Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நேற்று பார்த்த நிலா முகம் – 22

“யாருங்க இங்க ராஜ் மோகன்?” என்று கேட்டவாறு அவர்கள் அருகில் வந்தார் அந்த முதியவர்.

“நான் தான் சார். என்ன விசயம்?” என்று கேட்டு எழுந்து வந்தான் ராஜு.

“என் பெயர் பொன்ராஜ். ரிட்டயர்ட் டீச்சர். நீங்க இப்ப பந்தல் போட்டு உக்கார்ந்து இருக்கிற பிளாட் ஓனர்” என்றார் அவர்.

“ஓ.. வாங்க.. வாங்க சார். நாங்க எவ்வளவோ விசாரிச்சோம் சார். உங்க நம்பர் கிடைக்கல. வாத்தியார் இடம்னு சொன்னாங்க தவிர, யாருக்கும் உங்க நம்பர் தெரியல சார்.



Advertisement

மன்னிக்கணும்.

உங்க பர்மிசன் இல்லாம இப்படி பந்தல் போட்டு டைனிங் ஏற்பாடு பண்ணினதுக்கு” கை கூப்பி பணிவாக சொன்னான் ராஜு.

வந்தவர் கொஞ்சம் பதட்டமாக, பயத்துடன் கொஞ்சம் கோபமும் சேர்ந்து தான் வந்திருந்தார்.

Advertisement

ஆனால் ராஜுவின் பணிவும் பாடி லாங்குவேஜும் அவனை , போனில் பேசியவன் சொன்ன மாதிரி அடாவடி ஆளாக காட்ட வில்லை!

Advertisement

அவர் கொஞ்சம் நிம்மதியானார்.

“இது என்னோட இடம் தான் தம்பி. என் பையனுக்காக நான் வாங்கிப் போட்டிருக்கும் இடம்!

அவன் வெளிநாட்டில் இருக்கிறான். இங்கு வந்து செட்டில் ஆகுறப்போ அவன் ஏதாச்சும் தொழில் பண்ணட்டும்னு விற்காம வச்சுருக்கேன்!”

Advertisement

“ஓ.. அப்படியா சார். ஆனா அடிக்கடி வந்து போயிட்டு இருங்க சார்.

இந்த இடம்  ஒரே குப்பை மேடா இருந்துச்சு. ராஜு தான் செலவு பண்ணி சுத்தம் பண்ணினான்” என்றான் சந்துரு இடையிட்டு.

“தப்பு தான் தம்பி. வந்து போய்ட்டு இருந்திருக்கணும் தான். எனக்கும் என் மனைவிக்கும் உடம்புக்கு முடியல.

இங்கே வந்துட்டு போக முடியறதே இல்ல. பையன் வந்தா, போய் ஒரு எட்டு பார்த்துட்டு வாடான்னு சொல்லுவோம்.  எங்க.. அவன் வரும்போதே ப்ரோக்ராம் வச்சுக்கிட்டு வர்றான்.

நேரம் இருந்தா போறேன்னு சொல்லுவான். அப்புறம் நேரா ஃபிளைட் ஏறி போய்டுவான்.

ஆனா உங்க  இடம் பரவாயில்ல.. செலவைப் பார்க்காம நல்லா ஃபென்சிங் போட்டு பக்காவா வச்சுருந்தீங்க!” என்றார் அவர் சின்ன வருத்தத்துடன்.

“இப்ப நீங்க ஒரு பிசினெஸ் ஆரம்பிச்சுட்டீங்க இல்ல. அப்படியே என் இடத்தையும் கொஞ்சம் பார்த்துக்கங்க தம்பி” என்று ராஜுவிடமே கேட்டுக் கொண்டார் அவர்.

“அதுக்கென்ன சார். நீங்க பயப்படாம போங்க. நாங்க பார்த்துக்கிறோம்” என்றான் ராஜு.

“வாங்க சாப்பிடுங்க” என்று அவரை அழைத்தார் கமலா அம்மா.

அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது,

“என்னங்க கொஞ்சம் இங்க வாங்க” என்று சொல்லி ராஜுவைத் தனியே அழைத்தாள் மகி.

“அண்ணா.. நீங்களும் வாங்க” என்று  சந்துருவையும் அழைத்தாள் அவள்.

என்ன என்பது போல கேட்ட கமலா அம்மாவிடம் கண்ணாலே வந்து சொல்றேன் என்று சொல்லி மூவரும் தனியே சென்று பேசினர்.

வாத்தியார் சாப்பிட்டு விட்டு அவர்கள் ஸ்பாவையும் சுற்றிப் பார்த்தார். அவருக்கு அங்கு நடக்கும் வேலைகள் பற்றி எளிமையாக விளக்கினான் ராஜு.

மேலும் கொஞ்ச நேரம் பொதுவாக பேசிக் கொண்டிருந்து விட்டு, அவர் விடைப் பெறும் போது,

“சார். ஒரு நிமிசம் இருங்க” என்று அவரை கொஞ்ச நேரம் காத்திருக்க சொல்லி விட்டு,

“சார். இப்ப தான் எங்களுக்கு இந்த ஐடியா தோணுச்சு. உங்களுக்கு சரியா இருந்தா நாம மேற்கொண்டு பேசலாம்” என்றாள் மகி.

“என்னம்மா?” என்றவரிடம்,

“சார். உங்க மகன் வந்து இங்க தொழில் ஆரம்பிக்கிற வரை , இந்த இடத்தை எங்களுக்குத் தரை வாடகைக்குத் தர முடியுமா?

நாங்க எங்க கிட்ட சர்வீஸ் க்கு வர வண்டிகளைப் பார்க்கிங் பண்ண யூஸ் பண்ணிக்கிறோம்.

சும்மா இல்ல சார். பதினோரு மாசம் வாடகை ஒப்பந்தம் போட்டுக்கலாம்.

உங்க இடமும் சேஃபா, சுத்தமா இருக்கும். எங்க தொழிலுக்கும் உபயோகமா இருக்கும் சார்.

ஒண்ணும் அவசரம் இல்ல. வீட்டுக்குப் போய், பொறுமையா யோசிச்சு கூட சொல்லுங்க.

உங்க மனைவி மகன் கிட்டயும் பேசிட்டு வாங்க” என்றாள் மகி.

அவர் யோசித்து விட்டு செல்வதாக சொல்லி சென்றார்.

அவர் வரும் போது ஒரு ஆட்டோவில் வந்ததாக சொல்ல,

சந்துரு “வாங்க சார் நான் டிராப் பண்றேன்” என்று அவன் டாக்ஸியில் அழைத்து சென்றான்.

போகும் வழியில் ராஜுவைப் பற்றி சொன்னான்.

மிகுந்த உழைப்பாளி. சின்ன வயதில் இருந்து துபாயில் கஷ்டப்பட்டு வேலை செஞ்சு சம்பாரிச்ச பணத்தில் இப்போ தான் ஒரு தொழில் தொடங்கி இருக்கிறான்.

“நம்பகமான ஆள் சார். ஏமாத்தற ஆள் எல்லாம் இல்லை!

அவன் காசையே நாய் பேய் எல்லாம் தின்னுட்டு இருக்கு! ரொம்ப நல்லவன் சார், நீங்க நம்பி அக்ரிமென்ட் போடுங்க” என்று சொன்னான்.

“நான் பேசுறேன் தம்பி. எனக்கும் அவரைப் பார்த்தா நல்ல படியா தான் தெரியுது. ஆனா எனக்கு ஒருத்தன் போனில் பயத்த கிளப்பி விட்டு அனுப்பினான்.

உங்க இடத்தை பக்கத்து பிளாட் காரன் என்க்ரோச் பண்ணிட்டு இருக்கான்.

அவனுக்கு நிறைய அரசியல் செல்வாக்கு இருக்கு.

கடைய திறநது வச்சதே பொலிடிக்கல் பேக்ரவுண்ட் உள்ள ஆளுங்க தான்! பார்த்து சேஃப்டி பண்ணிக்கோங்கன்னு சொல்லி நல்லா த்ரெட்டன் பண்ணி விட்டான்ப்பா!

அதான் கொஞ்சம் பயந்து போய் அங்க வந்தேன்” என்றார் அவர்.

“அப்படி யாரு உங்களுக்கு போன் பண்ணினது? எனக்கு தெரிஞ்சு ராஜுவுக்கு எதிரிகள் யாரும் இல்ல!

இனிமே வந்தா தான்! தப்பா நினைக்கலைன்னா, அந்த போன் நம்பரைக் கொடுக்க முடியுமா” என்று வாங்கி பார்த்தவன் லேசாக அதிர்ந்து பின் கோபமானான்.

“சார்.. இது ராஜுவோட அண்ணன் ராமு வேலை! அவன் ராஜு மேலே உள்ளே பொறாமையால உங்கள தூண்டி விட்டிருக்கான்” என்று சொன்னான் சந்துரு.

“சரி தம்பி. நான் வீட்டுல கலந்து பேசிட்டு சொல்றேன்”  என்று சொல்லி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் இறங்கி கொண்டார் அவர்.

அப்படி சென்றவர், அடுத்த நாளே வாடகைப் பத்திரம் அவரே தயார் செய்து கொண்டு வந்து ஒப்பந்தம் போட்டு சென்று விட்டார்.

நல்ல படியாகவே பிக்கப் ஆகிக் கொண்டிருந்தது ராஜுவின் மகிஸ் கார் ஸ்பா!

நல்ல ஒரு டிஜிட்டல் மார்க்கெட்டிங் கம்பெனி மூலம் விளம்பரம் செய்தான் ராஜு!

கூடவே எல்லா லீடிங் பிராண்ட் கார் ஏஜென்சி ஆட்களிடமும் பேசி அவன் கார் ஸ்பா பேம்லேட்களை, விசிடிங் கார்ட்களை அங்கு வண்டி வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் கொடுக்க வைத்தான்.

ராஜுவும் மகியும் அவர்கள் தொழிலில் முனைப்பாக இருக்க,

விடாது கருப்பு போல பிரியா மீண்டும் ராஜுவின் வீட்டிற்கு வந்து ஐஸ்வர்யா வளைகாப்பு விழாவிற்கு அழைப்பு விடுத்தாள்.

எப்படியும் மகி தட்ட முடியாது விழாவிற்கு வருவாள், வந்தால், ஸ்பேனர் பிடிக்கும் கைக்கு எங்கே வளையல்கள்  போடும் பாக்கியம் கிடைக்க போவுது என்று சபையில் வைத்து அவமானப்படுத்த எண்ணி வனிதா காத்திருக்க,

 கமலா அம்மா அதற்கு வாய்ப்பே கொடுக்காமல், தான் மட்டும் சென்று பேத்தியை வாழ்த்தி விட்டு வந்தார்!

மகியும் ராஜுவும் இந்த குடும்ப அரசியலில் கலந்து கொள்ளாமல் தொழிலில் கவனம் செலுத்தினர்.

கொஞ்ச நாட்களிலே அந்த பகுதியில் அவள் கார் ஸ்பாவிற்கு வரும் ப்ரீமியம் கஸ்டமர்ஸ் உட்கார்ந்து சாப்பிடும் வகையில் அந்த பகுதியில் ஒரு கடையும் இல்லை என்பதை அறிந்து கொண்டாள் மகி.

டீக்கடையில் நின்று டீ குடிக்க அவளின் வாடிக்கையாளர்களுக்கு தயக்கமாக இருந்தது!

குறிப்பாக பெண் வாடிக்கையாளர்கள் காரை கொண்டு வந்து சர்வீஸ் முடியும் வரை  காத்திருக்கும் நேரத்தில் ஒரு இலகு உணவாக இல்லை பானமாக அருந்த ஒரு கடையும் இல்லை அந்த பகுதியில்!

அவள் கல்யாணம் ஆன புதிதில் அவள் வேலை செய்த அந்த டெசர்ட் ஷாப் நினைவு வந்தது அவளுக்கு!

நாமும் அது போல ஏன் இங்கு ஒன்றை ஆரம்பிக்க கூடாது என்று நினைத்தவள், ராஜுவிடமும் கமலா அம்மாவிடமும் பேசினாள்.

“நீ.. சொல்றது சரின்னு தான் படுது. சும்மா ட்ரை பண்ணிப் பார்க்கலாம்” என்று சொல்லி விட்டான் ராஜு.

மீண்டும் பாங்கின் உதவியை நாடினாள் மகி.

இம்முறை அவளுக்கு கொலாட்ரல்ஃ ப்ரீ – பிணையில்லா கடனே கிடைத்தது!

அரசின் மற்றொரு கடன் திட்டமான முத்ரா லோன் மூலம்!

பொன்ராஜ் வாத்தியாரிடம் என்.ஓ.சி வாங்கிக் கொண்டு அடுத்த வேலையில் மும்முரமாக இறங்கினார்கள்!

மகிக்கு ஏற்கனவே கொஞ்சம் பரிச்சயம் இருந்ததால், எங்கு அதற்கு தேவையான எந்திரங்கள், மூலப்பொருட்கள் வாங்க வேண்டும் என்று நன்றாகவே தெரியும்!

அடுத்து வந்த ஒரு நல்ல நாளில் மகிஸ் மன்ச் பாயின்ட் – (Magi’s Munch Point)  ஆரம்பிக்கபட்டது கமலா அம்மாவால் ரிப்பன் கட் செய்யப்பட்டு!

அதற்கும் கொஞ்சம் ரிசர்ச் பண்ணியே ஆரம்பித்தாள் மகி.

ஒரு கவிக் சர்வீஸ் ரெஸ்டாரண்ட் (Quick Service Restaurant) வகை கடையாக இருந்தது அது!

சான்ட்விச், ஃபிரெஞ்சு ஃப்ரைஸ், நக்கெட்ஸ், பர்கர், பிஸா இவற்றுடன் குளிர்பானங்கள்  ஆகிவை அங்கு கிடைத்தன!

அவற்றை தயாரிக்க ஒரு மிகவும் சுகாதாரமான கிச்சன் ஒன்று தகர ஷீட்களை கொண்டு அமைக்கப்பட்டிருந்தது! அவற்றையும் நல்ல இண்டேரியர் கொண்டே வடிவமைத்தார்கள்!

சர்வீஸ்க்கு வண்டியை விட்டு விட்டு காத்திருக்கும் நேரத்தில் வசதியாக உட்கார்ந்து சாப்பிடும் வகையில் ரூஃப் கார்டன் வகையில் நான்கு மூங்கில் குடில்களுடன், காரிலேயே அமர்ந்து சாப்பிடும் வகையில் டிரைவ் இன் உணகவகமாகவும் அது இருந்தது!

பொன்ராஜ் சாரும் வந்து பார்த்து விட்டே போனார்.

“சார். இதெல்லாம் தற்காலிக அமைப்பு தான்! நீங்க எப்ப இடத்தைக் கேட்டாலும் நாங்க டிஸ்மாண்டில் பண்ணி எடுத்துடுவோம்!

 உங்க இடம் இப்பவும் சேஃப் தான்” என்று நம்பிக்கை கொடுத்தார்கள் மகியும் ராஜுவும்!

அவர்களின் வாழ்க்கை இப்படி ஏறுமுகமாகவே சென்று கொண்டிருந்தது!

கமலா அம்மாவுக்கு மனசு நிறைந்து விட்டாலும், எல்லா அம்மாக்களுக்கும் இருக்கும் அந்த மனக்குறை அவருக்கும் இருந்தது!

மகி இன்னமும் உண்டாகவில்லையே! என்பது தான் அது!

ஒரு வருஷம் சென்று , முதல் திருமண நாளை இனிதே கொண்டாடி முடித்திருந்தனர் ராஜுவும் மகியும்!

அன்று பொறுக்க முடியாமல் கேட்டே விட்டார் கமலா அம்மா!

“நீ.. நீங்க ரெண்டு பேரும் குழந்தை பெத்துக்கிறத தள்ளிப் போட்டு இருக்கீங்களா என்ன?” என்று ஒரு வழியாக கேட்டே விட்டார் அவர்.

கொஞ்சம் தயங்கிய படி “ஆமாம் அம்மாச்சி” என்று சொன்னாள் மகி!

எல்லா முடிவையும் அவரைக் கேட்டே எடுப்பவர்கள் இதை மட்டும் தன்னிச்சையாக எடுத்து இருந்தார்கள்!

அவர் சம்மதிக்க மாட்டார் என்று அறிந்து!

“தொழிலில் அவனை முன்னுக்கு கொண்டு வந்துட்டா மட்டும் போறாதுடி மகி!

 சீக்கிரம் அவன் நல்ல குழந்தை குட்டின்னு குடும்பஸ்தன் ஆகுறப்ப தான் நீங்க ஜெயிச்சதுக்கு ஒரு அர்த்தமே இருக்கு” என்று சொல்லியவரிடம்,

“சரி.. அம்மாச்சி . நான் சீக்கிரமே எங்க டாக்டரைப் போய் பார்த்துட்டு வந்துடறோம்!” என்று சொல்லி அவர் மனதில் ஒட்டிக்கொண்டிருந்த அந்த குறையையும் நீக்கி விட்டாள் மகி.

இங்கு எல்லாமே ஏறு முகமாக இருக்க, அங்கேயோ சறுக்கல்கள் ஆரம்பித்து இருந்தன!

ராமு, ராஜுவை ஏமாற்றி வாங்கிப் போட்டிருந்த பிளாட்டை விற்க முடியாமல் போய்க் கொண்டிருந்தது!

காரணம், அந்த நிலம் இருந்த பகுதியின் ஒரு ரியல் எஸ்டேட் ஆள் ஒருவனால்!

அவன் கிட்டத்தட்ட  மாஃபியா போய் செயல்பட்டு கொண்டிருந்தான். அவன் வைத்ததே விலை என்று இருந்தது!

வேறு யாரிடமும் நல்ல விலைக்கு ராமு பேசி, முடியும் தருவாயில், அவன் என்ட்ரி கொடுத்து ஆட்டத்தைக் கலைத்து விடுவான்!

ராமுவும் எங்கெங்கோ சொல்லி வைத்து புது புது ஆட்களை ஏற்பாடு செய்தாலும், கடைசியில் பார்த்தால் அவர்கள் அந்த அடாவடி ஆளின் வகையறாவாக தான் இருந்தது!

ஒரு வழியாக ஒருவன் வந்து அவன் பேரில் இருந்த ப்ளாட்டையும், வனிதா பேரில் இருந்த ப்ளாட்டையும் சேர்த்து நல்ல விலைக்குப் பேசி அட்வான்ஸ் கொடுத்து ஒரு ஒப்பந்தம் போட்டு சென்றான்!

ஆனால் அத்தோடு சரி. மீதி பணத்தையும் கொடுக்கவில்லை!

மேற்கொண்டு கிரயமும் செய்யவில்லை! ஒரு மாதிரியாக லாக் செய்து விட்டிருந்தான் ராமுவை!

வேறு எவரிடமும் அடிமாட்டு விலைக்குக் கூட விற்கவும் முடியவில்லை!

அவன் கொடுத்த அட்வான்ஸ் பணத்தையும் திரும்ப கொடுக்க முடியவில்லை!

காரணம், அவன் நண்பன் ஒருவனை பார்ட்னராக கொண்டு ஆரம்பித்த ஏலச்சீட்டு நிறுவனம்!

பதிவு செய்யபடாமல் நடத்தப்பட்ட நிறுவனம்!

சீட்டு போட்டவர்கள் எல்லாம் ராமுவை, அவன் சொந்த வீட்டை நம்பி சீட்டுப் போட்டவர்கள்!

ஆனால் சீட்டு வசூல் செய்த பணத்துடன், பார்ட்னர் கம்பி நீட்டி விட, ராமு தான் எல்லோருக்கும் செட்டில் செய்ய வேண்டியதாகி விட்டது!

அதில் மொத்த அட்வான்ஸ் பணமும் சுவாஹா ஆகி விட்டது!

ராஜுவை ஏமாற்றி ரெனோவேசன் செய்து மேலே எடுத்த மாடி போர்ஷனை வாடகைக்கு விட்டிருந்தான்!

அதிலும் ஒரு அடாவடி ஆள் வந்து உட்கார்ந்து கொண்டு வீட்டையும் காலி செய்யாமல், ஒழுங்காக வாடகையும் கொடுக்காமல் இருந்து வந்தான்!

வனிதா ஒருவளின் வருமானம் மட்டுமே இப்போது செலவுக்கு!

அதுவும் அவளுக்கு தினமும் பிரயாண தூரம் மிகவும் அதிகம்!

உறையூரில் இருந்து மணப்பாறை என்பது அதிகப்படியான தொலைவு தான் அவளுக்கு!

தினமும் அதிகாலையிலேயே எழுந்து சமைத்து, யாழினியையும் கிளப்பி பின் சாப்பிட்டும் சாப்பிடாமலும் ஓடுவாள் வேலைக்கு!

பல நேரம் கமலா அம்மாவின் நினைவு இப்போது எல்லாம் அடிக்கடி வருகிறது!

மாலை காபியுடன் தயாராக மாமியார் இருந்த நாட்கள் நினைவில் வந்து போகும்!

அக்கம் பக்கம் இருந்தவர்கள் எல்லோரும், தம்பிக்கு பண்ணின துரோகம் நல்லா அனுபவிக்கிறான் என்று காது படவே பேசினார்கள்!

வனிதாவிற்கு நேரத்துக்கு சாப்பிடாமல் அல்சர் வந்து விட்டிருக்க, ராமுவிற்கோ சுகர்!

மாதாமாதம் மெட்ஃபார்மின் வேறு அவன் காசை ஒரு பக்கம் விழுங்கி கொண்டிருந்தது!

இந்த லட்சணத்தில் இன்னொரு தவறையும் செய்து இருந்தான் ராமு!

ராஜு பணத்தில் வாங்கிய இன்னோவா காரை வாடகைக் காராக ட்டி போரட்க்கு மாற்றி ஒரு ட்ராவல்ஸில் விட்டு இருந்தான்!

ஒரு முறை அதை வாடகைக்கு எடுத்தவன் அதை ஆள் கடத்தல் ஒன்றிற்கு பயன்படுத்தி விட போலிஸ் கேஸ் ஆகி விட்டது!

ட்ராவல்ஸ் ஓனரும் அவனும் போலிஸ் ஸ்டேசனுக்கு நடையாக நடந்து தங்கள் பெயரில் தப்பு இல்லை என்று நிருபித்து காரையும், கார் ஓனரான வனிதாவையும் பெரும் தொகை செலவு செய்தே மீட்டு வந்தார்கள்!

ப்ரியா வீட்டில் வேறு வகையான பிரச்சினை!

எந்த பொய்யை சொல்லி சினேகாவை ராஜு வீட்டில் தங்க வைக்க ப்ரியா நாடகம் போட்டாளோ, அது கிட்ட தட்ட உண்மையாகிவிட்டது!

அவள் கணவன் வேல்முருகன் அந்த பகுதியில் இருக்கும் ஒரு பெண்ணோடு தகாத உறவு ஏற்பட்டு விட்டது! கூடவே குடியும்!

சமீப நாட்களாக அந்த பெண்ணை வீட்டிற்கே அழைத்து வர ஆரம்பித்து விட்டான்!

தட்டிக் கேட்ட பெற்றவர்களையும் ப்ரியாவையும் அடித்து விட்டான்!

அவன் பெற்றோர் கோபித்துக் கொண்டு மகள் வீட்டிற்கு போய் விட்டனர்!

அங்கு இருக்கும் ப்ரியாவின் மூத்த மகள் ஐஸ்வர்யாவோ,

“அம்மா.. அப்பாவை கண்டிச்சு வை. இல்லன்னா நாளைக்கு என்னோட புருசனும் உன் அப்பா செய்யாததையா நான் செஞ்சுட்டேன்னு நடு வீட்டில் யாராச்சும் பொம்பளய கூட்டிட்டு வந்துட்டா நான் என்ன பண்றது?” என்று சீறினாள்!

ப்ரியா கணவனுடன் சண்டைப் போட்டு அடி வாங்கியது தான் மிச்சம்!

“மாமா என்னைக் கண்டபடி போட்டு அடிக்கிறார்டா” என்று ராமுவிடம் சென்றால்,

“ஆரம்பிச்சுடீங்களா உங்க  ட்ராமாவை? அத நம்புறதுக்கு நான் ஒண்ணும் ராஜு இல்லை! ஓடிப் போய்டு” என்று திட்டி அனுப்பி விட்டான்!

வேல் முருகன் இப்போது வீட்டிற்கும் வருவதில்லை! செலவுக்கு பணமும் தருவதில்லை!

சினேகாவின் படிப்புக்கும் அன்றாட செலவுக்கும் கூட பணம் இல்லை!

இரண்டு ஒருமுறை கமலா அம்மாவிடம் போய் உதவிக் கேட்டு போனாள்!

மகி கர்ப்பம் தரித்து விட்டதால் சற்று பெரிய வீட்டிற்கு குடி போய் விட்டார்கள் கமலா அம்மாவுடன்.

அங்கு போனவள் வாயை மூடிக் கொண்டு சும்மா இருந்திருக்கலாம்!

“ம்ம்.. பாரும்மா.. அன்னிக்கே சொன்னேன் இல்ல, மகியை கட்ட வேண்டாம்னு..

பாரு இப்ப மகி மாசமாக இருக்கிறத சாக்கா வச்சுக்கிட்டு அவ அத்தையும் மாமாவும் இங்கேயே வந்து டேரா போட்டுட்டாங்க” என்று தன் வேலையை ஆரம்பித்து விட்டாள்.

மகிக்கு உதவி செய்ய தான் அவள் அத்தையும் மாமாவும் அவர்கள் கடையை லீசுக்கு விட்டுவிட்டு மகியின் கடையில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்!

நிலைமை இப்படி இருக்க, ப்ரியா இப்படி பேசி விட்டதால்,

“நீ சும்மா இருந்தாலும் உன் வாய் சும்மா இருக்காது போல! இனி இங்க வந்து கலகம் பண்ற வேலை வச்சுக்காதே!

நல்லா இருக்கிற வீட்டுல உன்னால மன வருத்தம் வந்திடும் போல ! தயவு செய்து இனி இங்க வரவே வராதே” என்று கண்டிப்புடன் சொல்லி விட்டார் கமலா அம்மா!

வேறு வழியில்லாமல் டவுனில் இருக்கும் ஒரு ஜவுளிக்கடைக்கு வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள் பிரியா!

எண்ணம் போல் வாழ்க்கை!

மதியம் குட்டி தூக்கம் போட்டுக் கொண்டிருந்தாள் மகி!  ஹாலில் இருந்த சோபாவில் உறங்கி கொண்டிருந்தார் கமலா அம்மா!

அவளுக்கு ஒரு போன் கால் வந்தது சந்துருவிடமிருந்து!

எடுத்து பேசியவள் அதிர்ச்சியுடன் கேட்டாள்.

“இப்ப எங்க அட்மிட் பண்ணி இருக்காங்க? அவர் போன் எடுக்கலையா!    நான் உடனே வர்றேன்” என்று வெளியே சென்று ஒரு ஆட்டோ பிடித்தாள்.

ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து கொண்டு அந்த பிரபல மருத்துவமனை பேரை சொன்னாள்.

போகும் வழியெல்லாம் ராஜுவின் நம்பருக்கு முயற்சி செய்து கொண்டே போனாள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!