Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

05. முகில் - ஊஞ்சலாடும் முகிலே

ஊஞ்சலாடும் முகிலே 3

அத்தியாயம் 3

 

“இப்படியா பண்ணுவ? கொஞ்சமாவது எதாவது இருக்கா உனக்கு?” என சித்ரா தன் மகளை வசைபாட, கேட்டுக் கொண்டிருந்த பல்லவிக்கு அன்னையிடம் சொல்லி இருக்க கூடாது என்று தான் தோன்றியதே தவிர்த்து தான் கேட்டது தப்பில்லை என்றே இப்பொழுதும் நினைத்தாள்.


Advertisement

 

“இந்த லட்சணத்துல வேலை எப்படி கிடைக்கும்னு நாம எதிர்பார்க்க?” என நிறுத்தவே இல்லை சித்ராவும்.

Advertisement

Advertisement

 

கிட்டத்தட்ட மகள் வந்து சேர்ந்து விஷயத்தை சொல்லியதில் இருந்தே இப்படி தான் திட்டிக் கொண்டிருக்கிறார்.

Advertisement

 

“ம்மா! அவங்களுக்கு என்ன! ரெண்டாயிரம் எல்லாம் சில்லறை காசு தான். நமக்கு அப்படியா?” என பல்லவி சொல்ல,

 

“உனக்கு புரியுதா இல்லையா டி? நீ கேட்டது கூட தப்பில்ல. ஆனா கேட்ட இடம்? இப்படியா ஹாஸ்பிடல்ல வச்சு ஒரேடியா இப்ப கேட்டா தான் உண்டுன்னு கேட்டு பிடிங்கிட்டு வந்திருப்ப?” என்று முறைத்தார் சித்ராவும்.

 

“நல்லா பிடுங்கினாங்க. அதான் சொன்னேனே தரலைனு!” என்ற பல்லவிக்கு,

 

‘வீட்டுல வந்து வாங்கிக்கணுமாம். ஏன் வீட்டுக்கு வந்து குடுக்க வேண்டியது தானே!’ என்று ஒரு சிறுபிள்ளைத்தனமான எண்ணம்.

 

“இந்த பணக்காரங்களே இப்படி தான் போல. கைல காசு வச்சிருந்தா செலவாயிடும்னு பேங்க்ல வச்சு ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு பாக்குறது!” என்ற பல்லவியை தலையில் கொட்டினார் சித்ரா.

 

“இப்படி அறிவில்லாம பேசினா எப்படி வேலை கிடைக்கும் உனக்கு? பணக்காரங்கனு இல்ல. எல்லாருமே இப்ப அப்படி தான். எல்லாருக்குமே அக்கௌன்ட்க்கு தான் காசு வருது. யூஸ் பண்ணிக்கவும் ஈஸியா இருக்கு. கைல வச்சு தொலைச்சுட்டு நிக்கிறதுக்கு இது எவ்வளவோ மேல். தைக்க குடுக்குறவங்க கூட ஆன்லைன்ல தான் காசு அனுப்புறாங்க. மறந்து போச்சா உனக்கு? நானும் உன் தாத்தாவும் அப்படி தானே வச்சிருந்தோம்!” என்று சித்ரா மீண்டும் முறைக்க, 

 

‘ஆமால்ல!’ என தன் தலையில் தட்டிக் கொண்டாள் பல்லவி.

 

“எதாவது பேசணும்னு பேசாத. இப்படி தான் அங்கேயும் சின்ன பிள்ளை மாதிரி பேசி வச்சிட்டு வந்திருக்க. இனி எங்க வேலை எல்லாம் கிடைக்க?” என்றவருக்கு அடுத்து என்ன என்ற கவலை.

 

“நான் எதுவுமே பேசலை ம்மா. ஃபைல் பாத்துட்டே இன்டெர்வியூல எல்லாம் சொல்ற மாதிரி அப்புறம் கால் பன்றேன் அப்படினு சொல்லிட்டார் அந்த லதா அத்தை பையன்!” என்றாள் பல்லவியும்.

 

“ப்ச்! அவங்களை தப்பு சொல்ல முடியாது பல்லவி. டிகிரி முடிக்காம என்னனு வேலை தர முடியும் அவங்களும்? எல்லாமும் யோசிக்கணும் இல்ல? கேட்கலாமா வேண்டாமானு யோசிச்சிட்டே இருக்குறதுக்கு சரி ஒரு முயற்சியா கேட்டு பார்ப்போம்னு கேட்டாச்சு. அவ்ளோ தான் அதோட விடனும்!” என்ற சித்ரா,

 

“லதா அண்ணி தான் பாவம். எதுக்கும் நாம வேனா நாளைக்கு போய் பார்த்துட்டு வருவோம்!” என்று சொல்ல, பல்லவி கண்களில் அப்படி ஒரு வெளிச்சம்.

 

“உன் நம்பர் சொல்லு நான் அமௌன்ட் அனுப்பிடுறேன்!” என்று கீர்த்திஸ்வரன் உடனே தனது அலைபேசியை எடுத்திருந்தான் மருத்துவமனையில் வைத்து.

 

“நம்பரா?” என்றவளிடம் தான் அலைபேசியே இல்லையே!. அன்னைக்கு அனுப்ப சொல்லலாம் தான் என்றாலும் இது இவள் தனியாய் சேர்த்து வைத்திருந்த பணம். அன்னையிடம் கொடுத்தால் திரும்ப வராது என்றோரு எண்ணம்.

 

‘நம்பர் சொல்ல யோசிக்குறாளோ!’ என்று நினைத்த கீர்த்திஸ்வரன்,

 

“கோட் காமிச்சா கூட ஓகே!” என்று சொல்ல,

 

“காசா குடுக்க முடியாதா?” என்று பல்லவி முகம் போன போக்கில்,

 

“காசான்னா? சில்லறையாவா?” என்றவன் முகத்தில் சின்னதாய் ஒரு சிரிப்பு அவள் கேட்ட விதத்தில்.

 

“ஓகே! நாளைக்கு வீட்டுல வந்து கூட வாங்கிக்கோ. அம்மாகிட்ட சொல்லிடுறேன்!” என்று சொல்லி இருந்தான்.

 

‘மறுபடியும் அந்த வீட்டுக்கா?’ என்று நினைத்த போது இன்னுமே முகம் மாறியது பல்லவிக்கு.

 

இதற்கு மேல் என்ன செய்ய? என கீர்த்திஸ்வரனும் இரு கைகளையும் இடுப்பில் ஊன்றி நின்ற விதத்தில், அதற்கு மேல் அவன் முன் இதற்காக நிற்கவா எனும் எண்ணத்தில்,

 

“ஓகே சார்!” என்று கிளம்பி இருந்தாள்.

 

இப்பொழுது அன்னை உடன் வருகிறேன் என்று சொல்லவும் அங்கே செல்ல ஒரு காரணம் கிடைத்த மகிழ்ச்சி.

 

‘போய் காசை கேட்டு வாங்கிடலாம்!’ என்று நினைத்துக் கொண்டவள்,

 

“போலாம் ம்மா!” என்று சொல்லி இருந்தாள் அன்னையிடம்.

 

இப்பொழுது அடுத்து தன் வாழ்க்கையில் என்ன என்ற எண்ணம். 

 

எங்கே வேலைக்கு செல்ல? ஒரு நல்ல வேலைக்கு நிச்சயம் ஒரே ஒரு இளங்கலை படிப்பாவது முக்கியம் தானே? அத்தனை ஆசையாய் கணிதத்தை தேர்வு செய்திருந்தாள் கல்லூரியில்.

 

அதை தொடரவும் முடியாமல் விடவும் முடியாமல் மனமெல்லாம் அத்தனை கவலை. ஆனாலும் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை அன்னை வருந்துவாறே என்று.

 

எப்படியும் இரு வருடத்தில் தன் படிப்பை தொலைதூரக் கல்வி வழியில் தொடர வேண்டும் அதற்கு தன் முயற்சியாய் எதாவது செய்திட வேண்டும் என மனதில் அத்தனை எண்ணங்கள். 

 

ஆனால் என்னவென்று செய்திட? அன்னைக்கு தையலில் உதவி செய்து கொஞ்சமாய் கையில் பணம் இருக்கிறது. அவ்வளவு தான் தன் சேமிப்பு. 

 

குறை என்று இல்லை என்றாலும் தையலை மட்டும் நம்பி தானும் அதில் இறங்கிட மனமில்லை. அதிலேயே அன்னை வாழ்வு செல்வதை உடனிருந்து காண்கிறாளே.

 

வேறு என்ன செய்ய என இரவெல்லாம் தூக்கமே இல்லை பல்லவியிடம்.

 

லதாவை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வரும் பொழுது மணி ஏழை தொட்டிருந்தது.

 

வேலை இருப்பதாய் சொல்லி மருத்துவமனையில் இருந்து அரை மணி நேரத்தில் கிளம்பி இருந்தார் மகேஸ்வரன்.

 

இப்படி தான் தந்தை என்று தெரிந்தாலும் இந்த நேரத்திலும் துணைக்கு இல்லாமல் இது என்ன என்று அப்பொழுது தான் மகேஸ்வரனை கவனிக்கவே தோன்றியது கீர்த்திஸ்வரனுக்கு.

 

அப்படி ஒரு அழுகை அஞ்சலிக்கு. பள்ளி பத்தாம் வகுப்பில் இருக்கிறாள் அவள். அவளுக்கும் கீர்த்திஸ்வரனுக்கும் ஆறு வயது வித்தியாசப்படும்.

 

மாலை பள்ளி முடிந்து வந்த அஞ்சலி “அம்மா!” என்று ஓடிவர,

 

“பாப்பா!” என்று அழைத்து நடந்ததை சொல்லி இருந்தார் தேவி.

 

உடனே வீட்டில் இருந்து அண்ணனுக்கு அஞ்சலி அழைக்க,

 

“இங்க வர வேண்டாம் அஞ்சலி. டாக்டர் சொல்லவும் கிளம்பிடுவோம். நீ வீட்டுல இரு. தேவி அக்காவை நாங்க வந்தப்புறம் கிளம்ப சொல்லு. எதுவும்னா எனக்கு கால் பண்ணு!” என அவன் சொல்ல, அன்னை வரும்வரை அழுகை தான் அவளிடம்.

 

வந்ததும் அவரை அந்த நிலையில் கண்டு இன்னுமே அழுகை.

 

“ஒண்ணுமில்ல டா சரியாகிடும்” என லதாவும் சொல்லியும், எப்பொழுதும் துறுதுறுவென இருக்கும் அன்னையை நினைத்து நினைத்து கண்ணீர் தான் வந்தது அந்த சிறு பெண்ணுக்கு.

 

மற்றவர்களுக்கு எப்படியோ! அவளுக்கு அந்த வீட்டில் அனைத்தும் அன்னை தான். தந்தைக்கு நின்று பேச கூட நேரம் இருந்தது இல்லை. 

 

கீர்த்திஸ்வரன் பள்ளி முடியும் வரை அத்தனை விளையாடுவான் தங்கையுடன் என்றாலும் கல்லூரிக்கு என்று வெளியூர் சென்று வந்த பின் அவன் வளர்ந்த பையனாய் அவளிடம் முதிர்ச்சியுடன் பேச கற்றுக் கொண்டான்.

 

பாசம் எல்லாம் குறைவில்லை. அத்தனை செல்லமும் அவளுக்கு தான் அந்த வீட்டில் என்றாலும் அன்னை இல்லை என்றால் எதுவுமே இல்லை அவளுக்கு.

 

“அஞ்சலி! ஒரு நாலு வாரம்! அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா நடக்க ஆரம்பிச்சிடுவாங்க அம்மா” என்று அண்ணனும் ஆறுதல் சொல்ல,

 

“சாரி ண்ணா! நான் தான் தண்ணியை கொட்டினேன். பார்த்தும் கேர்லெஸ்ஸா விட்டுட்டேன்!” என்று அதற்கும் ஒரு அழுகை தன்னால் தானே என்று.

 

“இனி கவனமா இரு. அவ்வளவு தானே!” என்று சமாதானம் செய்தான் அவன்.

 

“அப்பா உங்களோட வரலையா?” அஞ்சலி கேட்க,

 

“அப்பா வீட்டுக்கே வரலையா?” என்றான் அவனும்.

 

“இன்னும் இல்லையே!” என அஞ்சலி சொல்ல, தேவி அவர்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்பி இருந்தார்.

 

கல்லூரி முடித்த கையோடு தந்தை தொழிலில் இணைந்து கொண்ட கீர்த்திஸ்வரன் தொழிலை முற்றும் முதலாய் கற்று கொள்ள ஆர்வம் எடுத்து தானே அதனை கற்றுக் கொண்டு என இந்த ஒரு வருடமும் ஓரளவு தெரிந்து கொண்டிருந்தான் சிலவற்றை.

 

இதில் தந்தை தன்னோடு உடனிருந்தது என்னவோ விரல்விட்டு எண்ணும் வெகு சில நாட்கள் மட்டும் தான்.

 

மற்றபடி அவனாய் இங்கே நீச்சல் கற்றுக் கொண்டிருக்கிறான்.

 

இரவு எட்டு மணிக்கு தான் மகேஸ்வரன் வீடு திரும்பி இருக்க, “அவ வந்துட்டாளா?” என்ற கேள்வியும் அப்பொழுது தான்.

 

“ஒரு போன் பண்ணி எப்படி இருக்காங்கனு கேட்க கூடாதா? என்னப்பா?” என நேரே கூட கேட்டுவிட்டான் மகன்.

 

“புதுசா என்ன கேட்க சொல்ற? விழுந்து வச்சா இப்படி தான் ஆகும்னு தெரியாதா? அதான் ஒண்ணுமில்லனு அனுப்பிட்டாங்க இல்ல? இனி என்ன? மகாராணிஅதான் பெட் ரெஸ்ட் வேற! அவ ஜாலியா தானே இருப்பா?” என்றவரை அதிர்ச்சியாய் தான் பார்த்தான் ஈஸ்வர்.

 

நல்லவேளை அன்னை இந்த பேச்சை கேட்கவில்லை என அவன் நினைக்க, அவர் பேச்சு இப்படி தானே இருக்கும் என லதாவிற்கு தெரியும் என மகனுக்கு தான் தெரியவில்லை.

 

அடுத்தநாள் காலை இலகுவாய் வீட்டில் அணியும் உடையுடன் சீக்கிரமே வந்து கீர்த்திஸ்வரன் ஹாலில் அமர்ந்திருக்க, 

 

நேற்றே லதாவிற்கு என்று தனி அறையில் கட்டிலை சரி செய்து அவருக்கெனா பிரத்யேக ஏற்பாடு செய்துவிட்டான். காலை சென்று பார்த்தபோது அத்தனை உறக்கத்தில் இருந்தார் லதா.

 

இந்த நேரத்திற்கு எல்லாம் இப்படி உறங்குபவர் இல்லை. மருந்தின் வீரியம் என்று வெளியில் வந்தவன் எப்போது வேண்டுமானாலும் அவர் அழைக்கலாம் என அமர்ந்திருக்க,

 

“நான் அம்மாவை பார்த்துக்குறேன் ண்ணா. ஸ்கூல் போகல!” என சீக்கிரமே எழுந்து வந்துவிட்டாள் அஞ்சலியும். இரவு அன்னை அறையில் தானுமே அவள் அங்கேயே படுத்துக் கொண்டாள்.

 

“எக்ஸாம் வருது தானே! நீ போய்ட்டு வா. நான் பாத்துக்குறேன்!” என்று சொல்லி அனுப்பி வைத்துவிட்டு தான் உடனிருந்து கவனித்துக் கொண்டான் அன்னையை.

 

“இன்னும் கிளம்பாம என்ன டா பண்ற?” என்று ஒன்பது மணியாக சில நிமிடங்கள் இருக்கும் பொழுதே வந்துவிட்டார் மகேஸ்வரன்.

 

“இன்னைக்கு ஆபீஸ்க்கும் நீங்களே போய்ட்டு வந்துடுங்க ப்பா!” என அவன் சொல்ல, லதா இருக்கும் அறையை ஒரு பார்வை பார்த்தவர் மகனையும் அதே பார்வை பார்த்து கிளம்பிவிட்டார்.

 

இத்தனை ஓட்டுதலின்மை குடும்பத்தில். அதையும் இந்த சில தினங்களில் கவனிக்க ஆரம்பித்து சிந்தனையில் கீர்த்திஸ்வரன் இருக்க, பதினோரு மணிக்கு அன்னையுடன் அந்த வீட்டிற்குள் வந்தாள் பல்லவி.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!