Skip to content
Post Views: 6,357
“சவி… சவி…”
ஒரு பெண்ணின் உரத்த அழைப்பில் உறங்கிக் கொண்டிருந்தவனின் உடல் சட்டென விறைத்து சில்லிட்டது. ஆனாலும் முழுதாக உறக்கம் விலகி இருக்கவில்லை. மீண்டும் ஆழ்ந்த உறக்கத்திற்குள் தள்ளப்பட்டான் குமரகுரு.
Advertisement
“சவீஈஈ… சவீஈஈஈ…”
இப்போது ஒரு ஆணின் அலறலான குரல்…அவனது குரல்தான்… அவன்தான்… தரையில் மண்டியிட்டு கலைந்த தலையோடு முகம் முழுக்க கண்ணீரோடு சத்தமிட்டு கதறி அழுது கொண்டிருந்தான்.
Advertisement
Advertisement
“சவீஈஈ…”
ஸ்ப்ரிங் போல் நட்டமாய் எழுந்து அமர்ந்திருந்தான் குமரகுரு. உறக்கம் முற்றிலுமாய் விலகி இருந்தது. உடல் நடுங்கி வியர்த்துக் கொட்டியது. கண்களை உருட்டி சுற்றிலும் பார்த்தான். அந்த வெற்று அறையில் விடியலின் ரேகையை பதிவு செய்தபடி பளீரென வெளிச்சம் பாய்ந்திருக்க தான் இருக்கும் இடத்தை மூளை சட்டென உணர்த்தியும் இருந்தது.
Advertisement
கைக்கடிகாரத்தை திருப்பி நேரத்தைப் பார்த்தான்… 7:30 என்று காட்டியது. உடலின் நடுக்கம் இன்னும் குறைந்திருக்கவில்லை. முதுகிற்கு பின்னே கைகளை ஊன்றி தலையை அண்ணாந்தபடி கண்களை அழுத்தமாக மூடிக்கொண்டான்.
கனவில் இருந்து மூளை இன்னும் முற்றிலுமாக வெளிவரவில்லை.
“சவி… சொன்னா கேக்கணும்… வா இங்கே…”
மென்மையாய் ஒரு பெண்ணின் குரல்.
பட்டென விழித்து நிமிர்ந்து அமர்ந்தான்.
“சவி… ஓடாத நில்லு… ஏய் சவி…”
பக்கத்து வீட்டில் குரல் கேட்பதை உறுதி செய்து கொண்டவன் அந்தப் பெயரில் தன்னிச்சையாய் சட்டென்று எழுந்து அறையை விட்டு வெளியேறி வந்தான்.
முதலில்கூட இந்த குரல்தான் கனவோடு பின்னிப் பிணைந்து நுழைந்து போனதோ…
யோசித்தபடியே வாசலுக்கு வந்து நின்றான்.
பக்கத்து வீட்டின் காம்பவுண்டு கேட்டை தாண்டி சிரித்தபடி அந்த குட்டிப் பெண் ஜட்டியோடு திறந்திருந்த இவனது காம்பவுண்டிற்குள் ஓடி வந்து கொண்டிருந்தாள். பச்சரிசி பால் சிரிப்புடன் திரும்பி திரும்பி பார்த்து குதித்தபடி ஓடி வந்து கொண்டிருந்தாள். காலையில் பார்த்தானே அதே குட்டிக் குழந்தை.
திரும்பிப் பார்த்தபடியே ஓடி வந்து கொண்டிருந்தவள் கால் தடுமாறி கீழே விழப் போக பாய்ந்து அவளை தூக்கி இருந்தான் குமரகுரு.
இதற்குள் காலையில் அவன் பார்த்த அதே உருண்டை முகத்துப் பெண் வேகமாக உள்ளே நுழைந்திருந்தாள்.
அவனை கேள்வியாக பார்த்தவள் திறந்திருந்த வீட்டை ஒரு பார்வை பார்த்து “வா…” மிரட்டும் தொணியில் ஒற்றை அழைப்புடன் குழந்தையை நோக்கி கைநீட்டி இருந்தாள்.
“ம்ஹூம்… மாட்டேன்…”
கழுத்துவரை படர்ந்து இருந்த சில்கி கூந்தல் நாணல் போல் சதிராட இடவலமாக தலையசைத்து குமரகுருவின் கழுத்தை கட்டியபடி அவனோடு ஒன்றிக் கொண்டாள் அந்த குட்டித் தளிர்.
அவன் யார் என்றுகூட தெரியாது… முகத்தைக்கூட சரியாக ஆராய்ந்து பார்க்கவில்லை. ஆனால் அன்னையிடம் தப்பித்தாக வேண்டிய கட்டாயத்தில் அவள் செய்த செயலில் குமரகுருவிற்கு இதழுக்குள் புன்னகை படர்ந்தது.
“அடி போட்டேன்னா கன்னம் வீங்கிரும்… வரவர சேட்டையும் திமிரும் கூடிப்போச்சு உனக்கு… வா இங்க…”
கோபத்தோடு உறுமியபடியே அவன் கையில் இருந்தவளை வெடுக்கென பிடித்து இழுக்க அவளோ தனது இரு கால்களையும் அவன் இடுப்போடு இறுக்கி பின்னிக் கொண்டு கழுத்தையும் கட்டிக்கொண்டு பசை போல் அவனோடு ஒட்டி இருந்தாள்.
அவளது செய்கையில் அந்த பெண்ணிற்கு ஜிவ்வென கோபம் கிளர்ந்திருந்தது.
முன்பின் தெரியாத யாரோ ஒரு ஆடவனிடம் ஒட்டிக் கொண்டு மகள் செய்யும் செயலில் கண்மண் தெரியாத கோபம் எழுந்தது.
வெறியோடு அவள் வெற்று முதுகில் ஓங்கி அடித்திருந்தாள்.
விழுந்த அடியில் துடிதுடித்துப் போனாள் குழந்தை. வலி பொறுக்க முடியாமல் உடலை நெளித்து கதறி அழுதவளை தன் நெஞ்சோடு அழுத்தமாக பிடித்து அணைத்துக் கொண்டான் குமரகுரு. கண்கள் முழுக்க கோபம் கொப்பளிக்க அந்தப் பெண்ணிடம் வேகமாக திரும்பினான்.
“என்ன பண்றீங்க..? பச்ச குழந்தையை இப்படி அடிக்கிறீங்க..? பைத்தியமா நீங்க…”
ஆத்திரத்தோடு கூறியவன் துடித்து அழும் குழந்தையின் முதுகில் பதிந்து போயிருந்த அவளது விரல் தடத்தினை பார்த்து மென்மையாய் நீவியவன் குழந்தையை தன்னோடு அணைத்தபடி அவளை முறைத்தான்.
“குடுங்க அவள…”
பதிலுக்கும் தானும் முறைத்தபடியே அவனிடமிருந்து கதற கதற மகளை பிடுங்கிக் கொண்டாள் அவள்.
அவனை நோக்கி கை நீட்டியபடி அழுத பிள்ளையின் கையிலும் அடித்தபடி அவள் திரும்பி நடக்க “ச்சே… என்ன பொம்பிளையோ…” அவனது கரகரத்த குரல் தெளிவாகவே அவளது காதில் விழுந்திருந்தது. வெடுக்கென திரும்பி அவனை பார்த்தாள்.
“நான் பொம்பளையா ஆம்பளையான்னு நீங்க கணிக்க வேணாம். என்னை ஜட்ஜ் பண்ண நீங்க யாரு..? என் புள்ளய நான் அடிப்பேன் கொல்லுவேன்… உங்க வேலை என்னவோ அதை மட்டும் பாருங்க… அனாவசியமான வார்த்தைகளை பேசுற வேலையை இங்கே வச்சுக்காதீங்க…”
கோபத்தோடு கூறியவள் வெடுக் வெடுக் என வேகமாக நடந்து தனது வீட்டிற்குள் நுழைந்திருந்தாள்.
இடுப்பில் கை வைத்தபடி பக்கவாட்டாக அந்த வீட்டை பார்த்தபடியே நின்றிருந்தான் குமரகுரு. அந்த குழந்தை இன்னும் அடம்பிடித்து அழுவது கேட்டது. இந்த பெண்ணும் அழுகையோடு ஏதேதோ பேசுவதும், அதன்பின் குழந்தையை சமாதானம் செய்து பேசுவதும் கேட்டது.
“யாரோ முன்ன பின்ன தெரியாத ஒரு ஆளு என்னை பைத்தியமான்னு கேக்கிறான்… ஏற்கனவே அரை பைத்தியமாதான சுத்திட்டு இருக்கேன்… இப்போ அவன் முழு பைத்தியம்னு முத்திரையே குத்தறான்… உன்னாலதான… அம்மா உன்னை அனாவசியமா என்னைக்காச்சும் அடிச்சிருக்கேனா..? யாருன்னே தெரியாத ஒரு ஆம்பளைகிட்ட அப்படி போய் ஒட்டிக்கிட்டு என்னை அசிங்கப்படுத்துற… தலைக்கு குளிக்கிறதுக்கு யாராவது இப்படி ஓரியாட்டம் பண்ணுவாங்களா..? அந்த ஆள் என்னமோ உன்னை நான் கொடுமைப்படுத்துற மாதிரி பேசுறான்… ஆளும் மூஞ்சியும்…”
தனது அறைக்குள் நுழைந்து குளிப்பதற்கு உடைகள் எடுத்துக் கொண்டிருந்தவனின் காதுகளில் அவளது வார்த்தைகள் தெளிவாகவே விழுந்தன. அவனது அறை ஜன்னலை ஒட்டித்தான் அடுத்த வீட்டு ஜன்னலும் இருந்தது. அதிகம் அதிராமல் மிதமான குரலுடன் குழந்தையிடம் அவள் பேசிக் கொண்டிருந்தாலும் அவனுக்கு தெளிவாகவே கேட்டது.
“பனைமரத்தில பாதி இருக்கான்… உடைஞ்ச கண்ணாடி பாட்டில ஒன்னா ரெண்டா முழுங்கின மாதிரி குரல் வேற… என்ன பாத்து பொம்பளையான்னு கேக்குறான்… எம்புட்டு திண்ணக்கம் இருக்கணும்..? எல்லாம் உன்னாலதான் பாப்பா…”
அழுது ஓய்ந்து விசும்பியபடி இருந்த மகளிடம் அவள் பேசிக் கொண்டே இருக்க இவனுக்கோ தன்னை மீறிய சிரிப்பில் இதழ்கள் விரிந்திருந்தன.
“என் தங்கம்… வலிக்குதாடா சாமி… சாரி… ஐயோ… என் பிள்ளையை இப்படி அடிச்சிட்டேனே… கண்ட கண்ட டென்ஷனையும் உன்மேல இறக்கிட்டேன். அம்மாவை அடிச்சிடு சாமி… அடி… அடி தங்கம்… அம்மாவை அடி…” தழுதழுப்பாய் அவள் குரல்.
“வேணாம்மா…” பதிலளித்தது பிஞ்சுக் குரல்.
“என் செல்லக்குட்டி… அழகு மயிலு… குஞ்சு பாப்பா…”
செல்லக் குரலில் பேசி மொச் மொச் என்று முத்தமிடும் சத்தமும் கேட்க ஜன்னலோர சுவற்றில் சாய்ந்தபடி சுவாரஸ்யமாய் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தான் குமரகுரு.
“அம்மாச்சியும் தாத்தாவும் எலவு கேக்க போயிட்டாங்க… வந்த உடனே அம்மா அடிச்சதை சொல்லிடாத… ஏற்கனவே என்மேல வெறி புடிச்சு திரியுது ரெண்டும்… இதுதான் சாக்குன்னு அருள் வந்து ஆடும்… இருக்கிற பிரச்சினையில இன்னும் பல பிரச்சினைகளை மண்டைல அம்மாவால ஏத்திக்க முடியாது… சொல்ல மாட்டேல்ல…”
“தாத்தா உங்கள அடிப்பாராம்மா..?”
“கைய ஓங்கினா புடிச்சு முறிச்சு விட்ற மாட்டேன்… பேசியே சாவடிப்பார்…”
“அம்மாச்சி…?”
“அந்த அமுக்குணிய பத்திப் பேசாத… ஆத்திரம் ஆத்திரமா வருது…”
“அம்மா… முதுகு வலிக்குது…”
“மன்னிச்சிருடி என் அட்டுபுட்டு… நீ சமத்தா குளிப்பாயாம்..? நாம ரெண்டு பேரும் ஐஸ்கிரீம் கடைக்கு போயி ஐஸ்கிரீம் சாப்பிட்டு வருவோமாம்…”
“அய்ய்…”
பக்கத்து வீட்டின் சம்பாஷணை நின்றிருக்க ஒட்டு கேட்டுக் கொண்டிருந்தவனோ முதுகு குலுங்க சிரித்துக் கொண்டிருந்தான்.
அந்தப் பெயர் தெரியா பெண்ணின் மீது சுவாரஸ்யம் கூடியிருந்தது. மனமே இலகுவானதுபோல் மென்மையாய் உணர்ந்தான். அதிகாலையில் அவள் முகத்தில்தானே விழித்தான். அழுது தனக்குத்தானே புலம்பிக் கொண்டிருந்தவளுக்கு என்ன பிரச்சனையோ..? அதைத்தான் குழந்தையிடம் திருப்பி இருக்கிறாள்… அதற்கும் சேர்த்து வருந்துகிறாள்… கிடைத்தவர்களை பாரபட்சம் இன்றி திட்டித் தீர்க்கிறாள்.
இன்னும் புன்னகை மாறாமலே குளியல் அறைக்கு சென்றிருந்தான்.
குளித்து இலகுவான டி-ஷர்ட் லுங்கி அணிந்து கொண்டு அவன் வெளியே வருவதற்கும் ஒரு லாரி அங்கு வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது.
லாரி நிறைய ஏற்றி வரும் அளவிற்கு அந்த ஒற்றை நபருக்கு அப்படி ஒன்றும் சாமானங்கள் இல்லைதான். பல்வேறு இடங்களுக்கு டெலிவரி செய்ய வேண்டிய சரக்குகளுக்கு மத்தியில் அவனது உடைமைகளும் இருந்தன.
லாரியிலேயே வந்திருந்த ஆட்கள் அவனது சாமான்களை இறக்கி வைத்து கூலியை வாங்கிக் கொண்டு லாரியோடு கிளம்பி இருந்தனர்.
இதற்குள் ராமலிங்கமும் அங்கு வந்திருந்தார். கட்டில் பீரோ போன்ற பொருட்களை நகர்த்தி தூக்குவதற்கு அவரே இரண்டு ஆட்களை ஏற்பாடு செய்த தந்தார். அவர்களது உதவியுடன் அனைத்தையும் அந்தந்த இடத்தில் சேர்த்திருந்தான் குமரகுரு.
லுங்கியை மடித்து கட்டிக் கொண்டு ஆட்களோடு பீரோவை தூக்கிச் சென்றபோது வாசலில் நின்றபடி பட் பட்டென ஈரக்கூந்தலை துண்டினால் அடித்து உலர்த்திக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுப் பெண்ணை தன்னிச்சையாக ஒருமுறை திரும்பிப் பார்த்தான் குமரகுரு.
அவளோ அவனை முறைத்தபடி மொத்தக் கூந்தலையும் அள்ளி பின்னே போட்டுக் கொண்டு வேகமாக வீட்டிற்குள் நுழைந்து கொண்டாள்.
அடுத்தடுத்து வீடு முழுக்க சாமான்களை ஒழுங்குபடுத்தும் வேலை முழுமையாக அவனை இழுத்துக் கொண்டது.
“சாப்பிடலையா தம்பி..?”
அக்கறையாய் கேட்டபடியே வீட்டிற்குள் நுழைந்தார் ராமலிங்கம்.
அவர் கேட்டபோதுதான் வயிற்றுக்குள் சத்தம் எழுவதையே அவனால் உணர முடிந்தது.
“இங்க பக்கத்துல ஏதாவது வீட்டு முறையில சமைக்கிற மாதிரி மெஸ் இருக்கா சார்..?”
“தம்பி எப்பவும் கடை சாப்பாடுதானா..?”
சிரித்தபடியே கேட்டவர் கூடத்தில் அவன் வரிசையாக போட்டிருந்த நான்கு நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்து கொண்டார்.
“ராமேஸ்வரத்துல என் மாமி பக்கத்திலேயே இருந்தாங்க… அவங்க சமைச்சு கொடுத்துடுவாங்க…”
“மாமியாரா..?”
“இல்ல… அத்தை…”
“அவங்க ஏன் வரல..?”
“அவங்களுக்கு அங்கேயே செட் ஆயிடுச்சு… அவங்க ஆளுங்களை எல்லாம் விட்டுட்டு வர மனசு வரல… அப்பப்போ என்னை வந்து பார்த்துட்டுப் போக சொல்லிட்டாங்க…”
“உங்க சொந்த ஊரே இராமேஸ்வரம்தானா தம்பி..?”
“இல்ல… முல்லைத்தீவு…”
அவர் குழப்பமாக அவனை பார்க்க “நான் இலங்கை சார்…” என்றிருந்தான் புன்னகைத்தபடி.
அவர் பார்வை இன்னும் விரிந்தது.
“மூனு வருஷத்துக்கு முன்னால புயல் வெள்ளத்தால பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டுக்கு அகதிகளா வந்தவங்கதான் நாங்கல்லாம்…ராமேஸ்வரம் அகதிகள் முகாம்லதான் எல்லாரும் இருந்தோம். என்னோட படிப்பு என்னை அடுத்த நிலைக்கு இழுத்துட்டுப் போச்சு… ஒரு பெரிய பிரைவேட் ஸ்கூல்ல டீச்சரா வேலைக்கு நுழைய முடிஞ்சது. அவங்களே விரும்பிதான் என்னை இங்கே ட்ரான்ஸ்பர் பண்ணி இருக்காங்க. இங்கே எனக்கு நிரந்தர அடையாளம் கிடையாது… ஆனா ஒரு தமிழனா அங்கீகாரம் இருக்கு…”
வலியோடு புன்னகைத்தவனை வேதனையோடு பார்த்தார் ராமலிங்கம்.
சொந்த மண்ணை விட்டு வெளியேறி வேறு இடத்தில் தஞ்சம் புகுந்து வாழ்வது எத்தனை கொடுமையானது. அடையாளமற்று அகதியாக வாழும் கொடுமை அனுபவிப்பவருக்குத்தானே தெரியும்.
“உங்க குடும்பம் தம்பி..?”
“நானும் மாமியும் மட்டும்தான்… சொந்த உழைப்பில வாழத்தான் அவங்களுக்கு பிடிக்கும். அங்கே ஒரு பேரிச்சம்பழ ஃபேக்டரில பேக்கிங் செக்ஷன்ல வேலை பார்க்கிறாங்க… திருப்தியான சம்பளம்… அவங்களுக்கும் மன நிறைவா இருக்கு. முகாம்லயே அவங்களுக்கு கொடுத்திருக்கிற வீட்ல தங்கி இருக்காங்க…”
“ஆனா இலங்கை தமிழ் கொஞ்சம் வேற மாதிரி இருக்குமே… மலையாளம் பேசுற மாதிரி… ஆனா உங்ககிட்ட அப்படி எதுவும் தெரியலையே…”
“மூனு வருஷத்துல இந்த ஊர் தமிழுக்கு என்னை முழுசா பழக்கிட்டேன்… இருந்தாலும் அப்பப்போ எங்க தமிழ் எட்டிப் பார்த்துடும்…”
“நீங்க எதுவும் மனசுல வெசனப்பட்டுக்காதீக தம்பி… எங்க இருந்தா என்ன..? தமிழன் தமிழன்தான். அதிலும் மதுரக்கார பயலுக பாசக்கார பயலுக… கேள்விப்பட்டு இருப்பீகளே… இப்ப வாங்க… எங்க வீட்ல சாப்பிடலாம்…”
உரிமையாக அவன் கைப்பற்றி இழுத்துச் சென்றார் ராமலிங்கம்.
“சார்… அதெல்லாம் வேணாம்… எனக்கு மெஸ் மட்டும் காட்டினீங்கன்னா…”
“அதானே… தெரு முக்கு திரும்புற இடத்தில ஒரு அருமையான கடை இருக்கு. நானே ஏற்பாடு பண்ணி விடுறேன். இன்னிக்கு நம்ம வீட்லதேன் சாப்பிடுறீக…”
உரிமையோடு சொன்னவர் அவன் விரல்களை இறுக்கமாய் பிடித்து இழுத்துச் சென்றிருந்தார்.
(தொடரும்)
error: Content is protected !!
மிக அருமை சகோதரி….
சவி என்ற பெயர் அல்லது அந்த பெயர் கொண்ட.மனிதர்களால் குமரகுரு வாழ்வில் ஏதேனும் மறக்க முடியாத பதிப்பு இருக்க வேண்டும்…
அதே போல் பெண்ணவள் வாழ்வில் கூட வேதனைகள் நிறைந்து இருக்கிறது ..
மிக அருமை சகோதரி ❤️❤️❤️