Skip to content
Post Views: 1,751
நதி 21
தீனதயாளனும் யமுனாவும் வீட்டிற்கு வந்ததும் அங்கிருந்த அனைவருக்கும் புன்னகை முகமாய் பிரசாதத்தை கொடுத்த யமுனா, முறையாக, ‘டீ, காபி வந்துவிட்டதா..?’ என விசாரித்து.. அவளே சென்று வாங்கி வந்து கொடுக்க அத்தனை பேருக்கும் அவளின் குணம் மிகவும் பிடித்து போனது.
Advertisement
இந்த பத்து வருடத்தில் தீனா மொத்தமாய் உறவுகளிடமிருந்து விலகி விடவில்லை என்றாலும் அவ்வளவு ஒட்டுதலாகவும் இல்லை.
அவசியமாக அவன் போக வேண்டும் என்ற நிலையில் உள்ள விசயத்திற்கு மட்டுமே அவன் சென்று வந்து இருக்க,
Advertisement
Advertisement
யமுனாவோ, ‘தனக்கு புதியவர்கள்..’ என ஒதுங்கி நிற்காமல் அவளாகவே உறவு முறை கேட்டு அவங்களோடு இணக்கமான ஒரு உறவை உண்டாக்க முயன்றால் அவளை பிடிக்காமல் போகுமா..?
“இப்புடி ஒரு மருமவ கிடைக்கோனுமுன்னு இருக்க தான் இப்புட்டு நாளும் வந்த வரனையெல்லாம் தட்டி விட்டையோ.. சீலா..?” என கேட்டதோடு,
Advertisement
தீனாவிடமும், “அருமையான புள்ளைய தா கட்டியிருக்கே.. கொடுத்து வச்சவந்தா நீ..” என சொல்ல நிறைவான புன்னகை அவன் முகத்தில் இருந்து கொண்டே இருந்தது.
அதுவேறு ஜெயசீலனுக்குள் எரியும் தீயில் எண்ணெய் வார்ப்பது போலானது.
யமுனா வந்ததும் பாலமுரளி, “அத்தே..” என கொஞ்சிக்கொண்டு அவளோடு ஒட்டிக்கொள்ள, அவளும் அவனை ஆசையாய் அள்ளி கொஞ்சவென.. அதனை அவதானித்திருந்த கெகதீஷூக்கு தான் முகமே சோர்ந்து போனது.
அதனை கண்டு கொண்ட யமுனா ஜெகதீஷிடம் பேச எவ்வளவு முயன்றும்.. அவளோடு இணக்கமாக பேச தயங்கி.. தாயிடம் சென்று அமர்ந்து கொள்பவனை கண்டு ஆயாச பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது அவளால்.
இரவு வீட்டிற்கு சென்று திரும்பிய சொந்தங்கள் சகுந்தலா இருந்த நிலை பார்த்து விசாரிக்க,
‘உண்மய சொன்னா மருமவ வந்ததும் மாமியாள அடக்கிபோட்டாளேன்னு பகுடி பேசுங்க..’ என நினைத்தவர்,
“காலைல பொடக்காலி பக்கம் போகையில வழுக்கிடுச்சு..” என சொல்ல,
“பாத்து போகாம முழிய முதுகுலயா வச்சுட்டு போனே..?” என சொல்லி அறையிலிருந்து சென்றவர்கள்,
“இவ வேல பாக்க டிமிக்கு கொடுக்கோனுமுன்னே நாடகமாடிட்டு இருப்பா.. எத்தன விசேசத்துல பாத்திருக்கோம். ஒத்த சாமனத்த நகத்த மாட்டா. சுடு சோம்பேறி.
இவளுக்குன்னு வாய்க்குது பாறே..!! மவளா வந்தவளும் சுறுசுறுப்பு. இந்தா, இந்த புள்ளையும் நல்ல துறுதுறுன்னு தே இருக்கு.. எல்லா அவ வாங்கி வந்த வரோ..” என பொருமவும் தவறவில்லை.
வாணி மூலமாக காலை மதிய உணவுகளுக்கு சக்தி ஏற்பாடு செய்திருப்பதை அறிந்த தீனா, “மாமா மொத்த எவ்வளவுன்னு சொல்லுங்க..?” என கேட்க,
“இருக்கட்டும் விடு மாப்ளே..” என அவர் சொன்ன போதும் அவரை கட்டாயப்படுத்த,
“அட்வான்ஸ் பணம் மட்டும் தான் கொடுத்திருக்கு மாப்ளே.. மிச்சத்த டெலிவரி பண்ணும் போது கொடுத்தா போதும்..” என்றதும் அவர் கொடுத்திருந்த பணத்தை போனிலிருந்து அனுப்பிவிட்டவன்,
அவரின் பைக்கை வாங்கிக்கொண்டு அருகே இருக்கும் ஊருக்கு சென்று ஏடிஎம்மில் கொஞ்ச பணத்தை எடுத்து கொண்டு வந்து வைத்துக்கொண்டான் செலவுக்காக.
தீனாவின் வீடு அறை கணக்கில் எடுத்தால் வெறும் மூன்று அறை தான். ஆனால் எல்லா அறையும் மிகப்பெரியது.
வந்தவர்கள் உள்ளே ஹாலில் அமர்ந்து பேச, வீட்டுக்கு வெளியே கூலிங் ஷீட் கொண்ட தாழ்வாரத்தில் அமர்ந்து சாப்பிட ஏதுவாக டேபிள் சேர் போடப்பட்டு காலை உணவு பரிமாறப்பட்டது.
யமுனா பரிமாற நிற்கவும் அவளை தடுத்த வாணி, “நீ முதல்ல தீனாவோட போய் உக்காந்து சாப்பிடு. எப்படி சோந்து போயிருக்க பாரு.. காலைல காபியும் குடிக்கல நீ..” என சொல்ல,
அவளுக்கும் நீண்ட நேரமாக பசியாக இருந்ததால் மறுப்பு சொல்லாமல் அமர்ந்தாள் உணவு உண்ண.
அவளுக்கு ஒரு புறம் தீனா அமர, அவனுக்கு போட்டியாய் அவளின் மறுபுறம் வந்து அமர்ந்து கொண்டான் பாலமுரளி.
தீனாவை யமுனாவோடு பேசவே விடாமல், “அத்தே.. அத்தே..” என அழைத்து அவளின் கவனத்தை தன் மீது மட்டுமே இருக்கும் படி செய்தான் அந்த சின்ன வாண்டு.
“டேய் மாப்பி.. இதெல்லாம் அநியாயம் டா.. என் பொண்டாட்டிகிட்ட பேசக்கூட விடமாட்டியா..?” என தீனா கேட்க,
“என்ன(னோ)ட அத்தே.. என்க்கு தான் பஸ்ட்.. ஆமா தானே த்தே..?” என யமுனாவை அவன் கூட்டு சேர்க்க,
“ஆமாடா தங்கம்.. உனக்கு தான் பஸ்ட்.. மாமாக்கு இல்ல..” என அவனின் கன்னத்தை ஆசையாய் கிள்ளி முத்தம் கொஞ்ச பாலமுரளிக்கு அவ்வளவு குஷி.
அவர்களின் பேச்சை கேட்ட உறவுகளுக்கும் அந்த உரையாடல் மகிழ்ச்சியை தந்தது என்றால்,
ஜெயசீலனுக்கோ தன் முன் இருக்கும் இலையை அப்படியே தூக்கி வீசி விட்டு எழுந்து செல்ல வேண்டும் என்ற அளவு ஆத்திரம்.
தன் முன் நிற்கும் போதெல்லாம் முகத்தில் ஜீவனே இல்லாது இருப்பவனிடத்தில் அவர் காணும் இந்த மகிழ்ச்சி அவரை தணலில் நிறுத்தியது போல இருந்தது.
ஜெயசீலனுக்கு அப்படி எனில் ஜெகதீஷோ ஏக்கமான பார்வையை வீசிக்கொண்டு அமர்ந்திருந்தான்.
எதேச்சையாக அதை கவனித்த யமுனா தீனாவை தன் முழங்கையால் இடித்து கண்ணால் அதை காட்ட தீனாவின் புருவம் யோசனையில் முடுச்சிட்டது.
அவர்களின் பார்வை தன் மீது படிவதை கண்டவன் அவசரமாக தனது விழியால் ஜெயசீலனை தேட, அவரோ இவர்கள் முன் அமர தந்த எரிச்சலால்.. உண்டதாக பேர் செய்து விட்டு எழுந்து சென்றிருந்தார்.
அவர் அவ்விடம் இல்லாததை கண்ட பிறகே அவனிடம் உண்டான ஒரு ஆசுவாசத்தை கண்டு தீனா யமுனாவை பார்க்க,
“தயா, ஜெகதீஷ்கிட்ட பேசுங்க. எனக்கு என்னமோ அந்த ஆளு உங்ககிட்ட விளையாண்ட மாதிரி இந்த சின்ன புள்ளையையும் எதாவது சொல்லி வச்சிருப்பாரோன்னு தோணுது..” என்றிட,
“இருக்கும் பாப்பா.. அவர நம்ப முடியாது.. விருந்துக்கு என்ன ஏதுன்னு ஏற்பாட்ட பார்த்துட்டு இந்த விசயத்த பார்க்கறேன்..” என்றவன் உண்டு விட்டு அடுத்த வேலையை பார்க்க சென்றான்.
விருந்து குறித்து பேசும் போது சக்தி, “மழ வேற இன்னும் நாலு நாளைக்கு இருக்குமுன்னு நியூஸ்ல சொல்றாங்க மாப்ளே. நீ சொன்ன மாதிரி பந்தல் போட்டா பெருசா மழ வந்தா சிரமமா போயிடும்..” என்றிட,
“அட நம்ம சமுதாய கூடத்த விசாரிங்கப்பா.. அங்கனன்னா பிரச்சன இல்ல தானே..?” என ஒருவர் சொல்ல,
சக்தி அங்கிருந்தே போன் செய்து விசாரிக்க இவர்களின் நல்ல நேரத்திற்கு அது ஃப்ரீயாக இருந்ததால் அங்கேயே விருந்து என முடிவு செய்தனர்.
அடுத்து ஆட்கள் கணக்கை கேட்க ஜெயசீலனின் மனமோ நேற்று பண விசயத்திற்கு தீனா யோசித்ததை கொண்டு, “இருடா உன்னைய இதுல சிக்க வைக்கிறேன்..” என நினைத்தவர் பெரிய லிஸ்ட்டை சொல்ல,
“ஏப்பா சீலா.. இத்தன பேத்துக்கு எப்போ தகவல சொல்ல..? நாளைக்கு விருந்த வச்சுட்டு ரா முச்சூடும் சொல்லுவ போல.. ரொம்ப முக்கியமானத மட்டும் பாருப்பா..” என சொன்னாலும்,
அப்போதும் விடாமல் ஊரில் தனக்கு தெரிந்தவர் அறிந்தவர் என ஆட்களின் எண்ணிக்கையை கூட்டுவதிலேயே குறியானார்.
அவரின் நோக்கம் புரிந்த தீனா, “மொத்தமா எத்தன பேருன்னு சொல்லிட்டு அம்புட்டு பேருக்கும் அவரே முறையா அழைப்பு வைக்கட்டும். நாங்க மத்தத பாத்துக்கறோம்..” என முடித்துவிட,
இனி பின் வாங்க முடியாது என்ற நிலையில் ஆட்களின் கணக்கை சொல்லிவிட்டு போனோடு ஒதுங்கிக்கொண்டார் ஜெயசீலன்.
ஏனெனில் இப்போது இருந்து ஆரம்பித்தால் தானே ஓரளவு எல்லாருக்கும் கல்யாண விசயத்தை விளக்கி விருந்துக்கு அழைக்க முடியும்.
error: Content is protected !!