertisement
“நேத்து உன் அம்மாவோட நீ பேசினதை நான் கேட்டேன்.”
“…”
“பொறந்த வீட்டுக்கே நிம்மதியா போக முடியாத நிலைமையை உனக்கு கொடுத்துருக்கேன். என்னை மன்னிச்சுரு.”
Advertisement
“…”
Advertisement
“இந்த கல்யாணம் பிடிக்காம பண்ணிணது உண்மை தான். ஆனால் உன் மேல தனிப்பட்ட எந்த வெறுப்பும் கிடையாது காந்தா.”
“…”
“எல்லார் முன்னாடியும் உன்னை தலை குனிய வைச்சுருக்கேன். இனிமே எல்லாத்தையும் மாத்துறதுக்கு பார்க்குறேன்.
Advertisement
அதுக்கு உன்னோட உதவியும் எனக்கு வேணும்.”, என்றதில் அவனிடமிருந்து பிரிந்தவளாய் கணவனை ஏறிட்டாள்.
“என்னோட சாதாரணமா பேச முயற்சி பண்றியா?”
“நான்.. நான் சாதாரணமா தான் இருக்கேன்.”
“என்கிட்ட தினமும் பேசவோ சொல்லவோ கேட்கவோ எதுவுமே இல்லையா உனக்கு?”
“!!!”
“நான் என்னால முடிஞ்சதை செய்ய பார்க்குறேன். ஆனால் உன்னோட தயக்கம் என்னை இன்னும் பின்னாடி போக வைக்குது.”
“..”
“உன்னை கட்டாயப்படுத்தவோ ஒரு வட்டத்துக்குள்ளே அடைக்கவோ நிச்சயமா நினைக்கலை. மனசு விட்டு பேசுற அளவுக்கு நம்ம உறவு இருக்கணும்னு நினைக்குறேன்.”
“நீங்க சொல்ல வர்றது புரியுது மாமா. ஆனால் என்ன பண்ணனும்னு எனக்கும் தெரியலை.”, என்ற நேரம் குழந்தை ஓடி வந்திருக்க அத்தோடு பேச்சை முடித்து விட்டு வேலையைப் பார்க்க கிளம்பிருந்தான் ருத்ரேஸ்வரன்.
அன்றைய இரவு சீக்கிரமே வேலையிலிருந்து வந்த கணவனை யோசனையோடு பார்த்த வண்ணம் அவள் வேலையை கவனிக்க தந்தையும் மகளும் ஏதோ பேசிய பின் மகள் தாயைத் தேடி ஓடி வந்தாள்.
“ம்மா..”
“சொல்லு பாப்பா..”
“நாம நிலாச்சோறு சாப்பிடலாம். எல்லாத்தையும் மாடிக்கு எடுத்துட்டு வா.”
“பாப்பா அப்பாவும் வந்தாச்சு அவங்களுக்கும் பசிக்கும்ல நாம நாளைக்கு மாடிக்குப் போலாம் சரியா?”
“ம்மா.. அப்பாவுக்கும் சேர்த்து தான். மாடிக்கு கொண்டு வா.”, என்றவள் குலுங்கிச் சிரித்தாள்.
“என்னது?!!”
“ஆமா ம்மா அப்பாவும் நம்ம கூட தான் சாப்பிட போறாங்க. நீ சீக்கிரம் வா ம்மா”, என்றவள் குதித்துக் கொண்டிருக்க செங்காந்தளின் மனிதினுள் ஒருவித குறுகுறுப்பு.
உணவு தண்ணீர் என அனைத்தையும் எடுத்துக் கொண்டு செங்காந்தள் மாடிக்குச் சென்ற நேரம் தரையில் படுத்திருந்த கணவனின் மார்பில் ஏறி அமர்ந்த படி கதையளந்து கொண்டிருந்தாள் தீப்தி.
“ம்மா சீக்கிரம் வா பசிக்குது..”, என்றவள் இல்லாத தொப்பையைத் தடவ மகளை கீழே அமர வைத்த படி எழுந்தமர்ந்தான் ருத்ரேஸ்வரன்.
இருவருக்கும் செங்காந்தள் தட்டை வைப்பதை கவனித்தவளாய் தீப்தி அவளிடம்,
“ம்மா உருண்டை உருட்டி கையில் தான கொடுப்ப எதுக்குத் தட்டு?”
“பாப்பா..”
“கையிலேயே கொடு காந்தா..”, என்ற கணவனின் முகத்தில் மெலிதான புன்னகை இருக்க அதை உள்ளுக்குள் உயிர்வரை ரசித்தவளாய் ஒரு தட்டில் உணவை போட்டு பிசைய ஆரம்பித்தாள்.
“ப்பா அம்மா இங்கே வந்து எனக்கு நிறைய கதை சொல்லுவா..”
“அப்படியா?”
“ம்ம். எனக்கு போதும் போதும்னு சொல்லுவேன் ஆனால் தட்டு எப்படியோ காலியாயிடும் ப்பா..”
“அம்மா என்கிட்டதேன் கம்மியா பேசுறா பாப்பா..”
“ஆமா நானும் நினைச்சேன். ஏன் அப்படி?”
“அப்பா கொஞ்சம் பேட்(Bad)..”, என்றவன் வார்த்தையை முடிப்பதற்குள்,
“பாப்பா சாப்பிட்டுகிட்டே பேசலாம். இந்தா..”, என்றவள் அடுத்த உருண்டையை கணவனின் கையில் வைத்தாள்.
பாதி உருண்டையை அவன் விழுங்கியிருந்த நேரம்,
“ம்மா நீயும் சாப்பிடு..”, என்று மகள் கூறியதில் தன் கையை மனைவியின் இதழ்களுக்கு நேராய் நீட்டியிருந்தான்.
“!!”
“ம்மா எப்பவும் நீ தான எனக்கு ஊட்டுவ. இப்போ பாரு இந்த சோறு எவ்வளவு டேஸ்ட்னு உனக்குத் தெரியும். வாங்கிக்கோ..”, என்றதில் இன்னுமாய் அவளுக்கு அருகில் ருத்ரேஸ்வரன் தனது கரத்தை நீட்டியிருக்க உணவை வாயில் வாங்கியவளுக்கு மனம் சமன்பட முடியாமல் தவித்தது.
சாப்பிட்டு முடித்து தீப்தி கீழே ஓடி விட தன் கையிலிருந்த கடைசி வாய் உணவை மனைவியிடம் கொடுத்தவன் அவளது விழிகளைத் தான் பார்த்திருந்தான்.
“காந்தா எதாவது பேசு. என்னைத் திட்டணும்னு தோணினால் திட்டிடு. அமைதியா மட்டும் இருக்காத.”
“இது எல்லாமே.. பாப்பாக்காக தானா மாமா?!”
“!!”
“இல்ல சொன்னீங்களே பாப்பாக்கு நல்ல அம்மா அப்பாவா நாம இருக்கணும்னு அதுக்காகதேன் இதெல்லாமா?”
“உனக்குப் புருஷனா இதெல்லாம் பண்ணினா நீ ஏத்துக்க மாட்டியா?”
“..”
“ஏத்துக்க கஷ்டமா இருக்குனாலும் நேரடியா சொல்லு.”
“எனக்கு.. எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு.”
“பாப்பா தூங்கின அப்பறம் தினமும் இங்கே வரலாம். குழப்பம் தீர வழி கிடைக்கும்.”
“!!!”
“என்ன இப்படி முழிக்குற?”
“இல்ல.. அத்தை..”
“என் பொண்டாட்டியோட நான் பேச உங்க அத்தை எதுவும் சொல்லுவாங்களா?!”
“ம்ம்! ம்ஹூம்..”
“போ பத்து மணிக்கு வருவோம்.”, என்றதற்கு தலையசைத்து கீழே சென்றிருந்தாள்.
அனைவரும் இரவு உணவை முடித்த பின் செங்காந்தள் வேலையை முடித்து வரும் போதே தீப்தி அரைத் தூக்கத்தில் இருக்க தாய் அருகில் வந்ததும் நன்றாகவே உறங்கியிருந்தாள்.
ருத்ரேஸ்வரன் கையில் பாய் தலையணையோடு மாடிக்குச் செல்ல செங்காந்தளுக்கோ மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது.
பயத்தையும் மீறி ஒரு வகையில் பிடித்துத் தான் தொலைத்தது. என்ன செய்வதென புரியாமல் மெதுவாய் மாடிக்குச் சென்றாள்.
பாயை விரித்து சுவரில் சாய்ந்த படி கால் நீட்டி அமர்ந்திருந்தான் ருத்ரேஸ்வரன்.
எட்டு வருட திருமண வாழ்க்கை ஒரு குழந்தை வேறு, இதில் என்னவோ இன்று தான் முதலிரவு செல்லும் புதுப்பெண் போல் அப்படி ஒரு பதட்டம் செங்காந்தளின் நடையில்.
“உட்டாரு காந்தா..”
“..”
“எதுக்கு இம்புட்டு பயந்து போயிருக்க?”
“அப்படியெல்லாம் இல்லை.. நீங்க சொல்லுங்க..”
“என்ன சொல்லணும்?”
“ஏதோ பேசணும்னு சொன்னீங்களே!!”
“நாம பேசுவோம்னுதேன் சொன்னேன் நான் மட்டும் பேசுறேன்னு சொல்லலையே!”
“படிக்குறது எனக்கு ரொம்ப பிடிக்கும்.”
“!!”
“நான் படிச்ச படிப்பு மொத்தமுமே என் ஆசைக்காக மட்டும்தேன். அதுக்கு பிறவு தொழில் தான் பார்க்கணும்னு தெளிவா இருந்தேன்.
சென்னையில் பிஎச்டி முடிச்சு இங்கே வந்தப்போ ரொம்ப பெருமையா சந்தோசமா இருந்தது.”
“அங்கே.. உங்களுக்கு ப்ரெண்ட் எல்லாம் உண்டா?”
“ம்ம் எல்லாரோடயும் பேசுவேன். ஹாஸ்ட்டல் ரூமில் இருந்த இரண்டு பசங்க அப்பறம் ரம்யானு ஒரு பொண்ணு மட்டும் கொஞ்சம் நெருக்கம்.”
“அப்போ.. உங்களுக்கு.. நீங்க யாரையாவது காதலிச்சீங்களா?”
“!!!”
“இல்ல அதனாலதேன் கல்யாணத்துல இஸ்டமில்லையா?”
“அப்படியெல்லாம் இல்ல. உன் வயசு ரொம்ப கம்மி ஒரு டிகிரியாவது வாங்கிருந்தா நல்லாயிருக்குமேனு நினைச்சேன்.”
“ம்ம் அதனாலதேன் உங்க ப்ரெண்ட்ஸ் யாரும் கல்யாணத்துக்கு வரலையா?”
“ஆமா என்னவோ ரொம்ப பிடிவாதமா இருந்துட்டேன். என்னோட பேச்சை மதிக்காம எங்கப்பா அவர் இஸ்டத்துக்கு பண்ணிட்டாரேனு ரொம்ப கோபம்.”
“ம்ம் புரியுது.”
“புது இடம் புது மனுஷங்க நான் கொஞ்சம் உனக்கு துணையா இருந்துருக்கலாம்னு இப்போ தோணுது.”
“உங்க இடத்தில் இருந்து பார்த்தா உங்க மனநிலைமை சரிதேன். நான் கூட எங்கய்யாட்ட சொன்னேன் அவுகளுக்கு பிடிக்கலைனால் வேண்டாம் பா, விட்டுடுங்கனு. உங்க பேச்சையே கேட்காதப்போ என் பேச்சு எடுபடுமா?!”
“எப்பவுமே நீ இப்படி நிதானமா பொறுமையாதேன் இருப்பியா? உன் இடத்தில் வேற யாராவது இருந்திருந்தா என்னை விவாகரத்து பண்ணிட்டு போயிருப்பா.”
“நான் பொறுமைசாலியானு எல்லாம் எனக்குத் தெரியலை. ஆனால்..”
“??”
“ஒண்ணுமில்ல.. நான் இந்த மாதிரி புடவை கட்டிகிட்டு மஞ்சள் பூசிகிட்டு இருக்குறதெல்லாம் உங்களுக்கு பிடிக்கலைனால் நான் மாத்திக்கவா?”
“அதெல்லாம் வேண்டாம். இத்தனை வருசத்தில் செங்காந்தளுக்கு இதெல்லாம் தான் அடையாளம். எதுக்கு மாத்திக்கணும்.”
“என் முகத்தைப் பார்த்து நீங்க பேசவே மாட்டீகளே அதேன் அப்படி கேட்டேன்.”
“பூனை கண்ணை கட்டிகிட்டு உலகமே இருட்டாயிருச்சுனு சொல்ற கதைதேன் என்னோடது. உன்னை ஒழுங்கா பார்க்காமலேயே எனக்கு நானே ஏதோ மணியைக் கட்டிட்டு உட்காந்துட்டேன்.”
“…”
“நேத்து உங்கம்மாகிட்ட ஏன் அப்படி பேசின?”
“உண்மை அது தானே. எல்லாரும் உங்களை குறை சொல்றாக. ஆனால் விருப்பம் இல்லைனு தெரிஞ்சும் கட்டி வைச்சது அவுக தப்பு தானே?”
“..”
“நேரமாச்சு பாப்பா எந்திரிச்சுட்டா அழுவா! போவோமா?”
“ம்ம்..”, என்றதில் எழுந்து கொண்டவள் கணவன் எழுந்ததும் பாயை மடித்தாள்.
“காந்தா..”
“ம்.?”
“உனக்கு எதாவது வேணுமா. நாளைக்கு வாங்கிட்டு வரேன்..”
“அதெல்லாம்..”
“!!”
“ஒண்ணும் வாங்கிட்டெல்லாம் வர வேண்டாம்.. ஒரே ஒரு தடவை மதியானம் சாஞ்சுகிட்ட மாதிரி சாஞ்சுக்கட்டுமா?”, என்றவளை ருத்ரேஸ்வரன் கை நீட்டி அழைக்க மெதுவாய் அடி வைத்து வந்தவள் பட்டும் படாமல் அவன் மார் சாய அப்போது போலவே இரு கைகளாலும் தன்னோடு இணைத்திருந்தான்.
அவனின் ஒரு கரம் ஆதரவாய் அவளின் தலையில் இருக்க. மார்பில் வைத்திருந்த அவள் கைகள் நடுங்க கண்ணீர் அவன் சட்டை நனைத்தது.
சில நொடிகளில் அவளாகவே நகர்ந்து விட இம்முறை அவளது கண்ணீரை அழுந்தத் துடைத்து விட்டான் ருத்ரேஸ்வரன்.
“சாரி காந்தா..”
“பரவால்ல மாமா எனக்கு நெஞ்சுக்குள்ளே ஏதோ பண்ணுது அதேன் அழுகையா வருது. வேற ஒண்ணுமில்ல.”, என்றவள் கீழே சென்று விட ஆணவனுக்கு மனைவியைப் பார்த்து பெருமூச்சு எழுந்தது.
error: Content is protected !!